• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்- 5

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
13
என்றென்றும் வேண்டும்-5

“நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்

நூலது வேதாந்தம், நுண்சிகை ஞானமாம்

பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர்

ஓரொன்று இரண்டினில் ஓங்காரம் ஓதலே”


(திருமூலர் திருமந்திரம் )

பொருள்:

பூண்நூல், சிகை ஆகியவற்றை அணிந்திருந்தும் அதன் உண்மை இயல்பை மூடர்கள் அறிவதில்லை. பூணூல் என்பது வேதாந்தத்தின் தத்துவத்தை உணர்த்துவது. அதாவது இடகலை பிங்கலை சுழுமுனை மூன்றும் ஒரு சேர செயல்படுத்தி சகஸ்ர தளத்தை அடைந்து ஞானத்தை பெற்றவர் என்று பொருள். அதனால்தான் பூணூலை மூன்று பிரியாக போடுகின்றனர்.

உச்சிக் குடுமியானது வேதத்தின்
பால் தனக்கு உள்ள ஞானத்தை புலப்படுத்துவது. அதாவது வேதங்களின் வழி செல்வதை மறவாமல் இறைவன் பால் என்றென்றும் பற்றுடன் இருப்பது. சிவபெருமானிடம் ஒன்றி இருப்பவர்களை சீவனும் சிவனும் ஒன்றென்பார்கள். அப்படி ஒன்றாகாது நின்றவர் ஓகாரம் உச்சரித்தால் ஒன்றாவர்.

அறிவியல்:

மனிதன் உயிர்
வாழ, செயல்பட உடலில் உள்ள மூன்று உறுப்புகள் மிகவும் அவசியமானவை. அவை:

1. Spinal cord – சுழுமுனை

2. Breath – பிங்கலை

3. Force – இடைகலை

இவை மூன்றும் ஒன்றிணைந்தால் தான் உடலில் உள்ள அனைத்து உருப்புகளுக்கும் மூளையின் வாயிலாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். அது மட்டுமல்லால். மூளைக்கு பிராணனையும், இரத்த ஓட்டத்தையும் அளித்து உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.


பத்மாவும் அத்தையும் அவர்கள் கோயிலிலிருந்து வருவதற்காகவே காத்திருந்தனர். எப்போதுமே இரவில் ஏழு ஏழரைக்குள் டிபன் கடை முடிந்து விடும். அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கல்யாண வேலைக்காக சரியான தூக்கமில்லாமல் வேலை செய்ததில் இருவருக்கும் அசதியில் தள்ளியது.

அன்று பத்மா எளிமையாக அரிசி உப்புமாவும் கத்திரிக்காயை தணலில் சுட்டு கொஸ்தும் செய்திருந்தார். இருவரும் வந்ததும் தட்டைப் போட்டுக் கொண்டு எல்லோரும் சுற்றி உட்கார்ந்து கொண்டனர்.

பத்மா அவள் தட்டிலும் உப்புமாவை வைக்க இப்போது அவளுக்கு விஸ்வநாதன் கோபமாய் இருப்பதெல்லாம் பின்னால் போய் 'இந்த உப்புமாவை எப்படி சாப்பிடறது?' என்ற கவலை தான் பெரிதாக இருந்தது.

என்ன இருந்தாலும் சோறு முக்கியம் இல்லையா?

அரவிந்தும் அவர்களோடு தான் சாப்பிட வந்தான்.

உப்புமாவைப் பார்த்ததும் காண்டாகி "ஏம்மா! அங்க தான் அடிக்கடி இதை போட்டு எங்களைக் கொல்றான்னா இங்கயுமா? உனக்கு வேற நல்ல டிபனே பண்ணத் தெரியாதா?" என்று சத்தம் போட்டான்.

காயத்ரிக்கு அரவிந்திடம் ஹை-பை கொடுக்க வேண்டும் போலிருந்தது.

அவனைப் பார்த்து நேசக் கரம் நீட்டப் போனவள் மாமியார் போட்ட சத்தத்தில் மிரண்டு போனாள்.

"டேய்! ஒரு நாளைக்கு முடியலைன்னா போட்டதை சாப்பிட பழகிக்கோ. அதையும் இதையும் சொல்லிண்டு?"

என்று அதட்டி விட்டு காயத்ரி பக்கம் திரும்பி அவள் தட்டில் உப்புமாவை அளைந்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு

"ஏண்டிம்மா! நோக்கு வேற தனியா சொல்லணுமா? சட்டுபுட்டுனு சாப்புட்டு இடத்த காலி பண்ணுங்கோ. சமையல் உள்ள அலம்பி விட்டுட்டு படுக்க போகணும். இப்பவே மணி எட்டாச்சு." என்று அவளையும் அதட்டினார்.

காயத்ரி 'மணி எட்டு தானே ஆச்சு' என்று நினைத்தாலும் கேட்க பயமாக இருந்ததால் மாமியாரிடம் எதுவும் கேட்கவில்லை.

எப்போதும் அவர்களுக்கு ஆதரவாய் பேசும் அத்தை கூட சோர்வாய் இருப்பதை பார்த்து கஷ்டப்பட்டு உப்புமாவை வாயில் அடைத்தாள்.

அவள் திருதிருவென்று விழிப்பதை பார்த்து "என்ன கொஸ்து பிடிக்கலையா?" என்று பத்மா கேட்க பரிதாபமாய் தலையாட்டினாள் காயத்ரி.

"சரி! சீனி ரெண்டு போட்டுக்கோ." என்று அவளை கவனிக்க விஸ்வநாதன் பேசாமல் சாப்பிட்டு பரசேஷணம் செய்து விட்டு எழுந்து போனான்.

அரவிந்த் அம்மாவின் கவனம் காயத்ரியின் பக்கம் இருக்கும் போது நைசாக உப்புமா இருந்த தட்டோடு கொல்லைப் புறத்துக்கு ஓடி விட்டான்.

காயத்ரி சாப்பிட்டு வர பத்மா சமையல் அறையை சுத்தம் செய்து கேஸ் அடுப்பின் மேல் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

காயத்ரியை பார்த்ததும் ஒரு சொம்பை "இதுல உனக்கும் விச்சுக்கும் பால் வெச்சிருக்கேன். ரெண்டு பேருமா சாப்பிடுங்கோ" என கையில் கொடுத்தார்.

காயத்ரிக்கு உப்புமா பிரச்சனை ஓய்ந்ததில் மீண்டும் விஸ்வநாதனின் கோபம் நினைவுக்கு வந்தது. அதற்காக அங்கேயே நிற்க முடியாதே?

மெல்ல நடந்து அவர்கள் அறைக்கு போக அரவிந்த் கையில் விஸ்வநாதன் காசு கொடுப்பதையும் அவன் சிரித்த முகத்துடன் "தேங்க்ஸ் அண்ணா!" என்று அதை வாங்கிக் கொண்டு ஓடுவதையும் பார்த்தாள்,.

விஸ்வநாதன் தம்பி சரியாக சாப்பிடவில்லையென்று அவனுக்கு காசு கொடுத்து ஹோட்டலில் பிடித்ததை வாங்கிக் கொள்ள சொன்னது அவளுக்கு எப்படி தெரியும்?

விஸ்வநாதன் அவளைப் பார்த்ததும் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் அறைக்குள் போக பின்னாலேயே தயங்கியபடி காயத்ரியும் போனாள்.

பின்னால் வந்தவளை ஒரு வார்த்தை கூட கேட்காமல் விஸ்வநாதன் கட்டிலில் அமர்ந்து கொள்ள காயத்ரிக்கு தான் என்ன செய்வது என்று புரியவில்லை.

அலமாரி கதவை திறப்பதும் மூடுவதும் எதையாவது எடுத்து வைக்கும் சாக்கில் பொருட்களை கீழே போடுவதும் எடுத்து வைப்பதுமாக நடுநடுவே விஸ்வநாதனை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

விஸ்வநாதன் கட்டிலில் உட்கார்ந்து அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். கண்களில் எந்த உணர்ச்சியுமில்லாமல் முகத்தில் துளி கூட சிரிப்பில்லாமல் பார்த்தவனை பார்க்கவே பயமாக இருந்தது.

கொஞ்ச நேரம் அவள் பதைப்பை வேடிக்கை பார்த்தவன் அமைதியாக "காயத்ரி! இங்க வா.." என்று அழைக்க அதற்காக தானே காத்திருந்தாள் அவள்.

வேக நடையுடன் அவன் அருகில் வந்து நின்றாள். அவளை நேற்று போலவே தன் மடியில் வைத்துக் கொண்டான். விஸ்வநாதன் வந்ததுமே சட்டையை கழற்றியிருக்க காயத்ரி இன்னும் பட்டு புடவையிலேயே இருந்தாள்.

காயத்ரி நேற்று போல அவனிடமிருந்து நழுவாமல் அப்படியே திரும்பி அவன் முகத்தை பார்த்தாள்.

"நீங்க என் மேல கோபமா இருக்கேளான்னா?”



பயத்தில் படபடத்த கண்களும் மெல்ல துடித்த ரோஜா இதழ்களும் அவனுக்கு மிகவும் நெருக்கத்தில் தெரிய மெலிந்து கேட்ட குரலில் அவனுக்கு ஏன் கோபம் என்பதே மறந்து போனது.

"ஏன் கேக்கறே?"

"இன்னிக்கு பூரா நீங்க என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல. என்னைப் பாத்து ஸ்மைல் பண்ணல. அவ்வளவு ஏன் என்னை கண்டுக்கவே இல்ல."

காயத்ரி நீளமாக குற்றப் பத்திரிக்கை வாசிக்க விஸ்வநாதன் புன்னகை செய்தான்.

"இல்லையே! நீ தான் காத்தால என் கிட்ட கோச்சுண்டு போன. அப்புறம் என்னைப் பாத்து மூஞ்சிய திருப்பிண்டே. "

"ஆமா..! நான் உங்க மேல கோவமா இருந்தேன். நீங்க ஏன் என்னை சமாதானம் பண்ணல? எங்கம்மா நான் கோச்சிண்டு போனா சமாதானம் பண்ணுவா. நீங்க என்னடான்னா திருப்பிண்டு போறேள்.? "

குறையாய் சொன்னவளைப் பார்க்கும் போது அம்மா சொன்னது உண்மை என்று தோன்றியது. காயத்ரி ஒரு குழந்தை தான். பெற்றவர்கள் பொத்தி பொத்தி வளர்த்ததில் குழந்தையாகவே இருந்து விட்டாள்.

விஸ்வநாதன் அவளை தன் பக்கமாக திருப்பி உட்கார வைத்து "பட்டூ..! உன்னை கொஞ்சணுமா?" என்று கேட்க காயத்ரி "ஆமாம்" என்று ஆர்வமாய் தலையாட்டினாள்.

மெல்ல அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவளை அன்பாய் வருடினான்.

அவள் தலையாட்டிய விதத்தில் "எனக்கு கொஞ்சத் தெரியாதே! நீயே சொல்லு! உன்னை எப்படி கொஞ்சணும்னு.. நான் அதைப் பாத்து செய்யறேன்." என்று அவளிடமே கேட்டான்.

அவன் குறும்பாய் சிரித்தது அவள் கண்ணிலே படவில்லை.

ஆர்வமாய் நிமிர்ந்தவள் அவன் மோவாயை பிடித்து "ம்ம்ம்... சொல்லவா? என் பட்டுக் குட்டி!" என்று சொல்ல விஸ்வநாதன் அவனை எதிர்பார்ப்புடன் பார்த்த அவள் கண்களில் முத்தமிட்டபடி "என் பட்டுக்குட்டி!" என்று அவளைப் போலவே சொன்னான்.

"என் ஜிஞ்சிலி குட்டி!"

"என் ஜின்ஜிலிக்குட்டி!" என்று அவள் கன்னத்தில் அடுத்து முத்தமிட

"என் மொக்கள குட்டி!"

"என் மொக்கள குட்டி!" என்று அடுத்து அவள் உதடுகளில் முத்தமிட "நன்னா சைக்கிள் கேப்ல கார் விடறேள்னா.." என்று அவனை தள்ளி விட்டாள்.

"இப்ப அடுத்த கோபம் என்ன?" என்று கேட்டபடி அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டு இரண்டு கைகளாலும் அவளை இறுக்கிக் கொண்டான்.

"நீங்க இது வரைக்கும் என்னைப் பாத்து ஐ லவ் யூன்னு சொல்லவே இல்லையே?" என்று காயத்ரி அடுத்த குறையை சொல்ல

"அதான் நான் நேத்திக்கு பூரா சொல்லிண்டே இருந்தேன். நீ கேக்கலியா?" என்று விஸ்வநாதன் சொல்ல காயத்ரி ஆச்சரியமாய் சொன்னாள்.

"எப்பன்னா சொன்னேள்? நான் தூங்கிண்டு இருக்கிறப்போவா?"

"இல்லையே! காத்தால தாலி கட்டினத்துலருந்து பாணி கிரஹணம் பண்ணிக்கறப்போ…. சப்தபதி அப்போ.. அதான் உன் காலைப் பிடிச்சு ஏழு அடி வெச்சேனே அப்போ… அப்புறம் அம்மி மிதிக்கிறப்போ... அருந்ததி நட்சத்திரம் காட்டறப்போ.."

"அப்போ நீங்க என்னை எங்கன்னா பாத்தேள்? வாத்தியாரைன்னா பாத்துண்டு மந்திரம் சொல்லிண்டுருந்தேள்?"

காயத்ரிக்கு அவன் சொல்ல வந்தது சுத்தமாக புரியவில்லை.

"லவ் பண்றதுன்னா என்ன பட்டூ..?" விஸ்வநாதன் தீவிரமாய் காயத்ரியிடம் சந்தேகம் கேட்க காயத்ரி அவளுக்கு புரிந்த விதத்தில் பதில் சொன்னாள்.

"லவ் பண்றதுன்னா என்னன்னா...... எப்பவும் ப்ரியமா இருக்கணும். பத்ரமா பாத்துக்கணும். கேக்கறதெல்லாம் வாங்கித் தரணும்..."

"ம்ம்ம்....இதெல்லாம் தான் சொன்னேன். இந்த கையை இன்னிக்கி பிடிச்ச நான் இனி கடைசி வரைக்கும் விட மாட்டேன்.." என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னவன் அதில் முத்தம் பதித்து

"உன்னோட கஷ்டத்துல... உடம்பு முடியாதப்போ... அப்பல்லாம் பாத்துப்பேன்னு சொன்னேன். என் உயிர் உள்ள வரைக்கும் உன்னை பிரிய மாட்டேன்னு சொன்னேன். இனிமே நீ வேற நான் வேற இல்ல.

நாம ரெண்டு பேரும் ஒண்ணுன்னு சொன்னேன். என்னோடது உன்னோடதுன்னு இனி எதுவும் இல்ல. எல்லாமே நம்பளோடதுன்னு சொன்னேன். சப்தபதி அப்போ இனிமே நீ தான் என் பிரெண்ட்னு கூட சொன்னேனே பட்டூ..?"

விஸ்வநாதன் மந்திரங்களின் சாரத்தை எளிதாக அவளுக்கு புரியும் விதத்தில் சொன்னான். அவன் சொன்ன விதத்தில் காயத்ரி மொத்தமாக அவனுள் விழுந்தாள்.

சந்தோஷத்தில் எழுந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டு தன் முதல் முத்தங்களை அவன் முகம் முழுக்க கொடுத்தாள். இரு கைகளாலும் அவன் கன்னங்களை பிடித்துக் கொண்டு

"இவ்வளவும் சொன்னேளான்னா? எனக்கு தான் சமஸ்க்ருதம் புரியல. அப்போ உங்களுக்கு நான் பதில் சொல்லலையோனோ? இப்போ சொல்றேன்...

"ஐ லவ் யூ சோ மச்னா.." என்று காதலுடன் சொன்னவளை பார்த்தபடி அதற்கு மேல் அவனால் கையைக் கட்டிக் கொண்டு இருக்க முடியவில்லை.

