• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க் கொடியில் பூத்தவளே! 4

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
178
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 4


அன்று மாலை மாதுரி, ராஜேஸ்வரி மேடத்தைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லும் போது அவர்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் நெருங்கியிருந்தார்கள்.

“ ஐயாவுக்கும் உங்களுக்கும் எப்படி ஒரே சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதுன்னு தெரிஞ்சுக்கலாமா மேடம்? “ என்று துணிந்து கேட்டு விட்டாள் மாதுரி.

“ சொல்லறேன்மா, சொல்லறேன். ஆனால் அதைப் பத்தி நினைக்கும்போது மனசு படபடன்னு அடிச்சுக்குது. உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்குது” என்றார் ராஜேஸ்வரி.

“ வேண்டாம் மேடம், அந்தக் கசப்பான நினைவுகள்னால உங்களோட துயரம் இன்னும் அதிகமாகும்னா விட்டுருங்க. ஏதோ ஆர்வக் கோளாறில நானும் கேட்டுட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக ஆறிட்டு வர புண்ணைக் குத்திக் குத்தி ரணமாக்க விரும்பலை நான்” என்று வருத்தத்துடன் பேசினாள் மாதுரி.

“ இல்லைம்மா, அப்படி எதுவும் நினைச்சுக்காதே. எனக்கே அதைப் பத்திப் பேசி மனசுல இருக்கற பயத்தைப் போக்கிக்கணும்னு தோணுது. உளவியல் ரீதியா மனசுல இருக்கற தடைகளை மீறறதுக்கான ஒரே வழி, அதைப் பத்தி அடிக்கடி பேசறதது தானே? ” என்று மாதுரியிடம் கூறியவர், பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

“ எங்க ஊரைப் பத்தி நீ கொஞ்சமாவது விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டுத்தான் வேலைக்கு வந்திருப்பே. இருந்தாலும் சொல்லறேன். ஊரைப் பத்திப் பேச, அதுவும் புதுசா வந்தவங்க கிட்டப் பெருமை அடிச்சுக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். இது தேனிக்குப் பக்கத்தில மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு ரொம்பப் பக்கத்துல இருக்கற அழகான ஊரு. கிராமம்னும் சொல்ல முடியாது. நகரம்னும் சொல்ல முடியாது. ரெண்டுக்கும் நடுவில இருக்கற ஊரு. வருஷம் பூராவும் அதிக வெயில இல்லாமல் குளுகுளுன்னு இருக்கற இடம். சுத்திலும் நிறைய பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கு.
கும்பக்கரை அருவி, சுருளி நீர்வீழ்ச்சி, வீரபாண்டி, குச்சனூர், வைகை அணை இதெல்லாமே பார்க்க வேண்டிய இடங்கள். கொடைக்கானல் கூட ரொம்பத் தொலைவு இல்லை. என்னோட கணவர் சேதுபதியோட குடும்பம் ராஜவம்சம்னு சொல்லுவாங்க. முன்னால சிற்றரசர்களாக இருந்து இப்போ ஜமீன்தார்களா மாறின குடும்பம். நான் அவரோட முறைப் பொண்ணுங்கறதுனால கல்யாணம் எல்லாமே பெரியவங்களாப் பாத்து நடத்துனதுதான். எங்களுக்குக் குழந்தை இல்லைங்கற ஒரு குறை தவிர, எங்களோட இல்லறம் நல்லாவே போச்சு. ஒத்துமையான ஜோடின்னு ஊரே கண் படற மாதிரித்தான் இருந்தோம்” என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
அவருடைய குரல் இலேசாக உடைய ஆரம்பித்திருந்தது.

மாதுரி அவளை மேலே பேச விடாமல் தடுத்துவிடலாமா, வேண்டாமா என்கிற குழப்பத்துடன் அவளுடைய முகத்தையே பார்த்தாள். சிறிது நேரத்தில் தன்னைத்தானே சமாளித்துக் கொண்டு ராஜேஸ்வரி மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“ வருஷங்கள் போகப் போகக் குழந்தை இல்லாத கொறை மனசை ரொம்ப வாட்ட ஆரம்பிச்சது. கோயில் கோயிலாப் போக ஆரம்பிச்சோம். அந்த மாதிரி ஒரு தடவை சுருளியாண்டவர் கோயில் போனபோது திடீர்னு அங்கே குறி சொல்லற மலைஜாதிப் பொண்ணு ஒருத்தி வந்தா. அவ என் கணவரைப் பாத்து ஏதோ கத்த ஆரம்பிச்சா. அப்புறம் அமைதியாயிட்டா. அப்புறம் அவரோட கையைப் பிடிச்சுப் பலன் சொல்ல ஆரம்பிச்சா. ஏதோ ஒரு பொண்ணோட சாபம் எங்களைச் சுத்திச் சுத்தி வருதுன்னு சொன்னா. அப்புறம் அவளை எப்படியாவது சாந்தப்படுத்துங்கன்னும் சொன்னா. அவளோட கோபம் தணியலைன்னா, உங்க வமசமே அழிஞ்சு போயிடும்னு சொல்லிட்டு வந்த மாதிரியே சட்டுன்னு மறைஞ்சு போயிட்டா” என்று சொல்லி மீண்டும் நிறுத்தினார் ராஜேஸ்வரி.

“ இதையெல்லாம் உன் கிட்ட அதுவும் உன்னைச் சந்திச்ச முதல் நாளிலயே ஏன் சொல்லறேன்னு எனக்கே தெரியலை. மனசு என்னவோ சொல்லச் சொல்லிக் கட்டளை இடுது. சாதாரணமா வெளியாட்கள் யார் கிட்டயும் இந்த விஷயங்களை நான் பேசினதில்லை. உன் மூலமா எங்க வீட்டுல ஏதோ நல்லது நடக்கப்போகுதுனு என் உள்ளுணர்வு சொல்லறதால, இதைப் பத்திப் பேசலாம்னு முடிவெடுத்தேன்.
இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் என் கணவர் ரொம்ப மனசொடிஞ்சு போய் இருந்தாரு. அவரு மனசை மாத்தறதுக்காகவே நான் அவரை வற்புறுத்தி நிறைய இடங்களுக்குக் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சேன். அந்த மாதிரி ஒரு தடவை கேரளா பார்டரில் இருக்கற கண்ணகி கோயிலுக்குக் கிளம்பினோம்.
திரும்பி வரும்போது ஏதோ முக்கியமான விஷயம் என் கிட்டப் பேசப் போறதாச் சொன்னாரு. கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டுத் திரும்பும்போது என்னவோ பதட்டமா இருந்தாரு. திரும்பி வரும்போது அந்த விபத்து நேர்ந்தது. காரில் பிரேக் வேலை செய்யலைன்னு தெரிஞ்சதும் என்னைப் பிடிச்சு வெளியே தள்ளிவிட்டுட்டாரு. கார், ஒரு பெரிய மரத்தில மோதி அவரோட உடம்பில் பயங்கரமா அடிபட்டுருச்சு. எனக்குக் காலில் மட்டும் தான் பிரச்சினை. அவருக்குத் தான் அதிக பாதிப்பு. பேச்சு போயிடுச்சு. முதுகுத்தண்டில் அடிபட்டதுல படுத்த படுக்கையாக இருக்காரு” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் ராஜேஸ்வரி.

“ நிறைய நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்ததுக்கப்புறம் வீட்டுக்கு வந்துட்டோம். துகிலனோட உதவியோட வீட்டிலயே எப்படியோ மேனேஜ் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். வீட்டுக்கு வந்தா அவருக்கு வீட்டு சூழ்நிலையில் சீக்கிரம் குணமாக வாய்ப்பு இருக்குன்னு துகிலன் சொன்னதை நாங்களும் ஏத்துகிட்டோம். ஆனால், நாங்க வீட்டுக்கு வந்து இன்னைக்கோட ஒரு வருஷம் முடிஞ்சுபோச்சு. அவரோட நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர், தன்னோட சிகிக்சையை மனசார ஏத்துக்கிட்டு ஒத்துழைக்கலையோன்னு கவலையா இருக்கு. சாப்பிடவே ரொம்ப மொரண்டு செய்வாரு. சின்னக் குழந்தைங்க கூட அவரோட பிடிவாதத்துக்கு முன்னால தோத்துப் போயிடும். இன்னைக்குத்தான் ரொம்ப நாளைக்கப்புறம் உன் கையால ஒழுங்காச் சாப்பிட்டிருக்காரு. டச் வுட்னு சொல்லிடறேன் உடனே. அதனாலதான் உன் கிட்ட ஏதோ எக்ஸ்ட்ரார்டினரி பவர் இருக்கறதா நம்பி உன் கிட்ட என் மனக்குறைகளை எல்லாம் கொட்டிட்டேன்” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

“ என் கிட்ட எந்தவிதமான ஸ்பெஷல் சக்தியும் இல்லைங்கறதுதான் உண்மை. ஆனால் உங்களோட பிரச்சினைகள் எல்லாமே சீக்கிரமா சரியாகணும்னு ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யற மனசு இருக்கு என்னிடம். என்னால முடிஞ்ச அளவு ப்ரே பண்ணறேன் மேடம்” என்று சொன்னவள்,
“ இதுவும் கடந்து போகும்” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

“ நல்லா வாயை விட்டுப் பாடும்மா. குரல் நல்லா இருக்கே? ” என்று ராஜேஸ்வரி கேட்க, மாதுரி தயங்கினாள்.

“ ஏதோ மனசுல பட்டதைத் தப்பித் தவறி முணுமுணுத்துட்டேன். பாட வராது எனக்கு. ம்யூசிக் கத்துக்கலை நானு ” என்று உடனடியாக மறுத்தாள். வெட்கத்தால் முகம் சிவந்திருந்தது.

“ பரவாயில்லைம்மா. இங்கே என்ன ஸுபர் சிங்கர் கண்டெஸ்டா நடக்குது. நான் மட்டுமே இங்க ஆடியன்ஸ். தைரியமாப் பாடு” என்று ராஜேஸ்வரி மீண்டும் மீண்டும் கூற, மறுக்கமுடியாத மாதுரி பாடத் தொடங்கினாள்.

“ இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
சுடரி, இருளில் ஏங்காதே
வேலி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறிவரும்
இயற்கையின் விதி இதுதானே?
அழியாத காயங்களை ஆற்றும்
மாயங்களைக் கொடுத்திடுமே
மழை காற்றோடு போகும் வரை
போனால் என்ன
அது ஏதோ ஒரு பூவின் துணை
ஆனால் என்ன? ”

என்று மாதுரி மிகவும் இனிமையாகப் பாடி முடித்தாள். மிகவும் உணர்வு பூர்வமாக அவள் பாடியதைக் கண்களை மூடியபடி இரசித்தார் ராஜேஸ்வரி.

“ ரொம்ப நல்லாப் பாடறேம்மா. உன்னோட பேசினதாலயும், உன்னோட பாட்டைக் கேட்டதாலயும் மனசில இருக்கற பாரம் ரொம்பக் குறைஞ்சு போன மாதிரி இருக்கு. நீ நம்பிக்கை ஊட்டற மாதிரியே சீக்கிரமே எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்னு நிச்சயமாக நம்பறேன்” என்று நெகிழ்ந்து போய்ப் பேசினார் ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரி தன்னிடம் காட்டிய பாசம் அளவுக்கு அதிகமாகத் தெரிந்தது மாதுரிக்கு. அதை அப்படியே உதறித் தள்ளிவிட்டுப் போகவேண்டும் என்று மாதுரியின் மனம் துடித்தது. முகத்திலடித்தாற் போல அப்படிச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை அவளுக்கு.

‘ இவங்க காட்டற பாசத்துல மயங்கி தடுமாறிடாதே மாதுரி. நீ இங்கே செய்ய நினைச்ச வேலையைச் செய்யறதுக்குத் தடையா இருக்கற எதுக்கும் மனசுல இடம் கொடுக்காதே. இவங்க காட்டற பாசம், இவங்களோட கவலை, துயரம் எல்லாத்தையும் கேட்டு அப்படியே உருகி நின்னுடாதே. இதெல்லாம் மாயைன்னு உறுதியா நினைச்சுக்கோ. பாசங்கற மாயவலையில சிக்காமல் உன்னோட இலக்கை நோக்கி நீ முன்னேறணும்’ என்று அவளுடைய மனசாட்சி அவளிடம் இடித்துரைத்தது.

“ என்னம்மா? ஏதோ ஆழ்ந்த சிந்தனை போல இருக்கே? என்ன ஆச்சு? வீட்டு ஞாபகம் வந்துருச்சா? உன்னைப் பத்தின மற்ற தகவல்கள் எதுவும்
சொல்லலையே? இஷ்டம் இருந்தாச் சொல்லு” என்று கேட்ட ராஜேஸ்வரியின் குரல் அவளை நனவுலகத்திற்கு இழுத்து வந்தது.

“ இல்லை மேடம். அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எனக்கு உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்லை. இருந்தாத் தானே அவங்களைப் பத்தி நெனைச்சு ஏங்கமுடியும்?”

“ என்னம்மா சொல்லறே? கேக்கறதுக்கே மனசு கஷ்டமா இருக்கு. இனிமேல் யாரும் இல்லைன்னு நெனைக்காதே. என்னை உன்னோட அம்மாவா நெனைச்சுக்கோ. எனக்கும் மகள் இல்லாத குறை தீரும். அம்மாவா யாரையும் ஏத்துக்க முடியாதுன்னு தோணுச்சுன்னா சித்தி, அத்தை மாதிரி உறவா ஏத்துக்கோ. உனக்கு விருப்பம் இருக்கும் போது மத்த விவரங்களைச் சொல்லு” என்று சொன்னார் ராஜேஸ்வரி.

“ சொல்லறேன்மா, நிச்சயமாச் சொல்லறேன். ஆனால் இன்னைக்கு வேண்டாம். இப்போ
எனக்கு அதைப் பத்திப் பேசற மூட் இல்லை”
என்று சொல்லி அதை முடித்துவிட்டாள் மாதுரி.

“ அப்புறம் மாதுரி, இன்னொரு முக்கியமான விஷயம் உன் கிட்ட சொல்லணும். நீ எப்படி இதை எடுத்துக்குவயோ தெரியலை. ஆனால்
, சொல்லாம இருக்க முடியலை” என்று பலத்த பீடிகையுடன் ராஜேஸ்வரி பேசிய விஷயத்தை மாதுரி நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

தொடரும்,
புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: உயிர்க் கொடியில் பூத்தவளே! 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
124
மாதுரிக்கும் இந்த வீட்டுக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்குமோ?
 
Top Bottom