• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்-13

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
என்றென்றும் வேண்டும்-13

வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம் ஆகும்.வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை.பண்டைய காலத்தில் ஞானிகளும்,ரிஷிகளும் தவமிருக்கும்பொழுது அவர்கள் வாய்மொழியாக வந்த மந்திரங்களே வேதங்களாக கருதப்படுகின்றன.

இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும்.

வேதங்களை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்காக செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவுகிறது.

வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு.

1. "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)

2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்

3. ஆரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்

4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்).

முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும்,
கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் ஓதப்படுகிறது.

தனி நபராக ஓதாமல் குழுவாக சேர்ந்து ஓதினால நல்ல பலன் கிடைப்பதை விஞ்ஞானமும் ஒத்து கொள்கிறது.

உபவேதங்கள்;

1.ஆயுர்வேதம்:- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.

2.தனுர் வேதம்:- யஜூர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது.

3.காந்தர்வ வேதம்:- சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது.

4.சில்ப வேதம்:- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

ஸம்ஹிதா என்றால், “ஒழுங்குபடுத்திச் சேர்த்து வைத்தது” என்று அர்த்தம். ஒரு வேதத்தின் தாத்பர்யம் என்னவோ, அவ்வளவையும் ‘ஸிஸ்டமாடிக்’காகச் சேர்த்து மந்திரங்களாகக் கொடுத்திருப்பதுதான் ஸம்ஹிதை.

ரிக் வேத ஸம்ஹிதை முழுக்கவும் பொயட்ரி (செய்யுள்) ரூபத்தில் இருப்பது. பிற்காலத்தில் ச்லோகம் என்று சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேதகாலத்தில் ‘ரிக்’ என்று பெயர். பிற்கால ச்லோகத்திற்கும் வேத ரிக்குக்கும் பெரிய வித்யாஸம் என்னவென்றால் ரிக்குகளைத்தான் ஸ்வரப்படி ஏற்றி, இறக்கி, அல்லது ஸமமாகச் சொல்ல வேண்டியிருப்பது.

‘ரிக்’ என்றால் ஸ்தோத்திரம் என்றும் அர்த்தம். ரிக் வேத ஸம்ஹிதை முழுக்கவும் இப்படிப்பட்ட ஸ்தோத்திரங்களாகவே இருக்கிறது. பல தேவதைகளைப் பற்றின ஸ்தோத்திரங்கள். ஒவ்வொரு ரிக்கும் ஒரு மந்திரம். ஒரு தேவதையைப் பற்றிப் பல ரிக்குகள் சேரந்து ஒவ்வொரு ஸூக்தமாக ஏற்பட்டிருக்கின்றன.

ரிக் வேதத்தில் – அதாவது ஸம்ஹிதையில்
10170 ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்] . ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது. அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடேயே அது முடிகிறது. வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம்.

அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால், அக்னி உபாஸனைதான் (Fire worship) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு.

அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால் இதுவும் சரிதான். ரிக் வேதத்தின் கடைசி ஸூக்தம் அக்னியைப் பற்றியதாக இருந்தாலும் அதில்தான் ஸர்வ தேசத்திற்குமான ஒற்றுமைப் பிரார்த்தனை – International Anthem – இருக்கிறது! ”

எல்லா ஜனங்களும் ஒன்று சேர்ந்து ஏக மனஸாக இணைந்து ஆலோசனை பண்ணட்டும். எல்லோருக்கும் ஒரே லக்ஷ்யமாக இருக்கட்டும். எல்லா ஹ்ருதயங்களும் அன்போடு ஒன்று சேரட்டும். இப்படி ஏகோபித்த எண்ணத்தோடு எல்லாரும் ஆனந்தமாக இருக்கட்டும்” என்று ரிக் வேதம் முடிகிறது.





"உங்கள பால், சீனி சார் ரெண்டு பேரும் பாராட்டற போது ரீட்டா பார்கவி மூஞ்சிய பாக்கணுமே.. அப்படியே சுண்டிப் போச்சு..."

சொல்லும் போதே காயத்ரியின் குரலில் அப்படி ஒரு குதூகலம்.

திரும்பி வீடு வரும் வழி முழுக்க காயத்ரியின் வாய் மூடவே இல்லை. விஸ்வநாதனிடம் இருந்து அவள் பதிலும் எதிர்பார்க்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

அவளின் உற்சாகத்தை ஒரு புன்னகையோடு பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவள் பேச்சு ஒரே வேடிக்கையாக இருந்தது.

