• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 6

laavans

New member
Joined
Sep 3, 2024
Messages
10
மறுநாள்! அன்று காலையில் அருண் மற்றும் ஆராதனாவின் நிச்சயார்த்தம் நடக்க ஏற்பாடாகியிருந்தது. அதற்கேற்ப சின்ன மேடை ஒன்றை அலங்காரத்துடன் கடலின் பின்னணியில் போட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே பெண் வீட்டினரிடம் பேசியிருந்ததால் எல்லாவற்றையும் தயாராகவே வைத்திருந்தாள் நேத்ரா.

அன்று நேரத்திலேயே எழுந்து புத்துணர்ச்சியுடன் வேலையில் ஈடுபட்டிருந்தாள். இன்னும் அவள் குழுவினர் யாரும் வந்திருக்கவில்லை. கடலின் நடுவே உள்ள அமைதி அவளை மிகவும் கவர்ந்தது. அன்னையின் மடியில் உறங்கும் அமைதி! இதற்காகவே இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள்.

இந்தக் கனத்த அமைதியிலும் பரபரப்பாக அவளுக்குப் பிடித்த வேலையைச் செய்ய முடியும். குறிப்பாக யாரின் இடையூறும் இல்லாமல். ஆனால் அவள் அமைதியைக் குலைக்கவென்றே கங்கணம் கட்டிக் கொண்டு ஒருவன் இந்தக் கப்பலில் ஏறி இருக்கிறானே. அவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

அவளின் குழு அங்கே வந்ததும் கீழே சமையல் செய்யும் இடத்துக்குச் சென்று காபி அருந்திவிட்டு வரலாம் என எண்ணி சென்றாள். காபியையும் தண்ணீர் பாட்டில் ஒன்றையும் எடுத்துக் கொண்டு மீண்டும் அவள் மேல் தளத்துக்குச் செல்ல நினைக்க, அப்போது ஆதிநந்தன் உடற்பயிற்சி செய்துவிட்டு முகத்தில் வழியும் வேர்வையுடனும், தோளில் துண்டுடனும் வெளியில் வருவது இவள் கண்களில் பட்டது.

அவன் போகட்டும் என இவள் மெதுவாக நடக்க ஆரம்பிக்க, அவனோ இவள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல் அங்கே முன்னாலிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தான். சற்று வழியை மறைத்தவாறே.

இப்போது அவள் என்ன செய்ய வேண்டும்? கண்டிப்பாக அவனைக் கடந்து செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் ஏதாவது வம்பு வளர்ப்பான் என்பது அவனது உடல்மொழியில் திட்டவட்டமாகத் தெரிந்தது. என்ன செய்வது என அவள் கையைப் பிசைந்து தயங்கியது ஒரு வினாடி மட்டுமே.

இவனுக்காகப் பார்த்துக் கொண்டிருந்தால் அவள் வேலையைக் கோட்டை விட வேண்டியது தான் என உடனே தன்னைச் சேகரித்துக் கொண்டு அவனைக் கடந்து செல்ல முயன்றாள்.

ஆம்! அவள் நினைத்தது போல் ஆதிநந்தன் அவளிடம் வம்பு வளர்க்கவே ஆசைபட்டு அங்கு அமர்ந்திருந்தான். ஆகவே அவள் கடந்து செல்கையில் அவளிடம் பேச வாய் திறந்தவனுக்கு வெறும் வாயில் புரையேறியது.

உடற்பயிற்சி செய்துவிட்டு நா வறண்டிருக்க, பேச வாய்திறந்தவனுக்கு வறட்டு இருமல் வர, பலமாக இரும ஆரம்பித்தான். சில கணங்கள் அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தவள் துரிதமாக அவனருகில் சென்று கையிலிருந்த காபி கோப்பையை அவன் முன்னால் வைத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவனிடம் தந்தாள். அவன் எதுவும் யோசிக்காமல் வாங்கி அப்படியே மடகமடக்கென்று குடிக்க ஆரம்பித்தான்.

இருமல் சற்று அடங்கிய பின்னரே அவள் செய்த செய்கையை உணர்ந்தான். நேற்று அவளுக்குத் தண்ணீர் தராமல் கருணையற்று அவன் செய்த வில்லத்தனம் அவன் விழித்திரையில் படமாக ஓடி அவன் இதயத்தில் பெரிய துளை ஒன்றைப் போட்டது. தொண்டையில் இறங்கிய குளிர்ந்த நீர் அவனைத் தீயாய்ச் சுட்டது.

நன்றியுடன் விழிகளுயர்த்தி அவளை ஏறிட்டுப் பார்க்க, எடுத்து வந்திருந்த காபியை அப்படியே அவன் முன்னால் நகர்த்திவிட்டு அவனைக் கடந்து சென்றிருந்தாள். அவளிடம் ஏதாவது பேசு என மனம் கூச்சலிட, ‘இவளிடம் என்ன பேசுவது?’ என்று மூளை எரிச்சல் கொண்டது.

இன்று ஜீன்ஸ் சட்டை அணிந்து இருந்தாள். விரைவாகச் செல்லும் அவளையே இமைக்காது நோக்கியவாறு அமர்ந்திருந்த ஆதிநந்தனுக்கு, ‘நன்றியாவது சொல்லியிருக்கலாம்’ எனச் சற்றுநேரம் கழித்தே உறைத்தது.

அதன்பிறகு நேத்ராவுக்கு யாரைப் பற்றியும் நினைக்க நேரம் இருக்கவில்லை. எடுத்திருந்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளை ஆட்கொண்டிருக்க, அனைத்தையும், கவனத்துடனும் சிரத்தையுடன் செய்து முடித்தாள்.

விழா சிறப்பாக நடைபெற, குறுக்கும் நெடுக்குமாக விழிகளை நகர்த்தி ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆதிநந்தனை முற்றிலும் நேத்ரா சட்டை செய்யவில்லை. அவன் வேண்டும் என்று வம்பு வளர்க்கிறானா, இல்லை, ஏதாவது காரணத்துக்காகவா என்றெல்லாம் யோசித்து நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவளுக்கு அதற்கெல்லாம் நேரமும் இல்லை. வேலைகள் தலைக்கு மேல் காத்திருக்கின்றன. அதனால் தன்னை முழுமூச்சுடன் வேலையில் மூழ்கடித்துக் கொண்டாள்.

உரிய நேரத்தில் மணப்பெண்ணும் மணமகனும் மோதிரம் மாற்றிக் கொள்ள விழா மிகவும் சிறப்பாக நடைந்தேறியது. அதன்பிறகு உணவு, பேச்சு, கலகலப்பு என நேரம் கரைய, இறுதியில் பாட்டுப் போட்டியில் வந்து நிறுத்தியிருந்தனர்.

ஏற்கனவே என்னென்ன விழா நடக்கப் போகிறது என நேத்ராவுக்குத் தெரிந்திருந்ததால் அதற்கேற்ப ஏற்பாடு செய்திருந்தாள். அனைத்தும் சுமூகமாகவே சென்றன.

நேரம் போவது தெரியாமல் ஆட்டம் பாட்டம் என இரண்டு அணிகளாகப் பிரிந்து ஆடிப், பாடி மகிழ்ந்தனர். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதற்கிணங்க வயிறு நிறைய உணவு உள்ளே சென்றதும் அனைவருக்கும் தூக்கம் கண்ணைச் சொக்கியது.

விருந்தினர்கள் மெள்ளத் தங்கள் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்துவிட்டு வருவதாகச் சொல்லிக் கலைந்தனர்.

அன்று மாலையில் பெண்களுக்கு மட்டும் ‘மெகந்தி’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் தனியாக ‘பேச்சிலர் பார்ட்டி’ என மற்றொருபுறம் ஒதுங்கிக் கொண்டனர். பெரியவர்கள் தனியாக அமர்ந்து வேறொரு பக்கம் பேசிக் கொண்டார்கள்.

அன்று மாலையில் நேத்ராவுக்கு அதிக வேலையில்லை. ஆகவே மறுநாள் காலையில் நடக்கவிருக்கும் திருமணத்துக்குப் போட வேண்டிய மேடை அலங்காரங்களை ஆரம்பித்திருந்தாள். ஓரளவுக்கு அனைத்தையும் தயார் நிலையில் வைத்தாகிவிட்டது. இனி அதிகாலையில் எழுந்து கடைசியில் செய்ய வேண்டிய சில ஏற்பாடுகள் மட்டும் பாக்கியிருந்தன.

அதைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் எனத் தன் அணியிடம் சொல்லிவிட்டு இரவு உணவைத் தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு ஓரமாக அமர்ந்து சாப்பிடலாம் என ஓர் இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

பசி ஒருபுறம், அயர்வு மறுபுறம் என அவளைத் தாக்க, சாப்பிடாமல் அப்படியே கண்மூடி சில நொடிகள் அமர்ந்துவிட்டாள். சற்று ஒதுங்கிய இடம் என்பதால் அவள் அங்கே இருப்பதை யாராலும் பார்க்க முடியாது.

திடமானவள் என்று அணிந்திருந்த கவசத்தைச் சற்றே கழற்றி வைத்தாள். சிலுசிலுவென்ற கடல் காற்று அவள் முகத்தை வருட, தன் அன்னையே தொட்டு வருடியதைப் போலிருந்தது. அவளை ஆட்கொண்டிருந்த சோர்வு மெல்லக் கலைய ஆரம்பித்தது.

“அம்மா” என உதடுகள் முணுமுணுத்தன.

அவளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு இந்தக் கடலைப் பிடிக்குமோ அவ்வளவுக்கு அதே கடலைப் பிடிக்காது. முக்கியமாக அலைகளை. இக்கடல் தான் அவளின் பத்தாவது வயதில் அவள் அன்னையைத் திடீரென்று உள்ளே இழுத்துக் கொண்டது.

எல்லாம் அவளால். அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தவளைக் கடல் உள்ளே இழுக்க, ஒற்றைக் கையை வைத்துக் கொண்டு அவளைக் காப்பாற்றவென்று வந்த அன்னையை அவளுக்குப் பதிலாக பற்றி இழுத்துக் கொண்டது.

இரண்டு முறை அவளுக்கு உயிரை ஊற்றிவிட்டார் அவள் அன்னை. அவள் பிறக்கையில் ஒருதரம். தன் உயிரைத் தந்து காப்பாற்றிய போது ஒருதரம்.

கடலின் மேல் மிதக்கையில் தன் அன்னையின் மடியில் தஞ்சமடைந்ததைப் போல் உணர்வதால் மட்டுமே கப்பலில் நடக்கும் திருமணங்களுக்குச் செல்ல ஆரம்பித்தாள் நேத்ரா. அவள் அன்னை, தேவி அவளைப் பிரிந்து போய்க் கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டால் என்ன? அன்னையின் நினைவுகள் முற்றிலும் மறைந்துவிடுமா, அல்லது, மறந்துவிடுமா என்ன? அவள் நினைவுகளின் தாழ்வாரத்தில் அவரின் இறுதி நாள் அப்படியும் இப்படியும் என்று அடிக்கடி ஓடுவதாலோ என்னவோ எல்லாமே நேற்று நடந்ததைப் போல் அவள் விழித்திரையில் படமாக ஓடியது.

“எப்படியோ இருக்க வேண்டிய என் வாழ்க்கைடா ஆதி... ப்ச்..” என அருகில் கேட்ட அருணின் குரலில் தன் சிந்தனையில் இருந்து விடுபட்ட நேத்ரா கண்களைத் திறந்தாள். யாரும் அருகில் இல்லை என்ற எண்ணத்தில் அவன் பேசுகிறான் எனத் தெரிந்தது.

உணவுத் தட்டைக் கையில் எடுத்தவாறே அங்கிருந்து எழுந்து சென்றுவிடலாமா என யோசித்து முடிக்கும் முன்னரே, “டேய் அருண், உனக்கு நாளைக்குக் கல்யாணம். நல்ல எதிர்காலம் காத்திட்டு இருக்கு. பழசையெல்லாம் போட்டுக் குழப்பிக்காத. ஏதோ நேத்ராவோட குணம் தெரிஞ்சு விலகிட்ட. உனக்கும் ஆக்சிடென்ட்டாகி அத்தோட கெட்ட காலம் முடிஞ்சது என நினைச்சுக்கோ” என்ற ஆதிநந்தனின் குரலில் அதிர்ந்து போய்ப் புருவம் சுருக்கினாள்.

‘தன்னை ஏன் இதில் இழுக்கிறார்கள்?’ எழுந்து செல் என அவள் மனம் கட்டளையிட, அடுத்த நொடியே ‘தான் ஏன் எழுந்து செல்ல வேண்டும்? அவளாக ஒன்றும் அவர்களைத் தேடிப் போய் ஒட்டுக் கேட்கவில்லை’ என மூளை வாதிட்டது.

நண்பர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க வேண்டும் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை. ஆனால் அவள் பெயர் அடிபடவும் யோசனையுடன் காதைத் தீட்டி உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தாள் நேத்ரா.

அத்தோடு ஆதிநந்தன் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என அவளுக்குத் தெரிய வேண்டியிருந்தது. ஏனெனில் பார்க்கையில் எல்லாம் ஏதோ புதிர் போடுவதைப் போல் பேசிக் கொண்டிருக்கிறான். இது தான் விஷயம் என்று தெரிந்தால் அதற்கேற்ப பதலளிக்க வசதியாக இருக்கு,

அப்படி ஒட்டுக் கேட்டதில் ஆதிநந்தன் அவளைத் தப்பாக நினைத்துக் கொண்டிருப்பதற்கு மிக முக்கியக் காரணம் அருண் என்று புரிந்தது. இருந்தும் காரணம் இன்னதென்று அவளுக்குக் கடைசி வரையிலும் புரியவில்லை. தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது அவளுக்கு.

இப்போது யோசித்துப் பார்த்தால் அன்று அவளைச் சந்திக்கவென்று அருண் உணவகத்துக்கு வந்த பொழுது ஏதோ நடந்திருக்கிறது. அதன்பிறகு அல்லவா அருண் அவளுடன் சரிவரப் பேசுவதில்லை.

ஏனென்று தெரியாமல் அவளால் யாருக்கு என்ன விளக்கம் தர முடியும்? அதுவும் அவளைக் கண்டபடி திட்டும் ஆதிநந்தனை விட அருண் மேல் தான் கோபம் வந்தது. பின்னே சும்மா இருந்தவளிடம் அவன் தான் வலிய வந்து நட்புக்கரம் நீட்டினான். அவள் ஒதுங்க ஒதுங்க அவன் உரிமையாய்க் கோபித்துக் கொண்டான்.

கடைசியில் பார்த்தால் அருண் தன்னிடம் பாராட்டியது உண்மையான நட்பல்ல என்று புரிந்தது. மனதில் ஏமாற்றம் சூழ்ந்து கொண்டது. பின்னே அவள் சம்மந்தப்பட்ட விஷயத்தை அவளிடம் நேரடியாகக் கேட்காமல் வெளியில் போய்ப் பரப்பிக் கொண்டிருக்கிறான் அருண். உண்மையான நட்புடன் பழகியிருந்தால் இப்படி நடந்து கொள்ளத் தோன்றுமா என்ன?

மனம் கனத்துப் போனது நேத்ராவுக்கு. சற்றுநேரம் இளைப்பாறலாம் என்றே தன் கவசத்தைக் கழட்டினாள். அதற்குக் கூட அவளுக்குக் கொடுப்பினை இல்லை. மீண்டும் இரும்பாய் இறுகிப் போனாள்.

அத்துடன் எதையும் யோசித்துக் கொண்டிருக்க அவளுக்கு நேரமில்லை. காலையில் திருமணத்துக்கு மேடை அலங்காரத்தை அவள் பார்க்க வேண்டும் எனக் கர்ம சிரத்தையுடன் முழுக் கவனத்தையும் அதன் மேல் திருப்பினாள். அதற்கு மேல் அவளுக்குச் சாப்பிடும் எண்ணம் சிறிதும் தோன்றவில்லை.

விவரம் தெரிந்த வயதிலிருந்தே அவளுக்கு ஏமாற்றம் என்பது பழகிய ஒன்றாகிப் போனது. எவ்வளவு பழகிப் போனாலும் ஒவ்வொரு முறையும் அதை எதிர்கொள்கையில் இன்னுமே கடினமாக இருக்கிறது.

“சரிடா நான் ரூமுக்குப் போறேன்” என அருண் கிளம்ப, “இருடா நானும் வரேன்” என்றான் ஆதிநந்தன்.

“இல்ல ஆதி... நான் மட்டும் போறேன். நீ இருந்து என் ஃப்ரெண்ட்ஸை பார்த்துக்கோ. எனக்குக் கொஞ்சம் தனிமை வேணும். நாளைக்குக் கல்யாணம். அப்புறம் இந்தத் தனிமை எனக்குக் கிடைக்காது. பிளீஸ்” என்றான் இறைஞ்சுதலுடன்.

சற்றுநேரம் அவனைக் கூர்மையாக ஆராய்ந்த ஆதிநந்தன், “பழசையெல்லாம் நினைச்சுக் குழப்பிக்காத. உனக்கான புது வாழ்க்கைக் காத்திட்டு இருக்கு. சந்தோஷமா இருடா” எனச் சொல்ல, நண்பனைப் மலர்ந்த புன்னகையுடன் ஏறிட்டுப் பார்த்தான் அருண்.

“நீ சொல்லறது ரொம்பவும் சரி ஆதி, ஆராதனா ரொம்ப ஸ்வீட்” என மொழிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“அப்பாடா... ஒருவழியாக அவன் வாயிலிருந்து இதைச் சொல்ல வைத்தாகிவிட்டது” என முணுமுணுத்துக் கொண்ட ஆதிநந்தன் மற்ற நண்பர்களுடன் போய்க் கலந்தான்.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும், அங்கிருந்த ‘ரெஸ்ட்ரூமு’க்குச் செல்லவென்று கிளம்பிய ஆதிநந்தனின் பார்வையில் அருண் நேத்ராவுடன் பேசிக் கொண்டிருப்பது பட்டது.

எவ்வளவோ கஷ்டப்பட்டு இவனை இவன் பெற்றோர்கள் சம்மதிக்க வைத்தனர். அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, உண்ணாவிரதம் இருந்து எனப் பலதையும் கடைபிடித்து இவனை இதற்கு ஒத்துக் கொள்ள வைத்தனர்.

அருணும் சற்றுமுன்னரே ஆராதனாவைப் பற்றி நல்லவிதமாக நினைக்க ஆரம்பித்திருந்தான். இப்போது போய் இவள் குட்டையைக் குழப்ப நினைக்கிறாளே என்ற கோபம் உள்ளுக்குள் கனன்றது ஆதிநந்தனுக்கு .

“இவளை?” எனப் பல்லைக் கடித்தவன், ‘ஏதாவது இடையிட்டுத் திருமணத்தை நிறுத்த பார்க்கிறாளோ?’ எனத் திடுக்கிட்டான்.

அப்படி மட்டும் நடந்தால் அருணின் பெற்றோர்கள் முற்றிலும் உடைந்துவிடுவார்கள். ஏதோ கடந்த இரண்டு மாதங்களாகத் தான் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

மீண்டும் நேத்ரா அருணின் கண்களில் பட்டதே அவனுக்கு எரிச்சலை வரவழைத்தது என்றால் மறுநாள் காலையில் திருமணத்தை வைத்துக் கொண்டு இவளிடம் அப்படித் தனிமையில் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என ஆத்திரம் பெருகியது. பார்க்கிறவர்களும் என்ன நினைப்பார்கள்? இந்த அருணுக்கு அறிவேயில்லை என்று நண்பனை நினைத்துச் சலித்துக் கொண்டான்.

அருணிடம் பேசி அவனைக் குழப்பிவிட்டுவிட்டால்? விடக்கூடாது. அவளைத் தனிமையில் சந்தித்து எச்சரிக்க வேண்டும் என எண்ணிய ஆதிநந்தனுக்கு அந்தத் தனிமை அவளது அறையில் தான் கிடைத்தது.

தொடரும்..
 

Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom