• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு - 11

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
269
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 11

கண்ணாடி ஒருநாள்
புகை படிந்து மங்கலாகிப்போன
பிம்பங்களைக் காட்டும்போது
குறை நம்மிடம் இல்லையென்று
உணரும் மனிதன்
பழமையைக் களைந்து
புதுமையை ஏற்கும்போது
பிம்பம் தானாகவே
அழகாகி விடுகிறது!

படிக்கவேண்டும் என்கிற மணிமேகலையின் ஆசை நிராசையாகிப் போனது. வருத்தத்தை மறைக்கக் குழந்தைகளிடம் கவனத்தைத் திருப்பினாள்.

‘ பெண் குழந்தைகள் என்று கரித்துக் கொட்டப்படும் இவர்களுக்கு என்னால் முடிந்த அளவு கல்வியறிவு தரவேண்டும். அதற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் துணிந்து போராடுவேன்’ என்று மனதிற்குள் கங்கணம் கட்டிக் கொண்டாள்.

அவளுடைய வறண்ட வாழ்க்கையில் ஆறுதலாக அமைந்தது குழந்தைகள் மற்றும் மாதவியின் அன்பு மட்டுமே. மாதவிக்கு நாளாக ஆக மன உளைச்சல் அதிகமாகிக் கொண்டே போனது. குழந்தைகள் வேண்டும் என்கிற ஆசை தீவிரமானது. குழந்தைப் பேறு ஏன் தாமதமாகிறது என்று தெரிந்துகொள்ள மருத்துவரை ஆலோசிக்கலாம் என்று கணவனிடம் அனத்த ஆரம்பித்தாள்.

“ நமக்கு ஒண்ணும் அவ்வளவு வயசாகலையே மாதவி? அதுக்குள்ள ஏன் இவ்வளவு டென்ஷனாறே? கல்யாணமாகி ஒரு வருஷம்தானே ஆகியிருக்கு? பொறுமையாக் காத்திருப்போம். அம்மா ஏதாவது சொல்லறாங்கன்னு எதுக்கு இவ்வளவு கவலைப்படணும்? நாளைக்கே உனக்குப் பொண்குழந்தை பொறந்ததுனா அதுக்கும் ஏதாவது சொல்வாங்க? அப்போ என்ன செய்வே? இப்ப அண்ணியைப் பாரு, அம்மாவோட வசவுகளைத் தாங்கிக்கிட்டுத் தானே நிக்கறாங்க? நான் இப்போ கடையில் அப்பாவுக்கு எடுபிடியாத்தான் இருக்கேன். நான் வாழ்க்கையில் முன்னேறணும். என் குடும்பத்தை நல்லபடியா வச்சுக்கணும். இது மட்டுமே என் மனசுல ஓடுது. வேற எதையும் சொல்லி என் கவனத்தைத் திருப்பாதே மாதவி” என்று சொல்லிவிட்டான் மணிமாறன்.

கணவனின் கூற்றில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்தாள் மாதவி. பாவை என்னவோ அந்த அமைதியைக் குலைக்க அடிக்கடி முயற்சி செய்துகொண்டுதானிருந்தாள்.

இந்தச் சூழ்நிலையில் திடீரென ஒருநாள் திருநாவுக்கரசு, புரட்சிகரமாக ஒரு முடிவை எடுத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்டான்.
அன்று இரவு உணவை முடித்துவிட்டு எல்லோருமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ அப்பா, நான் வேலையை விடறதா முடிவு பண்ணிட்டேன் “ என்று ஆரம்பித்தான்.

“ என்னடா இது? நல்ல அரசாங்க வேலை. நல்ல சம்பளம். நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கற வேலை. வேலை கிடைக்கறதே கஷ்டமா இருக்கற இந்தக் காலத்தில் கையில இருக்கற நல்ல வேலையை எதுக்கு விடணும்? ” என்று கேட்டவரின் குரலில் இந்தத் தகவல் தந்த அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

“ அப்பா, நீங்க நடத்தற கடையை எடுத்து என் மேற்பார்வையில் பிஸினஸை மேம்படுத்தலாம்னு இருக்கேன்”

“ ஏம்பா, கடையில ஸேல்ஸ் நல்லாத்தானே போயிட்டு இருக்கு? நீ நல்ல வேலை பாக்கற. கடையை மணிமாறனே பாத்துக்கட்டுமே! அடுத்து நம்ம செழியனோ இஞ்சினியரிங் படிக்கிறான். அவனும் ஏதாவது நல்ல வேலை கெடைச்சுப் போயிருவான். இந்த பிஸனஸை மணிமாறனே சமாளிக்கட்டுமே? அவனோட வாழ்க்கைக்கு இது பிடிப்பா இருந்துட்டுப் போகுது. இதுல எதுக்கு வீண் குழப்பம்? ” என்ற அப்பாவிற்கு அரசுவின் யோசனை பிடிக்கவில்லை.

“ மணிமாறனுக்கு சாமர்த்தியம் பத்தாதுப்பா. நான் உள்ளே புகுந்து இதைப் பெரிய லெவலுக்குக் கொண்டு வந்துட்டேன்னா, நம்ம குடும்பத்துக்கு நல்லதுதானே? நான் இதைப் பத்தி நல்லா யோசிச்சுப் பேச வேண்டியவங்க கிட்டப் பேசிட்டேன். மணிமாறனை மாதிரி நானும் உங்க மகன்தானே? அதுவும் மூத்த மகன்! உங்களுக்கு அப்புறம் இந்த வீட்டுப் பொறுப்பு முழுவதும் என் தலையில தானே விழப் போகுது? ” என்று திருநாவுக்கரசு சொல்லத் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தாள் பாவை. மகன் தேவையில்லாமல் அதிகப்படியாக வார்த்தைகளை விடுவதாகக் தோன்றியது அவளுக்கு.

“ ஏண்டா இப்படி அச்சானியமாப் பேசறே ? அப்பாவை எதிருல வச்சுகிட்டு உங்களுக்கு அப்புறம்னு சொல்லலாமா? அப்பாவுக்கு என்னடா வயசாயிடுச்சு அப்படி? ” அம்மாவின் வார்த்தைகளில் ஆத்திரம் தெறித்தது.

“ ஏம்மா இப்படிக் கோபம் வருது உங்களுக்கு? அட, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். ஆனாலும், நான் சொன்னது உண்மை தானே? நெருப்புன்னா வாய் வெந்துருமா? இந்தக் காலத்தில் யாருக்கு எப்போ என்ன நடக்கும்னு சொல்லமுடியுமா? இதெல்லாம் நம்ம கையிலா இருக்கு? ” என்று மேலும் விதண்டாவாதமாகப் பேச, பாவை வாயை மூடிக் கொண்டாள். ஏதாவது கேட்டால் அவன் கூறும் பதில் மோசமாக அல்லவா போகிறது என்று எண்ணி மௌனமாகிவிட்டாள். முக்கியமாகத் தன்னுடைய மருமகள்களுக்கு எதிரே அவமானப்பட விரும்பவில்லை அவள்.

“ சரி அரசு, பிஸினஸை இம்ப்ரூவ் பண்ணனும்னு எதுக்குச் சொல்லறே? இப்போ நல்லாத்தானே போயிட்டிருக்கு? போடற உழைப்புக்கு ஏத்த பலன் இருக்கே? ” என்று அடுத்த கேள்வியை எழுப்பினார் அப்பா.

“ அப்பா, நீங்க தயாரிக்கறவங்க கிட்ட இருந்து ஸ்பேர் பார்ட்ஸை வாங்கிக் கடைகளுக்கு சப்ளை பண்ணற மிடில் மேன். இந்த சாமான்களை டிஸ்ட்ரிப்யூட் பண்ண, நாம ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியோட உதவி எடுத்துக்கறோம். அதுனால லாபத்தோட பெரும்பகுதி மேனுஃபேக்சரருக்கும் டிரான்ஸ்போர்ட் கம்பெனிக்கும் போயிடுது. நான் என்ன செய்யப் போறேன்னா, நானே ஒரு ஃபேக்டரி வச்சு பார்ட்ஸ் எல்லாம் நானே தயாரிக்கப் போறேன். அது மட்டும் இல்லாமல் நானே நாலைஞ்சு வண்டிகளை வாங்கிப் போட்டுக் கடைகளுக்கு அனுப்பற வேலையையும் நானே செய்யப் போறேன்” என்று சொன்னபோது, “நாமே” என்று எங்குமே சொல்லாமல் எல்லா இடங்களிலும், “நானே” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்ன விதம் அனைவருக்கும் உறுத்தலாகத் தெரிந்தது. அப்பாவே மனதளவில் அடிபட்டுப் போனார்.

“ அரசு, நீ சொல்லறதெல்லாம் கேக்க நல்லாவே இருக்கு. இதையெல்லாம் ஆரம்பிக்க நிறையப் பணம் முதலீடு செய்யணுமே? அப்புறம் புதுசா மார்க்கெட்டில் நம்ம புராடெக்டைக் கொண்டு வந்தா வாங்க கிளையண்ட் பிடிக்கணும். இப்ப நாம விக்கிறது எல்லாம் பிராண்டட் ஐட்டம். கடைகளில் தைரியமா வாங்கறாங்க. நாம தயாரிக்கற சாமான்களைத் தேங்கிப் போகாம ஜனங்க கிட்டக் கொண்டு சேக்கறதுக்கு நிறைய மார்க்கெட்டிங் செய்யணுமே? அதெல்லாம் நமக்குப் பழக்கமில்லாத ஏரியா. நமக்குத் தெரியாத இடங்களில் தலையைக் கொடுத்துட்டு நஷ்டப்பட்டா உள்ள பேரும் போயிருமேப்பா? “

“ ஏம்பா, எடுத்த எடுப்பிலேயே நெகடிவ்வாப் பேசறீங்க? நான் எல்லாத்தையும் நல்லா ஆராய்ச்சி பண்ணி, ஃபீல்ட் ஸ்டடி கூடப் பண்ணிட்டேன். மார்க்கெட்டிங் பண்ண நல்ல அட்வர்டைசிங் ஏஜென்சிகள் இருக்கே? ஒரு சின்னத்திரை பிரபலத்தைப் போட்டு டிவியில் ஒரு விளம்பரத்தைத் திருப்பித் திருப்பிக் காமிச்சாப் போதும். கண்ட குப்பையைக் கூட ஜனங்க வாங்குவாங்க. அப்படி இருக்கும்போது நல்ல தரமான பொருட்களைத் தயாரிச்சு மார்க்கெட்டில் கொடுத்தால் ஏன் ஸேல் ஆகாது? கண்டிப்பா ஆகும். எனக்கு நம்பிக்கை இருக்கு”

“ சரி, உன்னோட பிளான்படி எல்லாம் செய்யலாம்னே வச்சுக்குவோம். பணத்துக்கு என்ன செய்வோம்? பேங்க் லோன் போட்டாக் கூட ஸெக்யூரிட்டி கேப்பானே? என்ன செய்வோம்? நாம என்ன பரம்பரைப் பணக்காரங்களா? சொத்துகளைக் குவித்து வச்சிருக்கோமா என்ன? ”

“ ஏம்பா இல்லை? அதுதான் மணிமேகலை பேருல தோட்டம், நிலம்லாம் இருக்கே? பேங்க்ல லோன் போட வேண்டாம். எதுக்கு அநாவசியமா அவனுக்கு இன்ட்ரஸ்ட் கட்டணும்? லோன் ஸாங்ஷன் பண்ணவும் லேட்டாக்குவான். தனியா வேற கண்டவனுக்கும் கமிஷன்னு பணம் செலவழிக்கணும். வேண்டவே வேண்டாம். வீட்டை மாத்திரம் வச்சுகிட்டு மீதியை வித்துரலாம். பணத்தை பிஸினஸில போடலாம். எவனுக்கோ குத்தகை விட்டு அவன் கிட்டப் பணம் வருமோ, வராதோன்னு
பயந்துகிட்டு வாழறதுக்கு வித்துடறது எவ்வளவோ தேவலை” என்று திருநாவுக்கரசு தன் முடிவைப் படாரென்று சொல்ல எல்லாருமே அதிர்ந்து போனார்கள்.

திடுதிப்பென்று சொத்துகளை விற்கலாம் என்று சொன்னது அவர்களுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அதுவும் மணிமேகலைக்கு அவளுடைய பிறந்த வீட்டில் இருந்து கிடைத்த சீதனம் அது. நிச்சயமாக அவளுக்கு அவற்றின் மீது உணர்ச்சிபூர்வமான பற்று இருக்கும் என்று அவன் சிந்திக்கவேயில்லை. மணிமேகலை மட்டுமல்ல பாவையும், அவளுடைய கணவரும் அந்தக் காலத்து மனிதர்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கே விவசாய நிலம், மற்றும் தோட்டம் போன்ற சொத்துகளின் மீது ஒருவிதமான பிடிப்பு இருக்கும். பரம்பரை, பரம்பரையாக வரும் இந்த உடைமைகளை மகாலட்சுமியின் பிரசாதங்களாகவே நினைப்பதுண்டு. அவற்றைச் சட்டென்று விற்கலாம் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

பாவை, மணிமேகலையை ஏறெடுத்துப் பார்த்தாள். அவளுடைய முகத்தில் இருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்று கணிக்க முடியவில்லை.

“ என்னடா அரசு? திடீர்னு விக்கலாம்னு சொல்லறே? அதைப் பத்தி முடிவெடுக்க வேண்டிய உரிமை மேகலை கிட்ட இல்லை இருக்கு? ” என்று பாவை கேட்ட கேள்வி நியாயமாக இருந்தது. என்னதான் மருமகளை அவ்வப்போது தவறாகப் பேசினாலும், இந்த சமயத்தில் தன்னுடைய ஆதரவைக் காட்டிவிட்டாள் பாவை.

“ ஏம்மா இப்படிப் பிரிச்சுப் பேசறீங்க? மணிமேகலை யாரும்மா? மொதலில என் பொண்டாட்டி. அதுக்கப்புறம் தான் இந்த வீட்டு மருமகள். என் பொண்டாட்டி சொத்துல எனக்கு உரிமை இல்லையா? அவ அதுக்கெல்லாம் சரின்னு சொல்லிடுவா” என்று எளிதாகச் சொல்லி விட்டான். மணிமேகலையால் உடனடியாக பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. சொத்துகளை விற்க வேண்டும் என்று அப்படி திடீரென்று அரசு அறிவித்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் இப்படி வேலையை விட்டுவிட்டு ரிஸ்க் எடுத்து இந்த பிஸினஸ் ஆரம்பிப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. மாமனார் அனுபவசாலி. அவர் கூறுவது சரியாக இருக்கும் என்று நம்பினாள். குழந்தை சுடரி வீல்வீலென்று கத்த ஆரம்பிக்கவும், அவளைத் தூக்கிக் கொண்டு தங்களுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள் மணிமேகலை.

அன்று இரவு அதற்காக அவளைக் கோபித்துக் கொண்டான் திருநாவுக்கரசு.

“ நான் விக்கணும்னு சொன்ன உடனே எல்லார் முன்னாலயும் அவரோட விருப்பம்தான் என்னோட விருப்பம்னு சொல்லியிருக்க வேணாமா? ஒண்ணுமே பேசாமல் கொழந்தையைத் தூக்கிட்டு நகந்துட்டயே? ரொம்பத் திமிருடி உனக்கு? “

“ இல்லைங்க. பெரியவங்க பேசும்போது நான் எப்படிங்க ஊடையில பேசறது? அதுவும் ஆம்பளைங்க முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசிட்டிருக்கும்போது பொம்பளைங்க நடுவில புகுந்து பதில் சொன்னா அத்தைக்குப் பிடிக்காதுன்னு நெனைச்சேன்”

“ சரி, நிலத்தையும், தோட்டத்தையும் விக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன். ரெஜிஸ்டிரேஷன் நடக்கற அன்னைக்கு வந்து கையெழுத்துப் போட ரெடியாகிக்கோ” என்று தானே கட்டளையிட்டு விட்டு நகர்ந்து விட்டான்.

தன்னுடைய எதிர்ப்பைக் கூடக் காட்டாமல் அடங்கிப் போனாள் மணிமேகலை. ஒருவிதத்தில் மணிமேகலையின் பேரிலும் தவறு இருந்தது. பிடிக்காத செயலைச் செய்ய ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்? அன்றே துணிந்து நின்றிருக்கவேண்டும். முதன்முறையாக ஏற்பட்ட இந்தக் கருத்து வேறுபாட்டில் யுத்தம் செய்யாமல் தோல்வியை ஏற்றுக் கொண்டாள் அவள். அந்த முதல் சரணாகதி திருநாவுக்கரசின் துணிச்சலை நன்றாக வளர்த்துவிட்டது. அன்றுதான் திருநாவுக்கரசு மீது அவளுடைய மனதில் வெறுப்பின் முதல் விதை விழுந்தது.

இவ்வளவு நாட்கள் தன்னுடைய இல்லறத்திற்கு மதிப்புக் கொடுத்து பாவையின் ஏச்சுகளை ஏற்றுக்கொண்டு அரசுவின் அடாவடித்தனமான அட்டூழியங்களைப் பொறுத்துக் கொண்டே போனாள் மணிமேகலை. குழந்தைகளின் நலனுக்காக அவளுடைய மனதில் கொடுத்த முக்கியத்துவம் முதல் காரணம். குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கு அவசியம் என்று நினைத்தாள். என்னதான் இருந்தாலும் தன்னுடைய பாட்டியின் பேச்சைக் கேட்டுத் தன் மகனுக்கே திருமணம் செய்து வைத்து வீட்டுக்கு மருமகளாக அழைத்துவந்த அத்தை, மாமாவின் மனங்கள் நோகக்கூடாது என்று நினைத்தாள். அவளுடைய மனதில் விழுந்த வெறுப்பெனும் விதை, விருட்சமாக வளர்ந்ததற்கு முழுக்க முழுக்க திருநாவுக்கரசு காரணம். அதுவும் மணிமாறன், மாதவி விஷயத்தில் அவன் நடந்துகொண்ட விதம் அவளுடைய வெறுப்பிற்கு உரம் போட்டு வளர்த்தது. வெறுப்பு விருட்சமாக வளர்ந்து நெஞ்சை அடைத்துக் கொண்டதால் அவளுக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது.

திருநாவுக்கரசு தன் முடிவில் உறுதியாக நின்றான். பிடிவாதமாக வேலையை விட்டான். தான் நினைத்ததைச் சாதித்து மணிமேகலை பேரிலிருந்த சொத்துகளை விற்றான். பிஸினஸை ஆரம்பித்து விட்டான். மிகவும் சாமர்த்தியமாகத் தன்னுடைய அப்பாவையும் , தம்பியையும் முக்கியமான பொறுப்புகளில் இருந்து அகற்றி, வீட்டில் உட்கார வைத்தான். மாமாவிற்கு ஒன்றும் பெரிதாக மனவருத்தம் இருக்கவில்லை. குழந்தைகளுடன் விளையாடிப் பொழுதைக் கழித்தார். மணிமாறன்தான் தாழ்வு மனப்பான்மையுடன் புழுங்க ஆரம்பித்தான். அவனை அடிக்கடி அண்ணனின் வார்த்தைகள் துன்புறுத்தின.

“ சும்மாத் தானே இருக்கே? இன்னைக்குப் போய் லோடு தயாராயிடுச்சான்னு பாத்துட்டு வா”

“ சும்மாத் தானே இருக்கே? இந்த பேப்பரை எல்லாம் கொண்டு போய் ஆடிட்டர் வீட்ல கொடுத்துட்டு வா”

“ சும்மாத் தானே இருக்கே? இந்த வரியைக் கொஞ்சம் முனிசிபல் ஆஃபீஸில் கியூவில் நின்னு கட்டிட்டு வா”

என்று அடிக்கடி குற்றேவல்களைச் சொல்லி அவனை ஒரு கடைநிலை ஊழியனாகவே நடத்தினான் அரசு. “சும்மாத்தானே” என்கிற வார்த்தையை அடிக்கடி பிரயோகித்துத் தம்பியின் மனதைக் காயப்படுத்திக் கொண்டேயிருந்தான் அண்ணன். மணிமாறன் மனதளவில் அதிகமாக நொந்து போயிருந்ததை யாருமே உணரவில்லை. இந்த சமயத்தில் அவர்களுக்கு வாரிசு உருவாகாத பிரச்சினை பற்றிய விவாதம் மீண்டும் உயிர்த்தெழுந்தது.

“ இப்பத்தான் கடைக்குப் போயி வேலை பாக்கற கட்டாயம் உனக்கு இல்லையே? ஒரு தடவை போயி டாக்டரைப் பாத்துட்டு வாங்க. ரெண்டு பேரும் டெஸ்ட் எடுத்துப் பாருங்களேன்? காலாகாலத்தில் குழந்தை பொறக்க வேணாமா? அம்மாவும் எத்தனை நாளா ஏங்கிட்டு இருக்காங்க” என்று தம்பியை ஒரு பக்கம் குத்திக் காண்பித்து, அம்மாவின் ஆதங்கத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டான் அண்ணன்காரன்.

இதே வார்த்தைகளைப் பிரியத்தோடும், அக்கறையோடும் சொல்லியிருந்தால் மணிமாறனுக்கும் ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால், திருநாவுக்கரசு பேசிய வார்த்தைகளில் கிண்டலும், கேலியும் அதிகமாகத் தொனித்த விதம், மணிமாறனை வதைத்தது. அம்மாவும் மூத்த மகன் சொன்னதை வழிமொழிந்தாள். மாதவியுடன் சேர்ந்து போய் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கினான். அவனுக்கு என்னவோ அதில் பிரமாதமாக விருப்பமில்லை என்றாலும் அம்மாவும், அண்ணனும் சொல்வதைக் கேட்டுவிட்டு அந்த முடிவை எடுத்திருந்தான். அதுவே பெரிய வினையாக முடிந்தது.

இதற்கு நடுவில் அந்த வீட்டின் மூன்றாவது மகனான செழியன், படித்து முடித்தபின் பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்தான். கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலை அது. வேலைக்குச் சேர்ந்த சில நாட்களில், திருமணம் செய்து கொண்டுவிட்டதாக வீட்டிற்கு அவன் தகவல் தந்தபோது வீட்டில் புயல் தாக்கியது.

பாவை மயங்கி விழுந்தாள். பாவையின் கணவரோ அதிர்ச்சியைத் தாங்கமுடியாமல் பேயறைந்தது போல நின்றார்.

“ என் கூடப் படிச்ச பொண்ணு. தெலுங்குப் பொண்ணு. நாலு வருஷமா நாங்க காதலிச்சுட்டு இருக்கோம். இப்போ திடீர்னு அவங்க வீட்டுல அவளுக்கு வேற மாப்பிள்ளை பாத்ததுனால அதிலிருந்து அவளைக் காப்பாத்த, உடனே கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை ஆகிப் போச்சு. அடுத்த வாரம் அவளைக் கூட்டிட்டு வந்து உங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கறேன்” என்று தகவல் சொல்லி இருந்தான் அவன்.

அடுத்த வாரம் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான் செழியன்.

தொடரும்,

திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு - 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
125
பொறுத்துகொள்வதில்
பிறக்கிறது ஆண்களின்
பிடிவாதமும் அலட்சியமும்...
பொண்டாட்டியை அடக்க
பயன்படுத்தும் வார்த்தை
"சும்மாதானே இருக்க"....
வலிகள் நிறைந்த வார்த்தை....
வாழ்வை வெறுக்க வைக்கும் வார்த்தை
😭😭😭
 
Top Bottom