அத்தியாயம் – 11
தன்னறையில் இருந்தான் என்ற நேத்ராவின் பேச்சைக் கேட்டதும் அனைவரும் அருகில் நின்றிருந்தவர்களுடன் குசுகுசுவென்று பேச ஆரம்பித்தனர். கண்டிப்பாக நல்ல வார்த்தைகளை அவர்கள் சொல்லவில்லை என்பது திண்ணம்.
இப்படி உண்மையை வெளியிடுவதால் தன் பெயர் கெடும். அது பரவாயில்லை போகட்டும் எனச் சில விநாடிகளுக்கு முன்னர் நினைத்ததற்கு மாறாக, ஆதிநந்தனுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.
அத்தோடு அவளைப் பற்றியும் அனைவரும் தவறாக எண்ணிக் கொள்கிறார்காளே. அதை அவள் கண்டுகொள்ளவில்லையா, இல்லை, அது ஒரு பொருட்டாக அவளுக்குப் படவில்லையா?
‘வேண்டாம் ஆதி... சும்மா சும்மா ஒரு பொண்ணைப் பத்தி தவறா நினைக்காத’ என அவன் நியாயப் புத்தி முதல் முறையாக வன்மையாகக் கண்டித்தது. ‘இப்போ நீயும் அந்த நிலைமையில தான் நிற்கிற. தப்பே செய்யாம உன்னைத் தப்பா எல்லோரும் நினைக்கிறாங்க.’ அவன் மனம் நிலை கொள்ளவில்லை.
துருவனுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும். அவன் நேத்ராவை நம்பாத பார்வை பார்க்க, அவள் திடமாக நின்று கொண்டிருந்தாள்.
“வேணா என் ரூம் பக்கத்துல இருக்கிற கேமராவை செக் பண்ணிப் பாருங்க” என்றதும் தன் உதவியாளரை அழைத்து அதைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான் துருவன்.
“சொல்லுங்க, அ... அவர் உங்க அறையில என்ன செ... செஞ்சுட்டு இருந்தார்?” என துருவன் மேற்கொண்டு விசாரணை செய்யத் தடுமாறினான். ஆனாலும் கடமை முக்கியமாகிப் போனது அவனுக்கு. உடனே தன்னைச் சேகரித்துக் கொண்டு அவன் நேத்ராவை ஊடுருவ,
“எங்கே இருந்தார்னு கேட்டீங்க அதுக்குப் பதில் சொல்லிட்டேன். என்ன செஞ்சுட்டு இருந்தார் என்பதெல்லாம் எங்க பெர்சனல்” எனக் கறாரான குரலில் முடித்துக் கொண்டாள் நேத்ரா.
முதலில் சம்மந்தமேயில்லாதவன் அவள் அறைக்கு எதற்கு வந்தான் என்பதை எப்படி விளக்குவது? சண்டை போட வந்தான் என்றால் அவனைக் குற்றவாளியாக்க பலமான காரணம் கிடைத்ததைப் போலாகிவிடும்.
அங்கிருந்தவர்கள் இன்னுமே குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். எல்லோரின் பார்வையும் தன்மேல் படுகிறது என்பதை உணராமல் இருக்கும் அளவுக்கு நேத்ரா ஒன்றும் சுரணைக் கெட்டுப் போய்விடவில்லை.
ஆனால் இவர்களின் பார்வை எல்லாம் இவளை என்ன செய்துவிடும்? யாரும் தான் சிந்தும் கண்ணீரின் ஒரு துளியைக் கூட ஏந்திக் கொள்ள வரப் போவதில்லை. அதன் நிறத்தையும் மாற்ற விழையப் போவதில்லை. இந்த ஆதியையும் சேர்த்தே.
“நான் இவங்ககிட்ட தனியா விசாரிக்கணும்” என அங்கிருந்தவர்களைக் கலைந்து போகச் சொன்ன துருவன், அவர்கள் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு யாருமில்லாத இடத்துக்குச் சென்றான்.
