• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 8

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
தனித்த வனத்தில் 8

பூ மலர, காய் கனிய, கரு உருவாக, பால் தயிராக, வெண்ணெய் நெய்யாக, விதைக்க, பயிரிட, நாற்று நட, நெற்பிடிக்க, கதிரறுக்க என இயற்கையில் எதற்குமே ஒரு கால அளவு உண்டு. ஒரு வருடத்திற்கு ஐந்து பருவங்கள் உண்டு. மனிதனுக்கு ஏழு நிலைகள் உண்டு.

ஒரு முட்டை குடம்பியாகி, கூட்டுப்புழுவாகி, பட்டாம்பூச்சி ஆவதற்குத் தேவைப்படும் காத்திருப்புக் காலம் பொன்னானது. முட்டையாக நசுங்காமல், பொறுமையின்றிப் புழுவாகவே நகராமல், அடர்ந்த இருட்டின் வெம்மையைச் சகித்துக்கொண்டு கூட்டினுள் காத்திருக்கும் புழுக்களுக்கு மட்டுமே வண்ணமயமான இறக்கைகளும், பறக்கும் சுதந்திரமும், தேன்குடிக்கும் உல்லாசமும் வாய்க்கப் பெறுகிறது.

காத்திருத்தல் இயற்கையின் நியதி. ஐந்தறிவுள்ள கொக்கே ஒடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கையில், நாகரிகம், பகுத்தறிவு என்ற பெயரால் உறவுகளையும் உணர்வுகளையும் புனிதப்படுத்தி வைத்திருக்கும் மனிதர்களுக்கு மட்டும் ஏனோ அந்தப் பொறுமை இருப்பதில்லை.

ஒரு உறவு மலரவும், அதன் உண்மைத் தன்மையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் கூட அவகாசம் தேவை. அவசரப்பட்டு நத்தவனத்து ஆண்டியைப்போல் தோண்டியை உடைப்பதில் அர்த்தமென்ன?

சிறு வயது முதலே நிகுநிகுப்பான அழகும், கலகலப்பான பேச்சும், மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே புன்னகையும் இனிமையுமாகப் பேசும் சுபாவமும் கொண்ட தேவசேனா, வீட்டின் கடைக்குட்டியாக வேறு இருந்ததில் செல்லமாக சலுகைகளுடன் வளர்க்கப்பட்ட பெண்.

பெற்றோர் மட்டுமல்லாது, பெரிதான வயது வித்தியாசம் இல்லையெனினும், அண்ணாவும் அக்காவும் கூட ‘தங்கப்பாப்பா’ என்று கொண்டாடி, அவளுக்காக நிறைய விட்டுக் கொடுத்துப் பழக்கப்பட்ட பெண்.

அண்ணா சூர்யாவும், அக்கா சாம்பவியும் கல்வி சார்ந்த விஷயங்களில் மட்டுமே முனைப்பாக இருக்க, நண்பர்களின் நடுவில் சிறப்பாகத் தெரியவும், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறவும், படிப்பு, பாட்டு, நடனம், ஓவியம் என ஏகப்பட்டவற்றின் அடிப்படையைக் கற்றிருந்தாள்.

தனக்குப் பிடித்த, ஸ்காலர்ஷிப்புடன் மெரிட்டில் கிடைத்த பெட்ரோகெமிகல் இன்ஜினீயரிங் படிப்பில் சேர கோவை செல்ல வேண்டி சாம்பவி வெகுவாகப் போராடியிருக்க, தேவசேனா அம்மையப்பனை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்ட யானைமுகனைப் போல் வெளியூர் போகாமல் வீட்டிலிருந்தே படிக்க ஒத்துக்கொண்டு, நல்ல பெயரை வாங்கிக் கொண்டாள்.

சாம்பவி ஊரில் இல்லாத நிலையில் திருமண ஏற்பாடுகளுக்கென மனோஜின் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தபோதெல்லாம், மனோஜ் அவளை ஈர்த்தான்.

வயதிற்குரிய பிடிவாதமும் சலுகையும் இருந்தாலும் எல்லோரது நல்லெண்ணத்தில் (good books) மட்டுமே இருக்க விரும்பிய தேவசேனாவிற்கு, சிறியவள் என்பதால் கிடைத்த பேச்சு சுதந்திரத்தில், தன்னைக் கிண்டல் செய்யும்,
சில மாதங்களில் மைத்துனியாகப் போகும் அழகான இளம் பெண்ணின் கலகலப்பும், மென்மையான கேலி, கிண்டலும் மனோஜையும் ஈர்த்தது. மொபைல் எண்ணைப் பகிர்ந்துகொண்டனர்.

மனோஜும் தற்கால இளைஞன்தான் எனினும், கல்லூரி மாணவியான தேவசேனாவின் ட்ரெண்ட் , இன் திங், வைப், வைரல் போன்ற வார்த்தைகள், அவள் அனுப்பிய மீம்கள், ரீல்ஸ், ஷார்ட்ஸ் என ரசித்தவன், அனுப்பியவளையும் ரசிக்கத் தொடக்கினான். இருவரும் சகஜமாகப் பேசினர்.

சகுந்தலா ‘மாப்பிள்ளை செம ஜாலி டைப். நம்ம தேவாவோட சரிக்கு சரி கலகலப்பா பேசுறாரு பாருங்க. சாம்பவி கூட கொஞ்சம் நிதானிச்சுதான் பேசுவா’ என்றதை மனோஜ் கேட்டிருந்தான்.

இந்த சந்திப்புகளிலும் சரி, அந்தச் சமயத்தில் போதுவாகவே வீட்டிலும் சரி, தேவசேனாவிற்குப் பிடிக்காத ஒன்று என்னவென்றால், நகை, புடவை, பாத்திரங்கள், முஹூர்த்த தேதி, பத்திரிக்கை, தாலி செய்யத் தருவது, கல்யாண ஏற்பாடுகள், என ஏதோ காரணம் கருதி, அவர்கள் பேசுவதெல்லாம், அங்கேயே இல்லாத அக்கா சாம்பவியைப் பற்றி என்பதுதான்.

நிச்சயம் முடிந்த சில நாட்களிலேயே மனோஜுடன் பழகியதில், அவனுக்கு நெருக்கமாக உணர்ந்த தேவசேனாவால், திருமணம் சாம்பவிக்குதான், அதுவும் மனோஜுடன் என்பதை ஏற்க முடியவில்லை. உடை, நகையைப் போல் மனோஜைக் கேட்க முடியாதென உணர்ந்தாள்.

அதேபோல், வார்த்தையை எண்ணிப் பேசும் நிச்சயம் செய்த சாம்பவியைவிட, கையெட்டும் தூரத்தில் இருந்த தேவசேனா மனோஜைக் கவர, அதிக முயற்சியின்றிக் காலம் தாழ்த்தாமல், தங்கள் காதல்(!) நெருப்பைப் பற்ற வைத்தனர்.

பிறகென்ன, தெரிந்தே செய்த தப்பை நியாயப்படுத்த, சால்ஜாப்புகள், சமாதானங்கள்.

இப்போது குழந்தை பிறந்து, ஐந்து மாதமாகி விட, தேவசேனா, புகுந்த வீட்டிற்குச் சென்றாள்.

******************

கடைக்குட்டியாக, செல்லம் கொஞ்சிக்கொண்டு, அம்மா, அக்கா, அண்ணி என மற்றவர்களின் கவனிப்பில் இருந்தவளை, இப்போது மனைவி, மருமகள், அம்மா என்று ஒரே சமயத்தில் கிடைத்த மூன்று பதவிகளும் மருட்டியது.

வீட்டு வேலைகளுக்கு உதவ ஆள் இருந்தாலும், சமையலை வீட்டுப் பெண்கள்தான் செய்தனர். மனோஜின் அண்ணி தங்களது துணிமணிகளைப் பராமரித்த நேர்த்தி தேவாவைப் பயமுறுத்தியது.

குழந்தையின் ஃபீடிங் பாட்டில், டீத்தர் என வெந்நீரில் ஸ்டெரிலைஸ் செய்யும் வேலையைக் கூட பிறந்தகத்தில் செய்திராத தேவசேனா, நல்லவேளையாக அம்மா சகுந்தலாவிடம் குழந்தையைக் குளிப்பாட்டக் கற்றுக்கொண்டு வந்திருந்தாள்.

சமையலில் உதவி, அறையை சுத்தம் செய்வது, துணிமணிகள், இரவில் அழும், விழித்திருக்கும் குழந்தை, மனைவிக்கான கடமைகளை எதிர்பார்த்த மனோஜ் என, தேவசேனா சட்டென்று மாறிய சூழலில் திணறினாள்.

தேவசேனாவிற்கு, அக்கா சாம்பவிக்கான வரனாக அவனைப் பார்த்தபொழுது அழகான மனோஜ், வசதியான குடும்பம் , சொகுசான வாழ்க்கை என்று மனதில் எழுந்த பிம்பம், இப்போது அதிகாரமாக, அழுகையாக, அடுப்படியாக மாறியதுபோல் தோற்றமளித்தது.

ஆனாலும், தனக்கான முக்கியத்துவத்தைத் தேடிய பழக்கமும், மற்றவர்களின் மதிப்பிலிருந்து இறங்காதிருக்கத் தன்னை வருத்திக்கொள்வதும், தியாகி போல் காட்டிக்கொள்வதும், அடுத்தவரின் கவன ஈர்ப்பைப் பெறுவதும், அதீதமாய் சிக்கிக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ‘பாதிக்கப்பட்ட தோற்றம்’ (victim card) காட்டுவதும்தான் தேவசேனாவின் இயல்பு.

அவளது இந்த சுபாவத்தாலேயே, மாமியார், ஓரகத்தி, அவ்வப்போது வந்துசென்ற நாத்தனார் என யார் எது சொன்னாலும், அவளால் அதிகமாக பதில் சொல்ல இயலவில்லை அல்லது அப்படி பதில் சொல்லித் தன்னை உறுதிமிக்க பெண்ணாகக் காட்டிக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.

அதோடு , அவள் பாட்டுக்குத் தன்னிச்சையாக எதிர்த்துப் பேசப்போய் ‘உன் அக்கா சாம்பவியாக இருந்தால், இப்படிப் பேசி இருக்க மாட்டாள்’ என்று ஒப்பிட்டு விட்டால்?

எதிர்த்து நிற்பதை விட, ஏங்கி அழுவதும், பரிதாபமான முகபாவனைகளும் ‘உன் பொருட்டு நான் கஷ்டப்படுகிறேன் பார்’ எனச் சொல்லாமல் சொல்வதும் அதிக பலனைத் தரும் என்பதை தேவசேனா அனுபவத்தில் உணர்ந்திருந்தாள்.

அவளையும் மீறி அவளால் தாங்க முடியாத நாட்களில், கணவனிடம் புலம்பத் தொடங்கினாள். அதுவும் ஒரு அளவில்தான். மனோஜ் அவளைத் தவறாக நினைத்துவிடக் கூடாதல்லவா?

தன் திருமணத்தில் தான் செய்த குளறுபடிகளின் விளைவுகளை வீட்டிலும் வியாபாரத்திலும் உணரத்தொடங்கி இருந்த மனோஜ் “என்னையும்தான் பேசறாங்க. தப்பு செஞ்சது நாம. கேட்டுக்காம ஓடவா முடியும்? கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்கிட்டா இதெல்லாம் செய்யாம என்ன செய்யறது, உன் வேலைதானே இதெல்லாம்” என்று ஒருதரம் சொல்லியே விட்டான்.

கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் எட்டு நாளில் இல்லாவிட்டாலும் எண்பது நாளிலாவது தெரியாமலா போகும்?

*******************

மனோஜ் தன் தந்தையும் அண்ணனும் வீட்டிற்குக் கிளம்பிச் சென்று நெடுநேரமான பிறகும் அலுவலகத்தில் தன் அறையில் அமர்ந்திருந்தான்.

எங்கோ நிலைத்த பார்வையுடன், பேப்பரைப் பார்க்காமல், பென்சிலால் கிறுக்கிக் கொண்டிருந்தவனை மொபைல் அழைத்தது.

தேவாதான் என ரிங்டோனிலிருந்தே தெரிந்தும், தானே அடித்து ஓயட்டும் என எடுக்காமல் விட்டுவிட்டுக் கண்களையும் முகத்தையும் அழுத்தித் தேய்த்துக் கொண்டான்.

மூன்று தலைமுறைகளாக அவர்கள் வைத்திருப்பது தரமான, விதவிதமான காட்டன் ஃபேப்ரிக்குகளை ஏற்றுமதி செய்யும் பிஸினஸ். சிறிய அளவில் தொடங்கப்பட்டு, இந்தியாவின் நகரங்களில் மட்டுமே பரவி இருந்த வியாபாரம், சமீபமாக சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, மொரீஷியஸ் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யுமளவுக்கு வளர்ந்திருந்தது.

அவனது அண்ணன் ஒரு டிகிரியோடு படிப்பை நிறுத்திக்கொண்டு, தந்தைக்கு உதவியாக வந்துவிட, தங்களது பிஸினஸுக்குத் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து, Bdes fashion design, எம்பிஏ முடித்து, விற்பனையை பெரிதும் விஸ்தரித்தது மனோஜ்தான்.

தங்கள் பொருட்களுக்கான தனித்துவம் மிக்க பயனீட்டாளர்கள், மெத்தை, ரஜாய் தயாரிக்கும் கம்பெனிகள், பெரிய பெரிய ஹோட்டல்களுக்கான திரைச்சீலைகள், சோஃபா கவர்கள், பெட் ஸ்ப்ரெட்டுகள் என, ஃபேப்ரிக்குகளுக்கான தேவை எங்கே, மார்க்கெட் எங்கே, யாரைப் பிடிக்க வேண்டும், என்று தேடிப் பிடித்து வியாபரம் செய்து, வாடிக்கையாளர்களைப் பிடிப்பதில் மனோஜ் எத்தன்.

அதேபோல் துணிவகைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் நிபுணன்.
மொத்த வியாபாரமாக, செய்வது போக, அண்ணாநகரில் ஒரு ஃபர்னிஷிங் மற்றும் ஃபேப்ரிக்குகளுக்கென பிரத்யேக ஷோரூம் ஒன்றைக் கட்டும் ஐடியாவைக் கொடுத்து, அந்த வேலை இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது.

எல்லாம் இருந்தும் இன்று தந்தை கூறிச் சென்றதிலேயே உழன்றது மனம்.

சாம்பவியுடன் நடந்த நிச்சயமும், அதன்பின்னே தேவசேனாவும் அவனும் விரும்பியதும், ஏதோ சாக்கில் அடிக்கடி சந்தித்ததும், விருப்பத்தைச் சொன்ன சில நாட்களிலேயே இருவரும் அவசரப்பட்டதோடு, அதைத் தொடர்ந்ததும்….

எப்படிப் பார்த்தாலும் நியாயம் இல்லைதான். அவன் தன் தவறை நியாயப்படுத்த விழையவில்லை. அவன் மனைவி தேவாவைப்போல், எதுவுமே நடவாததைப்போல், எல்லாமே சரியாகி விட்ட பாவனையில் இயல்பாக இருக்க, அவனது வீட்டினரும் விடவில்லை.

குறிப்பாக, திருமணமாகி ஏழு மாதம் முடிந்ததுமே குழந்தை பிறந்துவிட, மணப்பெண் மாறியதை சமாளித்ததுபோல், இப்போது முடியவில்லை.

“,அதுக்குள்ளயா, ப்ரீ மெச்சூர்டா?”

“குறைப்பிரசவம் மாதிரி தெரியலையே, குழந்தை கண்முத்தி முழு வளர்ச்சியோடதான் பொறந்திருக்கு”

மனோஜின் அம்மா “குறைப்பிரசவமெல்லாம் இல்லண்ணி”

“ஏன் ஜெயா, நம்ம மனோக்குக் கல்யாணம் முடிஞ்சே ஏழு மாசந்தானே ஆகுது, பின்ன எப்படி…?”

“அப்போ பொண்ணு மாறினதுல ஏதோ விவகாரமிருக்குன்னு சொல்லு”

இதுபோல் ஒருவர், இருவரல்ல. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள் ஒருவர் விடாது கேட்டிருந்தனர்.

தலைமுறைகளாக நடக்கும் தொழிலில், பல வருடங்களாக இணைந்திருக்கும் வாடிக்கையாளர்கள், நட்புகள் பலரும் மனோஜின்,தந்தையை, அண்ணனை, ஏன், சில நேரம் மனோஜையே கூட இதே கேள்வியைக் கேட்டிருந்தனர்.

இதனால் தொழிலுக்குப் பெரிய பாதிப்பில்லை எனினும், வதந்தியைத் தவிர்க்க வேண்டி சிறிது காலத்திற்கு அவனை அலுவலகத்தில் கணக்கு வழக்குகளை மட்டும் பார்க்கும்படி சொல்லி இருந்தார் தந்தை.

இன்று அண்ணாநகர் போய்வந்த மனோஜ் “அப்பா, அந்த ஷோ ரூம்ல , எக்ஸிபிட் ஷெல்ஃப்லாம் ஸ்டூடியோ டிஸைன்ல செய்ய…”

அப்பா அமைதியாக இருக்க, இன்று ஒரு படி மேலேயே சென்ற அண்ணன், முகத்தில் அடித்தாற்போல் “எதா இருந்தாலும், நாங்க பாத்துக்கறோம். நீ செஞ்ச வேலைக்கு நாங்க பதில் சொல்ல வேண்டியதா இருக்கு. என் மாமனார் வீட்ல கேக்கற கேள்விக்கு நாக்கைப் புடுங்கிக்கலாம் போல இருக்கு. கொஞ்சம் அடக்கியே வாசி. வீட்ல உன் பொண்டாட்டி கிட்டயும் கொஞ்சம் சொல்லி வை” என்றிருந்தான்.

வளைகாப்பு விழா நடக்கும் வரையில், மனோஜுக்குமே, வீட்டினரின் விலகலோ, சுற்றியிருப்பவர்களின் பார்வைகளோ அதிகம் கவனத்தில் இல்லை.

விழாவில் திருமணத்திற்கும், வளைகாப்புக்குமான கால இடைவெளி கேள்வியானதோடு, நிறைய ஏளனப் பார்வைகளையும் சந்திக்க நேர்ந்தது.

திருமணத்திற்குப் பிறகு, தேவசேனா பரீட்சை, கர்ப்பம், பிரசவம் என தாய் வீட்டில் இருக்கையில், மனோஜ் அடிக்கடி வந்து போனாலும், குழந்தை பிறந்த பிறகு இதுபோன்ற கேள்விகள் மனதை வருத்தவும் உறுத்தவும் செய்தது.

அவனது அம்மாவே “ஒழுங்கா நாம பாத்த பொண்ணைக் கட்டியிருந்தா மானம் மரியாதையோட இருந்திருக்கலாம். வேற பொண்ணா இருந்தாக்கூட பரவாயில்ல. அந்தப் பொண்ணோட தங்கச்சியையே… “

“இவன் பொண்டாட்டியைச் சொல்லு. எத்தனை அலட்சியமும் நெஞ்சுரப்பும் இருந்தா, படிக்கற வயசுல அக்காக்குப் நிச்சயம் செஞ்ச மாப்பிள்ளையோட பழகினதும் இல்லாம, தைரியமா இந்த வேலை பாத்திருப்பா”

“தப்பு செஞ்சவளுக்கு, சொந்த அக்கான்னு மனசு உறுத்த வேணாம்? கொஞ்சமும் யோசனையில்லாம அவளையே வேலை வாங்கறதும், ஏதோ இருவது முப்பது வருசம் கட்டுக் கழுத்தியா இருந்தவளாட்டமா பேசுறதும்…”

“அந்தப் பொண்ணைப் (சாம்பவி) போல ஒரு சோப்ளாங்கியை நான் பார்த்ததே இல்ல. கொஞ்சங்கூட ரோஷமில்லாம, தங்கை பிரசவத்துக்கு வேலை செய்யறா… பெத்தவங்களைச் சொல்லு, ஒரு வரனைப் பாத்து சட்டுபுட்டுனு கல்யாணத்தைப் பண்ணாம…”

நாத்தனார்கள், அண்ணிகள், ஓரகத்திகள், அக்கா, தங்கைகள், அக்கம்பக்கம், வியாபாரத் தொடர்புகள் என விரிந்த வட்டத்திலிருந்து வந்த விஷமமான, வம்பான, கேள்விகளின் தாக்கம் தந்த அவமான உணர்வை புலம்பித் தீர்த்தார்.

அதேநேரம் தன் மகனின் காரணமாக தனித்து நிற்கும் சாம்பவியை குற்றவுணர்வின் காரணமாகவோ, மகன், மருமகள், பேரனுக்கு, பாதிக்கப்பட்ட சாம்பவியின் சாபமோ திருஷ்டியோ வந்துவிடுமோ என்ற பதட்டத்திலோ, சில நேரம் சாம்பவியை நேரடியாகக் காயப்படுத்தவும் செய்தார்.

தன்னாலான உதவியாக, சாம்பவிக்கு இரண்டு, மூன்று வரன்களைச் சொன்ன மனோஜை, நொடிக்கும் குறைவான நேரம் அவள் பார்த்த பார்வை!

தேவசேனா குழந்தையுடன் வந்த பின், வீட்டின் தினசரி கடமைகளில் தன்னை பொருத்திக்கொள்ள திணறுவது புரிந்தாலும்,
ஒரு சராசரி ஆணாக, அவளது வயதை மறந்து, மனைவிக்கான பொறுப்பை எதிர்பார்த்தான்.

அவளது சோர்வும் புலம்பலும் எரிச்சலைத் தரினும், வீட்டினரின் எதிர்பார்ப்பையும், குற்றங்கடிதலையும் பொருட்படுத்தாது அதிகம் முகம் சுணங்காது வளைய வருபவளை நினைக்கையில் மனோஜுக்கு சற்று வியப்புதான்.

தந்தையும் அண்ணனும் தன்னை பின்னே ஒதுங்கி நிற்கச் சொன்ன வருத்தத்தில், தன் போக்கில் சிந்தனையில் மூழ்கி இருந்தவனை மீண்டும் அழைத்தாள் தேவசேனா.
 

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

அடேய் மனோஜ், தப்பு செய்யும் போது உறுத்தலை, இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? போடா போ, நீ இல்லையின்னா சாம்பவிக்கு வேற ஆளே கிடைக்காதுன்னு நினைச்சுட்டயா... எங்காளு பேரு கேட்டாலே சும்மா கிக்கா இருக்கும்ல..😁😁
 
Last edited:

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
118
சூப்பர் அம்மா 🩵🩵🩵🩵🩵🩵🩵என்ன செய்ய தவறு செய்யும் போது உறுத்தலை இப்போ நினைச்சு ஒன்னும் மாற போறதில்லை அனுபவிச்சு தான் ஆகணும், சாம்பவி இதுக்கு அவல் ஆகிட்டா 🥺🥺🥺🥺🥺
 

saki

New member
Joined
Nov 8, 2024
Messages
3
சிறுத்தை சிக்கிடுச்சா அல்லது சிறுத்தை யார் சிக்கினார்களா?
தேவா நீலசசாயம் வெளுக்கும் காலம் வந்துச்சா? டும் டும்கடைசியில்
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
😍😍😍

அடேய் மனோஜ், தப்பு செய்யும் போது உறுத்தலை, இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? போடா போ, நீ இல்லையின்னா சாம்பவிக்கு வேற ஆளே கிடைக்காதுன்னு நினைச்சுட்டயா... எங்காளு பேரு கேட்டாலே சும்மா கிக்கா இருக்கும்ல..😁😁
அதானே🙈😍
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
75
நல்லவேளை சாம்பவி தப்பிச்சா, செஞ்ச பாவம் சும்மா விடுமா, அனுபவிங்க
 
Top Bottom