• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 10

laavans

New member
Joined
Sep 3, 2024
Messages
16
அத்தியாயம் – 10

துருவன் அந்தக் கப்பலில் கால் பதித்து நான்கு மணி நேரமாகிவிட்டது. அயராது தன் விசாரணையை மேற்கொண்டிருந்தான். அங்கிருந்த சிசிடிவியைச் சுழலவிட்டு பல விஷயங்களைச் சேகரித்தான். தேவைப்படும் என்று எண்ணிய சிலதை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான்.

ஆதிநந்தன் சொன்னதைப் போல் அருண் கடைசியாக நேத்ராவிடம் தான் பேசியிருக்கிறான். அது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. நீச்சல் குளத்தின் முன்னால் இருந்த கேமரா, அவன் கால் தடுமாறி விழுவதையும் காட்டியிருந்தது.

அதிகப் போதை காரணமாக அருணால் கைகால்களை அசைக்க முடியவில்லை. அதனால் அப்படியே மூழ்கி, மூச்சுத் திணறி இறந்திருக்கக் கூடும் என்று யூகித்தான் துருவன். நாளை பிரேதப் பரிசோதனை பற்றிய அறிக்கை வந்ததும் தான் எதையும் தெளிவாகச் சொல்ல முடியும்.

அடுத்து என்ன செய்யவேண்டும் எனத் திட்டமிட்டு தொடர்ந்து சில மணி நேரம் அங்கிருந்த மற்ற பயணிகளை விசாரித்து அவர்களைப் பற்றிய விவரங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களைக் கப்பலில் இருந்து வெளியில் அனுப்பி வைத்தான் துருவன்.

அடுத்ததாகத் திருமணத்துக்கு என்று வந்தவர்கள் எல்லோரையும் விசாரித்து அவர்களையும் ஒவ்வொருவராக அனுப்பி வைத்தான்.

ஸ்வப்னாவின் முறை வருகையில் கப்பலைவிட்டு வெளியில் செல்வதற்கு முன்னர் ஆதிநந்தனிடம் சென்று, “இப்போ சூழ்நிலை சரியில்லை. நம்ம மீண்டும் சீக்கிரம் வெளியில சந்திக்கலாம். உங்க நம்பர் இருக்கு. நம்ம பேசலாம். அப்பாக்கிட்டேயும் பேசச் சொல்லறேன். பை ஆதி” என இவன் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள்.

‘என்ன இவள்? இவளாக வேண்டாம் என்றாள். இப்போது இவளாக வேண்டும் என்று அடுத்தடுத்து முடிவு செய்து நடந்து கொள்கிறாள். வெளியில் சென்றதும் முதலில் இவளிடம் தனக்கு இதில் விருப்பமில்லை என்று சொல்லிவிட வேண்டும்’ என எரிச்சலுடன் தீர்மானம் செய்து கொண்டான்.

அதன்பிறகு அவளைப் பற்றி நினைக்கவும் அவனுக்கு நேரமில்லை. அருணின் இழப்பு அவனை வெகுவாய் வாட்டியது. இதெல்லாம் கனவு என்று யாராவது தன்னைத் தட்டி எழுப்ப மாட்டார்களா என நினைத்தான்.

இதற்கிடையில் ஆராதனா அடிக்கடி மயங்கி விழுகிறாள் என அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அருணின் பெற்றோர்களோ தங்கள் மகனின் இறப்புக்கு விடை கிடைக்காமல் கப்பலைவிட்டு இறங்கப் போவதில்லை என்று பிடிவாதம் பிடித்தனர்.

ஆதிநந்தன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர்.

அடுத்தக்கட்ட விசாரணைக்கு என்று அங்கிருந்த ஊழியர்களை எல்லாம் விசாரித்து அவர்களையும் அனுப்பி வைத்தான் துருவன். இறுதியாகத் திருமணத்துக்கு என்று பிரத்தேயமாக வேலை செய்த பணியாளர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

இரவு நேரமாகிவிட்டதால் மற்றவர்களை எல்லாம் மறுநாள் விசாரிக்கப் போவதாக அறிவித்த துருவன் அன்றிரவு மிச்சம் இருந்தவர்களை அங்கேயே தங்கிக் கொள்ளுமாறு பணித்தான். நேத்ரா வேறு வழியில்லாமல் அங்கேயே தங்கிக் கொண்டாள்.

மறுநாள் காலை! நேத்ராவை விசாரணைக்கு என்று அழைத்திருந்தான் துருவன்.

“உங்களை இப்போ சார்ன்னு சொல்லணுமா, இல்லை, துருவ் அண்ணான்னு சொல்லணுமா?” என்றவாறே அவனிருந்த அறைக்குள் சென்று அமர்ந்தாள்.

இரவு முழுவதும் அழுதிருக்கிறாள் என அவள் முகத்தையும் கண்களையும் பார்த்தே கண்டுபிடித்தான் துருவன். அதை மறைக்க, கண்களிலும் முகத்திலும் மேக்கப் போட்டுக் கொண்டு வந்திருந்தாள். இரவு முழுவதும் அவள் தூங்கியிருக்கவில்லை என்று அவள் கண்களை வைத்தே தெரிந்து கொள்ள முடிந்தது.

அதானே மற்றவர்களிடம் அவ்வளவு சீக்கிரம் தன் மனக்கவலைகளைக் கொட்டிவிடுவாளா என்ன?

“உங்களுக்கு எப்படி அருணைத் தெரியும்?” என துருவன் சொந்த விஷயங்களை விட்டுவிட்டு கடைமையைச் செய்ய ஆரம்பித்தான். இவன் நண்பனாக, தெரிந்தவனாக இப்போது தன் முன் அமர்ந்திருக்கவில்லை என்பதை அவன் குரலில் வெளிபட்ட மிடுக்கில் அவளுக்குப் புரிந்து போனது. உடனே அவளும் தன்னைச் சேகரித்துக் கொண்டாள்.

“அவரோட தங்கச்சி மேரேஜ்ல மீட் பண்ணினேன். அடிக்கடி பேசுவார். என்னோட பிசினஸ்ல இண்டரெஸ்ட் இருக்கு இன்வெஸ்ட் பண்ணறேன்னு சொன்னார். என் தொழில் வளர நிறைய உதவி பண்ணினார்” என்றாள்.

“நீங்க அவரைக் காதலிச்சீங்களா?” துருவனின் திடீர் கேள்வியில் அவனை விழியசையாது நோக்கியவள், “இல்லைங்க சார். அப்படி இருந்திருந்தா எனக்கு முக்கி...யமானவங்ககிட்டே சொல்லியிருப்பேன்” என முக்கியமானவங்க என்ற வார்த்தைக்கு அழுத்தம் தந்தாள்.

அவனைத் தான் சொல்கிறாள் எனப் புரிந்த போதும் துருவன் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தவன், “அவர் உங்களைக் காதலிச்சாரா? காதலிச்சு ஏமாத்திட்டாரா?” என அவன் கேள்விகளைத் தொடர்ந்து முன்வைக்க, நேத்ரா அதற்குப் பதில் சொல்லவில்லை.

மாறாக, “அந்தக் கோபத்துல அவரைக் கொலை செஞ்சுட்டேன் இல்லை? வெரி நைஸ். உங்களுக்கு உண்மையான குற்றவாளியைப் பிடிக்க முடியலைன்னா உடனே இப்படிப் பழி போட்டுடுவீங்க இல்ல? இதுல ஒரு பெண்ணோட நடத்தையையும் சேர்த்து கேரக்டர் அசேசினேஷன் பண்ணறீங்கன்னு உங்களுக்குப் புரியலையா?” எனப் படபடத்தாள் நேத்ரா.

“நேத்ரா...” எனக் குரல் உயர்த்தி அழைத்தவன், “நான் என் கடமையைச் செஞ்சேன். நீ ஏன் எல்லாத்தையும் பெர்சனலா எடுத்துக்கற? அப்படிச் செய்யணும்னா எல்லோர் முன்னாடியும் உன்னை விசாரிச்சிருப்பேன்” என்றான் துருவன்.

குனிந்து கைகளில் தலையைத் தாங்கியவாறே சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். “சாரி சார். எங்கேயோ காட்டவேண்டிய கோபத்தை உங்க மேலே காட்டிட்டேன்” என்றாள். உண்மையே. ஆதிநந்தனிடம் பொரிய வேண்டியது. இலக்கு மாறிவிட்டது.

அவள் குரல் ஓய்ந்து போய் ஒலிக்க, “உன் மேலே இப்படி ஒரு புகார் வந்தா அதைத் தெளிவுபடுத்தறதும் ஒரு ஃப்ரெண்ட்டா, அண்ணனா எனக்குக் கடமையிருக்கு கண்மணி” என துருவன் சொன்னதும், விழியுயர்த்தி அவனை நம்பாமல் பார்த்தாள்.

“என் மேலே புகார் தந்தாங்களா? யார்?” அவள் வியப்புடன் வினவ, அவன் பதில் சொல்லவில்லை. அவன் சொல்லப் போவதில்லை என்று தெரியும். அது அவன் கடமையுணர்ச்சி என்றும் தெரியும்.

பட்டென்று ஆதிநந்தனின் முகம் நேத்ராவின் விழித்திரையில் வந்து போனது. அவள் அந்த அறைக்குள் செல்லும் பொழுது அவளை இளக்காரமாகப் பார்த்துச் சிரித்தானே. அவன் தான் இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்திருக்க முடியும்.

நேற்றிரவு அறைக்குள் அத்துமீறி நுழைந்தவனிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?

அவன் தானே இவளைப் பார்க்கும் போதெல்லாம், ‘உன்னை நான் விடமாட்டேன்’ எனப் பிதற்றிக் கொண்டிருந்தான். அவன் தான் ஏதோ உளறியிருக்க வேண்டும்’ அதன்பிறகு துருவன் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தாள் நேத்ரா.

அறையைவிட்டு வெளியேறும் முன்னால் திரும்பி, “மித்ராவுக்கும், ஆதிக்கும் என்ன சம்மந்தம்?” எனக் கேட்க, துருவன் எதுவும் சொல்லாமல், ‘ஏன் கேட்கிறாய்?’ என்பதைப் போல் அவளையே ஊடுருவி பார்த்தான்.

“இல்ல... அவருக்குச் சொந்தமான மித்ராவை அவர்கிட்ட இருந்து பிரிச்சுட்டேனாம். அருணையும் பிரிச்சுட்டேனாம்.” என்று நேத்ரா விளக்க, “மித்ரா ஆதியோட அத்தை பொண்ணு” என துருவன் தன் மனைவி மித்ராவைப் பற்றிச் சொன்னான்.

“வாட்?” என அசைவற்று நின்றுவிட்டாள். ‘ஆதி தன் அத்தைப் பெண்ணை விரும்பினானா?’ எனத் திகைத்துப் போனாள். அதற்காகவும் அவளுக்காகச் சாட்சி கையெழுத்துப் போட்ட தன்னிடம் கோபம் கொள்கிறானா?

அடுத்தக் கணமே, ‘ஆனால் மித்ரா துருவனை அல்லவா காதலித்தாள்?’ என அவளுக்குப் புத்தியில் உறைக்க, “வரேன்” என அறையைவிட்டு வெளியேறினாள்.

நேராக அவள் சென்று நின்றது ஆதிநந்தனிடம். கடலை நோக்கி இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனைத் தொந்தரவு செய்ய அவளுக்கு மனம் வரவில்லை. ஆனால் பேச வேண்டுமே?

“ஹலோ மிஸ்டர்... ஆ... ஆதி” என்றவளின் குரலில், முகத்தை மட்டும் அவன் திருப்ப, “எனக்கு உங்க பேர் கூட முழுசாத் தெரியாது. இப்போ ஏதேதோ நடந்துடுச்சு. ஏன்னு தெரியலை. நீங்க எல்லாத்தையும் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க. எதுக்கு என்மேலே இவ்வளவு வன்மத்தோட அலையறீங்க?” என அவள் கேட்டதும் மீண்டும் கடலை நோக்கிப் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

கண்கள் கலங்கியிருந்தனவோ? என்ன இருந்தாலும் சிறிது காலமே பழகிய தனக்கே இப்படி இருக்கிறது என்றால் உடன் படித்த தோழன் என்றால் இவனுக்கு எவ்வளவு வலி இருக்கும்?