“நீங்க ரெண்டு பேரும் இப்போ கிளம்புங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களைக் கூப்பிடறேன்” என துருவன் அவர்களைப் போகச் சொல்லிவிட்டு, நேத்ராவின் அறைக்கு அருகில் இருந்த இருந்த இடத்தில் இருந்த சிசிடிவியை ஓடவிட்டுப் பார்க்கக் கிளம்பினான் துருவன்.
துருவன் போகச் சொல்லிவிட்டாலும் ஆதிநந்தனால் அங்கிருந்து நகர முடியவில்லை. அவனுக்கு நேத்ராவுடன் பேச வேண்டும். ஆகவே நேத்ராவை ஏறிட்டுப் பார்க்க, அவளோ திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
துருவனின் முன்னால் அவளைத் துரத்திக் கொண்டு போக அவனுக்கு மனம் வரவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனத் தயங்கி தயங்கித் திரும்பிக் பார்த்தவாறே அவனும் அங்கிருந்து நகர்ந்தான்.
கப்பலில் இருந்த சிசிடிவிக்களில் இரண்டு இடங்களில் அவை வேலை செய்யவில்லை எனக் காலையிலேயே தெரிவித்திருந்தனர். அதைச் சரி பார்க்கும் நபரால் உடனே பழுது பார்க்க முடியாமல் போய்விட்டது.
துணி துவைக்கும் இடத்திலும், அங்கிருந்து நடந்து வரும் வராண்டாவிலும் வேலை செய்யவில்லை. அதுவொன்றும் பெரிய விஷயமில்லை என்று மெத்தனமாக இருந்துவிட்டார்கள். ஆனால் அது இருந்திருந்தாலும் இதில் பெரிதும் உதவியிருக்கும் என்றும் சொல்ல இயலாது. ஏற்கனவே பார்த்ததில் ஒரு சின்னத் துப்புக் கூடக் கிடைக்கவில்லை துருவனுக்கு.
மீண்டும் நீச்சல் குளத்தின் அருகில் இருந்த சிசிடிவியைச் சுழல விட்டான். அதில் அருண் தனியே நடந்து போவது தெரிந்தது. அவன் நடையில் சிறிது தள்ளாட்டம் தெரிந்தது உண்மை. அப்படியே தடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்ததும் பதிவாகியிருந்தது. இருட்டாக இருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் யாரும் அதைக் கவனிக்கவில்லை.
இரவு ஒன்றரை மணியளவில், அங்கே வேலை செய்யும் பணியாளர் ஒருவர் அந்த வழியாக எதற்கோ சென்றிருக்கிறார். நீச்சல் குளத்தின் அருகில் வருகையில் யாரோ அதில் மிதந்து கொண்டிருக்க அருகில் சென்று பார்த்திருக்கிறார்.
யாரோ, பேண்ட் சர்ட்டுடன் குளத்தில் இருக்கவும் அவன் மூளையில் அபாயமணி ஒலிக்க ஆரம்பித்தது, சத்தம் போட்டு எழுப்ப முயல, எதுவும் பயனளிக்கவில்லை. உடனே மற்றவர்களை அழைத்துக் கொண்டு வந்து அவனை வெளியில் எடுத்தனர்.
நேத்ரா சொல்வதைப் போல் நேரத்தைக் கணக்கிட்டும், நீச்சல் குளம் அருகில் பதிவாகியிருந்த விஷயம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஆதிநந்தனுக்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்று ஊர்ஜிதமாகிறது.
ஆனாலும் எதுவோ சரியில்லை என்று துருவனின் ஆழ்மனம் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அதற்குள் அவன் எதிர்பார்த்திருந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையும் அவனை வந்தடைந்தது.
அதன்மேல் பார்வையைச் சுழலவிட்டவன் சம்மந்தப்பட்ட மருத்துவரிடம் பேசி மேலும் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொண்டான்.
தீவிர யோசனையில் துருவன் மேலும் சில சிசிடிவி காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் ஆதிநந்தன் அருணிடம் அருந்துவதற்கு எதையோ கொடுப்பது தெரிந்தது.
