அத்தியாயம் – 16
தயாராகி நேத்ராவும் பங்கஜம்மாளும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க, எட்டரை மணியளவில் ஆதிநந்தனும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான்.
வசீகரிக்கும் புன்னகையுடன் வந்தமர்ந்தவனைக் குறுகுறுவென்ற விழிகளுடன் ஏறிட்டு நோக்கினாள் நேத்ரா. நேற்றிரவு அவள் பாட்டி சொன்னது உண்மையா என அவரின் கேள்விக்கான விடையை அவள் இதயத்தை விட்டுவிட்டு அவன் விழிகளில் துழாவிக் கொண்டிருந்தாள்.
நேற்றிரவு அவள் பாட்டி அப்படி ஒரு கேள்வியைக் கேட்கையில் அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது. என்னவோ இத்தனை வருடங்களில் காதல், திருமணம் என்ற ரீதியில் எல்லாம் அவள் யோசித்ததேயில்லை.
இவ்வளவு ஏன்? அருண் தன்னை ஒருதலையாக விரும்புவதாகக் கேள்விப்படுகையில் கூட அவளுக்கு வியப்பு மேலோங்கியதே தவிர உள்ளுக்குள் எவ்வித குளுமையை அவள் உணரவில்லை.
ஆனால் நேற்றிரவு தன் பாட்டி அக்கேள்வியைக் கேட்கையில் நெஞ்சம் இலவம்பஞ்சாய் மாறி மேலழும்பிப் பறப்பதைப் போலிருந்தது. அந்த உணர்வு தந்த மயக்கத்தில் அப்போதிலிருந்தே ஒருவித உன்மத்தம் அவளுள் சூழ்ந்து கொண்டது.
மீண்டும்... மீண்டும்... மீண்டும் அதைப் பற்றி அசைபோடு என்ற முரசொலி தொடர்ந்து அவள் உள்ளத்தில் கொட்டிக் கொண்டிருந்தது.
‘இல்லை?’ என ஒரே வார்த்தையில் பாட்டியிடம் அவள் மறுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
“ஏன் கேட்கறீங்க பாட்டி?” எதிர் கேள்வியொன்றைத் தொடுத்தாள்.
“இல்லை, இதுவரைக்கும் யாரையும் ஃப்ரெண்ட்னு வீடு வரைக்கும் நம்பி கூட்டிட்டு வந்ததில்லையே” என்றவரின் கூற்றில் உண்மை எதிரொலித்தது.
பத்து வயதுக்குப் பிறகான பள்ளிப் பருவம் முழுவதும் வெவ்வேறு ஊர்களின் விடுதியில் கழிந்தது அவளுக்கு. கல்லூரிப் படிப்பை சென்னையில் படித்து முடித்தாள். மேலே குடியிருந்த துருவனின் தங்கையும் இவளும் ஒரே வயதினர். ஆகவே இருவரும் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தனர்.
அவளுக்குப் பள்ளியிலும், கல்லூரியிலும், பல நண்பர்கள் இருந்தாலும் துருவனின் தங்கை சந்தியாவைத் தவிர ஒருவரையும் அவள் வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை. அத்தோடு அவர்களின் இன்னொரு தோழி மித்ராவை அவள் வீட்டினர் எங்கும் செல்ல விட்டதில்லை.
அதனால் பங்கஜம்மாள் அப்படிச் சொல்லவும் நேத்ரா யோசனையில் ஆழ்ந்தாள். யாரையும் பார்த்ததும் முதல் பார்வையில் தவறாக எடை போடுபவள் அவள் அல்ல என்றாலும் யாரையும் எடுத்த எடுப்பிலேயே அத்தனை எளிதாக நம்பிவிடுபவளும் அல்ல.
இதுவரையில் ஒருவரையும் தன் அந்தரங்கத்தில் அத்தனை சுலபமாக நெருங்க விட்டதில்லை. ஆண்களில் அந்த நம்பிக்கையைப் பெற்றது துருவன் ஒருவனே. அதுவும் அவனைப் பால்ய வயதிலிருந்து அவளுக்குப் பழக்கம் என்பதால். பெண்களில் மித்ராவும், துருவனின் தங்கை சந்தியா மட்டுமே.
அவளின் முதல் சறுக்கல் அந்த சுனிலின் விஷயத்தில் நடந்துவிட்டது. அருணைக் கூடக் கடந்த இரண்டு வருடங்களாகத் தெரியும் என்றாலும் ஆறு மாதமாகத் தான் நட்பு பாராட்டியிருக்கிறாள்.
அதுவும் சுனிலும், அருணும் அவள் தொழிலை முன்வைத்தே பழகினர். அதனால் அவர்களை எட்ட நிறுத்தியே பழக முடிந்தது. அவளுக்கு அது ஒரு பொருட்டாகவும் படவில்லை. ஆனால் ஆதிநந்தனை எப்படி நம்பி உடனே தன் பாட்டி வீட்டுக்கு அழைத்து வந்தாள்? எப்படி அவளின் அந்தரங்கத்தில் நுழைய விட்டாள்?
யோசனையில் உழன்று கொண்டிருந்தவள், பாட்டி அவளைக் கூர்ந்து கவனிப்பதைக் கண்டு, “அப்படியெல்லாம் இல்லை பாட்டி. அதுவுமில்லாமல் ஆதியோட ரொம்பவும் பழக்கமெல்லாம் இல்லை. ஆனா, அவருக்கு அருணோட இருந்த நட்பு பத்தி எனக்குத் தெரியும். ஒருவேளை நண்பனை இழந்த பரிதாபமாகக் கூட இருக்கலாம்” என எதுவுமில்லாததைப் போல் தோள்களைக் குலுக்கிக் கொண்டவள்,
“வாங்க.. இப்போவே ரொம்ப நேரமாச்சு. போய்ப் படுங்க. மிச்சத்தைக் காலையில பேசிக்கலாம்” என அவரை அழைத்துக் கொண்டு அவரது அறைக்குச் சென்றாள். விரைந்து தன்னறைக்குச் செல்ல வேண்டும் என்ற வேகம் அவளிடத்தில் இருந்தது. பாட்டி சொன்னதைப் பற்றி இரவின் தனிமையில் அசைபோட வேண்டும்!
பாட்டிக்கு வேண்டிய மருந்து மாத்திரைகளை அக்கறையுடன் பிரித்துத் தந்தவள், அவரைப் படுக்கச் சொல்லிவிட்டு, அவள் எப்போதும் தங்கும் அறைக்குள் நுழைந்து தன்னைச் சுத்தம் செய்து கொண்டாள்.
அறைக்கு வரும்வரையில் பாட்டியின் கேள்வி தன்னைப் பாதிக்கவில்லை என்பதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாலும், ‘அவனைப் பிடிச்சிருக்கா?’ என்ற பாட்டியின் கேள்வியே செவியின் அறைகளில் அறைந்து கொண்டிருந்தது.
அவன் தன் மேல் அவ்வளவு ஆவேசப்படுகையில் கூட அவளுக்கு அவன் மேல் சற்றும் கோபம் வரவில்லையே. முதலில் ஏன் இப்படிக் கோபம் கொள்கிறான் என்று புரியவில்லை. பின்னர்க் கோபம் எதற்கு என்று தெரிய வருகையில் அவனுக்கு அருண் மேலிருந்த நட்பு மட்டுமே பிரதானமாகத் தெரிந்தது.
அதுவுமில்லாமல் என்று அவளை அலைபேசியில் அழைத்து ஆதிநந்தன் அவளிடம் மன்னிப்பை வேண்டினானோ அன்றே அவள் அவனது செயல்களையும் மறந்து போய்விட்டாள். அதற்காக அவன் நினைவுகள் அவள் ஞாபக அடுக்குகளில் இருந்து வெளிவரவில்லை என்றும் கூற இயலாது. அவ்வப்பொழுது, ‘உள்ளேன் மேடம்’ என எட்டிப் பார்த்தான்.
ஆனால் சந்தித்த பின்னர் நடந்த நிகழ்வுகள் எதுவும் உவப்பானதாக இல்லாததால் ஆதிநந்தனைப் பற்றி அதற்குமேல் அவள் எதுவும் ஆராயவில்லை. அன்று அருணின் இறுதிச் சடங்கில் அவன் குடும்பத்தாருக்கு உறுதுணையாக இருக்கையில் அவன் மிகவும் பொறுப்பானவன் என்று எண்ண வைத்தான்.
அத்தோடு அன்று கப்பலில் யாரோ ஒருவர் அவனை மாப்பிள்ளை என்றழைத்ததும், அவனுடன் ஒரு பெண் ஜோடி போட்டுக் கொண்டு அமர்ந்திருந்ததையும் கண் கூடாகக் கண்டாளே. அதனால் இதுவரையில் அவனை வேறு விதமாக எண்ணும் சிந்தனை அவள் மனதின் எந்த மூலை முடுக்கிலும் பயணிக்கவில்லை.
ஆனால் இன்று மதியத்தில் இருந்து அவனுடன் ஒன்றாகப் பயணம் செய்ததில் அவனின் மறுபக்கத்தை, அவனின் நல்ல பக்கத்தை அவளால் அறிந்து கொள்ள முடிந்தது.
அதுவும் அவன் அன்னையிடம் பேசுகையில், ‘உனக்குப் பொண்ணு பார்த்துக் கல்யாணம் பேசி முடிக்கலாம் என இருந்தோம்’ என அவர் அலைபேசியில் அவனிடம் சொல்கையில், இரண்டு மூன்று அடிகள் தள்ளி அமர்ந்திருந்த தனக்கே அது கேட்டது என்றால் அவனுக்குக் கண்டிப்பாகக் கேட்டிருக்கும்.
இருந்தும் அவன் கேட்கவில்லை என்று சப்பைக் கட்டு கட்டுவதிலேயே அவனுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று புரிந்து போனது. அப்போது கூட அவள் எதையும் தீவிரமாக யோசிக்கவில்லை.
ஆனால் அவள் பாட்டியின் கேள்வி வண்டாகக் குடைய ஆரம்பிக்க, ‘ஒருவேளை அவனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறதோ?’ என்ற கேள்வி எழ அவளுக்கு மூச்சுத் திணறியது.
ஏசியின் குளிரிலும் வேர்க்க ஆரம்பித்தது. அவளுக்கு எதற்கும் விடை தெரியவில்லை. அதைப் பற்றி யோசித்தவாறே உறங்கியும் போனாள். மறுநாள் மாலைக்குள் அவளுக்கு விடை தெரிந்து விடப் போகிறது என்பதை அவள் அப்போது அறியவில்லை.
“நல்லா தூங்கினீங்களா?” சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தவர்களின் பேச்சுச் சத்தத்தில் தன் எண்ணங்களில் இருந்து வெளிவந்தாள் நேத்ரா.
பங்கஜம்மாள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ஆதிநந்தன், மேஜையின் மேல் பரப்பி வைத்திருந்த பதார்த்தங்களைப் பார்த்து, “இவ்வளவா?” என வாயடைத்துப் போனான்.
“அது, நேத்ரா வந்திருக்கான்னு எப்பவும் செய்யறது” என பங்கஜம்மாள் சொல்லிக் கொண்டிருக்க, “பாட்டி, அப்போ நான் இதெல்லாம் சாப்பிடறதுக்குத் தான் அங்கிருந்து கிளம்பி வந்த மாதிரி இருக்கு நீங்க கொடுக்கிற பில்ட் அப்பை பார்த்தா” எனச் சிரித்த நேத்ரா,
ஆதிநந்தனை நோக்கி, “பாட்டி வீட்டில காலையில எப்பவும் நிறையச் செய்வாங்க. தாமு அண்ணாவோட குடும்பம், தோட்டக்கார மாமாவோட குடும்பம் என எல்லோருக்கும் இங்கே தான் சாப்பாடு. நான் சின்ன வயசுல இங்க வர்றப்போவே இதைப் பார்த்திருக்கிறேன். இப்பவும் அதைக் கடைப்பிடிக்கிறாங்க" என்றாள்.
‘அப்படியென்றால் இவள் இங்கே வளரவில்லையா?’ என்ற கேள்வி அவன் தொண்டையில் தொக்கி, விக்கி நின்றது. அவளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டான். ஆனால் கேட்டால் அதிகப்பிரசங்கி என்று எடுத்துக் கொள்வார்களோ எனக் கருதி அமைதி காத்தான். தானாகவே வெளி வரட்டும்.
“ஆமா, கண்மணி லீவுல வர்றப்போ வீடே ஜே ஜேன்னு இருக்கும். துருவனும் சந்தியாவும் கூட அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்காம இங்க சாப்பிட வந்திடுவாங்க” என அவர் கண்களில் இருந்த ஏக்கத்தை ஆதிநந்தனால் உணர முடிந்தது. எதனால் இவர் இப்படி ஏங்குகிறார்?
இன்னொன்றையும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. பங்கஜம்மாள் பேசிய பேச்சுக்களில் தொண்ணூறு சதவிகிதம் துருவனிடம் வந்து முடிந்தது. அவன் மேலிருந்த பொறாமையும் கூடிப் போனது அவனுக்கு.
‘டேய்... சின்னப் பையன் மாதிரி இது என்ன யோசனை?’ என அவன் மனம் அவனிடம் காறி உமிழ்ந்தாலும் அவனால் அந்த எண்ணத்தை முற்றிலும் அழிக்க முடியவில்லை.
இவர்களுடன், முக்கியமாக நேத்ராவுடன் அந்த துருவனைப் போல் சிறு வயது பால்யத்தைக் கழிக்கத் தனக்குக் கொடுத்து வைத்திருந்தால் என யோசிக்க ஆரம்பிக்கையிலே, ‘உனக்கும் துருவனைப் போல் அண்ணா என்ற பட்டம் கிட்டியிருக்கும்’ என்ற உண்மை முகத்தில் படாரென்று அறைந்தது.
‘வேண்டாம்.. வேண்டாம்... பால்யம் வேண்டாம். இனி வரும் காலம் போதும்’ எனப் பொறாமையுணர்வை உடனே பரபரவென்று அழித்துவிட்டான் ஆதிநந்தன்.
“ஆனா ஒண்ணு, வீட்டுக்கு வந்தவங்களை எல்லாம் வேலை வாங்கறது எங்க பழக்கமில்லை. அதனால தட்டை அப்படியே வச்சுட்டுப் போறதா இருந்தா மட்டும் சொல்லுங்க சாப்பாடு போடறோம்” என பங்கஜம்மாள் சிரிக்காமல் மிரட்ட,
“கவலைப்படாதீங்க, அடுத்தவேளை சாப்பாடு கண்டிப்பாகக் கிடைக்கும்” என நேத்ரா முடித்தாள்.
“சாப்பாடு தரேன்னு கண்டிஷனா சொல்லிட்டீங்க இல்லை. அப்புறம் என்ன?” என அவனே தன் தட்டில் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தான்.
“நேத்ரா சொன்னா உங்க ஃப்ரெண்ட் அருண் பத்தி. அவர் வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?” என பங்கஜம்மாள் அருணின் இறப்பைப் பற்றி விசாரிக்க,
“எனக்கே அவனோட இழப்பு தாங்க முடியாததா இருக்கு பாட்டி. அதுவும் நைட் நேரம் வந்துட்டா ஒரு மாதிரி கலக்கமா இருக்கும். காலம் தான் பாட்டி இதற்குப் பதில் சொல்லணும். இன்னும் அமெரிக்கால இருந்து அருணோட அப்பா-அம்மா வரலை” எனச் சற்றுநேரம் அமைதியாக இருந்தான் ஆதிநந்தன்.
மீண்டும் அருணின் நினைவுகள் அவனை அலைக்கழிக்கின்றது என்று நேத்ராவுக்குப் புரிந்தது.
பின்னர் அவனே தொடர்ந்து, “ஆராதனாவோட அப்பா அவரோட சொத்துக்களை எல்லாம் டிரஸ்ட்டுக்கு மாத்தி தானம் தர்மம் எனச் செஞ்சுட்டு இருக்கார்” எனத் தகவல் தந்தான்.
மகளின் செய்கையால் மனம் ஒடிந்து போயிருக்கும் அவரை இரண்டு முறை போய்ச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறான் ஆதிநந்தன் என அவன் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டாள். வயதானவர், வருத்தப்படுகிறார் என்ற எண்ணத்தில் அவன் சென்றிருக்கிறான் என அவன் சொல்லாமல் விட்டதும் அவளுக்குப் புரிந்தது.
‘நல்லவன் தான் போல’ என மனதுக்குள் மெச்சிக் கொண்டாள் நேத்ரா.
அப்படியே பொதுவான விஷயங்களைப் பேசியவாறே அனைவரும் சாப்பிட்டு முடிக்கையில், ஆதிநந்தனின் கைப்பேசி இசைத்தது.
மெள்ள எழுந்தவாறே, “நான் வெளில வெயிட் பண்ணறேன் நேத்ரா. நீங்க முடிச்சுட்டு வாங்க?” என ஆதிநந்தன் அலைபேசியைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.
“எங்க போறீங்க?” பாட்டி அவளைக் கேள்வியாக நோக்கவும் அவரிடம் அதைப் பற்றிச் சொல்லவேயில்லை என்பது உறைத்தது.
“ஆதி ஊரைச் சுத்திப் பார்க்கணும்னு சொன்னார். நானும் கூடப் போயிட்டு வரேன்...” எனத் தட்டை எடுத்து வைக்கும் சாக்கில் கீழே பார்த்தவாறே சொல்ல, “அப்போ சாயந்திரம் ஆகிடும் வீட்டுக்கு வர. சரி நிதானமாச் சுத்திப் பார்த்துட்டு வாங்க” என பங்கஜம்மாள் அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளுக்கு அவன் மேல் விருப்பமிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விழைவார் என்று எதிர்பார்த்து பயந்தாள்.
அதற்கு என்ன பதில் சொல்வது எனத் திணற வேண்டும் என அவள் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருக்கையில் அவளுக்கு எவ்வித சங்கடத்தையும் அளிக்காமல் பட்டென்று பேச்சை முடித்துக் கொள்ள அவளின் இருதயத் துடிப்பும் சீரானது. அப்படித் தான் நினைத்தாள். ஆனால் அவனருகில் அது சற்றும் குறைவதாகத் தெரியவில்லை.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நேத்ரா கிளம்பி வெளியில் செல்ல, “என்ன ஆனாலும் சரி, இதை நம்ம செஞ்சே ஆகணும். அவங்களை விடக்கூடாது. எவ்வளவு நாள் இதற்காகக் காத்திட்டு இருந்தோம்” என ஆதிநந்தன் அலைபேசியில் கோபமாகப் பேசிக் கொண்டிருப்பதை அவள் கேட்க நேர்ந்தது.
“சரியான கோபக்கார முசுடு” என முணுமுணுத்துச் சிரித்துக் கொண்டாள். அவள் வருவதை உணர்ந்ததும் அவனும் அழைப்பை முடித்துவிட்டு அவளை நோக்கி வந்தான்.
அப்போது, “ஹே.. அக்கா வந்தாச்சு” என எதிர்வீட்டில் இருந்து இரண்டு சிறுவர்கள் நேத்ராவை நோக்கி ஓடி வந்தனர்.
“வாங்கடா வாலுங்களா...” என அவர்களை வரவேற்றவள், “ஸ்கூல் இல்லையா இன்னைக்கு?” எனத் தொடர்ந்து கேட்க, இரண்டு பேரும் கெக்க பிக்கவெனச் சிரித்தனர்.
“ஞாயிற்றுக் கிழமை எங்க ஸ்கூல்ல எல்லாம் லீவு விட்டுடுவாங்க” எனச் சொல்லி மீண்டும் சிரிக்க, அப்போது தான் அன்று ஞாயிற்றுகிழமை என்பதே அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
“போங்கடா... நானெல்லாம் ஞாயிற்றுக் கிழமையும் ஸ்கூலுக்குப் போகணும்னு அடம்பிடிச்சு போன ஆளு தெரியுமா?” எனக் கெத்தாகச் சொல்லிவிட்டு,
“சரி சாயந்திரம் வரேன்.. கிரிக்கெட் விளையாடலாம். இப்போ நேரமாகுது” என அவள் காரில் ஏறிக் கொள்ளப் போக, “இவர் தான் நீங்க கட்டிக்கப் போற மாமாவா?” எனக் கேட்டு அவளைத் திகைக்க வைத்தது ஒரு வாண்டு.
மின்சாரம் பாய்ந்ததைப் போல் கால்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டன அவளுக்கு. நெஞ்சம் படபடக்க ஆதிநந்தனை விழியுர்த்திப் பார்க்க, அவனோ அதை இயல்பாக எடுத்துக் கொண்டு, “ஏன்டா, நீங்க வந்து எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களா?” எனக் குறுஞ்சிரிப்புடன் கேட்டான்.
“இருடா.. அம்மாகிட்ட சொல்லறேன்” என மற்றொரு வாண்டு கிசுகிசுப்பது இருவரின் காதுகளில் விழ, கேள்வி கேட்டவனோ, “இல்லடா... அவரை எப்படிக் கூப்பிடறதுன்னு தெரியலை. அதான் கேட்டேன்” என்றான்.
“நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். ஆனா, நீ என்னை மாமான்னு கூப்பிடு” என அவனுக்குப் பதிலளித்துவிட்டு காரினுள் விசிலடித்தவாறே ஏறினான் ஆதிநந்தன்.
அவனையே இமைக்காது நோக்கியவளிடம், “என்னாச்சு நேத்ரா? அப்படியே எவ்வளவு நேரம் நின்னுட்டு இருக்கப் போறீங்க?” என வினவ, சுரணைப் பெற்று காரினுள் ஏறினாள். எதுவும் சொல்லாமல் காரைக் கிளப்பிச் சாலையில் கலந்தாள்.
‘என்னை மாமான்னு கூப்பிடு’ என்ற வார்த்தைகளே அவள் செவியறைகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருக்க, ‘என்ன அர்த்தத்தில் சொன்னான்?’ என அவளுக்குள் குறுகுறுவென்று இருந்தது. இதயத் துடிப்பு மெள்ள ஏற ஆரம்பித்தது.
“முதல்ல எங்க போறோம்?” என்ற ஆதிநந்தனின் குரலில், “என்ன?” என மலங்க மலங்க விழித்தவளுக்கு மெள்ள அவர்கள் வெளியில் ஊர் சுற்றக் கிளம்பியதே நினைவுக்கு வந்தது.
“ஆர் யூ ஓகே?” என அவள் முகத்தை ஆராய்ச்சியுடன் நோக்க, அவளைக் கண்டுகொள்வானோ என்ற பதட்டம் அவளைச் சூழ்ந்து கொண்டது.
அதை மறைக்கவென்று, “உங்களுக்கு எவ்வளவு நாள் இங்க இருக்கிறதா பிளான்?” எனப் பட்டென்று நேத்ரா வினவ, “எப்போடா கிளம்புவன்னு கேட்கறீங்க?” என இளநகையுடன் அவளைக் கிண்டலாகப் பார்த்தான்.
“எவ்வளவு நாள் இருக்கப் போறீங்கன்னு தெரிஞ்சா பிளான் பண்ணி கூட்டிட்டுப் போக வசதியா இருக்கும்னு கேட்டேன்” என அவனைப் பார்த்து முறைத்துவிட்டுச் சாலையில் மீண்டும் கண் பதித்தாள்.
“நீங்க எப்போ கிளம்பறதா இருக்கீங்க? எனக்கு அடுத்த வியாழக்கிழமை வேலைக்குப் போனா போதும். அதுவுமில்லாமல் இங்க வேற வேலை முடிக்க வேண்டி இருக்கு. என்னோட சீனியர் ஆபிசர் இப்போது தான் சொன்னார். அதனால் வேலை பார்த்த மாதிரியும் ஆச்சு. சுத்திப் பார்த்த மாதிரியும் ஆச்சு” என விளக்கினான்.
“அப்போ சரி, இன்னையோட சேர்த்து நாலு நாள் இருக்கு. முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் சுத்திப் பார்த்துடலாம்” என்றவள், “ஆமா... உங்களுக்கும் துருவன் அண்ணாவுக்கும் என்ன பிரச்சனை? நீங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சீங்கன்னு சொன்னார்” என அவள் கேட்க,
“ஏன், துருவ்கிட்ட கேட்கலையா? அவன் சொல்லியிருப்பானே” என்ற ஆதிநந்தனின் பதிலில், “கேட்டேன். ‘ஏன்னு தெரியலை. ஆரம்பத்துல இருந்தே ரெண்டு பேரும் படிப்புல, ஸ்போர்ட்ஸ்ல முட்டிக்குவோம்’ என முடிச்சுட்டார்” எனப் பளீரென்று சிரித்தாள்.
அவளது புன்னகையை இரசித்தவாறே, “வேறென்ன... பொறாமை.. ஈகோ.. அவ்வளவு தான்” எனச் சாதாரணமாகச் சொல்லி அவளைத் திகைக்க வைத்தான்.
ஆதிநந்தனும் துருவனும் இளங்கலையில் ஒரே பிரிவு என்றாலும் அனைத்திலும் போட்டி போடுவது என்பது அவர்களையும் அறியாமல் உருவாகிவிட்டது. அதுவும் உடனிருக்கும் நண்பர்களின் தூண்டுதலில், ‘நான் பெரிது, நீ பெரிது’ என்ற ஆணவமும் ஆதிநந்தனிடம் சேர்ந்து கொண்டது.
“ஒருவேளை நான் ஒழுங்காப் பேசியிருந்தா துருவ் நல்லா பேசியிருப்பானோ என்னவோ? அப்படியே போட்டி, பொறாமைன்னு போயிடுச்சு. அதை விடக் கொடுமை அவன் என்னை விட நல்லா படிச்சு ஐ.பி.எஸ் ஆகிட்டான். எனக்கு ரேங்க் கம்மி, அதனால் வருமான வரித் துறை தான் கிடைச்சது. அது இன்னுமே அவன் மேலே கோபத்தை வரவழைச்சது. அதுவும்...” எனச் சொல்லிவிட்டு சற்று நிறுத்தவும்,
அந்தப் பேச்சு எங்கே செல்கிறது எனப் புரிந்து போனது அவளுக்கு. சற்று மூச்சுத் திணற ஆரம்பிக்க, “சாரி... மித்ராவை ரொம்ப விரும்பினீங்களா?”எனக் கேட்டு அவனை அதிர்ச்சியடைய வைத்தாள்.
இதழ் பிரித்து ஏதோ சொல்ல வாய் திறந்தவன் அப்படியே நிறுத்தி அவளை நோக்கினான்.
“ஆனா, மித்ரா துருவ் அண்ணனை விரும்பினாளே. அவர் இல்லைன்னா செத்துடுவன்னு எங்களைப் பயமுறுத்தினா. பாட்டி சொன்னாங்களே என் அம்மா-அப்பா பத்தி. அதனால நாங்க பயந்து போய் அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சோம். சாரி.. அதனால உங்களுக்கு என்மேலே நிறையக் கோபம் எனப் புரியுது. நீங்களும் புரிஞ்சுக்கோங்களேன்” என நேத்ரா சொல்லவும்,
“நேத்ரா, நான் மித்ராவைக் காதலிக்கலை” எனத் தெளிவாக அவளிடம் உரைத்தான்.
“என்ன?” என அதிர்ச்சியானவள், “அப்போ.. அன்னைக்கு...” என அவனையே உற்றுப் பார்த்தாள்.
“அது எங்க வீட்டுப் பொண்ணைப் பிரிச்சுட்டேன்னு கோபப்பட்டேன். துருவ் மேலே இருந்த பொறாமை, ஈகோ எல்லாம் சேர்ந்து அவன் மித்ராவைக் காதலிக்கறது தெரிஞ்சு என்னால தாங்கிக்க முடியலை. அதனால் நான் கடுமையாக எதிர்த்தேன்.
என்னைவிட அவன் எல்லா விதத்திலும் உசத்தியா இருக்கிறது எனக்குப் பிடிக்கலை. அதுவும் மித்ரா என்னை ஹீரோ மாதிரி நினைச்சுட்டு இருந்தா. காலேஜ்ல முடிய வேண்டிய தொல்லையை யாராவது வாழ்க்கை முழுவதும் இழுத்துட்டு வந்து வீட்ல வைப்பாங்களா?” என நிறுத்திப் பெருமூச்சு விட்டான்.
மனதில் உள்ளதை எவ்வித பூச்சும் இல்லாமல் அவளிடம் பகிர்ந்து கொள்வது அவளுக்குப் பிடித்திருந்தது.
அதுநாள் வரையில் அவள் நெஞ்சில் குடியேறியிருந்த பாரம் முற்றிலும் குறைய, இளநகையுடன், “என்ன வேலையில இருந்தா என்னங்க ஆதி? செய்யற தொழில்ல நேர்மையா இருந்தா போதாதா? முழு ஈடுபாடோட இந்த வேலையைச் செய்யறீங்களா, இல்லையா?” என அவள் கேள்விகளாக அடுக்க,
அதிலிருந்த உண்மையை அவனும் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் கண்டு கொண்டான். அதை அவளிடம் வெளிப்படையாகவும் பகிர்ந்து கொண்டான்.
“கண்டிப்பா நேத்ரா. என் வேலையை ரொம்பவும் ரசிக்கிறேன். ஈடுபாடோட செய்யறேன். அதுவுமில்லாம துருவ்வோட இருந்த போட்டிப் பொறாமையைப் பத்தி அருண் போனதுக்கு அப்புறம் நிறையத் தடவை யோசிச்சுட்டேன்” எனச் சில நொடிகள் நிறுத்தினான்.
அருணின் மறைவை நினைத்துத் தவிக்கிறான் என அவளுக்குப் புரிந்தது. அவனே பேசட்டும் என மௌனமாகக் காரைச் செலுத்தினாள்.
“நம்ம வாழ்க்கை எப்படியும் ஒரு புள்ளியில் நின்னு மண்ணோட போகப் போகிறது. அதற்குள்ள ஏன் இந்த வன்மம், போட்டி, பொறாமை, பேராசை என அடிக்கடி தோணுது. இப்போ யோசிச்சுப் பார்த்தா சிரிப்பு வருது” என்றவனின் குரலில் வலி, வேதனை என இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து இருந்தன.
“எல்லோரும் உங்களை மாதிரி நினைக்கிறதில்லை ஆதி. எப்படா இவங்க போவாங்க, நம்ம வேலையை நாம பார்த்துட்டுப் போகலாம் எனச் சுயநலமா இருக்கறவங்களும் இருக்கிறாங்க. அந்த வகையில நீங்க க்ரேட்” என அவள் மனம் உணர்ந்து பாராட்ட,
“நான் உங்ககிட்ட அவ்வளவு மோசமா நடந்துக்கிட்டதுக்கு அப்புறமும் எப்படி என்னைப் பத்தி நல்லவிதமா உங்களுக்குப் பேச முடியுது” என வியந்து போய் வினவினான்.
“நீங்க என்னமோ என்னை டெய்லியும் கொடுமைப்படுத்தின மாதிரி” எனச் சிரித்தவள், “ஒருத்தங்களைப் பத்தித் தெரியாதப்போ இப்படிக் கோபம் வர்றது சாதாரணம். என்ன உடனே உண்மையை அறியாமலேயே அவங்களைப் பத்தி மதிப்பிட ஆரம்பிச்சிடறோம். அது ரொம்பத் தப்பு என எனக்குப் புரிய வச்சார் துருவ் அண்ணா” என்றதும்,
‘இவளுமா?’ என ஒரு நொடி தோன்றினாலும் அடுத்த நொடியே, துருவனின் நல்ல குணம் அவன் நெஞ்சை எட்டியது. இவள் சொல்வது போல், அவன் நல்லவன் போல. அவன் தான் துருவனைத் தவறாக எண்ணி, எடக்கு மடக்காக நடந்து கொண்டிருக்கிறான்.
“துருவ் சொல்லறது ரொம்பவும் கரெக்ட் நேத்ரா. இப்போ கொஞ்சம் கொஞ்சம் மாற முயற்சிக்கிறேன்” என ஆதிநந்தன் சொல்ல, அவனை வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.
“என்ன பார்க்கறீங்க?” என அவனும் குறுகுறுவென்று பார்க்க, “இல்ல, தப்பு செஞ்சாலே ஒத்துக்கத் தயங்குற நிறையப் பேருக்கு மத்தியில நீங்க மன்னிப்புக் கேட்டதும் இல்லாம, இப்படி மாறவும் நினைக்கறீங்க பாருங்க. அது ரொம்பப் பிடிச்சிருக்கு” என் மனம் திறந்து பாராட்ட,
‘எல்லாம் உன்னால் பெண்ணே... உனக்காகப் பெண்ணே’ என அவன் நெஞ்சம் குதியாட்டம் போட்டது. “நல்லவங்க சொன்னா கேட்டுக்கணும் என என் அம்மா சொல்லியிருக்காங்க” என அவன் புன்னகைக்க, அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்திருந்தது.
“அப்போ நான் நல்லவன்னு ஒருவழியா சர்டிபிகேட் கொடுத்துட்டீங்க...” எனக் காரிலிருந்து இறங்கியவாறே அவனைக் குறும்புடன் நோக்கினாள்.
குறுஞ்சிரிப்புடன் அவளைப் பார்க்க, இருவரும் ஒருசேர கலகலவென்று சிரித்தனர்.
அன்று அனைத்தையும் சுத்திப் பார்த்துவிட்டு மாலையில் அவள் வீட்டுக்குச் செல்ல, “ஆதிக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு கண்மணி” என்ற பாட்டியின் தீர்மானமான அறிக்கையில் திகைப்புற்றாள்.
தொடரும்...
Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.