அவளைப் பார்த்ததும் முகத்தில் இருந்த கவலை மறைந்து அவ்விடத்தில் கோபம் வந்து அமர்ந்து கொண்டது ஆதிநந்தனுக்கு.

“ஒருத்தரைத் தெரிஞ்சுட்டுத் தான் கோபம் படணும்னு இல்லை. நீ தப்பானவ. உன்னைப் பத்தி எப்போ அருண் பேச ஆரம்பிச்சானோ அப்போதிலிருந்தே அவனோட நிம்மதி போச்சு... கடைசியில அவனும் இல்லாம போய்ட்டான்” என அவள் முகம் பார்க்காமல் பேசினான்.

பதிலுரைக்காமல் அவனையே நோக்கிய வண்ணம் அவள் நின்றிருக்க, அவன் மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்தான். உனக்கு விடை தானே வேண்டும். இந்தா பிடித்துக் கொள் என்பதைப் போல் பேச ஆரம்பித்தான் ஆதிநந்தன்.

“உன்கிட்டே ஆசையா காதலைச் சொல்ல வந்தான். அப்போ தான் உன்னைப் பத்தி முழுசா புரிஞ்சுக்கிட்டான். அந்த வேதனையில வண்டியை ஓட்டிட்டுப் போனான். உன்னால தான் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு. அப்பவும் நீ வந்து அவனைப் பார்க்கலை” என்றவனின் கடினமான குரலில் எதுவும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தாள்.

அவளைப் பற்றி என்றால் அவள் பிறப்பைப் பற்றியா? அல்லது குடும்பத்தைப் பற்றியா?அப்படி என்ன தெரிந்து கொண்டான் தன்னை வெறுக்கும் அளவுக்கு? அதுவுமில்லாமல் எதையும் அலசி ஆராயாமலும் விவரம் புரியாமலும் அவள் மேல் கோபத்தைக் கொட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

அருண் தானே அவள் மேல் ஆசைப்பட்டான்? அவள் எங்காவது அருணை விரும்புவதாகச் சொன்னாளா? இவ்வளவு ஏன்? அருணிடம் பேசினாலும், பழகினாலும் ஒரு போதும் அவள் தன் எல்லைக் கோட்டைத் தாண்டியதில்லை. அப்படியிருக்க, அவள் என்ன தவறு செய்துவிட்டாள் என்று இவன் இப்படிக் குற்றம் சாட்டுகிறான்?

அவனையே விழியசையாது நோக்கிய வண்ணம் நின்று கொண்டிருந்தவள், “அப்படி என்ன என்னைப் பத்தி தெரிஞ்சுகிட்டார்? என்ன சொன்னார்?” என அவள் பேச்சை வளர்த்தாள்.

இவனுக்கு எவ்வளவு விஷயம் தெரியும், என்ன தெரியும் என்று அவளுக்குத் தெரிய வேண்டியிருந்தது. இன்றோடு இந்த விசயத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

அவள் எவ்வித தயக்கமும் இல்லாமல் கேட்கவும் அவனும் மனதில் உள்ளதைக் கொட்டினான்.

“நீ சாப்பிடற மாத்திரையைப் பத்திச் சொன்னான். அதைப் பார்த்ததும் அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?. நானும் ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ கப்பல்ல வந்து ஏறின சமயத்துல பார்த்தேனே, உன் பேக்ல இருந்ததே. நேத்து நைட் கூட...” என அவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.

கருத்தடை மாத்திரையை என்ன அவசியத்துக்குச் சாப்பிடுகிறாய் எனக் கேட்க அவனுக்கு வாய் வரவில்லை. முகத்தை வேறு பக்கம் திருப்பி அவள் மேலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டான்.

அவள் நினைத்தது சரியே. ஏன் என்ற விசாரணை கூட இல்லாமல் அப்படியே தவறாக எண்ணிக் கொள்வார்களா என்ன? அவன் சொன்னதற்கு அவனிடம் சண்டை போட வேண்டும் என்று கூட அவளுக்குச் சுரணை இருக்கவில்லை.

“பனைமரத்துக்கு அடியில நின்னுட்டு என்ன குடிச்சாலும் அது கள் தான்னு நீங்களா முடிவு பண்ணிக்குவீங்க இல்லையா? அதுவும் ஒரு பொண்ணு செஞ்சா அதுக்கு மாற்று கருத்தே இல்லை” என்றவளின் பேச்சில் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“இப்படிப் பேசியே எல்லாத்தையும் மயக்கிடு. ஆனா இதுக்கெல்லாம் மசியற ஆள் நானில்லை... டிராமா குவீன்” என வெடுக்கெனச் சொல்ல,

“இதுக்கு மேலே என்னைப் பத்தி ஏதாவது பேசினீங்க?” எனச் சீற்றத்துடன் அவன் முன்னால் எச்சரிக்கை செய்யும் விதத்தில் விரலை உயர்த்தினாள்.

‘நீ என்ன பெரிய இவளா?’ என்பதைப் போன்ற தெனாவெட்டுடன் அவன் நின்று கொண்டிருக்க, கையைக் கீழே இறக்கியவள்,

“நல்லவேளை என்கிட்ட அருண் தன் காதலைப் பத்திச் சொல்லலை. எந்த உறவுக்கும் முதல்ல நம்பிக்கை வேணும் மிஸ்டர் ஆதி. அந்த அடிப்படையே இங்க ஆட்டம் கண்டிருக்கு. இதுல அவர் என்னைக் காதலிச்சாராம். இதுக்கு மேலே இல்லாதவங்களைப் பத்திப் பேச எனக்கு விருப்பமில்லை” என மிகவும் அமைதியாகப் பதில் சொன்னவளை யோசனையுடன் ஆராய்ந்தான்.

கோபத்தில், கத்துவாள், திட்டுவாள் என்று எதிர்பார்த்தானோ? அதற்குமேல் அவள் எதுவும் விளக்கம் தரவில்லை. வாய்க்குப் பூட்டிட்டு தாழிட்டுக் கொண்டாள். ஆனால் கண்களில் தெரிவது என்ன?

அவள் விழிகளையே பார்த்திருந்தவனுக்குள் அவனையும் அறியாமல் ஒருவித தவிப்புக் கூட ஆரம்பித்தது. விழிகள் வேறு ஏதோ சொல்ல விழைகின்றனவோ? ஒருவேளை அடிபட்ட வலியோ? இல்லை, இல்லை... வேறு ஏதாவதா?

அவன் அவளைத் தவறாக எண்ணிக் கொண்டானோ? ஒரு நிமிடம் தடுமாறிப் போனான் ஆதிநந்தன்.

“இந்த உலகத்துல மனிதநேயம் முற்றிலும் செத்துப் போயிடுச்சு போல. மத்தவங்களை மாசில்லா மனசோடு பார்க்கிறதும் மனிதநேயம் சார். உங்க குற்றச்சாட்டுல எதிர்ல இருக்கிறவங்க மனநிலை எப்படிப் பாதிக்கப்படும் என உங்களுக்குத் தெரியுமா?” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசி, குற்றவாளிக் கூண்டில் நிற்பதை போன்ற உணர்வை அவனுக்குத் தோற்றுவித்தாள். அவனால் அவள் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.

அவன் எதுவும் பேசாது, இமையசைக்காது தூரத்தில் தெரிந்த கடலையே மீண்டும் வெறிக்க ஆரம்பித்தான். அவனுக்குள் ஒருவித வெறுமை சூழ்ந்து கொண்டது. ஏனிப்படி உணர்கிறோம் என்று கூட அவனுக்குப் புரியவில்லை.

கூடை கூடையாக இவன் தலைமேல் அறிவுரைகளைக் கொட்டிவிட்டு அவன் வேதனையில் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் அவள் மட்டும் எந்த விதத்தில் மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறாளாம்? கேட்கத் துடித்த நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

அதற்கும் அவளிடமிருந்து பதில் கிடைத்தது. “மத்தவங்க மனசுல என்ன இருக்குனு தெரியாம எதையும் அவசரப்பட்டுக் கொட்டிடாதீங்க. சாரி சார்... இப்படி ஒரு நிலைமைல உங்களைக் கஷ்டப்படுத்தறது எனக்குப் பிடிக்கலை. என்னை மன்னிச்சிடுங்க. இனிமேல் நம்ம சந்திச்சுக்காமலேயே இருக்கலாம் எனக் கடவுளை வேண்டிக்கிறேன்” என அவள் தன் வருத்தத்தை அவனிடத்தில் வெளிப்படுத்திவிட்டு,

அடுத்த நொடியே அவனுக்காக அனுதாபப்பட்டாள். “உங்க ஃப்ரெண்ட் இறந்தது உங்களுக்கு ரொம்பப் பெரிய இழப்பா இருக்கும். அந்தத் துக்கத்துல, இயலாமையில என்னென்னவோ பேசத் தோணும்...” என நேத்ரா சொல்லிக் கொண்டிருக்க, “கொன்னவனே வருத்தப்படுவானா என்ன?” என அங்கே வந்து நின்றான் துருவன்.

துருவனின் குற்றச்சாட்டில் இருவருமே திகைத்துத் திரும்பிப் பார்த்தனர். எதிர்பார்க்காமல் வந்த தாக்குதலில் ஆதிநந்தன் உள்ளுக்குள் துடித்துப் போனான். “துருவ் உனக்கு என் மேலே ஆயிரம் கோபம் இருக்கலாம். அதுக்காக இப்படி அபாண்டமாப் பேசக் கூடாது” எனச் சீற்றத்தில் கத்தினான்.

“நான் என் வேலையைச் செய்ய வந்திருக்கிறேன். நியாயமாப் பார்த்தா முதல் சந்தேகம் உங்க மேலே வந்திருக்க வேண்டியது மிஸ்டர் ஆதி. திசை திருப்பறதுக்கு நேத்ரா மேலே அபாண்டமா பழி சொல்லறீங்க” என துருவன் சொன்னதும் ஆதிநந்தனை அடிபட்ட பார்வை பார்த்தாள் நேத்ரா.

இவன் தான் சொல்லியிருப்பான் என்று யூகித்தாலும், உண்மை அதுவென்று ஊர்ஜிதப்படுத்தப்படுகையில் இன்னுமே வலிக்கச் செய்தது.

“சொல்லுங்க மிஸ்டர் ஆதி, உங்க அண்ணனோட தொழிலுக்கு அருணோட ஃபைனான்ஸ்ல பணம் நிறைய வாங்கி இருக்காராமே. அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்கப் போனப்போ வார்த்தைகள் தடிச்சு, அருண் உங்க அண்ணனோட சட்டையைப் பிடிச்சு அடிச்சுட்டாராம். அந்தக் கோபத்துல நீங்க அருணை முகத்தில் குத்து விட்டீங்களாம்” என துருவன் அவனிடம் தன் கடமையைச் செவ்வனே செய்ய, எதையும் நம்ப முடியாமல் நேத்ரா சிலையாகிப் போயிருந்தாள்.

துருவன் இரவெல்லாம் சும்மா இருக்கவில்லை. நாலா பக்கமாமும் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறான் என ஆதிநந்தனுக்குப் புரிந்தது.

“உங்க அண்ணனைச் சமாதானப்படுத்தி, நான் இவனைப் பார்த்துக்கிறேன் அண்ணா எனச் சொன்னீங்க போல. விசாரணையில எல்லா உண்மையும் வெளில வந்திடுச்சு” எனச் சொல்லிக் கொண்டிருக்கையிலே ஆதிநந்தனின் அலைபேசிக்கு அவன் அண்ணன் விஷ்ணுவிடமிருந்து அழைப்பு வந்தது.

கையிலிருந்த கைப்பேசியில் ஒளிர்ந்த எண்ணை பார்த்ததும், ‘ஐயோ’ என அவனுக்கு மனம் அடித்துக் கொண்டது. விஷயத்தின் தீவிரம் ஆதிநந்தனுக்குப் புரிய ஆரம்பிக்க, “நான்...” என அவன் வாயைத் திறக்க,

“அதான் சத்தமே இல்லாமல் இங்க வந்து அருணைக் குளோஸ் பண்ணிட்டீங்க போல” என்றதும்,“டேய்...” என துருவனின் சட்டையைப் பற்றிவிட்டான் ஆதிநந்தன்.

பதிலுக்கு அவனும் ஆதிநந்தனின் சட்டையைப் பற்றிவிட்டான். “இதுக்கே உங்க மேலே கேஸ் போட்டு உள்ள தள்ள முடியும். விசாரிக்க வந்த போலீசை அடிக்கறீங்கன்னு” என துருவன் கோபமாகச் சொல்லவும், சட்டையை விட்ட ஆதிநந்தன், “சாரி” என்றான்.

“என் சட்டையைப் பிடிச்சதுக்கு முகத்துல ஓங்கி குத்துவிடட்டுமா?” என துருவன் அடிக்குரலில் சீற, இவர்களின் கை கலப்பில் அங்கே கூட்டம் கூடிவிட்டது. அனைவரும் சுவாரசியமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

துருவனுடன் வந்திருந்த மற்ற காவலர்கள், “யாரைப் பார்த்துக் கையை நீட்டற?” எனக் கையை ஓங்கிக் கொண்டு ஆதிநந்தனின் அருகில் வந்துவிட்டனர்.

“விடுங்க சார். நான் பார்த்துக்கிறேன்” என்ற துருவனின் கட்டளைக்குக் கீழ் படிந்தாலும், ஆதிநந்தனை அடிப்பதற்குத் தயாராகவே நின்று கொண்டிருந்தனர்.

“சார் எனக்குத் தெரிஞ்சவர். விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிச்சா உண்மையைச் சொல்லிடுவார்” என துருவன் அவர்களுக்கு விளக்கமளித்துவிட்டு,

“சொல்லுங்க ஆதி... எதுக்கு அருணை அடிச்சீங்க? எவ்வளவு பணம் எனக் கணக்கு தெரியலைன்னு அருண் வீட்டுல சொல்லறாங்க. உங்க அண்ணனுக்கும் தொழில்ல லாஸ் போல. அருண் கொடுத்த பணத்துக்கு எங்கேயும் கணக்கு வேற இல்லை” என துருவன் கேள்விகளை அடுக்க, ஆதிநந்தனுக்குத் தலைச்சுற்றிப் போனது.

அன்று அண்ணனைக் கை நீட்டி அடித்துவிட்டானே அருண் என்ற ஆத்திரத்தில் இவனும் எதிர்வினையாற்றிவிட்டான். அதற்குக் கை கால்கள் முளைத்து விஸ்வரூபம் எடுக்கும் என்று ஆதிநந்தன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“எனக்கும் தெரியாதுங்க சார். அதைப் பத்தி அண்ணன்கிட்டே தான் கேட்கணும்” எனப் பொறுமையாகவே பதிலளித்தான் ஆதிநந்தன்.

“ம்ம்ம்... அதான் அவரைக் கொன்னுட்டா பணத்தைத் திருப்பித் தர வேண்டாம் எனத் திட்டமிட்டு இதை நடத்தியிருக்கீங்க. அப்போ உங்க மேலே நாங்க சந்தேகப்படறது நியாயம் தானே?” என அவன் தன் கணிப்பை அவன் முன்னால் வைத்தான் துருவன்.

அதிர்ச்சியில் ஆதிநந்தன் உறைந்து போனான். நடந்தது அனைத்தும் உண்மை. அருண் அண்ணனின் அலுவலகத்துக்கு வந்தது, அண்ணனிடம் சண்டையிட்டது. அந்தச் சமயத்தில் அவன் அங்கே இருக்க நேரிட, கோபத்தில் அருண் முகத்தில் குத்துவிட்டிருந்தான்.

அது தான் முகத்தில் ரத்தம் கன்றிப் போய் அனைவரும் கேட்கும் அளவுக்கு வெளியில் காட்சியளித்தது. அதன்பின்னர் ஆதிநந்தன் அருணைச் சமாதானம் செய்தது என எல்லாமே நடந்தது. ஆனால் என்ன? நடந்த சமாதான பேச்சுக்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

முக்கியமாக அன்று அலுவலகத்தில் இவர்களின் சண்டையைப் பார்த்த ஒருவருக்குமே இவர்கள் சமரசம் செய்து கொண்டது தெரிந்திருக்கவில்லை. இவ்வளவு ஏன்? விஷ்ணுவுக்குமே தெரியாதே.