ஒரு கையால் அவளை அணைத்தபடி தன் பூணூலை எடுத்து மாலை போல் போட்டுக் கொண்டான்.

அவள் அப்பா இப்படி போட்டுக் கொண்டு அவள் பார்த்ததேயில்லை. எப்போதும் இடது தோளில் போட்டுக் கொள்வதை தெவசத்தின் போது மட்டும் மாற்றி போட்டுக் கொள்வதை பார்த்திருக்கிறாள். இது போல மாலையாக அணிந்து பார்த்ததேயில்லை.

அதனால் ஆச்சரியமாக பார்த்த காயத்ரி "எதுக்கு நீங்க இப்படி போட்டுக்கறேள்?" என்று கேட்க விஸ்வநாதன் மர்மமாய் புன்னகைத்தான்.

காயத்ரி "சொல்லுங்கோன்னா.." என்று வற்புறுத்த "நான் இப்ப பண்ணப் போற வேலைக்கு பூணலை இப்படித்தான் போட்டுக்கணும்டி.." என்றவன் அவள் காதில் கிசுகிசுக்க காயத்ரி வெட்கத்தில் அவன் நெஞ்சிலேயே முகத்தை மறைத்துக் கொண்டாள்.

இருவருக்கும் இடையே அடிப்படையாய் இருக்கும் கருத்து வேறுபாடு அப்படியே இருக்க தாம்பத்தியம் மட்டும் அது பாட்டுக்கு நடந்தது.

காயத்ரி கல்யாணத்திற்காக இரண்டு வாரங்கள் லீவ் எடுத்திருக்க விஸ்வநாதன் அடுத்த நாளே உபாத்தியாயத்துக்கு போக ஆரம்பித்தான்.

காலையில் அவன் வழக்கப்படி ஐந்து மணிக்கு எழுந்திருக்க காயத்ரி ஏழு மணி வரை தூங்குவதை யாரும் எதுவும் சொல்வதில்லை.

அவன் குளித்து சூரிய நமஸ்காரம் சந்தியா வந்தனம் எல்லாம் முடித்து எட்டு மணிக்கு கிளம்பும் போது அவள் அப்போது தான் சாவகாசமாய் காஃபி குடித்துக் கொண்டிருப்பாள்.

விஸ்வநாதன் காலை எட்டு மணிக்கு கஞ்சி குடித்து விட்டு கிளம்பினால் வீட்டுக்கு வர மதியம் மூன்று மணியாகி விடும்.

வெளியில் எங்கும் சாப்பிட மாட்டான். அது திவசமாக இருந்தாலும் சரி கல்யாணமாக இருந்தாலும் சரி.

வீட்டுக்கு வந்து தான் மதிய உணவே சாப்பிடுவான். அதன் பிறகு சற்று நேரம் ஓய்வெடுப்பவன் அவன் உபாத்தியாயம் செய்யும் வீடுகளுக்கு தானே உட்கார்ந்து பூணூல், மஞ்சள் சரடு போன்று செய்வது அல்லது தர்ப்பையில் இருந்து பவித்ரம் செய்வது என இருப்பான்.

அதை செய்யும் நேரத்தில் அவன் வாய் தான் கற்ற மந்திரங்களை உச்சரித்தபடி இருக்கும். குருகுலத்தில் அவர்களுக்கு மந்திரங்களை பயிற்றுவிக்கும் போது அதற்கான புத்தகமோ எழுதித் தருவதோ கிடையாது.

தினமும் பலமுறை அதை சொல்லி அவர்கள் மனப்பாடம் செய்திருக்க வேண்டும்.

அது வரை அவனை யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள். காயத்ரியும் மற்றவர்களை பார்த்து அந்த நேரம் அவனிடம் போக மாட்டாள். அது அவள் அத்தையுடன் படுத்துக் கொண்டு கதை கேட்கும் நேரம்.

பத்மாவும் அத்தையும் தான் அவளை கவனிக்க இருக்கிறார்களே. நாள் முழுதும் அத்தையின் புடவையை பிடித்துக் கொண்டே அலைவாள். இருவரும் அவள் சின்னப் பெண் என்று சமைக்கவே விடவில்லை.

விஸ்வநாதனோ வளர்ந்திருக்க அரவிந்தோ வெளியூரில் இருக்க இரு பெண்களும் அன்பைக் கொட்ட ஆளில்லாமல் தவித்திருந்தார்கள்.

காயத்ரி கிடைத்ததும் இருவரின் கவனமும் அவள் மேல் தான். காயத்ரியை பொறுத்த வரை முன்பு அம்மா அப்பாவின் அரவணைப்பில் இருந்தாள்.

இப்போதும் எந்த பொறுப்புமில்லாமல் இருக்க அரவிந்தோடு அவளுக்கு நன்றாகவே பொழுது போனது.

காயத்ரியும் விஸ்வநாதனும் எங்கேயும் போகவில்லை என்று தெரிந்ததும் மாலை ஆறு மணிக்கு மேல் பெரியவர்கள் இருவரும் கோயிலுக்கு போயிருக்க அரவிந்தும் வெளியே போயிருந்தான்.

வீட்டில் காயத்ரியும் விஸ்வநாதனும் மட்டுமே இருந்தனர்.

விஸ்வநாதன் டிவியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருக்க காயத்ரி யாருமில்லாத தைரியத்தில் அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியில் வந்து அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு அவனோடு வெளியே போக இன்னும் தயக்கமிருக்க அவன் அப்படி ஒரு எண்ணம் இருப்பது போலவே காட்டிக் கொள்ளவில்லை.

அவளைத் திரும்பிப் பார்த்து "காயத்ரி! நகந்து அந்த சேர்ல போய் உக்காரு." என்று பக்கத்து நாற்காலியை கை காட்டி சொல்ல காயத்ரியின் முகம் வாடியது.

தான் நினைக்கும் போதோ சொல்லும் போதோ அவனுக்கு எப்படி இருக்கும் என்று யோசிக்காத ஒன்று விஸ்வநாதன் சொல்லும் போது வலித்தது.

நேற்றும் இப்படித்தான் பைக்கில் அவன் தோளை பிடிக்கக் கூடாதென்றான். இப்போது வீட்டில் தானே இருக்கிறோம்? அதுவும் யாருமில்லாத நேரத்தில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தால் என்ன?

முகம் வாட அவனை பரிதாபமாக பார்த்தபடி சற்று தள்ளி இருந்த நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டாள்.

"இப்போ சொல்லு? என்ன சொல்ல வந்தே?"

எதுவுமே நடக்காதது போல விஸ்வநாதன் கேட்க என்ன கேட்க வந்தாள் என்று அவளுக்கே மறந்து போனது. ஒன்றும் இல்லை என்று முகம் வாட தலையாட்டினாள்.

"சரி! அப்போ ஞாபகம் வரப்போ சொல்லு. நான் சொல்ல நினைச்சத சொல்லிடறேன். நான் உன்னோட சினிமா மால் இப்படி அங்கே இங்கே வரணும்னு எதிர்பாக்காதே.

நேக்கு அதெல்லாம் சரிப்படாது. நோக்கு எங்கயாவது போகணும்னா அரவிந்தை கூப்பிடு. அவன் வருவான். அவன் ஊருக்கு போனவுட்டு உன் பிரெண்ட்ஸ் கூட போயிட்டு வா.

அம்மாவும் அத்தையும் எதுவும் சொல்ல மாட்டா. நான் அவா கிட்ட சொல்லிக்கறேன்.

அப்புறம் நாளைக்கு உன் அக்கௌன்ட் நம்பர் குடு. அதுல பணம் போட்டுடறேன். செலவு பண்ணிக்கோ. உன் சம்பளத்தை உன் விருப்பம் போல என்ன வேணா பண்ணிக்கோ. என்ன?"

அவன் சொன்னதைக் கேட்டதும் காயத்ரியின் கண்ணைக் கரித்தது.
 

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்- 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
118
😄😄😄😄😄அவளுக்கு முன்னாடி எல்லாத்தையும் சொல்லிடுறான்
 
Top Bottom