• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 1

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
3
Mr. மாமியார் 1


கா மேருவைச் சுற்றாது , சென்னையின் மேலேயே மையம் கொண்ட வட்டத் திகிரியாய் சுட்டெரித்தான் சூரியன்.

கண்ணைப் பறித்த வெயிலையே கூசச் செய்த வெண்ணிறப் பின்னணியில்,
அரிதான நீல நிற கிரானைட்டில்
ஆங்கிலத்திலும் தமிழிலும் பொறிக்கப்பட்டு, பொன்னிறத்தில் மின்னியது ‘லலிதாலயம்’

அளவான, அழகான வீடு. வந்து நின்ற ஸ்விஃப்ட் காரிலிருந்து இறங்கிய மூவரும் ஆளுக்கொரு பக்கம் வி(மு)றைத்தபடி உள்ளே சென்றனர்.


இவர்களுக்காக முன்னறையிலேயே ஆவலுடன் காத்திருந்த தாத்தா ரத்னத்திற்கு, பேத்தி லலிதாவின் ஸ்டில்லெட்டோஸ் திசைக்கொன்றாகப் பறந்த வேகத்திலேயே என்ன நடந்திருக்கும் என்று புரிந்துபோனது.

பின்னாலேயே வந்து தொப்பென்று சோஃபா அதிர அமர்ந்த மகள் லக்ஷ்மியின் முகத்தைப் பார்க்க, அங்கே தாளித்த கடுகும் உளுந்தும் கருகி, தீப்பிடிக்கும் அறிகுறி தெரிந்தது.

இப்போது காரை கராஜில் நிறுத்திவிட்டு உள்ளே வந்த தன் மாப்பிள்ளை ரங்கராஜனை ஏறிட, அவர் தோளைக் குலுக்கிவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.

“அம்மாடீ… லக்ஷ்மி”

“நீங்க சாப்பிட்டீங்களாப்பா?”

“ஆச்சுமா”

“போய் ரெஸ்ட் எடுங்கப்பா, அப்புறமா பேசலாம்”

மாலை…

முன்னறையில் கீழே சம்மணமிட்டு, ஒரு சிறிய மரத்தினாலான எழுதும் மேஜையில் மடிக்கணினி வீற்றிருக்க, அதன் பின்னே அமர்ந்திருந்த லக்ஷ்மியின் கையில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவி போல் ஒரு ட்ரான்ஸ்பரன்ட் பவுச்சில் ஒரு தடிமனான நோட்டுப்புத்தகம், ஸ்கேல், பேனா, ரப்பர், பென்சில், சிவப்பு நிற பால் பாயின்ட் பேனா என எல்லாம் தயாராக இருந்தது.

படிக்கும் கண்ணாடி அணிந்து, கணினியைப் பார்த்து நோட்டில் எதையோ எழுதுவதும், பிறகு மொபைலில் ஏதோ பதிவதுமாக லக்ஷ்மி படு பிஸியாக இருந்தாள்.

ரங்கராஜன் காஃபியுடன் வரவும், அறையிலிருந்து வெளியில் வந்த லலிதா (எ) லலிதா பரமேஸ்வரி, ஒரு கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு விளம்பரப் பெண்ணைப் போல் அதன் மணத்தை ஆழ்ந்து அனுபவித்தபடி,

“ஈஸ்ட் ஆர் வெஸ்ட் அப்பா’ ஸ் காஃபி ஈஸ் தி பெஸ்ட்”

மகளின் பாராட்டில், காலையில் இருந்த கோபம் போய் முகம் மலர்ந்தார் தந்தை.

தாயின் எதிரே இருந்த பெரிய குஷனில் வசதியாக அமர்ந்து கொண்ட லலிதா, கிண்டலாக “உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாம்மா?”

லக்ஷ்மி வேகமாக ஏதையோ சொல்ல வர, அவளது அலைபேசி அழைத்தது.

