• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்-11

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
என்றென்றும் வேண்டும்-11

*மந்த்ர புஷ்பம்*

(யசுர் வேதத்தின் "தைத்திரிய ஆரணியகம்" பகுதியில் வருகிறது. இந்த மந்திரத்தின் பொருள்"நீரே எல்லாவற்றுக்கும் ஆதாரம்" என்பது தான்!

நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம் அறிந்துகொள்ளும் விதமாக இந்த வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன.

இறைவனின் படைப்பில் உருவான இந்த இயற்கைச் சக்திகளைக் கொண்டு வழிபடுவதுதான் இந்த மந்த்ர புஷ்பத்தின் தனிச்சிறப்பு. ஆப: என்றால் தண்ணீர் என்று பொருள். யோ + ஆப: + புஷ்பம் = யோபாம் புஷ்பம் என்று அந்த மந்திரம்
)



*ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா* *அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத* (1)



யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)



*யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான்* *பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத* (2)



யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)



*யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான்* *பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத* (3)



யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)



*யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத* *ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத* (4)



யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)



*யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத* (5)



யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5)



*யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/* *ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத* (6)





யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)



*யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத* *ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத* (7)



யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)



*யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம்* *வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத* (8)



யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)



*யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி* (9)

யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)



*ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/ ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம:* (10)



தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம். விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு ,மன்னாதி மன்னனுக்கு வணக்கங்கள்.



கார் ஹோட்டல் பார்க்கிங்கில் நிற்கவும் காயத்ரி காரில் ரேர் வியூ மிரரில் தன் முகத்தையும் சோக்கரையும் சரி பார்த்தவள் "போலாமான்னா?" என்று கேட்டுக் கொண்டே தன் பக்க கதவை திறக்கப் போக அவள் வலது கையை அழுத்தமாக பிடித்தான் விஸ்வநாதன்.

"போலாம்..அதுக்கு முன்னால துப்பட்டாவை சரியா போடு.."

இப்போது அவன் குரல் மீண்டும் பழையபடி மாறியிருந்தது.

காயத்ரி முன்பு இரண்டு தோளிலும் போட்டிருந்த துப்பட்டாவை சோக்கரை மறைக்கிறது என்று ஒரு பக்கமாக போட்டிருந்தாள்.

கழுத்தில் எடுப்பாக தெரிந்த சோக்கரை இன்று தன் தோழிகளிடம் காட்டி பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவளை விஸ்வநாதன் நிறுத்தியதும்

"ஏன்னா? இப்படி போட்டுண்டா என்ன தப்பு? ஷால் நீங்க சொன்ன மாதிரி போட்டுண்டா சோக்கர் வெளில தெரியாதே..? எவ்வளவு அழகா இருக்குன்னா?

இத என் பிரெண்ட்ஸ் எல்லாம் பாத்தானா அப்படியே பொறாமைல அவா கண்ணு ரெண்டும் வெளில வந்துரும்..."

சொல்லும் போதே அதை நினைத்து அவளுக்கு பெருமை தாங்கவில்லை.

தன் நகையின் மேல் கவனமாக இருந்ததால் கணவனின் குரல் மாறியதைக் கூட அவள் கவனிக்கவில்லை.

அவள் ஆசையாய் சொன்ன போதும் விஸ்வநாதன் அவளை பிடித்திருந்த பிடியை விடவில்லை.

பெண்களின் பார்வை வேண்டுமானால் சோக்கரோடு நின்று விடும். ஆனால் ஆண்களின் பார்வை அதோடு நிற்காது என்பது ஆணாய் அவனுக்கு தானே தெரியும்.

இதை ஆசையோடு கிளம்பியவளிடம் எப்படி முகத்தில் அடிப்பது போல சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே காயத்ரிக்கு அவன் சொல்லாமலே புரிந்தது.

இதற்காக தானே வீட்டிலேயே வாக்குவாதம் நடந்தது?

உடனேயே அவள் முகம் சுருங்க

"நான் சாக்கை போத்திண்டு வந்தாலும் சில வக்ரங்கள் பார்வை சரியா இருக்காது. அதுகளுக்கு குழந்தைனும் தெரியாது. கிழவின்னும் தெரியாது.

அந்த கேவலமான ஜென்மங்களுக்காக நான் ஏன் கவலைப் படணும்? நான் ஷாலை ரெண்டு பக்கமும் போட்டுண்டு வந்தா கூட அதுகளோட பார்வை கோணலா தான் இருக்கும்.

தப்பு பாக்கறவா கண்ணுல தானே தவிர என் மேல இல்லன்னா.”

என்று தன் வாதத்தை காயத்ரி இந்த முறை அழுத்தமாகவே சொல்ல விஸ்வநாதன் அமைதியாய் அவளைப் பார்த்தான்.

"இப்ப என் கிட்ட பேச இருந்த தைரியம் ஒருத்தன் பார்வை கோணலா இருந்தா அவனை பளார்னு அடிக்கிற அளவுக்கு உனக்கு இருக்கா? அப்படினா சரி. வா போலாம்..." என்று அவள் கையை விட்டான்.

'என்னால ஒத்தனை துணிச்சலா அடிக்க முடியுமா?'

காயத்ரிக்கு தன் மேலேயே சந்தேகம் வந்தது. அவளுக்கு தனியாக போகவே பயம். இதில் யாராவது ஒரு மாதிரி பார்த்தால் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவாளே தவிர அவனை முறைக்கும் அளவுக்கு கூட அவளுக்கு ஏது தைரியம்?

அவள் பார்வையில் இருந்த சஞ்சலத்தை புரிந்து கொண்ட விஸ்வநாதன் மேலே பேசினான்.

"சரி! குறைஞ்ச பட்சம் அவன் பார்வையையோ இல்ல தப்பா தொட்டாலோ அத அலட்சியப்படுத்திட்டு உன்னால போக முடியுமானா கூட ஓகே. "

காயத்ரிக்கு நிச்சயம் தன்னால் அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. இதுக்கு தான் அப்பா எப்பவும் கூடவே வந்துண்டு இருந்தாளா?

இப்போது தான் காயத்ரிக்கு தோன்றியது.

எப்போதும் காயத்ரியின் தந்தை தன் மகளை தனியாக எங்கும் அனுப்பியதே இல்லை. தன் குழந்தையை பொத்தி பொத்தி பாதுகாக்கும் அன்பு. அதில் மன முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதுவும் அன்பு தானே.

"காயத்ரி! நிறைய வீராவேசமா பேசலாம். எல்லா பொண்ணுங்களுக்கும் தப்பா பாக்கறவன அடிக்கிற தைரியம் வரணும். அப்படியில்லையா பாக்கற பொண்ணுங்களையெல்லாம் சகோதரியா கூட வேண்டாம்

உணர்வும் உயிரும் உள்ள மனுஷியா பாக்கற எண்ணம் எல்லா ஆம்பளைகளுக்கும் வந்துட்டா நீ டூ பீஸ் கூட போட்டுண்டு போ. நான் ஒண்ணும் சொல்லல. அவனுக்கு அது ஒரு செகண்ட் த்ரில். அந்த பொண்ணுக்கு?

எந்த தப்பும் பண்ணாம உனக்கு மன உளைச்சல் இருக்கக் கூடாதுன்னு தான் இவ்வளவும் சொல்றேன். ஆம்படையனா அதிகாரம் பண்றேன்னு எடுத்துக்காதே. “

"உன்னோட நாளை தன் அலட்சியமான நடவடிக்கையால் வீணடிக்க யாருக்கும் இடம் கொடுக்காதே காயத்ரி. எதிர்க்க முடிந்தால் என்ன நினைக்கிறியோ தாராளமா செய். இல்லனா அதுல இருந்து நீ எந்த பாதிப்பும் இல்லாம எப்படி மீளலாங்கறது தான் உன் நோக்கமா இருக்கணும். "

மேலே அவன் பேசும் முன்பே தன் ஷாலை சரியாய் அணிந்து கொண்டவள் "இப்ப ஓகேவான்னா?" என்று கேட்க தான் சொன்னதை அவள் சரியாய் புரிந்து கொண்டதில் புன்னகை செய்தான் விஸ்வநாதன்.

"இரு.." என்றவன் அந்த ஷாலை ஜரிகை மேலே வரும்படி விசிறி போல மடித்து இரண்டு தோளிலும் அழகாக போட்டான்.

சோக்கர் கழுத்தை ஒட்டி இருக்க அதற்கு கீழே துப்பட்டா சரிகையும் ஒரு தங்க நகை போல இருந்தது.

கண்ணாடியில் மீண்டும் தன்னைப் பார்த்த காயத்ரி "இது ரொம்ப நன்னா இருக்கே. எப்படி இப்படி மடிக்க கத்துண்டேள்? " என்ற போது அவள் குரலில் குதூகலம் மட்டுமே.

"நீ விசிறி மடிப்பு அங்கவஸ்திரம் எல்லாம் கேள்விப்பட்டதே இல்லியா?" என்று மெல்ல சிரித்த விஸ்வநாதன் "சரி..இறங்கு! நமக்காக காத்துண்டு இருப்பா எல்லாரும்.. மீதி அப்புறம் பேசலாம்.." என காயத்ரி சட்டென்று எட்டி அவன் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தாள்.

ஏற்கனவே விஸ்வநாதன் அந்த கார் பார்க்கில் அரை இருட்டு என்பதோடு யாரும் இல்லாததால் தான் இவ்வளவு நெருங்கியதே.

அவள் கன்னத்தில் முத்தமிட்டதும் விஸ்வநாதன் சட்டென்று திரும்பி சுற்றிலும் யாருமில்லையே என்று ஒரு முறை பார்க்க காயத்ரி " இத நான் செய்யணும்..நீங்க செய்யறேளே னா..?" என்று சிரித்தாள்.

விஸ்வநாதன் அவளைப் போலவே சுற்றிலும் பிரமிப்பாய் பார்த்து "இந்த கார் பார்க்கிங்ல என்னவோ இருக்குடி பட்டூ ..இங்க வந்து தானே நோக்கு ..." என்று இழுத்தபடி குறும்பாக அவளைப் பார்த்து சிரிக்க காயத்ரி பக்கென்று சிரித்து விட்டாள்.

"இது நீங்க வாங்கிக் குடுத்த சோக்கர்க்காக குடுத்தது.. வேறே ஒண்ணும் இல்ல.." என்று உதட்டை சுழிக்க விஸ்வநாதன் 'அப்படியா..? ' என்பது போல பார்த்தான்.

"அப்போ..ரோஸ் வாங்கினதுக்கு..இந்த ஷாலை உனக்கு பிடிச்ச மாதிரி போட்டு விட்டதுக்கு.." என்று விஸ்வநாதன் அவளையே பார்த்தபடி பட்டியலிட

"அதுக்கெல்லாம் இங்க பப்ளிக் பிளேஸ்ல பதில் தர முடியாது. அப்புறமா ஆத்துல நம்ம ரூம்ல போய் பாத்துப்போம். இப்போ சீக்கிரம் வாங்கோ. என் சோக்கரை பிரெண்ட்ஸ் கிட்ட காட்டணும்..."

என்று அவனைப் போலவே கெத்தாக பேசி காரை விட்டு இறங்கியவளை பார்த்து புன்னகைத்தபடி அவனும் இறங்கி காரை ரிமோட் லாக் செய்தான்.

இருவரும் இனிமையான மனநிலையோடு நடந்து லிப்ட் நோக்கி சென்றனர். அந்த சந்தோசம் நீடித்தது சில நிமிடங்களே..

இருவரும் லிப்ட் அருகே போகும் போதே காயத்ரி டீமில் வேலை செய்யும் இரு பெண்கள் லிப்ட்காக நின்றிருந்தனர்.

தூரத்தில் வரும் போதே இருவரும் விஸ்வநாதனை காட்டி எதோ பேசி தங்களுக்குள் சிரித்துக் கொள்வது காயத்ரிக்கு நன்றாகவே புரிந்தது. பதட்டத்துடன் விஸ்வநாதனை பார்க்க அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

முன்பு காயத்ரியே விஸ்வநாதனின் குடுமியையும் உடையையும் கிண்டல் செய்திருக்கிறாள். ஏன் அவனிடமே கூட மாற்றிக் கொள்ளக் கூடாதா என்று கேட்டிருக்கிறாள்.

ஆனால் இப்போது அவள் கணவனை மற்றவர்கள் கேலி செய்யும் போது அவளுக்கு அது ரசிக்கவில்லை. கோபம் தான் வந்தது.

காயத்ரியின் முகத்தில் இருந்த மலர்ச்சி மெல்ல மறைய நடையின் வேகம் குறைய மெதுவாகவே அவர்களை நெருங்கினாள். விஸ்வநாதன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாததால் அவன் என்ன நினைக்கிறான் என்பதே காயத்ரியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

இருவரும் நெருங்கியதும் அங்கே ஒரு சங்கடமான சூழல் நிலவியது. வேறு வழியில்லாமல் காயத்ரி விஸ்வநாதனை அவர்களுக்கு அறிமுகம் செய்தாள்.

"மை ஹஸ்பெண்ட் மிஸ்டர் விஸ்வநாதன். திஸ் இஸ் ரீட்டா. திஸ் இஸ் பார்கவி. "

அவர்கள் இருவரும் இப்போதும் சிறு ஏளன புன்னகையுடன் "ஹலோ..! ஹௌ டூ யூ டூ? காங்கிராட்ஸ்..ஆன் யுவர் வெட்டிங்.." என்று வேண்டுமென்றே ஆங்கிலத்தில் பேசியபடி தங்கள் கையை குலுக்குவதற்காக நீட்ட விஸ்வநாதன் இரு கைகளையும் குவித்து வணக்கம் சொன்னான்.

"வணக்கம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.." என்று தூய தமிழில் பேச இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

'ஓ! ஆளு தான் பட்டிக்காடு என்று பார்த்தால் இங்கிலீஷில் பேசவும் வராதா..?' என்று எண்ணியவர்கள் காயத்ரியை அனுதாபத்தோடு பார்க்க காயத்ரியின் முகம் வாடி கண்கள் லேசாக கலங்கின. விஸ்வநாதன் காயத்ரியின் முகத்தையே பார்த்திருந்ததால் அவள் வாட்டத்தில் அவனும் இறுகினான்.

'நீ இப்படி சங்கடப்படுவேன்னு தானே வரலன்னு சொன்னேன். வந்தே ஆகணும்னு சிபாரிசு பிடிச்சு வந்துட்டு இப்ப வருத்தப்பட்டா என்ன அர்த்தம்?'

காயத்ரி அப்படியே திரும்பி போய் விடுவோமா என்று யோசிக்கும் போதே லிப்ட் அவர்கள் தளத்துக்கு வந்து விட அவர்கள் இருவரும் உள்ளே நுழைய காயத்ரியும் விஸ்வநாதனும் மௌனமாய் பின்தொடர்ந்தனர்.

'இன்று மாலை முழுவதும் இப்படியே தான் போகப் போகிறதோ..' என்று காயத்ரி பெருமூச்சு விட விஸ்வநாதன் அவளையே பார்த்திருந்தான்.

ஏற்கனவே அவர்களுக்கும் காயத்ரிக்கும் அவ்வளவாக ஒத்துப்போகாது. இப்போது அவர்கள் நடந்து கொண்ட விதம் இன்னும் காயத்ரிக்கு பிடிக்காமல் போக அதன் பின் அவள் அவர்களிடம் பேசவே முயலவில்லை.

லிப்ட்டிலும் அவர்களிடம் இருந்து விலகி விஸ்வநாதன் அருகில் நெருங்கி நின்று கொள்ள விஸ்வநாதன் அவளை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் பேசாமல் நின்று கொண்டான்.

அந்த சில நிமிடங்கள் அமைதியாய் எல்லோரும் எதிரில் இருந்த சுவற்றை வெறித்தபடி இருக்க லிப்ட் அவர்கள் செல்ல வேண்டிய தளத்தை அடைந்தது.

அந்தப் பெண்கள் இருவரும் பின்தங்கி விட தம்பதிகள் இருவரும் ரிசெப்ஷன் ஹாலுக்குள் நுழைந்தனர். ஏற்கனவே அங்கே பலரும் வந்திருக்க நளினா அவர்களை பார்த்து விட்டு வேகமாக அருகே வந்தாள்.

"வாடி காயு! வாங்க.." என்று இருவரையும் வரவேற்றவள்

அவர்களுக்கு எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தாள். அவர்களிலும் பலர் விஸ்வநாதனின் வேஷ்டியையும் குடுமியையும் பார்த்து லேசாய் சிரித்து கொள்ள காயத்ரிக்கு என்னவோ எல்லோரும் அவனை ஏளனமாய் பார்ப்பதாகவே தோன்றியது.

அவனிடம் வாழ்த்து சொல்லி கை குலுக்க வந்த எல்லோரிடமும் விஸ்வநாதன் கரம் குவிக்க பின்னால் வந்தவர்கள் அவர்களாகவே அவனுக்கு வணக்கம் வைத்தனர்.

நளினா அவர்கள் அருகில் வந்து "கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா சார்? காயு..! நம்ம பிரான்ச் ஹெட் சீனிவாச ராகவன் சார் டென் மினிட்ஸ்ல வரேன்னு சொல்லிருக்கார். அவர் வந்த பிறகு டின்னர் சாப்பிட போகலாமா..?" என்று கேட்க காயத்ரி தலையசைத்தாள்.

விஸ்வநாதனை கவனித்துக் கொள்ளும்படி அங்கிருந்த ஆண் நண்பர்களிடம் சொல்லிவிட்டு "காயு..! நீ இங்க வா..!" என்று அவளை கையோடு அழைத்துக் கொண்டு போனாள் நளினா. விஸ்வநாதனை திரும்பித்திரும்பி பார்த்தபடி காயத்ரி தோழியோடு போனாள்.

காயத்ரி தனியே வருவதைப் பார்த்து அவள் தோழிகள் அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.

"வாம்மா புதுப்பொண்ணு! "

"உன் சோக்கர் செம டி .."

"ஷால் என்னடி டிஃபரென்டா போட்டிருக்க?.."

"உன்ன விட உன் ஹப்பிக்கு நிறைய ஹேர் இருக்குடி.."

"என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ரார்..?"

"நீ தான் அவருக்கு ஹேர் ஸ்டைல் பண்ணி விடறியா?"

எல்லா பக்கங்களில் இருந்தும் குரல் வர காயத்ரிக்கு 'மறுபடியுமா ஐயோ!' என்று இருந்தது. எல்லோரும் அவள் சோக்கரை பற்றி விசாரிப்பார்கள் என்று நினைத்திருக்க அவர்களோ விஸ்வநாதனின் ஹேரை பற்றி விசாரித்தார்கள்.

முடிந்த வரை சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் காயத்ரி. சந்தோஷமான மனநிலையில் வந்தவளுக்கு வந்திருந்த பெரும்பாலோர் விஸ்வநாதனை ஒரு மாதிரி பார்த்ததில் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை.

சுற்றிலும் ஜீன்சும் பென்சில் பிட் பார்மல் பேண்டும் பேகி ஷர்ட்டும் டீஷர்ட்டும் இருக்க விஸ்வநாதனின் வேஷ்டி முற்றிலும் அதோடு பொருந்தவில்லை.

அவர்கள் எல்லாம் பங்க்கும் க்ளோஸ் கட்டும் செய்து மாடர்ன் ஆக இருக்க விஸ்வநாதன் அந்த சூழலுக்கு முற்றிலும் பொருந்தாமல் இருப்பதை பார்த்தவளுக்கு இவனும் கொஞ்சம் மாறியிருந்திருக்கலாமே என்று அப்போதும் தோன்றியது.

அதே நேரம் தன்னுடைய கணவனை மற்றவர்கள் குறைவாக பார்ப்பதும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் தன்னை தன் தோற்றத்தை ஏளனமாக பார்ப்பதோ தான் அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருப்பதோ விஸ்வநாதனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அவன் சாதாரணமாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க காயத்ரிக்கு தான் வந்த போது இருந்த சந்தோசம் முற்றிலும் மாறி 'ஏன்டா வந்தோம்?' என்று நினைக்கும் மனநிலைக்கு வந்திருந்தாள்.

காயத்ரி முடிந்த வரை இங்கிருந்து சீக்கிரம் கிளம்பி விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டே தன் தோழிகளிடம் பேசியதால் அவர்களோடு பழைய நெருக்கம் ஏற்படவில்லை.

அவர்களுடைய பேச்சும் விஸ்வநாதனை கிண்டல் செய்வது போலவே இருக்க 'அடிப்படை நாகரீகம் கூட இல்லாத இவர்களுடனா இத்தனை நாள் நெருங்கிப் பழகினோம் ' என்று இருந்தது.

திடீரென அந்த ஹாலில் அமைதி நிலவ எல்லோரும் எழுந்திருப்பதை பார்த்து இந்த உலகத்துக்கு திரும்பினாள் காயத்ரி.

அவர்கள் பிரான்ச் ஹெட் சீனிவாச ராகவனோடு ஒரு வெளிநாட்டு நபரும் வர எல்லோரும் அவரை மரியாதையாக பார்த்தனர்.

பால் வோல்ஃப்கேங்.

அவர்களின் நிறுவனத்தின் தலைவர். நாற்பது வயதில் ஆறடி உயரத்தில் சென்னை வெயிலில் முகம் சிவந்திருக்க தலைமுடியை நீளமாய் வளர்த்து போனிடைல் போட்டிருந்தார்.

அவர்கள் எல்லோருமே பாலை அப்போது தான் முதல் முறையாக நேரில் பார்க்கிறார்கள். போட்டோவில் பார்த்தது தான்.

அங்கிருந்த எல்லோரையும் புன்னகையுடன் பார்த்து கையசைத்த பால் அடுத்து நேராக சென்றது விஸ்வநாதனை சந்திக்க தான்.

பால் வந்ததும் மற்றவர்களைப் போலவே அமைதியாக தானும் எழுந்து நின்றிருந்தான் விஸ்வநாதன்.

பால் மலர்ந்த புன்னகையுடன் "நமஸ்தே மிஸ்டர் நாதேன்..!" என்று இரு கரம் கூப்ப விஸ்வநாதனும் சிறு புன்னகையுடன் கை கூப்பினான்.

அவனை பின்தொடர்ந்து வந்திருந்த சீனிவாச ராகவன் "வாங்கோ ! சௌக்கியமா?" என்று கேட்க மொத்த கூட்டமும் அவர்களை ஆச்சரியமாக பார்த்தது.
 

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
136
பாலும் தான் போனிடெயில் போட்டிருக்கார் அவரை கிண்டல் பண்றதுதானே
 
Top Bottom