என்றென்றும் வேண்டும்-12
இதுவரை எல்லா கணினி மொழிகளும் ஆங்கில எழுத்துக்களாலேயே வடிவமைக்கபட்டிருக்கின்றன. உங்களுக்கு மிகவும் பரிச்சயமான சி, சி++, ஜாவா என எல்லா கணினி மொழிகளும் ஆங்கில எழுத்து தொகுதி கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை, புதுவை பல்கலை போன்ற கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியாக தமிழ் மொழி எழுத்து தொகுதி கொண்டு கணினி மொழிகளை உருவாக்கினாலும் அவை மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.
எழுத்தாளர் சுஜாதா கூட தன் இறுதி காலங்களில் இதில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும் அது முழுமை அடையவில்லை.
நாம் பேசும் மொழிகளுக்கு இலக்கணம் (grammar) இருப்பது போலவே கணினி மொழிகளுக்கும் இலக்கணம் (syntax) உண்டு.
இப்போது பல நாடுகளில் சமஸ்கிருதத்தை வைத்து கணினி மொழிகளின் இலக்கணத்தை வடிவமைக்கவும் இயந்திரங்களுக்கு செயற்கை அறிவை (arthificial intelligence) புகட்டுவதற்கும் அவற்றை பயிற்றுவிக்கவும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
நாசா விஞ்ஞானி ரிக் பிரிக்ஸ் சமஸ்கிருத மொழியின் அமைப்பு கணினி மொழியின் இலக்கணத்தை வடிவமைக்க ஏற்றதாக இருக்கிறது என்று கூறுகிறார்.
இயந்திரங்களுக்கு நம்மிடம் உள்ள அறிவை கடத்தவும் (machine learning) நம் அறிவை அவற்றுக்கு புரியும்படி வடிவமைக்கவும் (knowledge representation) சமஸ்கிருதம் மிகச் சிறந்த மொழி என்கிறார்.
சமஸ்கிருத மொழியில் பக்தி மற்றும் மத சம்பந்தப்பட்ட இலக்கியங்களோடு கணிதம், அறிவியல் மெய்ஞ்ஞானம் பற்றிய படைப்புகளும் உள்ளன.
ஆர்யபட்டா, பாஸ்கரா, சரகா, வராஹ மிஹிரா, சாணக்யா, சுஷ்ருதா என பல மேதைகளும் சமஸ்கிருதத்திலேயே தங்கள் படைப்புக்களை அளித்துள்ளனர்.
இன்றைய ஆராய்ச்சிகளில் ஒன்றாக கணினிக்கு நம் மனிதர்கள் பேசும் மொழியை எப்படி பயிற்றுவிப்பது (natural language processing) என்பதும் உள்ளது. பாணினி அமைத்த சமஸ்கிருத இலக்கணம் விதிகளை அடிப்படையாக கொண்டும் (rule based) சூத்திரங்களை அடிப்படையாக கொண்டும் (formula based) இன்றைய கணித தேற்றங்களுக்கு(theorem) முன்னோடியாக உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதை அடியொற்றினால் கணினிக்கு மனித மொழியை எளிதாக கற்றுக் கொடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.
இது தவறு என சிலர் மறுத்தாலும் இந்த ஆராய்ச்சி இன்னும் உலகமெங்கும் தொடருகிறது. அதில் ஜெர்மனி முன்னணியில் இருக்கிறது. ஜெர்மனியில் உள்ள தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
விஸ்வநாதனை தனியே அமர வைத்து விட்டு நளினா அவளை இழுத்து சென்றபோது அவளோடு போக காயத்ரிக்கு விருப்பமே இல்லை.
தான் இருக்கும் போதே தன் கூட்டாளிகள் நடந்து கொண்ட விதம் ஏற்கனவே அவளுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.
அவள் என்ன வேண்டுமானாலும் அவள் விச்சுவை சொல்லுவாள். ஆனால் அடுத்தவர் சொன்னால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியுமா?
