• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்-9

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
என்றென்றும் வேண்டும்-9

ஸத்வம், ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களாலான பௌதிக உலகில் நாம் வாழ்கிறோம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என இங்கு வாழும் அனைத்து ஜீவராசிகளும் இந்த முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றனர். நாம் விரும்பி உண்ணும் உணவிலும் இயற்கையின் குணங்களுக்கு ஏற்ப மூன்று வகைகள் உள்ளன.

தமோ குணத்தை அறவே தவிர்த்து, ரஜோ குணத்தை ஒழுங்குபடுத்தி, ஸத்வ குணத்தை வளர்த்துக்
கொள்வதற்காக சாஸ்திரங்களில் இத்தகைய உணவுப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

ஆயுள், ஆரோக்கியம், அறிவு, பலம் ஆகியவற்றை வளர்ப்பதும், சாறு நிறைந்ததும், ஊட்டச்சத்து மிக்கதும், இதயத்திற்கு இதமளிப்பவையுமான உணவுகள் ஸத்வ குண உணவுகளாகும்.

மிகவும் புளிப்பான, மிகவும் காரமான, எரிகின்ற உணவுகள் ரஜோ குணத்தைச் சார்ந்தவை, இவை துன்பம், சோகம், மற்றும் நோயை உண்டாக்குகின்றன.

பழையனவும், ஊசிப்போனதும், எச்சில்பட்டதுமான உணவுகள் தமோ குணத்தைச் சார்ந்தவை.” (பகவத் கீதை 17.8-10)

எனவே, ரஜோ, தமோ குணங்களைச் சார்ந்த வெங்காயம், பூண்டை உட்கொள்வதால் மனம் மாசடையும், ஆன்மீக சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள இயலாது, மந்த புத்தி ஏற்படும்.

முக்குணங்களாலான இவ்வுலகிருந்து விடுபடுவதற்கு நாம் ஞானத்தை வளர்த்துக்
கொள்ள வேண்டும். ஞானத்தை வளர்ப்பதற்கு ஸத்வ குணம் உதவியாக இருக்கும் என்பதால், ஸத்வ குணத்தை வளர்த்தல் அறிவுறுத்தப்படுகிறது.

ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞானம்,

ஸத்வ குணத்திலே ஞானம் பிறக்கின்றது (பகவத் கீதை 14.17).

ஸத்வ குணத்தில் கிருஷ்ண உணர்வை சிறப்பாக பயிற்சி செய்ய இயலும். ஒருவன் தான் இந்த உடலல்ல, ஆத்மா என்பதை உணர்வதற்கு ஸத்வ குணம் இன்றியமையாதது. எனவே, ஸத்வ குணத்தைச் சார்ந்த உணவுகளை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, அதன் பின்னர் அதனை பிரசாதமாக (சுத்த-ஸத்வ குணத்தில்) நாம் ஏற்க வேண்டும்.

தூய்மையான உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சாந்தோக்ய உபநிஷத் (7.26.2) கூறுகிறது,


ஆஹார ஷுத்தௌ ஸத்த்வ-ஷுத்தி: ஸத்த்வ-ஷுத்தௌ: த்ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதி-லம்பே ஸர்வ-க்ரந்தீனாம் விப்ரமோக்ஷ..”

தூய்மையான உணவை (கிருஷ்ண பிரசாதத்தை) உட்கொள்வதால் மனம் தூய்மை அடைகிறது. தூய்மையான மனதினால் பகவானை நினைக்க இயலும். இவ்வாறு பகவானை இடைவிடாது நினைப்பதால் அனைத்து பந்தங்களிலிருந்தும் விடுபட்டு இறைவனின் திருநாட்டிற்குச் செல்லவியலும்.

எனவே, ஆன்மீகத்தில் முன்னேற விரும்புபவர்கள் தூய்மையான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஆன்மீக பக்குவத்தை அடைய விரும்புபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
குறித்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன.

பூண்டு, வெங்காயத்தின் தோற்றம் சாஸ்திரங்களில் பலவிதங்களில் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு கதை:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை பகவான் விஷ்ணு (மோஹினி ரூபத்தில்) தேவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் அசுரன் இராகுவும் தேவர்களின் வரிசையில் அமர்ந்து அமிர்தத்தைப் பெற்றான். இதைக் கண்ட சூரியனும் சந்திரனும் பகவானிடம் இதைத் தெரிவித்தனர்.

அமிர்தம் அந்த அசுரனின் தொண்டையிலிருந்து வயிற்றிற்குச் செல்வதற்குள் பகவான் விஷ்ணு தனது சக்கரத்தினால் அவனின் தலையைக் கொய்தார். அப்போது அவனது தொண்டையிலிருந்த இரத்தம் கீழே சிந்தியது. சிந்திய இரத்தத்திலிருந்து பூண்டு, வெங்காயம் தோன்றின.

அந்த இரத்தத்தில் அமிர்தம் துளியளவு கலந்திருந்த காரணத்தினால், வெங்காயம், பூண்டு இரண்டும் உண்பவர்களுக்கு சில நன்மைகளைத் தரலாம்.

இருப்பினும், அவை அசுரர்களின் இரத்தம் என்பதால், அவை உண்பவர்களுக்கு அசுர குணத்தை வழங்குகின்றன. அசுரனின் இரத்தத்திலிருந்து தோன்றிய காரணத்தினால், இவற்றை பகவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்க இயலாது.

பிராமணரின் மனைவியினால் திருடப்பட்ட பசு மாமிசத்திலிருந்து வெங்காயம், பூண்டு தோன்றியதாக மற்றொரு வரலாறு கூறுகிறது. இதனால் வெங்காயம், பூண்டினை உண்பது பசு மாமிசத்தினைச் சாப்பிடுவதைப் போன்று பாவகரமானதாகும்.


சாஸ்திர மேற்கோள்

வெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் (1.96.72) கூறுகிறது. வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் (7.10.12) கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் (4.56), மனு சம்ஹிதை (5.5), ஹரி பக்தி விலாஸம் (8.158) ஆகிய வேத சாஸ்திரங்கள் தெளிவாக உரைக்கின்றன.

விஞ்ஞானிகளின் கூற்று

வெங்காயம், பூண்டில் மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட 21 பொருட்கள் இருப்பதாவும் மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதாகவும் சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. (டாக்டர். ராபர்ட் சி பெக்)

இரண்டு நாட்கள் கழித்து நளினாவிடமிருந்து காயத்ரிக்கு போன் வந்தது.

"என்ன மேடம்! எப்படி இருக்கீங்க? கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு போன் கூட வரல. உங்க ஹீரோ அப்படி கவர் பண்ணிட்டாரோ..? எங்களையெல்லாம் நினைவிருக்கா..?

இதுக்கே பிடிக்கல பிடிக்கலன்னு கன்னத்து குழி வரைக்கும் சொன்னே...? இப்ப அந்த குழிலயே தொபுக்கடீர்னு விழுந்துட்டியா..?"

காயத்ரி பேசவே வாய்ப்பு கொடுக்காமல் அவளே பேசித் தள்ளினாள். எப்போதும் இருவருமாக தான் இருப்பார்கள். இப்போது காயத்ரி லீவ் போட்டதில் அவளுக்கு பொழுதே போகவில்லை.

"ஹே..! அதெல்லாம் ஒண்ணும் இல்லடி. அவர் ரெண்டு நாள்லயே வேலைக்கு போக ஆரமிச்சுட்டார். எனக்கு அத்தை அம்மாவோட ஜாலியா பொழுது போறது..."

"ஹே ...சும்மா நடிக்காத... வயசான கிழ செட் கூட பொழுது போகுதா..? அவங்க கிட்ட என்னடி அப்படி பேசவே...? அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கோயிலும் சமையலும் தான். நான் தான் உன் கல்யாணத்தின் போதே பாத்தேனே... ரெண்டு பேரையும்...?

பேசாம ரெண்டு பேரையும் பத்தி (துரத்தி) விட்டுட்டு தனிக்குடித்தனம் போற வழியப் பாரு..! உன் புருஷனையும் கொஞ்சம் கொஞ்சமா மாத்தப் பாரு. புரியுதா...!"

காயத்ரிக்கு அவள் சொன்னதை கேட்டதும் புறுபுறுவென்று கோபம் பத்திக் கொண்டது. இந்த ஒரு வாரத்திலேயே இருவரைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டு விட்டாளே..!

கொஞ்ச நஞ்ச கோபம் இன்னும் அவளுக்கு அவள் கணவன் மேல் இருந்தாலும் அத்தை மேல் ஏகப்பட்ட அன்பும் மாமியாரின் மேல் பயம் கலந்த மரியாதையும் தான்.

சின்ன வயதில் இருந்து அம்மா அப்பாவின் அதிகாரமான அன்பை மட்டுமே பார்த்து வளர்ந்தவளுக்கு அத்தையின் அமைதியான அணுகுமுறையும் மாமியாரின் உரிமை கலந்த அன்பும் ரொம்பவே பிடித்திருந்தது.

"அம்மாடி!" "ராஜாத்தி.." என்பதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்லி அத்தை அழைத்ததில்லை. அவளே சமையல் அறைக்கு போய் எதாவது செய்கிறேன் என்றாலும் இருவரும் அவளை விட்டதில்லை.

அவள் மாமியார் கூட அவளுக்கு பரிந்து கொண்டு விஸ்வநாதனிடம் சண்டைக்கு போவாரே தவிர அவளை ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவர்களை துரத்தி விடவேண்டுமாமே?

"ஏண்டி! காலங்காத்தால இந்த வம்புப் பேச்சுக்கு தான் எனக்கு போன் பண்ணியா? உனக்கு இதெல்லாம் பேச தான் சம்பளம் குடுக்கறாளா? வைடி முதல்ல போனை...!"

என்று வந்த கோபத்தில் போனை அணைத்து விட்டாள் காயத்ரி.

வைத்த உடனே மீண்டும் அழைப்பு வர நளினா தான் மீண்டும் அழைத்திருந்தாள்.

காயத்ரி போனை எடுத்து "மறுபடி என்னடி? என் ஹஸ்பெண்டையும் துரத்தி விட்டுட்டு நான் மட்டும் தனிக்குடுத்தனம் போகவா..?" என்று வள்ளென்று கேட்க நளினா சிரித்து விட்டாள்.

உண்மையில் நளினா காயத்ரி இப்படி கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. பிடிக்காத திருமணத்தை செய்து கொண்டவள் தான் கேட்டதும் புகுந்த வீட்டை பற்றி புலம்பித் தள்ளுவாள் என்று எதிர்பார்க்க அவள் தன் மேல் கோபப்பட்டதும் ஒரே ஆச்சரியம்.

நளினாவுக்கு திருமணம் முடித்த மூன்று மாதங்களிலேயே புகுந்த வீடு மூச்சு முட்டியது. அதை சொல்லவும் பகிரவும் தன் வயது ஒத்த தோழமை அவளுக்கு தெரிந்து காயத்ரி மட்டுமே.

விரும்பி திருமணம் செய்து கொண்ட தனக்கே மூன்று மாதங்களில் திருமண வாழ்வு கசந்திருக்க கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் அப்பாவின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொண்டவளுக்கு மூன்று நாட்களிலேயே வெறுத்திருக்கும் என்று நினைத்து தான் வாய் விட்டதே.

அதனால் தன்னையும் அறியாமல் அதை காயத்ரியிடம் கொட்டி விட்டு அவளிடமிருந்து வந்த எதிர்ப்பில் பயந்து விட்டாள்.

அதைப் பேச இது சரியான நேரமும் இல்லை. காயத்ரியும் அதை கேட்டுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதால் அதோடு விட்டுவிட்டு தான் அழைத்த காரணத்தை சொன்னாள்.

"அதை விடுடி. நான் உண்மையில உன்னை கூப்பிட்டது நம்ம ஆபிசில் நடக்கப் போற பார்ட்டி பத்தி சொல்ல. நீ தான் ஒருத்தரையும் கூப்பிடாம கல்யாணம் பண்ணிட்டே.

நம்ம ஆபிஸ் பார்ட்டிக்காவது உன் ஹப்பிய கூட்டிட்டு வந்து சேரு. நாளைக்கு நம்ம யூசுவல் பிளேஸ்ல தான். டைம் ஈவினிங் சிக்ஸ். உனக்கும் உன் ஹப்பிக்கும் ஓகே தானே?”

நளினா திடீரென்று கேட்டதும் காயத்ரிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. முன்பு விஸ்வநாதனைப் பற்றி குறை சொன்ன போது அவளுக்கு எந்த குற்றவுணர்வும் இல்லை.

இப்போது அவன் வருவானா என்றே தெரியவில்லையே?

அதை நளினாவிடம் சொல்ல மனம் வராமல் "தெரியலடி. ஈவினிங் அவர் வந்ததும் கேட்டு சொல்றேன்.." என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.

'உன் வீட்டுக்கார் செய்யற வேலைக்கு ஆறு மணிக்கு மேல என்ன வேலை இருக்கப் போகுது..?' என்று ஏளனமாக கேட்க வந்தவள் சற்று முன் வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவத்தில் "சரிடி..கொஞ்சம் முடிஞ்சவரை சீக்கிரம் சொல்லு...”

என்று மட்டும் சொல்லி போனை வைத்து விட்டாள்.

அவர்கள் அலுவலகத்தில் இது வழமையான விஷயம் தான். புதிதாக திருமணம் ஆகும் மணமக்களுக்கு ஒரு ஸ்டார் ஹோட்டலில் கம்பெனி சார்பாக வரவேற்பு நடத்தி அவர்களுக்கு திருமண பரிசும் கொடுப்பார்கள்.

செலவு கம்பெனி ஏற்றுக் கொண்டாலும் மணமகன் அல்லது மணமகள் இருக்கும் ப்ராஜெக்ட் டீமில் இருப்பவர்கள் தான் எல்லோரையும் அழைப்பது, பரிசை தேர்ந்தெடுப்பது, மெனுவை முடிவு செய்வது என எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

வரவேற்புக்கான அழைப்பை கம்பெனியில் உள்ள இன்டெர்னல் மெயில் சிஸ்டெமில் போட்டு ஹோட்டலுக்கு போன் செய்து சொல்லி விட்டால் போதும்.

எல்லா ஏற்பாடுகளையும் ஹோட்டலே பார்த்துக் கொள்ளும். பில்லையும் கம்பெனிக்கு அனுப்பி விடுவார்கள். பரிசை தேர்ந்தெடுக்கும் ஒரு வேலை மட்டும் தான்.

நளினா சொல்லி விட்டு போனை வைத்து விட காயத்ரியின் கவலை ஆரம்பமானது.

விஸ்வநாதனை எப்படி அங்கே அறிமுகப்படுத்துவது? எல்லோரும் ஒரு கிண்டலான பார்வையோடு பார்ப்பார்களே? அவனுடைய குடுமி, கடுக்கன், வேஷ்டியை அவர்களின் கார்ப்பரேட் உலகத்தில் எப்படி எடுப்பார்கள்?

முன்பாவது யாரோ என்று அவளே அவனை விமர்சனம் செய்திருக்கிறாள். இப்போது அவன் அவளுடைய கணவன். அவளெதிரே அவனை யாரும் ஏதும் சொல்லி விட்டால் அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா? அதற்காக போகாமலும் இருக்க முடியாதே?

முதலில் இந்த வரவேற்பிற்கு அவன் வருவானா? என்னை எங்கேயும் எதிர்பார்க்காதே என்று சொன்னவன் தானே?

காலை பத்து மணிக்கு நளினாவின் அழைப்பு வந்ததில் இருந்து யோசிக்க ஆரம்பித்தவள் மாலை மூன்று மணிக்கு அவன் வரும் போதும் அதே யோசனையில் இருந்தாள்.

பத்மா கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்ததால் காயத்ரியை அழைத்து விஸ்வநாதனுக்கு உணவு பரிமாற சொன்னார்.

காயத்ரி அமைதியாக உணவு பரிமாற அவள் முகத்தை பார்த்தே விஸ்வநாதனுக்கு என்னவோ சரியில்லை என்று தோன்றியது.

அவள் முகத்தை ஒரு முறை கூர்ந்து பார்த்தவன் அமைதியாக தன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.

காலையில் வெறும் கஞ்சியோடு ப்ரோஹிதத்திற்கு போகும் மகன் மதியம் தான் சாப்பிடுகிறான் என்று பத்மா எல்லாமே செய்து வைப்பார்.

அன்றும் புடலங்காய் பொரியல், கீரை, கத்திரிக்காய் சாம்பார், தக்காளி ரசம் என எல்லாம் செய்திருந்தார். அவர்கள் வீட்டில் பூண்டு, வெங்காயம், மசாலா போன்ற உணவுப் பொருட்கள் அறவே சேர்ப்பது இல்லை..

சிறு வயதில் இருந்தே அதெல்லாம் விஸ்வநாதன் சாப்பிட்டது இல்லை. அதோடு பாடசாலையிலும் அதெல்லாம் கிடையாது என்பதால் அவனுக்கு அது போன்ற மசாலா உணவுகள் மேல் ஈடுபாடு என்பதே இல்லாமல் போய் விட்டது.

விஸ்வநாதன் அவளிடம் முன்பு சொன்னபடியே புதிதாக திருமணம் ஆன கணவனாக மற்றவர்கள் எதிரில் அவளை தனியாய் பார்ப்பதோ சீண்டுவதோ செய்வது இல்லை.

இன்னும் சொல்லப் போனால் மற்றவர்கள் எதிரில் இரண்டடி தள்ளியே நின்று கொள்வான்.

காயத்ரிக்கே இவனா இரவில் அப்படி தன்னை கொண்டாடுகிறான் என்று ஆச்சரியம் தான்.

பத்மா செய்து வைத்ததை காயத்ரி (சற்று தள்ளி நின்று) பரிமாற விஸ்வநாதன் எதுவும் கேட்காமல் சாப்பிட்டான்.

மாமியார் இருக்கும் தைரியத்தில் காயத்ரி விஷயத்தை ஆரம்பித்தாள்.

"வந்து... எங்க கம்பெனில நாளைக்கு நமக்கு பார்ட்டி குடுக்கறான்னா…. சாயந்தரம் ஆறு மணிக்கு. நமக்கு வசதியானு கேட்டு போன் பண்ணா. உங்களை கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன். நாளைக்கு சாயந்தரம் போலாமா?"

விஸ்வநாதன் நிமிர்ந்து அவளைப் பார்த்து விட்டு சற்று தள்ளி மாவரைத்துக் கொண்டிருந்த அம்மாவையும் பார்த்தான்.

மீண்டும் காயத்ரியை பார்த்த பார்வையே கேள்வியை கேட்டது.

'நான் வந்தா உனக்கு அவமானமா இருக்குமே..? பரவாயில்லையா?'

வாய் விட்டே கேட்டிருப்பான். அம்மா பக்கத்தில் இருந்ததால் தாங்கள் பேசுவது அவர் காதிலும் விழும் என்பதால் கேட்கவில்லை.

என்ன தான் அவளை குழந்தை மனம் படைத்தவள் என்று புரிந்து கொண்டாலும் அந்த வார்த்தைகள் தந்த வலி இன்னும் அவனுள் பசுமையாய் இருக்கிறது.

அவளை உற்று பார்த்தவன் பதிலேதும் பேசாமல் மீண்டும் அமைதியாய் சாப்பாட்டை தொடர பத்மா குறுக்கே நுழைந்தார். அதை எதிர்பார்த்து தானே காயத்ரி பேச்சை ஆரம்பித்ததே.

அவளால் விஸ்வநாதனை தனியாக சமாளிக்க முடியாது. அவன் தான் அவளை சுண்டு விரலில் சுருட்டி வைத்திருக்கிறானே..! அவன் பார்வையே அவளுக்கு பயத்தை தர தலையை குனிந்து கொண்டாள்.

"ஏண்டா! சாயந்தரம் தானே கூப்பிடறா? நீ போனா என்ன? கல்யாணம் ஆனதுல இருந்து நானும் பாத்துண்டு இருக்கேன். அந்த குழந்தையை எங்கயும் அழைச்சிண்டு போக மாட்டேங்கற? பாரு! நீ பதில் சொல்லலங்கவும் எப்படி அவ முகம் வாடிப் போய்டுத்து?"

மாமியார் கேட்கவும் காயத்ரி இன்னும் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள விஸ்வநாதனுக்கு சிரிப்பு தான் வந்தது.

'செய்யறதெல்லாம் செஞ்சிட்டு முகத்தை வெச்சுக்கறதை பாரு..'

இருந்தாலும் ஒத்துக் கொள்ள மனம் வரவில்லை. மென்மையாகவே மறுத்து விட முயன்றான்.

"அம்மா! அது வந்து... நான் அங்க போய் என்ன பண்ண? எனக்கு யாரையும் தெரியாதே...!"

‘அவனோட எப்படிடி வெளில போவேன் சொல்லு? கட்டுக்குடுமி வெச்சிண்டு காதுல கடுக்கன் போட்டுண்டு வேஷ்டி கட்டிண்டு அவனோட நான் எப்படி கை கோத்துண்டு ஜோடியா மால் தியேட்டர்னு போக முடியும்.. சொல்லு..?’

அவனுக்கு நாலு வார்த்தை இங்கிலீஷிலே பேச வருமான்னு கூட தெரியல.’

அவள் சொன்ன வார்த்தைகள் தானே..!

'இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி உடை அணிந்து இங்கிலீஷ்ல பேச தெரியலன்னா நீங்கல்லாம் அவாளை மனுஷாளாவே மதிக்க மாட்டேளே..!'

அவன் பார்வை அவளை குற்றம் சாட்ட அவளோ அவன் தன்னைப் பார்த்து முறைப்பதாக நினைத்துக் கொண்டாள்.

"அம்மா! அவர் என்னைப் பாத்து முறைக்கிறார்.."

காயத்ரி மாமியாரிடம் போட்டுக் கொடுக்க இருவரின் பார்வை பரிமாற்றமும் அந்த பக்கம் திரும்பி மாவை எடுத்துக் கொண்டிருந்த பத்மாவின் கண்ணில் படவில்லை.

"ஏண்டா! குழந்தையை முறைக்கிறியா..? எல்லாம் அவா ஆபிஸ்ல இருக்கறவாள அவளே உனக்கு அறிமுகம் பண்ணி வெப்பா. எதானும் காரணம் சொல்லிண்டிருக்காம நாளைக்கு நீ அவளோட போறே! நீ போன் பண்ணி சொல்லிடுமா.." என்று தீர்ப்பை சொல்லி விட்டு கிரைண்டரை கழுவப் போனார்.

அதற்குள் கை கழுவிக் கொண்டு வந்த விஸ்வநாதன் அம்மாவை நகர்த்தி விட்டு குழவியை எடுத்து சிங்கில் வைத்து கழுவ வந்தான்.

காயத்ரி மெல்ல மாமியாரின் அருகில் போய் "அம்மா! அவர் சரின்னே இன்னும் சொல்லலையே.. நான் என்ன சொல்லட்டும்..?" என்று காதை கடிக்க விஸ்வநாதனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

இவளே அப்படியும் பேசறா இப்படியும் பேசறா..? ஆனால் போகவில்லையென்றால் அம்மா விட மாட்டாள் போல இருக்கே...

பத்மா "விச்சு.!" என்று ஆரம்பிக்கும் போதே விஸ்வநாதன் "பார்ட்டிக்கு போணும்..அதானே மா! அவஸ்யம் போறேன்.." என்றவன் காயத்ரியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே போனான்.

மாலையில் தனியாய் அவனோடு இருந்தால் ஏதேனும் சொல்லி விடுவானோ என்று மாமியாரோடும் அத்தையோடும் சேர்ந்து அவளும் கோயிலுக்கு கிளம்பி விட்டாள்.

இரவு சாப்பிட்டு எல்லோரும் படுக்கப் போன பிறகும் தனியே அவனை சந்திக்க பயந்து இன்று காலம் தாழ்த்தியது காயத்ரி தான். கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க விஸ்வநாதன் எப்போதோ படுக்க போய் விட்டிருந்தான்.

பத்மா "என்ன இன்னும் கூடத்துல வெளிச்சம்? காயத்ரி! எல்லாம் அணைச்சிட்டு போய் படு.."என்று குரல் கொடுக்க காயத்ரி வேறு வழியில்லாமல் படுக்கப் போனாள்.

'தூங்கியிருப்பானோ.' என்று நப்பாசையுடன் உள்ளே நுழைந்தவளை புன்னகையுடன் எதிர் கொண்டான் விஸ்வநாதன்.

"வாங்க மேடம்..! என்ன மேலிடத்து சிபாரிசுல காரியத்த சாதிச்சுண்டுட்டு உள்ளே வர பயம்..?"

காயத்ரி அவன் கேள்வியில் அவன் கோபமாய் இருக்கிறானோ என்று பயத்துடன் முகத்தை பார்க்க அவன் முகத்தில் புன்னகை மட்டுமே.

"பட்டூ..! உனக்கு என் கிட்ட நேரா கேக்க என்ன பயம்..?"

கட்டிலின் அருகில் வந்து நின்றவளை கை பிடித்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டவன் புன்னகையுடனேயே கேள்வி கேட்க காயத்ரி பார்வையை அறையை சுற்றி சுழல விட்டாள்.

அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அவளின் பிரமித்த பார்வையே சொல்ல விஸ்வநாதனுக்கு சிரிப்பு வந்தது.

குறும்பு புன்னகையுடன் அவள் முகத்தை பார்க்க

"நிஜமாவே இந்த ரூம்ல என்னவோ இருக்குன்னா. இன்னிக்கி உள்ள வந்து உங்கள்ட நன்னா வாங்கிக் கட்டிக்க போறேன்னு பயந்துண்டே வந்தேன்...நீங்க என்னடான்னா சிரிச்சிண்டு இருக்கேளே..?"

காயத்ரியின் குரலிலோ பிரமிப்பு.

"அப்படியா சொல்றே..?"

என்றபடி அவளை தன்னருகே இழுத்து தன் மேலே சாய்த்துக் கொண்டவன் அவள் தலையை வருடி விட்டான்.

"ஆமான்னா..! அங்க சாப்பிடறச்சே முறைச்சிண்டே இருந்தேள்..இங்க வந்தவுடனே சிரிக்கறேளே..!"

விழிகள் விரிய அவன் முகத்தருகே இருந்த அவள் முகத்தை ஆசையாய் பார்த்தான் விஸ்வநாதன்.

அவன் கைகள் அவள் முதுகில் இடம் மாற அவளை அணைத்திருந்த கைகள் மெல்ல இறுக

"அதுக்கு காரணம் இந்த ரூம் இல்லடி பட்டூ. நீ…! உன்கிட்ட தான் நான் அப்படி மயங்கிப் போயிருக்கேன்.." என்றவனின் பார்வையில் அவள் மேலிருந்த மையல் தெரிந்தது.

அவன் நெஞ்சில் கை வைத்து நிமிர்ந்தவள் அவனை கோபமாய் முறைத்து

"யாரு நீங்க? சும்மா சொல்லாதீங்கோ..! நான் தான் உங்கள்ட மயங்கி போயிருக்கேன்.. நளினா கூட சொன்னா. உங்க கன்ன குழில நான் மயங்கிப் போயிருக்கேனாம்.." என்றபோது அவள் குரலும் குழைந்தது.

"யார் யார்ட்ட மயங்கிருக்கானு பாத்துடுவோமா..?" என்றவனின் கேள்விக்கு பதில் தேட இருவரும் முனைய அதன் பிறகு அங்கே பேச்சே இல்லை.
 

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom