• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உசுரே நீதானே - 2

Bandhini

New member
Joined
Mar 27, 2025
Messages
5
உசுரே நீதானே - 2

'அவ என்ன பாத்திருப்பாளோ? நேத்திக்கு அந்த பாலத்தடியில.. அதும் அவ்ளோ இருட்டில நிக்கறப்பவே அவளுக்கு டவுட்டு வந்து ஆட்டோலருந்து எறங்கி ஓடியாந்தா.. நல்ல வேளையா நா சட்டுன்னு ஔிஞ்சிகிட்டேன்.. இல்லன்னா நேத்தி நைட்டே அவளாண்ட மாட்டிருப்பேன்.. நா வேல வெட்டி எதுக்கும் போகாம இருக்கேன்னு ஏற்கனவே என் மேல செம்ம காண்டா இருக்கா.. நா கண்டி வேண்டாத வேல அல்லாம் செய்றேன்னு மட்டும் தெரிஞ்சிது.. அத்தோட நா காலி! மொதல்ல அவ என் களுத்தில கட்டுன இத்த அறுத்துப் போடணும்..' என்று மனதுக்குள் நினைத்தபடி தன் கழுத்திலிருந்த கருப்புக் கயிறைத் தொட்டுக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் மாணிக்கம்.

"மாணிக்கம்!" என்று யாரோ அழைப்பது போலத் தோன்ற, சுற்று முற்றும் பார்த்தான்.

தூரத்தில் அவனுடைய நண்பன் டேவிட் ஓடி வந்து கொண்டிருந்தான்.

"இன்னாடா? எதுக்கு இப்டி ஓடியாற?" என்று மாணிக்கம் கேட்க,

"நேத்தி உன் மச்சான் என் வூட்ல ஒருத்தன இட்டாந்து வுட்டாண்டா!" என்றான்.

"யாரு? பூபதியா?"

"அக்காங்!"

"யார இட்டாந்தான்?"

"தெர்லடா! ரோட்ல வுழுந்து கெடந்தானாம்.. அவன டாக்டர்ட்ட இட்னு போயி ஊசி போட்டு கூட்டியாந்து எங்கூட்ல வுட்டுட்டு என் தம்பியாண்ட சொல்ட்டு போனான்.. காலையில வந்து அவனுங்க ரெண்டு பேரும் அந்தாள இட்னு போயி பெரியாஸ்பத்ரில சேத்துட்டானுங்க.. அப்றமாதான் ரெண்டு பேரும் வேலைக்கு போயிருக்கானுங்க.." என்றான் டேவிட்.

"அவன் யாரு என்னன்னு ஏதாச்சு வெவரம் தெரிஞ்சிகிட்டியா?"

"ரொம்ப தெரிஞ்சிக்க முடீல.. ஆனா முக்கியமான விசியம் தெரிஞ்சிது.."

"என்னா?"

டேவிட் மாணிக்கத்தின் காதருகே வந்து,

"அவன் எசக்கியோட ஆளு!" என்று ரகசியமாகக் கூறினான்.

மாணிக்கத்தின் முகம் அதிர்ச்சியில் சிவந்தது.

"என்னாடா சொல்ற? எசக்கியோட ஆளா? ஒனக்கெப்டி தெரியும்?" கேட்டான் மாணிக்கம்.

"அவன் கையில எசக்கியோட ஆளுங்கல்லாம் குத்திக்கற மாரி பச்சை குத்திக்கினு ருந்தான்.." என்றான் டேவிட்.

"அவன் கைய அப்டியே பாத்தியா?" மாணிக்கம் கவலையுடன் கேட்டான்.

"நா பச்சைய பாத்தத அந்தாள் பாக்கல.. அந்தாள் மயக்கத்திலதான் கெடந்தான்.. நைட்டெல்லாம் பெனாத்திகிட்டே கெடந்தான்.." என்றான் டேவிட்.

"டேய்! அவன் உன்ன பாக்கலன்னா ஓகே! ஆனா ஒடம்பு சரியில்லாத மாரி நட்ச்சி ஏதாச்சும் நோட்டம் வுட்டுட்டு ருப்பானோ.." மாணிக்கம் மெல்லிய குரலில் கேட்டான்.

"அவன் நட்ச்சா நமக்கு இன்னாடா? நம்மள நோட்டம் வுடற மாரி நம்ம கிட்ட இன்னா கீது?" என்று அலட்சியமாகக் கேட்டான் டேவிட்.

மாணிக்கம் அவனை ஆழமாகப் பார்த்துவிட்டு,

"அக்காங்!" என்று கூறினான்.

"இதல்லாம் ஒரு பெரிய மேட்டர் இல்ல.. ஆனாலும் ஒனக்கு சொல்லணும்னு தோணிச்சு.. எதுக்கும் நீ அலாட்டா இரு.." என்றான் டேவிட்.

"சரிடா! தேங்க்ஸ்!" என்று கூறிவிட்டு மாணிக்கம் நகர, டேவிட்டும் தன் வழியே போனான்.

மாணிக்கத்தின் மனதில் கவலை பற்றிக் கொண்டது.

'இவ பாத்திருப்பாளான்னு நெனச்சா.. இப்ப எசக்கியோட ஆளு வேற என்ன ஃபாலோ பண்றானா? இன்னாடா இது ரோதனையா பூட்ச்சி.. சேட்டு கூட சேராத! சேட்டு கூட சேராதன்னு அவ பட்ச்சி பட்ச்சி சொன்னா.. எனுக்குதான் புத்தியில்லாம பூட்ச்சு.. ச்சே! இப்ப எசக்கி கையில மாட்டினா கத கந்தலா பூடுமே!' என்று நினைத்தபடி நடந்து கொண்டிருந்தவனின் சிந்தனை இரு சிறுவர்களின் அழுகுரலில் கலைந்தது.

பதினான்கு அல்லது பதினைந்து வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்களை ஒரு கும்பல் பிடித்து மிரட்டிக் கொண்டிருக்க, சிறுவர்கள் இருவரும் பயத்தில் அலறிக் கொண்டிருந்தார்கள்.

"ஏய்!" என்று பெரிதாய்க் குரல் கொடுத்தபடி அவர்களருகில் ஓடினான் மாணிக்கம்.

மாணிக்கத்தின் கர்ஜிக்கும் குரல் கேட்டு சற்றே மிரண்ட அந்த கும்பல், பின்னர் சுதாரித்தனர்.

"ஏய்! புள்ளீங்கள இன்னாடா பண்றீங்க?" என்று கேட்டு இரண்டு சிறுவர்களையும் அந்தக் கும்பலிடமிருந்து காக்க முயன்றான் மாணிக்கம். இரு சிறுவர்களும் கும்பலின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு மாணிக்கத்தின் பின்னால் வந்து மறைந்து கொண்டனர்.

கும்பலில் நடுவில் நின்றவன்,

"ஏய்! நீ மாணிக்கம்தானே?" என்று கேட்டுவிட்டு,

"மாணிக்கம்! இது வேற விசியம்! இதில நீ தலயிடாத.. உன் வேலயப் பாத்துகிட்டு போ!" என்று கடுமையான குரலில் எச்சரிக்கை விடுத்தான்.

அவனை அடையாளம் தெரிந்து கொண்ட மாணிக்கம்,

"புள்ளீங்க கிட்ட என்னடா வேற விசியம்? அதுவும் ஸ்கூல் போற புள்ளீங்க கிட்ட? என்ன? அவனுங்கள இப்பமே தப்பான வழியில கூட்டிட்டு போறியா? வேணாம் பூச்சி! புள்ளீங்கள வுட்ரு!" என்று கோபமாகச் சொன்னான் மாணிக்கம்.

"ஏய்! புரியாம பேசாத.. இவனுங்க இன்னா பண்ணாங்க தெரியுமா?" என்று கேட்டான் பூச்சி.

"அவனுங்க இன்னா பண்ணிருந்தாலும் நீ அவனுங்கள புட்ச்சி வச்சி இப்டி மெரட்டுறது ரைட்டா பூச்சி?" என்று கோபமாகக் கேட்டுவிட்டு, சிறுவர்களிடம் திரும்பி,

"டேய் பசங்களா! ரெண்டு பேரும் போங்கடா! வூட்டுக்கு போங்க!" என்றான் மாணிக்கம்.

"அண்ணா!" என்று தயங்கிய குரலில் சிறுவர்கள் இருவரும் கும்பலைப் பார்த்து நடுங்கினார்கள்.

"அவனுங்க உங்கள ஒன்யும் பண்ணாம அண்ணன் பாத்துக்கறேன்.. போங்க.." என்று கூறி அவர்களுக்கு தைரியம் கொடுத்தான் மாணிக்கம்.

"வோணா மாணிக்கம்.. உனுக்கு தேவயில்லாத விசியத்தில நீ தலயிடற.. வோணாம்.." என்று கூறிக் கொண்டே சிறுவர்களில் ஒருவனின் கையைப் பிடித்துத் தன் புறமாக இழுத்தான் பூச்சி.

"அண்ணா! வேணாம்ணா.. வுட்டுடுங்கண்ணா.." என்று சிறுவர்கள் இருவரும் அழத் தொடங்கினார்கள்.

"டேய்! உங்க ரெண்டு பேர்த்தையும் அப்டியே வுட மாட்டோம்டா.." என்ற பூச்சி ஒரு சிறுவனை அடிக்கக் கையோங்கினான்.

"டேய்!" என்று கத்திக் கொண்டே பூச்சியைத் தடுத்து அவன் கன்னத்தில் அறைந்தான் மாணிக்கம். அடி வாங்கிய பூச்சிக்கு பொறி கலங்கியது.

"சொல்லிக்கினே ருக்கேன்.. கேக்க மாட்ட?" என்று கோபமாகக் கேட்ட மாணிக்கத்தை ஆத்திரமாக முறைத்த பூச்சி தன் வலித்த கன்னத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.

"டேய்! அறிவிருக்கா ஒனக்கு? அவனுங்க ரெண்டு பேரும் கத்தி யெடுத்தாந்து ரவி வயித்தில சொருவ பாத்தானுங்கடா!" என்று கத்தினான்.

இதைக் கேட்டு அதிர்ந்த மாணிக்கம், கும்பலில் ஒருவனான ரவியை, அப்படியா என்பது போலப் பார்த்தான்.

"ஆமா மாணிக்கம். இவனுங்க ரெண்டு பேரும் அட்ரஸ் கேக்கறாப்ல வந்து கத்திய சொருவ வந்தானுங்க.. பூச்சிதான் டயத்துக்கு பாத்தான்.. இல்லாங்காட்டி இந் நேரம் இவனுங்க பெரிய சம்பவம் பண்ணிருப்பானுங்க.." என்று விளக்கினான்.

மாணிக்கம் இப்போது பூச்சியை விட்டுவிட்டு சிறுவர்களின் புறம் திரும்பினான்.

சிறுவர்கள் இருவரும் பயந்து நடுங்கி, அங்கிருந்து ஓடப் பார்த்தார்கள். ஆனால் பூச்சியின் ஆட்கள் அவர்கள் ஓடி விடாமல் சூழ்ந்து கொண்டார்கள்.

மாணிக்கம் சிறுவர்களின் அருகில் செல்ல, அவர்கள் மேலும் நடுங்கினார்கள்.

"பயப்படாதீங்க! நா ஒங்கள ஒண்யும் பண்ண மாட்டேன். சொல்லுங்க! எதுக்கு இப்டி பண்ணீங்க?" என்று மெதுவாக கேட்டான் மாணிக்கம்.

இருவரும் பயந்து நடுங்கினாலும் கும்பலில் நின்றிருந்த ரவியைப் பார்த்து முறைத்தார்கள்.

"பாரு! பாரு! இவனுங்க இப்ப கூட என்னிய எப்டி மொறக்கறாங்கன்னு?" என்றான் ரவி.

"யேய்! கேக்கறேன்ல.. எதுக்கு அவன் வயித்தில கத்திய சொருவ போனீங்க?" என்று சற்று மிரட்டலாகக் கேட்டான் மாணிக்கம்.

"வேற என்ன பண்றதாம்? இந்தாளாலதான் எங்கப்பன் இப்ப ஜெயில்ல இருக்காரு.. இந்தாளுதான் எங்கப்பனுக்கு ஊத்தி ஊத்தி குடுத்து கெடுத்தான்.. அதனால எங்கப்பா வேல வெட்டிக்கு போகாம வூட்லயே உயிந்து கெடந்தாரு.. வூட்டு செலவு மொத்தமும் எங்கம்மாதான் பாத்துச்சு.. அம்மாவ போட்டு அடிச்சி அடிச்சே அதுக்கு ஒடம்பு சரியில்லாம போயிடுச்சு.. அப்பயும் எங்கப்பா திருந்தல.. இந்தாள் திருந்த வுடல.. எங்கம்மா மருந்து வாங்க சேத்து வெச்ச காச புடிங்கிட்டு ஓடுனாரு.. அத தடுக்க போன அம்மாவ தள்ளிவுட்டாரு.. எங்கம்மா கீழ வுயிந்து தலையில அடி பட்டு செத்து போய்ட்டாங்க.. அம்மா சாவுக்கு அப்பாதான் காரணம்னு எங்கப்பாவ போலீஸ்காரங்க ஜெயில்ல போட்டுடாங்க.. இப்ப நாங்க ரெண்டு பேரும் அநாதையா நிக்கறோம்.. யாரால.. எல்லாம் இந்தாளால.. அதான்.. இந்தாள கொன்னுட்டா வேற யாரையும் இந்தாள் ஊத்தி குடுத்து கெடுக்க மாட்டான்ல.. எங்கப்பா மாரி வேற யாரும் குடிச்சி கெட்டு போவ மாட்டாங்கல்ல.. எங்கள மாரி யாரும் அநாதையாக மாட்டாங்கல்ல.. அதான்.." என்று கேட்டுக் கொண்டே ரவியைத் தங்கள் கைகளால் அடித்தார்கள். இப்போது ரவியும் அவர்களைத் தடுக்காமல் அமைதியாக நின்றான்.

மாணிக்கத்துக்கும் சரி, பூச்சி மற்றும் அவன் கும்பலுக்கும் சரி பேச்சே எழவில்லை.

சிறுவர்கள் இருவரும் ரவியை சில அடிகள் அடித்துவிட்டு விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்கள்.

"பாத்தீங்களாடா? பாத்தீங்களா? குடிக்காதீங்க! குடிக்காதீங்கன்னு எத்தினி தபா சொன்னாலும் கேட்டீங்களா? உங்களால இப்ப என்னாச்சுன்னு பாத்தீங்கல்ல.. ஒரு குடும்பமே கலஞ்சி போச்சி.. ரெண்டு பசங்க அநாதையாகிட்டாங்க.. பாருங்க!" என்று ஆதங்கத்துடன் சொன்னான் மாணிக்கம்.

கும்பல் மௌனமாயிருக்க,

"இன்னிக்கு அநாதையான இவனுங்க சோத்துக்கு வழியில்லாம தப்பான வழிக்கு போவானுங்க.. நாளைக்கு இவனுங்களும் உங்கள மாரியே ரௌடியா மாறிடுவானுங்க.. இதெல்லாம் தேவையா?" என்று அதிக வேதனையுடன் கேட்டான்.

பின்னர், சுதாரித்துக் கொண்ட மாணிக்கம், சிறுவர்களிடம் திரும்பி,

"சரி! சரி! இனிமே நீங்க அநாதையில்ல.. சரியா? நா ருக்கேன்.. இந்த அண்ணன் ருக்கேன்.." என்று கூறி அவர்களை சமாதானம் செய்தான்.

பூச்சியும் அவன் கும்பலும் கூட சிறுவர்களை பரிதாபத்துடன் பார்த்தார்கள்.

"அவன் மட்டுமில்ல.. நாங்களும் உங்களுக்கு அண்ணனுங்கதான்.." என்றான் பூச்சி.

"சாரிடா! உங்களுக்கு இப்டி ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கும்ன்னு தெரீல.. உங்க கஸ்டத்துக்கு நா இப்டி காரணம் ஆவேன்னு கனவுல கூட நனச்சி பாக்கலடா.. என்னிய மன்னிச்சிருங்கடா!" என்று சிறுவர்கள் முன் கண் கலங்கினான் ரவி.

சிறுவர்கள் இருவரும் அவனை முறைத்துவிட்டு விலகி நடக்கத் தொடங்கினார்கள்.

மாணிக்கம் அவர்கள் பின்னால் செல்ல, பூச்சியும் அவன் கூட்டாளிகளும் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

சிறுவர்களை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனான் மாணிக்கம்.

“யார்ரா இவனுங்க?” என்று அவனுடைய அம்மா சிவகாமி கேட்க, அவளுக்கு விவரம் சொன்னான் மாணிக்கம்.

“சர்தான்.. நீ இவனுங்களுக்கு அண்ணனா இருந்துக்க.. ஆனா என்னால இவனுங்க செலவ ஏத்துக்க முட்யாது.. இப்பமே சொல்ட்டேன்..” என்றாள் சிவகாமி.

“ம்மா! ஆத்திரத்த கெளப்பாத.. இவனுங்க செலவ நா பாத்துக்குவேன்..” என்றான் மாணிக்கம்.

“ம்க்கும்.. கிளிச்ச! ஒன் செலவையே நாந்தான் பாக்கறேன்.. இதுல இவனுங்க செலவ நீ பாத்துக்குவியோ?” என்று ஏளனமாகவும் கோபமாகவும் கேட்டாள் சிவகாமி.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும்,

“அண்ணா! எங்களுக்காக நீங்க சண்ட போடாதீங்க. நாங்க எங்கூட்டுக்கு போறோம். நாங்க இந்த வர்சம் பத்தாவது முட்ச்சிடுவோம்.. அப்றம் ஏதாச்சி வேலக்கி போயிக்குவோம்.. அது வரைக்கும் எங்க பக்கத்து வூட்டு பாய் வூட்ல இருந்துக்குவோம்..” என்று கூறிய ஒருவன் மற்றொருவனின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு மாணிக்கத்தின் வீட்டை விட்டு வெளியேற முயன்றான்.

அவன் கையைப் பிடித்து நிறுத்திய சிவகாமி,

“பாத்துக்கினியா? பாத்துக்கினியாடா? சின்ன புள்ளீங்களுக்கு ருக்கற புத்தி உனுக்கு க்கீதா டா?” என்று தன் மகனைப் பார்த்துக் கேட்டாள்.

மாணிக்கம் தன் அன்னையை முறைத்தான்.

அவனைக் கண்டு கொள்ளாத சிவகாமி,

“ஒங்க பேர் இன்னா? வூடு எங்க கிது?” என்று அந்த சிறுவர்களைப் பார்த்துக் கேட்டாள்.

“எம் பேரு குமரேசன். இவன் என் தம்பி கதிரேசன். எங்க வூடு..” என்று ஆரம்பித்து அருகில் இருக்கும் குப்பத்தின் பெயரைச் சொன்னான் ஒருவன்.

“குமரேசன், கதிரேசனா?” என்று கேட்டுவிட்டு சற்று யோசித்த சிவகாமி,

“ஒங்கம்மா பேரு மஞ்சுதானே?” என்று கேட்டாள்.

“எங்கம்மாவ ஒங்களுக்கு தெரியுமா?” என்று ஆர்வமும் அழுகையுமாகக் கேட்டான் மூத்தவனான குமரேசன்.

“தெரியுமாவா? நல்லா தெரியும். ஒங்க ரெண்டு பேரையும் எங்கல்லாம் தேடுனேன்.. நீங்க எங்கதான் போனீங்க?” என்று கேட்டாள் சிவகாமி.

“நீங்க எதுக்கு எங்கள தேடினீங்க? எங்கம்மாவ எப்டி ஒங்களுக்கு தெரியும்?” என்று கேட்டான் இளையவன் கதிரேசன்.

“ஒங்கம்மாவும் நானும் ஒரே கம்பேனியிலதான் வேல பண்ணினோம்.. ஒங்கம்மா சாவறதுக்கு முன்னால ஏங் கையில குட்த்து ஓங்கையில குடுக்க சொல்லி ஒரு பொருள குட்த்துட்டு போயிருக்கா.. இருங்க வரேன்..” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

சில நிமிடங்களில் வெளியில் வந்தவளின் கையில் ஒரு சிறிய பிளாஸ்ட்டிக் கவர் இருந்தது.

அதனைப் பிரித்து அதனுள் இருந்த பொருட்களை தரையில் கடை பரத்தினாள்.

ஒரு தங்கச் சங்கிலியும் இரண்டு தங்க வளையல்களும் ஒரு ஜோடி தங்கக் கம்மலும் ஒரு தங்க மூக்குத்தியும் அதில் இருந்தன. கூடவே ஐநூறு ரூபாய்த் தாள்கள் பத்தும் இருந்தன.

அதனை மீண்டும் கவரில் போட்டு பத்திரப்படுத்தி பெரியவன் குமரேசனிடம் ஒப்படைத்த சிவகாமி,

“இதெல்லாம் ஒங்கம்மாவோட நெகை.. ஒங்கப்பன் குடிக்கறதுக்கு புடிங்கிட்டு போயிடுவான்னு சொல்லி ஏங் கையில குட்த்து வச்சிருந்தா.. நா கண்டி இத்த வாங்கிருக்கலன்னா இந்நேரம் இதல்லாம் அடகுக் கடையில மூய்கி ருக்கும்.. இத்த மூட்டு வச்சிகினு பத்திரமா ஒங்களாண்ட ஒப்படைக்கணும்னு நா ஒங்கள தேடாத எடமில்ல.. அந்த மாரியாத்தாளே ஒங்கள எங்கூட்டுக்கு இட்டாந்துட்டா..” என்று நெகிழ்ச்சியுடன் கூறினாள்.

தன் அன்னை கூறியதைக் கேட்டு மாணிக்கம் குழம்ப, சிறுவர்கள் இருவரும் இன்பமாக அதிர்ந்தனர்.

“இன்னாமா சொல்ற? மஞ்சக்கா பசங்களா இவனுங்க?” என்று கேட்டான் மாணிக்கம்.

“ஆமாடா!” என்று கூறிவிட்டு சிறுவர்களிடம் திரும்பிய சிவகாமி,

“குமரேசு! கதிரேசு! ரெண்டு பேரும் இங்கியே வந்துருங்க.. ஒங்கள நா பத்திரமா பாத்துக்கறேன..” என்றாள்.

சிறுவர்கள் இருவரும் தயங்கினார்கள்.

“அத்தைக்கு ஒங்க நெகை எதும் வோணாண்டா.. எம்மவனுக்கு புத்தி வரணும்னு நா ஒங்களுக்கு செலவு பண்ண மாட்டேன் சொம்மா சொன்னேன்.. வாங்கடா..” என்று கண்ணீருடன் கூறிய சிவகாமி சிறுவர்களை அணைத்துக் கொண்டாள்.

சிறுவர்கள் இருவரும் நெகிழ்ந்தனர்.

“அத்த! நாங்க வேலக்கி போற வரைக்கும் இந்த நெகைல்லாம் ஒங்களாண்டையே இர்கட்டும்..” என்றான் பெரியவன் குமரேசன்.

“சரி!” என்ற சிவகாமி, தன் மகன் மாணிக்கத்தை சந்தேகத்துடன் பார்த்துவிட்டு,

“வோணாண்டா! இத்த இங்க வச்சிக்க முட்யாது.. இவ்ளோ நாள் இத்த பத்ரமா பாத்துக்கவே ரொம்ப கஸ்டமா பூட்ச்சி!” என்றாள்.

“யம்மா!” என்று மாணிக்கம் தன் அன்னையைப் பார்த்து கோபமாக முறைத்தான்.

“இல்லத்த! அண்ணன் இந்த நெகைய தொட மாட்டாரு.. அது எங்களுதுன்னு அண்ணனுக்கு தெர்யும்!” என்றான் கதிரேசன்.

“ஆமா!” என்றான் குமரேசன்.

“பாத்துக்க ம்மா! இப்ப வந்த புள்ளீங்களுக்கு என்னப் பத்தி புர்ஞ்சிருக்கு.. ஆனா ஒனக்கு தான் எம்மேல எப்பயும் சந்தேகம்..” என்று அங்கலாய்த்தான் மாணிக்கம்.

சிவகாமி மகனை முறைத்துவிட்டு, நகைகள் இருந்த கவரை எடுத்துக் கொண்டு உள்ளே எழுந்து போனாள்.



- தொடரும்....

 

Author: Bandhini
Article Title: உசுரே நீதானே - 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom