• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விழிகள் தீட்டும் வானவில் -3

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
12
விழிகள் தீட்டும் வானவில் -3

‘மேலே போனவனை இன்னும் காணலையே... அனு அப்பா ஒண்ணும் சொல்லாம காசை வாங்கிக்கணும்..... மனசு வருத்தப்படுற மாதிரி எதையாச்சும் பேசிட கூடாது... இவனும் தன்மையா பேசணும்...’ பதைபதைக்கும் நெஞ்சத்துடன் மாடியிலேயே கண்ணாக இருந்தார் சுகந்தி.

இன்று செக் கொடுக்கப் போகும் விஷயத்தைச் சொல்லிவிட்டு தான் ஆகாஷ் முதல் தளம் சென்றிருந்தான். அதனால் குட்டிப் போட்ட பூனையாக வாசலுக்கும் வீட்டுக்குமாக நடந்து கொண்டிருந்தார் அவர்.

ஆனால் வயது பெண்களுக்கு அந்தக் கவலை எல்லாம் எதுவும் இல்லை. வயிறு முட்ட டிபன் சாப்பிட்டு விட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பாவம், பொழுது நகர வேண்டுமே..... நேத்ரா தான் முதலில் ஆரம்பித்தாள்.

“உன்னோட பர்த்டேக்கு ஒரு மெட்லி சாங் கோரியோகிராப் பண்ணி டான்ஸ் ஆடுனாங்க இல்ல.... அது ஞாபகம் இருக்காடி, சம்ஸ்........” அவள் திடீரென்று நினைத்துக் கொண்டு கேட்க, “எந்த பர்த்டேக்கு...?” அவள் எதை சொல்கிறாள் என்று சௌமிக்கு அவ்வளவு சரியாக நினைவு இல்லை, அதைவிட அந்த நாட்களையெல்லாம் திரும்ப நினைத்துப் பார்க்கவும் அவள் விரும்பவில்லை.

“அது தான்... அந்தக் குத்து சாங்க்ஸ் மெட்லி... உங்க அண்ணன், வருண், அப்புறம் அதுங்களோட செட் எல்லாம் சேர்ந்து பண்ணுச்சுங்களே... ம்ம்ம்... லீலா பேரடைஸ்லயா...? இல்ல இல்ல... ஹோட்டல் ஆதவன்ல... கரெக்ட்.... ஆதவன் ஹோட்டல் தான்... “ நேத்ரா உற்சாகமாக மிழற்றிக் கொண்டிருக்க, “அதுக்கென்னம்மா இப்ப....?” சுவாரஸ்யமே இல்லாமல் சௌமி கேட்டாள்.

“அதோட சிடி இருக்கா.... கொடுடி... போட்டுப் பார்க்கலாம்... எவ்வளவு நாளாச்சு.... ? அதெல்லாம் கோல்டன் டேஸ் இல்ல...” பள்ளிப் பருவ நாட்களை நினைத்து நேத்ரா உருக, சௌமியும் அனிச்சையாக, “ஆமா அம்மு.... அதெல்லாம் கோல்டன் டேஸ் தான்...” அவள் கண்களும் அன்றைய நினைவில் மலர்ந்து கனிந்து போயின.

“ஆனா அந்த சிடி எல்லாம் இப்ப எங்க போச்சுன்னே தெரியலப்பா....”

குப்பல் குப்பலாய் குவித்து வைத்திருந்த அத்தனை சிடிக்களும், ப்ளே ஸ்டேஷன் உபகரணங்களும், வீடியோ கேம்ஸ் டிவிடிக்களும் எங்கு இருக்கின்றன என்று சௌமிக்குச் சத்தியமாக நியாபகம் இல்லை. அவற்றைச் சமீப வருடங்களில் பார்த்தது போன்ற நினைவு கூட இல்லை.

ஆனால் எடுத்த பேச்சை அப்படியே டீலில் விட்டுவிடாத நேத்ரா, ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே....’ என்ற ரீதியில் ‘ஸ்க்ரூ’ கொடுக்க, சௌமிக்கும் வேகம் வந்துவிட்டது.

ஒருவருக்கொருவர் மாறி மாறி உருகிக் கொண்ட தோழிகள் இருவருமாகச் சேர்ந்து வீட்டையே புரட்டிப் போட்டுத் தேட, ஒருவழியாகக் கட்டிலுக்குக் கீழே அடைந்து கிடக்கும் பெட்டிகள் ஒன்றில் அந்த பங்ஷன் சிடி அகப்பட்டது. அதற்குள் சுகந்தி இரண்டு முறை எலுமிச்சை ஜூஸும், மோரும் கொடுத்து அவர்களுக்குத் தாகசாந்தி பண்ணி வைத்திருந்தார்.

“என் லேப்டாப்ல போட்டு விடலாம், கொடு...” தூசு போகத் துடைத்த நேத்ரா அக்குறுந்தகட்டை கணினியில் இணைக்க, அன்றைய காட்சிகள் மானிட்டரில் விரிந்தன.

“இங்க பாரு அனிதா ஆன்ட்டி பாமிலி தானே இது....”

“ஏய்... நீ எப்படி இருந்துருக்கிற பாரு....”

“அய்யோ... நான் பார்க்க சகிக்கல... துடைப்ப குச்சி மாதிரி இருக்கேன்....“

திரையில் தெரிந்தவர்களைப் பார்த்து இரண்டு பேரும் மாற்றி மாற்றி கமெண்ட் அடிக்க, பெரிதாக ஆர்வம் இல்லாமல் பார்க்க ஆரம்பித்திருந்த சௌமி கூட உற்சாகத்துடன் காண ஆரம்பித்திருந்தாள்.

பட்டுப் பாவாடை சட்டையில் குட்டி பொம்மை மாதிரி இருந்த சௌம்யா கேக் வெட்டி முடித்ததும், மெல்லிய இசை பின்னணியில் ஒலித்தபடி இருக்க, கொஞ்ச நேரம் வந்தவர்கள் போனவர்களை போகஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென ஏதோ பாஸ்ட் பீட் மெட்டு ஒலிக்க ஆரம்பிக்க, சூழலில் ஒரு பரபரப்பு. அங்கிருந்த போகஸ் லைட்டுகளில் கூட என்னவோ மாற்றம்.

ஆங்காங்கே நின்று இருந்த வருண் மற்றும் அவன் நண்பர்கள் முன்னால் வந்து பிளாஷ் மாப் (flash mob) மாதிரி சர்ப்ரைஸ் பெர்பார்மன்ஸாக நடனம் ஆட ஆரம்பிக்க, சுற்றிலும் இருந்த இவர்கள் எல்லாம் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது இன்றைக்கும் கூட நினைவில் வந்து உடலை சிலிர்க்க வைத்தது.

“ஹே... இங்க பாரேன் இந்தப் பசங்கள...” என்றபடி ஆங்காங்கே இருந்தவர்கள் எல்லாம் முன்னால் வர, அந்தக் கூட்டத்தில் நேத்ராவும் அவள் குடும்பமும் கூட அடக்கம்.

அந்த வருடத்தில் வந்திருந்த குத்துப்பாடல்கள் அழகான மெட்லியாக இணைக்கப்பட்டுப் பின்னணியில் அதிரத் தொடங்க, சில நொடிகளில் அவர்களுக்கு நடுவே படு ஸ்டைலாக நடந்து வந்த ஆகாஷ் வேகமான நடன அசைவுகளுடன் குழுவில் இணைந்து கொள்ள, “ஹோ” வென்ற இரைச்சலும் கைதட்டல் ஒலியும் காதைப் பிளந்தது.

மற்ற எல்லோருமே அருமையாக ஆட, ஆகாஷ் தான் ஷோ ஸ்டாப்பராக இருந்தான். அவன் அணிந்திருந்த ரத்த சிகப்பு பனியனும், காக்கி நிற கேஷுவல் ப்ளேசருக்கு பொருத்தமான ஸ்லிம் பிட் ஜேஷ் பேண்டும் இளசுகளை அங்கே இங்கே விழி நகர்த்த முடியாமல் கட்டி இழுத்தது என்றால்,

நடனத்தில் தெரிந்த அவன் ஆளுமையும் நளினமும், அதேசமயம் அசால்ட்டாக ஈஸியாக அவன் ஆடிய விதமும் அங்கிருந்த ஒவ்வொருவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் ரசிக்க வைத்தது.