அருணும் கூட இதைப் பற்றி யாரிடமும் சொல்லியிருக்கவில்லை. ஆனால் இவனுக்கு எப்படித் தெரிந்தது? அதுமட்டுமல்லாமல் முதலில் அருண் தன் அண்ணனுக்குப் பணம் தந்து உதவியதே அவனுக்குத் தெரியாது.

முக்கியமாக அவன் இருக்கும் பதவியை மனதில் கொண்டு அவன் எந்தப் பண விஷயத்திலும் தலையிடுவதில்லை. குடும்பமாகட்டும்... நண்பனாகட்டும்... எதிலும் மூக்கை நுழைப்பதில்லை.

அப்படியே இருந்தாலும் நண்பனை கொலை செய்யும் அளவுக்குப் பணத்தாசை பிடித்தவனா என்ன? இல்லை, ஈவு இரக்கம் இல்லாதவனா?

“எனக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு பார்க்கறீங்களா? விசாரிச்சப்போ நீங்க அருணை அடிச்சதா ஆராதனா சொன்னாங்க. அருண் அவங்ககிட்ட சொல்லியிருப்பாங்க போல” என்ற துருவனின் குரலில் நடப்புக்கு வந்த ஆதிநந்தனுக்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

ஆராதனாவிடம் மனதைச் செலுத்து என அருணுக்கு ஆயிரம் முறை அறிவுறுத்தியவன் அவனே. அவளிடம் இதைப் பற்றியெல்லாம் சொல்லுவதென்றால் உண்மையில் அருண் இந்தப் புதிய வாழ்க்கைக்குத் தயாராகவே இருந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு அது கொடுத்து வைக்கவில்லை.

“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல என் கையில இருக்கும் ஆதி. அருண் நைட் பதினொரு மணிக்கு இறந்திருக்கிறார் எனச் சொல்லறாங்க. சொல்லுங்க நேத்து நைட் பதினொரு மணிக்கு எங்கே இருந்தீங்க?” எனக் கேட்க, “அது...” என வாயைச் சிலமுறை திறந்து திறந்து மூடிக் கொண்டான்.

‘என்ன சொல்வான்?’ சற்று அதிகமாகக் குடித்துவிட்டு நேத்ராவிடம் என்னென்னவோ வம்பு வளர்த்தானே. அனைவரும் அங்கே குழுமியிருக்க, ஆதிநந்தனுக்கு அவமானமாக இருந்தது. அவள் அறைக்குச் சென்று அவளை எச்சரித்துவிட்டுத் திரும்பிவிடலாம் என்று எண்ணியே சென்றான். ஆனால் என்னென்னவோ நடந்துவிட்டது.

விழிகள் அவனையுமறியாமல் எதிரில் நின்றிருந்தவளை நோக்கிப் பயணித்தன. நேத்ராவின் அறையில் இருந்ததாகச் சொன்னால் அவன் பெயர் கெட்டுவிடும். அது பரவாயில்லை. ஆனால் அப்படி அனைவரின் முன்னாலும் நேத்ராவையும் சேர்த்து அவமானப்படுத்த வேண்டுமா என்ன?

அவள் மேல் கட்டுக்கடங்காமல் வன்மம் பெருகியிருந்தாலும் அவளை அனைவரின் முன்னாலும் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குச் சிறிதும் இல்லை.

அவன் மனம் இப்படியும் அப்படியும் ஊசலாடிக் கொண்டிருக்க, “என் ரூம்ல இருந்தார்” என்ற நேத்ராவின் குரலில் அதிர்ந்து போய் அவளை ஏறிட்டு நோக்கினான் ஆதிநந்தன்.

சுற்றி நின்றிருந்தவர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. அனைவரும் அவளையே பார்த்திருந்தனர். சிலர் குறுகுறுப்புடன். சிலர் எகத்தாளத்துடன். சிலர் அருவருப்புடன்!

தொடரும்...
 

Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom