• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -6

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
180
பகலிரவு பல கனவு - 6


“அச்சோ! எவ்வளவு ரத்தம்? கை ரொம்ப வலிக்கும்ல?” என்று பதறினாள் சம்யுக்தா.

“அடியேய்! நீயெல்லாம் டாக்டராகப் போறேன்னு வெளிய சொல்லிடாத. துளியூண்டு ரத்தம் பாத்ததுக்கே இப்படிப் பதறுனா இன்னும் எவ்வளவோ இருக்கே, அதுக்கெல்லாம் மயக்கம் போட்டு விழுந்துடுவியோ?”

“சே‌ச்சே.. அப்படி கிடையாதுடி.. டாக்டர்னு வரும் போது தைரியம் எல்லாம் தானா வந்து சேர்ந்திடும். அதுவே நமக்கு நெருக்கமான ஆளுங்களுக்கு ஒன்னுன்னு வரும் போது.. கொஞ்சமாச்சும் பயம் வராதா.. ?”

“அதாவது.. இந்த வசூல் ராஜா படத்துல பிரகாஷ் ராஜ் சொல்லுவாரே.. என் பொண்ணுக்கு ஆபரேஷன் பண்ணும் போது என் கை நடுங்கலாம்னு… அப்படி.. உங்க ஆளு கையில ரத்தம் பார்த்த உடனே ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா போகுது..” என்று சரண்யா ராகத்துடன் இழுக்க,

“யெஸ்.. யெஸ்… அதே.. அதே…” என்று ஈயென்ற சிரிப்புடன் பதிலளித்தாள் சம்யுக்தா. பேசிக் கொண்டே கடையைப் சுற்றிலும் கண்களை ஓட்டினாள் அவள். வெளியே இருந்த கதவில் இருந்து ஜுஸ் குடிக்கும் டம்ளர் வரை எல்லாமே தரமான, விலை உயர்ந்த பொருட்கள்.

இந்தக் கடைக்கு வந்த முதல் நாளே தோழிகள் இருவரும் கடையைப் பற்றி வாய் வலிக்கப் பாராட்டி இருந்தனர்.

“இந்தக் கடை முதலாளி ரொம்ப ரசனையானவங்க போலத் தெரியுதுல்ல சம்யூ. ஆம்பியன்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு. எல்லாமே ரொம்ப காஸ்ட்லியான ஐட்டம்ஸா தெரியுதே. ஆனாலும் இந்த ஊருக்கு இது கொஞ்சம் ஓவரு தான்.”

“லண்டன், பாரிஸ்ல ஜுஸ் கடை வைக்க ஆசைப்பட்டிருப்பாங்க. அவங்க கெரகம் இந்த தேனில பொறந்து வெளியே போக வழிமில்லாம மாட்டிக்கிட்டாங்க போல. அதான், இந்த ஊரையே லண்டனா நினைச்சு வேலையைப் பாத்திருக்காங்க” என்றாள் சரண்யா.

“ஏய்.. இந்த ஊருக்கென்ன? லண்டன், பாரிஸ் எல்லாம் நம்ம ஊரு க்ளைமேட் கிட்ட பிச்சை எடுக்கணும் தெரியுமில்ல. இதைப் போல வருஷம் பூராவும் ப்ளஸென்ட் வெதர் எங்க இருக்கு சொல்லு?” என்று சண்டைக்குக் கிளம்பி விட்டாள் சம்யுக்தா.

“அம்மா! தாயே! அங்காள பரமேஸ்வரி! அடங்குடீ. உன்னை எப்போ தேனிக்கு பிராண்ட் அம்பாசிடரா அப்பாயிண்ட் பண்ணாங்க? நான் எப்போ நம்ம ஊரு நல்லா இல்லேன்னு சொன்னேன். நாம இந்த ஜுஸ் கடை வந்த வரலாற்றைத் தானே பேசிட்டு இருந்தோம்” என்று சரண்யா தான் ஜகா வாங்க வேண்டியதாயிற்று.

“அது.. சரி.. அப்படி வா வழிக்கு. இந்த கடையைப் பாரு. ஒவ்வொரு மில்லிமீட்டரா பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்காங்க. எல்லாமே பிராண்டட் ஐடம்ஸ். நிறைய இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருக்காங்க. இந்த ஜுஸ் டம்ளர் ஒவ்வொன்னும் xxx ரூபாய் இருக்கும். டேபிள் எல்லாம் பாரு, மார்வெலஸ்! க்வாலிட்டி பெல்ஜியம் க்ளாஸ் டாப், எவ்வளவு ஃபோர்ஸ் விழுந்தாலும் உடையாது” என்று சிலாகித்துக் கொண்டாள் சம்யுக்தா.

