• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்-7

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
என்றென்றும் வேண்டும்-7

தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.
ஏன் என்றால் பாக்கு துவர்ப்புத் தன்மை உடையது. இத்தன்மையால் உமிழ்நீர் சுரக்காது. எனவே ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.


அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும், ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தம், அக்கினி மந்தம் ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கி விட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும் முறையாகும்.

காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும்.

பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும் பாக்கு, சுண்ணாம்பு, குறைவாகவும் மெல்வதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும். வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி நல்ல மணம் வீசும்.


பொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.


சித்தவைத்தியம் மற்றும் ஆயுர்வேதத்தின் படி மனிதர்களுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் போது வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறதாம். இது முற்றிலும் சரியான காரணமாகும்.


பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கட்டுப்படுத்தும், சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்க
வல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்.

காயத்ரி வெகுளி தானே தவிர அசடு இல்லை. என்ன தான் விஸ்வநாதன் தன் நெருக்கத்தால் அந்த நேரத்துக்கு அவள் கோபத்தை மறக்கடித்தாலும் அவள் முழுவதுமாக அதை மறந்து விடவில்லை. சமாதானமும் ஆகவில்லை.

அவன் தன் தேவைக்காக தேன் தடவி பேசுகிறான் என்றே அவளுக்குத் தோன்றியது. அவன் அணைத்ததும் அவளுக்கு எல்லாம் மறந்தது வசதியாக மறந்து விட்டது.

மறுநாள் காலை இருவரும் காயத்ரியின் பிறந்த வீட்டுக்கு கிளம்பினர். விஸ்வநாதன் அம்மா சொன்னதால் அன்றைய ப்ரோஹிதத்தை தன் கீழே வைத்திருந்த மற்ற சாஸ்திரிகளிடம் மாற்றி விட்டிருந்தான்.

காலையில் சூரிய நமஸ்காரம் முடித்து சந்தி பண்ணி விட்டு கீழே வரும் போதே காயத்ரியும் தயாராக இருந்தாள். மாமியாரின் ஆணைப்படி ஒரு கருநீல பட்டுப்புடவை கட்டி பொன்னிற ரவிக்கை அணிந்து பொருத்தமாய் நீலக்கல் செட் போட்டிருந்தாள்.

அவளுக்கு இன்னும் அம்மா அப்பாவின் மேல் இருந்த கோபம் தணியாத நிலையில் அங்கே போகவே விருப்பமில்லை.

மாமியார் சொன்னதை மீற முடியாமல் கிளம்பியிருந்தாள்.

"காயத்ரி! உங்க கல்யாணத்தும் போது சுமங்கலி பிரார்த்தனை பண்ண வேண்டியது. ஆத்துல எடுத்து செய்ய ஆளில்லாம முடிஞ்சு வெச்சேன்.

அதையும் சமாராதனையும் எப்ப பண்ணினா ஜானகிக்கு சௌகரியப்படும்னு கேட்டுண்டு வா. அவளை தான் மெயின் பொண்டுகளா உக்காத்தணும். நானும் அப்புறமா போன் பண்றேன்னு சொல்லு.”

“விச்சு! அவா ஆத்துக்கு போற போது வழில பழம், பட்சணம் எல்லாம் வாங்கிண்டு போ. நானே எதானும் பண்ணிருப்பேன். இன்னும் கல்யாண களைப்பு போகல. அதான் ஒண்ணும் பண்ணல. வெங்கடேசனுக்கு தேங்காய்ப்பால் தேங்கொழல் ரொம்ப பிடிக்கும். அடுத்த நடை போறப்போ பண்ணி வெக்கறேன்.."

பத்மா பேசிக் கொண்டே போக தம்பதிகள் இருவரும் தலையாட்டிக் கொண்டனர்.

வெங்கடேசன் மரியாதைக்கு காலையில் தொலைபேசியில் அவர்கள் எல்லோரையும் விருந்து சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார்.

"ஏம்மா..! நீயும் அத்தையும் கூட வாங்கோளேன். மாமா உங்களையும் தானே அழைச்சார்?"

"இருக்கட்டும்டா விச்சு! அடுத்த நடை போறப்போ வரோம். முதல் தடவை நீங்க ரெண்டு பேர் மட்டும் போயிட்டு வாங்கோ.."

"ஏம்மா! அரவிந்தையானும் அழைச்சிண்டு போறேனே..?" என்று காயத்ரி கேட்கவும் முகம் மலர்ந்த பத்மா

"இருக்கட்டும் காயத்ரி. அவன் இன்னும் ஏந்துக்கவே இல்ல. அவனும் இன்னும் ரெண்டு நாளுல ஊருக்கு கிளம்பிடுவான். அது வரைக்கும் இப்படி தான் அவன் பிரெண்ட்ஸ் கூட சுத்திண்டு இருப்பான். இந்த வாட்டி நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்கோ. பொழைச்சு கிடந்து அடுத்த நடை போறப்போ பாப்போம்.."

என்று சமாதானம் சொன்னார்.

விஸ்வநாதன் பட்டு வேஷ்டியும் வெள்ளை சட்டையும் அணிந்து கிளம்பியிருந்தான்.

காயத்ரி தான் அவன் உடைகள் இருந்த அலமாரியில் பார்த்தாளே? அதில் மயில் கண் அல்லது ஜரிகை வேஷ்டிகளும் வெள்ளை சட்டைகளும் மட்டும் தான்.

எப்போதும் நினைப்பது போல இப்போதும் காயத்ரி நினைத்தாள்.

'இவர் கலருக்கும் ஒசரத்துக்கும் ஒரு டார்க் ப்ளூ ஜீன்ஸும் ஒரு டீ ஷர்ட்டும் போட்டுண்டு தலையை கிராப்பா வெச்சுண்டா எப்படி இருக்கும்..ஹ்ம்ம்..?'

பெருமூச்சு விட்டபடி அவனைப் பார்க்க அவனும் சட்டை கையை மணிக்கட்டு வரை மடித்து விட்டபடி அவளை தான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். முகத்தில் துளி கூட நேற்றிருந்த மையல் இல்லை.

'நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியும்' என்பது போல ஒரு பார்வை.

பத்மாவிடம் விடைபெற்று விஸ்வநாதனும் காயத்ரியும் வெளியே வர வாசலில் ஒரு வெள்ளை ஐ10 கார் நின்றிருந்தது. இரண்டு வருஷம் முந்தைய ரெஜிஸ்டரேஷன்.

காரும் வெள்ளைக் கலரா என்று யோசிக்கும் போதே நம்பர் பிளேட்டை பார்த்து இது டாக்ஸி இல்லை என்று தெரிந்தது.

ஒரு வேளை யார் கிட்டயாவது ஓசி வாங்கிண்டு வந்திருப்பாரோ?

வழியனுப்புவதற்காக வாசல் வரை வந்திருந்த மாமியாரும் அத்தையும் இருக்கும் போது கேட்க சங்கடப்பட்டுக் கொண்டு தயங்கி நின்றாள்.

"ஏறு.." என்று அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு விஸ்வநாதன் காரை சுற்றிக் கொண்டு டிரைவர் சீட்டுக்கு போனான்.

காயத்ரி ஏறி அவன் பக்கத்தில் உட்கார்ந்ததும் "பத்திரமா போயிட்டு வாங்கோ.." என்று அத்தையும் அம்மாவும் சொல்ல இருவரும் விடைபெற்று கிளம்பினர்.

விஸ்வநாதன் பார்வை ரோட்டில் இருக்க காயத்ரி கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்து விட்டு தயங்கி தயங்கி "இந்த கார் யாருதுன்னா?" என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் அவளைத் திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு "ஏன்..? நம்மாத்துது தான்.." என்று சொல்லி அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

"ஒரு சாதாரண ப்ரோஹிதம் பண்றவன் எப்படி கார்லாம் வெச்சிண்டு இருப்பான்னு கேட்டியா..?"

விஸ்வநாதனின் கேள்வியில் மட்டும் இல்லை பார்வையிலும் கூர்மை இருந்தது.

காயத்ரி மனதில் நினைத்ததை அவன் கண்டு பிடித்து விட்ட சங்கடத்தில் அவன் முகத்தை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொள்ள விஸ்வநாதனின் முகத்தில் ஒரு இறுக்கம்.

இறுகிய முகத்துடன் காரை ஓட்டியவனுக்கு அன்று காயத்ரி பேசியது மீண்டும் காதில் ஒலித்தது.

"டேய் விச்சு! இவ, ஊர்ல நம்மாத்துக்கு பக்கத்தாத்துல இருந்த வெங்கடேசனோட பொண்ணு. ஐடி கம்பெனில வேலை செய்யறாளாம். இதோ பாரு போட்டோ குடுத்திருக்கான்..."

பத்மா காயத்ரியின் புகைப்படத்தை காட்டி சொன்னார்.

விஸ்வநாதனுக்கு காயத்ரியை போட்டோவில் பார்த்ததுமே பிடித்து விட்டது.

கோலி குண்டு கண்களும் குண்டு கன்னங்களுமாக குழந்தை முகத்துடன் இருந்தவளை மிகவும் பிடித்தாலும் அவளுக்கு தன்னைப் பிடிக்குமா என்று தயக்கமே..!

"ஏம்மா..! அவ ஐடி கம்பெனில இருக்கான்னு சொல்றே? அவளுக்கு நம்மாம் செட் ஆகுமா?"

தன்னை ஒத்துக் கொள்வாளா என்பதை தான் அப்படி கேட்டான்.

"டேய்! வெங்கடேசன் சரின்னுட்டான். பொண்ணை பொத்தி பொத்தி வளத்துட்டேன். வெளில குடுத்தா அவளை எப்படி வெச்சிப்பாளோ? ஒன் புள்ளைக்கு குடுத்தா நான் கவலையே பட வேண்டாம்..அப்டிங்கறான். நீ என்னப்பா சொல்றே..?"

அப்போதைக்கு "யோசிச்சு சொல்றேன் மா..." என்றவன் தன் இயல்பையும் மீறி அவளைத் தேடி அவள் வேலை செய்யும் கம்பெனிக்கே போனது கூட அப்படி தான்.

என்னவோ போட்டோவில் பார்த்த பிறகு அவளை நேரில் பார்க்க வேண்டும் என்று ஒரு உந்துதல்.

என்ன தான் வாத்தியார் என்று மரியாதை கொடுத்தாலும் ப்ரோஹிதம் செய்பவனுக்கு பெண் கொடுக்க கொஞ்சம் யோசிப்பார்கள் என்று அவனுக்கு தெரிந்தது தான்.

பெரும்பாலும் அவன் கூட இருக்கும் பலருக்கு அவர்களைப் போலவே ப்ரோஹிதம் செய்யும் குடும்பத்தில் இருந்து பெண் எடுப்பதை பார்த்திருக்கிறானே!

போனதால் தானே அவள் மனதை புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் அலுவலகத்தில் அவள் பெயரை சொல்லி ரிசப்ஷனில் கேட்க அவள் முக்கியமான வேலையில் இருப்பதாகவும் காத்திருக்கும்படியும் சொல்ல அங்கேயே அமர்ந்திருந்தான்.

வந்தவர்கள் எல்லாம் அவனை வினோதமாக பார்த்தபடி போக விஸ்வநாதன் தன் தோற்றம் அவர்களை அப்படி பார்க்க வைக்கிறது என்று புரிந்து கொண்டான்.

ஐடி கம்பெனிக்கும் கட்டு குடுமி கடுக்கனுக்கும் என்ன சம்பந்தம்?

எழுந்து மீண்டும் ரிசப்ஷனிஸ்டிடம் போய் பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக சொல்லி கேன்டீனை தேடிப் போனான். அவள் வரும் வரை அங்கே காத்திருக்கலாம் என்று நினைத்தான்.

கேன்டீனுள் நுழையயும் போதே அவளைப் பார்த்து விட்டான். அது தான் போட்டோவில் பார்த்த அவள் முகம் அச்சாய் மனதில் பதிந்திருக்கிறதே!

அவள் வேறொரு பெண்ணோடு மும்முரமாய் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவள் தனியாய் வரட்டும் என அவள் பின்னால் இருந்த டேபிளில் அமர்ந்தான்.

காயத்ரி தன் தோழியிடம் பொருமிக் கொண்டிருந்ததை அப்படி தான் கேட்க நேர்ந்தது.

"...எங்கப்பா அஜித் மாதிரி மாப்பிள்ளை பாப்பார்ன்னு பாத்தா அம்மாஞ்சி மாதிரி பாத்திருக்கார். என் கனவு ஆசை எல்லாம் போச்சுடி.

ஐடி கம்பெனில வேலை செய்யறவனா பாத்து கல்யாணம் பண்ணிண்டு அமெரிக்கால செட்டில் ஆகணும்னு ஆசைப்பட்டேன். கடைசில என் தலையெழுத்து ஒரு கடுக்கனை கல்யாணம் பண்ணிண்டு மாம்பலத்துல குப்பை கொட்டணும்னு இருக்கு..."

"ஏண்டி! உனக்கு பிடிக்கலைன்னா பண்ணிக்க முடியாதுன்னு ஸ்ட்ராங்கா சொல்ல வேண்டியது தானே..? இங்க உக்காந்து பொலம்பிண்டு இருக்கே?"

"நீ சொல்வேடி..! உனக்கு எங்க புரியப் போறது? கெஞ்சி.. அழுது… உண்ணாவிரதம் கூட இருந்து பாத்துட்டேன். நான் பாத்த மாப்பிள்ளைக்கு தான் நீ கழுத்தை நீட்டணும்னு அடிச்சு சொல்லிட்டார். கூட அம்மாவும் அப்பாவை எதுத்து பேசற அளவுக்கு பெரியவளா ஆயிட்டியான்னு கன்னத்துலயே இடிக்கிறா!!"

சொல்லும்போதே காயத்ரிக்கு நா தழுதழுக்க பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

கேட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதனுக்கு சுரீரென்று இருந்தது. யாரோ ஓங்கி முகத்தில் அறைந்தது போல சுள்ளென்று வலித்தது. இதற்கு மேல் கேட்க முடியாது. எழுந்து விடலாம் என்று நினைத்தாலும் அவளுக்கு தெரியாமல் போக முடியாது என்ற சூழல்.

நெஞ்சம் வலிக்க வலிக்க அமர்ந்திருந்தவன் மேல் இன்னும் நெருப்பை வாரிக் கொட்டினாள் காயத்ரி.

"அவனோட எப்படிடி வெளில போவேன் சொல்லு? கட்டுக்குடுமி வெச்சிண்டு காதுல கடுக்கன் போட்டுண்டு வேஷ்டி கட்டிண்டு இருக்கறவனோட நான் எப்படி கை கோத்துண்டு ஜோடியா மால் தியேட்டர்னு போக முடியும்..? சொல்லு..!

அவனுக்கு நாலு வார்த்தை இங்கிலீஷிலே பேச வருமான்னு கூட தெரியல. எங்கப்பா நிச்சயமே பண்ணிண்டு வந்துட்டாராம். இனிமே என்ன பண்ண? என் தலைவிதி..."

"ஏண்டி! மாப்பிள்ளை பாக்க சகிக்கலியா..?"

அவள் தோழிக்கு இன்னும் கொஞ்சம் வம்பு வேண்டியிருந்தது.

"ஆளெல்லாம் நன்னா தான் இருக்கார். நல்ல ஒசரம். என்னை விட வெளுப்பு. மீசையில்லாத அஜித் மாதிரி இருக்கார். சிரிச்சா கன்னத்துல குழி விழறது..."

"ஏண்டி! பிடிக்கல பிடிக்கலன்னு இவ்வளவு கவனிச்சிருக்கியா நீ?"

அவள் வர்ணனையில் விஸ்வநாதன் முகத்தில் கசந்த புன்முறுவல்.

அதற்கும் காயத்ரி சொன்ன பதிலில் சலிப்பு தான்.

"எங்கப்பா பிடிச்சா உடும்புப்புடி தாங்கறச்சே கழுத்தை நீட்டித் தானே ஆகணும். வேற வழி?"

அவளைத் தேடி இன்னும் சில பெண்கள் வர அதற்கு மேல் அவளை சந்திக்க விரும்பாமல் அப்படியே வெளியேறி விட்டான் விஸ்வநாதன்.

அவள் மனம் புரிந்த பிறகு கல்யாணத்தை தொடர மனம் வராமல் அம்மாவிடம் சொல்லியும் பார்த்தான்.

"ஏம்மா ..? அந்த பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு பண்ணலாமே மா?"

"விச்சு! வெங்கடேசன் ஏற்கனவே சொல்லிட்டான். அவன் பொண்ணுக்கு சம்மதம் தானாம். நானே கேட்டுட்டேன். எங்கப்பா சொன்னா எனக்கு சரி தான் மாமின்னு சொல்லிடுத்து.

அவ சமத்து குழந்தை டா! உங்க அத்தைக்கு தான் ரொம்ப பிடிச்சிருக்கு. அரவிந்த் கூட மன்னி நன்னா இருக்காமானு சொல்லிட்டான். அதனால ஒத்தரையும் கேட்க வேண்டாம்.." என்று முடித்து விட்டார்.

இந்த காலத்து பொண்கள்லாம் என்னமா பேசறதுகள். மாப்பிள்ளை எப்படி இருக்கணும் எப்படி வெச்சிக்கணும்னு லிஸ்ட்ன்னா போடறா? இது ஓண்ணு சொல்லலியே! "

அவளைப் பற்றி பெருமையாய் பேசிய அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை. அவன் நினைத்திருந்தால் வெங்கடேசனிடம் சொல்லி கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் சொல்ல மனம் வரவில்லையே.

அதையெல்லாம் நினைத்தபடி காரை ஒட்டியவன் காயத்ரியை கவனிக்கவே இல்லை. அவள் அவனை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்ப்பதையும் அவன் தீவிர சிந்தனை அவளுக்கு கவலை தருவதையும் கவனிக்கவே இல்லை.

இருவரும் திருவல்லிக்கேணியில் இருந்த அவள் வீட்டு வாசலில் போய் இறங்கிய போது காயத்ரியின் பெற்றோர் இருவரும் வாசலிலேயே நின்றிருந்தனர்.

"வாங்கோ மாப்பிள்ளை..! இன்னும் காணலியேன்னு கவலை பட்டிண்டு இருந்தேன்..."

என்று வெங்கடேசன் கை கொடுத்து வரவேற்க ஜானகியும் புடவை தலைப்பை தோளை சுற்றி போர்த்திக் கொண்டு "வாங்கோ மாப்பிள்ளை..! என்று வரவேற்றார்.

'நானும் குத்துக்கல்லு மாதிரி பக்கத்துல நிக்கறேனே..! என்னை வான்னு சொல்ல தோணித்தா..?'

காயத்ரியின் முகம் கடுகடுத்தது.

"மாப்பிள்ளை நீங்களும் காயத்ரியும் சேந்து நில்லுங்கோ! ஆர்த்தி எடுத்துடறேன்.."

என்று ஜானகி சொல்ல விஸ்வநாதன் திரும்பி காயத்ரியை பார்த்தான்.

"என்னடி காயத்ரி! மசமசன்னு நின்னுண்டிருக்கே! மாப்பிள்ளையை எவ்வளவு நாழி வாசல்லயே நிக்க வெக்கறது?"

என்று ஜானகி காயத்ரியை அதட்ட 'இப்படி திட்ட என்னை எதுக்கு கூப்பிடனும்...?' என்று வாடிய முகத்தோடு விஸ்வநாதனின் பக்கத்தில் வந்து நின்றாள்.

இருவருக்கும் ஆரத்தி எடுத்து அந்த நீரில் பொட்டு வைத்து "உள்ளே போங்கோ!" என்று சொல்லி ஜானகி வாசலில் ஆரத்தி நீரை கொட்ட சென்றார்.

அதன் பிறகும் இருவருமாக மாப்பிள்ளையை மாறி மாறி கவனிக்க காயத்ரியின் காதில் புகை வந்தது.

"மாப்பிள்ளை! எல்லாம் சுடச்சுட இருக்கு. காபி அது இதுனு குடிச்சா வயித்த அடைச்சிடும். வாங்கோ! இப்பவே சூடா சாப்டுடலாம்...காயத்ரி நீயும் உக்காந்துக்கோ.."

என்றவர்கள் அவன் இலையை பார்த்து பார்த்து கவனித்தனர்.

"காயத்ரி..! எல்லாம் எதிர இருக்கு.. உனக்கு வேணுங்கிறத போட்டுக்கோ.." என்றதோடு சரி. அதன்பிறகு அவளை கேட்கவே இல்லை.

விஸ்வநாதனுக்கே அவள் முகம் வாடியிருப்பதை பார்க்க ஒரு மாதிரி ஆகிவிட்டது. நடுவே "இந்த கறி போட்டுக்கறியா?"" அவன் என்று கேட்டு விட அவன் மேலும் திரும்பியது அவள் கோபம்.

'எங்காத்துல வந்து எனக்கே உபச்சாரமா..?'

அவள் பதிலேதும் சொல்லாமல் வேண்டாம் என்று தலையாட்டினாள். மெளனமாக எதோ கொஞ்சம் சாப்பிட்டு அவள் எழுந்து விட இன்னும் விஸ்வநாதனுக்கு உபச்சாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.

"டீ காயத்ரி ..! மாப்பிள்ளை சங்கோசப்படறார். நீ பாத்து அவருக்கு எது பிடிக்குமோ கவனி..." என்று ஜானகி உத்தரவிட காயத்ரி அழுதே விடுவாள் போலிருந்தது.

மூன்றே நாட்களில் தன் வீடு தலைகீழாய் பிரண்டு விட்டதே.

பதிலே பேசாமல் காயத்ரி அந்த இடத்தை விட்டு போக ஜானகி தான் சமாளித்தார்.

"தப்பா நினைச்சிக்காதீங்கோ மாப்ள! கொஞ்சம் செல்லம் குடுத்து வளத்துட்டோம். போகப்போக சரியாகிடுவா..."

விஸ்வநாதன் அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு பரசேஷணம் செய்து விட்டு எழுந்தான்.

சாப்பிட்டு வந்த பிறகும் "நீங்க சித்த நாழி ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ மாப்பிள்ளை.." என்று படுக்கையறையை காட்டி விட்டு வெங்கடேசன் சென்றார்.

அடுத்து காயத்ரியை அழைத்து "இந்தா ..! மாப்பிள்ளைக்கு வெத்தலை தட்டை கொண்டு போ...! கொஞ்ச நாழி ரெண்டு பேருமா பேசிண்டு இருங்கோ..." என ஜானகி துரத்த காயத்ரி உம்மென்று போய் விஸ்வநாதனிடம் கொடுத்தாள்.

'அம்மா! அவர் பகல்ல என் பக்கத்துல கூட உக்காந்து பேச மாட்டார். நீ வேற..?' என்று காயத்ரிக்கு சொல்ல வேண்டும் போலிருந்தது.

காயத்ரி தட்டை விஸ்வநாதனிடம் கொடுத்து விட்டு வெளியே போக திரும்ப விஸ்வநாதன் "உங்கம்மா உன்னை சித்த நாழி என் கூட உக்காந்து பேச சொன்னா போலருக்கே... பேசலியா?" என்று கேட்டு குறும்பாய் சிரித்தான்.

காயத்ரி அவனை ஆச்சரியமாய் பார்த்தாள்.

"என்னன்னா..! நம்மாத்துல தான் நீங்க ரூமூக்கு வந்தா இப்படி பேசுவேள்..? இங்க கூடவா பேசுவேள்...? அதுவும் பட்டப்பகல்ல...?"

"இன்னிக்கி என் ரூல்ஸுக்கு சி எல் போட்டுட்டேன் பட்டூ .." என்றவன் அவள் கையை பிடித்து தன் மடியில் அமர வைத்துக் கொண்டான்.

அவள் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தி "ஏன் இந்த முகம் வாடியிருக்கு..? கண்ணு ரெண்டும் சிவந்து இருக்கு? மூக்கு கூரா கிட்ட வந்தா குத்திடுவேன்னு மிரட்டறது...? வாய் உம்முனு குவிஞ்சிருக்கு.."

என்றபடி அவள் முகத்தை தொட்டு காட்டி கேட்க காயத்ரியால் அதற்கு மேல் பொறுத்திருக்க முடியவில்லை.

"மூணே நாளுல எங்கப்பா அம்மாக்கு நான் அவா பொண்ணுங்கறதே மறந்துடுத்துன்னா. என்னை கண்ணுக்கே தெரியல...உங்களை தான் கவனிச்சிண்டே இருந்தா..."

முகத்தை தூக்கி வைத்த படி காயத்ரி பேச விஸ்வநாதன் இவள் குழந்தையே தான் என்று முடிவு செய்தான்.

"அது அப்படி இல்லடா பட்டூ. இது உனக்கு பழகின இடம் எனக்கு தானே புதுசு. அதான் என்னை கவனிக்கிறா..? நம்மாத்துல அம்மா அத்தை என்னை கவனிச்சிண்டா இருக்கா? உன்னை தானே பாத்துக்கறா? அது போல தான்..."

அவன் சொன்னதும் அதுவும் சரியோ என்று காயத்ரி யோசித்தாள்.

'உண்மை தானே..! அங்கே அத்தையும் அம்மாவும் என்னை தானே பாத்துக்கறா..? அப்படியும் இருக்குமோ..?'

விஸ்வநாதன் புன்னகையுடன் அவள் முகம் பார்க்க காயத்ரி அப்போது தான் வெற்றிலை தட்டை பார்த்தாள்.

"நீங்க வெத்தலை பாக்கு எல்லாம் கூட போட்டுப்பேளா?" என்று முகம் சுளித்து கேட்க விஸ்வநாதன் சிரித்தான்.

"சாப்பாட்டுக்கு அப்பறம் ஏன் இதை தரான்னா சாப்ட்ட சாப்பாடு நன்னா ஜீரணம் ஆகும். அதுல நிறைய மருத்துவ குணம் இருக்கு டா.."

"அய்ய.. ஆனா அதை போட்டுண்டா பல்லெல்லாம் கறையாகும். வாய் சிவந்து .. சே..எனக்கு பிடிக்காதுன்னா.”

"சரி நோக்கு பிடிக்கலைன்னா வெத்தலை பாக்கு இல்லாமயே வாய் சிவக்கற வித்தையை சொல்லித் தரவா..?

விஸ்வநாதன் குறும்பாய் சிரிக்க காயத்ரி கிண்டலாய் "இதுலயும் மெடிசினல் பெனிபிட்ஸ் இருக்கான்னா?" என்று கேட்டாள்.

"ம்ம். இதுவும் இதயத்துக்கு நல்லதாம். நோக்கு தான் வெத்தலை போட்டுக்க புடிக்கலியே...இந்த மெத்தெட் வேணா முயற்சி பண்ணுவோமா..?"

என்றபடி அவள் முகத்தை நெருங்கி வர காயத்ரிக்கு அவன் என்ன சொல்கிறான் என்று இப்போது தான் புரிந்தது.

"இந்த மெத்தெட்னா எனக்கும் ஓகேன்னா..." என்று மெல்ல முணுமுணுக்க அதன் பிறகு அங்கு சற்று நேரம் சத்தமே இல்லை.
 

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
111
இந்த ரூம்லேயும் ஏதோ இருக்கு காயத்ரி 😜😜😜😜
 
Top Bottom