- Joined
- Jun 17, 2024
- Messages
- 17
தனித்த வனத்தில் 1
கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமானநிலையத்திலிருந்து அஸ்ஸாமின் திப்ருகர் விமானநிலையத்தை நோக்கிச் செல்லக் காத்திருந்த தனியார் விமானத்தில் ஏறுவதற்காக போர்டிங்கில் பயணிகளின் வரிசையில் நின்றிருந்த சாம்பவியின் ஆன்ட்ராய்ட் அதிர்ந்தது.
இரண்டு முறை தவிர்த்தவள், மனம் கேட்காது மூன்றாம் முறை எடுத்தாள். அம்மாதான்.
"ஃபோன் செஞ்சா எடுக்க முடியாத அளவு நாங்க உனக்கு என்னடீ செஞ்சோம்? வாழ்க்கைன்னா எப்போதும் நேர் கோடாவே இருக்குமா? சொல்லச் சொல்லக் கேக்காம எங்கேயோ கண்காணாத இடத்துக்குப் போ…"
அம்மாவின் குரல் உயர்ந்ததில், அவளை நோக்கித் திரும்பிய தலைகளையும், சில பார்வைகளில் கண்டனத்தையும், சிலவற்றில் சுவாரஸ்யத்தையும் கண்டவள் "போர்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சும்மா, நான் அங்க போய்ட்டுக் கூப்பிடறேன்" என்று கட் செய்து, விமானத்தில் ஏறும் முன்பே மொபைலை ப்ளேன் மோடுக்கு மாற்றினாள்.
அலை பேசியைத் துண்டிப்பது போல் நினைவலைகளைத் துண்டிக்க வழியின்றிக் கடந்துபோனவை எல்லாம் நிழலாய்த் துரத்தியது.
பெற்றோரை, வீட்டை விட்டு இப்படித் தனியே தூரதேசம் செல்ல அவளுக்கு மட்டும் ஆசையா அல்லது வேண்டுதலா?இப்படி நடக்குமென்று கனவிலும் நினைக்கவில்லையே?
இயந்திரம்போல் போர்டிங் பாஸை நீட்டி, ஏரோ ப்ரிட்ஜில் நடந்து, விமானத்தில் பிரவேசித்துத் தன் இருக்கையைத் தேடி அமர்ந்தாள். நல்லவேளை ஜன்னலோர இருக்கை. சாப்பாட்டுத் தொந்தரவும் கிடையாது. சாம்பவி சீட் பெல்ட்டை அணிந்துகொண்டு தன் கண்களை மூடவும், காத்திருந்தது போல் பதினோரு மாதத்திற்கு முந்தைய நிகழ்வுகளை அகக்கண்ணில் திரையிட்டது மனம்.
*******************
ONGC, அங்கலேஷ்வர், குஜராத்.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் கணினி அறையில் தனக்கெதிரே இருந்த வெக்டர் கணினித் திரையில் பூமியிலிருந்து ட்ரில்லிங் செய்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணை,
சுத்திகரிக்கப்பட வேண்டி ரிஃபைனரிக்கு செல்வதையும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் அதற்கான அணைத் தேக்கத்துக்குள் (reservoir) பாய்வதையும், அதிலிருந்து இயற்கை எரி வாயு பெரிய குழாய்களின் வழியே சேமிப்புக் கிடங்கினுள் சென்று சேர்வதையும், அதன் அளவுகளையும் அமைதியாக மானிட்டர் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைத்தது, காலை ஷிஃப்ட் முடிந்ததற்கான சைரன்.
எல்லோரும் எழுந்து வர அவர்களது துறைத்தலைவர் "ஹேய் ஆல், லெட்ஸ்' கிவ் ஃபேர்வெல் டு அவர் டூ பி பிரைட் சாம்பவி வித் ஏ கேக்" என்றவர், சாம்பவியை அழைத்துக் கேக்கை வெட்டச் செய்தார்.
பளபளப்பான காகிதம் சுற்றப்பட்ட ஒரு பெரிய பெட்டியும் பொக்கேயும் கொடுத்து, சாம்பவியின் திருமண வாழ்வு சிறப்பாக அமைய ஒவ்வொருவராக வாழ்த்தினர்.
துறைத்தலைவர் 'சின்னப் பெண்கள் எல்லாம் இவ்வளவு தூரம் வேலைக்கு வர்றதும், கல்யாணம், குழந்தைன்னதும் வேலையை விட்டுட்டுப் போறதும்… இந்த மாதிரி வேலைக்கெல்லாம் ஏன்தான் லேடீஸை எடுக்கறாங்களோன்னு சில நேரம் நினைச்சாலும், சாம்பவி மாதிரி திறமையான இன்ஜினீயரை இழக்கறதுல எனக்கு வருத்தம்தான். எந்த விதத்துலயும் சலுகை கேட்காத, வேலைல காம்ப்ரமைஸ் பண்ணிக்காத பொண்ணு. ஐ விஷ் ஹர் ஆல் தி வெரி பெஸ்ட் இன் ஆல் ஹர் என்டீவர்ஸ்" என்று கை குலுக்கினார்.
ஹெச் ஆர் ஹெட் ஒரு கவரில் அனுபவச் சான்றிதழையும், 'குட் ஷோ' லெட்டரையும் கொடுத்து வாழ்த்தினார்.
ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் ONGCன் சின்னம் பொறித்த வெள்ளித்தட்டைப் பதித்த நினைவுப்பரிசைத் தந்தனர்.
சாம்பவி நன்றி கூறி விடைபெற்றுக் கதவைத் திறந்து வெளியேறுவதற்குள் மூன்று முறை அழைத்து நின்றது மொபைல். அண்ணா சூர்யாதான்.
மீண்டும் அழைப்பு வர "சொல்லுண்ணா"
"சாம், ஆல் செட் டு ஸ்டார்ட்?"
"இப்பதாண்ணா ஃபேர்வல் முடிஞ்சு வெளிய வந்தேன். நீ கூப்ட்டுட்ட. நாலு மணிக்கு ட்ரெயின். நாளைக்குக் காலைல அங்க இருப்பேண்ணா"
"வேலையை விட்டதுல அப்ஸெட்டா இருக்கியா சாம்?"
"ம்.. கொஞ்சம்"
"டோண்ட் ஒர்ரி. அதெல்லாம் நீ இங்க வந்ததும் பேசிக்கலாம், பத்திரமா வா" என்று ஃபோனை வைத்துவிட்டான்.
சாம்பவி அவளது குவார்ட்டர்ஸுக்குச் சென்று, முன்னரே பேக் செய்து வைத்திருந்த இரண்டு பெரிய பெட்டிகளையும் ஒரு பையையும் கையில் எடுத்துக் கொண்டு, மீதமிருந்த சில பாத்திரங்கள், துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்களை இரண்டரை வருடங்களாக அவளுக்கு வீட்டு வேலை செய்த கல்பனா பாயிடம் கொடுத்துவிட்டு, ரயிலில் மும்பையை நோக்கிப் பயணித்தாள். அதுவரை கிளம்ப வேண்டிய அவசரத்திலேயே இருந்த சாம்பவி, ரயில் நகர்ந்ததும்தான் சிறிது ஆசுவாசித்தாள்.
இதன் நடுவே அவளது பெற்றோர், அண்ணி, வருங்கால மாமியார், மாமனார், ஓரகத்தி, நாத்தனார் என வரிசையாகக் கால் செய்து பேசினர்.
சாம்பவி சகுந்தலா மற்றும் நீலகண்டனின் மகள். அண்ணா சூர்யா, அண்ணி மீரா. தங்கை தேவசேனா, இன்ஜினீயரிங் கடைசி வருடத்தில் இருக்கிறாள்.
சாம்பவிக்குத் திருமணம் நிச்சயமாகி நான்கு மாதங்களாகிறது. மாப்பிள்ளை மனோஜ். நல்ல வசதியான குடும்பம், ஒரு தங்கைக்குத் திருமணமாகி பாண்டிச்சேரியில் இருக்கிறாள். அண்ணனுக்கும் திருமணமாகி விட்டது. தலா ஒரு குழந்தை இருக்கிறது. கூட்டுக்குடும்பமாக இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நிபந்தனை.
சொந்தத் தொழில் என்பதால்,
மனோஜ் நிரந்தரமாக சென்னையில்தான். எனவே சாம்பவிக்கு வேலையை விட வேண்டிய நிர்ப்பந்தம்.
சாம்பவியின் பெற்றோர்களுக்கு இந்த சம்பந்தத்தை விட விருப்பம் இல்லை. வேலையை விடவேண்டும் என்பதைத் தவிர சாம்பவிக்கும் இதில் பெரிதாக ஆட்சேபணை இல்லை.
அப்பா மாப்பிள்ளை வீட்டைப் பற்றிச் சொல்லும்போதே "நல்ல இடம். பெரிய குடும்பம். நீ வேலை பாத்துதான் அங்க நிறையணுங்கறது இல்ல. அப்படி வேணும்னா இங்க கிடைக்காத வேலையா, விட்டுடு" என்றார்.
இஞ்சினீயரிங் முடித்து, GATE ஸ்கோரை வைத்துக் கிடைத்த வேலையை சட்டென விடுவதற்கு வருத்தமாக இருந்தாலும், அவள் வேலை பார்க்கும் ஊரிலேயே அவளுக்கேற்ற மாப்பிள்ளை கிடைப்பது கடினம் என்று அவளுக்கும் புரிந்துதான் இருந்தது.
அதனால் இன்னும் ஒரு மாதத்திற்குள் நடக்கவிருக்கும் அவளது திருமணத்திற்கென அவளுக்கு மிகவும் பிடித்தமான இந்த வேலையை விட்டுவிட்டு, இப்போது சென்னையை நோக்கிப் பயணம்.
கல்யாணப் பத்திரிகை அடித்து வந்து, குலசாமி கோவிலுக்குப் போய் பூஜை முடித்து, உறவினர்களை அழைக்கவும் தொடங்கிவிட்டனர்.
''கிளம்பி விட்டேன். அதிகாலை ஃப்ளைட்டில் சென்னை வருவேன்' என ஃபிளைட் விவரங்களைக் குறிப்பிட்டு எல்லோருக்கும் ஒரு மெஸேஜைத் தட்டியவள், மனோஜை அழைக்க, அவனது எண் 'ஸ்விட்ச்ட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என்ற குரலில், அவனுக்கும் மெஸேஜை அனுப்பினாள்.
மனோஜுடனான சேட்டை (chat) ஸ்க்ரோல் டவுன் செய்து பார்த்தாள். அநேகமாக ஓரிரு வார்த்தைகளில் பதிலும் சில இமோஜிக்களும்தான். அதிலும் பெரும்பாலும் கூப்பிய கைகள்தான்.
இன்றிலிருந்து சரியாக இருபத்தாறு நாள் அவளது கணவனாகப் போகிறவனின் வாட்ஸ்ஆப் டிபியில் இருந்த அவனது ஃபோட்டோவை பெரிது படுத்திப் பார்த்தாள்.
இருவரும் சமூக வளைத்தளங்களில் தங்களது ஸ்டேட்டஸை எங்கேஜ்ட் என்று மாற்றிப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர்.
ரயில் வேகமெடுக்கவும், சாம்பவியின் மனதில் வேலையைப் பின்தள்ளி, மனோஜ் ஆக்கிரமித்துக் கொண்டான்.
பெண் பார்க்க வந்தபோதே எல்லோருடனும் கலகலத்த மனோஜை யாருக்கும் பிடிக்கா விட்டால்தான் ஆச்சரியம்.
தீபாவளிக்கெனப் பத்துநாள் விடுப்பில் வந்தவளைப் பெண் பார்த்து, நிச்சயம் செய்துதான் திரும்ப அனுப்பினர்.
மனோஜ் முதலில் தினமும் ஃபோன் கால், மெஸேஜ் என்று இருந்தாலும், ஷிஃப்ட்டில் வேலைக்குச் செல்லும் சாம்பவியால், மனோஜைப்போல் நினைத்த நேரத்தில் பேச முடியவில்லை.
இவளது மெஸேஜ்களில் முக்கால்வாசி மன்னிப்புக் கோரலாகவே இருக்க, அவனும் ஓகேவும் ஸ்மைலியுமாக பதில் அனுப்பினான்.
அவன் அனுப்பிய வெகு சில மீம்களையும் அவளது கேள்விகளுக்கான அவனது பதில்களின் வரிகளுக்கிடையில் தொனித்த அ(ன)ர்த்தங்களும் படிக்கச் சலிக்காதவை. இப்போதும் சாம்பவியின் முகத்தில் புன்முறுவல் இருந்தது.
சாம்பவி மிக நெருங்கியவர்களுடன் கூட அளவாகத்தான் பேசுவாள். அவளது அமைதியை அடக்கம் என்பவரும் உண்டு, அகந்தை என்பவரும் உண்டு. அதற்காகப் பேசா மடந்தையும் இல்லை. அவளுக்கும் நண்பர்கள் உண்டு, ரசனைகள் உண்டு. தனக்கு வரும் கணவனிடம் பகிர்ந்துகொள்ள விஷயமும் ஆவலும் அந்தரங்கமும் உண்டு.
அடக்கமாக இருந்தால் ஆசை இல்லையென்று அர்த்தமா என்ன? மிக நெருக்கமாக இல்லாவிட்டாலும்,
மனு என்ற அழைப்புடன், அவனது தலையைக் கோதுவது போல், மழைச் சாரலில் நனைவது போல், இருவரும் பால்கனியில் சூடான காஃபியுடன் நிற்பதுபோல், மொட்டைமாடியில், கோவில் பிரகாரத்தில், சமையலறையில் என இன்னும் தணிக்கை செய்யப்பட்ட வெவ்வேறு பின்னணியில், ராகதேவனின் இழைவும் பாடும்நிலாவின் குழைவும் ஒலிக்க, அவளது மனதிலும் அவ்வப்போது ரசனைமிகுந்த காட்சிகள் வரத்தான் செய்கிறது.
வீட்டினரும் நண்பர்களும் சாம்பவி, சாம் என்றே அழைக்க, எப்போதாவதுதான் என்றாலுமே, மனோஜ் 'பவி' என்கையில் காதில் தேன் வந்து பாய்கிறதுதான்.
மனோஜ் நடுவில் ஓரிரு முறை வியாபார விஷயமாக சிங்கப்பூர், துபாய் என்று போனதில் இருந்து அவனிடமிருந்து அழைப்பு வருவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது. சமீபமாக இவளாக அழைத்ததுதான் அதிகம்.
அவனைப்போல் இயல்பாகத் தன்னால் பேச முடியாததில் அவனுக்குக் கோபமோ என்று சாம்பவிக்கு சந்தேகம்.
கேட்டதற்கு "நானா ஒரு விஷயத்தை செய்யத் தொடங்கி இருக்கேன். அதுல கொஞ்சம் பிஸி பவி, வேற ஒண்ணுமில்ல" என்றான்.
சிந்தனையோட்டத்தில் மும்பையே வந்திருந்தது. இறங்கி டாக்ஸி பிடித்து, பாதுகாப்புக் கருதி நேரே ஏர்போர்ட்டுக்குச் சென்றாள். பெட்டியை செக்இன் செய்துவிட்டு, செக்யூரிட்டி செக் முடித்து, உள்ளே சென்றாள். பசித்தது. வடா பாவும் ஹாட்சாக்லேட்டும் வாங்கி வந்து அமர்ந்துகொண்டாள். நேரம் இரவு பதினொன்று. காலை ஐந்தரைக்குதான் ஃப்ளைட்.
மீண்டும் ஃபோனை முயற்சிக்க, யாரும் எடுக்கவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டே நிதானமாக சாப்பிட்ட சாம்பவிக்கு இருபத்திநாலு வயது. அறிவான, திருத்தமான, யதார்த்தமான, நியாயத்துக்கும் சமூக விதிகளுக்கும் பெரியவர்களுக்கும் கட்டுப்படும், முயன்றால் அடையக்கூடிய லட்சியங்களையும் இயல்பான ஆசைகளையும் கொண்ட பெண்.
அண்ணாவுக்கு ஷர்ட் அயர்ன் செய்து கொடுக்கும், அப்பா, அம்மாவின் கண்ணாடியைத் துடைத்துக்கொடுக்கும், 'சோம்பேறி சோம்பேறி' என திட்டிக்கொண்டே தங்கைக்கு ரெக்கார்ட் நோட்டில் படம் வரைந்து கொடுக்கும் சாம்பவியின் எதிர்பார்ப்புகள் எல்லாமே இயல்பானவை, நியாயமானவை, அவளது குடும்ப மற்றும் சமூக எல்லைகளுக்கு உட்பட்டவை.
பன்னிரெண்டு மணிபோல் அழைத்து "ஏர்போர்ட் வந்துட்டியா, ஜாக்கிரதையா வா சாம்" என்றான் சூர்யா.
எழுந்து மெதுவே கடைகளைச் சுற்றிவர, ஒரு சர்வதேச பிராண்ட் பை கடையில் இருந்து தங்கை தேவசேனாவிற்கு ஒரு நல்ல ஸ்லிங் பேகும், ஹேம்லீஸில் அண்ணன் மகனுக்கு ஒரு காரும், ஹார்ப்பர் லீயின் 'To kill a mockingbird' புத்தகமும் பபிள் கம்மும் வாங்கினாள். தயக்கத்துடன் இரண்டு மூன்று முறை எடுத்து எடுத்து வைத்தாலும், அவளுக்குப் பிடித்த வெளிர் லாவண்டர் கலரில் மனோஜுக்கென ஒரு ஷர்ட் வாங்கினாள்.
அவளது ஃப்ளைட் புறப்படும் வாயிலுக்குச் சென்று அமர்ந்துகொண்டாள்.
'ஹேவ் ஏ சேஃப் ஜர்னி, ஸீ யூ' என்று மனோஜிடமிருந்து மெஸேஜ் வந்தது. சாம்பவிக்கு அதுவே நிறைவைத் தந்தது.
****************
நீலகண்டனும் சூர்யாவும் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தனர். சாம்பவிக்குத் தன்னை மீறிய எதிர்பார்ப்பில் கண்கள் அலைந்தன.
"நீ எதிர்பாக்கற ஆள் கோயமுத்தூர் போயிருக்காரே, யாரைத் தேடற?" என்ற அண்ணனின் கேள்வியில் சாம்பவிக்கு முகம் சூடானது. 'ஓ அவர் ஊர்ல இல்லையா' என வாடியது.
"இவ்வளவு சோகமெல்லாம் வேணாம். மனோஜ் மதியம் வந்துடுவார்"
"அண்ணா…"
சூர்யா "மணிமேகல, வெக்கமாடா?" என, வெடித்துச் சிரித்த இருவரும் தந்தை கொண்டு வந்து நிறுத்திய காரில் ஏறிக்கொள்ள. டிரைவர் சீட்டை சூர்யா ஆக்கிரமித்துக்கொண்டான்.
அசோக்நகரில் இருந்த அந்த மூன்று பெட்ரூம் வீட்டுக்கு வர, அம்மாவும் அண்ணியும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
சிறிது கூச்சத்துடன் "என்னம்மா இதெல்லாம்?"
"கல்யாணத்துக்குன்னு வந்த மாதிரிதானேடீ?"
"தேவா காலேஜுக்குப் போய்ட்டாளாம்மா?"
சாம்பவி திருச்சியில் இஞ்சினீயரிங் படித்ததால் நான்கு வருட ஹாஸ்டல் வாசம், பின் இரண்டரை வருட வேலை என அவ்வப்போது வந்து சென்றதோடு சரி. வீட்டை ஒருமுறை சுற்றி வந்தாள்.
அம்மா அப்பாவின் அறையில் ஒரு மேஜை முழுவதும் கல்யாணப் பத்திரிகைக் கட்டுகளும் அறை முழுவதும் உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டிய துணிமணிகளும் பரிசுப்பொருட்களும் அட்டைப்பெட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
சாம்பவியும் தேவசேனாவும் உபயோகிக்கும் அறையில் மூன்று பெரிய பெரிய சூட்கேஸ்களில் வீட்டினருக்கும் மணப்பெண்ணுக்கும் , சம்பந்தி வீட்டினருக்கும் வாங்கப்பட்ட உடைகள் இருந்தன.
தவிர, பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்கள் முதல் கேஸ் ஸ்டவ் வரை ஏதேதோ வாங்கி கட்டிலுக்கடியில், பரணில் என நிரம்பி வழிந்தது வீடு.
"ஏம்மா, ஜாயின்ட் ஃபேமிலி, நல்ல வசதி, சொந்த பிஸினஸ்னாங்க, கேஸ் அடுப்பு கூடவா இல்லாம இருக்காங்க, இதெல்லாமா தருவீங்க?"
அண்ணி "இங்க மட்டும் அடுப்பில்லாமயா நான் கொண்ட்டு வந்தேன்? இதெல்லாம் ஒரு வழக்கம்" எனவும் சகுந்தலா மருமகளை முறைத்தார்.
"குளிச்சுட்டு வாடீ, சாப்பிடலாம்"
பெட்டியில் இருந்து உடையை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்.
அம்மாவின் தோசைக்கும் மல்லி சட்னிக்கும், சூடான டீக்கும் நீதி செய்தவள் "நான் ஒரு தூக்கம் போடறேன் மா"
சகுந்தலா "உனக்கு வாங்கின பட்டுப்புடவை, மத்த புடவை, டிரஸ்ஸுங்க, நகைன்னு எங்களையே வாங்க சொல்லிட்டு நீ இன்னும் எதையுமே பாக்கலை. ஒருவேளை ஏதாவது பிடிக்கலைன்னா மாத்தணும்ல? இனிமேதான் பிளவுஸ் வேற தைக்க கொடுக்கணும். இப்படி வந்ததுமே தூங்கறேன்னா?"
சூர்யா "அம்மா, அவ நைட் ஃபுல்லா படுக்கக்கூட இல்லை. தூங்கட்டும்மா, மதியம் எழுப்பி விட்டுக் காட்டுங்க. நான் வரேன்" என்று தன் அலுவலகத்திற்குக் கிளம்பினான். அவனது இரண்டு வயது மகன் ஆதி சாம்பவி கொடுத்த காருடன் பிஸியாக இருக்க, சாம்பவி உறங்கிவிட்டாள்.
மதிய உணவிற்கு எழுப்பினர். உண்டதும் "புடவை, நகையைப் பாக்கறியா சாம்?" என்றாள் அண்ணி.
குட்டிப்பையன் ஆதியை வயிற்றில் உட்கார வைத்துக்கொண்டு கிச்சுகிச்சு மூட்டி விளையாடிய சாம்பவி "தேவாவும் வரட்டும். நீங்களும் கொஞ்சநேரம் படுங்களேன்"
சிறிது நேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். அம்மா, அண்ணி, ஆதி மூவருமே உறங்கிவிட, தன் பெட்டியைத் திறந்து, அலுவலகத்தில் கொடுத்த லெட்டர், அவளது சான்றிதழ்கள், ஆதார்கார்ட், பேங்க் பாஸ் புக், பேன் கார்ட் எல்லாம் வைத்திருந்த ஃபைலை அவளுக்கும் தங்கை தேவாவுக்குமான அறையில் கப்போர்டின் இழுப்பறையில் வைத்தாள்.
மொமென்டோ, ஸ்லிங் பேக், அண்ணாவுக்கென வாங்கிய புத்தகம், அம்மா, அண்ணிக்காக முன்பே வாங்கி வைத்த இக்கத், பாந்தினி புடவைகள், அப்பாவிற்கு கண்ணாடிக் கூடு என வாங்கி வந்தவற்றை எடுத்து வெளியே வைத்தாள்.
மனோஜின் ஷர்ட்டைப் பார்த்தவள், அவனது மொபைலுக்கு அழைக்க, உடனே எடுத்தவன் "வந்துட்டியா, நான் இப்ப பிஸி, அப்புறமா பேசறேன் பவி" என்று கட் செய்துவிட்டான்.
மனோஜின் அம்மாவிற்கு ஃபோன் செய்து, தன் வருகையைத் தெரிவித்து, நலம் விசாரித்தாள்.
மாலை தேவசேனா வரவும், வாங்கியவற்றைக் கடை பரப்பினர். சாம்பவிக்கென அவர்கள் வாங்கி இருந்ததில் குறை காண எதுவுமில்லை.
அம்மா "இதான் முஹூர்த்தப் புடவை. நீ இல்லைன்னாலும் மாப்பிள்ளையே வந்து செலக்ட் செஞ்சிட்டார்டீ" எனவும், சாம்பவிக்குத் தன் கையில் வைத்திருந்த ஆழ் சிவப்பு நிற புடவை குறுகுறுப்பது போல் இருந்தது.
"ஏதையாவது மாத்தணும்னா சொல்லு சாம், நாளைக்கே போய்ட்டு வந்துடுவோம்"
"அதெல்லாம் வேணாம். எல்லாமே சூப்பரா இருக்கண்ணி"
தங்கையிடம் ஸ்லிங்பேகைக் கொடுக்க, அதன் பிராண்டையும் விலையையும் பார்த்த தேவசேனா "வாவ்" என்று சந்தோஷித்தாள்.
"தேவா, உனக்கென்ன வாங்கின, புடவையா, காக்ராவா?"
"ரெண்டும்" என்றவளின் முகம் அழுகைக்கு சென்றது.
"என்னாச்சு தேவா?"
"உன் கல்யாணத்தை நினைச்சா அழுகையா வருது சாம்" எனவும் சாம்பவிக்கும் கண்கலங்கி விட்டது.
சகுந்தலா "எதையாவது உளறாதடீ தேவா. முதல்ல ரெண்டு பேரும் அழுகையை நிறுத்துங்க" என்று அதட்டினார்.
Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தனித்த வனத்தில் 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.