• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்- 24

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
162
என்றென்றும் வேண்டும்- 24

முன்பொரு காலத்தில் அருந்தவம் புரிந்த துறவிகளை அவர்களுடைய இறுதி இலக்கான வீடுபேறை அடைய விடாமல் நோய்கள் சூழ்ந்து வாட்டின. செய்வதறியாது திகைத்த முனிவர்கள் ஆத்ரேயர் தலைமையில் இந்திரனிடம் தங்கள் குறையை முறையிட்டனர். உலக உயிர்கள் பிணியின்றி வாழ இந்திரன் அவர்களுக்கு ஆயுர்வேதத்தை பாடம் சொன்னான். இந்திரனுக்கு தக்கனும், தக்கனுக்கு அஸ்வினி குமாரர்களும், அஸ்வினி குமாரர்களுக்கு நான்முகனும் ஆயுர்வேதத்தை பாடம் சொன்னார்கள். பிரம்மன் ஆயுர்வேதத்தை படைக்கவில்லை எல்லையற்ற ஞானத் தொகையிலிருந்து நினைவு கூர்ந்தான் – ஆயுர்வேதம் மண்ணுக்கு வந்த கதை, சரக சம்ஹிதை

சுசுருத சம்ஹிதையில் இந்திரன் வரை இதே வரிசை தான், ஆனால் இந்திரனிடமிருந்து நேரடியாக தன்வந்தரி பாடம் கற்று சுசுருதர் உட்பட அவருடைய சீடர்களுக்கு அளிக்கிறார். காசியப சம்ஹிதையில் இந்திரனிடமிருந்து நேரடியாக பரத்வாஜர் கற்கிறார், பின்னர் காசியபருக்கு அளிக்கிறார். சரக சம்ஹிதை காய சிகிச்சை எனும் பொது மருத்துவ பிரிவுக்கும், சுசுருத சம்ஹிதை அறுவை மருத்துவத்திற்கும், காசியப சம்ஹிதை குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் மூன்று முக்கிய பிரிவுகளை இந்த சம்ஹிதைகள் விவாதிக்கின்றன. மீதி பிரிவுகளுக்கும் இத்தகைய மூல நூல்களும் குரு பரம்பரையும் இருந்திருக்கலாம். நிமி தோளுக்கு மேலுள்ள உறுப்புகளின் நோய்களை மற்றும் சிகிச்சைகளை பற்றி பேசும் ஷாலாக்கியம் எனும் பிரிவைப் பற்றி ‘நிமி தந்திரம்’ என்று ஒரு நூல் எழுதியதாக நம்பப் படுகிறது. நிமியின் வழி வந்த விதேக தேசத்து ஜனகரும் முக்கியமான மருத்துவ நிபுணராக கருதப் படுகிறார். நிமியைப் பற்றிய சுவாரசியமான தொன்மம் ஒன்றுண்டு. நிமி வஷிஸ்டரால் சபிக்கப்பட்டு தனது உடலை இழக்கிறான். தேகமற்றவனின் அரசு என்பதாலே விதேகம் என்று அவனுடைய அரசு அழைக்கப்படுகிறது. விதேகத்தில் இருந்து வந்தவள் என்பதால் வைதேகி என்று சீதைக்கு பெயருண்டு. நிமி பின்னர் சாப மீட்சியாக மனிதர்களின் கண்ணிமைகளில் வாழ்கிறான். கண் மூடுவதை நிமிலனம் என்றும் திறப்பதை உன்மீலனும் என்றும் சமஸ்க்ருதத்தில் சொல்கிறார்கள். ஒரு முறை கண் சிமிட்டும் நேரத்தையே ’நிமேஷம்’ என்று அழைக்கிறோம். இதுவே காலப்போக்கில் மருவி நிமிடம் என்றானது. நிமி கண்ணுடன் தொடர்புபடுத்தப்படுகிறார், கண் உட்பட தோளுக்கு மேலுள்ள உறுப்புகளின் மருத்துவ நிபுணராகவும் கருதப்படுகிறார்.

கந்தர்வர்களை விஷ கொடுக்கு உள்ள பூச்சிகள் என்றும் அப்சரஸ்களை விஷமற்ற நீர் வாழ் பூச்சிகள் என்றும் உய்த்துணர முடியும் என்று அவர் சொல்வதை உதாரணமாக்கலாம். கென்னெத் ஜிஸ்க் கரம்பெல்கர் மற்றும் அவருக்கு பின்பான காலகட்டத்தில் ஆய்வு செய்த பலருடைய ஆய்வு கட்டுரைகளை துணைக்கழைத்து காத்திரமாக தனது நோக்கை பதிவு செய்கிறார்.

கௌசிக சூத்திரம் தான் அதர்வ வேதத்தின் மாந்த்ரீக மருத்துவத்திற்கும் மருந்துகளை பயன்படுத்தும் மருத்துவ முறைக்குமான பாலமாக இருந்திருக்க வேண்டும் என கரம்பெல்கர் அடையாளபடுத்துவது இந்திய மருத்துவ வரலாற்றில் அவருடைய முக்கியமான பங்களிப்பாகும். கௌசிக சூத்திரம் வேத காலத்தில் மாந்த்ரீகம் அல்லாத மருத்துவ தரப்பை சார்ந்தது என்று கரம்பெல்கர் வாதிடுகிறார்.

வேத சம்ஹிதைகளின் காலத்திற்கும் ஆயுர்வேத நூல்களுக்கும் இடையிலான காலகட்டம் முக்கியமான ஆய்வுகளை மாற்றங்களை முன்னெடுத்தது. சரக சம்ஹிதையில் வரும் யஜ்ஜஹபுருஷியம் அத்தியாயத்தில் நிகழும் கூடுகை, ருசியைப் பற்றிய கூடுகை, கர்ப்ப வளர்ச்சியைப் பற்றிய விவாதம் ஆகியவை உபநிடத காலத்து இடையறாத ஞான தேடலை, வினாக்களை நமக்கு நினைவுறுத்துகின்றன. கௌசிக சூத்திரமும் இந்த இடைவெளி காலகட்டத்தை சார்ந்ததே. வேதத்தின் அங்கீகாரத்தை மருத்துவருக்கு வழங்குவதன் வழியாக மருத்துவர்களின் மதிப்பை பொது வெளியில் கௌஷிக சூத்திரம் நிறுவ முயன்றது. மருந்துகளுடன், சில மாந்த்ரீக வேத சடங்குகளை சேர்த்து செய்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்கிறார். எனினும் கென்னெத் ஜிஸ்க் கௌஷிக சூத்திரத்தின் காலகட்டத்தை பொ.மு இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என வகுக்கிறார்.

ஆயுர்வேத கோட்பாடுகள் வேத மருத்துவத்தின் அடிப்படைகளில் உருவானதல்ல. ஆனால் வேத உருவகங்களை, தொன்மங்களை பயன்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின் வேர்கள் தேசாந்திரிகளாக திரிந்த துறவிகளை சார்ந்திருந்தது, குறிப்பாக பவுத்த துறவிகளை சார்ந்திருந்ததாக ஆய்வாளர் கென்னெத் ஜிஸ்க் குறிப்பிடுகிறார். ஆயுர்வேதத்தின் அடிப்படைகளை கட்டமைப்பதில் பவுத்தம் அளப்பறியா பங்காற்றி உள்ளது என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் முன்மொழியும் கருத்தாக இருக்கிறது. சம்ஹிதைகளில் நாம் முறையாக வரையறுக்கப்பட்ட ஆயுர்வேதத்தின் முதல் வடிவம் பவுத்த நூல்களிலேயே உள்ளன.

மருத்துவம் பண்டைய காலத்தில் மெச்சத்தக்க தொழிலாக இருந்ததில்லை. தைத்திரிய சம்ஹிதையில் அஸ்வினி குமாரர்கள் மனிதர்களோடு மருத்துவர்களாக புழங்குவதால் தூய்மையற்றவர்கள் எனும் கருத்து நிலவுகிறது (6.4.9 1-3).

தேவ மருத்துவர்கள் என புகழப்படும் அஸ்வினி குமாரர்களுக்கு அவிசு அளிக்கும் வழக்கம் கூட நின்று போனது. மருத்துவர்கள் தூய்மையற்றவர்கள், ஆகவே யாகத்திற்கு தகுதியற்றவர்கள் என்பதால் பிராமணர்கள் மருத்துவம் புரிய கூடாது என்று அறிவுறுத்துகிறது. (6.4.9.2.2). சதபத பிராமனத்திலும் இதே போன்ற ஒரு சிந்தனையோட்டம் காணப்படுகிறது. (4.1.5.14). பிற்கால நீதிநெறி நூல்கள் பிராமண ஆண்கள் பிணத்தை அண்டக்கூடாது என வரையறுக்கிறது. மருத்துவர்களுக்கு யாகத்தில் அனுமதியில்லை, அவர்களின் உணவையும் மறுக்க வேண்டும் என்கிறது மனு சாத்திரம். (மனு 3:152; 2:212,220). பிராமணர்களின் தூய்மைவாத நோக்கின் காரணமாக மருத்துவம் பிராமணர் அல்லாதவர்களிடமிருந்தே வலுபெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய நோக்காக வெளிப்படுகிறது.

வேதத்திற்கு முற்காலத்தில் நமது மருத்துவ மரபு என்னவாக இருந்தது என்பதை குறித்து ஜிஸ்க் வைக்கும் பார்வைகள் சுவாரசியமானவை. மொகஞ்சதாரோவின் ‘பெரும் குளியல் குளம்’ கூடாக புரியக்கூடிய மருத்துவ சடங்கிற்காக கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார். நீர் சிகிச்சை சிந்து சமவெளி நாகரீகத்தில் முக்கியமான பங்காற்றி இருக்கலாம். பிற்காலத்தில் நீர் மருத்துவ குணம் வாய்ந்ததாக புகழப் படுகிறது. மாதலி தனது தேரை விற்று கொணர்ந்த அமிர்தத்தை இந்திரன் நீரில் வீசினான். நதிகளே அதை திருப்பி கொடுத்தன என்பது வேதத்தில் நீரின் மகத்துவத்தை பறைசாற்றும் தொன்மக் கதை. எட்டு பிரிவுகளில் ஒன்றான ரசாயனத்தின் உருவாக்கத்திற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ‘ஆபம் ரசஹா’ – நீரே ரசம் என்கிறது அதர்வ வேதம். உடலை வளமாக்கும் சாரமாக ரச தாதுவாக பிற்காலங்களில் பரிணாமம் கொள்கிறது. சோம ரசத்துடன் தொடர்புறுத்தப் படுகிறது. அன்றாட புத்துயிர்ப்பு மருந்தாக நீர் குறிப்பிடப்படுகிறது.

அதர்வ வேதத்தில் நோய் என்பது நீர் சுமக்கும் மேகங்கள், மின்னல் மற்றும் வாய்வினால் உருவாகிறது என்றொரு வரி வருகிறது. இது தான் பிற்காலத்தில் முக்குற்றமாக வளர்ந்திருக்க கூடுமா? புற வாயுவையும் உடலுக்குள் ஓடும் வாதத்தையும் இணைத்து சரகர் வாதத்தின் மகிமையை போற்றும் வாத கலாகலியம் எனும் அத்தியாயம் எழுதி இருக்கிறார். அதர்வ வேதத்தில் பிராண, உதான, சமான, வியான அபான எனும் ஐவகை வாயுக்களுக்கு மாற்றாக உதானனை விடுத்து நால்வகை வாயுக்கள் குறிப்பிடப்படுகின்றன. (a.v.10.2)

டேவிட் கோர்டன் வைட் வேத காலத்து யாகம், பலி அதன் நீட்சியாகவே வாத பித்த கபங்கள் உருவகப் படுத்தப்பட்டன என்றொரு வாதத்தை வைக்கிறார். அவிசு, யாகம், அக்னி எனும் மூன்றையும் கப, வாத பித்தமாக உருவகிக்கிறார். ஆனால் அவருடைய தரப்பிற்கு போதுமான வலுவில்லை. வாதம் கிரேக்க ஹுமர்களில் ஒப்பிடக்கூடிய ஒன்றல்ல. யின் – யாங் போல் இரு எதிரெதிர் இயல்புகளே இந்திய மருத்துவத்திலும் இருந்திருக்க வேண்டும் என்கிறார் டொமினிக் உஜாஸ்டிக். சுசுருத சம்ஹிதையிலும் கூட அக்னி- சோமா என வெம்மை – குளிர்ச்சிக்கு இடையிலான சமநிலையே உடல் நலத்தை நிர்ணயிக்கிறது என்றொரு பார்வையும் பதிவாகிறது. மருந்துகளின் செயல்திறனை (வீரியம்) கூட வெம்மை – குளிர்ச்சி என்றே வகுக்கிறார்கள். வெம்மை – குளிர்ச்சி எனும் இருமை இந்திய பண்பாட்டில் வெவ்வேறு தளங்களில் நீட்சியடைகிறது. அக்னி- சோமனாக, சூரிய – சந்திரனாக, பித்த – கபமாக, பாதரசம் – கந்தகமாக இந்த எதிரெதிர் துருவங்களை வகுத்துகொள்ள முடியும். அக்னி – சோமா இருமைக்கு அப்பால் வாதத்தை புதிதாக உருவகித்ததால் அதன் சார்பாக பல்வேறு தர்க்க விளக்கங்களை அளிக்க வேண்டி இருந்திருக்கலாம், இந்த அதீத முக்கியத்துவத்துக்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம் எனும் வாதத்தை முன்வைக்கிறார். சில ஆரம்பகால பவுத்த நூல்களில் முக்குற்றங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வினைய பீடக நூல்களிலும், மகாபாரதத்திலும் கூட உள்ளன.

ஆயுர்வேதத்தின் அடிப்படைகள் என்று கருதப்படும் முக்குற்றங்கள், அறுசுவைகள், ஐம்பெரும் பருக்கள், ஏழு தாதுக்கள், ஸ்ரோதஸ்கள் என இதுவுமே வேதங்களில் இருந்து ஆயுர்வேதத்தை அடைந்தற்கான சான்றுகள் இல்லை.

ஆயுர்வேதம் மூவித சிகிச்சைகளைப் பற்றி சொல்கிறது. தைவ வியாபஷ்ரயம், யுக்தி வியாப்ஷ்ரயம், சத்வாவஜயம். யுக்தி வியாபஸ்ரையம் சிகிச்சை முறையில் தர்க்க ரீதியான சிகிச்சை முறைகளை மருந்துகளை பரிந்துரைக்கும். சத்வாவஜயம் என்பது மனதை வெல்லுதல், புலனடக்கம் என்றும் கூறலாம். தெய்வம்/ தைவம் என்பது சமஸ்க்ருதத்தில் கர்மவினையை சூட்டுவதற்கான சொல்லாகவும் இருக்கிறது. கர்ம வினையை ஆற்றுபடுத்த தைவ வியாபஷ்ரய சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது. மணி, மந்திர, ஹோமம், ஜபம், பிரார்த்தனை போன்றவை அதன் வழிமுறைகள் என்று வகுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தின் இந்தப் பிரிவு அதர்வ வேதத்துடன் நெருங்கிய தொடர்புடையது.

அதர்வ வேதத்தில் மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளே நோய் தீர்க்கப் பயன்பட்டிருக்கின்றன. ஒற்றை மூலிகைகளை சடங்குகளில் பயன்படுத்துவதும் வாடிக்கை தான். பின்னர் காலபோக்கில் மருந்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த இருமை பிற்கால ஆயுர்வேத ஆக்கங்களிலும் தொடர்ந்தது. மேலும், மாந்த்ரீக சிகிச்சை மருத்துவ சிகிச்சையை காட்டிலும் புனிதமானது எனும் போக்கு நிலவியதால் மருத்துவ சிகிச்சையை இரண்டாமிடத்தில் வைத்தே அதர்வ வேதம் நோக்கியது. ‘உணவு பிழைகளால் நேரும் நோயை ஆயுர்வேதத்தின் மருத்துவ முறை குணமாக்கும். பாவங்களாலும், மீறல்களாலும் நிகழும் நோய்களை அதர்வ வேதத்து மந்திரங்கள் குணமாக்கும். எனினும் ‘அதர்வன்’ உணவு வழி வரும் நோயிலிருந்தும் காக்கிறான்’ என்கிறது கௌஷிக சூத்திரம்.

மதத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையிலான உறவு எல்லா நாகரீகங்களிலும் உள்ளது தான். பிரார்த்தனை வழியாகவும் சடங்குகள் வழியாகவும் தெய்வ ஆற்றலின் துணையுடன் எல்லா நோயையும் குணப்படுத்திவிடலாம் எனும் நம்பிக்கை எல்லா பண்பாடுகளுக்கும் பொது. இன்றும் கூட உபவாச ஜெபங்கள், பிரார்த்தனைகள் நம்பிக்கை மருத்துவம் போல் செயலாற்றி நோயாளிகளை ஆற்றுபடுத்துகிறது.

புறக் காரணங்களினால் வரும் வீக்கம், கட்டிகளுக்கு மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சரக சம்ஹிதை சூத்திர ஸ்தானம் 18 ஆம் அத்தியாயத்தில் கட்டுகள் மற்றும் மந்திரங்கள் பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகிறது. காயங்களை ஆற்றவும், வீக்கம் வடியவும் மந்திரங்கள் சம்ஹிதையில் உள்ளன. பாம்பு மாற்றம் இன்னபிற விஷ கடிகளுக்கு மந்திரங்களின் பயன்பாடு சரக மற்றும் சுசுருத சம்ஹிதைகளில் புழக்கத்தில் உள்ளன. சுசுருதர் ஒரு படி மேலே சென்று, மந்திரங்கள் பயனளிக்கவில்லை எனில் விட முறிவு மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என நடைமுறை அறிவோடு கூறுகிறார். நாய் கடிக்கு சுசுருதர் மந்திரங்களை கூறுகிறார். மந்திரித்த நீரை நாற்சந்தியில் அல்லது நதிக்கரையில் தெளிக்க வேண்டும் என்றும் சொல்கிறார். கௌசிக சூத்திரத்தில் தீய சக்திகளை விரட்ட நாற்சந்தியில் புனித நீர் தெளிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தொடர்புறுத்தி கொள்ளலாம்.

ரிக் மற்றும் அதர்வ வேதங்களில் பிராணிகளின் விஷத்தன்மை மற்றும் அதை தீர்க்கும் முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. போவர் சுவடிக்கட்டில் பிக்குவை தீண்டிய கருநாக விடத்தை இறக்கும் புத்தர் கூறிய ஆறு மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சம்ஹிதைகளில் மந்திரங்கள் விஷமுறிவு மருந்து தயாரிப்பின் போதும் உச்சரிக்கப் பட்டுள்ளன. (ச.ச.சி. 23, 223). விஷம் பற்றிய போலியான பயத்தை நீக்க மந்திரித்த நீர் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மகா கந்தி ஹஸ்தி எனும் விஷமுறிவு மருந்தை தயாரிக்கும் போது (ச.சி.23, 90-94) குறிப்பாக மருந்தை அரைக்கும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் சொல்லப்பட்டுள்ளது. உரிய முறையில் மந்திரித்து செய்யப்பட்ட இம்மருந்தை அதர்வ வேதங்களின் தீய மந்திரங்கள் கூட அழிக்க இயலாது என்கிறார் சரகர். அரக்கிற்கு ஆற்றல் ஊட்ட குஷ்டம் எனும் மூலிகைக்கு ஆற்றல் ஊட்ட என இதன் முன் தொடர்சிகளை வேதத்தில் காணலாம்.

ம்ருதசஞ்சீவன அகதம் தீவினை, செய்வினை மந்திரங்களுக்கு எதிராக செயல்படும் என்று அதன் பயன் மதிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இன்றும் கூட கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் கைவிஷ பரிஹாராதி குளிகை என்றொரு மருந்து செய்வினை அகற்றும் மருந்தாக தயாரிக்கப் படுகிறது. பேள சம்ஹிதை சரக- சுசுருத சம்ஹிதைகளை காட்டிலும் தொன்மையாக இருக்கலாம். ஈசனின் கோபத்தினால் சுரம் உருவானது என்பதால் ஈசனை வணங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ருத்திரனை வணங்கும் தூய்மையான, துறவி, கடமை தவறாத, மருத்துவனே சுர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. விஷ்ணு சகஸ்ர நாமம் சுரத்தின் போது வாசிக்கலாம் என்று சரக சம்ஹிதையில் உள்ளது. இந்த்ராக்ஷி சிவகவசம் முதல் கந்தர் சஷ்டி கவசம் வரை பல்வேறு மந்திரங்கள் உடல் ஆரோக்கியத்தை கோரி பாராயணம் செய்யப்படுவது மரபாக உள்ளது.

உன்மாதம் (மனப் பிறழ்வு) அபஸ்மாரம் (வலிப்பு) போன்ற நோய்களுக்கு மாந்த்ரீக சிகிச்சைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. அக்னி, அப்சரஸ்கள், பகன், இந்திரன் போன்றவர்களுக்கு ஆகுதி வழங்கவேண்டும். மந்திரங்கள் உச்சரிக்க வேண்டும், மந்திரித்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ரிக்வேதம் அதர்வ வேதங்களில் அபஸ்மாரம் எனும் சொல் பயன்பாட்டிலே இல்லை என்பது கவனிக்கத் தக்கது.

அஷ்டாங்க சங்கிரகத்தில் வாக்பட்டர் இரண்டு மாந்த்ரீக மண்டல வரைபடங்களை அளிக்கிறார். அதன் பின்னர் பதினாறாம் நூற்றாண்டில் தோடரநாதர் ஆக்கத்தில் தான் வரைபடம் காணக் கிடைக்கிறது. ரசவாத நூலான ரசார்ணவத்திலிருந்து பெறப்பட்டதது. இதற்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் ஹாரித சம்ஹிதையில் சுலபமான பிரசவத்திற்காக ஒரு யந்திரத்தின் வரைபடம் அளிக்கப்பட்டுள்ளது. பொ.பி 850 வாக்கில் அரேபிய மருத்துவத்தில் காணக்கிடைக்கும் சதுர மாந்த்ரீக யந்திரத்தை ஒத்த வடிவம் ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வ்ருந்த மாதவரின் நூலிலும் தென்படுகிறது என்கிறார் ரோசு.

சாரங்கதர பத்ததி எனும் நூலில் விருக்ஷ ஆயுர்வேதத்தின் பகுதியாக சில மந்திரங்களை பிரதியெடுத்து செடி மரங்களுக்கு கீழ் புதைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சுசுருத சம்ஹிதையில் தாவரங்களை வேரோடு பிடுங்கும் போது ஆற்றுபடுத்த கூறப்படும் மந்திரம் உள்ளது. வேருடன் தாவரங்களை பிடுங்கும் முறை அதர்வவேதத்தில் உள்ளது தான். அதற்காக மன்னிப்பு கோரி ஆற்றுப்படுத்தும் மந்திரம் ரிக் வேதத்தில்(10. 97.20) குறிப்பிடபட்டுள்ளது.

சுசுருத சம்ஹிதை உத்திர ஸ்தானத்தில் புராணங்கள் மற்றும் மகாபாரதத்திலிருந்து சகஜமாக தொன்மங்கள் கையாளப்படுகிறது. பிற்கால சேர்க்கைகளாக இருக்கக்கூடும். குழந்தைகள் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மந்திரங்கள் அதர்வ வேதத்தில் வேர்கொண்டவை. குழந்தைகளை பீடிக்கும் கிரக நோய்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பேர்கள் யாவுமே தொன்மத்துடன் தொடர்புடையவை. பூதனை என்றொரு நோய்க்கு பெயர். தாய்பால் வழி வருவது. நாமறிந்த தொன்மத்தில் பூதனை குழந்தை கண்ணனை கொல்வதற்கு நஞ்சு ஏறிய பால் ஊட்டுகிறாள். ரேவதி என்பது மற்றொரு நோய்க்கு பெயர். பலராமரின் மனைவி என்று நமக்கு இப்பெயர் நினைவில் இருக்கிறது. நைகமேஷம், ஸ்கந்தம் போன்றவைகள் எல்லாம் கிரகங்களின் பெயர்களாகவே வருகின்றன.

ஆயுர்வேதத்தில் வேதத்தின் தாக்கம் உள்ள பகுதிகள் எவை என்று பார்க்கும் போது, தொல்கால மனிதர்கள் தங்கள் தர்க்கத்திற்கு அப்பால் உள்ள தளங்களை, மரண அச்சம் அதீதமாக உள்ள இடங்களில், முழுக்கவும் தற்செயல் சார்ந்திருக்க வேண்டிய தருணங்களில் மாந்த்ரீக மருத்துவத்தை அதிகமும் நாடி இருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. அச்சம் நம்மை இயக்கம் போது நாம் தர்க்கத்தை காட்டிலும் இயல்பாக நம்பிக்கையில் தஞ்சமடைகிறோம்.

நோய் நீக்குபவன் மருத்துவன். நோயை எவையெல்லாம் நீக்குமா அவை மருந்தாகும் – சரகர்

அதர்வ வேதம் 9.6 பாடலில் மேம்போக்காக தலை, நெஞ்சு மற்றும் வயிறு, முதுகு மற்றும் ஆசன வாய், கால்கள், கரங்கள், உதிரம் மற்றும் பிற பகுதிகள் என நோய் பிரிவை அதன் இருப்பிடம் சார்ந்து வகுக்கிறது. வேதத்தில் கூறப்பட்டுள்ள நோய்களை உள் நோய்கள், புற நோய்கள் என பொதுவாக இரண்டாக வகுக்கலாம். உள் நோய்களை மேலும் மூன்றாக வகைப்படுத்தலாம் – யக்ஷ்மன் தொடர்புடைய நோய்கள், தாக்மன் தொடர்புடைய நோய்கள், இரண்டும் அற்ற வேறு நோய்கள். புற நோய்கள் பொதுவாக காயம், தோல் நோய்கள் மற்றும் விடம் தொடர்பானவை.

யக்ஷ்மன் மனிதர்களையும் மிருகங்களையும் பீடிக்கும் அசுரன். ஒவ்வொரு பாகமாக பற்றுவான். கைகால்களை செயலிழக்கச் செய்வான், சுரம் தருவிப்பான், நெஞ்சு வலி அளிப்பான், உடல் வலி ஏற்படுத்துவான் என்கிறது அதர்வ வேதம். தேய்மான நோய்களுடன் தொடர்புடையவை என யக்ஷ்மனின் நோய் குறிகளை கூறலாம்.

பல்வேறு வகையான யக்ஷ்மன்கள் உள்ளன. குழந்தைகளையும் பெரியவர்களையும் அவை பீடிக்கும். வேறு வேறு நோய்களுடன் சேர்ந்து வரும் என்றும் சொல்கிறது. பெண்வழி உறவின் வழியே யக்ஷ்மன் வரலாம் என்றும் சோமத்தை சரியாக பக்குவப்படுத்தவில்லை என்றாலும் வரலாம். பாவத்துடன் இந்நோய் தொடர்புப் படுத்தப்படுகிறது. கையில் மூலிகையை வைத்துக்கொண்டு மந்திரங்களை உச்சரித்தால் யக்ஷ்மன் பறவைகளுடன் சேர்ந்து பறந்துவிடும் என்கிறது அதர்வ வேதம். அக்னி வாயு, சாவித்திரி, ஆதித்ய போன்றவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட யக்ஷ்மனை விரட்டுவார்கள் (2.33) என்றும் சொல்கிறது.

பிரஜாபதியின் 33 மகள்களை (பிற்கால தொன்மங்களில் இந்த எண்ணிக்கை 27 ஆக நட்சத்திரங்களின் எண்ணிக்கையுடன் இயைந்து வருகிறது) நிலவரசன் மணந்து கொள்கிறான், ஆனால் ரோஹினியின் மீது அதீத மையல் கொண்டிருந்தான். மீதி 32 பேரும் தந்தையிடம் திரும்புகிறார்கள். அனைவரையும் சமமாக நடத்துகிறேன் என உறுதியளிக்கிறான், ஆனால் உறுதியை மீறி மீண்டும் ரோகினியை தேர்கிறான். அப்போது அவனை யக்ஷ்மன் பீடித்தது. அரசனை பீடித்தது என்பதால் ராஜ யக்ஷ்மா என்றும், பாவத்தால் விளைந்தது என்பதால் பாவ யக்ஷ்மன் என்றும், மனைவியிடமிருந்து வந்தது என்பதால் ஜயேன்யா என்றும் வழங்கப்படுகிறது. ஆதித்தியனுக்கு அவிசளிக்க வேண்டும் என்பதே சிகிச்சை. ஜயேன்யா எனும் சொல் ஜனனத்துடன் தொடர்புடையது. பாலுறவு வழி பரவும் நோய் அல்லது பிறப்பிலிருந்து இருக்கும் நோயாக இருக்கலாம்.

அதர்வ வேதத்தில் நெஞ்சு வலியை பற்றி குறிப்பு கானக்கிடைக்கிறது. பலாசம் என்றொரு நோய், யக்ஷ்மனின் வகையாக, தாக்மனின் சகோதரனாக கூறப்படுகிறது. கைகால்களில் உள்ள மூட்டுகளை பலவீனப்படுத்தி இதயத்தை தாக்கும், அக்குளில் விரையளவுக்கு சிவந்த வீக்கம் தென்படும். அதர்வ வேதம் எல்லா நோய்களையும் எதிரிகளுக்கு ஏவிவிட முடியும் என்று நம்புகிறது.

க்ஷேத்ரிய எனும் சொல் விளைநிலத்தை குறிப்பதாக உள்ளது. பரம்பரை நோயாக இருக்கலாம் என்கிறார் ஜிஸ்க். ஒருவகையான யக்ஷ்மன். குழி விழுந்த கண்கள், வலிப்பு போன்றவை இருக்கும். மாந்த்ரீக விடமேரிய உணவை உட்கொள்வதால் நேர்வது என்று சொல்கிறது வேதம். களிமண், மான் கொம்பு போன்றவை நோயை விரட்ட பயன்படுத்தப்பட்டன. தொல்லியல் ஆய்வுகள் மான் கொம்பின் நெடுங்கால பயன்பாட்டிற்கு சான்றுரைக்கின்றன. நாயுருவியும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதர்வ வேதத்தில் குறிபிடப்பட்டுள்ள தாக்மன் நோய் ருத்திரனுடன் தொடர்புபடுத்தபடுகிறது. வருணனின் புதல்வன். கூர்மையான வலி ருத்திரனால் ஏற்படுகிறது. ருத்திரனின் பானங்கள் கட்டிகளை எழுப்புகிறது. தாக்மன் மற்றும் காசம் ருத்திரனின் படைக்கலம். ருத்திரனின் கோபத்தின் காரணமாகவே சுரம் உருவானது என்பது சரக சுசுருத சம்ஹிதையில் உள்ள நம்பிக்கை. ரிக் வேத கூற்றின் படி ருத்திரனே முதன்மை மருத்துவனும் கூட..

க்ரோமான் அவருடைய ஆய்வு கட்டுரையில் தாக்மனை மலேரியா காய்ச்சலுடன் ஒப்புமை செய்து நிறுவியிருக்கிறார். அதன் அறிகுறிகள் ஹிப்போகிரேட்ஸ் வகுத்த மலேரியா குறிகளுடன் மிக நெருக்கமாக ஒத்துள்ளன. மழை காலத்துடன் தாக்மன் தொடர்பு படுத்தப்படுகிறது. இடியும் மின்னலும் அதன் ஆயுதம் என்கிறது வேதம். இடி மனிதர்களில் அதையொத்த இருமலை ஏற்படுத்துகிறது. மின்னலின் மஞ்சள் ஒளி காமாலையை ஏற்படுத்துகிறது. அதன் தீவிரம் தலையில் பிளக்கும் வலியை ஏற்படுத்துகிறது. தாக்மன் நீரிலிருந்து பிறந்த நெருப்பு என்றும் சுட்டப்படுகிறது. அதே காலத்தில் தான் மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். எனினும் அனைத்து அறிகுறிகளும் மலேரியாவை ஒட்டியதாகவும் இல்லை. குளிரும் சுரமும் மாற்றி மாற்றி வரும் வெவ்வேறு நோய்களுக்கும் இது பொருந்தக்கூடும். கரம்பெல்கர் டைபாய்ட், ஃப்ளு மற்றும் மலேரியா என மூன்று வெப்ப மண்டல நோய்களுடன் தொடர்பு படுத்துகிறார். எனினும் வரலாற்று ரீதியாக மலேரியாவின் முதல் ஆவணம் இதுவாகவே இருக்கும் என்கிறார் ஜிஸ்க்.

நோயுற்றவரின் உடலில் இருந்து தாக்மனை மழைகாலத்தில் புழங்கும் தவளைகள் மீது ஏவிவிடுவது சிகிச்சை முறையாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குளிர்ந்த, ஈரமான தவளை கொதிக்கும் சுரத்தை தணிக்கும் என்றொரு நம்பிக்கை நிலவியது. க்ரோமன் ஐரோப்பாவில் இதே போன்று நிலவிய போகிமிய பழக்கத்தை சுட்டி காட்டுகிறார். புனித கிரேகர் நாளுக்கு முந்தைய பனிபடர்ந்த நாளில் பச்சை தவளை ஒன்றை பிடித்து ஒரு பையில் இட்டு தைத்து சுர நோயாளி கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். அந்த பையின் உள்ளே என்ன இருக்கிறது என்பது நோயாளிக்கு தெரியவேண்டியதில்லை. ஒன்பது நாட்கள் அப்படி இருந்தால் சுரம் நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை நிலவியதை பதிவு செய்கிறார். குஷ்ட (கோஷ்டம் என்று அறியப்படும் அதே மூலிகையா என்பது தெளிவாகவில்லை) தாக்மனை விரட்டும் முக்கிய மூலிகையாக கூறப்பட்டுள்ளது. சோமனுக்கு சகோதரன் என புகழ்ந்து கடவுளின் நிலையில் போற்றப் படுகிறது. தாக்மன் (காய்ச்சல்) நோய்க்கு பழுக்க காய்ச்சிய கோடாரியை நீருக்குள் அமிழ்த்தி, அந்நீரை குடிக்க செய்வது ஒரு சிகிச்சையாக கூறப் பட்டுள்ளது. இன்று வரை குழந்தைகளுக்கு பயத்தால் வரும் சுரத்திற்கு குழுமோர் காய்ச்சி கொடுக்கும் வழக்கம் நம்முள் உள்ளது.

ரபஸ் என்றொரு நோய் க்ஷேத்ரிய மற்றும் தாக்மனுக்கு நெருக்கமான விவரணைகள கொண்டுள்ளது. மீறல்களால் நேர்கிறது, கால் வழியாக பரவும். அஜகவா எனும் கிருமி இதற்கு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. மலினப்பட்ட நீருடன் தொடர்புடையது. நீர் அல்லது நீர்மை கொண்ட மருந்து தீர்வுக்காக அளிக்கப்படுகிறது. தோலுக்கு அடியில் வளரும் புழு என்றும் கூறப்படுகிறது. வேதத்தில் கிருமி எனும் பயன்பாடு புழு எனும் நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குடல் புழு, கொக்கி புழு போன்றவைக்கு நெருக்கமான விவரணைகளை கவனிக்க முடிகிறது.

ரிக் வேதத்தில் அதற்கு முன் எங்குமே குறிப்பிடபடாத நோய்
உருவாக்கும் ஆப்வ எனும் பெண் தீய ஆற்றலை பற்றிய சிறிய விவரணை வருகிறது. வயிற்றில் வசிக்கும் அவள் பீடிக்கபட்டவரின் மனதை குழப்புவாள், கை கால்களை இழுத்துப் பற்றுவாள், நெஞ்செரிச்சல் ஏற்படுத்துவாள், இருள் மூட செய்வாள். இந்த அறிகுறிகள் ‘அச்ச தாக்குதலின்’ (panic attack) விவரணைகளுடன் நெருக்கமாக இருப்பதை ஜெல்நேர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆமீவா என்று குறிப்பிடப்படும் பெண் தீய ஆற்றல் ஏழ்மையுடன் தொடர்புடைய ஊட்டக் குறைவாக இருக்கும் என்கிறார் ஜிஸ்க். மாட்டுப் பால், நெய் போன்றவை அதை விரட்டும் சடங்குகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆமீவா வயிற்றில் உள்ள குழந்தைகளின் மாமிசத்தை உண்ணும் என்றொரு குறிப்பும் காணக் கிடைக்கிறது. மகோதரம் வருணனால் உருவாகிறது. மகோதர நோய் வந்தவன் நீர் நிரம்பிய தோல் பை போல இருப்பான். சுற்றியும் நீரிருந்தும் அருந்த முடியாதவன் என்று ரிக் வேதம் கூறுகிறது.

விஸ்கந்த – சம்ஸ்கந்த எனும் தீய ஆற்றல்களின் விவரணை டெட்டனசை ஒட்டியுள்ளது. விஸ்கந்தம் என்றால் தோள்களை கிழித்து அப்பால் எறிவது, சம்ஸ்கந்த என்றால் தோள்களை ஒன்றாக பிணைவது. டெட்டனஸ் நோயின் இழுக்கும் தளர்வாக்கும் தொடர் தன்மையை குறிக்கிறது. தாடை பூட்டு ஒரு அறிகுறியாக சொல்லப்பட்டுள்ளது. ஹிப்போகிரேட்ஸ் முதன் முறையாக டெட்டனசை விவரிக்கிறார். திறந்த புண்ணுடன் தொடர்புபடுத்துகிறார். கடுமையான பக்கவாட்டு வலி, நெஞ்செலும்பு வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன.

வாஜிகரணம் எனும் ஆண்மைபெருக்கி பிரிவுக்கு தொடர்புடைய பகுதிகளையும் அதர்வ வேதத்தில் காணமுடிகிறது. குதிரை (வாஜி), காளை, கழுதை, யானை, ஆடு போன்றவை ஆண்மையின் சின்னமாக வழங்கப்படுகிறது. விருஷ்யம் எனும் சொல் ரிஷபத்திலிருந்து உருவானது. அதாவது காளையை குறிக்கும். virility எனும் சொல்லுக்கு நெருக்கமாக திகழ்கிறது. உச்சுஷ்மா எனும் மூலிகையைப் பற்றிய குறிப்பு சுவாரசியமாக உள்ளது. ஆண்மையை பெருக்கும் என்று அதர்வ வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆண் குறியை வலுப்படுத்தி, இறுக்கி, தூண்டுதலின் போது ஆண் குறியிலிருந்து வெப்பம் உமிழ செய்யும் என்பதாலேயே உச்சுஷ்மா என்று பெயர். இந்த தாவரத்தை கந்தர்வர்கள் வருணனனுக்காக தோண்டி எடுத்தார்கள். இது இன்றுவரை ஆண்மை பெருக்கியாக பயன்படும் பூனைக்காலி தாவரமாக இருக்கலாம் என்றொரு ஊகம் உள்ளது.

அதிமானுட ஆற்றல்கள் மனிதர்களுக்கு நோயை உருவாக்குகின்றன என்பது பரவலான வேத காலத்து நம்பிக்கை. நான்கு முக்கிய வகையான தீய ஆற்றல்கள் நோய்களை உருவாக்குகின்றன. ராக்ஷசர்கள் – புலன்களை களவாடுபவர்கள், மூட்டுகளை பீடிப்பவர்கள், பைசாசம் – பீடித்தவர்களின் மாமிசத்தை உண்பவர்கள், அத்ரின்களும் அப்படியே, கண்வர்கள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை உண்பவர்கள். இவைத்தவிர்த்து கந்தர்வர்கள் நாயை போன்றவர்கள், அப்சரஸ்கள் சித்தப் பிரமை ஏற்படுத்தி மனப் பிறழ்வை ஏற்படுத்துபவர்கள். நோயை உருவாக்கும் தீய ஆற்றல்களை இருவகையில் எதிர் கொள்கிறது அதர்வ வேதம். பலி சடங்குகள் மூலம் வணங்கி, வேண்டியதை அளித்து விடைப்பெற செய்கிறது அல்லது அதை விரட்டும் எதிர் இயல்புகளை திணித்து வழிக்கு கொண்டு வர முயல்கிறது.

அதர்வ வேதத்தில் வெண் புள்ளி கிலாசம் மற்றும் பலித எனும் இரு பெயர்களில் வெவ்வேறு நோயாக குறிப்பிடப் படுகிறது. பலித பிற்காலத்தில் நரை முடிக்கு உரிய சொல்லாக ஆனது. pale எனும் ஆங்கில சொல்லுக்கு வெளிறல் என்று பொருள். அதனுடன் உள்ள ஒற்றுமை கவனிக்கத்தக்கது. கிலாசம் சாபத்தால் நேர்வதாக அதர்வ வேதம் சொல்கிறது. யானை முடி மற்றும் தந்தம் கொண்ட கை காப்பு நீண்ட ஆயுள் வழங்கும் எனும் நம்பிக்கை வேதத்திலேயே உள்ளது. மணத்தக்காளி முடி வளர்ச்சிக்கு உகந்ததாக துதிக்கப் படுகிறது. தலை வலிக்கு மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே நெய்,நல்லெண்ணெய்,அல்லது கொழுப்பை அருந்துவது ஒரு சிகிச்சை முறையாக கூறப்பட்டுள்ளது. இது ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் ஒன்றான சிநேக பானத்திற்கு நெருக்கமானது.

அதர்வ வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாஷகம் ( mosquito எனும் சொல்லிற்கு உள்ள நெருக்கம் கவனிக்கத்தக்கது) கொசுவாக இருக்கக்கூடும். உபாஜிக எனும் ஒருவகையான எறும்பு (அல்லது கரையான்) உருவாக்கும் நீர் மருத்துவ பயன் கொண்டது என புகழப் படுகிறது. ஒத்த வடிவு/ பண்பு உடையவை அதே போன்ற உறுப்புகளுக்கு நன்மை அளிக்கும் எனும் நம்பிக்கை தொல்கால மருத்துவ முறைகளில் புழங்கியது. கொம்பரக்கு ரத்த விருத்திக்கு பயன்படும் என்று சொல்லப்பட்டது. பக்க வாதத்திற்கு நாயின் காலடி மண்ணை பாதித்த பகுதியில் தடவும் வழக்கம் உள்ளது.நாய் அசைந்து கொண்டே இருக்கும் என்பதால் அதன் இயல்பை ஊட்ட முயல்கிறார்கள்.

அஞ்சன எனும் தாவரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என அதர்வ வேதம் கூறுகிறது. ‘வெளி பூச்சாக, தாயத்தாக, குளிப்பதற்கு, குடிப்பதற்கு என நன்கு வகையில் பயன்படுத்த வேண்டும்”. சடங்குகளுடன் சேர்த்து மூலிகைகள் உட்பயன்பாட்டிலும் இருந்ததை கௌஷிக சூத்திரம் சுட்டிக்காட்டுகிறது. கௌசிக சூத்திரத்தின் பங்களிப்பே கூட இந்த உட்பயன்பாட்டை கொணர்ந்ததாக இருக்கலாம்.

ஆச்சரியமாக சில புற நோய்கள் வேதத்தில் தர்க்கபூர்வமாக அணுகப்பட்டுள்ளன. குருதி வழிவதை நிறுத்த மண்ணை தடவுதல், செடிகளின் நாளங்களை கொண்டு மூத்திர அடைப்பை நீக்குதல், சில கொப்பளங்களை கீறுதல் மற்றும் உப்பு பூசுதல், க்ஷார கர்மம், அக்னி கர்மம், புண்ணின் மீது மரப்பிசின் பூசுதல், தலைமுடி வளர்வதற்கான மூலிகை போன்றவைகளை சில எடுத்துக்காட்டுகளாக கூறலாம். சிந்து சமவெளி நாகரீகத்தின் எச்சங்கள். கொம்பரக்கை பாலில் கொதிக்க வைத்து அடிபட்டவனுக்கு வழங்குவது, அட்டை விடுதல், கட்டிகளை உடைக்க உப்பு தடவுவது, கோமயத்தை கொண்டு திறந்த புண்களை கழுவுவது என பல வழக்கங்கள் கௌஷிக சூத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.




இரவு அவர்கள் வெகு நேரம் பேசியதில் அப்போதே பத்து மணி இருக்கும். அந்த நேரத்தில் தன் செல் பேசிக்கு அழைப்பு என்றதும் விஸ்வநாதன் என்னவோ என்று பதட்டம் அடைந்தான்.

அவனுக்கு இரவு எட்டு மணிக்கு மேல் பொதுவாக அழைப்புகள் வராது. வந்தாலும் அவன் எடுக்க மாட்டான் என்று அவனோடு இருக்கும் தொழில்முறை தொடர்புகள் எல்லோருக்கும் தெரியும்.

அதோடு அவனுக்கு நண்பர்கள் என்று உண்டு என்றாலும் யாரும் ரொம்ப நெருக்கம் எல்லாம் கிடையாது. அதனால் அந்நேரத்தில் அழைப்பு என்றதும் பதட்டமுடன் எடுத்துப் பார்க்க அவன் மாமியார் ஜானகி தான் அழைத்திருந்தார்.

இந்த நேரத்தில் அழைத்ததால் ஒரு வேளை அவர்களின் மகள் கருவுற்று இருப்பது தெரிந்து விட்டதோ?

ஒரு வேளை தன்னிடம் நாளை சொல்லலாம் என்று சொல்லி விட்டு அம்மா அப்போதே அழைத்து சொல்லி விட்டாரோ என்று நினைத்தானே தவிர நிச்சயம் அவர் சொன்னதை எதிர்பார்க்கவில்லை.

அதனால் சிரித்த முகமாகவே போனை எடுத்தவன் "சொல்லுங்கோ மாமி..! அம்மா சொல்லிட்டாளா?" என்று அவனே பேச்சை ஆரம்பித்தான்.

ஜானகி அவன் பேசியதையே கவனிக்கவில்லை, கவனிக்கும் நிலையிலும் இல்லை. ஒரே அழுகை சத்தமே விஸ்வநாதனுக்கு கேட்டது.

"மாப்ள..! மாமாக்கு திடீர்னு நெஞ்சுவலி வந்துடுத்து. அதனால பக்கத்தாத்துக்காரா உதவியோட இங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு வந்திருக்கேன். டாக்டர் எல்லாம் என்னென்னவோ சொல்றா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க கொஞ்சம் வரேளா?"

ஜானகி சொல்லும் போதே அழுது விட விஸ்வநாதன் தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு

"மாமாக்கு ஒண்ணும் ஆகாது மாமி. நீங்க கவலைப்படாதீங்கோ. இன்னும் சித்த நாழில நான் ஹாஸ்பிடல்ல இருப்பேன்..." என்று

தன் மாமியாருக்கு ஆறுதல் சொல்லியபடியே அங்கு மாட்டியிருந்த தன் சட்டையை எடுத்தான்.

அதில் அவனுடைய டெபிட் கிரெடிட் கார்டுகள் இருக்கின்றனவா என்று சரி பார்த்தவன் அவனுக்கிருந்த அவசரத்தில் அருகில் நின்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியை கண்டுகொள்ளாமல் பைக் சாவியும் எடுத்துக் கொண்டு போய் அறைக் கதவைத் திறந்தான்.

அவன் எதுவுமே சொல்லவில்லையென்றாலும் எதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த காயத்ரி அவன் பின்னாலேயே ஓடி வந்தாள்.

"ஏன்னா..! யாருக்கு ஒடம்பு சரியில்ல? எங்க போய் பாக்கப் போறேள்?" என்று படபடப்பாய் கேட்டாள். அவளை திரும்பிப் பார்த்த விஸ்வநாதன் என்னவென்று சொல்ல வந்து அவள் முகத்தில் இருந்த சோர்வை பார்த்தான்.

தான் சொல்வதை இப்போது அவளால் தாங்க முடியுமா என்று யோசித்தவன் அவளை விட்டு விட்டு தான் மட்டும் செல்ல முடிவெடுத்தான்.

"நீ போய் படுத்துக்கோடா பட்டூ. நான் போய்ட்டு வந்துடறேன்.” என்று கிளம்ப அவன் கையை பிடித்துக் கொண்டாள் காயத்ரி.

"என்னன்னு சொல்லிட்டு போங்கோன்னா. எனக்கென்னவோ சொரேர்ன்னு இருக்கு..." காயத்ரி கவலையோடு அவனை நிறுத்த விஸ்வநாதனுக்கு சொல்வதா வேண்டாமா என்று யோசனை.

இன்று தான் அவள் உண்டாகி இருப்பது தெரிய வந்தது. அந்த சந்தோஷத்தில் இருப்பவளை அப்பாவின் உடல்நிலையை பற்றி சொல்லி வருத்தப்படுத்த அவன் விரும்பவில்லை.

அதோடு அவளும் அவள் அப்பா அம்மாவை பார்க்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லையே. அதனால் தான் மட்டுமே போய் இப்போது பார்ப்பது. தேவைப்பட்டால் பிறகு அவளிடம் சொல்லலாம் என்று நினைத்தான்.

"ஒண்ணும் இல்லடா பட்டூ. நீ படுத்துக்கோ. சப்போஸ் நான் ராத்திரி வரலைன்னா கவலைப்படாம தூங்கு. நான் காலம்பற வரேன்..." என்று அவள் கையை அவன் விலக்க முயல அவள் பிடி இறுகியது.

அவன் மழுப்ப மழுப்ப என்னவோ பெரிதாக இருக்கிறது என்று புரிந்து கொண்டவள் "மாட்டேன். நீங்க சொல்லுங்கோ. யாருக்குன்னா உடம்பு சரியில்ல? ஹாஸ்பிடல் மாமா மாமின்னு எல்லாம் சொன்னேளே? யாரை சொன்னேள்? "

என்று பிடித்துக் கொண்டாள்.

அதற்கு மேலும் மறைக்க வழியில்லாமல் விஸ்வநாதன் சொல்லி விட 'என்ன" என்பது போல அவனை ஒரு முறை முறைத்தவள் விடுவிடுவென அவனுக்கு முன்னால் போய் செருப்பை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பி நின்றாள்.

அவன் மேல் அவ்வளவு கோபம்.

'அங்க உடம்பு முடியாம இருக்கிறது எங்கப்பா. போன் பண்ணினது என் அம்மா. என் கிட்ட சொல்லாம நீங்க போய்டுவேளா? இன்னும் அப்பாவுக்கு என்னன்னு கூட தெரியவில்லை'.

இதில் அவன் தானே முடிவெடுத்து அவளிடம் சொல்லாமல் விட்டுவிட்டு போக நினைத்ததில் அவன் மேல் கோபம் பொங்கியது.

ஆனால் அதைக் காட்ட இது நேரமில்லை என்பதால் மௌனமாய் வாசலில் போய் நின்று கொண்டாள்.

அவளுக்கு இன்னும் நிலைமையின் தீவிரம் தெரியவில்லை. அவன் தன் வீட்டு விஷயத்தை தன்னிடமே சொல்லாமல் மறைத்துவி ட்டு போனது தான் கோபம்.

அப்பாவுக்கு எதோ ஜுரம், சின்ன விபத்து இது போல சின்னதாக ஒரு உடல்நலக்குறைவு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

விஸ்வநாதன் தூங்கிக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பி மாமியாரின் அழைப்பை சொன்னான்.

ஏற்கனவே ரத்தஅழுத்தத்திற்கு மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்குபவரிடம் விஷயத்தை சொல்லி கலவரப்படுத்தக் கூடாது என்று மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று மேலோட்டமாய் ஒரு காரணத்தை சொல்லி விட்டு கிளம்ப அவர் "காயத்ரி எங்கே ?" என்று விசாரித்தார்.

அவன் காயத்ரியும் கூட வருவதாக பிடிவாதம் பிடிப்பதாக சொல்லவும் அப்படியே எழுந்து வெளியே வந்து விட்டார்.

வாசலில் தயாராக நின்று கொண்டிருந்த காயத்ரியை பார்த்து விட்டு

"ஏன்மா அப்பாவுக்கு செக் அப்புக்கு தான் ஆஸ்பத்திரி வந்திருக்கான்னுட்டு விச்சு தான் சொல்றானே? நீயே அலண்டு போய் இருக்கே. அவசியம் போகணுமா?" என்று கேட்க காயத்ரிக்கு கோபத்தில் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது.

'எல்லாரும் இப்படி என்னை குழந்தையா நடத்தி தான் நேக்கு எதுவுமே தெரியாமயே போயிடுத்து? இன்னும் இப்படியே நடத்தினா நான் எப்ப தான் வளர்ரது?'

ஏற்கனவே தான் உண்டானதை கூட அடுத்தவர் சொல்லும் நிலையில் இருப்பதை எண்ணி கழிவிரக்கத்தில் இருந்தவள் இப்போது மீண்டும் எல்லோரும் தன்னை அப்படியே நடத்துவதை பார்த்து நொந்தே போனாள்.

அவள் கண்களில் கண்ணீரை பார்த்ததும் பத்மா பதறிப் போனார்.

"கோந்தே! அழாதே! நோக்கு முடியலியேன்னு தான் போவேண்டாம்னு சொன்னேன். நோக்கு போணும் போல இருந்தா போயிட்டு வா" என்று சொல்ல விஸ்வநாதன் பேசவே வழியில்லை.

அவன் போனை எடுத்து யாரையோ அழைக்க அவன் கார் ஐந்து நிமிடங்களில் வீட்டு வாசலில் வந்து நின்றது.

விஸ்வநாதன் வந்தவனையே காரை ஓட்ட சொல்லி விட்டு பின்னால் காயத்ரியோடு அமர்ந்து கொண்டான். காயத்ரிக்கு இன்னும் அவன் மேல் கோபம் தணியாததால் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

விஸ்வநாதனோ மருத்துவமனை போனதும் செய்ய வேண்டியதை பற்றியும் உண்மையில் மாமாவுக்கு என்ன என்று தெரிந்தால் காயத்ரி தாங்குவாளா என்பதைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தான்.

ஜானகி அவசரத்துக்கு தன் கணவரை வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சின்ன மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

விஸ்வநாதன் தன் செல் பேசியை எடுத்து வழி நெடுக எதோ விசாரித்துக் கொண்டே வந்ததால் காயத்ரியை கவனிக்கவில்லை.

அதோடு தன் தந்தை போலவே மாமாவுக்கும் மாரடைப்பு என்றதும் அவனுக்கு பழைய நினைவுகள் வந்து விட அவரை குணமாக்கி விட வேண்டும் என்று மட்டுமே அவன் சிந்தனை இருக்க காயத்ரியின் மனநிலையை அவன் புரிந்து கொள்ள முயலவே இல்லை.

ஜன்னலோரமாக அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டு அமைதியாக வந்தாள். மனம் முழுக்க தன்னைப் பற்றிய கழிவிரக்கமே நிறைந்திருந்ததால் அப்பாவின் உடல்நிலை அவள் கருத்தில் பதியவில்லை.

சாதாரணமாக இருந்தால் இரவு பத்து மணிக்கு அழைப்பார்களா என்று யோசிக்க கூட தோன்றவில்லை. அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டவள் தன்னிடம் கேட்காமல் தன்னை விட்டுவிட்டு போக நினைத்ததிலேயே நின்றாள்.

அந்த கோபம் அப்படியே வளர்ந்து சின்ன வயதில் இருந்து தன்னை பொத்தி பொத்தி வளர்த்த பெற்றோரின் மேல் திரும்பியது.

இப்படி தன்னில் மூழ்கியிருந்தவள் கார் ஆஸ்பத்திரி வாசலில் நின்றதும் தான் சுயநிலைக்கு வந்தாள். அப்போதும் விஸ்வநாதனுக்காக காத்திருக்காமல் கடகடவென உள்ளே போக எங்கே போய் யாரை பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை.

யாரைக் கேட்பது என்று கூட தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தாள்.

அதற்குள் விஸ்வநாதன் உள்ளே வந்து அவளைப் பார்த்து "வா..!" என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க இன்னும் அதே கோபத்துடன் காயத்ரி அவனை பின்தொடர்ந்தாள்.

ஐசியூ வாசலில் அமர்ந்திருந்த ஜானகி விஸ்வநாதனை பார்த்ததும் எழுந்து "மாப்பிள்ளை..!" என்று அவன் கையை பிடித்துக் கொண்டு விசும்பினார்.

பின்னால் வந்த மகளை கவனிக்கவே இல்லை. காயத்ரிக்கு அம்மா தன்னை கவனிக்காமல் விஸ்வநாதனிடம் பேசியது சுருக்கென்றிருந்தது.

விஸ்வநாதன் ஜானகிக்கு ஆறுதல் சொல்லி விவரங்களை கேட்க அப்போதும் அவர் விஸ்வநாதனிடம் மட்டுமே பேசினார்.

அவர் சொல்ல சொல்ல தான் தன் அப்பாவிற்கு வந்தது மாரடைப்பு என்றும் பல மணி நேரங்களாக கண்ணே திறக்கவில்லை என்பதும் அவளுக்கு தெரிந்தது.

"அம்மா..! என்னம்மா சொல்றே? இவர் அப்பாவுக்கு எதோ சின்னதா அடிபட்டிருக்குன்னு ன்னா சொன்னார்? இப்போ அப்பா எப்படி இருக்கா?" என்று அழவே ஆரம்பித்து விட்டாள்.

அதுவரை அவள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த வைராக்கியம் கோபம் எல்லாம் மறந்து அப்பா வேண்டும் என்று அப்போது தான் அவளுக்கு தோன்றியது.

எதுவுமே இருக்கும் போது அருமை தெரிவதில்லை. அதை இழக்க வேண்டி வருமோ என்ற நிலை வரும் போது தான் அதன் அருமை தெரிகிறது.

ஜானகியை அவள் பார்க்க வேண்டியது போக அவர் அவளுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் அப்படி அழுதவளை சமாதானம் செய்யக் கூட விஸ்வநாதனுக்கு நேரம் இல்லை.

ஜானகியிடம் அவளை விட்டுவிட்டு நேராகப் போய் அவன் மாமனாரை பார்க்கும் டாக்டரிடம் விவரத்தை கேட்டவன் அவரை பெரிய மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டான்.

ஆம்புலன்ஸ்க்கு சொல்லி அந்த ஆஸ்பத்திரியில் அழைத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து இங்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டி என அவன் பம்பரமாக இயங்கியதில் அரை மணி நேரத்தில் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பினர்.

ஜானகியையும் காயத்ரியையும் தங்கள் காரில் வர சொல்லி விட்டு ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டு வழி காட்ட கார் பின்தொடர்ந்தது.

காயத்ரி இன்னும் அம்மாவின் தோளில் சாய்ந்தபடி அழுது கொண்டிருக்க ஜானகி தான் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது.

புது ஆஸ்பத்திரியிலும் வேலைகளை அவன் முடுக்கி விட இப்போது முதலுதவியோடு மட்டுமே வந்தவரை சிறப்பு மருத்துவர்கள் அந்த நேரத்திலும் வந்து பார்க்கும்படி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தான்.

அவர்கள் வந்து பரிசோதித்து விட்டு அவர் இதயத்தில் ஐந்து இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் பைபாஸ் ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடும் என்று மேலும் சில விவரங்கள் சொல்லி சென்றனர்.

பணம் என்ன செலவானது என்று கணக்கு பார்க்கும் சூழலே அங்கு இல்லையே.

ஜானகி தான் அந்த பெரிய மருத்துவமனையின் பிரம்மாண்டத்தை பார்த்து விட்டு அரண்டு போனார்.

விஸ்வநாதனிடம் வந்து "மாப்ள..! இந்த ஆஸ்பத்திரி பாத்தாலே ரொம்ப பெருசா இருக்கே. நிறைய காசு கேப்பா போலருக்கே. எங்க கிட்ட அத்தனைக்கு ஐவேஜ் (வசதி) இல்லையே” என்று கண்ணீர் விட

"மாமி! அதைப் பத்தி நீங்க எதுவும் யோஜனை பண்ணாதீங்கோ. மாமாக்கு நல்லபடியா உடம்பு தேவலையாயிடணும்னு பகவானை பிரார்த்தனை பண்ணுங்கோ. உங்க பொண்ணுக்கு தைரியம் சொல்லுங்கோ. இதெல்லாம் நான் பாத்துக்கறேன்." என்று முடித்து விட்டான்.

வெறும் வாய்பந்தல் போடாமல் பிள்ளையாய் பொறுப்பை எடுத்து அவன் செய்ததில் ஜானகி உருகியே போனார்.

இரு கைகளாலும் அவனிடம் கும்பிட்டு "மாப்ள..! எங்களுக்காக இத்தனை பணறேளே? இப்படி லட்சக்கணக்குல செலவழிச்சு யார் பண்ணுவா? நீங்க க்ஷேமமா இருக்கணும்.."

என்று கண்ணீர் மல்கக் கூற அப்போது தான் காயத்ரிக்கு விஸ்வநாதனின் அருமை புரிந்தது.

அவர்கள் பேசுவதையே பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை திரும்பிப் பார்த்த விஸ்வநாதன்

"காயத்ரி! மாமிக்கு கான்டீன் வரைக்கும் கூட்டிண்டு போய் ஏதானும் வாங்கிக் குடு. அப்படியே நீயும் ஏதானும் சாப்பிட்டு வா. காத்தால பூரா வாந்தி எடுத்துட்டு நீயும் பட்டினியா தானே இருக்கே..! ரெண்டு பேருமா ஏதானும் சாப்பிட்டு வாங்கோ. நான் இங்க இருக்கேன். "

என்று பணத்தை நீட்டினான்.

அப்போது தான் அவன் பேச்சை கவனித்த ஜானகியின் தாயுள்ளம் விழித்துக் கொண்டது.

"ஏண்டி காயத்ரி? என்ன பண்றது நோக்கு? ஏன் வாந்தியெடுத்தே..?நோக்கு அறிவிருக்காடி? கண்டதையும் தின்னுட்டு அப்புறம் கக்க வேண்டியது? இன்னும் அப்படியே தான் இருக்கியா? " என்று கவலையிருந்தாலும் கோபத்துடன் கேட்டார்.

காயத்ரி விஸ்வநாதனை பார்க்க விஸ்வநாதன் தான் பதில் சொல்ல வேண்டியிருந்தது.

"மாமி..! அது வந்து அது வந்து..." என்று எப்படி சொல்வது என்று தயங்க ஜானகி புரிந்து கொண்டார்.

ஆசையாய் மகளை அணைத்துக் கொண்டவர் "ரொம்ப சந்தோஷம்டி காயு குட்டி..!" என்றவருக்கு இப்போது மகள் மேல் கோபமில்லை.

அதன் பிறகு எல்லாம் வேகமாக நடந்தது. மறுநாள் விவரம் தெரிந்து வந்த பத்மா அவர் ஜானகியோடு தங்கிக் கொண்டு காயத்ரியை வற்புறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வீட்டில் அத்தை சமைத்து கொடுக்க விஸ்வநாதன் எல்லாம் பார்த்துக் கொண்டான்.

அத்தை காயத்ரியை வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டார்.

வெங்கடேசன் கண் திறந்து பார்த்ததும் முதலில் தன் மகளைத் தான் கேட்டார். காயத்ரி "அப்பா.." என்று ஓடிப்போய் அவரை கட்டிக் கொள்ள அனைவரின் மனதிலும் அப்போது தான் நிம்மதி.

"பாத்தேளா மாப்ள..! நாமெல்லாம் இந்த ப்ராம்மணனுக்காக உயிரை விட்டுண்டு பாடுபட்டுண்டிருக்கோம். நம்மளை எல்லாம் இவருக்கு கண்ணுக்கு தெரியல. பொண்ண தான் கண்ணு தேடறது. எல்லாம் ரத்த சொந்தத்துக்கு தான் மகிமை..."

என்று ஜானகி பொய் கோபத்தோடு நொடித்துக் கொள்ள பத்மாவும் விஸ்வநாதனும் சிரித்துக் கொண்டனர்.

ஒரு மாதம் கழித்து காயத்ரியின் அப்பா வெங்கடேசன் வீட்டுக்கு வரும் வரை விஸ்வநாதனின் குடும்பமே அவர்களை கவனித்துக் கொண்டது.

அதன் பிறகும் விஸ்வநாதன் பத்மாவின் வற்புறுத்தலில் ஜானகியும் வெங்கடேசனும் விஸ்வநாதன் வீட்டுக்கே வந்து விட்டனர்.

அவர் உடல்நிலை ஓரளவு தேறி வீடு வீடாக மூன்று மாதங்கள் ஓடி விட்டிருந்தது.
 

Author: SudhaSri
Article Title: என்றென்றும் வேண்டும்- 24
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom