அத்தியாயம் – 22
காவலர் குடியிருப்பில் இருந்த துருவனின் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, ‘இந்நேரம் யாராக இருக்கும்?’ எனக் கதவைப் போய் திறந்தாள் அவன் மனைவி, மித்ரா. வெளியில் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்ததும், “ஆதி மாமா” எனத் திகைத்துப் போனாள்.
சற்று மேடிட்ட வயிற்றுடன் திகைத்துப் போய் அவனை நோக்கிக் கொண்டிருந்த தன் அத்தைப் பெண் மித்ராவைப் பார்த்ததும் ஆதிநந்தனின் கண்கள் இரண்டும் கலங்கிவிட்டன. இவளைப் பார்த்து எத்தனை காலமாகிவிட்டது?
இங்கே வருகையில் கூட அவன் இத்தனை உணர்ச்சிவசப்படுவான் என்று கூறியிருந்தால் அவன் நம்பியிருக்கப் போவதில்லை. உணர்வுகள் பிரவாகமெடுத்து அவனை அலைக்கழிக்க, “மித்ரா!” என்றான்.
ஒருவர் தன் வாழ்க்கையில் இல்லையென்றால் உயிர் வாழவே பிடிக்காது என்ற நிலையில் அவன் தவிப்பதைப் போலல்லவா துருவனும் மித்ராவும் அன்று தவித்திருப்பார்கள்?அதை ஏன் அவன் புரிந்து கொள்ளாமல் போனான். அவன் ஒன்றும் காதலுக்கு எதிரியல்லவே.
அவன் தந்தை கூட மித்ராவின் பெற்றோர்களிடம், ‘பரவாயில்லை விடுங்க... நம்ம பொண்ணு தானே’ என எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவன் மாமா மட்டும் கேட்பதாக இல்லை. செல்லப் பெண் இப்படிச் சென்றுவிட்டாள் என்ற கோபத்தை மட்டுமே இன்று வரையிலும் கெட்டியாக பற்றிக் கொண்டிருக்கிறார்.
பெரியவர்கள் அப்படி இப்படி என்று இருப்பார்கள் தான். இளையவனான அவனும் துருவனின் மேலுள்ள பிடித்தமின்மையினால் உடன் சேர்ந்து அவர்களது கோபத்துக்குத் தூபம் போட்டானே.
ஆனால் இன்று அவனுக்கு என்று வருகையில் அல்லவா மற்றவர்களின் உணர்வுகளை உளமார உணர்ந்து கொள்ள முடிகின்றது. எவ்வளவு பெரிய தீங்கிழைத்துவிட்டான். அவர்களின் உளமாறுமா?
போனது போகட்டும். இனியாவது அதைச் சரி செய்துவிடலாம். அதுவும் இப்போது அவன் கையில் உள்ளது. ஆரம்பகட்ட அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த ஆதிநந்தன், “எப்படி மித்ரா இருக்க?” எனக் கமறிய குரலில் கேட்கவும்,
“இவ்வளவு நாளாச்சில்ல உங்களுக்கு என்னைப் பார்க்க வர” என மித்ராவின் கண்களும் கலங்கிவிட்டன. சில விநாடிகள் தான். பிறகு என்ன நினைத்தாளோ முகத்தைத் திருப்பிக் கொண்டு விடுவிடுவென்று உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் கோபமாக உள்ளே செல்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. “மித்ரா..” என அவளைத் தொடர்ந்து உள்ளே நுழைய முற்பட, “யாருடா அது என் மித்ராவின் கண்ணுல நயாகரா பால்ஸ் வர வைக்கிறது?” என்றவாறே துருவன் அவனை எதிர்கொண்டான்.
அதே சமயத்தில் துருவனுக்குப் பின்னால் நேத்ராவும் வேறொரு அறையில் இருந்து வெளியில் வந்தாள். வரவேற்பறையில் நின்று கொண்டிருந்த ஆதிநந்தனைப் பார்த்ததும் அவளது முகத்தில் இருந்த சிரிப்பு மறைய விழிகளாலேயே எரித்துவிடுவதைப் போல் பார்த்தாள்.
அவளைப் பார்த்ததும் உள்ளுக்குள் நிம்மதி பரவ முகம் மலர்ந்தவனாக ஏதோ சொல்ல வாயெடுக்க, நேத்ரா அவனைப் பார்க்காதவாறு வெடுக்கென்று முகத்தை வேறேங்கோ திருப்பிக் கொண்டாள்.
அவளையே இமைக்காமல் நோக்கியவன், இவளைத் தனிமையில் தான் எதிர்கொள்ள வேண்டும். முதலில் தன் அத்தைப் பெண்ணின் கோபத்தைச் சரி செய்யவேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
“டேய் ஆதி.. உனக்கு இன்னைக்கு ரெண்டு பெண்களால் அவதின்னு உன் ராசி பலன்ல போட்டிருக்கு போல’ என முணுமுணுப்பது துருவனின் காதில் விழுந்தது. அதைக் கேட்டு அவன் கலகலவென்று சிரித்தான்.
“மித்ரா... வெளில வா... உன்னோட பேசணும்” என ஆதிநந்தன் அதட்டலாகச் சொல்ல, “என்ன ஆதி, உங்க வீட்டிலிருந்து தாய் மாமன் சீர் கொண்டு வந்திருக்கியா என்ன?” என துருவன் கேலியாக வினவினான்.
“சீக்கிரம் கொண்டு வரேன். அதுக்கு முன்னாடி நான் மித்ராகிட்ட மன்னிப்பு கேட்கணும். உன்கிட்டேயும் தான். ஐ ஆம் ரியலி சாரி துருவ்” என்றான்.
“அட இங்க பார்றா மன்னிப்பு எல்லாம் தூள் பறக்குது” எனக் கேலியாக உரைத்த துருவன், “என்ன திடீர்னு?” என அவனைக் கூர்ந்து பார்த்தான்.
“இல்ல...கொஞ்ச நாளாகவே கேட்கணும்ன்னு இருந்தேன். இன்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை. வந்துட்டேன்” என ஆதிநந்தன் சொன்னதும், “அப்போ நேத்ரா இங்க வரலைன்னா வந்திருக்க மாட்ட இல்ல?” எனப் பரிகாசமாகக் கேட்டான் துருவன்.
நேத்ரா முகத்தை மட்டுமே திருப்பியிருந்தாள். கவனம் மொத்தமும் அவர்களின் பேச்சில் லயித்திருந்தது.
“அதில்லை...” எனத் தடுமாறியவன், “அத்தை-மாமா முதல்ல வரட்டும்னு இருந்தேன். ஆனா, இன்னைக்கு மித்ராவைப் பார்த்ததும் சும்மா இருக்க முடியலை” எனப் பதில் உரைத்தவன், “மித்ரா.. பிளீஸ் வெளில வா. அதான் சாரி சொல்லிட்டேனே” என இறைஞ்சுதலாய் அவள் சென்ற அறையின் கதவைத் ‘தட் தட்’ என்று தட்டினான்.
“முடியாது.. ஒத்துக் கொள்ளவே முடியாது... எல்லோரையும் விடுங்க. உங்களை எவ்வளவு நம்பினேன். ஆனா நீங்களும் அம்மா-அப்பாவோட சேர்ந்துட்டு என் காதலுக்கு எவ்வளவு எதிர்ப்பு தெரிவிச்சீங்க? எனக்கு எப்படி இருந்திருக்கும்? இப்பவும் நான் பிரெக்னென்ட்டுன்னு தெரிஞ்சும் இவ்வளவு நாளா என்னைப் பார்க்க வரலை நீங்க” என விசும்பினாள்.
“தப்பு தான் மித்ரா, பிளீஸ் அழாத... அப்புறம் உன்னை அழ வச்சேன்னு என்னைத் தூக்கி உன் போலீஸ் ஹஸ்பண்ட் உள்ளே வச்சிடப் போறார்” என ஆதிநந்தன் சொல்ல, அழுகையுடன் மித்ரா சிரிப்பது வெளியில் நின்றிருந்தவனுக்குக் கேட்டது.
வந்த சிரிப்பை வாய்க்குள் முழுங்கிக் கொண்டவள், கதவைத் திறந்து வெளியில் வந்தாள்.
“மன்னிப்பை யாரும் இப்படிக் கேட்க மாட்டாங்க” என மித்ரா முகத்தைப் பொய்யான கோபத்துடன் தூக்கி வைத்துக் கொள்ள, “கண்டிப்பா நீ எதிர்பார்க்கிற மாதிரி கேட்கணுமா?” என ஆதிநந்தன் வழிந்தான்.
“ஆமா” எனக் கையைக் கட்டிக் காலைத் தரையில் தட்டியவாறே மித்ரா நிற்க, அங்கிருந்த மற்ற இருவரையும் பார்த்தான் ஆதிநந்தன்.
அதுவரையில் அவர்கள் இருவரையும் குறுகுறுவென்று நோக்கியவாறு நின்று கொண்டிருந்த நேத்ரா, ஆதிநந்தனின் பார்வையைச் சந்திக்கவும் அவனைப் பார்க்காதவாறு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
ஆதிநந்தன் பெருமூச்சொன்றை வெளியிட்டு, இரண்டு கைகளையும் மாற்றி இரு பக்க செவிகளையும் பற்றித் தோப்புக்கரணம் போடுவதற்கு ஆயத்தமானான். அவர்கள் சிறு வயதில் இருந்தே யாராவது தவறு செய்தால் இப்படிச் செய்வது வழக்கம்.
உண்மையில் வருந்தினால் மட்டுமே ஆதிநந்தன் தோப்புகரணம் போடுவான் என்று மித்ரா நன்கு அறிவாள். அதனாலேயே அவனிடம் அப்படிக் கேட்டாள். அவன் அப்படி ஆயத்தமாகவும் அவன் உண்மையில் வருந்துகிறான் எனப் புரிந்து கொண்டாள்.
“சரி... சரி... என் மாமாவோட மானம் கப்பலேற நான் காரணமாகக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காகப் போனா போகட்டும் என விடறேன்” என மித்ரா பெரிய மனது பண்ணி சொல்ல, “அப்பாடா தப்பிச்சேன்” எனச் சிரித்தான் ஆதிநந்தன்.
“பிரிஞ்ச குடும்பம் ஒண்ணு சேர்ந்தா பாட்டு பாடுவீங்கன்னு பார்த்தா இது என்ன இப்படி ஏமாத்திட்டீங்க . சரியான டுபாக்கூர் குடும்பம் போல” என துருவன் இருவரையும் வம்புக்கு இழுக்க,
“பாருங்க மாமா. நம்ம குடும்பத்தை இப்படிச் சொல்லறார். இவரை...” என துருவனின் அருகில் சென்றாள்.
“என்ன மித்து இது, இத்தனை நாளா உன் குடும்பத்தையும், உன் ஆதி மாமாவையும் என்கிட்டே அப்படித் திட்டிட்டு இருந்த. இப்போ திடீர்ன்னு கட்சி மாறிட்ட” என துருவன் மீண்டும் மனைவியை வம்புக்கு இழுக்க, “உங்களை” என அவன் முதுகில் இரண்டு அடி வைத்தாள்.
அவர்களின் அன்னியோன்யத்தைப் பார்த்த ஆதிநந்தனுக்கு மிகத் திருப்தியாக இருந்தது.
“துருவ், உனக்குப் பாட்டு வேணுமா? இரு, என் அத்தைக்கு ஃபோன் பண்ணறேன். எல்லா உணர்வுகளும் வெளில வர மாதிரி கச்சேரியே கிடைக்கும் பாரு” என்ற ஆதிநந்தன், யாரும் எதிர்பாராத வண்ணம் உடனே தன் அத்தையை அழைத்துவிட்டான்.
அழைப்பை எடுத்த அவன் அத்தை, “என்ன ஆதி. எப்போ புதுச்சேரில இருந்து வந்த?” எனப் படபடவென்று பேச ஆரம்பித்தார். அவருக்கு உகந்த பதிலை அளித்த ஆதிநந்தன், “அத்தை, உங்களுக்கு ஒரு முக்கியமான ஆளைக் காட்டறேன். வீடியோக்கு வாங்க” என அவருக்கு அழைப்பு விடுத்தான்.
அதுவரையில் அவனையும் அவன் அன்னையின் குரலையும் ஏக்கத்துடன் மித்ரா பார்த்துக் கொண்டிருக்க, அவன் அத்தை தொடர்பில் வந்தார்.
“என்ன ஆதி? எங்க இருக்க?” என அவன் அத்தை கேட்கவும், “இந்தாங்க பேசுங்க” என அவன் அலைபேசியை மித்ராவை நோக்கித் திருப்பினான்.
மித்ராவை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத அவன் அத்தை, மகளை நெடுநாள் கழித்துக் கண்டதில் அப்படியே பேச்சற்றுப் போனார். சற்றுநேரம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரின் கண்களும் கலங்கிப் போயின.
“அம்மா..” என மித்ரா அழைத்ததும் அவ்வளவு தான். அந்தத் தாயின் மனம் உடைந்து போனது. அதுவும் அவள் கருவுற்றிருக்கும் செய்தியைக் கேட்டதில் இருந்தே ஒருவித பூரிப்பிலும், எதிர்பார்ப்பிலும் இருந்தவர் இன்று மகளைக் கண்டதுமே அழ ஆரம்பித்துவிட்டார்.
“அத்தை, உங்க பொண்ணை நீங்க பார்த்து அழற நிலைமையிலா நான் வச்சிருக்கேன். பாருங்க. நீங்க அனுப்பினதை விட எவ்வளவு ரவுண்ட்டா இருக்கான்னு” என துருவன் மித்ராவின் அருகில் வர, மித்ரா அவனைப் பார்த்து முறைத்தாள்.
“மாப்பிள்ளை...” என அதற்குமேல் என்ன சொல்வது என்று அவர் தயங்க, இதற்குமேல் அவர்களின் குடும்ப விஷயத்துக்கு மத்தியில் தான் நிற்பது அதிகம் என்று தோன்றியது நேத்ராவுக்கு. எப்படியும் அவள் நினைத்தது நடந்துவிட்டது.
சற்றுநேரத்துக்கு முன்னர் பாண்டிச்சேரியில் இருந்து கோபமாகக் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நேத்ராவுக்கு ஒன்று மட்டும் திட்டவட்டமாகத் தெரிந்தது. தன் வீட்டுக்குச் சென்றால் கண்டிப்பாக ஆதிநந்தன் அவளைத் துரத்திக் கொண்டு வந்து விடுவான்.
அதனால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் பளிச்சென்று வேறொரு யோசனையும் அவளுள் மொட்டுவிட்டது.
ஆதிநந்தன் அவளைப் பற்றி மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் எனத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னுமே இழுபறியாய் இழுத்துக் கொண்டிருக்கும் மித்ராவின் வீட்டினரின் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்ற எண்ணமும் மறுபக்கம் தலைதூக்கியது.
குடும்பத்தைப் பிரிந்து இருப்பது என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். அதை அவள் நன்கு அறிவாள். தினமும் அனுபவித்து வருகிறாளே. அதுவும் குடும்பம் என்ற ஒன்று இல்லையென்றால் இது தான் விதி என்று மனதை தேற்றிக் கொண்டு போகலாம்.
ஆனால் ஒரே ஊரில் இருந்து கொண்டு இப்படிப் பரிதவிக்கும் மித்ராவைப் பார்க்க பார்க்க நேத்ராவின் மனம் பிசைந்தது. அன்று காலையில் கூட அவள் பேசுகையில் ஏதோ சுரத்தே இல்லாமல் பேசினாள் மித்ரா.
எனவே ஆதிநந்தனையும் மித்ராவையும் சந்திக்க வைப்பதற்குச் சரியான தருணம் எனக் கருதினாள். நேராகத் தன் காரை துருவனின் வீடு நோக்கிச் செலுத்தினாள் நேத்ரா.
‘நான் வேண்டுமென்றால் தொடர்ந்து வா’ என்ற மறைமுகமான சவால் என்று கூடச் சொல்லலாம்.
ஆரம்பிக்கத் தான் நிறையப் பேருக்குத் தயக்கம் இருக்கும். அதன்பிறகு எவ்வித தங்கு தடையில்லாமல் நகரும். மித்ராவின் விஷயத்திலும் அதுவே நடந்தது. ஆதிநந்தன் தன்னைத் தொடர்ந்து வருவான் என ஊகித்துத் துருவனின் வீட்டுக்குச் சென்றாள்.
அவள் நினைத்ததைப் போலவே அனைத்தும் நிறைவேறிவிட்டது. இப்போது நேத்ராவுக்குத் திருப்தியாக இருந்தது. இனி தான் அங்கே நிற்பது அதிகப்படி என்று யாரும் அறியா வண்ணம் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்
யோசனையோடு காரைச் செலுத்திக் கொண்டிருந்த நேத்ராவின் மனம் தோழியை நினைத்து மகிழ்ச்சியில் கூத்தாடியது. எப்படியோ இனி அவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.
அவள் கிளம்புகையில், மித்ராவின் அன்னை உடனே கிளம்பி வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இனி அதற்குமேல் நேத்ரா அங்கே இருந்து என்ன செய்யப் போகிறாள்.
ஆதிநந்தன் தன்னைத் தொடர்ந்து வருவானோ என்று யோசித்த அடுத்த நொடி அவனிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் எடுக்கவில்லை என்றதும் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
காரை ஓரங்கட்டியவள், கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். கவிதை ஒன்றை அனுப்பியிருந்தான்.
பார்வைகள் கூர் வேலாக
மௌனங்கள் பெரும் கேடயமாக
காதல் படைவெளியில் தள்ளிவிட்டு
மொழியற்றுத் தவிக்கச் செய்தாயே!
கற்களால் செய்த இதயத்தை
நுண் துகள்களாக்கி
சர்வமும் அடங்கி
கர்வம் உதிர்த்து
உயிர் விரித்துக் காத்திருக்கிறேன்!
இதழ் முத்தங்கள் முடிந்து விடாது
நெஞ்சத்துச் சத்தங்கள் தீர்ந்து போகாது
காதல் தாகங்கள் தீர்க்கப் படாது
இனிய மோகங்கள் முற்றுப் பெறாது!
இருந்தால் தான் என்ன?
என்றென்றும் தொடரட்டுமே...
காற்றில் நீ நிரப்பிய சொற்கள்
மனவெளியில் வாசம் பரப்பி
என் சுவாசத்தை நீளச் செய்கின்றதே!
அப்படியே காத்திருக்கிறேன்...
காதல் படைவெளியில்!
அதைப் படித்துப் பார்த்தவள் அப்படியே இருக்கையின் பின்னே சாய்ந்து அமர்ந்துவிட்டாள். இவன் உண்மையில் தனக்காக இவ்வளவு ஏங்குகிறானா? நினைக்க நினைக்க நெஞ்சத்தின் தித்திப்பு கூடியது.
அவனைச் சந்தித்ததில் இருந்து ஒவ்வொன்றாக அவள் விழித்திரையில் படம் போல் ஓடின. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ காரின் ஹார்ன் சத்தத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பினாள். காரின் கண்ணாடியில் பின்னே பார்த்தவளுக்குச் சலிப்பாக இருந்தது.
தமிழரசியின் வேலையாட்கள் அவளைத் துரத்திக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டனர். காலையிலிருந்து அவள் அழைப்பை எடுக்கவேயில்லை. இப்போது மோப்பம் பிடித்து அவளை நெருங்கிவிட்டனர்.
இதோ இன்னும் சில நொடிகளில் அவள் காருக்கருகில் வந்துவிடுவார்கள். இப்போதைக்குத் தமிழரசியிடம் பேசும் மனநிலையில் அவள் இல்லை. அதனால் விருட்டென்று காரைக் கிளப்பிச் சாலையில் கலந்தாள்.
இதை எதிர்பார்க்காத அந்த வேலையாட்கள் மீண்டும் திபுதிபுவென்று தங்கள் காருக்கு ஓடினர்.
மித்ராவை அவள் அன்னையுடன் பேச வைத்து, அவர்களைச் சமாதானம் செய்துவிட்டு ஒருவித நிறைவுடன் அங்கிருந்து கிளம்பினான் ஆதிநந்தன்.
அவன் கிளம்புகையில், துருவன் அவனிடம் வந்து “தேங்க்ஸ் ஆதி. இத்தனை நாளும் மித்ராவோட முகத்தில தெரியற சிரிப்பு அவள் மனசை எட்டலை என எனக்குத் தெரியும். இன்னைக்கு ஆளே வித்தியாசமா இருக்கா. எல்லாம் உன்னால” என அவனைத் தோளோடு பற்றி இறுக்கி நன்றியுரைத்தான்.
ஆதிநந்தனுக்கு மனம் பொங்கியது. மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் அவர்களும் நம்மிடம் நடந்து கொள்கிறார்கள் எனத் தெளிவாகப் புரிந்து கொண்டான். இவனிடம் இத்தனை வருடங்களாக அவன் திமிராக நடந்து கொள்ளத் துருவனும் நட்பு கரம் நீட்டவில்லை. இன்று அனைத்துமே தலைகீழ்.
நேத்ராவிடமும் அப்படித் தானே நடந்து கொண்டான். அவள் பொறுமைசாலி. அவனை எதுவும் சொல்லவில்லை. இதற்கு அவன் நேத்ராவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் என விழிகள் அவளைத் தேடின. அவள் இருந்த சுவடே இல்லை.
என்றுமில்லாத வகையில் அவன் இருதயத் துடிப்பு அவனையுமறியாமல் அதிகரித்தது. அவள் எங்கே? அவள் கிளம்பிய சிறிது நேரம் கழித்தே அவள் அங்கில்லை என்பதை உணர்ந்தான்.
நேத்ரா திட்டமிட்டே தான் இங்கே வந்திருக்கிறாள் என அவனுக்குப் புரிந்து போனது. அவளை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலும் தவிப்பும் கூடியது. துருவனிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தவன் உடனே அவளுக்கு அழைத்தான்.
அவள் தான் கோபத்தில் இருக்கிறாளே. அழைப்பை ஏற்கவில்லை. உடன் கவிதையை அனுப்பி வைத்தான். அதற்கும் எந்த எதிர்வினையும் இல்லை. இனி போய் அவளைச் சமாதானம் செய்ய வேண்டும் என அங்கிருந்து காரை நகர்த்தினான்.
முதலில் எங்கே செல்வது? அவள் வீட்டுக்கா, இல்லை, வேறெங்கே? அவன் யோசனையில் காரைச் செலுத்திக் கொண்டிருக்க, பங்கஜம்மாளிடம் இருந்து வந்த அழைப்பு, அவன் தலையில் இடியை இறக்கியது.
தொடரும்...
Author: Lavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.