• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்- 21

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
145
என்றென்றும் வேண்டும்- 21

அதர்வண-வேதம்

5 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.

குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்

இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை.

வெற்றிக்கான மந்திரங்கள்
-பிரம்மன் பற்றிய மந்திரங்கள்-எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்-பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள்- ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள்-ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள்-டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள்-ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை ஆகியனவும் உள்ளன.

6- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன.

அமைதிக்கான மந்திரங்கள்
-வளையல்கள் பற்றிய மந்திரங்கள் -‘ரேவதி’ தாயத்து பற்றிய மந்திரங்கள்-சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள்-எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்-பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள்

7 ஆம் காண்டம்:

இதில் 118 துதிகள் காணப்படுகின்றன.

நீண்ட ஆயுளைத்தரும் மந்திரங்கள்
-தாய் நாடு பற்றிய மந்திரங்கள்-தாய் மொழி பற்றிய மந்திரங்கள்-ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள்-ஆத்மா பற்றிய மந்திரங்கள்- சரஸ்வதி மந்திரங்கள்-கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள்

8 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

பேயை ஓட்டும் மந்திரங்கள்
-ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்-விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள்-இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள்

9 ஆம் காண்டம்:

ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன.

இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது.

அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது.

ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்
பெறுகிறது இதில்தான் “கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது.

இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம்
-நோய்களைத் தடுக்கும் மந்திரம்-பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

10- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும்
-பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும்-பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும்-விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

விஸ்வநாதன் அவளிடம் பதில் எதிர்பார்த்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

காயத்ரியின் திருமண விடுப்பு முடிந்த பிறகு காயத்ரிக்கு சீனிவாச ராகவன் அவர்களின் ஆராய்ச்சி பகுதியில் வேலை கொடுத்ததால் அதுவரை நளினாவோடு பக்கத்து கேபினில் இருந்தவள் இப்போது வேறு கட்டிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தாள்.

அதனால் முன் போல நளினாவோடு பேச முடியவில்லை. இங்கு வந்து இப்போது கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகி விட காயத்ரி தன் புது இடத்தில் புதிய நண்பர்களை தேடிக் கொண்டிருந்தாள்.

நளினாவை எப்போதாவது அவசரமாக போகும் போது வழியில் பார்ப்பதோடு சரி. அதனால் இருவரும் அவர்களின் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளவே முடியாமல் போனது.

அதனால் காயத்ரிக்கு நளினாவின் குடும்ப வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் எதுவும் தெரியவே இல்லை.

திருமணமான புதிதில் மனைவியிடம் ஒழுங்காக நடந்து கொண்ட நளினாவின் கணவன் அதன் பிறகு தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தான்.

மனைவி தன் அளவுக்கு நாகரீகமாக இல்லை. தன்னோடு பப், பார்ட்டி என்று வருவதில்லை. அப்படியே வந்தாலும் சோசியல் ட்ரிங்கிங் என்ற பெயரில் மது அருந்துவதற்கு சண்டை போடுகிறாள் என்று அவள் மேல் ஆரம்பித்தது கோபம்.

இது போல பார்ட்டிக்கோ பப்புக்கோ போகும் போது மற்ற பெண்களுடன் அவன் ஆடுவதோடு நிறுத்தாமல் அவளையும் மற்ற ஆண்களுடன் ஆடும்படி வற்புறுத்தினான்.

இதெல்லாம் நளினாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவளும் நாகரீக யுவதி தான் என்றாலும் இந்த அளவு நாகரீகம் எல்லாம் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

இதனால் இருவருக்கும் விரிசல் விழ ஆரம்பித்தது. ஒரு புறம் அவள் கணவன் இவ்வளவு நாகரீகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போதே அவன் பெற்றோர் வேறு மாதிரி இருந்தனர்.

வீட்டில் வேலைக்கு ஆள் வைக்கக் கூடாது. எல்லா வேலையும் அவள் தான் செய்ய வேண்டும்.

காலையில் வேலைக்கு போவதற்கு முன் அவரவர் விருப்பம் கேட்டு அதற்கு தகுந்தபடி சமைக்க வேண்டும். எப்போதும் வீட்டில் புடவை தான் கட்ட வேண்டும்.

வேலைக்கு போனாலும் ஒரு நாள் கூட தாமதமாக வரக்கூடாது. வீட்டிற்கு வந்த பிறகு யாருடனும் செல் போன் பேசக்கூடாது.

அவள் அம்மா அப்பாவாக இருந்தால் கூட இரண்டு நிமிஷங்கள் தான்.

சம்பளம் வாங்கியதும் மொத்தத்தையும் மாமியாரிடம் கொடுத்து விட்டு தேவைக்கு கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த மாடர்ன் யுகத்தில் கூட இப்படிப்பட்ட ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்.

அதுவும் நளினாவின் கணவன் அவள் எதோ பேச கூடத்திலேயே வைத்து அவளை அடித்து விட அவள் மாமியாருக்கு வசதியாகிப் போனது.

பிள்ளைக்கும் அவன் மனைவிக்கும் ஒத்து வரவில்லை என்று தெரிந்ததும் அவளைப் பற்றி தவறாக மகனிடம் சொல்லி நிறைய பத்த வைக்க ஆரம்பித்தார்.

கூடவே தன் மகனின் அந்தஸ்துக்கு ஏற்ப சீர் செய்யவில்லையென்று அவளுடைய பிறந்த வீட்டில் போய் பணம் வாங்கி வரும்படி தினமும் சண்டை.

இப்படி எல்லா வகையிலும் தொல்லைகள் வர நளினா மனதளவில் மிகவும் தளர்ந்து போனாள்.

இப்படியே இரண்டு மாதங்கள் போய் விட்டிருக்க நளினாவுக்கு திருமண வாழ்க்கை மூச்சு முட்ட ஆரம்பித்தது.

அவள் பெற்றோரிடம் தன் கஷ்டங்களை சொல்லி அழ அவர்களோ ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தனர்.

நளினா இரண்டு மாதங்களில் கர்ப்பமாகி விட இனி வீட்டில் தன் நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருந்தாள். ஆசை ஆசையாய் தான் கருவுற்றிருக்கும் செய்தியை கணவனிடம் சொல்ல அவன் ரௌத்ரமானான்.

"ஏண்டி..! ஏற்கனவே உன்ன பாக்க சகிக்காது. இதுல நீ உண்டாயி குண்டானேன்னா உன் கூட வெளில தலை காட்டவே அவமானமா இருக்கும். அதனால மரியாதையா போய் இதை கலைச்சிட்டு வந்துரு..."

அவன் இப்படி கட்டளையிட்டதும் எப்போதும் பொறுமையாய் இருந்த நளினாவுக்கு பொறுக்க முடியவில்லை.

"இதை அப்பவே உங்கம்மா செஞ்சிருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்..." என்று கோபமாக கத்த அவள் கணவன் மிருகமாகி விட்டான்.

கோபத்தில் கண்மண் தெரியாமல் அவளை விட்ட ஒரே அறையில் அவள் அங்கிருந்த கூரான மேஜை நுனியில் வேகமாக மோதி கீழே விழுந்தாள்.

விழுந்தவள் எழுந்தாளா என்று கூட பார்க்காமல் அவன் வெளியே போய் விட்டிருந்தான்.

போகும் போது அம்மாவிடமும் அவள் சொன்னதை சொல்லி கத்திவிட்டு போயிருக்க அரை மணி ஆகியும் மருமகள் வேலை செய்ய வரவில்லையே என்று திட்டுவதற்காக வந்த அவள் மாமியார் அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து விட்டு அவள் அம்மாவுக்கு அழைத்து சொன்னதோடு சரி.

அதற்கு மேல் அலட்டிக் கொள்ளவே இல்லை.

அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வந்து மகளை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது வயிற்றில் குத்திய காயத்தில் ரத்தத்தோடு கருவும் வெளியேறி விட்டிருந்தது.

விஸ்வநாதன் அன்று வேலை முடிந்து கிளம்பிய பிறகு ஒரு தோழியிடம் எதோ விவரம் கேட்க காயத்ரி போனபோது தான் நளினா மருத்துவமனையில் இருப்பதே அவளுக்கு தெரியும்.

அடிபட்டு இரண்டு நாளாய் மருத்துவமனையில் பதறியடித்து போய் பார்த்த போது அவள் அம்மா சொன்ன விஷயங்களை சொல்லும் போதே காயத்ரிக்கு அழுகை நிற்கவே இல்லை.

"நளினா தான் அங்கே என்னோட பெஸ்ட்டின்னா. எனக்கு எல்லாத்துலயும் ஹெல்ப் பண்ணுவா.

எனக்கு அவ்வளவா சமத்து போறாதுன்னு என்னை திட்டினாலும் யாராவது என்னை ஏதானும் சொன்னா அவாட்ட எனக்காக சண்டை போடுவா....அவளுக்கு கடைசில இப்படி ஒரு மோசமான ஆம்படையானும், புக்காமும் (புகுந்த வீடும்) கிடைச்சிருக்கு...."

மனைவியின் கண்ணில் நிற்காமல் வடிந்த கண்ணீரை மெல்ல துடைத்த விஸ்வநாதன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

நளினாவோடு அதிகம் பேசியதில்லை என்றாலும் இரண்டொரு முறை பார்த்திருக்கிறான்.

அவர்களின் திருமண வரவேற்பில் அவன் குடுமியையும் கடுக்கனையும் கிண்டல் செய்யாமல் தன்மையாக பேசிய வெகு சிலரில் அவளும் ஒருத்தி என்பதால் அவனுக்கு நன்றாக நினைவிருந்தது.

காயத்ரி இன்னும் தோழியின் நிலையை நினைத்து அழுது கொண்டிருக்க விஸ்வநாதன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் தலையை வருடிக் கொடுத்தான்.

இதற்கு என்னவென்று அவனால் ஆறுதல் சொல்ல முடியும்?

அவனும் அவள் நிலையை எண்ணி வருந்தியதோடு கடவுளிடம் வேண்டிக் கொள்வதை தவிர செய்வதற்கு ஒன்றும் இல்லை.

சற்று நேரம் கழித்து அழுகை ஓய்ந்து அமைதியாய் இருந்த காயத்ரி மெல்ல நிமிர்ந்து விஸ்வநாதனை பார்த்தாள்.

"ஏன்னா தூங்கிட்டேளா..? உங்கள்ட ஒரு விஷயம் சொல்லணும்...."

கேட்கும் போதே அவள் குரலில் அவ்வளவு தயக்கம். அவ்வளவு நேரமும் யோசித்து விட்டு சொல்லி விடுவது என்று முடிவு எடுத்தாலும் அவன் எப்படி அதை எடுத்துக் கொள்வானோ என்று பயம்.

விஸ்வநாதன் அவள் குரலில் இருந்த தயக்கத்தை பார்த்து மீண்டும் தங்கள் தேனிலவை பற்றி கேட்க ஆரம்பிக்கப் போகிறாளோ என்று நினைத்தான்.

அவன் ஏன் வர முடியாது என்று தான் சொல்லி விட்டானே.

மீண்டும் கேட்டால் அதையே சொல்லி விட வேண்டியது தான் என்று நினைத்தபடி என்ன என்பது போல பார்த்தான்.

மீண்டும் அதை ஆரம்பித்தாலும் தோழியின் நினைவில் மனவருத்தத்தில் இருக்கும் மனைவியிடம் கோபம் காட்டக் கூடாது என்று நினைத்தாலும் அவனையும் மீறி அவன் முகம் இறுகியது.

அவன் முகம் அவனுக்கு பிடிக்காததை செய்யும் போது இருக்கும் ஒரு இறுக்கத்தோடு இருக்க காயத்ரிக்கு அதுவே தாங்கவில்லை.

எட்டி அவன் முகத்தை இரு கைகளாலும் பிடித்து "இப்படி என்னை முறைக்காதீங்கோன்னா...நீங்க ஆசையா தவிர வேற எப்படி பாத்தாலும் எனக்கு பிடிக்கல..." என்றவள் முகம் வாட அவன் கன்னத்தை பிடித்து இரு பக்கமும் இழுக்க அவனால் அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.

தன் கன்னத்தை பற்றியிருந்த அவள் கையை பிடித்தவன் சிரித்தபடி "சரி சொல்லு..நான் கோச்சுக்கல..." என்று பொறுமையாகவே கேட்டான்.

இப்படி குழந்தையாய் அவனிடம் கொஞ்சுபவளிடம் எப்படி கோபத்தை காட்டுவது?

"நிஜமாவா...?" அவன் சிரித்தும் அவள் நம்பாமல் கேட்க வாய் விட்டு சிரித்தான். அவள் நெற்றியில் முட்டியவன் "நிஜமா...! நான் கோச்சுக்கவே மாட்டேன்...சொல்லு பட்டூ.." என்று சமாதானமாகவே கேட்டான்.

"அப்ப சரி .." என்று மூக்கை உறிஞ்சியவள் அவன் நெஞ்சில் தன் விரலால் கோலமிட்டபடி "எனக்கு நம்ம கல்யாணத்தப்போ உங்கள புடிக்கவே புடிக்காது..." என்று சொல்லும் போதே நிமிர்ந்து அவனைப் பார்க்க பயம்.

விஸ்வநாதன் நிச்சயம் இன்று அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை. அவள் கவிழ்ந்த தலையை பார்த்தபடியே அவர்களின் திருமண நாளை நினைத்துப் பார்த்தான்.

அவன் மனம் கவர்ந்தவள் அவனை பிடிக்காமல் அவன் வாழ்வில் சேர்ந்த நாளை எப்படி மறக்க முடியும்?

அவன் நினைப்பது என்னவென்று உணராமல் காயத்ரி அவள் மனம் திறந்தாள்.

"அப்பாவும் அம்மாவும் உங்களை தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு கம்பெல் பண்ணினப்போ அப்படி ஒரு சண்டை போட்டேன்.

எனக்கு என்னை மாதிரியே ஐடி கம்பெனில வேலை பாக்கறவனா பாத்து கல்யாணம் பண்ணிண்டு அமெரிக்கா போய் செட்டில் ஆகணும்னு ரொம்ப ஆசை. .."

அவள் சொல்லும் போதே விஸ்வநாதன் முகம் வாடியது. எல்லாம் ஏற்கனவே தெரிந்தாலும் அதை நேரில் கேட்கும் போது அதுவும் தான் ஆசையாய் மணந்து கொண்டவள் சொல்லும் போது இப்போதும் அவனுக்கு வலித்தது.

அந்த வலியோடு அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

"அப்புறம் அத்தையையும் அம்மாவையும் பாத்தேன். எனக்கு அவாளை ரொம்ப பிடிச்சது..." பேசியபடியே நிமிர்ந்து அவனை பார்த்தவள் தான் சொல்வது அவனுக்கு எப்படி இருக்கும் என்று யோசிக்கவே இல்லை.

"உங்களுக்கு தெரியுமா? அவாளுக்காக தான் உங்களை போனா போறதுன்னு கல்யாணம் பண்ணிண்டேன்..."

சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் சொன்னாலும் அதில் குழந்தைத்தனம் தான் இருந்தது.

சண்டையிட்டுவிட்டு போனா போகுதுன்னு உன்னை ஆட்டத்துல சேத்துக்கறேன்...என்று குழந்தைகள் சொல்லுமே..அது போல..

அவள் சொன்னதை கேட்டதும் அவன் வருத்தம் போகவில்லையென்றாலும் சொன்ன விதத்தில் அவனால் அவளிடம் மயங்காமல் இருக்க முடியவில்லை.

"ஓ..அப்போ அம்மாக்காகவும் அத்தைக்காகவும் தான் என்னை கல்யாணம் பண்ணிண்டியா..?"

தன் வலியை மறைத்து சிறு புன்னகையுடன் அவன் கேட்க காயத்ரி முறுக்காகவே பதில் சொன்னாள்.

"பின்ன எப்ப பாத்தாலும் என்னை முறச்சிண்டே இருந்தேளே..? உங்களுக்காகவா பண்ணிண்டேன்?..." என்று நொடித்தவள் மேலே பேசினாள்.

"நளினா கிட்ட கூட சொன்னேன்...என்னடி இப்படி குடுமி வெச்சிண்டு கடுக்கன் போட்டுண்டு ஒரு அம்மாஞ்சிய போய் நான் கல்யாணம் பண்ணிக்கணுமானு சொல்லி வருத்தப்பட்டிருக்கேன்..."

'முழுசா என் மனசை இன்னிக்கி கிழிச்சிடறதுன்னு முடிவே பண்ணிட்டாளா...?'

அவள் வார்த்தைகள் விஸ்வநாதனின் ரத்தம் வரும் அளவிற்கு மனதை காயப்படுத்தின.

அவன் மனதை மறைத்தபடி அவளை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்க்க காயத்ரி மேலே தொடர்ந்தாள்.

"அப்புறம் என்ன சொக்குப்பொடி போட்டேள்னு தெரியலன்னா..நீங்க என் மனசை சுருட்டி இந்த குடுமியில வெச்சுன்னுட்டேள் போலருக்கு...."என்றவள் ஆசையாய் அவன் தலையை வருட விஸ்வநாதனுக்கு சந்தோஷமாய் ஒரு திகைப்பு.

"நம்ம கல்யாணத்தப்போ இந்த நளினா எதிர்க்க உக்காந்துண்டு இருந்தா..

அவ ஆம்படையான் அந்த கட்டைல போறவன் பார்மல் பேண்ட் ஷர்ட் போட்டுண்டு க்ராப் தலையோட அப்படி ஜம்முனு இருந்தான். எனக்கு அன்னிக்கி அவா நம்மள பாத்து பரிகாசமா சிரிக்கிறாளோன்னு கூட தோணித்து.."

"எனக்கு அப்படி மாப்பிள்ளை அமையலியேன்னு ஏக்கமா கூட இருந்தது...ஆனா இன்னிக்கி தெரியறதுன்னா.. ஆளோட தோற்றம் முக்கியம் இல்ல. மனசு தான் முக்கியம்...கட்டின பொண்டாட்டிய கண் கலங்காம வெச்சிக்கறவன் தான் ஆம்பளை ..."

அவள் பதிலில் விஸ்வநாதனுக்கு எரிச்சல் வந்தது.

'ஒ அப்ப இவ பிரென்ட் கஷ்டப்பட்டதும் தான் இவளுக்கு என்னை பிடிச்சிதா..?'

மனதில் இருந்ததை மறைக்காமல் கேட்டு விட்டான்.

"அப்போ உன் பிரெண்ட் கஷ்டப்படவும் நான் தேவலைன்னு நோக்கு தோணிடுத்தா காயத்ரி..?"

பட்டூ என்ற அழைப்பில்லாமல் காயத்ரி என்று அழைப்பிலே தான் சொல்வதை அவன் தவறாக புரிந்து கொண்டான் என்பதை புரிந்து கொண்டாள் காயத்ரி.

எப்படியெல்லாமோ அவளிடம் இருந்து காதலை எதிர்பார்த்தவனுக்கு பெருத்த ஏமாற்றம்.

'இவ வாழ்க்கை பூரா என்னை இந்த குடுமி பத்தி பேசியே கொல்லப் போறா..!' மனம் விட்டுப் போனது அவனுக்கு.

அப்போதும் வார்த்தைகளில் மட்டுமே கோபத்தை காட்டியவன் செயலில் காட்டாமல் மென்மையாகவே அவளை விலக்கி விட்டு நகர்ந்து எழுந்து அமர்ந்து கொண்டான்.

ஆனால் அதுவே காயத்ரிக்கு அவ்வளவு வேதனை தர அப்போது தான் தன் வார்த்தைகள் எவ்வளவு வலித்திருக்கும் என்று உணர்ந்தாள்.

ஒரு சிறு விசும்பலுடன் அவனை நெருங்கி தாவி அவனை இறுக கட்டிக் கொண்டு அவன் வயிற்றில் முகம் பதித்தவள் தலையை நிமிர்த்தவே இல்லை.

விஸ்வநாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு பக்கம் அவள் சொல்வதை எல்லாம் கேட்டு அவன் மனம் நோக அவள் அழுவதும் அவனுக்கு கஷ்டமாகவே இருந்தது.

தான் விலகி வந்தும் தன்னை கட்டிக்கொண்டு கதறுபவளை எப்படி விலக்குவான்? அவள் என்ன செய்தாலும் அவளை வெறுக்க அவனால் முடியாதே...

"சரிடா பட்டூ... விடு அழாதே..நான் ஒண்ணும் சொல்லல.." என்று அவன் பலமுறை சமாதானம் செய்தும் அவனை அணைத்திருந்தவள் தலையை நிமிர்த்தவே இல்லை.

விஸ்வநாதன் தான் மீண்டும் இறங்கி வர வேண்டியிருந்தது அவன் பட்டூவுக்காக...

"நீ ரொம்ப சோந்து போயிருக்கே... உன் பிரெண்டை அப்படி பாத்துட்டு வந்தது வேற வருத்தமா இருக்கும்.

.படுத்துக்கோடா...காத்தால பேசிக்கலாம்..." என்று சமாதானம் செய்தான்.

அவன் வார்த்தையில் நிமிர்ந்து அவனைப் பார்த்த காயத்ரி கண்களில் கண்ணீரோடு அவன் மேல் அத்தனை காதல்...

"இந்த வார்த்தை ..இந்த அன்பு..இது தான்னா என்னை உங்கள்ட இழுத்துடுத்து..நீங்க தான் எப்பவும் என் மனசை பாத்து நடந்துண்டு இருக்கேளே தவிர நான் ஒரு தடவை கூட உங்கள புரிஞ்சிக்க ட்ரை பண்ணல...

இத்தனை நாள் நீங்க எனக்கு சரியான பொருத்தம் இல்லன்னு நினைச்சிண்டு இருந்தேன்..இப்ப புரியறதுன்னா... நான் தான் உங்களுக்கு பொருத்தம் இல்ல...." என்றவள் எழுந்து கட்டிலிலேயே மண்டியிட்டாள்.

அவன் கழுத்தை பற்றி அருகே இழுத்தவள் அவன் முகமெங்கும் முத்தமிட்டாள். அவன் நீண்ட முடியை ஆசையாய் வருடியவள் அவன் காதில் இருந்த கடுக்கனை தன் சிறு பற்களால் மெல்ல கடித்தாள்.

அவன் முகத்தின் அருகே முகம் வைத்தவள் "என்னை மன்னிச்சு ஏத்துப்பேளான்னா? நான் இனிமே சமத்தா இருக்கேன்...ஹனிமூன் போகணும்னு கேக்க மாட்டேன். குடுமி கடுக்கன் எடுத்துடுங்கோன்னு சொல்ல மாட்டேன்..."

என்று அவள் பட்டியலிட அதற்கு மேலும் விஸ்வநாதனால் அவள் மேல் கோபம் கொள்ள முடியுமா?

"என் பட்டுக் குட்டி...என் செல்ல குட்டி...என் மொக்கள குட்டி...போறுமா? நான் உன்ன கோச்சுக்கல. உன்ன ஆசை ஆசையா கல்யாணம் பண்ணிண்டு இருக்கேன்..உன்ன கோச்சுக்கவோ வெறுக்கவோ என்னால முடியுமா டா..?"

என்றவன் அவள் இதழ்களை நெருங்கியபோது காயத்ரியே அவனை பாதி வழியில் சந்தித்தாள். அன்று அவர்களின் உடல்களோடு மனங்களும் ஒன்று சேர்ந்தன….
 

Author: SudhaSri
Article Title: என்றென்றும் வேண்டும்- 21
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

New member
Joined
Oct 3, 2024
Messages
20
ச்ச..செம செம.. காயத்ரி தேறிட்ட போ
தன் மனதை புரிந்ததும், காதலை உணர்ந்ததும் சொல்லிட்ட
 
Top Bottom