சந்திப்பு முடிந்த பிறகு மீண்டும் ஒரு முறை விஸ்வநாதனிடம் அவனுடைய பணி மற்றும் சம்பள விவரங்களை பற்றி பேசி அதற்கான கான்ட்ராக்ட்டில் அவன் கையொப்பமிட அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று சொல்லி எல்லாம் முடிவு செய்த பிறகே பால் விடைபெற்றான்.

"காயத்ரி.! தேர் இஸ் எ ஸ்வீட் சர்ப்ரைஸ் பார் யூ, வென் யூ ஜாயின் பாக். டில் தென் யூ என்ஜாய் யுவர் ஹாலிடேஸ் " என்று சீனிவாச ராகவன் கண் சிமிட்டி சொல்லி அவள் ஆர்வத்தை தூண்டி விட அது வேறு அவள் மண்டையை குடைந்தது.

பால் போகும் போது நிறுவனத்தின் சார்பாக என்று மூன்று நாட்கள் கோவாவில் ஹனிமூன் பேக்கேஜ் ஒன்றின் கூப்பன் கொடுத்து

"ஹாப்பி மேரீட் லைப். சீ யூ சூன்..நைஸ் மீட்டிங் யூ" என்று கை கூப்பி விடைபெற விஸ்வநாதன் "ப்ளெஷர் இஸ் மைன் ..." என்று பதிலுக்கு கை கூப்பி சொன்னதும் காயத்ரி மயக்கம் போடாத குறை.

இப்போது அது நினைவுக்கு வர "ஏன்னா? எங்க பாஸ்கிட்ட அவ்வளவு நன்னா இங்கிலீஷிலே பேசினேளே? இந்த ரீட்டா கிட்டயும் அதே மாதிரி பேச வேண்டியது தானே?

அவாட்ட நீங்க தமிழ்ல பதில் பேசவும் அவா ரெண்டு பேரும் உங்கள பட்டிக்காடுன்னு நினச்சிண்டா .. "

“தமிழ் பேச தெரிஞ்சவா கிட்ட எதுக்கு இங்கிலீஷ்ல பேசணும்? அவா மட்டும் இல்ல நீ கூட தானே என்னை அப்படி நினைச்சே?"

திரும்பி அவளை கூரிய பார்வையுடன் பார்த்து விஸ்வநாதன் கேட்டபோது முகத்தில் துளி கூட சிரிப்பு இல்லை.

காரில் இருந்த இருட்டில் அவன் முகம் தெரியாவிட்டாலும் இந்த குரல் அவன் இலகுவான மனநிலையில் இல்லை என்பதற்கு அர்த்தம் என்று காயத்ரிக்கு இப்போது நன்றாகவே தெரியும் தானே.

அவன் அவளை திருமணத்துக்கு முன் வந்து பார்த்தது அவளுக்கு இன்னும் தெரியாது.

தான் அவன் உடையை நாகரீகமாக மாற்றி கொள்ள சொன்னதை வைத்து சொல்கிறான் என்று நினைத்தாள்.

"அது..அது... நான் சொன்னதுல என்ன தப்பு? சீனாக்காரனோட சாப்பிடறப்போ பாம்புக்கறில நடுத்துண்டம் நேக்குன்னு சொல்லணும்னு தானே சொல்லுவா?

ஊரோட ஒட்டி வாழறதுல என்ன தப்பு? அது ..மின்ன எல்லாரும் வேஷ்டி கட்டிண்டு இருந்தா. குடுமி வெச்சிண்டு இருந்தா. இப்ப காலம் மாறிண்டு வருதா இல்லையா? காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கறதுல ஒண்ணும் தப்பில்ல.

நீங்க பிடிவாதமா இப்படி இருக்கப் போய் தானே அவல்லாம் பரிகாசம் பண்ணி சிரிக்கும்படியா ஆச்சு.."

காயத்ரி இருட்டில் அவன் முகத்தை பார்க்காத துணிவில் மனதில் இருந்ததை பட்டென்று பேச அங்கே கொஞ்ச நேரம் சூடு பறந்தது.

விஸ்வநாதன் அன்று அவள் பேசியதை சொல்லி விடலாமா என்று ஒரு நிமிடம் யோசித்தவன் அன்றைய இனிமையான மனநிலையை கலைக்க விரும்பாமல் இலகுவாகவே பேச்சை மாற்றினான்.

"ஓஹ்! அப்ப உங்க பாஸ் கூட தான் குதிரை வாலோட வந்தார். அதுக்கென்ன சொல்றே..?"

அவன் கேள்வியில் திருதிருவென்று விழித்த காயத்ரி "அது...அது பாஷன்ன்னா..." என்றவளுக்கே அவள் பேச்சில் இருந்த அபத்தம் புரிய கப்பென்று வாயை மூடிக் கொள்ள விஸ்வநாதன் வாய் விட்டு சிரித்தான்.

'நான் வெச்சா பட்டிக்காடு. அதே வெள்ளைக்காரன் வெச்சா பேஷனா?' என்ற சிரிப்பு.

அதற்குள் வீடு வந்து விட்டிருக்க மேலே அவனிடம் வாயைக் கொடுக்காமல் கார் நின்றதும் காயத்ரி அவனுக்காக கூட காத்திருக்காமல் வீட்டினுள் ஓடினாள்.

விஸ்வநாதனின் அம்மாவும் அத்தையும் உறங்காமல் இவர்களுக்காக காத்திருக்க காயத்ரிக்கு அன்று நடந்ததை சொல்ல நல்ல ஆள் கிடைத்தது. அவள் சொல்வதையெல்லாம் தலையாட்டி கேட்பவர்கள் அவர்கள் தானே.

"அம்மா! அத்தை ..! இன்னிக்கி என்ன நடந்தது தெரியுமா? எங்க பாஸே உங்க புள்ளய அப்படி பாராட்டிட்டார்? எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?"

என்றவள் அங்கு நடந்ததை விலாவாரியாக விவரிக்க இருவரும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தனர்.

விஸ்வநாதன் நேரே தன்னுடைய அறைக்கு போய் தன் உடையை மாற்றிக் கொண்டு வீட்டில் கட்டும் வேஷ்டியை அணிந்து கொண்டு தோளில் துண்டுடன் வெளியே வர அப்போதும் அவள் பேச்சு முடிந்திருக்கவில்லை.

"எங்க பிரான்ச் ஹெட் சீனி சார் இவரப் பத்தி எப்படி ஸ்லாகிச்சு சொன்னார் தெரியுமா? எனக்கு அவ்வளவு பெருமையா இருந்தது..." என்று கண்கள் மலர மகிழ்ச்சியில் பல்லெல்லாம் வாயாக காயத்ரி சொல்லிக் கொண்டிருக்க இருவர் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம்.

இருவரும் போகும் போது சூழ்நிலை சரியாக இல்லையே..? சுமூகமாக போய் வர வேண்டுமே என்ற கவலையில் தான் தூங்கக் கூட போகாமல் இருவரும் உட்கார்ந்திருந்ததே.

காயத்ரி திரும்பி வரும்போது சந்தோஷமாக அதுவும் கணவனின் பெருமையை பேசவும் இருவருக்கும் அப்படி ஒரு நிம்மதி.

"அம்மா! அத்தை...! நீங்க ரெண்டு பேரும் சாப்ட்டேளா? காயத்ரி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா பேசிண்டிருக்கே? போறும்….அவா தூங்கற டைம் ஆயிடுத்து .." என்று சொல்ல மூவரும் அவனிடம் பாய்ந்தார்கள்.

"டேய்! கோந்தை என்ன ஆசையா சொல்லிண்டிருக்கா? வந்துட்டான் அங்கேருந்து ..நீ போடா! எங்களுக்கு அப்படி ஒண்ணும் தூக்கம் வரல.." என்று பத்மா பாய விஸ்வநாதன் சிரித்தபடி பாத்ரூம் பக்கம் போனான்.

"நீ சொல்லு காயத்ரி! அப்பறம் என்ன நடந்தது..? என்று இருவரும் முகத்தில் பெருமை வழிய சுவாரசியமாய் கதை கேட்டனர்.

அவன் முகம் கழுவி எல்லாம் முடித்து வரும் போதும் பேச்சு தொடர்ந்து கொண்டிருக்க ஒரு புன்னகையோடு தன் அறைக்கு போய் விட்டான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து தங்கள் அறைக்கு வந்தவளின் முகம் சந்தோஷத்தில் விகசித்து இருந்தது.

விஸ்வநாதன் கட்டிலில் இரு கைகளையும் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருக்க வேகமாக அவன் அருகில் வந்தாள் காயத்ரி.

"ஏன்னா! கொஞ்சம் எழுந்திருங்கோ..!" என்று சொல்ல எதற்காக என்று புரியாமல் விஸ்வநாதன் எழுந்து அமர "எழுந்து நில்லுங்கோ!" என்று உத்தரவிட்டாள் காயத்ரி.

விஸ்வநாதன் "எதுக்குடி..?" என்று கேட்டபடி எழுந்து நிற்க காயத்ரி வேகமாய் கட்டிலில் அமர்ந்து அவனை தன் மடியில் அமர்த்தி அவன் வயிற்றை சுற்றிக் கட்டிக் கொண்டாள்.

"என் செல்ல குட்டி! என் பட்டு குட்டி! என் மொக்கள குட்டி!" என்று அவனைக் கொஞ்ச அவனுக்கோ சிரிப்பு தாங்கவில்லை.

"ஹா..ஹா.ஹா..எதுக்குடி இந்த கொஞ்சல்? என் இடுப்புல கை வெச்சு சிரிப்பு வேற மூட்டற..?" என்று எழுந்திருக்க முயல அவள் விடவேயில்லை.

"நான் உங்க கிட்ட இன்னிக்கி சண்டை போட்டேனோனோ? அப்ப சமாதானம் பண்ண வேண்டாமா? எங்க அம்மா கிட்ட சண்டை போட்டா இப்படி தான் சமாதானம் பண்ணுவேன்..."

என்று காயத்ரி சொன்ன விதத்தில் விஸ்வநாதனுக்கு அவள் மேலிருந்த கொஞ்ச நஞ்ச மனத்தாங்கல் கூட மறந்து போனது.

ஐந்தடியில் மெல்லிய உடல் வாகோடு இருப்பவள் ஆறடியில் தொண்ணூறு கிலோ எடையில் இருக்கும் அவனை மடியில் அமர்த்தி தன் சின்ன கைகளால் இடுப்பை அணைத்திருப்பது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

'ஆளு ஒழக்கு மாதிரி இருந்துண்டு இவ செய்யற சேட்டை இருக்கே...'

என்று சிரித்துக் கொண்டவன் "பட்டூ..! சரி விடு..! என்னை மடில வெச்சுண்டா உன் கால் தான் உடைஞ்சு போகும்.." என்று சொன்னதை அவள் கண்டு கொள்ளவேயில்லை.

"பரவாயில்ல னா..! நான் இன்னும் உங்கள பத்தி எதுவுமே தெரிஞ்சுக்கவே இல்லையே. இன்னிக்கி என்னவெல்லாம் நடந்துடுத்து...?

உங்கள அந்த ரீட்டாவும் பார்கவியும் பரிகாசம் பண்ணினப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?

அப்படியே அழுகை வந்துடுத்து. அவா எப்பவுமே என்னயே எதானும் சொல்லி வம்புக்கு இழுப்பா. மத்தவாளுக்கும் உங்க வேஷ்டி குடுமி பாத்துட்டு என்ன கிண்டல்? பின்னாடி நின்னுண்டு உங்கள பத்தி பேசி சிரிச்சப்போ அவ்வளவு வேதனையா இருந்தது.

இதுல இவளுக வேற உங்க ஆத்துக்கார் என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ரார் னு கேட்டு என் வைத்தெரிச்சலை கொட்டிண்டா. அந்த வருத்தத்துல தான் உங்கள சொல்லிட்டேன்..."

தன் மனதில் இருந்த குமுறலை அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

விஸ்வநாதனின் முதுகில் தன் முகத்தை பதித்து அவள் வருத்தத்தோடு பேச அவனுக்கு அந்த நேரம் அவளை ரொம்ப பிடித்தது.

தன் எடையை அவள் மேல் போடக் கூடாது என்று கால்களை தரையில் அழுத்தமாக ஊன்றி அவள் மடியில் பட்டும் படாமல் அமர்ந்திருந்தவன் அவளை தனக்குள் இறுக்கிக் கொண்டு அவள் வருத்தத்தை போக்க விரும்பினான்.

அவள் கையை விலக்கி எழுந்திருக்க ஒரு நொடி கூட ஆகாது என்றாலும் அந்த மென்மையான கைகளுக்குள் கட்டுண்டு இருப்பதை மிகவும் ரசித்தான்.

"உங்களுக்கு எப்படின்னா இத்தன பாஷை தெரியறது? எங்க பாஸ் கிட்ட அவ்வளவு சரளமா ஜெர்மன்ல பேசினேள். எங்க ஹெட் சீனி சார் பேசற இங்கிலீஷ்ல அமெரிக்கன் அக்ஸ்ன்ட் இருக்கும். அவர் பேசறது எங்களுக்கே சில சமயம் புரியாது.

நீங்க என்னடான்னா அதுக்கு சூப்பரா பதில் குடுக்கறேள். நான் என்னவோ நீங்க இந்த அமிஞ்சிக்கரையே தாண்டினதில்ல அப்படின்னு நினைச்சிண்டு இருந்தேன். நீங்க யூஎஸ்லாம் எப்பனா போனேள்?"

ஒன்று தொட்டு ஒன்றாக அவளுக்கு சந்தேகம் வந்து கொண்டே இருக்க அவனுக்கோ அவள் நெருக்கம் அவஸ்தையாய் இருந்தது.

"அது... நான் பாடசாலையில இருந்து வந்தப்புறம் அப்பா இருக்கறப்போ அங்க நிறைய போயிண்டு இருந்தேன்…”

"சமஸ்கிருதத்துல பிஹெச்டிலாம் வேற பண்ணிருக்கேள். எப்பன்னா அதெல்லாம் படிச்சேள்?

அவள் முகம் புரண்டு அவள் கன்னம் அவன் முதுகில் பதிந்திருக்க விஸ்வநாதனுக்கு அவள் கேட்கும் கேள்வியை புரிந்து கொள்ளவே கொஞ்ச நேரம் ஆனது.

"பட்டூ.. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? நீ ஸ்கூல்ல நிறைய சப்ஜெக்ட்ஸ் படிச்சிருப்பே? நான் படிச்சது சமஸ்க்ருதம் ஒண்ணு தானே? அதனால எனக்கு அதுல இயல்பாவே ஈடுபாடு வந்துடுத்து. அதனால தபால் மூலமா படிச்சேன். "

அவன் அதை ஒரு சாதாரணமான விஷயம் போல சொன்னாலும் காயத்ரிக்கு அவன் அதற்கு எவ்வளவு உழைத்திருப்பான் என்று நன்றாக புரிந்தது.

அதிலும் இப்போது மாமியார் அவன் மெட்ராஸ் யூனிவெர்சிடியில் M.A சமஸ்க்ருதம் படிப்பவர்களுக்கு விசிட்டிங் ப்ரோபசராக பாடம் எடுக்கிறான் என்று சொன்னது வேறு நினைவுக்கு வர அவனைப் பற்றி பெருமை பிடிபடவில்லை.

அவனை இன்னும் இறுக்கி அணைத்து அவன் முதுகில் அழுந்த முத்தம் கொடுத்தாள்.

"நீ ரொம்ப புத்திசாலிடா என் விச்சு குட்டி..!" என்று கொஞ்ச விஸ்வநாதன் சிரித்து விட்டான்.

"இவ்வளவு பெரிசா இருக்கேன். நான் உனக்கு விச்சு குட்டியா?"

"ஆமா.! எங்க அம்மா எனக்கு புடிச்ச பூரி பண்ணி குடுத்தா எங்க அம்மாவையும் இப்படி தான் ஜானு குட்டி னு கொஞ்சுவேன். அப்பாவ சக்கர குட்டின்னு சொல்லுவேன்..." என்று விளக்கம் கொடுக்க அதற்கு மேல் முடியாமல் விஸ்வநாதன் எழுந்து விட்டான்.

திரும்பி காயத்ரியை பார்க்க அவள் முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றம்.

"ஏன்னா அதுக்குள்ள எழுந்துட்டேள்..? இன்னும் எனக்கு கேக்க வேண்டியது நிறைய இருக்கே? ஏது நம்ம கிட்ட ரெண்டு கார்? அதெல்லாம் எங்க நிக்கறது? அப்புறம் அம்மா சொன்னா!

நீங்க கல்யாணத்தும் போது எனக்கு போட்டது வைர நெக்லெசாமே? நான் வெள்ளைக் கல்னு நினைச்சேன். வைர நெக்லெஸ் எல்லாம் வெல அதிகமா இருக்குமே..? உங்களுக்கு நிறைய வருமானம் வருமா..? அப்புறம்..."

விஸ்வநாதன் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்தவன் "கேள்வி போறுமா? இன்னும் இருக்கா? இப்பவே மணி பதினொண்ணு. மீதி சந்தேகம் எல்லாம் நாளைக்கு கேட்டுக்கலாம்...பேசாம படு..." என்று அதட்ட

"ஏன்னா! அப்படி சொல்றேள்? இன்னிக்கி அவா உங்கள சொன்னதும் எனக்கு எதுவுமே தெரியலியேன்னு எப்படி இருந்தது தெரியுமா..? என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

'ம்ஹும் ... இப்படியே உன்ன பேச விட்டா நீ விடிய விடிய பேசிண்டிருப்பே..பட்டூ.."

என்றவன் அவள் வாயை அடைத்த பிறகு அந்த அறையில் காலை வரை அமைதி தான் நிலவியது.
 

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
136
அவ கேட்டா பதில் சொல்லு விச்சு குட்டி, வாய அடைக்க நன்னா கத்து வைச்சிண்டிருக்க 😜😜😜😜
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
199
விச்சுவின் பட்டு ரெம்ப surprise ல இருக்கா 😄😄😄😄😄😄
 
Top Bottom