• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 14 - FINALE 1

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
35
Mr. மாமியார் 14


ரட்டையராக பிறப்பதும் வளர்வதும் , அவர்களை வளர்ப்பதும் தனியானதொரு அனுபவம். மூன்று, நான்கு மாதங்களில் ஒன்றின் முடியை மற்றொன்று பிடித்துக்கொள்வதில் தொடங்கி, பசி, சிரிப்பு, சண்டை, அழுகை, சமாதானம் முதல் சளி, காய்ச்சல் வரை எல்லாமே ஒன்றுபோல் வருவது அவஸ்தை என்றாலுமே அழகுதான்.

ஒரே போன்ற தோற்றம் உடையவர்களாக இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கான பல சுபாவங்களும் உணர்வுகளும் பொதுவானவை.

வெவ்வேறு நாட்டில் இருந்தால் கூட, தன் இரட்டைக்கு ஆபத்து என்றோ, உடல்நலம் சரியில்லை என்றோ உணர்பவர்கள் அநேகம். ஒரேநாளில் பூப்பெய்திய இரட்டையர்கள் உண்டு. அவர்களுக்கிடையே டெலிபதி போன்ற ஒரு தொடர்பு உண்டு.

இரட்டையரில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருந்ததில், இரண்டு ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கு, ஒரே போன்ற உடை, ஹேர் ஸ்டைல், எதுகை மோனையான பெயர் என வழக்கமான இரட்டையர் போல் இல்லாது, மகளுக்கு ஸ்ரீசைலம் ஆசைப்பட்ட படி பவித்ரா என்றும், ஸ்ரீசைலத்தின் தந்தையின் விருப்பப்படி கொள்ளு தாத்தாவின் பெயரான வாமனமூர்த்தியின் பெயரை மகனுக்கும் சூட்டினர்.

“இதென்ன ரெட்டை புள்ளைங்களுக்கு சம்பந்தம் இல்லாம பேரு வெச்சு இருக்கீங்க?” என ஸ்ரீசைலம் தம்பதியை கேட்காதவர்களே கிடையாது.

ரைமிங்கான பெயருடன் ஒரே பாலாக இல்லா விட்டாலும், வாமனனும் பவித்ராவும் ஒரே ஜாடையில் இருந்தனர்.

சிறுவயதில் வாமனனுக்கு கிச்சுகிச்சு மூட்டினால்,
இரண்டு அறைகள் தள்ளி இருக்கும் பவித்ராவும் கிளுக்கிச் சிரிப்பாள்.

வயதும் சூழலும் கூடக் கூட இதுபோன்ற நுட்பமான உணர்வுகள் கவனிக்கப்படாது குறைந்தாலும் முற்றிலுமாக மறையவில்லை.

பவித்ரா கொஞ்சமே கொஞ்சம் ஆணுக்கான கம்பீரம் கலந்து மிளிர்ந்தாள் எனில், கீற்றாகக் கலந்த பெண்மையின் சாயல் வாமனனுக்கு அழகு சேர்த்ததென்னவோ நிஜம். இருவருக்கும் சிண்டு போட்டும், பாய் கட் செய்தும் எடுத்த புகைப்படங்கள் இன்றுமே பார்ப்பவரைக் குழப்பும்.

இயற்கையின் ரஸவாதத்தில் பருவம் வந்தபிறகு உருவம் மாறினாலும் சாயல் மாறவில்லை.

ஸ்ரீராம் - பவித்ராவின் காதலை அறிந்தபோது வாமனனுக்கு முதலில் தோன்றியதென்னவோ, ‘பவியை அதிகம் பிரிய வேண்டி இருக்காது’ என்பதுதான்.

அவர்களது காதலுக்கு ஆதரவாகப் பெற்றோரிடம் பரிந்து பேசியபோது கூட “எனக்கும் பவிக்கும் இருக்கற bonding ஸ்ரீக்கு நல்லா தெரியும்ப்பா. இன்னொரு மாப்பிள்ளையை தேடி, அவளைப் பார்க்கவே பர்மிஷன் கேக்க வேண்டி வந்தா…” என்று உணர்ச்சி வசப்பட்டவன் வாமனன்.

தங்கள் பந்தத்தைப் புரிந்த உற்ற நண்பனுடன் பவிக்கு திருமணம் என்பதில் அவனுக்கு அத்தனை நிம்மதி.

தனக்கு வரப்போகும் மனைவிக்கும் அந்தப் புரிதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கவலையும் கொண்ட வாமனன்,
தனக்கென நேரில் சென்று பார்த்த ஒரே பெண்ணான லலிதாவிடம் சுருக்கமாக என்றாலும் இரட்டையரான தங்களைப் பற்றி சொல்லத்தான் செய்தான்.

லலிதா சில நேரங்களில் பவித்ராவை விமரிசிப்பதை தன் மீதான உரிமை உணர்வாக எண்ணிக் கடந்திருக்கிறான்.

மனைவி இப்போது தங்களுக்கிடையே மீண்டும் பவித்ராவை இழுத்ததிலும், விருந்தாளியைப் போல் தன்னை வந்துபோகச் சொன்ன ஆத்திரத்திலும், வாமனன் குழந்தையுடன் வெளிக் கிளம்ப, சுவரோரமாக வந்து நின்ற பவித்ராவின் அவளது முகத்திலிருந்தே லலிதா கூறியதை அவள் முழுவதுமாகக் கேட்டிருந்தது அனைவருக்குமே புரிய. அதிர்ந்தனர்.

இங்கேயே குடி வரத் தயங்கியவர்களை பெற்றோரும் உடன்பிறந்தவனும் வற்புறுத்திதான் சம்மதிக்க வைத்திருந்தனர்.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் கடந்தும் லலிதா இங்கே வரவில்லை என்றதுமே, பவித்ராவே “என்னால, நான் அம்புக்குட்டியை இங்க விடறதால வரத் தயங்கறாளாடா வாமனா?’ எனக் கேட்டிருந்தாள்.

‘ஓ பாய்! இவளை வேற சமாளிக்கணும், அதைவிட கஷ்டம் ஸ்ரீராமை மேனேஜ் செய்யறது’

அம்புக்காக என இங்கு வந்தாலுமே, ஸ்ரீராம், பவித்ரா இருவரில் ஒருவர் மட்டுமே வீட்டில் இருந்தாலும், ஐந்தாம் மாதத்திலிருந்தே அம்பு அவர்கள் வீட்டில்தான் இருப்பாள்.

ஸ்ரீராம் மகளுக்காவே அநேக நாள்கள் ஒர்க் ஃப்ரம் ஹோமில்தான் இருக்கிறான். வீட்டிலிருந்து சற்றே தொலைவில் இருந்த ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் தன் பகுதிநேர குழந்தை மருத்துவர் விஸிட்டிங்கை பவித்யா விட்டு விட்டாள்.

‘அம்புலுவையும் உன்னையும் விட எனக்கு எதுவும் பெரிசில்லைடா பவி. ரிலாக்ஸ், வேணாம்னா பக்கத்துலய ஒரு குட்டி க்ளீனிக் வெச்சு, வர பேஷன்ட்டை பாரு, போதும்’ என்றிருந்த ஸ்ரீராமுக்கு இதெல்லாம் தெரிய வந்தால், இன்றே வெளிநடப்பு செய்துவிடுவான்.

ஆறு வயதிலிருந்து தந்தையிடம் இருந்தே விலகி நிற்பவனுக்கு, மாமனார் வீட்டை உதறுவதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. காயம்பட்ட மனதுக்குத் தன்மானம் அதிகமல்லவா?

”நான் அப்புறம் வரேன், அம்புக்குட்டி, வா போகலாம்”


மகளைத் தூக்கியபடி வாமனனைக் கூர்ந்த பவித்ராவின் விழிகளில் , “ஏன்டா, என்னாலதானான்னு எத்தனை முறை கேட்டேன்?” என்ற கேள்வி கொட்டை எழுத்துக்களில் மின்னியது.

பவித்ராவின் பின்னே செல்லக் கிளம்பிய ஸ்ரீசைலத்தைத் தடுத்த பாட்டி “சைலா, நீ சம்பந்தி கூட இரு, நான் போய் பவியைப் பாக்கறேன்” என்று புறப்பட்டுச் சென்றார்.

மகளைப் பற்றி மருமகள் விட்ட வார்த்தையில் சம்பந்திகளின் முகத்தில் தெரிந்த அதிருப்தியில், ரங்கராஜன் தம்பதியினர் செய்வதறியாது அமர்ந்திருந்தனர்.

எத்தனையோ அலுவலக ரீதியான மீட்டிங்குகளில், கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ப்ராஜெக்ட்டுகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு அநாயாசமாகத் தீர்வு சொல்லும் ரங்கராஜன், தர்மசங்கடம் என்பதன் பொருளை முழுதாக இன்று உணர்ந்தவர், சில நிமிடங்களுக்குப் பின் மனைவிக்கு ஜாடை காட்டியபடி எழுந்து நின்று “நாங்க புறப்படறோம்” என்றதும்…

“கிருஷ்ணாவைக் கொடுங்க” என்று அருகில் வந்து மகனுக்காக கையை நீட்டிய லலிதாவை உறுத்த வாமனமூர்த்தி,

“அடுத்தவங்களை பத்திக் கவலைப்படாம உன் இஷ்டம்போல பேசிட்டு எங்க எஸ்கேப் ஆகப்பாக்கற? முதல்ல நீ வீசின வார்த்தையை எல்லாம் அள்ளின பிற்பாடு போ” என்றான்.

லலிதா “நான் சொன்னதுல என்ன தப்பு, நான் ஒண்ணும் பவித்ரா அண்ணி இங்க இருக்கக்கூடாதுன்னு சொல்லலையே… அண்ணி அவங்க அம்மா, அப்பாவோட இருக்கறா மாதிரி நானும் இருக்கேன்னுதானே சொல்றேன்?”

வாமனமூர்த்தியின் உடல் இறுகியதில் நெளிந்த கிருஷ்ணாவை சீதளா வந்து தூக்கிக்கொண்டாள்.

ரங்கராஜன் “லலிதா, நீ பேசின வரைக்கும் போதும்…”

லலிதா “இட்ஸ் ஓகேப்பா. ஏன், எங்க அம்மா அப்பாவை கவனிச்சு பாக்கற கடமை… “

ஏளனமாகச் சிரித்த வாமனமூர்த்தி “எது, பச்சை உடம்புக்காரின்ற பேர்ல பத்து மாசமா உங்கம்மாவை வேலை வாங்குறியே, அதான் நீ அவங்களை கவனிச்சுப் பாக்கற லட்சணமா?”

“...”

“எங்கம்மா எனக்கு செய்யறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“எங்கம்மா பவித்ராக்கு செய்யறதுல உனக்கு என்ன பிரச்சனை?”

சீதளா எதையோ சொல்ல வர, லலிதா “செய்யட்டும், வேணும்னா ஸ்ரீராம் அண்ணா மாதிரி நீங்களும் எங்க வீட்டுக்கே…”

“நிறுத்துடீ” என வாமனமூர்த்தி உறுமியது வீடு முழுவதும் எதிரொலித்தது.

“உனக்கு வீட்டோட மாப்பிள்ளை வேணும்னா, கல்யாணத்துக்கு முன்னால மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு கண்டீஷன் போட்டபோதே சொல்லி இருக்கணும். எவனாவது ஒரு இளிச்சவாயன் வந்து மாட்டி இருப்பான்”

“ஏன், வீட்டோட மாப்பிள்ளையா இருந்தாதான் என்ன, எப்போதும் பொண்ணுங்கதான் புகுந்த வீட்டுல போய் இருக்கணுமா என்ன?” - லலிதா.

“...”

“ஆம்பளைங்க, நீங்க இருக்கற இடத்துலயே இருப்பீங்க, நாங்க மட்டும் உங்க வீட்ல இருக்கறவங்க சொல்றதையெல்லாம் கேட்டுகிட்டு செஞ்சுக்கிட்டு, எது சொன்னாலும் சிரிச்சிக்கிட்டே அடிமை மா…”

பெற்றோர்களின் முன்னிலையில் பொறுமையை இழுத்துப் பிடிக்கவேண்டி, ஆழ்ந்து மூச்சிழுத்த வாமனன், “யாரு நீ… கிழிச்ச… என் பேச்சை கேக்கறதை விடு, எங்கம்மா வேலை செய்யற விதத்தை பார்த்தாலே பர்ஃபெக்ஷன் வரும். கண்ணு பார்க்க . கை செய்யனு எத்தனையோ கத்துக்கலாம், எங்க?”

சீதளாவும் ஸ்ரீசைலமும் ‘வீட்டு வேலைகளில் அக்கறை இல்லாவிடினும், தங்களுடன் சாதாரணமாக சிரித்துப் பேசி, பழகிய பெண்ணுக்கு இப்போது என்னவானது?’ எனப் பார்த்திருந்தனர்.

லக்ஷ்மி “வாயை மூடு லலிதா…”

லக்ஷ்மியிடம் “பேசட்டும் ஆன்ட்டீ” என்ற வாமனன் “ஹலோ காரியக் கப்பல் லலிதா பரமேஸ்வரி மேடம், நீங்க உங்க வீட்லயே இருந்து உங்க அம்மா, அப்பாவை பார்க்கறதுல எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. முதல்ல அதுக்கு உங்க அம்மா, அப்பாக்கு சம்மதமான்னு கேளுங்க மேடம்”

“...”

“அதைவிடு, ஒரு நாளாவது கிருஷ்ணாவை குளிக்க வெச்சிருக்கியா நீ?”

“...”

“போகட்டும், அவங்களுக்கு ஒரு தோசையாவது ஊத்தி குடுத்திருக்கியா?”

“...”

“அதையும் விடு, நினைச்சபோதெல்லாம் உன்னைப் பார்க்க நான் வந்து போறேனே, எனக்கு ஒரு கப் காஃபி வேணுமான்னாவது கேட்டிருக்கியா?”

“...”

“உன் வேலையை ஷேர் பண்ணிக்கணும்னு நீ போட்ட நிபந்தனையை உன்னாலயே காப்பாத்த முடியல, ஏன் தெரியுமா?”

லலிதா முறைக்க, லக்ஷ்மியின் கண்களில் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மின்னியது.

“ஷேர் பண்றதுக்கு அர்த்தம், பாதி வேலையை நாம செய்யறது. 50:50 ய விடு 90 : 10 கூட செய்யலை நீ”

“..”


“அக்கறை, சக்கரைன்னு நீ பண்ற பஜனையை நாங்க நம்பணுமாக்கும்?”

“ உன் கம்ஃபோர்ட் ஜோனை, வசதிகளை விட்டுக் குடுக்காம, வேலை செய்யாம நெளிவெடுக்க உங்கம்மா, அப்பாவை பாத்துக்கறேன்னு சாக்கு வேற”

“...”

“ உங்கம்மாக்கு பேரன் மேல இருக்கற ஆசையை நீ எக்ஸ்பிளாய்ட் பண்ற, அவ்ளோதான்”

ஆத்திரம் மிகுந்த குரலில் லலிதா “ நான் எங்க அம்மா, அப்பாக்கு செய்யக்கூட உங்க கிட்ட பர்மிஷன் கேக்கணுமா?”

“ஓ, உங்கூர்ல இப்டிதான் பர்மிஷன் கேப்பீங்களோ?”

“அவங்களுக்குன்னு இருக்கறதே நான் ஒருத்திதான்”

லக்ஷ்மி பதட்டத்துடன் “இப்ப நீ பேசாம இருக்க மாட்ட?” என மகளைப் பிடித்து உலுக்கினாள்.

“அது என் பிரச்சனை இல்ல. அவங்களுக்கு உதவி தேவைப்படற நேரம் வரும்போது, நீ என்ன, நானே செய்வேன். ஒத்தப் பொண்ணை கல்யாணம் பண்ண சம்மதிக்கும்போதே, வயசானா அவங்க நம்ம பொறுப்புன்னு கூடவா நாங்க தெரியாம கிடக்கோம்?”

“...”

“உங்கப்பாக்கு இன்னும் ஏழு வருஷ சர்வீஸ் இருக்கு. அவர் விரும்பினா அதுக்குப் பிறகும் வேலை செய்யலாம். உங்கம்மாவே இன்னும் உங்க தாத்தாக்கு செய்யறாங்க.
அவங்களுக்கு ஏன் வயசான ஃபீல் குடுக்குற?”

பெரிதும் ஆயாசம் அடைந்தவளைப் போல் கண்களைச் சுழற்றிய மனைவியைப் பார்த்து ஒரு பக்க உதட்டை மட்டும் வளைத்து நக்கலாகச் சிரித்த வாமனன்

“அப்டியே பொங்கிட்டு வருதோ…, அவ்ளோ சீனெல்லாம் இல்ல, உனக்கு உங்க வீட்லதான் இருக்கணும்னா இரு. எப்படியாவது என்னை அங்கயே வரவைக்கலாம்னு கனவு கூட காணாத”

“...”

“உங்கம்மாக்கு இம்சையைக் கூட்டாத. நீ அங்கேயே இருக்கறதால ஒரு கல்யாணம், கச்சேரிக்குக் கூட அவங்களால போக முடியல”

“என் இடம், என் விருப்பம், என் சுதந்திரம்னு இருக்கறவன் நான். என்னால உங்க வீட்ல வந்து…”

இடைமறித்த லலிதா “ஏன், நான் வந்து உங்க வீட்ல இல்ல?”

“இல்லையே நாம நம்ம வீட்ல இருந்தோம். நீ அதை உன் வீடா நினைக்காதது என் தப்பு இல்லை”

முந்தைய நாள் இரவிலிருந்து அனுபவித்த டென்ஷனும், தொடங்கியது அவளாகவே இருப்பினும், அதிகாலையில் புறப்பட்டு வந்ததும், நடுவீட்டில் நிகழும் பஞ்சாயத்து தந்த அழுத்தமும் சேர, வாதத்தில் தான் தோற்பதை விரும்பாத லலிதா, தன் வழமைபோல் வார்த்தைகளை இறைத்தாள்.

“இதான், இதுக்காகதான் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நல்ல நம்பிக்கை வந்த பிறகு குழந்தை பெத்துக்க…”

வாமனமூர்த்தி ஒரே எட்டில் கையைப் பிடித்து அழுத்தியதில் லலிதாவின் பேச்சு நிற்க, அதன் தாக்கத்தில் இருவரது பெற்றோரும் அதிர்ந்தனர்.

மிகுந்த சிரமத்துடன் தன் ஆத்திரத்துக்கு அணைபோட்ட சீதளா “வாமனா, எதா இருந்தாலும் உங்க ரெண்டு பேருக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்றாள், மீறமுடியாத குரலில்.

எழுந்து நின்று கை கூப்பிய ரங்கராஜன் “நாங்க புறப்படறோம், பார்த்துக்கோங்க”

“லலிதா…” என்று இழுத்த மனைவி லக்ஷ்மியிடம் அழுத்தமாக “நாம போகலாம், மாமா (ரத்னம்) வேற ரெண்டு, மூணு தரம் கால் பண்ணிட்டார் பாவம்” என்றவர், “வரேன்” என மனைவியுடன் வெளியேறினார்.


மணி பத்தரையைக் கடந்தும் யாரும் காலை உணவு கூட உண்ணவில்லை. தூக்கம் கண்களைச் சுழற்ற தன் தோளில் சாய்ந்து கொண்ட குழந்தைக்கு இளஞ்சூடாக பால் கொண்டு வரச்சொல்லி கணவரைப் பணித்த சீதளா, அறைக்குள் சென்றுவிட்டாள்.

தன் வீட்டை நோக்கி நடந்த வாமனமூர்த்தியைப் பின்தொடர்ந்தாள் லலிதா பரமேஸ்வரி.

**************

வாமனன் வேகமாகப் படுக்கை அறைக்குள் சென்றிருக்க, வீட்டிற்குள் சென்ற லலிதா, தன்னை வரவேற்ற வெறுமையில் ஒரு கணம் திகைத்தாள்.

ஓரிரு நிமிடங்கள் வரை நின்ற இடத்திலேயே நின்றவள், கணவனைத் தேடி அறையறையாகச் சென்றாள்.

ஒரு துணி, ஒரு காகிதம் கூட கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு வீடு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது. திரைச்சீலைகள் கூட புதிதாக மாற்றப்பட்டிருந்தன. பூஜையறையில் வழக்கமான ஜீரோ வாட் பல்ப் எரிய, முந்தைய தினம் விளக்கேற்றிய அடையாளம் தெரிந்தது.

சமையலறையில் துடைத்து வழிக்கக்கூடாது என்பதற்காக சிறிய டப்பாக்களில் இருந்த அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை தவிர எல்லாம் நிறைந்திருந்தது.

ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்தவள், இரண்டு வரிசையில் அடுக்கப்பட்டிருந்த எட்டு பியர் டின்களைக் கண்டு கலவரமானாள்.

‘இவர் குடிக்கறாரா என்ன?’

ஐடி கலாச்சாரத்தில் மது அருந்துபவர்களைப் பார்த்திருந்தாலும், பியர்தான் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாலும், வாமனன் குடிப்பதான கற்பனையே லலிதாவிற்குக் கசந்தது.

லலிதா கடைசியாக அவர்களது அறைக்குள் நுழையவும், வாமனமூர்த்தி ஓய்வறையில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.

அவசரக் குளியல் போட்டிருந்ததில் தலையிலிருந்து சொட்டிய நீர் அவனது டீ ஷர்ட்டை நனைத்தது.

வாமனமூர்த்தி தனது இருப்பை எண்ணி குளியலறையிலேயே உடையணிந்து வந்ததில் லலிதாவிற்கு எதையோ இழந்த, எதுவோ விலகிய உணர்வு. இதே அறையில்தான் எத்தனை கிண்டல், சீண்டல், தீண்டல்?

கிட்டத்தட்டப் பதினோரு மாதங்களுக்குப்பின் வீடு வந்த மனைவியை சம்பிரதாயமாக “வா” என்று வரவேற்றான் வாமனன்.

எதைப் பேச, என்ன பேச, எங்கு தொடங்க என்று வாளாதிருந்த இருவருக்குமே மீண்டும் விவாதத்தைத் தொடர விருப்பமில்லை.

வாமனமூர்த்திக்கு மனைவி தங்கள் அநாதரங்கத்தைப் பொதுவெளியில் பேசியதில் கோபமெனில், லலிதாவை அந்த வீட்டின் சூழலும் கணவனுடனான தனிமையும் பேசத் தயக்கியது.

தயங்கி நின்றவளிடம் “பசிக்குது, சாப்பிடலாமா?”

“இல்ல, பரவாயில்ல… நான் இன்னும் குளிக்கலை”

“உனக்குப் பரவாயில்லைனா போய் குளி. இல்லாட்டி, இப்டியே வா” என்று தன் பின்னே கதவை சார்த்திக்கொண்டு வெளியேறினான்.

சற்று நேரம் நின்ற இடத்திலேயே நின்றவள், கப்போர்டைத் திறக்கவும், ரகவாரியாகப் பிரித்து அத்தனை நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவளது உடைகளைக் கண்டு திகைத்தாள்.

வெளியிலிருந்து வாமனமூர்த்தி “இன் கேஸ், பழைய ட்ரெஸ் சைஸ் சரியா இல்லைன்னா மேல் ஷெல்ஃப்ல ரெண்டு கட்ட பை இருக்கு பாரு, அதுல புது ட்ரெஸ் இருக்கும்” என்று குரல் கொடுத்தான்.

பிரசவித்திற்குப் பிறகு தனது எடை கூடியிருப்பதை கணவன் குறிப்பிட்டதில், லஜ்ஜை மேலிட்டாலும், கச்சிதமான பழைய உடைகள் உடலைப் பிடிக்கும் என்று தோன்றவே வாமனன் சொன்ன பையிலிருந்து புதிய உடை ஒன்றை எடுக்க, உடைகளின் நடுவே ஜரிகைத்தாள் சுற்றப்பட்ட பரிசு ஒன்றும் இருந்தது.

‘இத்தனை உடைகளும் எனக்கா, எதற்கு என்று யோசித்த லலிதாவிற்கு வார இறுதியில் வரும் அவளது பிறந்தநாள் நினைவு வந்து விட்டது. ‘எனக்கே எனக்கா?’

அழைப்பு மணி சத்தத்தில் கலைந்தவள், குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

வெளியில் வர, ஹால் சோஃபாவில் உறங்கும் கிருஷ்ணாவும், டைனிங் டேபிளில் உணவும் இருந்தது.

“அப்பா கொண்டு வந்தாங்க” என்ற வாமனனின் பார்வை, பச்சை நிற கலம்காரி குர்த்தியில் நின்றவளையே தொட்டுத் தொட்டு மீண்டது.

“உங்கப்பா கால் பண்ணாங்க”

“ம்…”

“கிருஷ்ணாவை பெட்ரூம்ல படுக்க வெச்சிட்டு வா, சாப்பிடலாம்”

இரண்டு அந்நியர்களைப் போல் அமைதியாக உண்டனர். பாதியில் டொம் என்ற சத்தம் கேட்க, உள்ளே ஓடினர். தலையணைகளைத் தள்ளி விட்டு, கட்டிலில் இருந்து இறங்க முயன்றதில் கிருஷ்ணா கீழே விழுந்திருந்தான்.

தூக்கக் கலக்கத்தில் மூச்சடக்கி அழுதவனை அள்ளித் தூக்கிய வாமனன், குழந்தையை உடனே லலிதாவிடம் தந்துவிட்டான். என்ன இருந்தாலும், சின்னக் குழந்தை தாயிடம் விரைவில் சமாதானம் ஆகி விடும் என்பது அவனது எண்ணம்.

அழுது, விசும்பி, அடங்கிய மகனுக்கு கலர் கலராக இருந்த புதிய பொம்மை ஒன்றைக் கையில் கொடுக்கப் பிள்ளையின் முகத்தில் புன்னகை விரிந்தது.

டென்ஷன் நீங்கி “கிச்சா குட்டீ” என்று மகனின் தலையில் முட்டிய லலிதாவை, வாமனமூர்த்தி டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை நோக்கித் திருப்பினான்.

எதிரே தெரிந்த மூவரின் பிம்பத்தில் லயித்தவளிடம் “லால்ஸ், நல்லா இருக்குல்ல?”

“ம்…”

“நீ இல்லாம இந்த வீட்ல தனியா இருக்க முடியலடீ. மூச்சு முட்டறாப்போல இருக்கும். அதான் அங்கேயே போய்ட்டேன்”

“...”

“நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேப்பியா லலிதா?”

வாமனன் மிருதுவான குரலில்தான் கேட்டான் என்றாலுமே, தன்னைச் சுற்றி இருந்த மாயவலை அறுந்ததுபோல் உணர்ந்த லலிதாவின் பார்வையில்
‘இன்னும் என்ன?’ என்ற கேள்வி இருந்தது.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 14 - FINALE 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
149
இந்த லலிதா எப்போ தான் அடுத்தவாளை பத்தி புரிஞ்சிப்பாளோ? வாமனன் சொல்றார் போல தன் நலம் தான் முக்கியம்
 
Top Bottom