“ஹலோ, ஆமாம், சரியான நம்பர்தான்”

“...”

“என் பொண்ணுக்குதான் வரன் பாக்கறோம்.”

“...”

“நான் அவர் கிட்ட பேசிட்டு டீடெயில்ஸ் அனுப்பறேன். தேங்க் யூ”

கேள்வியாகப் பார்த்த கணவரிடம் “கிரி சித்தப்பா சொன்னாராம். பையனுக்கு ரெண்டு தங்கையாம். திருச்சில பல் டாக்டரா…”

“இந்த வர்றவங்க, போறவங்க பல்லைப் புடிச்சுப் பாக்கற ஆளெல்லாம் எனக்கு வேணாம்” என இடைமறித்த மகளை முறைத்த லலிதா,

“இது போல துடுக்கா பேசாதன்னு உனக்கு எத்தனை தரம்டீ சொல்றது. இன்னும் சின்னப் பொண்ணுன்னு நினைப்பா?”

“எனக்குப் புடிக்காததை புடிக்கலைன்னு சொல்றது ஒரு தப்பா?”

“தப்புதான். எதையும் சொல்றதுக்கு முன்னால யோசிக்கணும். இடம், பொருள், ஏவல்…”

“ஏவல்னா பிளாக் மேஜிக்தானேமா, இந்த ஊடு பொம்மைய (Vudu) ஊசியால குத்தறது, முட்டை மந்திரிக்கறது…”

ரங்கராஜன் “லலிதா, போதும்” என குரலை உயர்த்தினார்.

லக்ஷ்மி “ஆமாண்டீ, உனக்குத்தான் யாரோ மந்திரிச்சு விட்டாப்பல…”

தாத்தா ரத்னம் “லக்ஷ்மி, இதெல்லாம் என்ன பேச்சு, ரங்கா, நீங்க போன விஷயம் என்னாச்சு, உங்க அக்கா பொண்ணோட வளைகாப்பு நல்லபடியா நடந்துதா, உங்க அக்காவோட மச்சினர் ஃபேமிலியை தனியா பார்த்து பேச முடிஞ்சதா?”

கணவரை முந்திக்கொண்டு “எங்க, சின்னக் குழந்தைக்கு கண்டீஷன் போடற மாதிரி அத்தனை சொல்லியும், உங்க பேத்திதான் அங்க போய் சொதப்பிட்டாளே”

ரத்னம் மாப்பிள்ளையைப் பார்க்க, அவர் தலை ஆமோதித்தது.

பெருமூச்சு விட்ட தாத்தா “ஏம்மா இப்டி, நீ வீடியோல பார்த்து பேசின பிறகு, நீ சம்மதிச்சுதானே அந்தப் பையனை பார்க்கப் போன? சொல்லப்போனா, சிங்கப்பூர்ல இருந்து அவன் வந்ததே உன்னைப் பார்க்கதான். இல்லைன்னா இந்த வளைகாப்புக்கு அவன் ஏன் வரப்போறான்?”

“...”

“அதை விடு, நம்மைப் பத்தி அவங்க வீட்ல என்ன நினைப்பாங்க? உங்க அப்பாக்கு, அத்தைக்கு அவங்க வீட்ல எத்தனை தலைக்குனிவு, எம்பாரஸ்மென்ட்?”

லக்ஷ்மி “அவ அத்தைக்கு மட்டுமா எம்பாரஸ்மென்ட், என் மானமே போச்சு. அண்ணியோட நாத்தனார் ‘நீங்க பாக்கற மாப்பிள்ளை எல்லாம் உங்க பொண்ணுக்கு செட் ஆகாதுக்கா. பேசாம அவ வேலை பாக்கற இடத்துல யாரையாவது லவ் பண்ண சொல்லுங்கன்றா, எனக்கு மூஞ்சியைக் கொண்டு போய் எங்க மறைக்கறதுன்னு தெரியலை”

லலிதா “ரொம்ப பண்ணாதம்மா, நான் ஒன்னும் அந்தப் பையனை வேண்டாம்னு சொல்லலை. அவன்தான் தனியா பேசப் போனதும் “நான் ஸ்போர்ட்ஸ் மேன். மார்ஷல் ஆர்ட்ல சிலம்பம் தெரியும்னான். ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். சின்னப்புள்ளைத்தனமா கண்ணை கசக்கிக்கிட்டு
அவங்கம்மா கிட்ட போய் அழுதா நான் என்ன செய்ய?”

தாத்தா “இதெல்லாம் தெரிஞ்சா நல்லதுதானேம்மா, அவனுக்கு கோபம் வர அளவுக்கு நீ அப்படி என்னத்த கேட்ட?”

“ நாலு பேர் வந்து எங்கிட்ட வம்பு செஞ்சா கம்பு இல்லாம உன்னால அவங்களை அடிக்க முடியுமான்னு…”

தாத்தா ரத்னம் அடக்க முடியாது சிரித்துவிட, காலையில் இருந்த மனநிலை மாறியதில் சிரிப்பில் இணைந்து கொண்ட ரங்கராஜன் “கூல் டவுன் லக்ஷ்மி. அக்காட்ட நான் பேசிக்கறேன், விடு”

லக்ஷ்மி “அண்ணி நல்லவேளை என் பையன் சின்னவனா போய்ட்டான்னு சந்தோஷப் பட்டிருப்பாங்க” என்றபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.

வேலை…?

லக்ஷ்மியின் கையில் இருந்த நோட்டுப்புத்தகத்தில் வரிசையாக எண்கள் இடப்பட்டு, பெயர், ஊர், படிப்பு, வேலை, சம்பளம் நட்சத்திரம், கோத்திரம், பெற்றோர், மொபைல் எண் என்ற தலைப்புகள் கோடுகளால் பிரிக்கப்பட்டு லலிதாவுக்கு வரன் தேடுவதற்கென பதிவு செய்திருந்த மேட்ரிமோனி தளங்கள் மற்றும் குழுக்களில் இருந்து வந்த வரன்களில், தங்களுக்குப் பொருந்தும் என்று கருதுபவர்களின் விபரங்களை அட்டவணை போட்டு எழுதி வைத்திருந்தாள்.

அவற்றில் முன்பே பேசியவர்களின் எண்களுக்கு எதிரே சிவப்பு நிறத்தில் டிக் மார்க் இருந்தது.

மீண்டும் ஏதோ ஃபோன் வர, எட்டி அம்மாவின் நோட்டை எடுத்துப் பார்த்த லலிதா, பேசி விட்டு நிமிர்ந்தவளிடம் “என்னமா டேப்ளர் காலம் ( tabular column) போட்டு ரெக்கார்ட் மெயின்டெய்ன் பண்ற, வேற லெவல் போ”

“ஏன்டீ சொல்ல மாட்ட, ஒரு நோட்டு ஃபுல்லா தீர்ந்து போய் இது ரெண்டாவது நோட்டு. இதுவரைக்கும் குறைஞ்சது ரெண்டாயிரம் வரனாவது பார்த்திருப்போம். இந்த வேலையை போய் ஒரு ஆஃபீஸ்ல செஞ்சிருந்தா சம்பளமாவது கிடைச்சிருக்கும்”

“செய்யேன்”

“லலிதா…” என்ற தந்தையின் அதட்டலில் தப் தப் என சத்தமான காலடியோசையுடன் தன்னறைக்குள் சென்றாள் லலிதா பரமேஸ்வரி.

மகள்களைப் பெற்ற எல்லா தந்தைகளைப் போலத்தான் ரங்கநாதனும். அதுவும் ஒற்றை வாரிசாய் போனதில், லலிதாவை இளவரசி போல் அல்ல, இளவரசியாகவே வளர்த்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமானக் கம்பெனியில் இஞ்ஜினீயராக மும்பையில் வேலைக்கு சேர்த்தவர், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின் சமீபமாகத்தான் சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

அதுவுமே மென்பொருள் இன்ஜினீயரான லலிதா தன் வேலையை சென்னையில் இருக்கும் எம்என்ஸிக்கு மாற்றிக் கொண்டதால்தான்.

லக்ஷ்மியின் தம்பி அமெரிக்காவில் இருக்க, அவளது தாய் தவறியபின், தந்தையை தன்னுடன் அழைத்து வந்து விட்டாள். ரத்னம் எப்போதாவது ஒன்றிரண்டு மாதங்கள் மகனிடம் செல்வதோடு சரி.

செல்லமும் செல்வமுமாக வளர்ந்த லலிதா நன்கு படித்தாள். ரங்கராஜனின் அத்தனை புத்திக் கூர்மையும் மகளிடம் இருந்தது. மும்பையில் பிறந்து வளர்ந்து படித்தவளுக்கு இருபாலரிலும் நிறைய நட்புகள் இருந்தாலும், எல்லை வைத்துப் பழகுவாள்.

இருபத்தி இரண்டு வயதில் கேம்பஸில் தேர்வாகி வேலையில் சேர்ந்தவளுக்கு எத்தனையோ ப்ரபோஸல்கள் வந்திருந்தாலும், இன்று வரை யாரும் அவளை ஈர்க்கவில்லை.


தன் சுயத்தை விட்டு இறங்கி அல்லது விலகி தன் விருப்பத்தைச் சொல்லவோ, பிறரது காதலை ஏற்கவோ லலிதாவால் முடியவில்லை. தன்னைப் பற்றி, தன் நற்பெயரைப் பற்றி அவளிடம் எப்போதும் ஒரு கவனம் உண்டு.

இருபத்தியாறு வயது முடியப்போகும் லலிதாவிற்கு அவளைக் கேட்டுக் கொண்டு, அவளது சம்மதத்துடன், அவள் கேட்ட தகுதிகள், வைத்த அளவுகோல்கள், போட்ட நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை ஏற்று, அதன் அடிப்படையில் வரன் தேடத் தொடங்கி முழுதாக மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. இன்னும் எதுவும் திகைந்து வரவில்லை.

கிட்டுமணியின் எட்டு கட்டளைகளை மிஞ்சும் லலிதாவின் எதிர்பார்ப்புகளோடு பெற்றோரின் ஆசைகளும் சேர்ந்ததில், முதல் ஆறு மாதம் வரை வந்த வரன்கள் அனைத்தையும் ஏதாவது ஒரு கட்டத்தில் மூவரும் சேர்ந்தே நிராகரித்தனர்.

கம்ப்யூட்டரிலோ, வாட்ஸ்ஆப்பிலோ, இருக்கும் வரன்களின் புகைப்படத்தை, அவர்களது பெற்றோர்கள் பேசிய முறையை, நெற்றிப் பட்டையை, பையனது இங்கிலீஷை, கழுத்துவரை பட்டன் போட்டு, டை கட்டி நேர்காணலுக்குச் செல்பவனைப் போல் பெண் வீட்டிற்கு அனுப்பிய ஃபோட்டோவை கலாய்த்துச் சிரித்தனர்.

பெரியவர்களின் வடிகட்டலில் வரன் பார்த்தலே ஒரு பொழுது போக்காக ஆனது. நெருங்க ஒரு வருடம் போல் கடந்த நிலையில், லலிதா நான்கு மாதம் ஆன்சைட்டுக்கென கனடா சென்றாள்.

எட்டு மாத வெளிநாட்டு வாசம், மதிப்பான உத்யோகம், கணிசமான சம்பளம், பல்வேறு மக்களுடன் பழக்கம் இவற்றால், தன்னம்பிக்கையும், தான்தான் சரி என்ற உணர்வும், படிக்கும், பார்க்கும், விவாதிக்கும் பெண்ணிய, சமத்துவ கருத்துகளில் லலிதாவின் புரிந்துணர்வுக்கு ஏற்ப தனிப்பட்ட அபிப்பிராயமும் கிடுகிடுவென ஏறியதில் வருங்காலக் கணவனிடம் எதிர்பார்ப்புகளும் எகிறியது.

திடீரென கம்பெனி மாறியவளுக்கு வேலை சென்னையில் என்றான பின், ரங்கராஜனும் மாற்றலைக் கேட்டு வாங்கினார்.

சென்னை வந்தபின், எதையும் ஒரு ஒழுங்கோடு செய்யும் பழக்கமுள்ள லக்ஷ்மி, வரன்களின் விவரங்களை சேகரிப்பது, சரி பார்ப்பது, அவர்களின் வீட்டில் பேசுவது என வீட்டையே மேட்ரிமோனி அலுவலகமாக்கினாள். செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இரண்டு மணி நேரமாவது செலவிடுவாள்.

தீவிர முயற்சியின் பலனாக, நெருங்கி வந்த வரன்களில் ஜாதகம் பொருந்தி, இரண்டு பெற்றோர்களும் பேசப் போகும் தருவாயில், லலிதா “நான் பையன் கிட்ட பேசாம நீங்க எந்த பேச்சும் பேசக் கூடாது” என்ற புது கண்டீஷனைப் போடவும், பெற்றோர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டனர்.

ரங்கராஜன் “புரியாம உளறாத லலிதா, அவங்க நேர்ல பார்க்க எப்படி இருக்காங்க, பேசறாங்க, பழகறாங்க, அவங்க குடும்பம் எப்படி, வீடு எப்படி, என்ன மாதிரி லைஃப் ஸ்டைல்… இது எதையுமே பார்க்காம நீ எப்படி பையனோட பேச முடியும்? முதல்ல இதுக்கு அவங்க ஒத்துக்க வேண்டாமா?”

“ அவனோட மேனரிஸம் என்ன, பேசும்போது பார்க்க எப்டி இருக்கான், டேஸ்ட் எப்படி, டிபிகல் மம்மா’ஸ் பாயா, எவ்வளவு இங்கிலீஷ் பேச வரும், ஹிந்தி புரியுமா, புடிக்குமா, புக் படிப்பானா, சமைப்பானா, ம்யூஸிக் புடிக்குமா, ஏத்திஸ்ட்டா, பக்திப்பழமான்னு நான் பேசினாதானேப்பா எனக்குத் தெரியும்?”

லலிதா “இதெல்லாம் நாங்க பேசின பிறகு, அவங்க பெண் பார்க்க வரும்போது கேட்டா போறாதா?”


“ஒருவேளை நான் எதிர்பார்க்கற மாதிரி அவன் இல்லைன்னா, ஒரு கப் காஃபியோட முடியற விஷயத்தை பஜ்ஜி, சொஜ்ஜின்னு ஃபார்மலா இழுத்தடிக்கணுமாம்மா?”

“இருந்தாலும், இதுல எல்லாம் சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்கே. அதோட, நிச்சயமான அப்புறம் கல்யாணம் வரைக்கும் அவனோட பேசத்தானே போற, இதெல்லாம் அப்ப தெரிஞ்சா ஆகாதா?”

“நீதாம்மா இப்ப புரியாம பேசற. ஊரைக் கூட்டி நிச்சயம் பண்ணினதுக்கு அப்புறம் எனக்கு ஒத்து வராதுன்னு கல்யாணத்தை நிறுத்தினா உனக்குப் பரவாயில்லையா?”

அதிர்ச்சியில் சிறிது நேரம் வார்த்தை வராது தவித்த லக்ஷ்மி “எண்பது, தொன்னூறுகள்ல பொண்ணு பார்க்க வந்துட்டு உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. முதல் முதல்ல பொண்ணு பார்க்க வரும்போது அந்தப் பொண்ணுக்கு இருக்கற ஆசையும் பரபரப்பும் போகப் போக குறைஞ்சுடும்னு சொல்லி கேட்டிருக்கேன்”

“...”

“நாளடைவுல எதிர்பார்ப்பு போய், இன்னும் எத்தனை பேர் முன்னால இப்படிப் போய் நிக்கப் போறோம்னு அசூசையா இருக்கும்னு மஞ்சு அக்கா (ரத்னத்தின் அண்ணன் மகள்) சொல்லி கேட்டிருக்கேன். அதெல்லாம் போக, இப்ப ‘வாடா வரிசையில’ ன்னு நீ கிளம்பி நிக்கற. எனக்கு என்னமோ இது சரியா வரும்னு தோணலை. சரின்னும் படல. நீயாச்சு, உங்கப்பாவாச்சு”

ரங்கராஜன் விளையாட்டாக “நல்லவேளைடீ லக்ஷ்மி, இதெல்லாம் கேக்காம நீ எனக்கு வாழ்க்கை குடுத்துட்ட” என்றார்.

ஆனாலும், சமீபத்திய ட்ரெண்டின்படி, இது போல் பலர் பேசவிழைவதும், பேசுவதும் தெரிய வந்ததில், லலிதா நாலைந்து பையன்களை, இரண்டு மூன்று சுற்று நேரில் சந்தித்தாள்.

கட்டுப்பாடும் கமிட்மென்ட்டும் இல்லா பந்தம் கழற்றிவிட எளிதல்லவா? பழகப் பழகப் புளித்தது பால்.

அதே பாலில் தக்க சமயத்தில், மிதமான சூட்டில் உறை ஊற்றினால், புளித்த தயிரை probiotic எனக் கொண்டாடுகிறோம். பாலைவிட நீடித்திருப்பது, புளித்தாலும் உபயோகிக்கக் கூடியது, அதே பாலில் இருந்து கிடைக்கும் தயிர். அதுவே காத்திருத்தலின் பலன்!

அதில் ஒருவன் வேண்டாம் என நிர்த்தாட்சண்யமாகக் கூறியும், சமூக வலைத் தளங்களில் இன்று வரை தொடர்ந்து இம்சிக்கிறான்.

எத்தனை எளிமைப் படுத்திக் கொள்கிறோமோ அத்தனை எளிதானது வாழ்க்கை. அதை அதன் போக்கில் வாழாமல்
‘இதுதான் நான், இப்படித்தான் நான்’ என தன்னைச் சுற்றி வட்டம் போட்டுக்கொண்டு, அந்த வட்டத்துக்குள் சதுரத்தைத் திணிக்கும் முயற்சியில் லலிதா…

***************

நுங்கம்பாக்கத்தில் மரங்கள் அடர்ந்த அவென்யூவில் இருந்த அந்த மூன்று மாடிக் குடியிருப்பில், முதல் இரண்டு தளங்களில், தளத்துக்கு இரண்டாக நான்கே வீடுகள். கீழ்த்தளம் முழுவதும் பார்க்கிங், வாட்ச்மேன் மற்றும் சக்தி கணபதி சன்னதி.
மூன்றாவது மாடியில் பார்ட்டி, மீட்டிங், சிறிய அளவிலான விசேஷங்களை நடத்த ஒரு பெரிய ஹாலும் பாத்ரூமுடன் கூடிய ஒரு சிறிய அறையும் இருந்தது.

ஸ்ரீசைலம் பென்சில், பேனா, கலர் பென்சில், கிரேயான்ஸ், பெயின்டிங் செய்யத் தேவையான பென்சில்கள், டிராயிங் போர்டு, நிப் ஆர்ட் நிப்புகள், ஒல்லி பென்சில் முதல் உலக்கை பென்சில் வரை எழுதும்/ வரையும் பொருட்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்திருக்கிறார். ரகவாரியான, விதவிதமான கலர்கலரான தரமான பென்சில்கள் உள்நாட்டிலும் உலகமெங்கும் அமோகமாக விற்பனையாகிறது.

ஸ்ரீசைலம் இடம் வாங்கிக் கட்டிய கட்டிடம் அது. முதல் தளத்தில் இருந்த வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தனர்.

கச்சிதமான பெங்கால் காட்டன் புடவையில், கைக் கடிகாரத்தைக் கட்டியபடி அறையிலிருந்து வந்த சீதளா “ஹாய் பட்டூ” என்றாள் அப்போதுதான் தூங்கி எழுந்து வந்த மகனிடம்.

“எங்கம்மா இவ்ளோ சீக்கிரம்?”

“மணி பாரு எட்டாகப் போறது.
ஒம்போது மணிக்கு ஒரு கல்யாணம். பத்தரை மணிக்கு பெண்களை இழிவா பேசின அந்த அமைச்சரை எதிர்த்து ஒரு போராட்டம் இருக்கு. ஒரு மணிக்கு ‘ஸ்வீட்டீஸ் லூட்டீஸ்’ க்ளப் மெம்பர்ஸ் கருணை இல்லம் குழந்தைகளுக்காக ப்ளூ லாகூன்ல நடத்தற ஒரு ஆர்ட் எக்ஸிபிஷன் இருக்கு. எனக்கு அங்கதான் லஞ்ச். ஈவினிங்…”

தன் அன்றைய நிகழ்ச்சி நிரலை மகனிடம் பட்டியலிட்ட சீதளா, டக் இன் செய்யப்பட்ட சட்டை, பேன்ட்டுடன் வெளிப்பட்ட கணவர் ஸ்ரீசைலத்திடம் “போலாமா?”

“நான் ரெடி”

“...ம்மா… பிரேக் ஃபாஸ்ட்?”

“பிரட் இருக்கு. ஆம்லெட் போட்டுக்கோ”

“டன் மாம்”

“சீதள், கிளம்புமா” என்ற
தந்தையின் பார்வை வாசலுக்கு சென்று, சென்று மீள்வதைப் பார்த்த தனயன், “எங்களுக்கு என்னம்மா லஞ்ச்?”

“அவ சமைச்சுட்டாலும்”
என்றவாறு உள்ளே நுழைந்தார் ஸ்ரீசைலத்தின் தாயார், தேவகி.

“நல்லா கேளு பாட்டி, மாமியார்னா யாருன்னு காட்டு ”

‘ஏன்டா’ என்று பரிதாபமாகப் பார்த்தபடி வெளியேறிய ஸ்ரீசைலம், மனைவியிடம் “உம்புள்ளைக்கு வாமனமூர்த்தின்னு பேர் வெச்சதுக்கு பதிலா நாரத மூர்த்தின்னு வெச்சிருக்கலாம்” என்றபடி லிஃப்டில் நுழைந்தார்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
125
சூப்பர், இவன் தானா, இவன் தானா, லலிதாவின் நநாயகன் இவன் தானா?
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
1
கதை பெயரே அருமை. 2 பேரின் மாமியாரும் வேற லெவல். 4 வருசத்துல 2000 வரன் அலசியிருக்காங்க?? 🙄 இன்னொருத்தர் முழு நாளும் வெளியவே பிஸியா இருப்பாங்க போல😁 யாரு அந்த Mr மாமியார்? 😍
 
Joined
Jun 19, 2024
Messages
1
😍😍😍

எங்களுக்கு எப்படிபட்ட பையன் வேன்டும்னும்..😎😎😎


எப்படிப்பட்டவன் வேண்டாம்னும் ரொம்ப தெளிவா இருக்கோம்..😎😎

 
Top Bottom