வந்திருந்த கூட்டம் எல்லாம் ஆச்சரியத்தில் திறந்த வாயை மூடவில்லை. நேத்ராவும் கூடத்தான். ‘இவனுக்கு இந்தளவுக்கு டேலன்ட்டெல்லாம் இருக்கா....!?’ அவள் தன் மூக்கில் விரல் வைக்காத குறையாக வியந்து போனதும் அன்று தான்.

அதற்கு முன்பு வரை அவனை ஒரு ‘பந்தா பீஸ்’ என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள். ‘பந்தா கேஸ்’ என்று மட்டுமல்ல.. ‘பீத்தல் பீதாம்பரம், ஸீனு சொக்கலிங்கம், லொள்ளு லோகநாதன்’ அவனுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, டிஆர்க்குப் போட்டியாக எதுகை மோனையில் தேடித் தேடி, இப்படி அபிமானப் பேர்கள் வைத்து அவனைப் புகழ்ந்து பாராட்டிக்(?!) கொண்டிருந்த அழகிய பருவம்!

வீடியோவில் வைத்த கண் வாங்காமல் ஆகாஷையே பார்த்துக் கொண்டிருந்த நேத்ராவுக்கு அந்த நாளுக்கே சென்றது போன்ற உணர்வு. முதன்முதலில் சௌமி வீட்டு வானரங்களைப் பார்த்தது கூட இப்போதும் பசுமையாக அவள் நினைவில் நிழலாடியது..

நேத்ரா அப்போது தான் பெங்களூரிலிருந்து பெற்றோருடன் சேர்ந்து இருக்கத் திருப்பூர் வந்து சேர்ந்திருந்தாள். பெங்களூரில் வேலையாக இருந்த அவள் அப்பா தன் குடும்பத் தொழிலை பார்த்துக் கொள்ளச் சொந்த ஊருக்கு திரும்பி இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. அப்பா வழி தாத்தா வீடு திருப்பூர் செட்டிபாளையம்.

ஸ்கூல் மாற்றும் சிரமங்கள் கருதி நேத்ரா மட்டும் தன் அம்மம்மாவிடம் தங்கி அங்கேயே படித்தாள். தனியாக இருந்த தன் தாய்க்குத் துணை என்று நினைத்த நேத்ராவின் அம்மாவும் கொஞ்ச நாட்கள் மகளை அங்கே விட்டு வைத்திருக்க, ஆறாவதுக்குப் பிறகு பள்ளி மாறினால் சரிப்படாது என்று அந்த வருடம் தான் மகளைத் திருப்பூருக்கு அழைத்து வந்திருந்தார்கள்.

அம்மா அப்பாவின் பாசமும் அணுக்கமும் சுகம் தந்தது என்றாலும் நேத்ராவுக்கு ஆரம்பத்தில் அந்த இடம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதுநாள் வரை மெட்ரோ சிட்டியில் வளர்ந்தவள். இங்குப் பள்ளி, தோழிகள், பேசும் மொழியின் லாவகம் என்று எல்லாவற்றுக்கும் தொடக்கத்தில் சிரமப்பட்டாள்.

என்னதான் அவளாக நெருங்கி நெருங்கி போனாலும் பெரு நகரத்தில் வளர்ந்தவளது உடல்மொழியும், பழக்க வழக்கங்களும் வகுப்பில் இருந்த மற்ற பெண்களைத் தள்ளி நிறுத்த, அது வேறு தனிமையாக உணர வைத்தது.

எப்படியோ சில மாதங்களுக்குள் பள்ளியில் சௌமியை பிரண்ட் பிடித்து விட, சௌமியின் வீடும் வெகு அருகே என்பதால் இன்னும் வசதியாக போனது. தனக்குத் தகுந்த செட் கிடைத்தப்பிறகு நேத்ராவிற்குக் கொஞ்சம் தேவலாம். அந்த வருட இறுதியில் தான் மெல்ல மெல்ல ஊர், ஸ்கூல் எல்லாம் பழகி பிடிக்க ஆரம்பித்திருந்தது.

அந்தக் கோடை விடுமுறையில் தன் வீட்டருகே இருக்கும் பேக்கரிக்கு சௌமியுடன் பப்ஸ் சாப்பிடப் போனபோது தான் ஆகாஷை முதன்முதலாகப் பார்த்தாள்.

ஆர்ப்பாட்டமான ஸ்போர்ட்ஸ் பைக்கில் தன் தோழனுடன் வந்து இறங்கியவனைச் சௌமி அறிமுகப்படுத்தி வைக்க, நேத்ரா ‘ஆ’ வென்று பார்த்து வைத்தாள். அந்த பைக் என்ன மாடல்,என்ன விலை என்றெல்லாம் அந்த வயதில் அவளுக்குத் தெரியாது.

ஆனாலும் பெங்களூரில் பார்த்த சில ரேஸ் பைக்குகள் போல அது பிரமாண்டமாக இருக்க, “இந்த வயசில இவ்வளவு பெரிய பைக்கா....!?” அந்த அறியாத்தனத்திலும் அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

“என்னடி சாப்பிடுற...?” தன் தங்கையைக் கேட்டு அவள் பாதிச் சாப்பிட்டு வைத்திருந்ததை லவட்டி தன் வாயில் அடைத்துக் கொண்ட ஆகாஷ், தன் கூட வந்த வருணிடம் “எனக்கும் சேர்த்து ஏதாவது வாங்குடா...” என்றபடி அவர்கள் அருகே வந்து அமர்ந்தான்.

தன் தட்டு காலியானதில் பல்லைக் கடித்துக்கொண்ட சௌமி, “அடேய்...” உட்சபட்ச டெசிபலில் அலற, “அடச்சே அல்பம்.... இங்க தான இருக்கே.... உனக்கு வேணுங்கிறதை வாங்கிக்கோயேன்....” அவள் தலையைத் தட்டி அலட்சியமாகச் சொன்னவன்,

“அண்ணா.... இவளுக்கு என்ன வேணுமோ எடுத்துக் கொடுத்துடுங்க... சரியான தின்னி பண்டாரம்... அப்புறம் வீட்டுக்கு போயி அழுகும்...” புதிதாக மீசை வளர்க்கும் அலட்டலில் இரு விரல்கள் மீசையை முறுக்கியபடி இருக்க, கெத்தாக அந்த பேக்கரி உரிமையாளரிடம் சிபாரிசு வேறு செய்தான்.

“வாடி.... வேறு ஏதாவது வாங்கலாம்... ” அவனை முறைத்துக் கொண்டே சௌமி நேத்ராவை அழைக்க, நேத்ரா “இல்ல வேணாம்ப்பா..” மறுத்தாள். வேறு ஏதாவது வாங்கிச் சாப்பிட அவளுக்கும் ஆசையாகத் தான் இருந்தது.

ஆனால் அதற்கு மேல் அவளிடம் காசு இல்லை. அவள் வீட்டில் கணக்காகத் தான் கொடுத்து அனுப்புவார்கள். அடி வாசலில் இருக்கும் கடைக்கு அதற்கு மேல் கேட்டால் உதை தான் விழும்...

அவள் விழிப்பதைப் பார்த்து விட்டு “இந்தப் பொண்ணுக்கும் கொடுங்கண்ணா....“ அவன் சொல்ல, நேத்ரா “வேணாம்... வேணாம்...” மறுப்பாகத் தலையசைத்தாள். ஆனால் சௌமி விடவில்லை. வந்த வியாபாரத்தை அந்த கடை மனிதரும் விடவில்லை. ‘ஏம்மா.. வாங்கிக்கம்மா...’ என்று அவர் வேறு ஓவராகக் கவனிக்க ஆரம்பித்தார்.

சௌமிக்கு கம்பெனி கொடுக்கிறேன் என்ற பேர்வழியில் ஒன்றுக்கு நான்காக வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு இவள் எழுந்து கை கழுவி வர, “ஆமா... உன் பிரண்ட்டுக்கு என்ன சின்னப் பாப்பான்னு நினைப்பாமா....?” அவன் சௌமியிடம் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தது இவள் காதிலும் தெளிவாக விழுந்தது.

எழுந்த எரிச்சலில் அவள் ‘தங்தங்’கென்ற வேகநடையில் வந்து நிற்க, அவள் அருகில் வந்ததை அறிந்தும் கூட அவன் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. முறைப்பதாய் நினைத்து அவள் கண்களைச் சுருக்கி உறுத்து விழித்தது இன்னும் கொஞ்சம் அவனை உசுப்பேற்றித்தான் விட்டது.

அருகில் அமர்ந்து இருந்த வருண் வேறு, “அட.. ஆமா... ஆள் பார்க்கவும் குட்டி பாப்பா மாதிரி தான் இருக்கு... இனிமே உன்னோட பேரு ‘பாப்பா’ தான்... ஓகேவா பாப்பா....” சகட்டுமேனிக்கு அவளை கேலி செய்ய, சௌமி கூட வெடித்துச் சிரித்து விட்டாள்.

இவள் முறைப்பதை பார்த்ததும் “சாரிடி... சாரிடி...” என்று நிறுத்திக் கொண்டவள், ‘டேய்... விடுங்கடா...’ தன் சிரிப்பை அடக்கியபடி அவர்களிடம் சிபாரிசு செய்ய,

“உன்னோட க்கா...” என்பது போலச் சௌமியை ஒரு பார்வை பார்த்த நேத்ரா, “என்ன கொழுப்பா....?” மற்ற இருவரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைத்தாள். மூக்கை விடைத்துக் கொண்டு அவள் முறைத்த முறைப்பில் அவர்கள் இன்னுமே சிரித்தார்கள்.

என்னதான் தில்லாக நிற்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவர்களுடைய கிண்டலில் இவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. ஆங்கிலம் அதிகம் கலந்து அவள் பேசுவதை ஒரு பக்கம் கிண்டலடித்தார்கள் என்றால், அவள் அணிந்திருந்த கவுன், இரட்டை வால் போனிடைல் என எல்லாவற்றையும் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாட்டி வீட்டில் இருந்தவரை பின்னபார்ம், கவுன் என்றே போட்டுப் பழகியவள், இங்கே வந்தபிறகும் சமயங்களில் வீட்டில் மட்டும் அந்த மாதிரி அணிந்துக் கொள்வாள்.

“இது சின்ன ஊரும்மா... கன்சர்வேட்டிவ்வான இடம்... நம்ம வீட்டுக்குள்ள மட்டும் போட்டுக்கோ... இது கூட நீ இன்னும் சின்ன பிள்ளை, இன்னும் கொஞ்சம் பெருசானா போட முடியாதுன்னு தான் அலவ் பண்றேன்...” அவள் தாய் படித்துப் படித்துச் சொல்லும்போதெல்லாம் வராத கவனம், கோபம் எல்லாம் இப்போது வந்தது.

அந்த வயதுக்குச் சராசரியை விடக் குட்டையாக, கொஞ்சம் ‘சப்பி’யாக வேறு இருப்பாள். “குழந்தை மாதிரி இருக்கு.... வயசே தெரியலை....” வேறு யார் சொன்னாலும் பெருமையாகச் சிரித்து விட்டு நகர்ந்து விடுபவளின் உள்ளம் அன்று அதே கிண்டலை பாராட்டாக எடுத்துக் கொள்ள முடியாமல் கொந்தளித்துப் போனது.

“யு ஆர் புல்லியிங் மீ...” நேத்ரா எரிச்சலுடன் கத்த, அதற்கும் “ஆமா சௌமி.... குரல் கூடச் சின்னப் பாப்பா மாதிரி தான் இருக்கு... எலிமெண்டரில உட்கார வேண்டியதெல்லாம் எப்படி உன் கிளாஸ்ல உக்காருது?” கிண்டலாகச் சந்தேகம் கேட்ட ஆகாஷ், தன் கையைத் தூக்கி காண்பித்த வருணின் கரத்தில் ஹை-பை கொடுத்துச் சிரித்தான்.

“டேய்... வேணாம்.... அவ என்னோட பிரண்ட்...” அவர்கள் கூடச் சேர்ந்து சிரித்தாலும் சௌமி தோழியின் சப்போர்ட்டுக்கு வர, “போடி.... கத்திரிக்கா.... நீ சுட்ட கத்திரிக்கா... இது குள்ள கத்திரிக்கா...”

ஆகாஷ் மீண்டும் மீண்டும் அவளை வாருவதை மட்டும் நிறுத்தவேயில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் நேத்ராவுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.

“அண்ணா.... நான் காசை அப்புறம் கொண்டு வந்து கொடுக்கிறேன்.... கணக்கு வச்சுக்குங்க...” இவள் ரோஷமாக உரைக்க,

அதுவரை இவர்களின் கலாட்டாக்களை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்த கடை அண்ணன், ”அட விடும்மா.... நீ சின்னப் புள்ள தானே... பாப்பான்னு சொன்னா என்ன தப்பு....?” அவர்கள் சண்டைக்கு நடுவில் புகுந்து சமரசம் செய்து வைத்தார்.

பேச்சோடு பேச்சாகத் தான் ஏற்கனவே தயாராகக் கட்டி வைத்திருந்த இரண்டு பார்சல்களை அவர் மேசையில் கொண்டு வந்து வைக்க, அவற்றை வாங்கிக் கொண்டவன், “பாப்பாவுக்கு மூக்குக்கு மேல கோபம் வருது பார்த்தீங்களாண்ணா.....?” அவளை எள்ளி நகையாடியபடி தன் பர்சை திறந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

அந்தக் கோபத்திலும் அவன் கையில் இருந்ததை பார்த்தவளின் கண்கள் சாசர் போல விரிந்தன. தேவைக்கு மேல் ஒற்றைப் பைசா அதிகம் இல்லாமல் இங்கு வந்திருந்தவள், அவனது வாலட்டில் கொத்தாகச் சொருகியிருந்த தாள்களைப் பார்த்து வாயடைத்துப் போனது என்னவோ உண்மை.

இவள் தான் திட்ட வந்ததை மறந்து நிற்க, “ஓகே... கிளம்பலாமா...? நீ சீக்கிரம் வீடு வந்து சேரு...” வருணிடம் தலையசைத்துச் சௌமியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்.

“தொலைஞ்சது கொரங்குங்க....” இவள் வாய்க்குள் முணுமுணுக்க, வாசல் வரை சென்றவன், நாக்கை கன்னத்தில் துருத்தியபடி குறும்பாகத் திரும்பிப் பார்த்தான்.

“பை பை பாப்பா... அடுத்தத் தடவை உனக்கு லாலி பாப் வாங்கிட்டு வரேன்... லாலி பாப் பிடிக்கும்ல..? இல்ல குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தரட்டுமா....?” கண்களைச் சிமிட்டியபடி நக்கலாகக் கேட்க, “டேய்......” சிரிப்பை மறைத்த சௌமியின் குரலுடன் கோபமாக இவள் குரலும் அதிர்ந்து ஒலித்தது.

“இன்டீசன்ட் இடியட்ஸ்...” இவள் இங்கிலிபீச்சில் பீட்டர் விட, “என்னமோ திட்டுதுடா... உனக்குப் புரியுதா...? எனக்குப் புரியவேயில்ல.....” பாவமாகக் கைகளை விரித்துக் காட்டியவன்,,

“சரி... வீட்டுக்கு போய் அழுதுகிழுதெல்லாம் வைக்கக் கூடாது, குட்டி பாப்பா மாதிரி.... பி எ பிரேவ் கேர்ள்...” இரண்டு வயது குழந்தைக்குப் புத்தி சொல்வது போலச் சொல்லிவிட்டு மனசு வந்து ஒருவழியாகக் கிளம்ப, நேத்ரா நொந்தே போனாள்.

அதற்குப் பிறகான நாட்கள் இன்னும் மோசம். இவளை வீட்டில் ‘அம்மு’ என்று கூப்பிடுவது சௌமியின் புண்ணியத்தில் அவனுக்குத் தெரிந்து போக, இவளுடைய இமேஜ் இன்னும் டேமேஜ் ஆகியது.

‘அன்னிலருந்து தான் இதுங்க இரண்டும் ‘பாப்பா’, ‘அம்மு பாப்பா’ ன்னு பார்க்கிற இடமெல்லாம் கூப்பிட்டு வெறுப்பேத்துனது....’ சிரிப்புடன் நினைத்துக் கொண்டவள், ‘அதெல்லாம் எவ்ளோ பியுட்டிபுல் டேஸ்....! அமேஸிங் நாஸ்டாலாஜி....’ மந்தகாச புன்னகையுடன் தனக்குள்ளேயே உருகி கரைந்து போனாள்.

“இது நம்ம சகி தானே, அம்மு.. அடியேய்.... எங்க இருக்க நீ..?” பக்கத்திலிருந்த சௌமி உலுக்க, நடப்புக்கு வந்த நேத்ரா திரையில் கவனம் திரும்பினாள். ஆகாஷின் சோலோ டான்ஸும் இப்போது முடிவுக்கு வந்திருக்க, அவனது துள்ளலான நடனம் இவளது நாடி நரம்புகளையும் அதிர்வூட்டிய மாதிரி இருந்தது.

“செம கெத்தான பெர்பார்மென்ஸ் இல்ல.... மறக்கவே முடியாது....” விழிகள் பளபளக்க சௌமியிடமும் சிலாகித்தவள், “இப்பல்லாம் டான்ஸ் ஆடுறதில்லையா....?” விடை தெரிந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

“டான்ஸ்ன்னு எதுக்குத் தனியா ஆடணும்...? அதுதான் எல்லா நேரமும் ஆடிக்கிட்டு தானே இருக்கான்....” சௌமி கிண்டலும் சலிப்புமாக சிரிக்க, சௌமியே ஆனாலும் ஆகாஷை பற்றி அவள் அலுப்பாகப் பேசுவது நேத்ராவுக்கு வருத்தமாக இருந்தது.

அதற்காகத் தன் எண்ணத்தை அப்படியே வெளியே காண்பித்துக் கொள்ள முடியாத சங்கடம் வாயைக் கட்டிப் போட, “சம்சு.... செம காமெடி சென்ஸ்டி உனக்கு....” விளையாட்டாக அவள் கன்னம் கிள்ளினாள்.

“இப்ப ரீசன்டா வந்த ஒரு சாங்... அதைக் கேக்குறப்ப எல்லாம் எனக்கு இந்த பங்க்ஷன் நியாபகம் தான் வரும்... இரு.. இரு...”

வேகமாகத் தன் ஐபோனில் தான் சொன்ன பாடலை தேடி எடுத்த நேத்ரா, அதை இசைக்க விட்டு லேப்டாப்பில் மீண்டும் அந்த நடனத்தை ரிவைண்ட் செய்தாள்.

“இப்ப இக்கட சூடு....” லேப்டாப்பை இப்போது ம்யுட் செய்து விட, கனகச்சிதமாய் அவன் நடனம் இந்தப் புதிய பாடலுக்கும் பொருத்திப் போனது.

“செமடி அம்மு.... உனக்குக் கூட இவ்வளவு மூளை இருக்காடி....!!?” கேலி செய்த சௌமி, முதலில் பாவம் பேசாமல்தான் இருந்தாள்.

பாடல் வரிகளுடன் சேர்ந்து தானும் முணுமுணுத்த நேத்ராவின் பிடுங்கலில் அவளும் சேர்ந்து கொண்டு பாட, பெண்கள் இருவரும் ஸ்ருதி மாறாமல் ஸ்வரம் சேர்த்ததில் சுற்றியிருப்பவர்களுக்கு எல்லாம் காதில் தேன் வந்து பாயும் கொடுப்பினை!

உற்சாகத்தின் பிடியில் மெல்ல மெல்ல உயர்ந்த குரல்கள் ஒரு கட்டத்தில் கழுதை கூடத் தெறித்து ஓடும் காட்டுக் கத்தலாக மாறிப் போக, கூடவே இசைக் கோர்வையாகப் பக்கத்தில் இருந்த இரும்பு டேபிளின் மேல் இவர்கள் போட்ட கும்மாங்குத்துத் தாளம் வேறு.

சுகந்திக்குக் காதுகள் இரண்டும் விண்விண்ணென்று வலியில் தெறித்தாலும் ஒன்றும் சொல்லாமல் இந்தக் கூத்தை கண்ணாரக் கண்டு காதாரக் கேட்டு அவர் ரசித்துக் கொண்டிருக்க,

அவர்களின் சிரிப்பிலும் கலகலப்பிலும் கல்லைத் தூக்கி போட்டது போல ஒரு கை வேகமாக முன்னால் வந்து மடிக்கணினியின் முதுகை அடித்துச் சாத்தியது.
 

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom