- Joined
- Jun 17, 2024
- Messages
- 45
Mr. மாமியார் 16
ஒரு பேஸின் நிறைய தோலியோடு வறுத்த நிலக்கடலை இருக்க, சரியான வடிவத்தில் உள்ளதாகப் பொறுக்கி, அதன் மூக்கு வளைந்து உள்வாங்கும் இடத்தில் கட்டை விரலால் அழுத்தி டக் டக்கென உடைத்து, இன்னொரு கிண்ணத்தில் போட்ட வாமனமூர்த்தி, அவ்வப்போது தானும் தின்று, அம்பு தன் குருவி வாயைத் திறக்கும்போதெல்லாம் அவளுக்கும் ஒவ்வொன்றாகக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
கடலையைத் தின்ற வாமனமூர்த்தியை மட்டுமின்றி தன் மகன், மருமகள், பேரனின் மனைவி அவளைப் பெற்றவர்கள் என ஒருவர் விடாமல் சகட்டுமேனிக்கு வாயாலேயே வறுத்தார் பாட்டி.
“ஏன்டா, லலிதாவை இங்க வரவழைக்கணும்னுதானே நம்ம வீட்டுக்கு புள்ளையைத் தூக்கிட்டு வந்த. நீ நெனச்சாப்பல வந்தவளை, அதட்டு, உருட்டி, கைல கால்ல விழுந்தாவது இங்கேயே இருத்திப் புடிக்காம, நீயே எதுக்குடா அவங்க வீட்ல கொண்டு போய் விட்ட?”
என்றவருக்கு அடுப்பை விசிறினான் ஸ்ரீராம்.
“நல்லா கேளுங்க பாட்டி. இன்னும் ஒரு வாரத்துல இவனுக்கு வெட்டிங் டே. அதை விட்டா அடுத்த நாப்பது நாள்ல கிருஷ்ணாவோட முதல் பிறந்தநாள் வருது. முன்னயாவது நெனச்சா போய் பார்த்துட்டு வருவான். அந்தப்பொண்ணு இங்க வந்துட்டுப் போனதுல இருந்து, வாரம் ஒரு தரம் போய் அட்டென்டன்ஸ் போட்டு வரான்”
பவித்ரா “பாட்டியை ஏத்தி விடாம சும்மா இரு ஸ்ரீ, உடுக்கு சத்தம் ஓவரா கேக்குது”
பாட்டி “ஆமான்டீ, எதுவும் சொல்லாம நல்லவங்க வேஷம் போட்டு நீங்கள்லாம் நல்ல மாமியார், நல்ல மாமனார், நல்ல நாத்தனார் விருதை வாங்கிக்கோங்க. உண்மையைப் பேசற நானும் மாப்பிள்ளையும் கெட்டவங்களாவே இருந்துட்டுப் போறோம்”
பாட்டி தன்னைக் கூட்டு சேர்த்துக்கொண்டதில் ஸ்ரீராம், முழுதாக மனைவியின் புறம் திரும்பி சிரிப்பை அடக்கினான்.
சீதளா, ஸ்ரீசைலத்தைப் பார்த்த பார்வையில் ‘பதிலை நீங்க சொல்றீங்களா இல்ல நான் சொல்லட்டுமா?’ என்ற கேள்வி இருந்தது.
ஸ்ரீசைலம் “ஏம்மா, வாமனனே ஒரு வாரத்துக்கு அப்புறம் நேத்துதான் ஊர்லருந்து வந்திருக்கான்…”
பாட்டி “சரி, அவனை விடு. நீயும் உம்பொண்டாட்டியும் சம்பந்தி கிட்ட பேசக்கூடாதா?”
“பேசதானேம்மா செஞ்சோம்?”
“சைலா, இதுல எல்லாம் நாசூக்கு பாத்தா வேலைக்கே ஆவாது. அந்தப் பொண்ணுக்குதான் புரியலைன்னா, அவளைப் பெத்தவங்க அதுக்கு மேல தத்தியா இருக்காங்க. முன்ன காலம் மாதிரி நாலஞ்சு பிள்ளைங்க இருந்து, வெச்சு நசிக்கி இருந்தா தெரியும். ஒத்தப் புள்ளையாப் போனதுல, கல்யாணம் ஆன பிறகும் உழாக் கலப்பையா இருக்கற பொண்ணுக்கு புத்தி சொல்லி அனுப்பாம இன்னமும் மடில வெச்சு சீராட்டறாங்க. இந்த மாதிரி ஆளுங்க கிட்ட மட்டைக்கு ரெண்டு கீத்தா உடைச்சுப் பேசிடணும்”
ஸ்ரீசைலம் “நமக்கு ஏம்மா அதெல்லாம்?”
“சைலா, எல்லாம் சரியா இருந்திருந்தா நாமும் பூத்தா மாதிரி போகலாம். அவங்களோட மெத்தனத்தால, நம்ம புள்ளை தனியா தவிக்கறப்போ சல்லோ பில்லோன்னா பேச முடியும்?”
சீதளா “அத்தை, நானே அவகிட்ட பேசிக்கறேன்னு சொன்னதே உங்க பேரன்தான்”
“அவன் சொன்னாலும் பெரியவங்க நமக்கு இதை சரி செய்யற பொறுப்பு வேணாமா?”
பவித்ரா “அது வாமனனோட பர்ஸனல் இல்லையா பாட்டி, அவன் சொன்…”
“எது பர்ஸனல், இல்ல எது வரைக்கும் பர்ஸனல்னு சொன்னா, நானும் தெரிஞ்சுப்பேன். பிரசவத்துக்கு போன உங்க மருமகள் இன்னுமா வரலைன்னு ஊரெல்லாம் கேக்கறதுதான் பர்ஸனலா?”
சீதளா “ஏன்டா, எப்ப கேட்டாலும், நான் பாத்துக்கறேன், நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, இப்ப பாட்டியை பேசவிட்டு வேடிக்கை பார்க்குறியா?”
“ஏன், நான் பேசக்கூடாதா, சைலா, உம்பொண்டாட்டி என்னை பேசறா, நீ எதுவும் சொல்ல மாட்டியா… எம் பேரனைப் பத்தி எனக்குத் தெரியாதா, நாம வருத்தப்படுவோம்னு எதையும் காட்டிக்காம இருக்கான்டா அவன்”
எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாய் பேசும் ஜானகி பாட்டி, தன் மகனிடம் வேகத்துடன் பொரிய ஆரம்பித்தவர் சட்டென உடைந்து அழுது விட, எல்லோருமே சங்கடப்பட்டனர்.
பவித்ரா பாட்டியை அணைத்துக்கொண்டு தேற்ற, அவர் கையைப் பிடித்துக்கொண்ட வாமனன் “இன்னும் கொஞ்ச நாள்தான் பாட்டி. கிருஷ்ணாவோட பர்த் டே வரைக்கும் பார்க்கலாம். அதுக்குள்ள அவ இங்க வரலைனா, நீங்க யார் போய் என்ன பேசினாலும் நான் தடுக்க மாட்டேன்” என்றான்.
“கூட்டிட்டு வந்துருடா, குட்டிப்பையன் கண்ணுலயே நிக்கறான். சாமி வரங்குடுத்தும் பூசாரி வரங்குடுக்காத கதையா இருக்கு. நல்ல பொண்ணுதான். ஆனா பாரு, தன் இடம் எது, தனக்கு எது மரியாதைன்னு புரியாத இருக்கு”
கொள்ளு பாட்டியை ஆயா என்று அழைத்த அம்புக்குட்டி, பாட்டி கடலைக்கு அழுவதாக எண்ணி இரண்டு கடலைகளை பாட்டியின் வாயில் திணிக்க வர, “எந் தங்கம், என் ராசாத்தி” என்று மடியில் இருத்திக்கொண்டார்.
வாமனன் யோசனையில் ஆழ்ந்தான். கிருஷ்ணாவைப் பார்த்தே பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. வேலை விஷயமாக பெங்களூர் போயிருந்தான். நேற்று காலையே வந்துவிட்டாலும், ஏனோ, அங்கு போகத் தோன்றவில்லை.
‘ஊர்ல இருந்து வந்தாச்சா, இங்க எப்ப வரீங்க, எனக்கும் குட்டிப் பையனுக்கும் என்ன வாங்கிட்டு வந்தீங்க… இப்படி ஏதாவது ஒரு கேள்வி?’
‘அதுசரி, அவளே சம்பாதிக்கறா, அவளே செலவு செஞ்சுப்பா, அதுக்கும் அவசியம் இல்லாம அவங்கப்பா செய்யறார். இதுல நான் வேற என்னத்துக்கு எக்ஸ்ட்ரா?’
இன்று ஞாயிறு, விடுமுறைதான். கிருஷ்ணாவைப் பார்க்கப் போகலாம்தான்.
ஆனால், அமெரிக்காவில் இருக்கும் லக்ஷ்மியின் தம்பி மனைவியின் நெருங்கிய உறவில் திருமணம் என்றும், சம்பந்தி வீட்டுக் கல்யாணம் என்பதால் தாத்தா ரத்னம் உள்பட எல்லோரும் பாண்டிச்சேரி வரை செல்வதாகச் சொன்னார் மாமனார். அதையும் லலிதா சொல்லவில்லை. இவனையும் அழைத்தார்கள்தான். போகத்தான் விருப்பமில்லை.
வாமனமூர்த்திக்கு எதிலும் ஒட்டாமல், அங்கே போய் மேடை நாடகம் போல் ஒட்ட வைத்த சிரிப்புடன் நடிக்க மனமில்லை.
‘அவளிடம் எனக்கான தேடலோ, தேவையோ, தனிமையின் தாக்கமோ கொஞ்சம் கூடவா இல்லை? காதலித்து, காத்திருந்து நடந்த திருமணம் இல்லைதான். ஆனாலும், மூன்று வருடங்கள் கடந்தும், பத்து மாதத்தில் ஒரு குழந்தை இருந்தும், என்னைப் பிரிந்திருப்பது அவளுக்கு எந்த பாதிப்பையுமே ஏற்படுத்தவில்லயா?’
சூழலை மாற்ற விரும்பிய ஸ்ரீராம் “டேய் வாம்ஸ், பவிக்கு கொஞ்சம் ஷாப்பிங் போகணுமாம். அப்டியே லஞ்ச்சை வெளில பார்த்துக்கலாம், வாடா”
“நான் வரலைடா மாப்ள” என டல்லடித்தவனை ஸ்ரீராமும் பவியும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
**********************
லலிதா பரமேஸ்வரி கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தாள். ஒரே நிலையில் அமர்ந்திருந்ததில் முதுகை வலிக்கவும் சற்றே அசைந்தவளை நிறுத்தியது மகனின் சிணுங்கல்.
கிருஷ்ணாவின் உடல் கதகதப்பாக, ஜுரம் போல இருந்தது. சளியில் மூக்கு அடைத்துக்கொண்டு திணறிய குழந்தை, லலிதாவின் தோளை விட்டு இறங்க மறுத்தான்.
பத்து மணிக்கு காலை உணவு கொடுத்து, உறங்க வைத்தபோது கூட சரியாக இருந்த குழந்தைக்கு, தூங்கி எழும்போதே இத்தனை சளியும் காய்ச்சலும்.
எங்கிருந்துதான் வந்ததோ?
பால் எடுக்கவோ, பாத்ரூம் போகவோ கூட விடாது அழுதான். பிள்ளை பெற்ற இந்தப் பத்து மாதங்களில் கிருஷ்ணா இல்லாது கூட ஒரு இரவைக் கடந்தவள் அந்த வீட்டில் மகனுடன் யாருமின்றி இப்படித் தனியாக இருந்ததே இல்லை.
முதலில் அமெரிக்காவில் இருந்து இந்தத் திருமணத்திற்கென வரப்போவதில்லை என்றிருந்த அவளது மாமாவும் மாமியும், விலைகுறைவான டிக்கெட்டும், விடுமுறையும் கிடைத்துவிட, சனிக்கிழமை விடிகாலையில் சொல்லாமல், கொள்ளாமல் வந்து இறங்கி, நாள் முழுவதும் ஜெட்லாக் எனத் தூங்கி வழிந்தனர்.
மாலையில் மாமா இன்று அதிகாலை நாலு மணிக்கே புதுவைக்கு கேபில் கிளம்புவதாகச் சொல்ல,
சமீபமாக வேகன் ஆரிலிருந்து பலீனோ காருக்கு மாறி இருந்த ரங்கராஜன் “நம்ம காரிலேயே போய்விடலாம்” என்றுவிட்டார்.
எல்லோருக்கும் உடைகளுக்கான பைகள் இரண்டு, உறவுகளுக்குக் கொடுப்பதற்கென்றே அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த பொருட்கள் அடங்கிய இரண்டு பெரிய பெட்டிகள் என சாமான்களும் ஆள்களும் பலீனோவை ஆக்கிரமிக்கத் தயாராக இருந்தனர்.
இரவு படுக்கும் முன்னர்தான், காரில் ஐந்து பேர்தான் போக முடியும் என்பதே உறைத்தது. வேறு எஸ் யூ வி புக் செய்கிறேன் என்றார் மாமா.
தம்பியின் திடீர் விஜயம் தந்த களிப்பில் மூழ்கி இருந்த லக்ஷ்மி “அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. பேசாம, லலிதாவும் கிருஷ்ணாவும் இங்கேயே இருக்கட்டும். இந்த மே மாச வெய்யில்ல, நாள் ஃபுல்லா குழந்தையோட அவ அலைய வேண்டாம்” என உடனடி நிவாரணம் தர, அதுவே உறுதியானது.
முதலில் ஏமாற்றமாக, அம்மாவின் மேல் கோபமாக இருந்தாலும், இப்போது போகாமல் இருந்ததே மேல் என்றும், போய் இருந்தால், இப்படி தனியாகத் தவிக்க வேண்டி இருக்காதென்றும் மாற்றி மாற்றி யோசித்தாள்.
அன்னையின் ஆணை மற்றும் ஆலோசனை படி, கைவசம் இருந்த குழந்தைக்கான ஜுர மருந்தைப் புகட்டி, சிணுங்கும் பிள்ளையை கையிலேயே வைத்திருந்தாள்.
நல்ல வேளையாக, அவன் உறங்கத் தொடங்கியதுமே குளித்து, காலை உணவை உண்டிருந்தாள். பணிப்பெண் வந்து வேலைகளை முடித்துவிட்டுச் சென்றிருக்க, தொலைக்காட்சி, அலைபேசி என எதிலும் மனம் லயிக்கவில்லை.
இப்போது மதிய உணவு நேரமும் கடந்திருக்க, லலிதா எதுவும் சமைக்கவும் இல்லை, சாப்பிடவும் இல்லை.
ஒரே நாளில் தனக்கென யாருமே இல்லாதது போன்ற உணர்வு எழ, கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.
கையில் குழந்தையோடே எழுந்து கிருஷ்ணாவிற்கு பாலும் தனக்கு ஒரு ஆப்பிளும் தண்ணீர் பாட்டிலும் எடுத்துக்கொண்டு தன்னறைக்குள் சென்றாள்.
ஜுரம் மட்டுப்பட்டதில் சிரித்து விளையாடினாலும், சுணக்கமாக இருந்தான் குழந்தை. இருவருமே கண்ணயர்ந்து விட, முனகல் சத்தம் கேட்டு எழுந்து பிள்ளையைத் தூக்கியவளைத் தாக்கியது சூடு.
கோடை என்பதால், மணி ஆறுக்கு மேல் ஆகியும், மெலிதான வெளிச்சம் இன்னும் மீதமிருந்தது.
லக்ஷ்மிக்கு அழைத்தவள், அவர் சொல்படி, மீண்டும் ஒரு முறை மருந்தைக் கொடுக்க, பத்தே நிமிடத்தில் பால், மருந்து என அனைத்தையும் வெளியேற்றிய கிருஷ்ணாவைக் கண்டு பயந்து போனவள், மீண்டும் லக்ஷ்மிக்கு அழைக்க, ரங்கராஜன் லைனில் வந்தார்.
“கொஞ்சம் பாத்துக்கோடா, அத்தையோட அண்ணன் வீட்ல இருக்கோம். அம்மா பாலும் பழமும் கொடுக்கப் போயிருக்கா. சாப்பிட்டு எட்டு, எட்டரைக்குள்ள கிளம்பிடுவோம். வந்துடுவோம்” என்றார், ஏதோ அடையாறிலிருந்து பெஸன்ட் நகருக்கு வருவதைப்போல்.
காலை கட் செய்து திரும்பிய லலிதா, படுக்கையில் எதிரே உட்கார்ந்திருந்த குழந்தைக்கு மீண்டும் ஏறி இருந்த ஜுரத்தில் சோர்ந்து, துவண்டு விழுந்ததைப் பார்த்துப் பதறியவள், சற்றும் யோசிக்காது கணவனை அழைத்திருந்தாள்.
வாமனன், பவித்ரா, ஸ்ரீராம் மூவரும் லேட் லஞ்ச், ஷாப்பிங், மீண்டும் காஃபி என சுற்றிவிட்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அம்புகுட்டிக்கு தூக்கம் சொக்கவே, ஸ்ரீராமைவிட்டு வரமாட்டேன் என பிடிவாதம் பிடிக்க, வாமனமூர்த்தி டிரைவிங்கில் இருந்தான்.
எடுக்கவில்லை என்று தெரிந்தும் விடாது அழைப்பது யார் என்று பவித்ராவைப் பார்க்கச் சொல்ல, லலிதா.
“ப்ளூ டூத்ல கனெக்ட் பண்ணி ஸ்பீக்கர்ல போடு பவி”
அழைப்பை ஏற்றது தெரிந்ததுமே “ஹலோ, எங்க இருக்கீங்க?” என்றவளின் குரலில் இருந்த அழுகையில், “என்னாச்சு லால்ஸ்?” என்றவனை உணர்ந்தாளா, இல்லையா என்றே புரியவில்லை.
“எங்க இருக்கீங்க, உடனே இங்க வீட்டுக்கு வாங்க”
“லலிதா”
“எனக்கு பயமா இருக்கு. கிருஷ்ணாக்கு ஃபீவர். ஒரே வாமிட்டிங். ஐயோ, குட்டி இருடா வரேன்” என்றவள் அழைப்பை அந்தரத்தில் விட்டு குழந்தையை சமாதானம் செய்வது கேட்டது.
காலை கட் செய்த பவித்ரா “வாமனா, லலிதா வீட்டுக்குப் போகலாம். ஐ திங்க், அவ தனியா இருக்கான்னு நினைக்கறேன். பேனிக் (panic) ஆகி பயத்துல பேசறா”
அவர்கள் இருந்த இடத்திலிருந்து பெஸன்ட் நகர் வர நாற்பது நிமிடங்கள் ஆனது.
கதவைத் திறந்தவளுக்கு கணவனை விட பவித்ரா வந்ததில் அப்படியொரு ஆசுவாஸம். குழந்தை மருத்தவர் அல்லவா?
ஸ்ரீராம் அம்புவை சோஃபாவில் கிடத்திவிட்டு, எப்போதும் காரில் இருக்கும் பவித்ராவின் டாக்டர்’ஸ் கிட்டை உள்ளே எடுத்து வந்தான்.
கிருஷ்ணாவை பரிசோதித்த பவித்ரா “வைரல்தான், ஆன்ட்டிபயாடிக் எழுதித் தரேன். இப்ப ஒரு இன்ஜெக்ஷன போடறேன்” என, தன் ப்ரிஸ்கிரிப்ஷன் பேடை எடுத்து மளமளவென மருந்துகளை எழுதினாள்.
வாமனன் போய் வாங்கி வர, ஊசி போட்டு, ஒரு டோஸ் மருந்துகளை கொடுத்த அரை மணியில் தந்தையை, அம்புவைப் பார்த்த குஷியில் கிருஷ்ணா “..ப்பா…” எனவும், சிறிதே தளர்ந்த லலிதா ஒரே அழுகை.
பவித்ரா “கமான் லலிதா, எதுவுமே வராம இருக்க கிருஷ்ணா என்ன பொம்மையா, சரியாகிடும். சியர் அப்” என்றாள்.
கிருஷ்ணா வாமனனின் மடியில் அமர்ந்திருந்தான்.
“சரி அண்ணி, தேங்ஸ் அண்ணி”
மூவருக்கும் குடிக்க நீர் கொண்டு வந்து தந்த லலிதா
“லைம் ஜூஸ்?”
பவித்ரா “என்னை விடு, நீ ஏதாவது சாப்பிட்டியா?”
“ம், காலைல இட்லி சாப்ட்டேன். அப்புறம் குட்டிக்கு ஃபீவர் அதிகமானதுல என்னை நகரவே விடலை. சமைக்கவும் இல்லை”
“இவனை புடி” என்று எழுந்த வாமனன், ஃப்ரிட்ஜில், கிச்சனில் எதையோ தேடி, ரோஸ் மில்க் கலந்து எடுத்து வந்து லலிதாவிடம் நீட்டினான்.
தயக்கத்தோடு பார்த்தவளை குடிக்கச் சொல்லி சைகை செய்தான்.
நேரமானதில் சீதளாவிடமிருந்து ஃபோன் வந்தது. விஷயமறிந்து லலிதாவிற்கு தைரியம் சொல்லி, கிருஷ்ணாவை பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
ஸ்ரீராம் “மச்சான், கார் உங்கிட்ட இருக்கட்டும், நாங்க ரெட் டாக்ஸில போறோம்”
மூன்று நிமிடங்களில் வண்டி வந்துவிட, பவித்ரா “எதுன்னாலும், எப்பன்னாலும் கால் பண்ணு லலிதா. பை, டேக் கேர்” என்று புறப்பட்டாள்.
குழந்தைக்கு அரை தம்ளர் பாலைக் கொடுக்க, கிருஷ்ணா உறங்கிவிட்டான். லலிதா ஹாலிலேயே மெத்தென்று ரஜாயை விரித்து, குழந்தையை படுக்க வைத்தாள்.
வாமனமூர்த்தி குழல் விளக்கை அணைத்தான். இப்போது சமையலறையில் இருந்து கசிந்த வெளிச்சம் மட்டுமே.
லலிதாவிற்கு அவள் அழைத்தவுடன் அவன் பவித்ராவுடன் வந்ததும், தங்கள் வீட்டில், தனக்காக ரோஸ்மில்க் கலந்து தந்ததும், அவர்களோடு புறப்பட்டுப் போய்விடாமல், இங்கே இருப்பதும் அளித்த நிம்மதியும், மூளையில் பிணைந்திருத்த சங்கிலிகள் யாவும் அறுபட்ட உணர்வும் அளவிடமுடியாதது.
வாமனமூர்த்தி அவசரம் என்றதும் மனைவி தன்னை அழைத்ததில் ஒருவித திருப்தியும், மதியம் முழுவதும் உடம்பு சரியில்லாத குழந்தையோடு சாப்பிடக்கூட முடியாது அவள் அவஸ்தைபட, தான் மட்டும் ஹோட்டலில் சூப்பில் தொடங்கி, ஸ்வீட் வரை ஃபுல் கட்டு கட்டியதில் குற்றவுணர்வுமாக அமர்ந்திருந்தான்.
“இதோ வரேன்” என எழுந்து சென்று முகம் கழுவி, உடைமாற்றி வந்த லலிதா
“தோசை ஊத்தட்டுமா?”
“ஒன்னும் வேணாம், நீ பேசாம உக்காரு”
சிறிது நேரம் நின்ற இடத்திலேயே நின்றவள், தயக்கத்துடன் அவனெதிரில் வந்து தரையில் முழந்தாளிட்டு நின்று, மிக மெலிதாக
“ரொம்ப பயந்துட்டேன். ஹக் பண்ணிக்கவா?” என்றவளைத் தன்னோடு இறுக்கினான்.
அழைப்பு மணி அடிக்க, வாமனன் ஆர்டர் செய்திருந்த உணவு வந்தது.
“எனக்கு வேணாம், நீ சாப்பிடு” என்றவன், மகனுக்கு அருகில் சென்று அமர்ந்தான்.
புதுவை சென்றவர்கள் லரும்பொழுது இரவு மணி பதினொன்றரையைத் தாண்டி இருந்தது.
ரங்கராஜனுக்கு வீட்டு வாசலில் நின்ற ஸ்ரீராமின் காரை எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது.
கிருஷ்ணாவின் உறக்கம் கலையாதிருக்க வேண்டி, சத்தமின்றி உள்ளே வர எச்சரிப்பதற்காக கதவைத் திறந்து காத்து நின்றான் வாமனன்.
முதல் கட்ட குசல விசாரிப்புகளுக்குப் பின் ரத்னம், அவர் மகன்,மருமகள் மூவரும் ‘குட்நைட்’ என்று அறைக்குள் சென்றுவிட்டனர்.
ரங்கராஜன் தம்பதிக்கு அந்த நொடியைக் கடக்க வேண்டிய நிர்ப்பந்தம், சங்கடம். மெலிதான குற்றவுணர்வு. மாப்பிள்ளை பட்டென எதையாவது சொல்லி விடுவானோ என்ற தவிப்பு.
முதலில் சுதாரித்த ரங்கராஜன் “நான் வரேன்” என்ற வாமனமூர்த்தியை இத்தனை இரவில் போக வேண்டாம் என எவ்வளோ தடுத்தும் கிளம்பி விட்டான்.
லலிதாவிடம் தலையசைத்தவன்,
மாமனார், மாமியாரிடம்
“இனிமே நீங்க லலிதாவை தனியா விட்டு எங்கயாவது போனா, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க” எனவும், வேறுவழியின்றி அமைதியாகக் கேட்டுக்கொண்டனர்.
வாமனனின் குரலில் இருந்த கண்டனம் லக்ஷ்மியை உறுத்தியது.
இரவு நேரத்தில் எதுவும் பேசாத லக்ஷ்மி மறுநாள் காலை ரங்கராஜன், மாமா, மாமி, தாத்தா என எல்லோரும் ஹாலில் இருக்க, காஃபியோடே தொடங்கி விட்டாள்.
“ஏன்டீ, கிருஷ்ணாக்கு பத்து மாசம் முடியப் போகுது. இத்தனை பேசுற, உன்னால ஒரு நாள் கூட குழந்தையை தனியா மேனேஜ் பண்ண முடியாதா? இந்தா இருக்கற ஹாஸ்பிடலுக்கு வெளிச்சத்தோட போய் இருக்கலாம். இதுல மாப்பிள்ளையைக் கூப்பிட்டு, கூடவே உன் நாத்தனார் வேற வந்து…”
ரங்கராஜன் “லக்ஷ்மீ…” என குரலை உயர்த்தியதற்கு எந்தப் பலனும் இல்லை.
“இப்ப பாரு, இத்தனை நாள் உன்னையும் உம்புள்ளையையும் கைல வெச்சு பாத்ததுக்கு பலன், நாங்க எங்க போனாலும் இவரு கிட்ட ரிப்போர்ட் செஞ்சுட்டுதான் போகணுமாம்”
“அம்மா…”
“உனக்கு அவ்வளவு பயமா இருந்தா, எங்களையே திரும்பி வான்னு சொல்லி இருக்கலாம். அதை விட்டு, நீ அவரைக் கூப்பிடப் போய், நாங்க பேச்சு கேட்க வேண்டியதா இருக்கு”
லலிதா “ஏம்மா, கிருஷ்ணாக்கு ஜுரமா இருக்கு, வாந்தி பண்ணிட்டான், துவண்டு விழறான்னு எத்தனை தரம் கால் பண்ணினேன்? கல்யாணம்தான் காலைலயே முடிஞ்சுடுச்சில்ல, இங்க நான் தனியா இருக்கேன்னு உனக்குத் தெரியாதா, நீயே கிளம்பி வர வேண்டியதுதானே?”
“...”
“ கிருஷ்ணா மூணு, நாலு தரம் வாமிட் செஞ்சு, கண்ணு செருகி துவண்டு விழறான். நைட் நீ வர வரைக்கும் அவனை அப்படியே விட சொல்றியா? சாயங்காலம் ஆறரை மணிக்கு கூப்பிட்டா, அப்பா எடுத்து, எட்டரை மணிக்குக் கிளம்புவோம்னு சொல்றாங்க. நீங்களும் வர நேரம் எடுக்குங்கும்போது, நான் என்ன செய்ய?
அவங்க வர வரைக்கும் என்னை நாள் முழுக்க பாத்ரூமுக்கு கூட போக விடலை அவன். நல்லவேறையா பவகத்ரா அண்ணி வந்தாங்க. ஃபீவர் இன்னும் கொஞ்சம் அதிகமானா ஃபிட்ஸ் வரக்கூட சான்ஸ் இருக்குன்னு சொன்னாங்க”
“என்னவோம்மா, நானும்தான் மும்பைல , நாலு மாசக் குழந்தைல இருந்து உன்னை வெச்சுக்கிட்டு தனியாத்தான் இருந்தேன். சளி, காய்ச்சல்னு வராமலே நீ வளர்ந்துட்டியா என்ன? குழந்தைங்கன்னா ஏதாவது வரத்தான் செய்யும்…”
இதுவரை அமைதியாக இருந்த அமெரிக்க அத்தை “நீங்களாவது இந்தியால இருந்தீங்க. என் நிலமையை யோசிங்க. டெலிவரியே அங்கதான். ரெண்டே மாசம்தான் அத்தை இருந்தாங்க. டாக்டர் கிட்ட போகணும்னாலே யோசனைதான். பர்ஸ் பழுத்துடும். வேலைக்கு ஆளும் கிடையாது. நம்ம சாப்பாடும் கிடைக்காது. என்ன செய்ய, சமாளிக்க வேண்டியதுதான்” என தன் புகழைப் பாடினாள்.
கிருஷ்ணா எழுந்து அழும் சத்தம் கேட்கவும், லலிதா எழுந்து ஓடினாள்.
ரஙகராஜன் “நீ பேசறது கொஞ்சம் கூட சரியில்லை லக்ஷ்மி. கிருஷ்ணாவை பாத்துக்கற பொறுப்பை அவகிட்டயே தராம, நீயே வெச்சு பார்த்துட்டு, இப்ப அவளை குறை சொன்னா? அதோட நாம இங்க இல்ல, எமர்ஜென்ஸின்னா, என்ன செய்வா? மாப்பிள்ளையைக் கூப்பிடாம யாரைக் கூப்பிடுவா?” என்றதும்,
“நீங்க என்ன சொன்னாலும், எனக்கென்னவோ, இவ மாப்பிள்ளையைக் கூப்பிட்டதும், அவர் நம்ம கிட்ட, நாம ஏதோ குற்றவாளி போல கண்டிப்பான குரல்ல பேசினதும் எனக்குப் புடிக்கலங்க. இத்தனை செஞ்சுட்டு இதெல்லாம் தேவையா நமக்கு?” என்றதும் கேட்டது.
லலிதா கிருஷ்ணாவுடன் வெளியே வந்தாள். ஜுரம் இல்லாவிட்டாலும் கதகதப்பு இருந்தது.
லக்ஷ்மியைப் பார்த்ததும் சிரிப்பும் சிணுங்கலுமாய் தாவ முயன்றவனை “இப்ப மட்டும் என்னத்துக்குடா நான், உங்கப்பா கிட்டயே போக வேண்டியதுதானே?” எனவும், அம்மாவை அதிர்ச்சியாகப் பார்த்த லலிதா, மகனுடன் அமைதியாக அறைக்குள் சென்றுவிட்டாள்.
முன்பே வாமனமூர்த்தியின் பேச்சில் குழம்பி இருந்த மனக்குளத்தை இப்போது அம்மா இன்னுமே கலக்கி விட்டிருந்தாள்.
அதுவும் லக்ஷ்மி ‘உன்னையும் கிருஷ்ணாவையும் வெச்சு பாத்துக்கிட்டதுக்கு’ என்றதை லலிதாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இத்தனை செய்துவிட்டு ஒருநாளில் வாமனன் அப்படிச் சொன்னது அம்மாவை காயப்படுத்தி இருப்பது புரிந்தாலும், இந்த வார்த்தைகளும் கிருஷ்ணாவை ‘உங்கப்பா கிட்டயே போ’ என்றதும் கொஞ்சம் அதிகம்தானே? என்பதிலேயே உழன்றாள்.
லக்ஷ்மி முன்பு வாமனனை, அவனது வீட்டினரை குறை சொன்னாலோ, விமரித்தாலோ எதுவும் தோன்றாத லலிதாவிற்கு இன்று அம்மா தன் கணவனைப் பற்றி பேசிய எதுவும் ரசிக்கவில்லை.
மருந்து கொடுத்து கிருஷ்ணாவை உறங்க வைத்தவள், டீம் லீடுக்கு இரண்டு நாள் லீவ் என மெயில் அனுப்பினாள்.
ஜானகிபாட்டி முதல் ஸ்ரீராம் வரை எல்லோரும் ஃபோன் செய்து விசாரித்தனர். வாமனன் பதினோரு மணிபோல் ஏதோ கேபில் பயணித்துக்கொண்டே அதிசயமாக வீடியோ காலில் வந்தான்.
“கிருஷ்ணா எப்டி இருக்கான், நான் அவசரமா கோயம்புத்தூர் போகணும். என்னால இப்ப அங்க வரமுடியாது. அவனைக் காட்டு” என்றவன்,
“ஹேய், என்னாச்சு, இன்னும் என்ன டென்ஷன், அதான் எல்லாரும் வந்துட்டாங்களே?”
“நத்திங்”
“ஹலோ, உங்கம்மா என்ன சொன்னாங்க?”
“...”
“ஓகே, நான் இப்ப ஏர்போர்ட் போறேன். ஸீ யூ”
லலிதா அவசரமாக “தேங்க் யூ” என்றாள்.
“இது எதுக்கு?”
“இல்ல, நேத்து…”
“யூ ஆர் வெல்கம்” என்றவன் பட்டென இணைப்பைத் துண்டித்தான்.
அன்றிரவு மாமா “நம்ம தினேஷ் எம் எஸ் முடிச்சு ஜூன் இருபத்தி மூணாம் தேதி கிராஜுவேஷன். அதோட, நிவேதா அவ கூட வேலை பாக்கற பையனை விரும்பறா. அங்கேயே பிறந்து வளர்ந்த குஜராத்தி பையன்”
“என்னடா சொல்ற?” என்றார் ரத்னம்.
“இதெல்லாம் இந்தக்காலத்துல சகஜம்தானே. நாங்களே நல்ல வேளை பையன் இந்தியன்தான்னு நினைச்சு சந்தோஷப்பட்டா…நீங்க என்ன மாமா?” என்றாள் மருமகள்.
மாமா “அவங்க வீட்ல உடனே கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க. அதனால ஜூலை பத்தாம் தேதி அங்கேயே கல்யாணம. அதனாலதான் இத்தனை பட்டுப்புடவை, நகையெல்லாம்”
“...”
மாமா, ரங்கராஜனிடம் “அத்தான், அவசரமா வந்ததால அப்பாவை இப்ப கூட்டிட்டு போக முடியலை. அப்பா, நீங்க, அக்கா எல்லாரும் கண்டிப்பா கிராஜுவேஷனுக்கும் கல்யாணத்துக்கும் வரணும். உங்க மூணு பேருக்கும் நான் டிக்கெட் அனுப்பறேன். நீயும்தான் லலிதா. மாப்பிள்ளை கிட்ட நான் பேசறேன்” என்றார், நைட்டுக்கு உப்புமாதான் என்பதைப் போல்.
மாமாவும் மாமியும்அடுத்த நான்கு நாள்கள் சிலநேரம் லலிதாவுடன், சில நேரம் தனியாக என பட்டும், நகையுமாக ஓயாது ஷாப்பிங் செய்தனர். லக்ஷ்மிக்கும் லலிதாவிற்கும் கூட பட்டுப்புடவை வாங்கி இருந்தனர். வியாழனன்று அதிகாலை கலிஃபோர்னியாவிற்குப் பறந்தனர்.
லக்ஷ்மி தன் அமெரிக்க பயணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினாள்.
*******************
நாளை திருமணநாள் என்ற நிலையில், நன்றி சொன்னதற்குக் கோபித்துக் கொண்டவன், அதன் பிறகு பேசவில்லை. கிருஷ்ணாவை விசாரித்து மெஸேஜ் மட்டும் வந்தது. கோபமா, பிஸியா என்று புரியாது சுற்றினாள் லலிதா.
வாமனமூர்த்தி வருவானா மாட்டானா என்று யோசித்தவள் தானும் போகலாம் என்று எண்ணவில்லை.
கணவன் வழி உறவுகள், அவர்களின் எதிர்பார்ப்பு, புகுந்த வீட்டின் வழமைகள், தினசரி நியதிகள், வேலைப் பளு, பொறுப்பு என பிடிக்காத, வேண்டாத பட்டியல் நீண்டாலும், பிறந்தநாள், திருமணநாள் போன்ற கொண்டாட்டங்களும் அங்கு நடக்கும் முக்கியமான நிகழ்வுகள், விவரங்கள் அனைத்தையும் தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆகாத எதிர்பார்ப்பும் லலிதாவுக்கு இருந்தது.
லலிதாவிடம் வாமனமூர்த்தியுடனான கருத்து பேதங்களை மீறி திருமணநாளுக்கான எதிர்பார்ப்பு இருந்தது. இரு பக்க சொந்தங்களுடனும், கணவனுடனும் என தனித் தனியே கொண்டாட்டத்தைக் கற்பனை செய்தவள், அதற்கான முன்னெடுப்புகளைக் கணவனிடம் எதிர்பார்த்தாள்.
‘உன் எல்லை இதுதான்’ என வரையறுத்தபின் எப்படி உறவாட விழைவார்கள் என்ற யோசனையில்லாத எதிர்பார்ப்பு. முன் கை நீண்டால்தானே முழங்கை நீளும்?
இரவு மணி பதினொன்றை நெருங்கியும் தூங்காமல் விளையாடிய கிருஷ்ணாவோடு நொடிக்கொரு முறை மொபைலைப் பார்த்தபடி நேரத்தைக் கடத்தினாள்.
‘இன்னும் அவர் எதுவுமே சொல்லலை, அப்போ இந்த வருஷம் வெட்டிங் ஆனிவர்ஸரி அவ்ளோதானா?’
*****************
பவித்ரா மூக்கில் கடலையைப் போட்டுக் கொண்டு மூச்சுத் திணறலுடன் ஹாஸ்பிடலுக்கு வந்த மூன்று வயதுப் பையனைப் பார்க்கவென ஓடியிருந்தாள்.
அம்பு தன் பொம்மைக் கூடையை சிதறடித்து, ஒரு நரி (Bunny) பொம்மைக்கு குடல் ஆபரேஷன் செய்ததில் வீடெங்கும் பஞ்சாய் பறந்தது.
“அம்பு” என்று வாமனன் குரலை உயர்த்த, அம்பு உதட்டைப் பிதுக்கி, தந்தையிடம் “மாமா” வை நோக்கி விரல் நீட்ட, ஸ்ரீராம் கையெடுத்து கும்பிட்டான்.
“மச்சான், உன் கால்ல வேணும்னாலும் விழறேன். சைரனை ஆன் பண்ணி வுட்றாதடா. உன் பாசமலர் வேற எப்ப வருவான்னு தெரியல”
“பொழைச்சுப் போ”
“அதை விடு, நாளைக்கு ஆனிவர்ஸரிக்கு என்ன ப்ளான்?”
“...”
“உன்னைத்தாண்டா…”
“என்ன பெரிய ப்ளான், எனக்கு ஸ்டேஜ் ட்ராமா மாதிரி அம்பலத்துல ஆடி செல்ஃபி எடுக்க வேண்டாம்”
“...”
“இன்னிக்கு வரை தனியா இருக்கோம். மிஞ்சிப்போனா ஒரு நாலு அல்லது ஆறு மணிநேரம் சேர்ந்திருப்போமா, திரும்பவும் அவ அங்க, நான் இங்க… கிருஷ்ணாவைப் பார்க்கணும்னா பன்னெண்டு கிலோ மீட்டர் போய், அவங்க, அம்மா, தாத்தான்னு எல்லார் கிட்டயும் இளி…”
“ஓ, ஸ்டாப் திஸ் வாம்ஸ். எனக்குத் தெரிஞ்சு லலிதா இப்பதான் கொஞ்சம் இளகி, யோசிக்கத் தொடங்கி இருக்கா. இப்ப நீ ஆரம்பிக்காத”
“ம்ப்ச்… அன்னைக்கு அவங்க வீட்டுக்குப் போனதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்றாடா”
அமைதியாக எழுந்து சென்ற ஸ்ரீராம் இரண்டு பியர் டின்களுடன் வந்தான்.
“இதைக் குடி”
“பவி…”
“சீக்கிரம் குடிடா. உனக்கு உன் தங்கைக்கு பயம், எனக்கு என் அம்புலுக்கு பயம். பாத்தா ஜூஸ் குடுன்னு கேப்பா”
“நீயே சொல்லு ஸ்ரீ, நான் போய் அவளுக்கு குலாம் போட முடியுமாடா?”
“...”
“அந்தம்மா, அதான் அவ அம்மா, என்னை என்னவோ அவங்க பொண்ணைத் தூக்க வந்த வில்லன் மாதிரி பார்க்கறாங்க. என் பொண்டாட்டி டா அவ”
வாமனனின் புலம்பல் தாங்க மாட்டாது “அரை டின் பீருக்கேவாடா, போதும் நீ குடிச்சது” என டின்னைப் பிடுங்கிய ஸ்ரீராம்,
“என்ன செய்வியோ, ஏது செய்வியோ தெரியாது. நாளைக்கு லலிதாவைக் கிட்னாப் பண்ணியாவது ஆனிவர்ஸரியைக் கொண்டாடற, டாட்”
“டேய் ஸ்ரீ, யாரும் வேணாம் டா, நீயும் நானும் பைக்ல லாங் ட்ரைவ் போலாம்”
“உனக்கு நல்லது சொன்னா, எனக்கு தலாக் வாங்கிக் குடுக்க ப்ளான் பண்றியா நீ, கொன்னுடுவேன். இரு, நாளைக்கு நானே ஏதாவது பண்ணித் தொலைக்கறேன்”
ஆனால், ஸ்ரீராம் எதுவும் செய்யாமலே, மறுநாள் காலை தன் வீட்டில் மனமின்றி சோம்பிக் கிடந்த வாமனமூர்த்திக்கு அழைத்து “ஹேப்பி ஆனிவர்ஸரி, என்னையும் கிருஷ்ணாவையும் வந்து கூட்டிட்டுப் போங்க” என்ற லலிதா காலை கட் செய்திருந்தாள்.

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 16 - FINALE 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.