• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ! 1

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
4
இழைத்த கவிதை நீ! 1


ரு
க்மிணி தனது டொயாடோ க்ளான்ஸாவை அதன் தரிப்பிடத்தில் நிறுத்தி, பைகளைக் கையில் எடுத்துக் கொண்டு, சாவியைக் க்ளிக்க, கார் பூட்டிக்கொண்டது.

ஹென்னூர் ஹைட்ஸ் என்ற அந்த லக்ஸுரி அடுக்கு மாடி குடியிருப்பில் மொத்தமே நான்கு கட்டிடங்கள்தான். ஒவ்வொரு அப்பார்ட்மெண்டிலும் மூன்று தளங்கள், தளத்திற்கு ஒரு வீடு என பன்னிரெண்டே ஃப்ளாட்கள்தான். தரைத் தளத்தில் ஒவ்வொரு ஃப்ளாட்டிற்கும் தலா இரண்டிரண்டு பார்க்கிங் இருந்தது.

வலப்பக்கம் தெரிந்த பிளே ஏரியாவில், இரண்டு சிறுமிகள் ஜன்ம விரோதியைப் போல் முறைத்துக் கொண்டு நிற்க, அவர்களைச் சுற்றிலும் இரண்டு கட்சியாகப் பிரிந்து நின்ற குழந்தைகள், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் என பல மொழிகளில் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி மின்தூக்கியை நோக்கி நடந்தாள்.

இரண்டாம் தளத்தில் இருந்த தன் வீட்டிற்குள் நுழைந்தவள், கையிலிருந்தவற்றை டைனிங் டேபிளில் விட்டெறிந்து விட்டு, பொத்தென சோஃபாவில் வந்து அமர்ந்து கண்களை மூடிக்கொள்ள, மெத்தென்று கையில் வந்து மோதியது ஜிஞ்சர்.

ஜிஞ்சர் ருக்மிணி வளர்க்கும் பூனை. புஸுபுஸுவென இருந்த பூனையைத் தடவியவள், கொள்ளைக் கூட்டத் தலைவியாகத் தன்னை கற்பனை செய்ததில் தானே சிரித்துக்கொண்டாள்.

மின்னல் வெட்டி, இருள் சூழ, சடசடவென மழை பெய்யத் தொடங்கியது. வழக்கத்தை விட இந்த வருடம் பெங்களூரில் மழை அதிகம்தான்.

ஒபன் டெரஸ்ஸில் காயும் துணிகளை எடுக்க வேண்டும். வாங்கி வந்த தயிர், பனீர், வெண்ணையை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் மயங்கி விழத் தயாராக இருந்த மொபைலை சார்ஜரில் போட வேண்டும். விளக்கேற்ற வேண்டும். டும், டும், டும்…

மணி பார்க்க, ரயில் நிலையத்தில் இருப்பதைப் போன்று ரோமன் எண்களில் நேரத்தைக் காட்டிய பழைய தொங்கும் கடிகாரம் (லண்டனின் Piccadilly circleல் வாங்கியது) ஐந்தே முக்கால் என்றது.

தலையில் இருந்த க்ளட்சரைக் கழற்றி, முடியை உதறி, சிலுப்பிக்கொண்டாள். ‘ம்ப்ச்’ என்று சலித்துக் கொண்டு, காலை நீட்டி சோஃபாவிலேயே படுத்துக் கொள்ள, ஜிஞ்சர் அவளை உரசியபடி அமர்ந்து கொண்டது.

முழுதாய் பத்து நிமிடங்கள் கூட சென்றிருக்காது.

“சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேல தலை வாரக்கூடாது. தலைய விரிச்சுப் போட்டு வாசப்படி தாண்டக் கூடாது. நல்லதைச் சொல்றேன். கேட்டா நல்லது’

‘ஊருக்கு முன்னால விளக்கேத்தினா, ஊரை விட ஒசந்த குடியா இருக்கலாம்’

‘வயசுப் பொண்ணுக்கு விளக்கு வைக்கற நேரத்துல என்ன படுக்கை?’

‘மனுஷாள்னு இருந்தா எதுக்காவது கட்டுப்பட்டுதான் ஆகணும். எந்த நியதியுமே வேண்டாம்னு இருக்க, இதென்ன சத்திரமா, சாவடியா?’

காதில் அம்மா, பாட்டி, மற்றும் மாமியாரின் குரல் மாறி மாறி ஒலிக்க, ஏனோ, இப்போதெல்லாம் முன்பு போல் அத்தனை அலட்சியமாக இருக்க முடிவதில்லை. மனதின் ஓரத்தில் ஏதோ ஒன்று அவர்கள் சொன்னதைக் கடைபிடிக்கச் சொல்லி உந்துகிறது, உறுத்துகிறது. ஆனால் அதை ஒத்துக்கொள்ள மனமின்றி, சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள், இதற்கு மேல் முடியாதெனத் தோன்றவும் பட்டென எழுந்து விட்டாள்.


வேகமாகக் குளித்து, உடைமாற்றி, விளக்கேற்றினாள்.
ஜிஞ்சருக்கு கேட் ஃபுட்டும் ஒரு கிண்ணத்தில் பாலும் கொண்டு போய் பால்கனியில் அதனிடத்தில் வைத்தாள்.

இரவு உணவை சமைக்கலாமா ஸ்விக்கி செய்யலாமா என ஒத்தையா ரெட்டையா போட்டவள், ஃப்ரிட்ஜைத் திறந்து பார்க்க, ஒரு டப்பாவில் அடைக்கு அரைத்த மாவு இருந்தது. ‘சௌமி’ என்று முணுமுணுத்தவளிடம் நிம்மதியும் புன்னகையும்.

வெல்லம், வெண்ணெய், பொடி, தயிர் எல்லாம் இருக்கிறது. எட்டரை மணிக்கு மேல் வெங்காயத்தை நறுக்கிக் கலந்து வார்த்தால் போதும்.

மொபைல் ஒலிக்க, தான் பணி புரியும் எம்என்சியின் டைரக்டரிடமிருந்து வந்த அழைப்பை ஏற்றாள், கம்பெனியின் சைபர் செக்யூரிட்டி மேனேஜரான ருக்மிணி.

அழைப்பு முடிந்ததும் லேப்டாப்பைத் திறந்து, வேலையில் மூழ்கிப் போன ருக்மிணிக்கு வயது முப்பத்தி ஏழு என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.


ஐந்தரை அடி உயரம். மாசு, மரு, பேதம் எதுவுமில்லாத சப்போட்டா பழ நிற சருமம். இடுப்பு வரை விரிந்திருந்த லாங் லேயர்ட் ஹேர் கட்டில் ஸ்ட்ரீக்ஸாகவும் நுனியிலும் எலெக்ட்ரிக் நீலம் மின்னியது. திருத்தப்பட்ட புருவங்கள். சிறிய கண்கள், ஓவல் வடிவ முகத்தில் கூரான நாசி என பொலிவான தோற்றத்தோடு எம்எஸ் படிப்பும், பதினான்கு வருட வேலை அனுபவமும் சேர ருக்மிணியிடம் மிடுக்கு மிளிர்ந்தது.

தினசரி யோகா, தவறாத நடைபயிற்சி, அளவான உணவு, தேவையான தூக்கம் என அந்தத் தோற்றத்தின் பின்னே இருப்பது ருக்மிணியின் கவனமான கடினமான உழைப்பு.

ருக்மிணி பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சியில். மிகக் கட்டுப்பாடான, சடங்கு, சம்பிரதாயங்களில் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் மூன்றாவது பெண்ணாகப் பிறந்தவள்.

அம்மா நர்ஸரி பள்ளியின் ஆசிரியையாகவும், தந்தை தனியார் கம்பெனியிலும் இருக்க, படிப்பே பிரதானம் எனச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவள்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மெரிட்டில் இடம் கிடைக்க, பிஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாள். ஹாஸ்டல் வாசமும், கேம்பஸில் கிடைத்த ஒரு வருட வேலை அனுபவமும் நிறைய தன்னம்பிக்கையை, வாசிப்பை, புரிதல்களை அளித்தது.

மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் எண்பது சதவீதம் உபகாரச் சம்பளத்துடன் இடம் கிடைத்தது.

பெற்றோருக்கு விருப்பமில்லை எனினும், மூத்த பெண்ணுக்கு மட்டுமே திருமணம் முடிந்திருக்க, இரண்டாமவளுக்கு சரியான வரன் அமையாமல் தட்டிப் போக, மகளின் பிடிவாதத்தின் நியாயம் உணர்ந்து, ஐந்து பாகம் எழுதும் அளவிற்கு அறிவுரை சொல்லி, குட்டி குக்கர், சாம்பார் பொடி, உப்புச் சீடை மற்றும் நான்கு பிளாஸ்டிக் மக்குகளோடு (!) கலிஃபோர்னியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

வெகு விரைவில் அங்கத்திய வாழ்க்கை நீரோட்டத்தில் கலந்தாள் ருக்மிணி. தீவிமாகப் படித்தாள். யூனிவர்ஸிடியின் கருத்தரங்குகள், கட்டுரைகள் என தவறாது பங்கு பெற்றாள்.

ஒன்றரை வருட அமெரிக்க பல்கலைக்கழக வாழ்க்கை மேற்கல்வியோடு, தனி மனித சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், நம் மரபு குறித்த விழுமியங்களின் மீது ஒரு வித ஏளனத்தையும், அர்ப்பணிப்பில்லாது இணைந்து வாழ்தலின் இலகுத்தன்மையின் மீது பிரமிப்பு உணர்வையும் (awe feel) சேர்ந்தே கற்றுத் தந்தது.

இடையில் ஒரு முறை அக்காவின் திருமணத்திற்கென, அதுவும் செமஸ்டர் பிரேக்கில் நடந்ததால் திருச்சி வந்து சென்றாள்.

படிப்பு முடியும் முன்பே, மிகப்பெரிய எம்என்ஸியில், பெரும் பணத்திற்கு வேலையும் கிடைத்தது. விதி விலக்கின்றி பெரும்பாலான இந்தியர்களைப் போல் ருக்மிணியும் அமெரிக்க வாழ்க்கையை விட்டு தாயகம் திரும்பத் தயாராக இல்லை.

மகளின் தோற்றத்தில், சிந்தனையில், பேச்சில் தெரிந்த மாற்றங்களை உணர்ந்த பெற்றோர், அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து தங்கள் கடமையை முடிக்க எண்ணியதோடு, மகள் கை மீறிப் போய்விடுவாளோ என்ற பயமும் சேர, மகளை இந்தியா திரும்பச் சொல்லி வற்புறுத்தினர்.

தன் அலுவலக வேலையாக அமெரிக்கா வந்த ருக்மிணியின் அக்கா கணவன், அவளது பட்டமளிப்பு விழாவிற்கும் வந்தான். சிறந்த மாணவியாகப் பரிசு பெற்றவளைப் பாராட்டியதோடு, ருக்மிணியின் குடும்பத்தாரிடம் அவளுக்காக சிபாரிசும் செய்தான்.

“ருக்குக்கு இப்பதானே மாமா இருபத்தஞ்சு வயசாகுது. ஒரு ரெண்டு வருஷம் வேலை பார்க்கட்டும். நீங்க பாட்டு இங்க வரன் பார்க்கத் தொடங்கி, எல்லாம் சரியா அமைஞ்சா, அவ மாட்டேன்னா சொல்லப் போறா?”

“அதுக்கில்லை. யாரும் எதுவும் சொல்ற மாதிரி…”

“உங்க பொண்ணை நீங்களே நம்பலைன்னா எப்படி மாமா? இப்ப மாலா கூடதான் கல்யாணத்துக்கு முன்னால ட்ரெயினிங்னு மூணு மாசம் மும்பைக்கு போனா…”

பெற்றோரின் மனது புரிந்த அவனது மனைவி மாலா “மும்பையும் அமெரிக்காவும் ஒண்ணா?”

“தப்பு பண்ணனும்னு நினைச்சா உங்க திருச்சிலயே பண்ண முடியாதா. எத்தனை பாராட்டு, பரிசளிப்புன்னு தெரியுமா? லேசுபாசான காலேஜ்லயா படிச்சிருக்கா. ருக்மிணி பொறுப்பான பொண்ணு. நீங்க மறுக்க, மறுக்கதான் அவ இறுகுவா. விட்டுப் புடிங்க மாமா” என ஏதோ தன் சொந்த சகோதரிக்கு போல் பரிந்து பேசி, ருக்மிணியின் வீட்டாரை சம்மதிக்க வைத்தான்.

நிபந்தனைகளின் அடிப்படையில் ஸ்டான்ஃபோர்டில் இருந்து சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடா பகுதியிலேயே (Bay area) இரண்டு மணிநேரத் தொலைவுக்குப் பயணமானாள் ருக்மிணி. வாழ்க்கை அவளை வண்ணமயமாக வரவேற்றது.

**********************

பசிப்பது போலிருக்க, ருக்மிணி மொபைலில் மணி பார்க்க, எட்டு நாற்பது. வெளியில் மழை தொடர, ஜிஞ்சர் உண்ட மயக்கத்தில் சோஃபாவில் முடங்கி இருந்தது.

‘இன்னும் ஏன் சௌமியைக் காணும்? இந்த மழை இருட்டுல ஃபார்ம்ல என்ன வேலை?’ என நினைத்தவளுக்கு, அப்போதுதான் இன்று புதன் கிழமை என்பதும், ஹென்னூர் காஸ்மோபாலிடன் க்ளப்பில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஸ்க்வாஷ் டோர்னமென்ட் ஆரம்பம் என்பதும் நினைவுக்கு வந்தது.

டேபிள் டென்னிஸ் விளையாடுகையில் கை பிசகி டேபிளில் இடித்து, பலமாக அடிபட்டு ஃப்ராக்சர் ஆனதில், ருக்மிணி க்ளப்புக்குப் போயே மூன்று மாதங்களுக்கு மேலாகிறது.

அழைக்கலாமா என நினைக்க, இந்நேரம் மேட்ச்சே முடிந்திருக்கும் என்பதால், சமையலறைக்குச் சென்று வெங்காயத்தை எடுத்து வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்துப் பொடியாக நறுக்கத் தொடங்க, அலைபேசி மீண்டும் அழைத்தது. அம்மா.

“சொல்லும்மா”

“...”

“ம். கை பரவாயில்ல”

“...”

“திங்கள் கிழமை”

“...”

“விடேம்மா, இன்னும் எத்தனை நாள் இதையே சொல்லுவ?”

“...”

“உடனே இப்டியெல்லாம் பேசி ட்ராமா பண்ணாதம்மா”

“...”

“ம்மா… மா…”

ருக்மிணி கத்தக் கத்தவே அந்தப்பக்கம் கால் கட் செய்யப்பட்டது. தோளைக் குலுக்கியபடி, அடுத்த வெங்காயத்தைக் கையில் எடுக்கும் முன் அக்காக்கள் இருவரும் கான்ஃப்ரன்ஸ் வீடியோ காலில் வந்தனர்.

எப்படியும் பேசத்தான் வேண்டும். அதோடு, இப்போது இரண்டாவது அக்கா இந்துவும் பெங்களூரிலேயே இருக்க, பேசாவிட்டால் நேரிலேயே கிளம்பி வந்து விடுவாள்.

“ஹலோ”

“மணி ஒம்போதேகால் ஆறது. இப்பத்தான் வெங்காயத்தையே நறுக்கறியா?” - பெரிய அக்கா மாலா.

“வேலை இருந்தது. சௌமியும் இன்னும் வரலை. அதான்…”

குறுக்கே புகுந்த இந்து “அம்மா சொன்ன அந்த டாக்டரைப் போய் பாருடீ ருக்கு.

“...”

மாலா “என்னடீ ருக்கு எதுவுமே பேச மாட்டேங்கற, இதுவே லேட்டு. நாளாக ஆக வயசு என்ன இறங்கவா போறது?”

இந்து “உனக்குத் தனியாப் போக சங்கடமா இருந்தா, நான் வேணா துணைக்கு வரட்டுமா?”

பக்கெனச் சிரித்த ருக்மிணி “அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. ஆமா, உன்னோட போய் என்ன பிரயோஜனம்?”

மாலா “அதைவிடுடீ. இந்த மாசமாவது போய் பார்த்துட்டு வாயேன்.

“...”

“ருக்கு”

இது பற்றிய பேச்சைக் கத்தரிக்க விரும்பியவள் “நான் மாத்ரம் முடிவு செய்ய முடியுமா? அவர் கிட்ட சொல்றேன், லெட்’ஸ் ஸீ”

ருக்மிணி பேசப் பேசவே, தன்னிடமிருந்த சாவியால்
கதவைத் திறந்துகொண்டு, “ஹாய் முனீம்மா ” என்றபடி உள்ளே பிரவேசித்தான் சௌமித்ரன்.

அவனது குரலைக் கேட்டதுமே, சகோதரிகள் இருவரும் விடை பெற்றுக்கொள்ள, ருக்மிணி அடுப்பில் அடைக்கல்லைப் போட்டாள்.

குளித்து, உடைமாற்றி வந்த சௌமித்ரன் “ஃபோன்ல யாரு?”

“அக்காஸ்”

“என்னவாம்?”

“வழக்கமான பாட்டுதான். நான் டாக்டர் கிட்ட போகணுமாம்”

“...”

*****************

இரண்டு தலையணைகளை அடுக்கி, சுற்றிலும் குஷன்கள் கிடக்க, குப்புறப் படுத்திருந்தான் சௌமித்ரன். கட்டிலின் கீழே சுவற்றில் பதிக்கப்பட்ட சன்னமான ஸ்பாட்லைட் ஒன்று மிதமான வெளிச்சத்தைத் தந்தது.

அடுத்த இரண்டு நாள்கள் விடுமுறை என்பதால்,
‘அந்திப்போர் காணாத இளமை , ஆடட்டும் என் கைகளில்’ என சங்கத்தில் பாடாத கவிதையை ஸ்பீக்கர் வழி கசிந்து, உருக வைத்தார் இளையராஜா.

ஓய்வறையிலிருந்து வெளியே வந்த ருக்மிணி, பொத்தென்று மெத்தையில் அமர்ந்தாள். கையில் ஸ்குவாஷ் டோர்னமென்ட்டில் சௌமித்ரன் ஜெயித்த சான்றிதழ், ட்ராஃபி, மெடல், பரிசுத் தொகைக்கான செக் என மீண்டும் ஒருமுறை நிதானமாக எடுத்துப் பார்த்தவளின் முகத்தில் திருப்தியும் பெருமிதமும்.

சௌமித்ரனின் முகத்தில் மந்தஹாஸம் விரவிக் கிடந்தது. ஏதோ ஒரு வித நிறைவும் பரவசமும் தெரிந்தது.

“ஹப்பி குட்டி ரொம்ப ஹேப்பி குட்டியா இருக்கற மாதிரி இருக்கே, டோர்னமென்ட்டில் ஜெயிச்ச குஷியோ?” என்றவள் கணவனின் மூக்கோடு மூக்கை உரசி, அவனது தோளில் சரிய, எதிர் வினையின்றி புன்னகை முகமாக இருந்தவனை வினோதமாகப் பார்த்தாள் ருக்மிணி.

“சௌமி”

“...”

“நான்தான் சௌ மேட்சை மிஸ் பண்ணிட்டேன்”

“சௌ….மீ”

“என்ன?”

அவனது விட்டேத்தியான பதிலில் சட்டென மனம் முரண்ட “நத்திங்” என்றவள், விலகி ஒரு குஷனை தலைக்கு வைத்து, உறங்க முற்பட்டதை கண்டு கொள்ளாத சௌமித்ரன் தன் சிந்தனையையும் சிரிப்பையும் தொடர, தாவணி ஆடும் லாவணி பாடும் என்றது ஸ்பீக்கர்.

நினைவுகளினூடே, உறக்கத்தில் ஆழ்வதை உணர்ந்தவளை மலைப் பாம்பு ஒன்று மூச்சு முட்ட இறுக்கியதில் அழுத்தம் கூடித் திணறியவளின் காதில் “ஹேப்பி லவ்வர்ஸரி முனீம்மா” என்றான் சௌமித்ரன்.

“...”

“எழுந்திருடீ”

“ஏன் பேசாம இருந்த சௌ?”

“எப்ப?”

“நான் வந்து ஹக் பண்ணப்போ”

“ஏதோ யோசனைல இருந்திருப்பேன். இதெல்லாம் ஒரு பிரச்சனையா?” என்றபடி மனைவியை வாசம் பிடித்தவன் “ம்… ப்ளம் கேக் பண்ணி இருக்க, சரியா?”

“எப்டி சௌ?!!”

“உங்கிட்ட வர ரம் வாசனையை வெச்சுதான்”

"இதை மட்டும் கரெக்ட்டா கண்டு புடி. இன்னுமா வாசனை வரது, இப்பதானே குளிச்சேன்” என்ற ருக்மிணி மூக்கை சுருக்கி தன்னையே முகர்ந்து பார்க்க, சௌமித்ரன் சிரித்தான்.

“என்ன சிரிப்பு?”

“லிக்கர்லயே ரம்முக்குதான் மணம் அதிகம். அதனாலேயே அது ரொம்ப ஸ்பெஷல்னு தெரியுமோ?”


“வாசனையா அது” என்று முகத்தை சுளித்தாள் ருக்மிணி.

“போடீ, Raம்பா, Uர்வசி, Meனகாதான் RUM. அதனாலதான் அதுக்கு கிக்கும் ஜாஸ்தி. இதுல உன் வாசனையும் சேர்ந்து…”

“உனக்கே ஓவரா இல்ல சௌ?”

“நீ போய் கேக்கை கொண்டு வா”


ப்ளம் கேக்கை வெட்டி, ரோஸ் ஒயினுடன் இருவரும் தங்கள் காதலைத் தெரிவித்த நாளைக் கொண்டாடியதில் ருக்மிணி, கணவனிடம் உணர்ந்த சிறிய மாற்றத்தை தற்காலிகமாக மறந்து போனாள்.

களைந்து, கலைத்து, கலந்து, களித்து, களைத்ததில் உடனேயே உறங்கிவிட்ட ருக்மிணியின் கை கணவனை இறுகப் பற்றி இருந்தது.

எத்தனை பெரிய பதவியில் இருந்தால் என்ன, சில அடிப்படை உணர்வுகளும் இயற்கையும் மாறுவதில்லை. சமீபமாக, எதனாலோ ருக்மிணி அடைக்கலம் தேடுபவளைப் போல் இரவுகளில் அவளறியாமலே தன்னிடம் வந்து ஒண்டிக் கொள்வது புரிந்தது.

எதிலிருந்தோ தப்பிக்கும் விழைவில், மனைவியின் புறம் திரும்பி, தன்னோடு அவளை இறுக்கியவன், கண்களை இறுக மூடிக்கொள்ள, மனம் விழித்துக் கொண்டது.

*****************

சௌமித்ரனின் பெற்றோரின் பூர்வீகம் காஞ்சீவரம். அவனது தந்தை பெங்களூரில் இருந்த இந்திய விமான கழகத்தில் (HAL) இஞ்ஜினீயராக இருந்தார். முதுகலைப் பட்டதாரியான அம்மா மைதிலி ஹோம் மேக்கர். ரேகா என்ற பெண்ணுக்குப் பின் சௌமித்ரன்.

பிள்ளைகள் இருவரும் குவார்ட்டர்ஸ் வாழ்க்கை, சீரான பொருளாதாரம். நல்ல பள்ளியில் கல்வி என வளர்ந்தனர். ரேகா பல் மருத்துவராக, சௌமித்ரன் பிலானியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, கேம்ப்பஸில் தேர்வாகி, ஆன்சைட்டில் அமெரிக்கா சென்றான்.

அடுத்தடுத்த ப்ராஜக்ட்டுகளில் தன்னை நிரூபித்தவனுக்கு, அவனது நிறுவனமே பல்வேறு பயிற்சிகளை அளித்தது. சௌமித்ரனின் விரைந்து தீர்வு காணும் திறமை கருதி முப்பது வயதைத் தொடும் முன்பே, ஒரு சிறிய, ஆனால் சவாலான ப்ராஜக்ட்டை டீம் லீடாக ஏற்கக் கேட்டபோது அவன் மறுக்கவில்லை.

அதற்காக அவன் கேட்டது அவனுடைய இரண்டு ஈகோ இல்லாத சீனியர் நண்பர்களையும், இரண்டு புதியவர்களையும். அதில் ஒருத்திதான் ருக்மிணி. டீமில் அவளை மினி என்று அழைத்தனர்.

இவர்களது குழுவில் அவனை விட வயதில் மூத்தவர்கள் இருக்க, க்ரிஸ்ப்பாக, மிக இளமையாக இருந்தவனை டீம் லீட் என நம்பத்தான் அவளால் முடியவில்லை.

சௌமித்ரன் “கமான் கைஸ், I’m not the project or product’ என கண்களைச் சிமிட்டிய நொடியே, ருக்மிணி விழுந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியன் என்பதே இன்பமாக இருக்குமிடத்தில், உடனடி நட்புக்கு வித்திட்டது தமிழ்.

எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும், வேலையில் ஒரு வருட முன் அனுபவத்துடன் கூடவே, உயர்கல்வியும் அமெரிக்க வாழ்க்கையும் பழகி இருந்தாலும், பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்ததற்கும் கார்ப்போரேட் தலைமை அலுவலகத்திற்கும் இடையில் இருந்த கலாச்சார இடைவெளியில் ருக்மிணி சற்று தடுமாறுவது புரிய, சௌமித்ரன் அபயமளித்தான்

வேலையின் நடுவே சௌமித்ரனிடமிருந்து சட்டென தமிழில் வந்து விழும் கமென்ட்டுகளுக்கு சிரிப்பை அடக்குவதே ருக்மிணிக்குப் பெரிய சவாலாக இருந்தது.


அந்த அலுவலகத்தில் சீனா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, அமெரிக்கா என இன பேதமின்றி பெண்கள் அவனை ரசிக்க, உணவு இடைவேளைகளில், அலுவலக பார்ட்டிகளில் அவளைத் தனித்து விடாது இயல்பாகக் கவனித்துக் கொண்டான்.

அளவாக, நட்பாகப் பேசிய முப்பது வயதான சௌமித்ரன் கல்கி, கி. ராஜநாராயணன், பிரபஞ்சன், சுஜாதா, தபு சங்கர், வண்ணதாசன், எமிலி டிக்கின்ஸன், ஜே டி ஸாலிஞ்சர், ஹெரால்ட் ராபின்ஸ், டான்ட்டே (Dante) என கலந்துகட்டி ரகளையாகப் படித்து வைத்திருந்தான். தீவிர ஸ்போர்ட்ஸ் மேன். ஃபிட்னஸ் ஃப்ரீக்.

“தனியா இருக்க போரடிக்குது. அதான் இப்டி”

‘அனுபவம் புதுமை’ கேட்பவனின் அடுத்த தேர்வாக ‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடீ’ யாகவோ ‘ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு’ பாடலாகவோ இருக்கும்.

‘லவ்’ என்றொரு பிளேலிஸ்ட்டில் இளையராஜா மட்டுமே நிரம்பி இருந்தார்.

“எனக்கு ராகம் கண்டு புடிக்க கத்துக் கொடுத்தது இளையராஜாதான்” என்றவன் கோவில்களில் நடக்கும் கலாச்சார விழாக்களுக்கு அழைத்துச் சென்று, ருக்மிணியை அவனது அலுவலகம் தாண்டிய நட்பு வட்டத்துக்கு அறிமுகப்படுத்தினான்.

ருக்மிணி சமைத்து எடுத்து வரும் உணவில் நிறை, குறை திருத்தங்கள் சொல்வதோடு, பாராட்டவும் செய்தான்.

டீமாக பாட்லக் பிக்னிக் செல்ல முடிவானது. ருக்மிணி வம்பின்றி ஃப்ரூட்சாலட், வெஜிடபிள் சாலட், பாப்கார்ன் என எடுத்து வர, சௌமித்ரன் இட்லியும் பிரமாதமான சாம்பாரும், Zucchini யை கத்தரிக்காய் போல சுட்டுத் துவையலும் செய்து எடுத்து வந்தான்.

மற்றவர்கள் சாண்ட்விச், புட்டிங், கேக், பியர், நான் வெஜ் சாலட் என எடுத்து வந்திருந்தனர். ஒரு பக்கம் பார்பிக்யூ புகைந்தது.

துவையலின் சுவையில் மயங்கி அது என்னவென்று கேட்ட அமெரிக்கனிடம் “Zucchini dip” எனவும், அதில் அவன் பச்சையாக சால்மனைத் (Salmon) தோய்த்து உண்ண, ருக்மிணிக்குப் பிரட்டிக் கொண்டு வந்தது.

“ரிலாக்ஸ் மினி. போகப்போக… ”

“போகப் போக?”

“பழகிடும்”

டீம் லீடரை முறைக்க முடியாமல் முகம் திருப்பியவளைப் பார்த்து உரக்கச் சிரித்தான்.

“நோ கோபம், டீல்?” என்ற சௌமித்ரன், ஒரு தனி டப்பாவில் இருந்த மிளகாய்பொடி தடவிய இட்லிகளை நீட்ட, ருக்மிணி தன்யளானாள்.

“செம டேஸ்ட், எப்டி இப்டி?” -ருக்மிணி.

“எல்லாப் புகழும் என் நாக்குக்குதான். இங்க வந்த புதுசுல நிறைய சொதப்பி இருக்கேன். செஞ்சு செஞ்சு நல்லா இல்லைன்னு கொட்டிடுவேன். என் சமையலை என்னாலயே சாப்பிட முடியாது. அப்புறம் அம்மா கிட்ட ஆன்லைன் ட்யூஷன், ஆபோகி அச்சுதன்னு கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்ட ஏகலைவன் நான்”

இப்போது ருக்மிணி நிஜமாகவே முறைக்க, “ஹேய், கூல் கூல். இதுவும் நம்ம பிராஜக்ட் மாதிரிதான். சரியான ஃபார்மாட்ல ப்ரோக்ராம் எழுதணும், அவ்ளோதான்” என சிரித்தான்.

கம்யூனிடி சென்டரில் பிரபல தமிழ்த் தொலைக்காட்சியின் சார்பாக ‘குடும்பத்தில் அதிகப் பொறுப்பு ஆணுக்கா, பெண்ணுக்கா?’ என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்ற விழாவுக்கு அழைத்துச் சென்றான்.

அந்த நிகழ்ச்சி, அவர்களுடைய உறவை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

New member
Joined
Oct 3, 2024
Messages
17
அமெரிக்கா மட்டுமல்ல வெளிநாடு செல்லும் இந்திய இளைஞர்களின் மனநிலை இப்படியான மாறிகிறது
 
Joined
Jun 19, 2024
Messages
5
😍😍😍

சௌமிக்குள்ள என்ன மாற்றம்? 🤔🤔 முனீம்மாவுக்கு தெரியாம ஏதாவது தப்பு பண்றானோ? 😒😒

 
Top Bottom