இப்போது தான் இவன் மேல் சந்தேகம் தீர்ந்தது என நினைக்க, மீண்டும் அவனே சந்தேகத்தைக் கிளறிவிட்டுவிட்டானே. அருண் அதை வாங்கிக் குடிப்பதும் பதிவாகியிருந்தது.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தைவிட்டு நேத்ரா விலகிச் செல்ல, அவளைப் பின்பற்றி அருணும் செல்வது தெரிந்தது. அதன்பிறகு ஆதிநந்தனும் அவர்களை முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
நடந்து கிட்டதட்ட இரண்டு நாட்கள் ஆகப் போகிறது என்பதால் அருண் குடித்துவிட்டு வைத்த கிளாஸ் எதுவென்று தெரியவில்லை. இருந்திருந்தால் அவன் என்ன குடித்தான் என்று கண்டறிந்திருக்கலாம்.
அருண் இறந்த அன்று மாலை நடந்த மேலும் சில நிகழ்வுகளைக் காணொளிகளைச் சுழலவிட்டுப் பார்த்தான் துருவன். அதில் சுனிலிடமிருந்து அந்தக் கோப்பையை ஆதிநந்தன் வாங்கியிருந்தது பதிவாகியிருந்தது.
அப்படியென்றால், ஆதிநந்தனாக எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. கொண்டு வந்த பானத்தை வாங்கிக் கொண்டு போய்த் தந்திருக்கிறான்.
யோசனையில் துருவன் தன் நாற்காலியில் அப்படியும் இப்படியும் சுழன்று கொண்டிருக்க, அறைக்கதவை யாரோ தட்டுவது கேட்டது. துருவன் சென்று யாரென்று பார்க்க, துணி துவைக்கும் இடத்தில் வேலை செய்யும் பணியாள் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் நின்றிருந்தான்.
“சார்.. வந்து உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்” எனச் சுற்றும் முற்றும் பார்த்தான்.
“உள்ள வாங்க” என அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் துருவன். அவன் சொன்னதை எல்லாம் கேட்டுத் துருவனின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது.
“இது இந்தக் கேஸூக்கு உதவுமான்னு தெரியலை. ஆனா சொல்லணும்னு தோணிச்சு சார்” என்றான்.
“தேங்க்ஸ் மனோகர், நீங்க சொன்னது ரொம்பச் சரி. எல்லாக் கோணத்துலேயும் நாங்க விசாரிக்கிறது நல்லது. அப்போ தான் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும். நான் பார்த்துக்கிறேன். நான் எப்போ கேட்டாலும் வந்து உண்மையைச் சொல்லணும்” என அவனை அனுப்பி வைத்த துருவன், தன் உதவியாளர்களை அழைத்துச் சில கட்டளைகளைப் பிறப்பித்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் துருவனுக்கு வேண்டிய விவரங்கள் அவனை வந்தடைந்தன. அதற்குள் ஆராதனாவின் தந்தையை அழைத்து அவள் நலம் குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்டு சற்றுநேரம் பேசிவிட்டு வைத்தான்.
அதன்பிறகு அருணின் பெற்றோர்களிடம் அவன் பிரேதப் பரிசோதனை முடிவுகளைப் பற்றிப் பேசிவிட்டு வைத்தான். ஒரு முடிவுடன் தன் இருக்கையில் இருந்து எழுந்தான் துருவன். இனி அடுத்து அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துவிட்டது.
தன் அறைக்குச் சென்று தன் கட்டிலில் சற்று ஓய்வாகப் படுத்திருந்த நேத்ராவுக்கும் பல எண்ணங்கள் வரிசை கட்டி வலம் வந்தன. இன்னும் எத்தனை நாட்கள் இங்கேயே கப்பலில் இருக்க நேரிடுமோ? அருணின் பெற்றோர்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும். கப்பலில் தாமதம் ஆனதுக்கு வேறு அவள் விளக்கம் தரவேண்டும்.
பலதையும் யோசித்துப் படுத்துக் கொண்டிருந்தவள், நேற்றிரவு உறங்காத காரணத்தால் அயர்ந்து போயிருக்க, அசதியில் அப்படியே அவளையும் அறியாமல் கண்ணயர்ந்துவிட்டாள். எவ்வளவு நேரம் உறங்கியிருப்பாள் என்று தெரியாது. அவளது அலைபேசி அவள் உறக்கத்தைக் கலைத்தது.
அழைத்தவரின் எண்ணை பார்த்ததும் அவளுக்கு எடுத்துப் பேச விருப்பமேயில்லை. ஆனால் எடுத்துப் பேசாவிட்டால் இன்னும் சிக்கலாகிவிடும். அதனால் அழைப்பை எடுத்துக் காதுக்கு வைக்க, “அது எப்படி எங்க போனாலும் பிரச்சனை வர்ற இடத்துக்கா போயிட்டு இருப்பியா?” என்ற பெண்ணின் குரலில் நேத்ராவுக்குச் விரக்தியில் சிரிப்பு வந்தது.
பிரச்சனையை நோக்கி யாராவது செல்வார்களா? அவரிடம் விளையாடிப் பார்க்கும் எண்ணம் தலைதூக்க, “உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? பிரச்சனையை இழுத்து வச்சதே நான் தான்” என வேண்டுமென்றே சொல்லி, எதிர்முனையில் இருந்தவரின் இரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டு, “போங்க, போய் மிஸ்டர் சோமசுந்தரம்கிட்ட வத்தி வைங்க” என்றாள்.
நீண்ட பெரிய மூச்சுக்களை எடுத்து வெளியிட்ட எதிர்முனையில் இருந்த பெண், “அதை நான் பார்த்துக்கிறேன். எப்போ கப்பல்ல இருந்து வெளில வர்ற?” எனக் கேட்க, “வெளில வர்றேனோ, இல்லை, அப்படியே ஜெயில்ல வைக்கப் பிளான் பண்ணறாங்களோ என்னவோ?” என நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.
“உனக்கு இருக்கிற திமிர் இருக்கே” எனப் பல்லைக் கடித்தவர், “இங்க பாரு, குடும்ப மானத்தை மட்டும் வாங்கின.. அப்புறம் அங்கேயே ஜெயில்லயே வச்சு உன்னைக் கொன்னுடுவேன்... அப்படியே அம்மா புத்தி...” எனக் கோபத்தில் எதிர்முனை கர்ஜிக்க, அதற்குள் அவள் கதவை யாரோ தட்டுவது கேட்டது.
“இருங்க இருங்க.. அரெஸ்ட் பண்ண வந்துட்டாங்க பாருங்க... போய் இதையும் மிஸ்டர். சோமசுந்தரம்கிட்ட சொல்லுங்க” எனச் சொன்னவள், அழைப்பை வைத்துவிட்டாள்.
யாரென்று போய் வெளியில் பார்க்க, துருவன் அவளையும், அவளுக்குக் கீழே பணிபுரியும் ஆட்களையும் விசாரிக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்களை இன்னும் பதினைந்து நிமிடங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு சொல்லச் சொன்னதாகத் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றான் ஒருவன்.
அவள் தன் குழுவுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு, பத்தாவது நிமிடம் துருவன் சொன்ன இடத்தில் காத்துக் கொண்டிருந்தாள். அத்தனை நேரமும் அவளைப் பார்க்க வேண்டும் என்று ஆதிநந்தன் துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பான் போல. அத்தனை வேகம் அவனிடத்தில்.
நேத்ராவைப் பார்த்த அடுத்த நொடி அவள் முன்னே கொதிப்புடன் போய் நின்றான் ஆதிநந்தன். அவன் கண்கள் சோர்ந்து போய்ப் பார்க்கவே நோயாளி போல் காட்சியளித்தான்.
“உனக்கு ஏதாவது அறிவிருக்கா? எதற்கு அப்படிப் பேசின? எல்லோரும் உன்னைத் தப்பா நினைக்கிறதுக்கா?” என அவன் சீற,
அவனை வியப்புடன் மேலும் கீழும் பார்த்தவள், “ஏன், என்னைத் தப்பா நினைச்சுக்கிற உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கணுமா என்ன?” என அவன் மேலேயே அமிலத்தில் தோய்த்த வார்த்தைகளை எறிந்தாள்.
அவளது பேச்சில் ஒரு கணம் தடுமாறியவன், “ப்ச்... நான் உனக்காகச் சொல்லலை. என்னை யாரும் உன்கூடச் சேர்த்துத் தப்பா நினைச்சுடக் கூடாதே” எனப் பேச்சை அப்படியே திருப்பிப் போட்டு நறுக்கென்று பதில் தந்தான். அவள் எதுவும் பேசாமல் அவனை முறைக்க, மீண்டும் இறங்கி வந்தான்.
“ஆமா, உன்னை எவ்வளவு திட்டியிருப்பேன்? எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பேன். எதற்கு என்னைக் காப்பாத்த நினைச்ச? அப்படியே விட்டிருந்தா என்னைப் போலீஸ் பிடிச்சி விசாரிச்சிருக்குமே. கஷ்டப்படட்டும் என விட்டிருக்கலாமே” என நேத்ராவிடம் கேட்டான். அவனுக்கு இதற்குக் கண்டிப்பாகப் பதில் தெரிய வேண்டியிருந்தது.
“நெவர் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர்’ ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?” அவளது கேள்வியில் அவன் புருவம் சுருக்கிப் பார்க்க,
“யாரையும் நான் அப்படி எடுத்தவுடனே ஜட்ஜ் பண்ண மாட்டேன். அத்தோடு பழகிப் பார்த்தும் யாரையும் மோசமா எல்லாம் நினைக்க மாட்டேன். அவங்க சூழ்நிலை என்னவோன்னு நினைப்பேன்” என வாழைப்பழத்தில் மெள்ள ஊசியை ஏற்றினாள்.
“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நீங்க தப்பு பண்ண வாய்ப்பில்லைன்னு என் உள்மனசு சொன்னது. உண்மையை மறைக்காம உலகத்துக்குச் சொன்னேன். அவ்வளவு தான். அந்த இடத்துல யார் இருந்திருந்தாலும் நான் இதையே தான் செஞ்சிருப்பேன்” என்றாள்.
அவளது சொற்கள் மொத்தமும் விண்கலத்தின் வேகத்தில் வந்து அவன் முகத்தில் பளார் பளாரென்று அறைந்ததைப் போலிருந்தது. அவன் அப்படியெல்லாம் இதுவரை அவளிடம் நடந்து கொள்ளவில்லையே.
அருண் சொன்னதை வைத்துக் கோபத்தில் தாம் தூம் என்று குதித்ததைத் தவிர அவன் வேறெதுவும் உருப்படியாகச் செய்யவில்லை. இவ்வளவு ஏன்? அருண் சொன்னது எல்லாம் உண்மையா என்று கூட அவன் தெரிந்து கொள்ள விழையவில்லை.
அவள் மேலும் ஏதாவது பேசுவாள் என எதிர்பார்த்து, அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். அதற்குமேல் அவள் நா பூட்டிட்ட அறைக்குள் பதுங்கிக் கொண்டது போலும்.
அவளிடம் நடந்து கொண்ட முறைக்கு அவளிடம் மன்னிப்பை வேண்டிவிடு என்று ஒரு மனம் அவனை இயக்க, மறுமனமோ, பேசுவதற்குத் தயங்க, அப்படியே அவள் முகத்தைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான். கண்கள் எங்கும் நகரவில்லை. மனம் அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
அதற்குள் நேத்ராவிடம் பணிபுரிபவர்கள் அங்கே கூட, துருவனும் வந்து சேர்ந்தான். ஆதிநந்தனை அங்கே பார்த்ததும் புருவத்தை உயர்த்தினாலும் அவன் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
“நேத்ரா, உங்க டீம்ல யாரெல்லாம் இருக்கீங்க?” என வந்ததும் அவள் குழுவில் எத்தனை பேர் இருக்கிறார்கள், எப்போது சேர்ந்தார்கள் எனப் பொதுவாக விசாரித்தான் துருவன். அதற்குரிய பதிலைச் சொல்லிவிட்டு, எதுவோ சரியில்லை என்று உடனே கணித்துவிட்டாள் நேத்ரா.
அவளோ, அல்லது, அவள் குழுவைச் சார்ந்த யாரோ ஒருவர் செய்த தவறால் தான் அருணுக்கு இப்படி நேர்ந்துவிட்டது போல எனப் பதட்டம் கொள்ள ஆரம்பித்தாள். கைகள் நடுங்க, அப்படியே பிடிமானத்துக்குக் கப்பலைப் பற்றிக் கொண்டாள்.
அருகில் நின்று கொண்டிருந்த ஆதிநந்தன் தன்னையுமறியாமல் அவள் கைகளைப் பற்றி ஆறுதல் சொல்வதற்குக் கையை உயர்த்திவிட்டான். உயர்ந்த அவன் கையைப் பார்த்ததும், ‘என்ன?’ என்பதைப் போல் நேத்ரா அவனைப் பார்க்க, அப்படியே கையை இன்னும் மேலே உயர்த்தி தன் கேசத்துக்குள் கையை நுழைத்து அளைந்து கொண்டான்.
மீண்டும் துருவன் மேல் கவனத்தைத் திருப்பினாள். அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்த துருவனின் பாவனையும், செய்கையும் குற்றவாளியை நெருங்கிவிட்டான் என அப்பட்டமாக அவளுக்குப் பறைசாற்றியது.
“சொல்லுங்க சுனில், நேத்ராகிட்ட வேலையில சேர்றதுக்கு முன்னாடி எங்க வேலையில இருந்தீங்க?”
துருவனின் கேள்விக்கு, “அவர் இதுக்கு முன்னாடி வேறொரு கம்பனில வேலையில இருந்தார். அங்க ஒத்து வராம, இந்த ஃபீல்ட்ல இண்டர்ஸ்ட் இருக்கு... கத்துக்கப் போறேன்னு சொல்லி என்கிட்டே சேர்ந்தார். அவர் ரொம்ப நல்லவர்” என நேத்ரா பதில் தர, ‘உன்கிட்டே கேட்டேனா?’ எனத் துருவன் அவளைப் பார்த்து முறைத்தான்.
“ஆக, எதையும் விசாரிக்காம வேலைக்குச் சேர்த்துகிட்டீங்க?” துருவனின் கேள்வியில் நக்கல் நிரம்பியிருக்க,
“அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் ஓரளவுக்கு ஒத்து போச்சு. அதுவுமில்லாமல் முன்னாடி வேலை செஞ்ச இடத்துல கொஞ்சம் பிரச்சனைன்னு சொன்னார். உண்மையைச் சொன்னதால வேலைக்குச் சேர்த்துக்கிட்டேன். கொஞ்ச நாள்ல அவரே மனம் மாறிக் கிளம்பிடுவார் என நினைச்சேன்” என வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
மீண்டும் திரும்பி, “அதுவுமில்லாமல் உங்களுக்கே தெரியும். தப்பான நோக்கத்துல யாரும் என்னை நெருங்க முடியாதுன்னு” என நேத்ரா சொல்ல, அருகில் நின்று கொண்டிருந்த ஆதிநந்தனோ, ‘என்ன மாதிரி பெண் இவள்?’ என ஆச்சர்யப்பட்டுப் போனான். அவன் நினைத்ததற்கு முற்றிலும் எதிர்பதமாகத் திகழ்கிறாள்.
துருவன் மெள்ள நடந்து சென்று சுனிலின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சுனில் தலையெல்லாம் கிறுகிறுக்க, சுழன்று போய்ச் சற்றுத் தள்ளி கீழே விழுந்தான்.
தொடரும்...
Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.