• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 14

laavans

New member
Joined
Sep 3, 2024
Messages
22
அத்தியாயம் – 14

யாருமில்லாத இடத்துக்கு ஓடினால் நிம்மதியாக நாட்களைக் கழிக்கலாம். அத்துடன் தான் விரும்பும் பணியையும் செய்யலாம் என்றே கப்பலில் கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டாள் நேத்ரா. அதற்கும் கூடத் தடங்கல் வந்துவிட்டதே என்ற எரிச்சல் நேத்ராவை அலைக்கழித்தது.

என்று அருணின் கொலை வழக்கு பற்றித் தினசரி பத்திரிக்கைகளில் வந்ததோ அன்றிலிருந்து கப்பலில் வேலை செய்வதற்குத் தடை விழுந்தது அவளுக்கு. தானாக நடக்கும் செயலுக்கு அவள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?

சுறுசுறுவென்று எரிச்சல் சுரந்தது. அவள் எரிச்சல் கொண்டால் மட்டும் அனைத்தும் மாறிவிடுமா என்ன? அலைபேசி மீண்டும் மீண்டும் அடித்து ஓய்ந்தது. எடுக்க நினைக்கவில்லை. அடித்து அடித்து ஓய்வதை ஒருவித திருப்தியுடன் ரசித்திருந்தாள்.

எதற்கு அழைக்கிறார்கள் என்று தெரியும். எடுத்துப் பேசினால் சொல்லாமல் கொள்ளாமல் எதற்கு அந்தமானுக்குக் கப்பலில் சென்று வந்தாய் என்ற கேள்வி வரும். ஒரு திருமண நிகழ்வுக்கு என்று அவளுக்கு வேலை கொடுக்கப்பட்டிருந்தது. அதை அவளால் மறுக்க முடியவில்லை.

மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அப்படியே பார்த்துப் பார்த்து உருவாக்கிய தொழிலை விட்டுவிட முடியுமா என்ன? அதனால் விதிகளை உடை என எதிர்ப்பை மீறிக் கிளம்பிவிட்டாள்.

நேற்றிரவு தான் திரும்பியிருந்தாள். வந்ததும் இன்று முக்கிய வேலைகளை முடித்துக் கொண்டு தோழி ஒருத்தியை விமான நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

அவள் வந்ததை மோப்பம் பிடித்திருக்கக் கூடும். அதனால் தான் அலைபேசி ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்குப் பயந்து இன்னும் எத்தனை நாட்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும்?

‘ஏன் தடைகளை உடைத்தெறியக் கூடாது? அப்படி என்னாகிவிடும் ?’ அந்த நொடியில் அவளுக்கு அது உதித்தது. சட்டென்று முடிவு செய்துவிட்டாள். பாண்டிச்சேரியை நோக்கிக் காரை விரட்டினாள். அப்படியே கைப்பேசியையும் சேர்த்து அணைத்து வைத்தாள்.

பத்து நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன. திடீரென்று கைப்பேசி அங்கிருந்த அமைதியைக் குலைக்க, திடுக்கிட்டாள். அவள் அதை அப்போதே அணைத்துவிட்டாளே என அதை எடுத்துப் பார்த்து உறுதி செய்து கொண்டாள்.

அப்போ இது யாருடைய அலைபேசி என்ற பதற்றம் தொற்றிக் கொள்ள, அவள் கண்கள் காரில் அப்படியும் இப்படியும் அலைபாய்ந்தன. பின்னால் இருக்கையில் இருந்து ஓர் உருவம் நிமிர்ந்து அமர்வது தெரிந்ததும் அவள் கைகளில் கார் தடுமாற்றம் கொண்டது.

‘யார் அது? ஒருவேளை தன்னைக் கடத்தப் போகிறார்களோ?’ சில நொடிகளில் அவள் எதை எதையோ நினைத்துப் பயம் கொண்டாள். பின்னால் அமர்ந்திருந்தவனின் முகம் தெளிவாகத் தெரிந்தது.

‘இவனா?’ என ஆசுவாசம் கொண்டு, “நீங்களா? இங்க எப்படி வந்தீங்க?” எனச் சற்று உயர்ந்த குரலில் வினவியவாறே காரின் வேகத்தைக் குறைத்தாள்.

காரினுள் இருந்த ஆதிநந்தனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. “ஹே... இப்போ எங்க போறோம்?” எனச் சுற்றும் முற்றும் பார்த்தான்.

“ம்ம். உங்களைக் கடத்திட்டுப் போய் டூயட் பாடப் போறேன்” என எரிச்சல் மேலோங்க நக்கலடித்தாள். திகைத்துப் போய் அவளைக் கண்ணாடியில் பார்த்தவனுக்குச் சற்று முன்னர் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக ஞாபகத்துக்கு வந்தன.

காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவருடன் விமான நிலையம் வரையில் சென்றிருந்தான். அவரிடம் ஒரு முக்கிய விஷயம் பற்றி அவன் அவசரமாகக் கலந்தாலோசிக்க வேண்டி இருப்பதாகச் சொல்லவும் வெளியூர் செல்ல விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்த அவர் அவனையும் தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்.

அவர் விமான நிலையத்தில் இறங்கி விடைப்பெற்றதும், ஆதிநந்தனும் உடனே கிளம்ப எத்தனித்தான். அங்கே அவன் கண்களில் நேத்ரா பட்டாள். எதிர்பாராமல் அவளைப் பார்த்ததில் அவனுக்குள் ஒரு லட்சம் பட்டாம்பூச்சிகளின் படபடப்பு. அகமும் முகமும் உடனே பூரித்துப் போனது அவனுக்கு.

நடக்கவே நடக்காதா என்று தினம் தினம் எண்ணி மறுகிய ஒன்று இன்று அவன் கண்கள் முன்னால் நிஜமாக நின்று கொண்டிருந்தது. அவளிடம் உடனே போய்ப் பேசு என அவன் மனம் பரபரக்க, அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த காரை அனுப்பிவிட்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளை நோக்கி எட்டுகள் வைத்தான்.

முடிந்தால் அவளிடமே ‘லிப்ட்’ கேட்டு காரில் ஏறிக் கொள்ளலாம் எனப் பிரமாதமாகத் திட்டம் தீட்டிக் கொண்டான். அவள் காரைத் திறந்து உள்ளே அமர்வதற்குள் அவளை நெருங்கிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் நடையின் வேகத்தைக் கூட்ட, நேத்ரா உள்ளே அமரும் முன்னர் யாரோ ஒரு பெண் அவளை அழைத்தாள்.

அழைத்தவளைக் கண்டவுடன், “சஞ்சு” என உற்சாகத்துடன் அப்பெண்ணை நோக்கி நேத்ரா ஓடினாள்.

‘அப்பாடா... எப்படியும் அவளைப் பிடித்துவிடலாம்’ என ஆசுவாசப்பட்டவாறே மெள்ள அவள் காரின் அருகில் போய் நின்ற ஆதிநந்தன், நேத்ரா இருந்த இடத்தை நோக்கித் திரும்பினான்.

ஆனால் பார்வையில் பட்டவளைக் கண்டவுடன், ‘ஐயோ, இவளிடம் மாட்டினால் அறுத்துத் தள்ளிவிடுவாளே. அப்புறம் நேத்ராவிடம் பேச முடியாமல் போய் விடுமே’ என மின்னல் வேகத்தில் குனிந்து காருக்குப் பின்னே தன்னை மறைத்துக் கொண்டான் ஆதிநந்தன்.

தூரத்தில் ஸ்வபனா அரக்க பறக்க வருவதைக் கண்டதால் தான் அப்படி ஒரு அவசரம் அவனிடத்தில்.

நேத்ராவின் கார் திறந்திருப்பதைக் கண்டவுடன் கதவைத் திறந்து ஸ்வப்னாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தன்னைக் காருக்குள் பதுக்கிக் கொண்டான் ஆதிநந்தன். அப்படியே மெள்ள பின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

ஸ்வப்னா அருகில் வர, வர எங்கே தன்னைப் பார்த்து விடுவாளோ என எண்ணி அப்படியே தன்னைக் குறுக்கிக் கொண்டான். அவள் அக்காரைக் கடந்து போன பின்னரே அவனுக்குத் தடைபட்டிருந்த மூச்சு வெளியேறியது.

காரிலிருந்து இறங்கினால் எங்கே ஸ்வப்னாவின் கண்களில் பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் அப்படியே அமர்ந்திருந்தவன், அசதியில் இருக்கையில் வாகாகச் சாய்ந்து கொண்டான். காரினுள் விரவியிருந்த நேத்ராவின் வாசனைத் திரவியம் அவனுக்கு ஒருவித நிம்மதியுணர்வை அளிக்க அவனையுமறியாமல் கண் அயர்ந்துவிட்டான்.

அவன் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருப்பதைக் காரின் கண்ணாடியில் பார்த்தவள், “என்னங்க சார், என்னைக் கடத்த நினைச்சுக் காரில் ஏறிட்டு மறந்து போய்த் தூங்கிட்டீங்களா?” என அவளின் குரலில் நினைவுலகத்துக்கு வந்தவன்,

“சாரி.. உங்க கூடப் பேசணும் எனக் காத்திருந்தேன். அப்படியே தூங்கிட்டேன்” என்றான்.

‘பேசணும் என்றவன் எதற்காகக் காரில் ஏறி அமர்ந்திருந்தான்? ஒருவேளை நிற்க முடியாமல் அசதியாக உணர்ந்திருப்பானோ ?’ என முடிவு செய்து கொண்டு அதன்பிறகு அந்தப் பேச்சை விட்டுவிட்டாள். ஆனால் தன்னிடம் எதற்காகப் பேசக் காத்திருந்தான் என்ற கேள்வி மூளையைக் குடைய ஆரம்பித்தது.

எனினும் சூழ்நிலை எதுவும் ஏதுவாக இல்லை. இப்போதைக்கு அவளால் அவனிடம் பேச முடியாது.

“சார், அப்படியே ஓரம் கட்டறேன். இறங்கிக்கோங்க... பாஸ்ட்” என மேலும் காரின் வேகத்தைக் குறைக்க, “இங்கேயா?” எனக் குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து விழித்தான் ஆதிநந்தன்.

ஆள் நடமாட்டம் அதிகமில்லை. அதுவும் நகரைவிட்டுச் சற்றுத் தள்ளி வந்தாகிற்று. பேருந்து நிறுத்தம், அல்லது, டாக்ஸியை அழைக்க ஏதுவான இடமாக இருந்தால் அவனுக்கும் வசதி.

‘இங்கே இறங்கி அவன் என்ன செய்யப் போகிறான்? எப்படி வீடு செல்வது? அத்தோடு இன்னும் அவளிடம் பேசியே முடிக்கவில்லையே.' யோசனை எழ அவளது பின்பக்கத் தலையை விழியசையாது நோக்கியிருந்தான்.

அவனுக்குள் உறங்கியிருந்த குறும்பு தலைதூக்க, “நீங்க தானே கடத்திட்டு வந்தீங்க? நீங்களே போய் எங்கே கடத்தினீங்களோ அங்கே இறக்கிவிடுங்க” எனக் கையைக் கட்டிக் கொண்டு பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

“என்ன விளையாடறீங்களா?” எனக் கோபத்துடன் ஆரம்பித்தவள், கண்ணாடியில் பின்பக்க சாலையை அளந்தவள், “பிளீஸ் ஆதி, சொன்னாக் கேளுங்க. காரை நிறுத்தினதும் கீழே இறங்கிடுங்க. பாஸ்ட்... இல்லை, உங்களுக்குத் தான் பிரச்சனை” என்றாள்.

“எனக்குப் பிரச்சனையா? ஏன்? நியாயமாப் பார்த்தா வருமான வரித்துறையைச் சார்ந்த என்னைக் கடத்தினதுக்கு உங்களுக்குத் தான் பிரச்சனை வரும்” எனக் குறும்புடன் சிரித்தான். இருவரின் விழிகளும் கண்ணாடியில் சந்தித்து விலகிக் கொண்டன.

“கிண்டல் பண்ணாதீங்க ஆதி. என்னைச் சில பேர்த் துரத்திட்டு வர்றாங்க. என் பிரச்சனைல நீங்களும் ஏன் உங்க தலையைக் கொடுக்கணும்?” என அவள் சர்வ சாதாரணமாகச் சொல்லவும், மீண்டும் நிமிர்ந்து அமர்ந்தவன் திடுக்கிட்டான்.

“உங்களையா? ஏன் துரத்தணும் நேத்ரா? சொல்லுங்க... எதுக்கும் பயப்படாதீங்க... நான் இருக்கிறேன்” என அவசரமாக அவளைக் காப்பாற்றிவிடும் வேகத்துடன் சொன்னவன், அவள் வியப்புடன் அவனையே கண்ணாடியில் பார்க்கவும்,

“சாரி, ஏதாவது சிக்கல்னா ஹெல்ப் பண்ணறதுக்குக் கேட்டேன்” எனச் சுதாரித்துக் கொண்டான்.

“இவங்கனால என்னை ஒண்ணும் செய்ய முடியாது. அது ஃபோனை ஆஃப் பண்ணி வச்சுட்டேன். அதான் கொஞ்சம் எரிச்சலாகிட்டாங்க. இப்போ என்கிட்டே பேசறதுக்கு என்னைத் துரத்தறாங்க என் அப்பவோட வொய்ஃப்” எனக் கலகலவென்று சிரித்தாள்.

‘அப்பவோட வொய்ஃப் என்றால் இவளுக்கு அம்மா ஆகாதா?’ மனதில் கேள்வி எழுந்தாலும் அவன் கேட்டுக் கொள்ளவில்லை.

“சீக்கிரம் இறங்குங்க. துரத்திட்டு வந்தவங்க காரைக் காணோம்” எனச் சட்டென்று ஓரம் கட்ட, ஆதிநந்தன் காரிலிருந்து இறங்கி முன்பக்கம் ஏறிக் கொண்டான்.

“ஹலோ, என்ன பண்ணறீங்க? சீக்கிரம் இறங்குங்க. நான் கிளம்பணும்” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, “நான் இன்னும் உங்க கூடப் பேசியே முடிக்கலையே” என்றவனை ஓர விழிகளால் அளவிட்டாள்.

அவன் இப்போதைக்கு இறங்கப் போவதில்லை என்று புரிந்து போனது அவளுக்கு. தூரத்தில் கார் வருவது தெரிய, அதற்குமேல் தர்க்கம் செய்யாமல் காரைக் கிளப்பிக் கொண்டு மீண்டும் சாலையில் கலந்தாள்.

சற்றுநேரம் இருவரும் அமைதியாக இருக்க, “ஏதோ பேசணும்னு சொன்னீங்க. சீக்கிரம் பேசினா அடுத்தப பஸ் ஸ்டாப்ல உங்களை இறக்கிவிடறேன்” என நேத்ரா சற்று பதட்டத்துடன் சொல்ல,

“எங்கே போறீங்க?” எனக் கேட்டான்.

“புதுச்சேரிக்குப் போறேன்” என்ற அவளது பதிலில், “நானும் வரேன்” எனப் பட்டென்று முடிவெடுத்துவிட்டான் ஆதிநந்தன். ஏனோ அவளுடன் தனிமையில் கழிக்கும் நாழிகைகளை உடைக்க அவனுக்கு மனம் வரவில்லை.

“நான் நாலு அஞ்சு நாள் அங்க இருக்கப் போறேன். உங்களுக்கு டிரைவர் வேலை எல்லாம் என்னால பார்க்க முடியாது. நீங்களே ஊரைச் சுத்திப் பார்த்துட்டுக் கிளம்புங்க” என நேத்ரா கறாராகச் சொல்ல, “உங்களுக்குச் சிரமமா இருந்தா நான் வேணா கார் ஓட்டட்டுமா?” என வினவினான்.

அவனை முறைப்புடன் திரும்பிப் பார்த்தவள், “சாருக்கு வேற வேலை இல்லையா?” எனக் கேட்டாள்.

“அது... வேலை நிறைய இருக்கு... ஆனா அடுத்த ஒரு வாரத்துக்கு நான் லீவ் எடுத்திருக்கிறேன். இன்னைக்கு முக்கியமான வேலை விஷயமா ஏர்போர்ட் வர வேண்டி இருந்தது. வந்தேன். இப்போ ஊருக்குப் போய்ப் பெருசா எதுவும் செய்யப் போறதில்லை. அதனால் கார் ஓட்டறது எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை” என்றவன், கைப்பேசியை எடுத்து தன் அன்னைக்கு அழைத்தான்.

கார் ஓட்டுவதைப் பற்றி அவள் பேசவில்லை என்று அவனுக்குத் தெரியும். இருந்தும் நக்கலைப் பார் எனக் கோபத்தை அடக்கியவாறே காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள் நேத்ரா.

“அம்மா, கொஞ்சம் அவசரமா புதுச்சேரிக்குப் போக வேண்டி இருக்குது. நான் கிளம்பிட்டேன்” என்றதும், “என்னப்பா இது. ஒரு வாரம் லீவுன்னு சொன்ன?” என அவன் அன்னை குறைபட்டுக் கொண்டார்.

“லீவு மாதிரி தான். ஃப்ரெண்ட் கூடப் போறேன். சீக்கிரம் வரேன். அப்பாக்கிட்டே சொல்லிடுங்க” என்றதும், “போப்பா, இந்த லீவுல உனக்குக் கல்யாணம் பேசி முடிக்கலாம் என இருந்தோம். அந்தப் பொண்ணு ஸ்வப்னா...” என அவர் தன் மனக்கவலையைக் கடைபரப்ப,

“அம்மா... அம்மா... சரியா கேட்கலை... அப்புறம் பேசறேன்” என அழைப்பைத் துண்டித்துவிட்டான். மிக அருகில் இருந்ததால் அவன் அன்னை பேசியது அனைத்தும் நேத்ராவின் காதுகளிலும் விழுந்தது.

அவன் அன்னையுடன் பேச ஆரம்பித்தவுடனே அவன் பேச்சில் கவனம் பதிக்க ஆரம்பித்ததால் அவள் கொண்டிருந்த கோபம் மறைந்து போனது.

“சாருக்குக் கல்யாணமா?” புன்சிரிப்புடன் அவளிடமிருந்து வெளிவந்த கேள்வியில் துணுக்குற்றவன், “எல்லா அம்மாக்களும் பாடற அதே பாட்டு தான். இப்போதைக்கு எனக்கு அதில் நாட்டமில்லை” என்றான்.

“நாட்டமில்லாமலா உங்க கல்யாணம் நின்னு போக நான் காரணம் என அப்படித் திட்டுனீங்க? என்ன ஆச்சு? அந்தப் பொண்ணுக்கு வேற ஒருத்தாரோட கல்யாணம் ஆகிடுச்சா?” என முகத்தில் தோன்றிய உண்மையான அக்கறையுடன் கேட்டாள் நேத்ரா.

“சே.. சே.. அது ஏதோ கோபத்துல சும்மா எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாம் வச்சு திட்டினேன். பொண்ணோட பேசப் போனேன். அதுவே சரியா நடக்கலை. அப்புறம் எனக்கும் அவங்களுக்கும் ஒத்து வராதுன்னு புரிஞ்சிடுச்சு” என எரிச்சலுடன் பதிலுரைத்தான்.

பின்னே அவளிடம் பேசி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வந்தவனிடம் விசாரணைக் கைதியைப் போல் உட்கார வைத்து அவன் பெண் பார்க்கப் போனதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறாளே?

“அப்போ அன்னைக்குக் கப்பல்ல ஒருத்தர் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டாரே...? ஸ்வப்னா தானே?” என இழுத்து அவன் மேல் பார்வையை ஒரு கணம் பதித்தவள், மீண்டும் சாலையைப் பார்த்தாள்.

அவள் ஞாபகசக்தியில் தீயை வைத்து பொசுக்க வேண்டும் என்ற ஆத்திரம் பொங்கியது அவனுக்கு. இத்தனை நாட்களாகியும் அவள் எதையும் மறக்கவில்லை. இதில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டாளாம்.

உள்ளுக்குள் தோன்றிய ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு, “அது ஒத்து வரலைங்க... என் பேச்சை விடுங்க... நான் உங்ககிட்டே நேர்ல பார்த்து மன்னிப்புக் கேட்கணும்னு இருந்தேன். உண்மை எதுவும் தெரியாம உங்களைக் குற்றவாளியாக நினைச்சு நிறையத் திட்டிட்டேன். நிறைய ஹர்ட் பண்ணிட்டேன். ஐ யாம் ரியலி சாரி” என மனதார மன்னிப்பை வேண்டினான்.

“எத்தனை தடவை இதையே சொல்லுவீங்க? தெரியாம தவறுவது மனித இயல்பு. அதை உணர்ந்து ஒருதரம் மன்னிப்புக் கேட்டாலே போதும். நீங்க என்ன பார்க்கறப்போ எல்லாம் மன்னிப்புக் கேட்கறீங்க? அதையெல்லாம் அப்போவே மறந்துட்டேன்” என இலகுவாகப் பேசினாள்.

‘அப்போ அந்த ஸ்வப்னாவை மட்டும் ஏன் ஞாபகத்தில் வைத்திருக்கிறாள்?’ என அவளையே இமைக்காது நோக்கினான். அதுவுமில்லாமல் மன்னிப்பை மட்டுமா அவன் சொல்ல நினைக்கிறான்? அவளிடம் இன்னும் நிறையச் சொல்ல வேண்டும் என அவன் மனம் துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதை அவள் உணரவில்லையா?

அவள் அப்படி உணர்வதற்கான எந்த வழியையும் அவன் அவளுக்குக் காட்டவில்லையே. எல்லாப் பக்கமும் ‘நோ என்ட்ரி' போர்ட் அல்லவா மாட்டி விட்டிருந்தான். அப்படியிருக்கையில் அவன் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அவன் மனம் அவனுக்கு எதிராகப் போர் கொடியைத் தூக்கியது.

இப்பொழுதும் அவன் அவசரப்பட்டுவிடக் கூடாது. முதலில் அவளிடத்தில் அவன் நம்பிக்கையை விதைக்க வேண்டும். அதன்பின்னரே அவன் மனதில் உள்ள உணர்வுகளை அவளிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தன்னையே நிதானப்படுத்திக் கொண்டான்.

அவனிடத்திலிருந்து பதில் எதுவும் வராமல் போக, விழிகளை மட்டும் நகர்த்தி அவனை நோக்க, அவனும் அவளை ஆழ்ந்து நோக்கியவாறே மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தான்.

அவன் கண்களில் தேங்கியிருந்த சோர்வை இனம் கண்டுகொண்டவள், “தூங்கணும்னா தூங்குங்க... சீக்கிரம் பஸ் ஸ்டண்ட்ல இறக்கி விடறேன்” என அவள் காரைச் செலுத்தியவாறே சொல்ல, வேண்டாம் என மறுத்தவன் அவள் வேலையைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

சில மாதங்களாக அருணின் இறப்பு ஏற்படுத்திய அழுத்தம், வேலையின் காரணமாகத் தோன்றிய அலுப்பு மற்றும் நேத்ராவை நோகடித்துவிட்டோமே என்ற வருத்தம் என அனைத்தும் சேர்ந்து இத்தனை நாட்களாக அவனை நிம்மதியாக உறங்க விடவில்லை.


இன்று நேத்ராவிடம் பேசியதும் மனதில் இருந்த பாரம் குறைந்ததைப் போலுணர்ந்தான். தோன்றிய நிம்மதியுணர்வில் அவனையுமறியாமல் அப்படியே உறங்கிப் போயிருந்தான் ஆதிநந்தன்.

தொடரும்...
 

Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom