• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு - 9

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
315
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 9

எதிர்பார்ப்புகளையும்
கனவுகளையும் விழுங்கி விட்டு
கண்ணுக்கு நிறைவாக
முகத்தில் புன்னகையுடன்
நிற்கும் மணப்பெண்
இல்லறக் கண்ணாடியில்
இனிமையைப் பரப்பும்
பிம்பமாகவே தன்னைக்
காட்டிக்கொள்கிறாள் என்றும்!


மணிமேகலைக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று புரிவதற்குள், திருமணமே நடந்து முடிந்துவிட்டது. படிப்பை முடிக்க வேண்டும், திருமணத்தைத் தள்ளிப் போடுங்கள் என்றெல்லாம் கேட்பதற்கு அவளுக்கு சந்தர்ப்பமே தரப்படவில்லை பாட்டியால்.

புயலாக வந்தான் திருநாவுக்கரசு. அவளை ஆட்கொண்டு விட்டான். பார்க்கவும் நன்றாகவே இருந்தான் என்பதால் மணிமேகலையும் குழம்பி விட்டாள். தெரிந்த குடும்பம் என்கிற விஷயம் இந்தத் திருமணத்திற்கு உதவி செய்த மிகப்பெரிய காரணி.

ஒரே ஒரு விஷயம் மணிமேகலையின் மனதை உறுத்திக் கொண்டு இருந்தது. பாட்டி , அத்தையிடம் பேசும்போது, “ எங்க குடும்பத்தில் நடந்த விஷயம் உனக்குத் தெரியும். அதுனாலதான் நாங்க யாரிடமும் உறவு கொண்டாடாம ஒதுங்கி வாழறோம்” என்று சொன்னாரே? அது என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தாள். அவளுக்குப் புரியவில்லை. பாட்டியிடமே நேரடியாகக் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அப்பா கூட இறுதித் தறுவாயில் ஏதோ அவளிடம் பேச விரும்பியதைப் போலத் தோன்றியது இவளுடைய மனப்பிரமையா இல்லை இந்த விஷயத்தைப் பற்றித் தானோ என்று மனதிற்குள் குழம்பி நின்றாள்.

பாட்டியின் விருப்பம், பாவை அத்தையின் முயற்சி, திருநாவுக்கரசின் தகுதிகள் எல்லாமாகச் சேர்ந்து மணிமேகலையின் மனதைப் பலவீனப்படுத்தி விட்டன. அடுத்த மாதமே ,ஊர்க் கோயிலில் எளிமையாகத் திருமணம் முடிந்தது. சென்னையில் இருந்த நண்பர்கள், உறவினர்களுக்காக ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல அவளுடைய பாட்டியும் இரண்டு மாதங்கள் கழித்து நிம்மதியாகக் கண்களை மூடினார். பேத்திக்கு நல்ல வழி செய்துவிட்டோம் என்கிற மகிழ்ச்சியை மனதில் நிறைத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தார்.

திருமணம் முடிந்தவுடன் மணிமேகலை கணவனிடம் தனிமையில் தனது படிப்பைத் தொடர்வது பற்றிப் பேச நினைத்தாள். ஆனால், அவனுக்கு அவளிடம் அதிகம் பேசுவதில் விருப்பமில்லை.

‘ நீ என்னுடைய அடிமை. என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள என்னுடைய பெற்றோர் என்னிடம் ஒப்படைத்திருக்கும் ஒரு ஜடப்பொருள். என் கையில் வைத்து விளையாடக் கிடைத்திருக்கும் பொம்மை’ என்பது போன்ற மனப்பான்மையில் இருந்தான். அவள் என்ன பேசினாலும், அதனை மதித்துக் கேட்கும் பொறுமை அவனிடம் இல்லை.

“ தனியா இருக்கற நேரத்தில் சந்தோஷமா இருக்கணும். நை நைன்னு ஏதாவது பேசி என் மூடைக் கெடுத்துராதே. எதுவா இருந்தாலும் நான் ஆஃபீஸுக்குப் போனபிறகு, அம்மா, அப்பா கிட்டப் பேசிக்கோ” என்று சொல்லி அவளைப் பேச விடாமல் தடுத்துவிடுவான்.

திருநாவுக்கரசுவுக்கு இரண்டு தம்பிகள். முதல் தம்பி கல்லூரியில் இறுதி ஆண்டு இளங்கலைப் படிப்பு. இரண்டாம் தம்பி, அதாவது வீட்டின் கடைக்குட்டி பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் படிக்கிறான். மேகலையின் மாமனார், சொந்த பிஸினஸ் வைத்துச் சமாளிக்கிறார். எலெக்ட்ரிக்கல் ஸ்பேர் பார்ட்ஸ்களைத் தயாரிக்கும் இடத்தில் இருந்து வாங்கி மார்க்கெட்டில் சப்ளை செய்கிறார். ஓரளவு பிஸினஸ் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது.

ஆண்கள் நான்கு பேரும் காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு, மதியத்திற்கான லஞ்சும் கையில் கட்டி எடுத்துப் போவதால், காலை நேரம் சமையலறை நல்ல பரபரப்பாக இருக்கும். காலை ஐந்து மணிக்கு எழுந்தால், ஆண்கள் எல்லோரையும் அனுப்பும் வரை மூச்சு விட நேரமிருக்காது. பரபரவென்று சுழன்று கொண்டே இருக்க வேண்டும். மணிமேகலை வந்ததில் இருந்து பாவைக்குக் கொஞ்சம் அனுசரணையாகவே இருந்தாள். முழுவதும் தலையிடாமல், சுற்றுக் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து வந்தாள். முக்கியமாக பாவை சொல்லும் வேலைகளை அப்படியே செய்தாள். ஏடாகூடமாக எதிர்த்துப் பேசவில்லை. அடக்க ஒடுக்கமாக, மாமியார் மனமறிந்து நடந்து கொண்டாள்.

அதுவும் திருநாவுக்கரசுவுக்கு எல்லா வேலைகளும் நேரப்படி கச்சிதமாக நடக்க வேண்டும். காலையில் அவன் எழுந்திருக்கும்போது கையில் காஃபியுடன் எதிரே நிற்கவேண்டும். அவன் குளிக்கப் போகும்போது துண்டை எடுத்துக் கொண்டு போய் பாத்ரூமில் வைக்க வேண்டும். குளித்ததும் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகளை எடுத்துத் தயாராக வைக்க வேண்டும். டைனிங் டேபிளுக்கு வரும்போது பக்கத்தில் நின்று பரிமாற வேண்டும். இவற்றை எல்லாம் இவளுடைய மாமனாருக்காக பாவை அத்தை ஏற்கனவே செய்து கொண்டிருந்ததால் அதையே தான் மனைவியிடம் இருந்தும் எதிர்பார்த்தான் அரசு. அவனுக்கு அது தவறாகவும் படவில்லை. மனைவி என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அந்த வீட்டில் வகுக்கப்பட்ட விதிமுறைகள். அந்த விதிமுறைகள் இம்மியளவு கூடப் பிசகாமல் பாரம்பரியத்தைக் காப்பாற்றி வந்தார்கள் அந்த வீட்டில்.

“ பெரியம்மா நல்லாத்தான் பேத்தியை வளத்துருக்காங்க. இந்தக் காலப் பொண்ணுங்க மாதிரி, எங்க வீட்ல அப்படி, அப்படின்னு பொறந்த வீட்டுப் பெருமை பேசறதில்லை. அப்புறம் எது செஞ்சாலும் சாப்பிடறா மேகலை. எனக்கு இது பிடிக்காது, அது பிடிக்காதுன்னு நுரைநாட்டியம் பண்றதில்லை. நம்ம ராசி, நமக்கு மூத்த மருமகள் நல்ல பொண்ணா அமைஞ்சுட்டா ” என்று கணவரிடம், மேகலையைப் பற்றி எப்போதும் பெருமையாகப் பேசினாள் பாவை. அவர்கள் பேசிக் கொள்வது சில சமயங்களில் மணிமேகலை காதிலும் விழத்தான் செய்தது.

என்னதான் அத்தை பிரியமாகப் பேசினாலும் அத்தையிடம் தன் படிப்பைத் தொடர்வதைப் பற்றிப் பேசத் தயங்கினாள் மணிமேகலை. பாட்டி உயிரோடு இருந்தாலாவது பாட்டியிடம் சொல்லிப் பேசச் சொல்லலாம் . இப்போது அதற்குள் வழியில்லை. வேறு வழியில்லாமல் தானே பேசலாம் என்று முடிவு செய்தாள்.

அடுத்த நாள் காலை நேரப் பரபரப்பு முடிந்து மாமியாரும், மருமகளும் காலை உணவை எடுத்துக் கொள்ள டைனிங் டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்தார்கள். இடியாப்பமும், சொதியும் அன்றைய காலை உணவிற்காகச் செய்திருந்தாள் பாவை. ஒரு தட்டில் போட்டு மேகலையிடம் நீட்டிவிட்டுத் தானும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

“ என்னம்மா மேகலை, சாப்பிட ஆரம்பிக்காம என்ன யோசிச்சிட்டு இருக்கே? சீக்கிரம் சாப்பிடும்மா. பாட்டி ஞாபகம் வந்துருச்சா? ”

“ அதெல்லாம் இல்லை அத்தை. ஒரு விஷயம் பேசணும்”

“ என்ன சொல்லும்மா? எங்கேயாவது வெளியில வாசலில போணுமா? அரசு கிட்டச் சொல்லிக் கூட்டிட்டுப் போகச் சொல்லட்டுமா? இந்த வாரக் கடைசியில தியேட்டர் போயி சினிமா பாத்துட்டு வரீங்களா?”

“ இல்லை அத்தை. எனக்கு அதிலெல்லாம் அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லை”

“ வேறென்ன விஷயம்? ஆமாம், அரசு உன் கிட்டப் பிரியமா நடந்துக்கறானா? “ என்று கேட்டாள் பாவை. அவளுடைய பிரியம் என்பதன் அர்த்தம் என்னவென்று
மணிமேகலைக்கு நன்றாகவே புரிந்தது. அவர்களுடைய தாம்பத்தியம் எப்படிப் போகிறது என்பதைப் பூடகமாகக் கேட்கிறாளாம் அத்தை!

பிரியம், சந்தோஷம் என்பதெல்லாம் இவர்களைப் பொருத்தவரையில் உடல் இச்சைகள் மட்டுமே. அதுவும் ஆணுடைய உடல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள அவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு விளையாட்டு சாதனம் பெண் என்று நினைக்கிறார்கள். அதிலும் அவனுடைய விருப்பத்திற்கும், அவனுடைய தேவைகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணமாகி மூன்று, நான்கு மாதங்களில் மருமகள்
கருத்தரிக்கவில்லை என்றால் மருமகளிடம் ஏதோ குறை இருப்பதாகவே அனுமானிக்கிறார்கள். தங்களுடைய மகனை மருமகள் சந்தோஷப்படுத்தவில்லை என்று அர்த்தம் கற்பித்து விடுகிறார்கள்.

முதலிரவன்று கூடப் பெண்களுக்கு, “ புருஷன் மனசு கோணாம நடந்துக்கோம்மா” என்று தான் அறிவுரை வழங்கப்படுகிறது. இன்று பாவை, மருமகளிடம் கேட்பதும் மகனைப் பற்றிய அக்கறையில்தான்.

”ம்ம்” என்று பதில் சொல்லாமல் சுருக்கமாக முடித்தாள் மணிமேகலை.

“ வேறென்ன விஷயம்? ஏதாவது வாங்கணுமா உனக்கு? என்ன வேணும்னு சொல்லு. வேலைக்காரியை அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்லறேன்” அடுத்ததாக பாவையின் மனதில் எழுந்தது ஸானிடரி நாப்கின்கள் பற்றிய சிந்தனைதான்.

“ இல்லைம்மா, ஏதாவது தேவைன்னா நானே கடைக்குப் போய்க்குவேன். ஸி. ஏ. படிச்சு ஆடிட்டர் ஆகணுங்கறது என்னோட ஆசை. அங்கே எங்க ஊருக்குப் பக்கத்துல ஒரு ஆடிட்டரோட ஆஃபீஸுக்குப் போயிட்டிருந்தேன். மாநில நிக்குது படிப்பு. இங்கேயும் அதைத் தொடரணும். மாமாவுக்குத் தெரிஞ்ச ஆடிட்டர் யாராவது இருக்காங்களான்னு கேக்கணும்” என்று ஒரு வழியாக மணிமேகலை சொல்லி முடிக்க , பாவையின் முகம் வெளிறிப் போனது.

“ என்ன சொல்லறே நீ? படிக்கணுமா? ஆடிட்டர் ஆகணுமா? இதையெல்லாம் பத்திக் கல்யாணத்துக்கு முன்னால பேசவே இல்லையே? பெரியம்மா அந்த மாதிரி எங்கிட்ட எதுவும் சொல்லலையே? சொல்லிருந்தா நான் அப்பவே வேணாம்னு சொல்லிருப்பேனே? நம்ம குடும்பத்துல பொம்பளைங்க அதிகமாப் படிக்கறது, வேலைக்குப் போறதெல்லாம் சரியா வராது. உன் மாமாக்கும் பிடிக்காது. அரசுவுக்கும் இதெல்லாம் சுத்தமாப் பிடிக்காது. நீ புத்திசாலிப் பொண்ணு, புரிஞ்சு நடந்துக்கோ. அதுவும் உன் அம்மா விஷயத்துல நடந்தது தெரிஞ்சும் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புவோமா என்ன? “ என்று கொஞ்சம் நைச்சியமாகவும், இறுதியில் கொஞ்சம் கடுமையாகவும் பேசி முடித்தாள் பாவை.

“ அம்மாவா? அம்மா விஷயத்துல என்ன நடந்தது? நான் எங்கம்மாவைப் பாத்ததே இல்லையே? நான் பொறந்ததும் அவங்க இறந்து போயிட்டதாகத் தானே நினைச்சேன்? நீங்க சொல்லறது எனக்குப் புரியலையே? ”

“ அப்படின்னா உங்கம்மாவைப் பத்தி, அண்ணனோ, பெரியம்மாவோ உங்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையா? ”

“ இல்லையே? சொல்லையே? இப்போ நீங்க சொல்லுங்க. தெரிஞ்சுக்கறேன்” என்று மணிமேகலை உறுதியாகப் பேசியபோதுதான் பாவை தன்னுடைய தவறை உணர்ந்தாள். தேவையில்லாத விஷயத்தைக் கிளறிவிட்டதை அவள் புரிந்துகொண்டபோது தாமதமாகி விட்டது. இவ்வளவு நாட்களாகக் தன்னுடைய அம்மாவைப் பற்றிய தகவல்களை மணிமேகலை அறிந்துகொள்ளவில்லை என்று பாவை உணர்ந்த போது பதறிப் போனாள்.

“ அது ஒண்ணுமில்லைம்மா. ஏதோ வாய் தவறி வார்த்தை வந்துருச்சு. சீக்கிரம் சாப்பிட்டுட்டுப் போய்த் தோய்ச்ச துணியை உலர்த்திடு. அயர்ன்காரன் துணி வாங்க வரேன்னு சொன்னான். அரசுவோட துணிமணிகளைப் பாத்து மறக்காம எடுத்துவை. ஏதாவது மிஸ் ஆச்சுன்னா, கன்னாபின்னான்னு கோபம் வரும் அவனுக்கு. காட்டுக்கத்தல் கத்துவான்” என்று கூறிக்கொண்டே எழுந்துவிட்டாள் பாவை.

இப்போது படிப்பைப் பற்றிய பேச்சைத் தொடர்வதா, அம்மாவைப் பற்றி விசாரிப்பதா என்று குழம்பி நின்றாள் மணிமேகலை. திருமணத்திற்கு முன்பு அத்தையும், மாமாவும் பாட்டியின் அழைப்பை ஏற்று அவரைச் சந்திக்க வந்தபோது அவர்கள் பேசிய விஷயம் அம்மாவைப் பற்றித்தான் என்று இப்போது உறுதியானது. சரி, இப்போதைக்குப் படிப்பு முக்கியம் என்று முடிவு செய்தவள், அத்தையின் பின்னால் ஓடினாள்.

“ அத்தை, அந்த ஆடிட்டர் விஷயம் மாமா கிட்டப் பேசறீங்களா? ” என்று மீண்டும் ஆரம்பிக்க, பாவை திரும்பி அவளை முறைத்தாள்.

“ அதெல்லாம் வேண்டாம்மா. சொன்னாப் புரிஞ்சுக்கோ. இந்த வீட்டு ஆம்பளைங்களுக்குப் பிடிக்காது. எனக்கும் சேந்து திட்டு விழும்” என்று பாவை சொல்லிக் கொண்டிருந்த போது, மணிமேகலை
தலை சுற்றிக் கீழே விழுந்தாள். பதறிப் போன பாவை அவளருகில் ஓடி வந்தாள்.

சாயந்திரம் வீடு திரும்பிய ஆண்களிடம் அந்த மகிழ்ச்சியான தகவல் பகிரப்பட்டது. குடும்பத்தின் அடுத்த வாரிசு மணிமேகலையின் வயிற்றில் உருவாகிவிட்டது. மருத்துவர் அதனை உறுதி செய்து விட்டார். திருநாவுக்கரசுவின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது. அவனுடைய தம்பிகளும் மகிழ்ச்சியில் துள்ளினார்கள்.

இந்த அமர்க்களத்தில் மணிமேகலையின் படிப்பு விஷயமும், அவளுடைய அம்மாவைப் பற்றிய விஷயமும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அதற்கேற்ப மணிமேகலைக்கும் மசக்கை மிகவும் படுத்தியது. சாப்பாடு பிடிக்கவில்லை. வற்புறுத்திச் சாப்பிட வைத்ததெல்லாம் வெளியே வந்துவிட்டது. பலவீனமாக உணர்ந்தாள் மணிமேகலை.

‘ இந்தச் சமயத்தில் பெண்கள், பிறந்த வீட்டுக்குப் போய் அம்மா, பாட்டியோட தனிப்பட்ட கவனிப்பால தங்களோட
உடல்நிலையைத் தேத்திட்டு வருவாங்க. வாய்க்கு ருசியான சாப்பாட்டை அம்மா பாத்துப் பாத்து செஞ்சு தருவாங்க. ஆனால் நம்ம மேகலைக்கோ அதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லையே” என்று தனக்குள்ளே புலம்பியபடி பாவை, மருமகளை நன்றாகவே கவனித்துக் கொண்டாள்.

என்னதான் இருந்தாலும் தங்களுடைய குடும்பத்தின் வாரிசை வயிற்றில் சுமக்கிற மருமகள் மீது மாமியார்க்குத் தனிக் கரிசனம் எழத்தான் செய்கிறது.

திருநாவுக்கரசும் கொஞ்சம் மனைவியிடம் மென்மையாகவே நடந்துகொண்டான். குழந்தையும் பிறந்தது. சிசேரியன் தான்.

“ இவ்வளவு பாடுபட்டது பொண் கொழந்தைக்குத் தானா? என்னதான் இருந்தாலும் இந்த வீட்டு வழக்கப்படி இருந்திருந்தா ஆம்பளைப் புள்ளை இல்லை பொறந்திருக்கும். எனக்கு மூணும் பசங்க தான். ஆனால், மேகலை என்னவோ பொறந்த வீட்டைக் கொண்டிருக்கா. பொண்ணாப் பெத்துப் போட்டுட்டா. அடுத்ததாவது ஆம்பளைப் புள்ளையைப் பெத்துத் தந்துட்டான்னா நல்லா இருக்கும்” என்று ஆண் வாரிசுக்கான புலம்பலைத் தொடங்கிவிட்டாள் பாவை. மகனிடம் அடுத்த குழந்தை உடனே வேண்டும் என்று மறைமுகமாகக் கட்டளையும் போட்டாகிவிட்டது.

பாவையின் ஆசைப்படி அடுத்த வருடம் மீண்டும் கருத்தரித்தாள் மணிமேகலை. அடுத்த குழந்தையும் பெண்ணே பிறந்தது. மணிமேகலையின் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. மாமியாரையும், கணவனையும் பழிவாங்கிவிட்டதாகவே தோன்றியது அவளுக்கு. திருநாவுக்கரசு ஏமாற்றம் அடைந்தான். பாவையும் ஏமாற்றமே அடைந்தாள். மாமனார் மட்டும் இவர்களிடம் இருந்து மாறுபட்டு நின்றார்.

“ பெண் குழந்தைகள் தான் வீட்டுக்கு அழகு. நமக்குத்தான் குடுத்து வைக்கலை. இப்போ ஒண்ணுக்கு ரெண்டு பேத்திங்க. இதுங்க ரெண்டும் வீட்டுக்குள்ள ஓடி வெளையாடறதைப் பாத்தே என் மனசு நெறைஞ்சிடும். ஆண்டவன் நம்ம கொறையைத் தீக்கறதுக்காகவே ரெண்டு பேத்திகளை அனுப்பிருக்காரு. அதை நெனைச்சு சந்தோஷப்படு பாவை” என்று மனைவியையும் கடிந்துகொண்டார் அவர்.

ஆனால், பாவையின் மூளையில் இந்த விஷயங்கள் உறைக்கவேயில்லை. பெண்குழந்தை பிறந்ததற்கு மணிமேகலையே காரணம் என்பது போலவே நடந்து கொண்டாள். பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பது இந்த மாமியார், மருமகள் விஷயத்தில் உறுதியாக நிரூபிக்கப் படுகிறது.

இரண்டு குழந்தைகளை அடுத்தடுத்துப் பிரசவித்ததில் கிழிந்த நாராகக் கிடந்தாள் மணிமேகலை. இரண்டு பேருக்கும் ஒண்ணே கால் வயது வித்தியாசம் மட்டுமே. பிரசவம் பார்த்த மருத்துவரே கோபித்துக் கொண்டார்.
இரண்டு குழந்தைகள் போதும் என்று அவரே அறிவுரை தந்ததால், மூன்றாவது குழந்தை கண்டிப்பாக ஆண்குழந்தைதான் என்று தூண்டிவிட்ட பாவையின் கருத்து புறக்கணிக்கப்பட்டது. திருநாவுக்கரசும் பயந்து போனான். மூன்றாவதும் பெண்ணாகப் போய்விட்டால் என்கிற கேள்வி அவனை வெகுவாக பயமுறுத்தி விட்டது. எச்சரிக்கையுடன் நடந்துகொண்டான்.

மணிமேகலையின் ஆடிட்டராகும் ஆசை கனவாகிக் காற்றில் கரைந்து போனது. இரண்டு குழந்தைகளின் பின்னால் ஓடுவதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. சுரபியும், சுடரியும் வளர வளர, மணிமேகலையின் பொறுப்புகளும் கூடிக்கொண்டே போயின.

திருநாவுக்கரசுவின் அடுத்த தம்பி, இளங்கலைப் படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தான். சரியான வேலை கிடைக்காததால் அப்பாவின் கடையிலேயே உட்கார்ந்து மேற்பார்வை செய்ய ஆரம்பித்தான். அவனுடைய திருமணத்திற்கும் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். திருமணமும் கூடி வந்தது. மாதவி, அந்த வீட்டின் இரண்டாவது மருமகளாக வலது கா
லெடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தாள்.



தொடரும்,

திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு - 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
அரசன் போலவே
அரசு வாழ்க்கை ஆனால்
அரசி போல அல்ல
அடிமை வாழ்க்கை தான்
அங்கு மேகலாவுக்கு....
அழகான இரண்டு
அற்புத சொத்து
அறிவு பெண் பிள்ளைகள்....
அருமை 🤩🤩👏🏻👏🏻💐👍🏻......
அட நம்ம மாதவியும்
அங்கு தானா 🤩🤩
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
அவங்க அம்மா தான் அந்த அதிசய தேவதையோ.... 🤩🤩🤩🤩
 
Top Bottom