அதற்கு காரணம் அவள் மனம் அவன் பால் சாயத் தொடங்கி விட்டது என்பதை அவள் இன்னும் உணரவில்லை.
அவன் புன்னகையிலும் கன்னக்குழியிலும் மயங்கியது கூட அவனைப் பிடித்ததால் தான் என்பதும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் அவள் வளரவில்லையே. ஒரு வேளை அதையும் விஸ்வநாதன் தான் எடுத்து சொல்ல வேண்டுமோ என்னவோ?
மனவருத்தத்துடன் தன் தோழிகளுடன் சென்று சேர்ந்து கொண்ட காயத்ரி மேலும் அவர்கள் அவன் குடுமியையும் உடையையும் பற்றி விளையாட்டாய் கேட்பதாக குத்தலாக பேசவும் ஏன் தான் வந்தோமோ? என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.
காயத்ரிக்கு சின்ன விஷயமே தாங்காது. அவளைப் பொறுத்தவரை இது அவளுக்கு பெரிய சோகம். ஆத்திரத்திலும் வருத்தத்திலும் தானாக கண்கள் கரிக்க அதை அடக்க முயன்றதில் மூக்கு சிவந்து கண்கள் கலங்கி இருந்தன.
மற்றவர்கள் எதிரில் அழுது விடக் கூடாது என்று கொஞ்ச நேரம் பொறுமையை கடைபிடித்தவள் இதற்கு மேல் தோழிகளின் கேலிப் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தால் அழுது விடுவோம் என்று மெல்ல ரெஸ்ட் ரூமுக்கு போவதாக சொல்லி நழுவி விட்டாள்.
விஸ்வநாதனுக்கு அவள் மனம் புரிந்து தான் இருந்தது. சிறு வயதில் இருந்து அவன் தோற்றத்திற்கான விமர்சனங்களையும் கிண்டல் கேலிகளையும் பார்த்தே வளர்ந்ததால் அதை ஒதுக்க பழகி இருந்தான்.
இப்போது அவன் யோசனையெல்லாம் அவள் தன்னை கிண்டல் செய்கிறார்களே என்று வருந்துகிறாளா அல்லது அவனோடு வந்து அவமானப்படுகிறோமே என்று வருந்துகிறாளா என்பது தான்.
முடிந்தவரை ரெஸ்ட் ரூமில் நேரத்தை கடத்தி விட்டு மெதுவாக வெளியே வந்தாள் காயத்ரி.
கண்கள் விஸ்வநாதனை தேட அவள் கண்ட காட்சி இன்னும் அவளை கோபமூட்டியது. இதற்கு இவர்கள் இந்த வரவேற்பு கண்ராவியே வைத்திருக்க வேண்டாம் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டாள்.
விஸ்வநாதனுடன் ஓரிருவர் மட்டும் பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் பின்னால் நின்று அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி தங்களுக்குள் கிண்டலாக பேசிக் கொண்டிருந்தனர்.
விஸ்வநாதன் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்க தான் இந்த நிலையில் இருந்தால் நிச்சயம் அழுதிருப்போம் என்று நினைத்தாள்.
அவனை சொன்னதற்கே அவளுக்கு கஷ்டமாக இருக்கிறதே.
ஹெட் வந்ததும் சில நிமிடங்கள் இருந்து விட்டு கிளம்பி விட வேண்டும் என்று முடிவு செய்து வேறு வழியில்லாமல் தோழிகளுடன் போய் சேர்ந்து கொண்டாள்.
தோழிகளின் கிண்டல் பேச்சுக்களை கவனிக்காதவள் போல பதில் சொல்லாமல் இருந்து விட கொஞ்ச நேரத்தில் தோழிகளுக்கு எதிர்பார்த்த வம்பு கிடைக்காமல் வேறு பேச்சுகளில் இறங்கினர்.
ரொம்ப நேரம் அவள் பொறுமையை சோதிக்காமல் அதற்குள் சீனிவாச ராகவன் வந்து விட காயத்ரியும் அப்போது தான் பாலை முதல் முறையாய் பார்க்கிறாள்..
அனைவரும் பேச்சை நிறுத்தி வந்தவர்களை பார்க்க பால் நேரே போய் விஸ்வநாதனுக்கு வணக்கம் சொல்ல மற்றவர்களைப் போல காயத்ரியும் விஸ்வநாதனுடன் போய் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று கூட தோன்றாமல் பிரமிப்புடன் பார்த்திருந்தாள்.
சீனிவாச ராகவன் விஸ்வநாதனிடம் மிகுந்த மகிழ்வுடன் "இன்டெர்னல் மெயில்ல உங்க மேரேஜ் போட்டோ வந்ததுமே ரொம்ப சந்தோஷப்பட்டேன். நீங்க எங்க கம்பெனி ஸ்டாபை கல்யாணம் பண்ணதுல எங்களுக்கு தான் பெருமை. யூ எஸ் ல இருக்கும் போது பாத்தது. மூணு வருஷம் இருக்குமா? "
என்று விசாரித்து விஸ்வநாதனை பார்த்து கரம் குவித்தார். விஸ்வநாதன் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் கை கூப்பினான்.
தங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஹெட் அவனிடம் பணிவுடன் பேசுவதை அனைவரும் விழி பிதுங்க பார்த்துக் கொண்டிருந்தனர்.
சீனிவாச ராகவன் பால் பக்கம் திரும்பி "நாம டிசைட் பண்ணத விஸ்வநாதன் ஜி கிட்ட பேசிடுவோமா பால்?" என கேட்க விஸ்வநாதன் புரியாமல் பார்த்தான்.
பால் சம்மதமாய் தலையசைத்து விஸ்வநாதனை பார்த்து "உங்க சேவை கம்பெனிக்கு தேவைப்படுது. அதைப்பத்தி நாம கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. நாம் ஏன் சாப்பிட்டபடியே பேசக் கூடாது?" என்று ஜெர்மனில் கேட்க விஸ்வநாதன் சம்மதமாய் தலையசைத்தான்.
மற்றவர்கள் புரியாமல் விழிக்க பால் "மன்னிக்கவும். ஒரு நிமிடம்..." என்று விஸ்வநாதனிடம் கூறி விட்டு அவன் தலையசைத்ததும் திரும்பி தன் நிறுவன ஊழியர்களை பார்த்தான்.
"ஹாய் கைஸ்! உங்க எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஏற்கனவே நான் வர தாமதம் ஆனதால் நீங்க டின்னர் சாப்பிட்டு வாங்க. சாப்பிட்ட பிறகு உங்க கூட கொஞ்ச நேரம் பேச விரும்பறேன்." என்று சொல்ல அனைவரும் குழப்பத்துடன் சாப்பிட சென்றனர்.
பொதுவாக இது போல எல்லா வரவேற்பிலும் சீனிவாச ராகவன் கலந்து கொள்வார். வந்து சில நிமிடங்கள் இருந்து விட்டு டின்னர் சாப்பிட்டு உடனே கிளம்பியும் விடுவார்.
இன்று முதல் முறையாக நிறுவனத்தின் தலைவருடன் வந்ததோடு மட்டுமில்லாமல் விஸ்வநாதனிடம் மிகுந்த மரியாதையுடன் பேசுவதையும் பாலும் விஸ்வநாதனும் தங்களுக்கு புரியாத மொழியில் பேசுவதையும் பார்த்தவர்கள் இப்போது விஸ்வநாதனை பார்த்த பார்வையில் மரியாதை தெரிந்தது.
எல்லோரும் டைனிங் ஹாலுக்கு சென்று விட இவர்களோடு காயத்ரி மட்டுமே தேங்கி நின்றாள்.
அவள் பார்வையில் பிரமிப்பும் அதோடு கொஞ்சம் அச்சமும் தெரிய தன் குணத்தையும் மீறி "இங்க வா காயத்ரி!" என்ற விஸ்வநாதன் அவள் அருகில் வரவும் அவள் தோளில் கை வைத்து அணைத்து "என் மனைவி காயத்ரி!" என்று பாலுக்கு அறிமுகம் செய்ய பால் சத்தமாக சிரித்தான்.
"எங்க ஸ்டாப் எங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெக்கறீங்களா?" என்று பால் கேட்க இருவர் முகத்திலும் புன்னகை. காயத்ரி இன்னும் பிரமிப்பு விலகாமல் விஸ்வநாதனையே பார்க்க பால்
"நீங்க ஒரு அதிர்ஷ்டசாலி. அழகான பெண் அதுவும் உங்களை மிகவும் நேசிக்கும் பெண் மனைவியாக கிடைத்திருக்கிறார்.. வாழ்த்துக்கள்.."
என்று ஜெர்மனில் விஸ்வநாதனிடம் சொல்ல அவன் லேசான வெட்கத்துடன் புன்னகைத்தான்.
திரும்பி காயத்ரியை அவன் பெருமிதத்துடன் பார்த்த பார்வையை சீனிவாச ராகவனும் பாலும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர் பேசியதும் விஸ்வநாதனின் பார்வையும் புரியாமல் காயத்ரி விஸ்வநாதனிடம் "என்னன்னா சொல்றார்?" என்று குழப்பத்துடன் கேட்க சீனிவாச ராகவன் குறுக்கிட்டார்.
"இதுக்கே அசந்து போனா எப்படி காயத்ரி? இனிமே தான் விஷயமே இருக்கு! " என்றவர் விஸ்வநாதன் பக்கம் திரும்பி
"நீங்க சுத்த சைவம் என்று தெரியும். உங்களுக்கு தனியா சாப்பாடு சொல்லிருக்கேன். எப்பவும் போல அவொய்ட் பண்ணாம கண்டிப்பா நீங்க சாப்பிட்டு தான் ஆகணும்."
என்று உரிமையுடன் சொல்ல பால் "என்னோட சேர்ந்துக்கோங்க மிஸ்டர் நாதேன். நானும் சைவம் தான்.." என்று ஜெர்மனில் சொன்னான்.
அவர்கள் இருவரும் விஸ்வநாதனிடம் நெடுநாள் பழகியவர்கள் போல பேசுவதை பார்த்த காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை.
அவளுக்கு சஸ்பென்ஸ் தாங்காமல் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.
இவர்களும் டின்னர் ஹாலுக்கு செல்ல அவர்களை தனியாக ஒரு டேபிளில் அமர்த்திய சீனிவாச ராகவன் வெங்காயம் பூண்டு மசாலா எதுவும் இல்லாத சைவ உணவு வகைகளை கொண்டு வந்து வைக்க அங்கிருந்த பேரரை உத்தரவிட்டார்.
அதைப் பார்த்த காயத்ரி நொந்தே போனாள்.
'இன்னிக்காவது பிரைட் ரைஸ், நான், பனீர் பட்டர் மசாலா என ரவுண்டு கட்டலாம்னு நினச்சேன். அதுல மண்ணு விழுந்துடுத்தா? இங்கயும் ஆத்துல சாப்பிடற அதே சாப்பாடு தானா? பகவானே! என்னை இப்படி சோதிக்கிறியே?'
உணவு வகைகளை பார்த்து அவள் முகம் போக்கை வைத்தே அவள் நினைப்பதை புரிந்து கொண்டான் விஸ்வநாதன்.
பாலும் சீனிவாச ராகவனும் எதோ மும்முரமாய் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் அவள் காதருகே குனிந்து "பட்டூ..! நீ வேணா பூப்பேல உனக்கு வேணுங்கறத எடுத்துண்டு வந்து சாப்புடு.." என்று சொல்ல காயத்ரிக்கு அப்போது தான் சிரிப்பே வந்தது.
இதுவரை அவள் மண்டையை குடைந்து கொண்டிருந்த சந்தேகங்கள் எல்லாம் போயே போனது.
தங்கள் பாஸ் இருவருக்கும் தன் கணவரை எப்படி தெரியும்? அவர்களே வந்து பிரியமாய் பேசும் அளவுக்கு விஸ்வநாதன் அவ்வளவு பெரிய ஆளா?
பால் ஜெர்மன் என்பதால் அவர்கள் பேசும் மொழி ஜெர்மன் என்று ஊகித்திருந்த காயத்ரி விஸ்வநாதனுக்கு ஜெர்மன் எப்படி தெரியும் என்ற எல்லா கேள்விகளையும் மறந்தே போனாள்.
சரித்திரத்தை விட சோறு முக்கியம் இல்லையா?
அவன் சொல்லியும் மற்ற இருவருக்காக காயத்ரி தயங்கியபடி அமர்ந்திருக்க விஸ்வநாதன் அவள் கையைப் பிடித்து எழுப்பினான்.
மற்ற இருவரும் அவர்களை கேள்வியாய் பார்க்க "என் ஒயிப்க்கு பூப்பே தான் பிடிக்கும். அதால அவளுக்கு உணவு எடுத்துக் கொண்டு வரோம்.." என்று விஸ்வநாதன் ஆங்கிலத்தில் கூற காயத்ரிக்கு மயக்கம் வராத குறை.
சொந்த வீட்டிலேயே கூடத்தில் தள்ளி உக்காரு என்று அதட்டுவான். தங்கள் அறையைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நாலடி தள்ளி நிற்பான்.
அவளே தெரியாமல் நெருங்கி வந்தால் கூட ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்து கொள்வான். இங்க என்னடான்னா தோளுல கை போட்டு அறிமுகம் செஞ்சு வெக்கறான். சாப்பிட கையை பிடிச்சு அழைச்சிண்டு போறான்.
இந்த ரூமுலேயும் ஏதும் வந்துடுத்தோ?
காயத்ரி ஹாலை சுற்றிப் பார்க்க விஸ்வநாதன் முகத்தில் புன்னகை. உண்மையில் ஆசை ஆசையாய் கிளம்பி வந்தவள் வந்ததில் இருந்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அவனுக்கு மனம் தாங்கவில்லை.
அவன் பட்டூ முகம் வாடி இருப்பதை பார்க்க முடியாமல் தான் தன்னையும் மீறி அவளை தோளோடு அணைத்ததே.
பூப்பே சாப்பிட கூட்டிப்போவதும் அதனால் தான். அதை அங்கே சொல்ல முடியாதே.
அவர்கள் பூப்பே இருந்த பக்கம் வந்ததும் மற்றவர்கள் இப்போது மரியாதையாக நகர்ந்து கொள்ள விஸ்வநாதனே ஒரு பிளேட் எடுத்து அதில் உணவு வகைகளை நிரப்பினான்.
இருவரும் மீண்டும் அவர்களின் மேஜைக்கு வர காயத்ரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
"எப்படின்னா? எனக்கு எதெல்லாம் புடிக்கும்னு தெரிஞ்சு வெச்சிண்டிருக்கேள்? எனக்கு புடிச்சதா பாத்து எடுத்துண்டு வந்திருக்கேளே?"
விஸ்வநாதன் அவளின் குழந்தைத்தனமான சந்தேகத்தில் சிரித்து விட எல்லோர் கவனமும் அவர்கள் மேல் தான். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் அன்பு அவர்களின் உடல் மொழியிலேயே எல்லோருக்கும் புரிந்தது.
ஆனால் அதை கவனிக்காத இருவரும் தங்கள் உலகத்தில் இருந்தனர்.
"பட்டூ! அதுல எதுலலாம் வெங்காயம் பூண்டு தெரிஞ்சுதோ மசாலா நெடி தூக்கலா இருந்துதோ அதெல்லாம் தான் நோக்கு பிடிக்கும்னு எடுத்தேன்டி .."
என்று அவள் காதில் மெல்ல சொல்ல காயத்ரி அவனை செல்லமாய் முறைத்தாள்.
இருவரும் மீண்டும் தங்கள் மேஜைக்கு வர மற்ற இருவரும் அவர்களை சுவாரசியமாக வேடிக்கை பார்த்தனர்.
காயத்ரிக்கு உணவை மேஜை மேல் வைத்து அவளுக்கு வேண்டிய ஸ்பூன் போர்க் எல்லாம் எடுத்து விஸ்வநாதன் கொடுத்தான்.
ஒரு டம்ளரில் தண்ணீரும் ஊற்றி அவள் பக்கத்தில் வைத்து "வேற எதானும் வேணுனா சொல்லு..? கொண்டு வந்து தரேன். பீங்கான் பிளேட் ரொம்ப கனமா இருக்கு..."
என்று அவளிடம் சொல்லி அவள் சாப்பிட ஆரம்பித்த பிறகே அவன் கவனம் தன் உணவில் திரும்பியது.
மற்ற இருவரும் நாசூக்காய் தங்கள் தட்டில் இருந்த உணவை பார்க்க விஸ்வநாதன் சாப்பிட்டவாறே கேள்வியாய் அவர்கள் முகத்தை பார்த்தான்.
பால் தான் முதலில் பேச ஆரம்பித்தது. அவன் ஏதோ சொல்லிக் கொண்டே போக இடையிடையே விஸ்வநாதன் கேட்கும் சந்தேகங்களுக்கு பாலும் சீனிவாச ராகவனும் பதிலளிக்க காயத்ரிக்கு ஜெர்மன் என்பதால் ஒன்றும் புரியவில்லை.
சில நிமிடங்கள் முயன்று பார்த்தவள் அதோடு பேச்சை விட்டு தன் உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் காயத்ரியிடம் தான் இருந்தது. இடையிடையே அவளுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.
அதற்குள் அவர்கள் பேச்சும் முடிந்திருக்க எல்லோரும் ரிசெப்ஷன் ஹாலில் அவர்களுக்காக காத்திருந்தனர்.
அவரவர் தங்களுக்குள் என்னவாக இருக்கும் என்று விவாதித்துக் கொண்டிருக்க யாருமே நிச்சயம் பால் சொன்னதை எதிர்பார்க்கவில்லை.
பால் வந்ததும் அவர்களுக்கிடையே இருந்த சலசலப்பு நின்று அறையில் அமைதி நிலவியது. எல்லோரும் ஆர்வத்துடன் பாலின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
"ஹை கைஸ்! உங்களை எல்லாம் அடுத்த மாதம் கண்டிப்பாக சந்திப்பதாக இருந்தேன்.
நான் இந்த முறை சென்னை வந்தது ஒரு பிளையிங் விசிட் தான். இன்று உங்களை சந்திப்பதற்கான நேரம் கூட எனக்கு இருக்கவில்லை. ஆனாலும் இங்கு வந்திருப்பதற்கான காரணம் இங்கு அமர்ந்திருக்கும் புதுமண தம்பதிகள் தான்.
இந்தியாவில் நம் சென்னை பிரான்ச் தான் மெயின் பிரான்ச் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதுவரை மற்ற தொழில் நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த நாம் இனி நமக்கென ஆய்வு பிரிவு துவங்கப் போகிறோம் என்னும் நற்செய்தியை அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
நாம் இனி இப்போது பிரபலமாகி வரும் ஹெல்த் கேர் (health care) மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (artificial intelligence) பிரிவுகளில் ஆய்வில் இறங்கப் போகிறோம்.
இந்திய நாட்டின் பழைய மருத்துவ முறையான ஆயுர்வேதாவை இன்றைய மருத்துவத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பது இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும். இதற்கு நமக்கு சமஸ்கிருதத்தில் புலமை உடைய ஒருவர் தேவை.
மருத்துவர், சமஸ்கிருத பண்டிதர் மற்றும் நம் கணினி தொழில்நுட்பம் எல்லாம் சேரும் போது ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதோடு இப்போது பிரபலமாகி வரும் இணைய வர்த்தகத்திற்கு (online shoping) தேவையான செயற்கை அறிவை (artificial intelligence) புகட்ட சமஸ்கிருதம் ஏற்றது என்று என் நாட்டு கல்வியாளர்கள் கருதுகின்றனர். அதுவும் இனி நம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எதிர்காலத்தில் கணினி பயன்படுத்துவோர் மட்டுமின்றி அனைவரையும் இந்த இணைய வர்த்தகத்தில் இணைக்க இந்த ஆய்வு உதவும்.
இதனால் நம் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடி எடுத்து வைக்கிறது. உங்களில் பலருக்கு தகுதி அடிப்படையில் இதில் வாய்ப்பு கிடைக்கலாம்."
என்று கூறி விட்டு பேச்சை சற்று நிறுத்த அனைவரின் முகத்திலும் இப்போது பேராவல்.
“இதற்காக நான் ஒரு சமஸ்கிருத புலமை உடையவரை தேடிக்கொண்டிருக்கும் போது தான் நம் சீனி மிஸ்டர் நாதேன் பற்றி எனக்கு சொன்னார்.”
பால் சீனிவாச ராகவனின் முகத்தை பார்க்க சீனிவாச ராகவன் எழுந்து நின்று அனைவரையும் பார்த்தார்.
"ஹை கைஸ்! நம் தலைவர் சொன்ன மாதிரி நாம் இதில் வெற்றி பெற்றால் நம் நிறுவனம் உலகத்தில் மிகவும் முன்னணி நிறுவனமாக மாறும் என்பதால் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.
பாஸ் சொன்னது போல டாக்டர் விஸ்வநாத கனபாடிகள் இனி நம்முடன் பணியாற்றப் போகிறார்."
அவர் விஸ்வநாதனை டாக்டர் என்றதும் மற்றவர்களை விட காயத்ரிக்கு தான் அதிர்ச்சி. அவள் குழப்பத்துடன் விஸ்வநாதனை பார்க்க அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
" நான் யூ எஸ்ஸில் இருந்த போதிருந்தே அவரை தெரியும். பல சமஸ்கிருத மாநாடுகளில் கலந்து கொண்டு அதோடு அங்கு அமைக்கப்படும் ஹிந்து ஆலயங்களில் முன்னின்று கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார்.
நம் நாட்டில் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக நிறுவப்பட்ட ராஷ்ட்ரிய சன்ஸ்க்ரிட் சன்ஸ்தானின் நிதி உதவி பெற்று ஜெர்மனியில் உள்ள ஹெய்டேல்பர்க் பல்கலையுடன் இணைந்து பல ஆய்வு கட்டுரைகளை சமர்பித்திருக்கிறார்.
இப்படி இந்த சிறு வயதில் அவர் சாதனைகள் ஏராளம். அவர் நம்முடன் இணைய சம்மதித்திருப்பது உண்மையில் நமக்கு பெருமை.
இனி அவர் நம் ஆய்வுகளில் துணை நிற்க சம்மதித்திருக்கிறார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்."
என்று சீனிவாச ராகவன் சொன்ன போது ஒருவரின் முகத்திலும் ஈயாடவில்லை.
Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்-12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.