அப்படிப்பட்ட க்வாலிட்டி க்ளாஸ் டாப் டேபிளைத்தான் கராத்தே சாம்பியன் போல ஒரே அடியில் நொறுக்கி தூள் தூளாகியிருந்தான் பிரபாகரன். உடைந்த கண்ணாடி துண்டுகளைப் பார்த்தவளுக்கு, அவனுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்பதே இப்போது மனதில் கேள்வியாக எழுந்தது.

அவளது நினைவையே வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள் சரண்யா. “நீ ரொம்பத் தான் பாராட்டிப்‌ பேசினியே.‌ எத்தனை ஃபோர்ஸ் விழுந்தாலும் உடையாதுன்னு, அப்படிப்பட்ட டேபிளைத்தான் ஒரே ஒரு அடில தூள் தூளா ஆக்கி வச்சிருக்கான் ஒருத்தன். ஏன் சம்யூ மிஸ்டர்.கலர்ஃபுல் ஹேர், கராத்தேல ப்ளாக் பெல்ட் வாங்கி இருப்பானோ? ஒரு வேளை நமக்குத் தெரியாமல் ப்ளாக் பெல்ட் தாண்டி வேற ஏதாவது கலர் பெல்ட் இருக்கோ? ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு கோபம் ஆகாதுடா சாமி”

“. …”

“என்னடி எதுவும் வாயைத் திறந்து பேசு. இதே அடி அந்தப் பொண்ணு மூஞ்சில விழுந்திருந்தா, இந்நேரம் இவன் ஒன்.. டூ. த்ரீன்னு கம்பி எண்ணிட்டு இருந்திருக்கணும்.. அந்தப் பொண்ணுக்கு டைரக்டா சங்கு தான்.“

“அதைத் தான் நானும் யோசிக்கிறேன் சரண். இந்தக் கோபத்தை அப்படியே அந்தப் பொண்ணு மேல காட்டியிருந்தா அவ பொட்டுன்னு போயிருப்பா. அவகிட்ட மட்டும் இல்ல, அவ கூட வந்தவன் கிட்டயும் இவன் கோபத்தைக் காட்டலை.”

“ம்ம்… அதான் பார்த்தோமே.. வாயைத் திறந்து ஒரு வார்த்தை அவங்க கிட்ட பேசலையே.”

“மொத்த கோபத்தையும் காட்டி, தன் பொருளைத் தான் உடைச்சிருக்கான். ஆனால் அவ என்ன பேசி இவ்வளவு கோபத்தை வரவழைச்சிருப்பா? யார் அவ? பார்த்தா இரண்டு பேருமே டாக்டர் மாதிரி தெரியுது. மெனக்கெட்டு வந்து நல்லா டீஸ் பண்ணிட்டு போயிருக்காங்க. இவன் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருளை ஜஸ்ட் லைக் தட் போட்டு உடைச்சிட்டு ஜாலியா இருக்கான்”

“.....”

“இவன் டேபிளை உடைச்சதைப் பார்த்து அவங்க தான் பயந்து போய் ஓடிட்டாங்க. இப்போ யாரைக் கேட்டா இதைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்க முடியும்?” என்று அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டு போனாள் சம்யுக்தா. இதுவரையிலும் சம்யுக்தாவை ஒட்டியே பேசி வந்த சரண்யா, இப்போது தான் போதையில் இருந்து தெளிந்தவள் போல விழித்துக் கொண்டாள். தோழியை அங்கிருந்து கிளப்புவதில் குறியானாள்.

“இப்போ இதைத் தெரிஞ்சு என்ன செய்ய போற சம்யூ? வந்து ரொம்ப நேரம் ஆகுது, வீட்டுல தேடுவாங்க. நாம கிளம்பலாம் வா.”

“அதுக்கில்லடி, நிறைய ரத்தம் போயிருக்கா.. நல்லா காய்ச்சல் வேற வரும். வலது உள்ளங்கையில காயத்தோட இவன் நிச்சயமா இன்னும் பத்து நாளைக்காவது வண்டி ஓட்ட முடியாது. ஓட்டவும் கூடாது. இவன் புல்லட்ட ஹேண்டில் பண்ற மாதிரி இங்கே வேற யாரும் இருக்க மாதிரியும் தெரியலை. எனக்குத் தெரிஞ்சு, அவன் எழுந்து வந்து பிடிவாதமா நானே வண்டிய ஓட்டிட்டு போகப் போறேன்னு சொல்லப் போறான். அதான், வந்தவங்க யார் என்னன்னு விவரம் தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி அவனை டீல் பண்ணலாமேன்னு நினைச்சேன்” என்று சம்யுக்தா விம் போட்டு விளக்கியதில் சரண்யாவிற்கு ஹார்ட் அட்டாக் வராதது தான் குறை. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

‘அடியாத்தி! இவ போற‌ ரூட்டே சரியில்லையே!’ என்று மனதுக்குள் அலறியவள், “பிள்ளையாரப்பா! என்னைய மட்டும் காப்பாத்துப்பா?” என்று வாய் விட்டே புலம்பினாள்.

ஜுஸ் கடைக்குள் ஆட்கள் சேரத் தொடங்க கடைப் பணியாளர்கள் வேலையில் கவனமானார்கள். பிரபாகரன் உள்ளே இருந்து தண்ணீர் வேண்டும் என்று குரல் கொடுத்தான். தூக்கக் கலக்கத்தில் மிகவும் மெலிதாக ஒலித்த அந்தக் குரல் யாருக்கு கேட்டதோ இல்லையோ கேட்க வேண்டிய காதில் கரெக்டாகக் கேட்டது.

“அண்ணா! உள்ள தண்ணீ கேட்கிறாங்க பாருங்க” என்று வேலை செய்யும் முருகேசனை அழைத்தாள். அவனோ இவளை வினோதமாகப் பார்த்து விட்டு பழத்தை நறுக்க ஆரம்பித்தான். அவனை முடிந்த வரை முறைத்த சம்யுக்தா, தானே எழுந்து அங்கே இருந்த ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அறைக்குள் வேகமாக நுழைந்தாள். அவளது செயலைக் கண்ட சரண்யாவும் அவள் பின்னால் அவசரமாக நுழைந்தாள்.

“இந்தாங்க! தண்ணீ குடிங்க!” என்று நீட்டியவளை யார் நீ என்பது போல
விசித்திரமாகப் பார்த்து வைத்தான் பிரபாகரன்.

நீட்டிய கை நீட்டி எப்படி இருக்க பிரபாகரனின் கையை ஆராய்ச்சி செய்தாள் சம்யுக்தா. அவளுக்குப் பின்னால் நின்றபடி கையைப் பிசைந்து கொண்டு இருந்தாள் சரண்யா. அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு அவளைப் பார்த்த அடையாளம் தெரிந்தது. ஆனால் இப்போது அவளது நடவடிக்கைகளின் நோக்கம் தான் சரிவரப் புரியவில்லை.

நேரம் தான் சென்றதே ஒழிய சம்யுக்தா வின் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கும் எண்ணம் பிரபாகரனுக்குத் துளியும் இல்லை. நீட்டிய கையை அவளும் விடுவதாக இல்லை. இப்படியே இருந்தால் சரி வராது என்று தோன்றியதால் பிரபாகரனே பேச்சை ஆரம்பித்து வைத்தான்.

“யாரு நீ? கடைக்கு ஜுஸ் குடிக்க வந்தா அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டியது தான? இங்க என்ன செய்யற? உன்கிட்ட யாரு தண்ணி கேட்டது?” என்றவன், “முருகேசாஆஆஆ எங்க போய் தொலஞ்ச..?” என்று கத்தினான். சாத்தியிருந்த கதவுக்குப் பின்னால் முருகேசனுக்கு இவனது அலறல் காதில் விழுந்து அடித்துப் பிடித்து ஓடி வந்தான்.

“என்னாச்சுண்ணே?” என்றவன் சம்யுக்தாவையும் அவள் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலையும் மாறி மாறிப் பார்த்தான்.

“இவங்க தண்ணீ கேட்டாங்க அண்ணே. நான் உங்க கிட்ட சொன்னேன். நீங்க ரொம்ப பிஸியா இருந்தீர்களா அதான் நானே கொண்டு வந்தேன். ஹெல்ப் பண்ண நினைச்சதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகறாங்கன்னு எனக்குப் புரியவே இல்லை. நாட்டுல நல்லது பண்ண நினைக்கிறது ஒரு குத்தமா? டூ பேட்” என்றாள் கூலாக. அவளது பார்வை பிரபாகரனை விட்டு நகரவே இல்லை.

“அது சரி.. எனக்கு தண்ணி பாட்டில் கொண்டு வர்றதுக்கு இவங்க யாருன்னு தான் இங்கே கேள்வி” என்றான் பிரபாகரன். அவனுக்கு சம்யுக்தாவைப் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு இதம் பரவியதை மனம் உணர்ந்து தான் இருந்தது. அதே சமயத்தில் சங்கீதா வந்து பிரச்சினை செய்து போனதும், அதற்கு இவன் டேபிளை உடைத்ததும் அதை சம்யுக்தா பார்த்ததும் அந்த இதத்தை கொஞ்சம் குறைத்து விட்டிருந்தது.

சங்கீதா போல் பிறப்பால் வந்த சொந்தம் அல்ல. இவன் தேடிப் போன சொந்தமும் அல்ல. தானாகத் தேடி வரும் பந்தம். அதனாலேயே அதை மிகவும் ரசித்தான். அதே நேரத்தில் சம்யுக்தாவின் தோற்றம் அவனை சற்றே பின்வாங்க வைத்தது. பார்த்தாலே அவளது வசதி வாய்ப்பு தெரியும்படியான தோற்றம். அவளது பின்னணி பற்றி எல்லாம் பிரபாகரனுக்கு அக்கறை இல்லை தான், அதே நேரத்தில் அவள் பெரிய இடத்துப் பெண் என்பதால் இயல்பாகவே ஏற்பட்ட தயக்கம் அவளை நெருங்க விடாமல் செய்தது.

“ஓ.. நான் யாருன்னு சொன்னா தான் தண்ணி குடிப்பாங்களா.. கஷ்டப்படற யாருக்கும் யாரும் ஹெல்ப் பண்ணலாம். இவங்க தான் ஹெல்ப் பண்ணனும்னு ரூல்ஸ் எல்லாம் கிடையாது” என்று அவனைத் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னாள் சம்யுக்தா.

“நீங்க சொல்றது ரொம்ப சரி மேடம். நிறைய படிக்கிறீங்கல்ல. அதான் விவரமா பேசறீங்க. ஆனால், நீங்க பேசறதெல்லாம் சாதாரணமா ரோட்டுல இல்ல.. ஏதோ ஒரு பொதுவான இடத்தில நடக்குற ஒரு விஷயத்தில ஓகே. இப்படி ப்ரைவேட்டா ரூமுக்குள்ள வந்து ஹெல்ப் பண்றதுன்னா… யாருன்னு கேள்வி வரத் தானே செய்யும்” என்றபடி அவன் பார்த்த பார்வை சம்யுக்தாவின் இதயத்தைத் துளைத்தது.

அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் அவளது கைகள் தானாக கீழே இறங்க அதே நேரத்தில் தண்ணீர் பாட்டிலை வாங்க கை நீட்டினான் பிரபாகரன். மறந்து போய் வலது கையை நீட்டியவனை முடிந்தவரை முறைத்துக் கொண்டே தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவனிடம் நீட்டினாள்.

இதழோரம் ஒரு சிறிய சிரிப்புடன் தண்ணீர் குடித்தவனை இமைக்காமல் பார்த்து வைத்தாள். ‘இப்படி எல்லாம் பார்த்து வைக்காதடா’ என்றது அவள் மனது.

என்ன என்பது போல் அவன் புருவங்களை உயர்த்த வீரமான சம்யுக்தா விழித்துக் கொண்டாள். “இப்படிப் பார்வையாலயே கேள்வி கேட்டா நான் சம்யுக்தா, ப்ளஸ் டூ எழுதி இருக்கேன். நீட் எழுதப் போறேன். எங்க அம்மாவும் அண்ணாவும் கூட டாக்டர் தான். அப்பா, டிஸ்டிரிக்ட் ஃபாரஸ்ட் ஆஃபீஸர்னு எல்லாம் சொல்லுவேன்னு நினைச்சீங்களோ?” என்று கேட்டுக் கொண்டே குடும்ப வரலாறு மொத்தத்தையும் சொல்லி முடித்து விட்டாள்.

சரண்யா, அவளைக் கண்டு மானசீகமாக தலையில் கை வைத்து நிற்க வாய் விட்டுச் சிரித்த பிரபாகரன்,

“ஓ! நீ சம்யுக்தாவா? இப்போதைக்கு நான் சாதாரண பிரபாகரன் தா
ன்.. பிருத்விராஜன் ஆகறதுன்னு இந்த நிமிஷம் முடிவு பண்ணிட்டேன்” என்றான்.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom