• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விக்றோம் -2

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
193
அத்தியாயம் 2

சென்னையில் பிறந்து நகரத்தின் நாகரிகம் மட்டுமே ரத்தத்தில் ஊறி வளர்ந்த தனசேகரனும் தென்தமிழகத்தில் பிறந்து நாகரிகத்தின் அரிச்சுவடி மட்டுமே தெரிந்த நானும் கல்யாணம் என்ற பந்தத்தில் இணைந்ததே பெரிய கதை. நான் ஒரு கணினி பொறியாளர் என்பதும் பெயரெடுத்த ஒரு ஐடி நிறுவனத்தில் பல ஆயிரங்களில் நான் வாங்கிய சம்பளமுமே திருமணத்துக்கான முதல் தகுதியாக இருந்தது.

அதுவரையில் கல்யாணச் சந்தையில் இல்லாத புதுப் புது எதிர்பார்ப்புகளும் கண்டிஷன்களும் வர ஆரம்பித்த கணினி யுகத்தின் ஆரம்ப காலம் அது. ஜாதகப் பொருத்தம், குடும்பப் பின்னணி என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க, அமெரிக்க மாப்பிள்ளையும் வேலை பார்க்கும் பெண் தான் வேண்டும் என்பது போன்றவை முதல் தகுதியானது. அதற்காக, அழகு வேண்டாம், பெண் சமையலே செய்ய வேண்டாம், சீர் வரிசைகள் எதுவும் வேண்டாம் என்றெல்லாம் யாரும் சொல்லிவிடவில்லை. கேட்கும் முறையும் வார்த்தைகளும் தான் மாறிப் போயின.

ஃபிக்ஸட் டெபாசிட் போல பெண்ணுடன் வரும் நகையோ பணமோ இல்லாமல் ரெகரிங் டெபாசிட்டாக மாதம் பிறந்தால் கைகொடுக்க வரும் அவளின் சம்பளம், அதைத் தவிர வருட இறுதியில் பெரிய தொகையாக வரும் அவளது இன்சென்டிவ், இதையெல்லாம் விடவா சீர் செய்துவிடப்போகிறார்கள்.

மாப்பிள்ளை வீட்டார் திடீரென தாராளப் பிரபுக்களாக மாறி, "உங்க பொண்ணுக்கு செய்யறது உங்க விருப்பம். அதுல நாங்க என்ன சொல்றது?" என்று வெகுவாக விட்டுக் கொடுக்க ஆரம்பித்த காலம் அது. கூடவே, "இவ்வளவு படிச்சு வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கிற பொண்ணு வீட்டையும் நல்லாத்தானே பாத்துப்பா" என்று மறைமுகமாக வீட்டு வேலைகளையும் பெண்களின் தோளிலேயே இருக்கச் செய்த காலம் அது.

இது போன்ற பல பொருத்தங்கள் பக்காவாகப் பொருந்தி வந்ததில் நான் திருமதி.தனசேகரன் ஆனேன்.

கூட்டுக் குடும்பத்தில் ஆயிரம் கஷ்டங்களுக்கு இடையே வளர்ந்திருந்த எனக்கு, இது வரை அனுபவித்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல, வாழ்க்கை இன்னும் நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கக் காத்திருந்தது.

திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் பெரியவர்களின் (தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் எனது மாமனார் மாமியாரது இடைவிடாத நச்சரிப்பால்?!) உந்துதலில் இரண்டு கிரவுண்ட் மனையை வாங்கி விட்டோம். ஐடி துறையின் வருமானம் தந்த சேமிப்பு, பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று தந்தை வீட்டில் சீதனமாகக் கொடுத்த நகைகள் என்று பலவும் வீட்டு மனையாக மாறிவிட்டது.

அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்குள், "வீட்டைக் கட்டிப் பார்" என்ற பழமொழியின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்து கொண்டோம்.அன்றைய காலத்தில் வீடு கட்டுவதோ வாங்குவதோ அத்தனை எளிதான காரியமல்ல. கடனுதவி அளிப்பதற்கு ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டுமே. அவையும்
மனை வாங்குவதற்கெல்லாம்
எந்த உதவியும் செய்ததில்லை.

எப்படியோ தலையை அடகு வைக்காத குறையாக, நான்கு படுக்கை அறைகளுடன் கூடிய, பங்களா போன்ற ஒரு வீட்டைக் கட்டி விட்டோம். அதனால் எங்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிப் போனது. ஒவ்வொரு பைசாவையும் பார்த்துப் பார்த்து செலவு செய்த காலம். பத்தாம் தேதி வந்தால் இன்னும் இருபது நாட்கள் கழித்து தானே சம்பளம் வரும் என்று யோசிக்க வைத்தது.

அதுவரையில் எத்தனையோ வங்கிகள் பின்தொடர்ந்து பலவிதமான ஐடியாக்களும் ஆஃபரும் கொடுத்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்த திருவாளர்.தனசேகரனின் வாலட்டில்(wallet) கிரெடிட் கார்டு என்ற ஒரு வஸ்து குடியேறியது.

இந்த கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைக்க வைத்தது எங்களுக்கே எங்களுக்கு என்றிருந்த வீடு. வீட்டுக்குள் நுழையும் போதே ஒரு நிறைவு தோன்றும். பெருமைக்காகச் சொல்லப் படும் வார்த்தைகள் தான் என்றாலும், அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் எங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.

அன்றைய சென்னையின் புறநகராக இருந்த இடம் இன்றைய கிரேட்டர் சென்னை மாநகரின் மையப்பகுதியாக மாறிப் போக எங்களைச் சுற்றிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள். எங்கள் தனி வீடு தனித்துப் போனது. நாங்களும் தனியாகிப் போனோம். காலம் செல்லச் செல்ல வசதிகள் பெருகி எங்கள் வாழ்க்கை முறையும் மெல்ல மாறியது. கணவன் மனைவி இருவருமே எதிரெதிர் துருவமாக இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதில் ஒற்றுமையாக இருந்தோம். போட்டி போட்டுக்கொண்டு செலவழித்தோம்.

பெண்ணொன்றும் ஆணொன்றுமாக இரண்டு குழந்தைகள். இன்று வளர்ந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பழக்கி வைத்த உயர் மத்தியதர வாழ்க்கை முறையால் அவர்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. விளைவு எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை.

மருத்துவ இளங்கலை முடித்து நிற்கும் பெண்ணிற்குத் திருமணம் செய்ய வேண்டுமா இல்லை அவளது மேற்படிப்பைத் தொடர வேண்டுமா என்று முடிவெடுக்க முடியாமல் நாங்கள் திணறி நின்ற வேளையில் ஒரு நாள் அவளே எங்களிடம் வந்தாள்.

"மாம்! டாட்! எனக்கு யுஎஸ் அண்ட் ஆஸில பிஜி பண்ண சான்ஸ் கிடைச்சிருக்கு. எங்க போறதுன்னு நான் இன்னும் டிசைட் பண்ணல. ஃபர்ஸ்ட் இயருக்கு மட்டும் நீங்க ஹெல்ப் பண்ணுங்க. தென் ஐ வில் மேனேஜ் டு கெட் லோன் அன்ட் ஸ்காலர்ஷிப். (அப்புறம் நான் கடன் மற்றும் உதவித்தொகை வாங்க முயற்சி செய்வேன்) எப்படியும் ஒரு இயருக்கு ட்வென்டி தவுசன்ட் டாலர்ஸ் இனிஷியலா தேவைப்படும்" என்று போகிற போக்கில் சொல்லி விட்டுச் சென்றாள்.

பெற்றவர்கள் சிலையாகி நிற்க,
"ட்வென்டி தவுசன்ட் டாலர்ஸ்??? யுஎஸ்?? ஆர் ஆஸ்த்ரேலியன்??" இது அவளது ஆசைத் தம்பியின் சந்தேகம்.

"இரண்டுக்கும் என்னடா பெரிய வித்தியாசம்.." இது நான்.

"என்னம்மா இப்படி கேட்டுட்ட? யூஎஸ் டாலர்ஸ்ல பதினஞ்சு லட்சம் வரும். இதுவே ஆஸ்திரேலியா டாலர்ல பத்தோ பதினொன்னோ தான் வரும்." இது வீட்டுத் தலைவரின் கவலை.

"அம்மா! இப்பவே சொல்லிட்டேன். நான் என்யூஎஸ்ல தான் யூஜி பண்ணுவேன். அக்காவ யூஎஸ் அனுப்பிட்டு நீயும் பிஜிக்கு போ, யூஜி இங்கேயே படின்னு எனக்கு சமாதானம் சொல்லக் கூடாது" இது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் என் பையனின் சிங்கப்பூர் கனவு. அவன் பங்குக்கு ரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டு சென்று விட்டான், நாங்கள் சேமிப்புகளை ஆராயத் தொடங்கி இருந்தோம்.

பின்னே, பிள்ளைகளின் ஆசையைத் தலையை அடகு வைத்தாவது நிறைவேற்றுவது தானே பெற்றோரின் கடமை. இதோ இருவரையும் அவரவர் ஆசைப்படி அனுப்பி வைத்தாயிற்று. இருவருக்குமே ஊக்கத்தொகை கிடைத்தது என்றாலும் எதிர்பார்த்த அளவிற்குக் கிடைக்கவில்லை.

சேமிப்புகளைத் தாண்டி கிரெடிட் கார்டுகள், வங்கிக் கடன்கள் இவையெல்லாம் கை கால் எல்லாமே கொடுத்தன(?!) நமக்குத் தான் உலகின் மிகப்பெரிய தொழில் நுட்பக் கம்பெனியின் சம்பளக் கணக்கு உலகளாவிய வங்கி ஒன்றில் இருக்கிறதே. நமக்கே தெரியாத நம் வரவு செலவு நம் வங்கியாளர்களுக்கு மட்டும் இன்றி உலகின் எல்லா மூலையில் இருக்கும் வங்கிகளுக்கும் தெரியுமே. சுற்றமும் நட்பும் நம்மை விசாரிக்கிறதோ இல்லையோ இவர்கள் ஒரு நாளின் நொடிப் பொழுதேனும் நம்மை நலம் விசாரிக்காவிடில் நமது நாள் வீண் தானே.

இப்படியாக சராசரி நடுத்தர வர்க்கத்தினர் செய்வது போல் எங்கள் பணத்தேவைகளை நாங்கள் பெருக்கிக் கொண்டே போனதில் வட்டி குட்டி போட்டு ஒரு கட்டத்தில் எங்கள் முன்னே இருந்த ஒரே தீர்வு, எங்கள் பெரிய பங்களாவை விற்று விட்டு சிறிய அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் குடியேறுவது என்பது தான். அதன் மூலம் தான் கடன் தொல்லைகளில் இருந்து மீள முடியும் என்ற நிலை. வாடகை வீட்டிற்குச் செல்ல மனம் வரவில்லை.

"எப்படியும் பொண்ணு வேற வீட்டுக்குப் போகப் போறவ. பையன் எங்க செட்டில் ஆகப் போறானோ தெரியல. படிக்கிறேன்னு வெளிநாடு போன யாரும் திரும்பி இங்கே வந்ததா சரித்திரமே இல்லை. நம்ம இரண்டு பேருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு. வயசான காலத்துல ஃப்ளாட்ல இருக்கிறது தான் நல்லது." கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சமாதானம் செய்து கொண்டோம்.

இன்று புதிதாய் பிறந்தோம் என்று எங்களுக்கு புத்தி வந்த வேளை, உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்க ஆரம்பிக்க, உலகப் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கித் தனது பார்வையைத்
திருப்பவா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தது.
 
Top Bottom