• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கூழாங்கல் கூவுகின்ற கானம்! 4

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60

அத்தியாயம் 4

மூன்று வருடங்களுக்கு முன்!

அமெரிக்காவின் கல்லூரிப் படிப்பை முடித்து சென்னை வந்து ஒரு வருடம் ஆகி இருந்தது சித்தார்த்திற்கு.

பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் தன் சொந்த விருப்பத்தில் தானே முயன்று அந்த ஒரு வருடத்தில் சிறிதாய் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க எண்ணி அதற்கான வேலையிலும் ஈடுபட்டிருந்தான்.

சித்தார்த் அன்னை அமலி தன் கணவன் ராஜனின் பெயரில் இருந்த ராஜன் தந்தையின் தொழிலை கவனித்துக் கொண்டிருந்தார்.

முதலில் ஜவுளிக்கடையாய் ராஜனின் தாத்தா ஆரம்பித்து அதை ராஜனின் தந்தை இன்னும் முன்னேற்றி வீட்டுக்கு தேவையான பாத்திரங்களையும் சேர்த்து ஒரே கடையாய் நடத்தி வந்திருக்க, ராஜன் அதை ஒரு பெரிய நிறுவனமாய் மாற்றி இருந்தார்.

வீட்டுக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கும் அளவுக்கு அவர் மாற்றி இருந்த நேரம் தான் ராஜனின் திடீர் இறப்பும் நிகழ்ந்திருந்தது.

அமலி முதலில் நொடிந்து போனது என்னவோ உண்மை. கணவன் இல்லாமல் அவர் மொத்த உலகமும் நின்றிருக்க, சித்தார்த் மட்டுமே அவர் மீண்டு வர காரணமாய் இருந்ததும்.

தனியாய் தொழிலையும் கவனித்து மகனுக்காக என மட்டுமே தன் வாழ்க்கையை வாழ்ந்து வர துவங்கி இருந்தார்.

சென்னையில் ஐடி சார்பான கல்லூரி படிப்பு தான் வேண்டும் என்ற சித்தார்த் ஆசைக்காக அவனை அதில் அனுமதிக்க, அதை முடித்து மேற்படிப்பிற்கு தொடர்ந்து அமெரிக்கா செல்ல கேட்டதற்கு முதலில் மறுக்க தான் செய்தார் அமலி.

ஆனாலும் ஒரு கட்டத்திற்குமேல் மகன் விருப்பத்திற்கு அன்னை சம்மதம் கொடுத்துவிட, அதை தொடர்ந்து அவன் பயணம் அந்த திசையில் மட்டுமே செல்வது கவலையை தான் கொடுத்தது அன்னைக்கு.

மீண்டும் சென்னை வந்தவனிடம் தந்தை தொழிலை கவனிக்க கூறி கேட்டார் அமலி.

"ம்மா ப்ளீஸ்! எனக்கு இது தான் பிடிச்சிருக்கு!" என்று முடித்தவன் தொடர்ந்து வேலையில் சேர்ந்து அடுத்த ஒரு வருடத்தில் தன் கனவை நோக்கி முன்னேற, அதற்குபின் அவனை தடுக்க முடியவில்லை அமலியால்.

இன்னும் ஒரு மாதத்தில் சித்தார்த்தின் நிறுவனம் திறப்பு விழா என்ற அளவில் வளர்ந்திருக்க, அதற்கான வேலையில் தீவிரமாய் இறங்கி இருந்தான் சித்தார்த்.

"அம்மாக்காக ஒரு ஹெல்ப் சித்து!" என மகனிடம் வந்து நின்றார் அமலி அந்த சமயம்.

"ஷாப் பொறுப்பை ஏத்துக்கோன்னு மட்டும் சொல்லாதீங்க ம்மா!" என்று சித்தார்த் சொல்ல,

"ஹும்! அதான் முடியாதுன்னு சொல்லிட்டியே! எனக்காக நம்ம ட்ரெஸ் ஷாப்க்கு மட்டும் ஒரு அட் ஷூட் பண்ணி குடுத்துடு அது போதும்!" என்றார் அமலி.

"ஓஹ்!" என்றவன் சிந்திக்க,

"இது கூடவா எனக்காக பண்ண மாட்ட?" என்றார் அமலி.

"பண்ணலாம் ம்மா! ஒரு ஒன் மன்ந்த் போகட்டும்! நான் ஓப்பனிங் எல்லாம் முடிச்சுட்டு வர்றேன்!"

"இப்பவே அவ்வளவு பிஸி நீ! இதுல ஓப்பனிங் அப்புறம் ஷூட் பண்ணவா? எனக்கு தெரியாது உன்னை?"

"என்னவோ முடிவோட தான் வந்திருக்கிங்க போலயே!"

"ப்ளீஸ் சித்து! எனக்கு இன்னும் டென் டேஸ்ல அட் வேணும்!"

"ஏன் ம்மா? வேற யாரையாச்சும் வச்சு பண்ணலாம்ல? மாடல்ஸ் வச்சு தானே எப்பவும் பண்ணுவோம்?"

"அதனால தான் கொஞ்சம் வித்யாசமா பண்ணலாம்னு கேட்குறேன். டைரக்டர் ஒருத்தர்கிட்ட பேசினேன். அவர் தான் உங்க பையனே ஒரு அட் பண்ணலாமேன்னு சொன்னார்"

"ஓஹ்! அவங்க பார்த்த வேலையா இது?"

"ப்ளீஸ் சித்து!"

"ம்மா! எதுக்கு இவ்ளோ ப்ளீஸ்லாம்? ஐம் ரெடி! பாக்குறவங்க தான் பாவம்!" என விளையாட்டாய் கூறி ஏற்றுக் கொண்டான்.

அடுத்த நான்கு நாட்களில் முதலில் டெஸ்ட் ஷூட் எடுக்க, சித்தார்த் பக்காவாய் பொருந்தி போவதாய் கூறி இயக்குனர் அமலியிடம் கூறி, மொத்த ஸ்கிரிப்டையும் அவரிடம் கூறினார்.

"ஓகே தான் சிவா! நீங்க முடிச்சு குடுங்க!" என்று சொல்லிவிட, முதலில் ஆண் பெண் என தனித்தனியாய் வேறு வேறு துணி தொகுப்புகள் இருவருக்குமான பாகங்கள் எடுத்து முடிக்கப்பட்டுவிட, அடுத்து முதலில் திருமண பட்டுப்புடவை பட்டு வேஷ்டி என திருமண தொகுப்பிற்கு தனித்தனிப் புகைப்படங்கள் வீடியோக்கள் எடுக்கப்பட்டு பின் திருமண தருணமும் காட்சியாய் எடுக்க கோவிலில் காலை ஏழு மணிக்கெல்லாம் ஏற்பாடாகி இருந்தது.

"என்ன கூட்டமா இருக்கு? பெர்மிஸ்ஸன் வாங்கியாச்சு தானே?" சித்தார்த் உதவி இயக்குனரிடம் கேட்க,

"ஆமா சார்! அட் ஷூட்டிங் தானே! கோவில் வேற! புதன் கிழமைன்றதால அதிக கூட்டமும் இல்லையே! ஆறு பேருக்கு தான் பெர்மிஸ்ஸன்! இது தான் கரெக்ட்டா இருக்கும் சார்!" என்றார் அவர். அமலியும் அன்று உடன் வந்திருந்தார் சித்தார்த் அழைத்ததால்.

உதவி இயக்குனர் தான் சித்தார்த்திடம் அங்கே காட்சியை கூறினார் சித்தார்த்திடம்.

பட்டு வேஷ்டி பட்டு சட்டை என திருமண கோலத்தில் பாந்தமாய் தயாராய் நின்றிருந்தான் அவன்.

அம்மாவிடமே கூறி இருந்தான் "இந்த தாலி சீன் மட்டும் வேண்டாமே ம்மா!" என.

"டேய்! அதெல்லாம் சாதாரணம்! மாடல்ஸ் அதெல்லாம் பாக்கவே போறதில்ல!" என்றிருந்தார் அன்னை.

"ஓகே! அப்ப ரெண்டு முடிச்சு தான். உங்க டைரக்டரை அதையே மூணா காட்டிக்க சொல்லுங்க!" என்று சொல்லிவிட்டான்.

விருப்பம் எல்லாம் இங்கே பார்க்க முடியாதே! என்றாலும் ஷூட்டிங் தானே என தான் நினைத்துக் கொண்டான் அன்னை கூறிய பின்.

"சிம்பிள் மேரேஜ் கான்செப்ட் சார். உங்க ட்ரெஸ், ஹீரோயின் ட்ரெஸ்க்கு ஒரு ஷாட், அப்புறம் நீங்க இந்த இடத்துல ஹீரோயின் கழுத்துல முடிச்சு போடுற ஷாட் இப்படி தனித்தனியா தான் எடுப்போம். ஓகே!" என காட்சி விவரிக்கப்பட, அனைத்திற்கும் தலையசைத்து முதலில் அவன் நடந்து வருவதும் மேலிருந்து கீழாய் அவன் உடையும் என பதிவாக்க,

அடுத்து அவன் கோவிலின் பின்னிருந்து கோவில் கருவறை முன் வந்து நிற்கும் வரை முடிந்திருக்க, தனக்கு பின் வந்தவள் முகத்தை கூட சரியாய் பார்க்கவில்லை அவன். பார்த்திருந்தாலும் நிச்சயம் அவனுக்கு தெரிந்திருக்காதே!

வெகு சாதாரணமாய் பட்டுப் புடவை, தலை நிறைந்த மல்லிகை, கை நிறைய வளையல், நெற்றியில் கீற்றாய் சந்தனத்தோடு கீழே வட்டவடிவ பொட்டும் என வந்து நின்ற பெண் கருவறை உள்ளே சாமியைப் பார்த்து கும்பிட்டபடி இருந்தவள் இவனை எல்லாம் கவனிக்கவில்லை.

இவர்களுக்கு எதிரே சில ஆட்கள் அதுவும் பொதுமக்கள் தான் என்ற போதும் அது தான் தேவை என அவர்களை சாதாரணமாய் நிற்க சொல்லி இயக்குனர் கூறி இருந்தாரே!

சில நொடிகளில் தான் நடந்து முடிந்திருந்தது அனைத்தும். இவன் புன்னகையுடன் தாலியை முடிச்சிட ஆரம்பிக்கவுமே இயக்குனர் பதறி இருக்க, சரியாய் அதே நேரம் அவனுக்கு பின் இருந்து வந்து சேர்ந்தாள் அந்த காட்சியின் மாடல்.

"ஓஹ் ஷிட்!" என்று இயக்குனர் கூறவும் 'ரீடேக் சொல்லிடுவாரோ?' என்ற எண்ணத்தில் தான் அந்த பெண்ணிடம் இருந்து பார்வையை விலக்க, அருகே இன்னொரு பெண் அதே மஞ்சள் வண்ணத்தில் தங்க ஜரிகையில் பட்டுப் புடவையில். கூடவே ஒட்டியானம், நெத்திச்சுட்டி எனப் பார்த்தவனுக்கு கண்கள் அகன்று கொண்டது. இரு பெண்களையும் மாறி மாறி பார்த்தவன் மூச்சு விடவும் மறந்து நின்றுவிட்டான்.

ஐந்து நொடிகள் தான் வித்தியாசம் அந்த பெண் வருகைக்கும் இந்த பெண் வந்து நின்றதற்கும் இடையில்.

அமலிக்குமே தாமதமாய் தான் புரிந்தது அங்கு நடந்தது.

"சித்து!" என அவர் அருகே வர, அங்கே அந்த பெண் மயங்கி விழுந்திருந்தாள் தரையில்.

"ம்மா! நான்....." என்றவனுக்கு பேச்சே எழவில்லை.

சுற்றி நின்றவர்கள் சத்தம் சலசலப்பாய் மாற, மயங்கி கிடந்த பெண் அருகே யாரும் செல்லவில்லை.

"ம்மா தண்ணி குடுங்க!" சித்தார்த் மயங்கியப் பெண்ணைப் பார்த்து அவசரமாய் கேட்க,

"சார் நான் பேசிக்குறேன். நீங்க கார்க்கு போங்க!" என்றார் இயக்குனர் அதைவிட அவசரமாய்.

"வாட்?" என சித்தார்த் அதிர,

"பேசிக்கலாம் சித்தார்த். இப்ப பிரச்சனையாகம இருக்கனும்னா நீ கிளம்பனும்! வா!" என்றார் அமலியும்.

"ம்மா தெரியாம நடந்துடுச்சு. சொல்ல வேண்டாமா நான்?" என சித்தார்த் பேச, அமலி அவனை தள்ளிக் கொண்டு தான் வந்தார் காருக்கு.

**********************************************

"எப்படி இருக்கு ப்பா?" என தந்தை மதியின் முன் வந்து நின்றாள் கவிபாலா.

இன்று அவளின் பிறந்தநாள். தாய் தந்தையின் பரிசு என விஜயா வாங்கிக் கொடுத்திருந்த பட்டு சேலையை கட்டிக் கொண்டு முன் வந்து அவள் நிற்க,

"ரொம்ப நல்லாருக்கு கவி! இதை போய் வேண்டாம்னு சொன்னியே!" தந்தை கேட்க,

"ப்பா! காலேஜ்ல ஃபேர்வெல் வருது! எல்லாம் அழகழகா சுடி போட்டு வருவாங்க! அதுக்கு தான் இப்பவே வாங்கி வைக்கலாம்னு நினச்சேன்! அதான் அம்மா வாங்க விடலையே!" என்றாள் முணங்கி.

"அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி குடுக்கணும்! அவளுக்குன்னு மொத்தமே நாலோ அஞ்சோ தான் இருக்கு சேலைனு! இப்ப சுடிதாரா சேர்த்து வச்சு என்ன பண்ண போறா?" என சமையலறையில் இருந்து அன்னை குரல் மட்டும் வந்தது.

"அடுத்தவாரம் என் அண்ணே பொண்ணு கல்யாணம் வேற வருது. அப்போ இந்த சேலையை கட்டிக்கலாம்ல? அதுக்கு தான் பார்த்து பார்த்து வாங்கி தந்திருக்கு. சும்மா இல்ல!" என்று தோசையை வைத்து சென்றார் விஜயா.

"பாம்பு காது உன் அம்மாக்கு!" என்று தந்தை சிரித்தவர்,

"காலேஜ்க்கு ஒரு சுடிதார் வாங்கிக்க. அப்புறமா அப்பா காசு தர்றேன்! அம்மாக்கு தெரியாம எடுத்துக்கோ! எடுத்த அப்புறம் சொல்லு. திட்டுனாலும் சரினு விட்டுடுவா!" என திட்டமும் கொடுத்தார் மதி.

"சாப்பிட்டாச்சுன்னா கிளம்புங்க! கோவிலுக்கு போய்ட்டு வந்துடலாம். வந்து அவ காலேஜ் வேற போணுமே!" என்று சொல்லி ஆட்டோ பிடித்து கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

"வந்து இத்தோட எல்லாம் காலேஜ் போக மாட்டேன் ம்மா! புதுசா வச்சிருக்க சுடில தான் போவேன்!" என்று சொல்லி கண்ணாடி முன் தன்னைப் பார்த்துவிட்டு தான் வந்திருந்தாள் கவிபாலா.

கோவில் வாசலில் கவிபாலா தன் தோழியைப் பார்த்து பேசியபடி நின்றுவிட,

"சீக்கிரம் வா!" என்று சொல்லி உள்ளே சென்ற விஜயா மதி இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து அங்கிருந்த புல் தரையில் அமர்ந்துவிட்டனர்.

"இவளை என்ன இன்னும் காணும்?" என விஜயா கேட்கவும் கவிபாலா அவர்கள் அருகில் வர,

"எவ்வளவு நேரம் டி!" என அதட்டி,

"போய் சாமி கும்பிட்டு மூணு சுத்து சுத்திட்டு வா!" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

சொன்னதை செய்து முடித்து மூன்றாவது சுற்றின் போது தனக்கு முன் வேஷ்டி சட்டையில் செல்பவனை கவனித்தாலும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவோ அங்கே தொலைவில் கேமரோவோடு நின்றவர்களோ என எதுவும் அவள் கவனத்தில் விழவில்லை.

அதுவும் கல்லூரி அன்று பிறந்தநாள். சென்ற வருடம் விடுமுறையில் வந்திருக்க, வீட்டில் எந்தவித விஷேசமும் இன்றி கழிந்திருந்தது.

இன்று தோழிகளுடன் என தனியே நிறைய திட்டங்கள். நண்பர்களுக்குள் கேக் வெட்டிக் கொள்வது வழக்கம் தான். அவளுக்கும் தோழிகள் செய்வார்கள் என தெரியுமே! மாலை வெளியே நண்பர்களுக்கு ட்ரீட் வைத்துவிட்டு அவர்களுடன் நேரம் செலவிட்டு வருவது என திட்டங்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

இது இறுதி வருடப் படிப்பு வேறு இதன் பின் பிறந்தநாள் எல்லாம் எப்படி செல்லுமோ என அந்த கவலையும் இருந்தது.

இப்படிப்பட்ட எண்ணங்களுடன் வந்தவள் சுற்றி முடித்து கடவுள் முன் வந்து நிற்க, இயக்குனர் சொல்லியதை போல ஐயர் தாலியை கொடுத்திருக்க, தன் முன் புன்னகைத்து நின்றவனை அவள் பார்க்கவில்லை. அப்போது தான் கண்களை மூடி கைகளை கூப்பி நின்றிருந்தாள்.

கழுத்தில் என்னவோ ஊர்வதை போல கைகூப்பி நின்ற தன் கைகளில் எதுவோ அகப்பட தான் கவிபாலா கண் விழித்ததே!

"அச்சச்சோ!" என்ற ஐயருமே முதலில் இதை கவனித்திருக்கவில்லை.

என்ன நடக்கிறது என புரியாமல் கழுத்தில் கயிற்றைப் பார்த்துவிட்டு தன் முன் நின்றவனைப் பார்க்க, அத்தனை நிதானமாய் புன்னகை முகத்தோடு சித்தார்த்.

சில நொடிகள் தேவையானது அவளுக்கு அங்கே நடப்பது பிடிபட, ஆனால் புரிந்த நொடி நடுங்கிவிட்டவள் அதை முழுதாய் கிரகிக்க முடியாமல் மயங்கி இருந்தாள்.

***************************************

அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. சித்தார்த் தன் முட்டாள் தனத்தை எண்ணி எண்ணி அதிகத்திற்கும் தொய்ந்து போயிருந்தான்.

அன்னை அடுத்த நாளே அவர்கள் வீட்டில் சென்று பேசி விட்டு வந்ததாய் கூறி இருக்க,

"என்னம்மா சொன்னாங்க? கோவப்பட்டாங்களா? எல்லாம் என்னால தான். சரியா கவனிக்காம... ப்ச்!" என தலையில் கைவைத்துக் கொண்ட மகனை அந்த நிலையில் காண பிடிக்கவில்லை அமலிக்கு.

"ஒன்னும் இல்ல சித்து! நான் பேசிட்டேன்! பொண்ணு இல்லையா! சோ கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா நாம வேணும்னு பண்ணலையே! சொன்னதை புரிஞ்சிகிட்டாங்க!" என்று மட்டும் சொல்லி இருந்தார் மேம்போக்காய்.

"ஷிட் ஷிட் ஷிட்!" என தோன்றும் நேரமெல்லாம் தன்னைத் தானே பலமாய் தலையில் தட்டிக் கொண்டிருந்தான் சித்தார்த்.

என்னவோ பெரிதாய் தவறு செய்துவிட்டதை போல மனம் குறுகுறுக்க, வேறெதிலும் கவனம் நிற்கவில்லை.

கலாச்சார வழக்கங்கள் அறிந்தவன் தானே! சென்னை என்றாலும் உலகம் அறியாதவன் இல்லையே!

மூன்றாம் நாள் தான் புரிந்து கொண்டான் இப்படி தன்னைத் தானே நிந்தித்து எத்தனை நாட்கள் கடத்திட என்று.

"ம்மா! அந்த பொண்ணையும் அவங்க பேமிலியையும் நான் பார்க்கணும். ஏற்பாடு பண்ணுங்க!" என்று சொல்ல,

"என்ன விளையாடுறியா சித்து! அதான் பார்த்து பேசி சரி பண்ணியாச்சுன்னு சொல்றேன் இல்ல!" என அத்தனை கோபமாய் அமலி பதில் சொல்ல, புரியாமல் விழித்தான் அவன்.

"இப்ப என்ன அவசியம்? தெரியாம நடந்தது தானே? அப்படியே விட்டுட்டா தான் நல்லது!" அவன் பார்வைக்கு அத்தனை பொறுமையாய் அமலி கூறினார்.

"ஆனா எனக்கு உறுத்துது ம்மா! அசிங்கமா.. ஒரு மாதிரி கேவலமா இருக்கு என்னை நினைச்சா எனக்கே! ஒரு சாரி கேட்டுட்டா அவங்க மன்னிச்சுட்டா நான் என் வேலையை பார்க்க ஆரம்பிச்சுடுவேன் போல!"

"சித்து!"

"ம்மா ப்ளீஸ்! அவங்க திட்டினாலும் தப்பில்ல! எவ்ளோ கேர்லெஸா இருந்திருக்கேன்? அனுபவிக்கனும்ல அதுக்கு? பயந்து ஒதுங்கவோ ஓடி ஒளியவோ நான் வேணும்னு தப்பு பண்ணலையே! தப்பு நடந்திருச்சு! அதுவும் என்னால! அதுக்கு சாரி கூட கேட்கலைனா என்னால நானா இருக்க முடியல!" என்றவனை ஆயாசமாய் அமலி பார்க்க,

"ப்ளீஸ் ஏற்பாடு பண்ணுங்க ம்மா!" என்று சொல்லி அடுத்த நாளே அவர்கள் வீட்டில் சென்று நின்றிருந்தான்.

கவிபாலா அன்னை விஜயாவின் அண்ணனும் அண்ணியும் அங்கே தான் இருந்தனர் சித்தார்த் அன்னையுடன் கவிபாலா வீட்டிற்கு வரும் நேரம்.

வீட்டைப் பார்த்ததுமே புரிந்தது அவர்களின் நிலை. அதில் இன்னுமே வருந்தினான் சித்தார்த்.

வாசலில் இருவரையும் கண்ட மதி எழ, அதன்பின் தான் ஒவ்வொருவராய் கண்டனர் வெளியில் நின்றவர்களை.

"இவங்க தானா?" விஜயாவிடம் அவர் அண்ணன் கேட்க, ஆம் என்று தலையசைத்தார் விஜயா. விஜயா மதி இருவருக்குமே இரண்டு நாட்களுக்கு முன் வீடு தேடி வந்து பார்த்து சென்ற அமலியை மட்டுமே தெரிந்திருந்தது. சித்தார்த்தை இதுவரை அவர்கள் பார்க்கவில்லையே!

அன்று நீண்ட நேரமாய் மகளை சாமி கும்பிட சென்றவளை காணவில்லை என விஜயா தேடி வந்த போது அங்கே கூட்டமாய் இருக்க, கூட்டத்தை தாண்டிக் கொண்டு அவர் உள்ளே செல்ல, முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு நடுங்கி ஓரமாய் அமர்ந்திருந்த மகளைப் பார்த்து அதிர்ந்து அருகில் அவர் ஓடி,

"என்ன ஆச்சு கவி?" என்று அருகில் வரவும் அன்னையை ஒன்றிக் கொண்டாள் கவிபாலா.

சித்தார்த்தோடு அமலியுமே வெளியே சென்றுவிட்டனர் அப்போது.

"உங்கப் பொண்ணா? ஷூட்டிங் நடக்கும் போது உள்ள வந்துட்டாங்க மேடம்!" என்றார் இயக்குனர். புரியாமல் விஜயா பார்க்க, அங்கிருந்தவர்கள் உண்மையை கூற, அதிர்ந்து தன் மகளைப் பார்த்த விஜயா அப்போது தான் மகள் கழுத்தையும் பார்த்தார்.

"கவி!" என கத்திவிட்டவர் அருகே அப்போது மதியும் வந்திருக்க,

"கழட்டு! கழட்டு அதை!" என்று சொல்லி வேகமாய் கோபத்தில் கவிபாலா கழுத்தில் கிடந்த கயிற்றை கழற்றி எறிந்துவிட்டு எதிலிருந்தோ காப்பவர் போல மகளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டார் விஜயா.

"வா கவி! வா மா!" என யாருக்கும் தன் மகளைக் காட்டாது யாரும் பார்த்துவிட கூடாது என்பதை போல பயந்து பயந்து அல்லவா வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

யாரிடமும் சண்டை இடவோ திருப்பி கேள்வி கேட்கவோ எல்லாம் தோன்றவே இல்லை. தன் மகள் வாழ்க்கை என்ற பயம் தான் முன்னின்றது.

அடுத்த நாள் வீடு தேடி அமலி வந்தவர், கவிபாலாவை தான் குற்றம் சாட்டுவதாய் பேசி இருந்தார்.

"ஷூட்டிங் நடக்குறது தெரியாம வந்தியா? நம்புற மாதிரி இல்லையே!" என்று சொல்லவும் அவள் அதிர்ந்து விழிக்க,

"இந்தாம்மா! எங்களுக்கு தெரியும் எங்க பொண்ணை! ஷூட்டிங்னா யார் வர்றாங்க யாரு முன்னாடி நிக்கிறோம்னு அந்த பையனுக்கு தெரியாதா?" என விஜயா பதிலுக்கு பேச வாய் வார்த்தைகள் கூடியது தான் மிச்சம்.

"பேசாம இரு விஜயா!" என மனைவியை அடக்கிய மதி,

"இந்த மாதிரி ஒண்ணு நடந்துச்சுன்னு வெளில தெரியாம இருந்தாலே போதும் எங்க குடும்பத்துக்கு. நீங்க போங்க!" என்று மதி சொல்ல,

"எப்படி தெரியாம இருக்கும்? பேப்பர்லயே வந்துடுச்சு" என்று அமலி சொல்லவும் மூவருமே அதிர, நல்லவேளை என் பையன் போட்டோ எதுவும் வரல" என அப்போதும் கவிபாலாவை பற்றி நினைக்கவே இல்லை அமலி.

"நான் வந்தது இதை கொண்டு நீங்க பிரச்சனை பண்ணிட கூடாதுன்னு தான்.." என்றதோடு நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்லை.

"அதுக்கு தான் ஏதாவது எதிர்பார்த்து இருப்பிங்களோன்னு... அதான் இந்த இழப்பிடு மாதிரி...." என்று சொல்ல,

"என்ன பேசுற நீ?" என மீண்டுமே கத்திவிட்டார் விஜயா. கவிபாலாவிற்கு புரியவே இரு நிமிடங்கள் தேவைப்பட்டது.

"உங்க சங்காத்தமே வேண்டாம். வெளில போறியா இல்லையா நீ?" என இன்னும் கோபமாய் விஜயா சொல்ல, அமலிக்கு அதில் நிம்மதி தான். இந்த குடும்பத்தால் எந்த பிரச்சனையும் வரப்போவது இல்லை என்று.

இன்று மீண்டும் ஒருவனை அழைத்துக் கொண்டு வந்திருக்க விஜயாவின் அண்ணன் கேட்கவும் தலையசைத்தார் விஜயா.

"அன்னைக்கே சொல்லிட்டோமே! இன்னும் எதுக்கு இப்படி வீடு தேடி வந்துட்டு இருக்கிங்க? இப்பவே அரசல் புரசலா பேசிக்க ஆரம்பிச்சுட்டாங்க அக்கம் பக்கத்துல. உங்களுக்கு என்ன தான் வேணும்?" என மதி கேட்டிருந்தார்.

அவ்வளவு அழுத்தமாய் கோபமாய் எல்லாம் பேச தெரியாத சாதாரண மனிதன். கோபமிருந்தால் அதை காட்ட தெரியாத மனிதன்.

"அம்மா மேல எந்த தப்பும் இல்ல அங்கிள். நான் தான் பாக்கணும் சொன்னேன்!" சித்தார்த் சொல்ல,

"யார் நீ!" என தான் கேட்டார் விஜயா.

"நான் சித்தார்த். அன்னைக்கு... அன்னைக்கு நான் தான் தெரியாம..." என்றவனுக்கு சொல்லும் தைரியம் எல்லாம் இல்லை.

"நீ தானா அது? பையனுக்காக தான அன்னைக்கு பேச வந்தீக? அதனால தான் காசு கொடுக்கவும் தயாரா இருந்திருக்கீங்க இல்ல?" என்று கேட்க,..

"ஏய்!" என கை நீட்டி இருந்தார் அமலியும்.

"ம்மா! ம்மா ப்ளீஸ்! என்னம்மா? என்ன சொல்றாங்க இவங்க?" என்று சித்தார்த் அன்னையிடம் கேட்க, அப்போது தான் வீட்டினுள் நுழைந்த கவிபாலா கண்களுக்கு அவன் தான் முதலில் தெரிந்தான்.

பார்த்ததும் கண்டு கொண்டவளுக்கு கண்களில் அத்தனை பயம். உடல் வெளிப்படையாய் நடுங்கத் துவங்க, கண்கள் சுழற்றி வர, சட்டென மயங்கி சரிந்தாள் வாசலிலேயே!

"கவிம்மா!" என விஜயா மகளை கவனிக்க,

"தயவு செஞ்சு கிளம்புங்க! உங்களுக்கு இங்க எந்த சம்மந்தமும் இல்ல. ஏன் புதுசா பிரச்சனை கொண்டு வரப் பாக்குறீங்க? நாங்க பொம்பள புள்ளைய வச்சிருக்கோம். அடங்கி தான் போகணும். நீங்க பிரச்சனை பண்றது சரி இல்ல!" விஜயாவின் அண்ணன் அத்தனை அமைதியாய் சொல்ல,

"சார் சார்! நாங்க பிரச்சனை எல்லாம் பண்ண வர்ல. நிஜமா சாரி சொல்ல தான் வந்தேன். நானும் நிஜமா வேணும்னு எதுவும் பண்ணல சார். ப்ளீஸ் நான் அந்த மாதிரி டைப் இல்ல. தெரியாம தான்..." என்றவனுக்கு தன்னை நிரூபிக்க தெரியவில்லை.

"இப்ப எதுக்கு நீ கெஞ்சிட்டு இருக்க?" அமலி மகனை கேட்க,

"எங்களுக்கு உங்க காசு தேவை இல்ல தம்பி. மூணு நாளா வீட்டுக்குள்ள அடைஞ்சு இருக்கான்னு இன்னைக்கு தான் காலேஜ்க்கு அனுப்பி விட்டேன்! உங்க அம்மாகிட்ட தான் அன்னைக்கே சொல்லிட்டோமே! எங்களை விட்ருங்க!" என்று விஜயா கண்ணீரோடு மகளை கையில் வைத்துக் கொண்டு சொல்ல, விஜயாவின் அண்ணி கவிபாலா முகத்தில் தண்ணீரை தெளிக்க, மெதுவாய் விழித்துக் கொண்டிருந்தாள் கவிபாலா.

"ப்ளீஸ் போய்டுங்க தம்பி!" மீண்டும் அந்த குரல் வரவும் மனம் பாரமாய் இருக்க, தன்னால் இனி பிரச்சனை வர கூடாது என ஒதுங்கிவிட்டான் அர்ஜுன்.

"காசு தர்றேன்னு எல்லாம் சொல்லி இருக்கிங்க. என்னம்மா இது?" என வழியில் அன்னையோடு ஒரு சண்டையே நடத்திவிட்டான்.

ஆனால் அமைதியான சிறு குடும்பம் தன்னால் பாதிக்கப்பட்டதோ என அவன் வருந்த,

"இங்க பாரு சித்து! அவங்க நார்மல் லைஃப்க்கு போகணும்னா இனி அவங்களை தேடி நாம வந்து நடந்ததை நியாபகப்படுத்திட்டே இருக்க கூடாது. அது படிக்குற பொண்ணு போல. பேசாம உன் வேலையை கவனி. அங்க எல்லாம் தானா சரியாகிடும்!" அமலி சொல்ல, அது தான் சரி என்றும் தோன்றியது சித்தார்த்திற்குமே.

அந்த விளம்பரத்தில் அவன் இனி நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டான். இயக்குனர் கூட அந்த பொண்ணு கயிறை எல்லாம் கழட்டி போட்டுட்டு பா." என்று சொல்லி தான் பார்த்தார்.

"எனக்கு இது தேவை இல்லாத வேலை. அம்மாக்காக தான் சரினு சொன்னேன். இனியும் நார்மலா என்னால நடிக்க முடியாது. ஐ காண்ட். வேற மாடல் வச்சு பண்ணுங்க. பட் அந்த சீன் வேண்டாம். ஐம் வெரி சீரியஸ் அந்த சீன் வேண்டவே வேண்டாம்!" என அழுத்தம் திருத்தமாய் கூறிவிட்டான் சித்தார்த். அதன்பின் அமலியுமே அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை எதுவும்.

இன்னும் இரண்டு வாரத்தில் தன் அலுவலக திறப்பு விழாவை வேறு வைத்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் இந்த பிரச்சனையில் இருந்து மனதை திசை திருப்பிக் கொண்டான் சித்தார்த்.

தான் சென்று நின்றால் தான் மீண்டும் அந்த குடும்பத்தில் பிரச்சனை என்பதை போல கவிபாலா வீட்டாரும் அமலியும் கூறி இருக்க, ஓகே தன்னால் என்று இனி எதுவும் இருக்க கூடாது என அவன் ஒதுங்கி தன் வேலையில் முன்னேறி அடுத்த ஆறு மாதங்களை ஓட்டியவன் மீண்டுமாய் அவளைக் கண்டான்.

தொடரும்..
 

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Akhilanda bharati

New member
Joined
Jun 30, 2024
Messages
20
Interesting... இப்படியும் சூழ்நிலைல கல்யாணம் ஆகிடுச்சே.. எத்தனை முடிச்சு போட்டார் ஹீரோ.. ஒண்ணா ரெண்டா
 

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
Innum namma medam athai ketkala🤣🤣
Interesting... இப்படியும் சூழ்நிலைல கல்யாணம் ஆகிடுச்சே.. எத்தனை முடிச்சு போட்டார் ஹீரோ.. ஒண்ணா ரெண்டா
 
Joined
Mar 21, 2025
Messages
43
தெரியாமல் நடந்த
தவறு என்றாலும்
திருமணம் சரியோ????
திமிர் பிடித்த அம்மா
தில்லாலங்கடி போல....
 

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
தெரியாமல் நடந்த
தவறு என்றாலும்
திருமணம் சரியோ????
திமிர் பிடித்த அம்மா
தில்லாலங்கடி போல....
Sari pannuvom
 
Top Bottom