• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு -8

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
315
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 8

திருமணச் சந்தை
என்னும் கண்ணாடி
மணமகளை அழகாகக் காட்டவே
முயற்சி செய்கிறது!
அழகைக் கூட்டுவதற்குப்
புன்னகை ஒன்றே போதுமே!
பொன் நகைகளையும்
சீர் வரிசைகளையும்,
பட்டையும் பவிஷையும்
பணத்தையும் எதிர்பார்ப்பது
என்ன நியாயம்?

பூரணியின் கடந்தகாலம் எதிர்பாராத திருப்பங்களையும், அம்மாவின் அருமையையும் , அன்பு, பாசம் ஆகிய பண்புகளின் வெளிப்பாடுகளையும், உலக நடப்புகளையும், மனிதர்களின் பச்சோந்தி குணத்தையும் தெளிவாகக் காட்டிவிட்டது. அனைத்தையும் தெரிந்துகொண்ட மணிமேகலையின் மனம் என்னவோ கனத்துக் போனது.

“ சரி, நீ கல்யாணம் ஏன் பண்ணிக்கலை? இல்லை அதைப் பத்தி யோசிக்க நேரமே இல்லையா உனக்கு? ” என்று கேட்டாள் மணிமேகலை அடுத்ததாக.

“ ஏன் கல்யாணம் ஒண்ணுதான் பெண்களின் வாழ்க்கையின் குறிக்கோள்னு நெனைக்கறயா கலை நீயும்? ”

“ இல்லை, இல்லை, அப்படி நிச்சயமா நான் நினைக்கலை. அந்தக் கருத்து உண்மையில்லைன்னும் எனக்குத் தெரியும். இருந்தாலும், திருமணப் பருவத்தில் கல்யாண ஆசை வரும்போது ஆண்களின் மீது ஒருவிதமான ஈர்ப்பு வரத்தான் செய்கிறது. நமக்கென்று உரிமை கொண்டாடும் வாழ்க்கைத் துணை இவர்தான் என்கிற எதிர்பார்ப்பு சாதாரணமாப் பெண்கள் மனதில் எழுவதுண்டு. குதிரையில் ஒரு ராஜகுமாரன் வருவான்னு இளம் பெண்கள் நெனைக்கறதும் இயல்பான செயல்தானே? இதுல தப்பு இல்லையே? நிறைய இல்லறங்களில் இந்த ஈகுவேஷன் சரியா அமைஞ்சு வெற்றிகரமாக் குடும்பம் நடத்தறதில்லையா? அதுனால கேட்டேன்”

“ நிறையக் குடும்பங்களில் பிரச்சினைகளும் இருக்கு. வெளியே மற்றவர்களுக்குத் தெரியறதில்லை. கல்யாணம், இல்லறம் இதெல்லாம் ஒருவிதமான காம்ப்ரமைஸ்னு நான் நினைக்கிறேன். சகிப்புத்தன்மை இருக்கறவங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடறாங்க. இதுதான் என்னோட வாழ்க்கைன்னு ஏத்துக்கிட்டு அமைதியாப் போறாங்க. பெண்கள் மட்டும் பொறுமையானவங்கன்னு சொல்லமாட்டேன். நிறைய இடங்களில் பெண்களே பிரச்சினைக்குரியவர்களாக இருக்காங்க. ஆண்கள் பொறுத்துப் போறாங்க. இரண்டு விதமான சூழ்நிலைகளும் நம் கண்ணெதிரே இருக்கு”

“ உண்மைதான். கல்யாணம் ஒருவிதத்தில் ஒப்பந்தமாயிடுது. அந்த ஒப்பந்தத்தை எப்படியாவது காப்பாத்தறதுதான் சரின்னு தியாகம் பண்றாங்க. இப்பல்லாம் அப்படித் தியாகம் பண்ணிட்டு வாழணுங்கற அவசியம் இல்லைங்கற விழிப்புணர்வு வந்திருக்கு. சகிப்புத்தன்மையும் கொறைஞ்சுட்டு வருது. அதுனாலதான் டைவர்ஸ் அதிகமாயிட்டு வருது. இதற்கும் பெண்களை மட்டுமே குறை சொல்லறவங்க நிறையப் பேர் இன்னமும் இருக்காங்க. அடிக்கடி இந்த மாதிரி செய்திகளைக் கேட்டதாலயோ, நிம்மதியே இல்லாமல் கடனேன்னு கணவன், மனைவியா வாழற தம்பதிகளைப் பாக்கறதுனாலயோ என்னவோ எனக்குத் திருமணத்தின் மேல் நம்பிக்கை வரலை. ஒரு பெண்ணால், திருமணம் செய்து கொள்ளாமல் வெற்றிகரமாக, நிம்மதியா வாழமுடியும்னு தோணுது” என்று தன் மனதிலிருந்ததை அப்படியே பூரணி வெளியே கொட்டியபோது மணிமேகலையால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘ ஆமாம், எனக்கு என்னவோ சரியான வயசில் கல்யாணம் நடக்கத்தான் செஞ்சது. நான் என்ன பெருசாச் சாதிச்சுட்டேன்? பூரணி சொன்னதைக் கேட்டு அவளோட தேவதை அம்மா, அவளைக் கல்யாணத்துக்காக வற்புறுத்தாம விட்டிருக்காங்க. அந்த சுதந்திரம் எனக்குக் கிடைக்கலையே? ’ என்று ஒப்பிட்டுப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள் மணிமேகலை.

“ அதையெல்லாம் விடு கலை. இப்போ உன்னோட வாழ்க்கையைப் பத்திச் சொல்லு. திடீர்னு நீ எப்படி கொடைக்கானல் வந்தே?
மாதவிக்கும் உனக்கும் என்ன உறவு? நிச்சயமா அவ உன்னோட கூடப் பிறந்த தங்கை இல்லைன்னு புரியது. இப்பப் பேச வேண்டியது உன்னோட முறை. நான் உக்காந்து கேக்கறேன்” என்று பூரணி சொன்னபோது, மணிமேகலை மொபைலை எடுத்து நேரத்தைப் பார்த்தாள்.

“ அடடா, ரொம்ப லேட்டாயிடுச்சே! பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியலை. நாளை தொடரலாம். என்னோட கதை, உன்னோட கதையை விட ரொம்ப நீளம். காம்ப்ளிகேட்டட் வேற. பாவம், மாதவி வேற எனக்காகக் காத்துகிட்டு இருப்பா” என்று சொல்லியபடி எழுந்துவிட்டாள் மணிமேகலை.

உண்மையிலேயே அதிக நேரம் ஆகிவிட்டதால் பூரணியும் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த நாள் பகல் பொழுது நல்லபடியாக முடிந்தது.
சாயந்திரம், மணிமேகலை பூரணியின் வீட்டிற்குக் கிளம்பியபோது மாதவி வர மறுத்துவிட்டாள்.

“ அக்கா, நீங்க உங்க ஃப்ரண்டைப் பாத்துப் பழைய கதை பேசப் போறீங்க! நான் வேற எதுக்கு நடுவில? நீங்க நிம்மதியாப் பேசிட்டு வாங்க” என்று நாசூக்காகக் கூறி அவளுடன் வர மறுத்துவிட்டாள். மணிமேகலை மட்டும் பூரணியின் வீட்டிற்குக் கிளம்பிப் போனாள். அன்றும் அவர்கள் இருவருக்கும் நடுவே பரிமாறிக் கொள்ளப் பல்வேறு விஷயங்கள் இருக்கத்தான் செய்தன.

அவர்களுடைய உரையாடலின் நடுவில், இந்த முறை மணிமேகலையின் கடந்த காலப் பக்கங்கள், வாசிப்பிற்காக விரிந்தன. இரண்டு பேரும் டயம் மெஷினில் ஏறிக் கடந்தகாலத்திற்குள் நுழைந்தார்கள். மணிமேகலை பேசப் பேச, அவளுடைய கடந்த காலக் காட்சிகள் விரிந்தன.

பூரணியைப் பிரிந்த பிறகு மணிமேகலைக்கு அவளைப் போன்ற நல்ல தோழி அமையவே இல்லை. வீட்டில் அப்பாவும் அதிகம் பேச மாட்டார். பாட்டி மட்டுமே பிரதானமாக இருந்தார் அவளுடைய சுருங்கிப் போன உலகத்தில்.

வருடங்கள் உருண்டோடின. . பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள். நல்லவேளையாக அவர்களுடைய ஊருக்குப் பக்கத்து ஊரில் மகளிர் கல்லூரி இருந்தது. கல்லூரிப் பேருந்து மாஞ்சோலை கிராமத்திற்கு வந்து சென்றதால் கவலையில்லாமல் கல்லூரிக்குப் போய்வர முடிந்தது. இளங்கலை வணிகவியல் ( B. Com) படிப்பை முடித்துப் பட்டம் வாங்கினாள்.

“ போதும் படிச்சது. கல்யாணத்துக்கு வரன் பாத்துரலாம். நான் கண்ணை மூடறதுக்குள்ள இவளை ஒரு நல்ல எடத்துல சம்பந்தம் செஞ்சு அனுப்பினால் நிம்மதியாப் போய்ச் சேருவேன்” என்று ஆரம்பித்தார் பாட்டி ஒருநாள்.

“ வேண்டாம் பாட்டி. எனக்கு இன்னும் நெறையப் படிக்கணும். நான் ஆடிட்டராகணும். அதுக்கான படிப்பும், பயிற்சியும் எடுத்துக்கப் போறேன்”

“ கல்யாணத்தைச் செஞ்சிக்கோ. அப்புறம் போற எடத்துல மீதிப் படிப்பைத் தொடர்ந்து படியேன்”

“ நீங்களே விருப்பப்படாத போது புது இடத்துல இருக்கறவங்க என்னைப் படிக்க வைப்பாங்கன்னு என்ன நிச்சயம்? வேண்டவே வேண்டாம். இப்போ இந்தப் பேச்சே வேண்டாம்” என்று ஒற்றைக்காலில் நின்றாள் மணிமேகலை.

பேத்தியை ஆச்சர்யமாகப் பார்த்தார் பாட்டி. இதுவரை எதற்குமே அவள் பிடிவாதம் பிடித்ததில்லை என்பதால் அவருக்கு வியப்பு.
துணிமணிகள் கூட இதுதான் வேண்டும் என்று கேட்டதில்லை. சாப்பாடு கூட வீட்டில் என்ன இருக்கிறதோ ஏற்றுக் கொள்வாள். எனக்குப் பிடித்தது வேண்டும் என்று ரகளை செய்ததில்லை. இப்போது முதன்முறையாக முரண்டு பிடிக்கும் பேத்தியை ஆச்சரியத்துடன் பார்த்தார் பாட்டி. இந்தச் சமயத்தில் ஈஸிசேரில் ஹாய்யாக அமர்ந்து இவர்களுடைய உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டிருந்த அப்பா, திடீரென்று குறுக்கிட்டார்.

“ அம்மா, அவ ஆசைப்படியே படிச்சுட்டுப் போகட்டுமே! படிப்பு எப்பவும் கைகொடுக்கும். இப்ப உடனே கல்யாணம் செஞ்சு கொடுத்து, சின்னப் பிள்ளை தலையில குடும்ப பாரத்தை எதுக்குச் சுமத்தணும்? ” என்று மகன் சொன்னதைக் கேட்டுக் கிழவி அசந்து போனாள். மணிமேகலைக்கோ, ஆனந்தமோ ஆனந்தம். அப்பா முதன்முறையாக அதுவும் தனக்கு ஆதரவாகப் பேசியதில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

“ தேங்க்ஸ்பா” என்றாள் அவரைப் பார்த்து.

“ நாளைக்கே கம்பம் போகலாம். என்னோட ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச ஆடிட்டர் ஒருத்தர் இருக்கார். அவர் கிட்டப் போயி, என்ன, ஏதுன்னு விசாரிச்சுத் தெரிஞ்சுக்கலாம். பரீட்சை பத்தியெல்லாம் அவரே சொல்லுவார்” என்று அடுத்ததாக உதவிக் கரமும் நீட்ட மணிமேகலை உச்சி குளிர்ந்துபோனாள். பழம் நழுவிப் பாலில் விழுந்ததோடு அதுவே அவளுடைய வாயிலும் விழுந்துவிட்டது. இனிமையோ இனிமை. நாவிலிருந்து தொடங்கி நெஞ்சு வரை இனித்தது அப்பாவின் அக்கறை. துள்ளிக் குதித்து ஓடினாள். தன்னுடைய சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொண்டாள்.

‘ பரவாயில்லை, நான்தான் அப்பாவைப் பத்தித் தப்பாவே நெனைச்சிட்டு இருந்திருக்கேன் போல. அவ்வளவு பாசத்தையும் மனசுக்குள்ள ஒளிச்சு வச்சிருந்திருக்காரு. இன்னைக்கு சந்தர்ப்பம் கெடைச்சபோது அது வெடித்து வெளியே வந்திருக்கு. என்னதான் இருந்தாலும் ஆசிரியர் ஆச்சே? கல்வியின் அருமை அவருக்கா தெரியாது! ’ என்றெல்லாம் நினைத்துப் பார்த்துக் குதூகலமடைந்தது அவளுடைய மனம்.

பாட்டிக்கு முகம் வாடி விட்டது. என்றாலும் மகனே தன் மனதில் இவ்வளவு நாட்களாக ஒளித்து வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தியதில் அவருக்கும் மகிழ்ச்சி தான். கல்யாணத்தைப் பற்றி மீண்டும் பேச்செடுத்து மகனை ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார். வெளியே சொல்லவில்லை அந்தச் சமயத்தில். ஏதோ ஒரு கலக்கம் அவர் மனதில் வாட்டிக் கொண்டிருந்தது. இனம் தெரியாத பயம் என்று கூடச் சொல்லலாம். தனக்கு வயதாகிக் கொண்டு வருவதால் எழுந்த பயம். தாயின் அரவணப்பின்றி வளர்ந்த குழந்தையை நல்ல இடத்துக்கு அனுப்பி விட வேண்டும் என்று துடித்தார் பாட்டி.

மணிமேகலையின் ஸி. ஏ. படிப்பு ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. முதல் லெவலை முடித்து அடுத்த லெவல் பரீட்சைக்காகத் தயார் செய்து கொண்டிருந்தாள் மணிமேகலை. சோதனைகள் அடுத்தடுத்து அவளைத் தாக்கின.

திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மணிமேகலையின் அப்பா. மாஸிவ் ஹார்ட் அட்டாக் என்று சொன்னார்கள். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதி நேரத்தில் மணிமேகலையைப் பார்த்து ஏதோ பேச விரும்பித் தவித்தார். அவரால் பேச முடியவில்லை. உயிர் மூச்சு பிரிந்துவிட்டது.

அந்தத் தள்ளாத வயதில் மகனை இழந்த துக்கம், பாட்டியை மோசமாகத் தாக்கியது. அழுது புலம்பிப் பயனில்லையே! பேத்திக்காக மனதைத் திடப்படுத்திக் கொண்டு பேத்திக்குத் துணையாக நின்று அவளைத் தேற்றினார். துக்கத்தை மனதில் விழுங்கிக்கொண்டு மகனின் இறுதிக் காரியங்களைப் பொறுப்புடன் முடித்தார். பல வருடங்களாக நல்லாசிரியராகப் பணியாற்றி ஊரில் அவர் சம்பாதித்து வைத்திருந்த மதிப்பை, அவருடைய இறுதி ஊர்வலம் பறைசாற்றியது.

மகனுடைய காரியங்கள் முடிந்து ஒரு மாதத்தில் பாட்டி யோசித்துப் பார்த்து, ஒரு முக்கியமான முடிவை எடுத்துவிட்டார். இந்த முறை மணிமேகலையின் கருத்தைக் கேட்கவில்லை. பாட்டியின் தங்கையின் மகளான பாவை, சென்னையில் குடும்பத்துடன் இருந்தாள். அவளுக்குக் கடிதமெழுதி அவளை வரவழைத்தார். கணவருடன் கிளம்பிவந்தாள் பாவை.

“ பாவை, உங்கிட்ட முக்கியமான ஒரு பொறுப்பை ஒப்படைக்க விரும்பறேன். உன்னை விட்டா எனக்குச் சொல்லிக்கற மாதிரி வேற உறவு இல்லை. நான் போக வேண்டிய சமயத்துல என் மகனைக் காலனுக்குப் பறிகொடுத்துட்டு நிக்கறேன்” என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

“ பெரியம்மா, எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க. எங்களால் முடிஞ்சதைக் கண்டிப்பாச் செய்யறோம் நாங்க” என்று உறுதியளித்தாள் பாவை, மணிமேகலையின் ஒன்றுவிட்ட அத்தை.

“ என் பேத்தியை நெனைச்சுத்தான் ரொம்பக் கவலையா இருக்கு. அவளுக்குக் கல்யாணம், கார்த்தின்னு ஒண்ணும் செஞ்சு பாக்காம என் பையன் போய்ச் சேந்துட்டான். நானும் போறதுக்குள்ள ஏதாவது ஏற்பாடு செஞ்சுட்டுப் போகணும்னு பாக்கறேன். அதுலதான் உங்க உதவி எனக்குத் தேவை”

“ உங்க கவலை நியாயமானதுதான் பெரியம்மா. எங்களுக்கு உங்க நிலைமை புரியுது. மேலே சொல்லுங்க”

“ எங்களோட குடும்பத்தில் நடந்த சில விஷயங்கள் உங்களுக்குத் தெரியும். அதுக்கப்புறம் மனசு வெறுத்துப் போய் நாங்க சொந்த, பந்தங்கள் கிட்ட இருந்து ஒதுங்கி வாழ ஆரம்பிச்சோம். நான் என் பேத்தியை நல்லபடியா வளத்துருக்கேன். அதுல எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ரெண்டு வருஷங்களுக்கு முன்னாலயே அவளோட கல்யாணப் பேச்சை எடுத்தேன். மேல படிக்கணும்னு அவ பிடிவாதமா இருந்தா. என் பையனும் அவ ஆசைப்படி படிக்கட்டும்னு சொல்லிட்டான். நானும் வேற வழியில்லாமல் அவங்க ரெண்டு பேர் சொன்னதை ஏத்துக்கிட்டேன். இப்ப என் மனசுல ஒரு பயம் வந்துருச்சு”

“ பயப்படாதீங்க பெரியம்மா. ஒண்ணும் ஆகாது உங்களுக்கு”

“ அந்த மாதிரி இந்த வயசுல உறுதியாச் சொல்ல முடியுமா? ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஆண்டவன் போடற பிச்சை இல்லையா? எங்களுக்குப் பணத்துக்கு, வசதிக்கேற்ப கொறைச்சலில்லை. நில புலம், தோட்டம், இந்த வீடு எல்லாமே நல்ல விலைக்குப் போகும். இதைத் தவிர பரம்பரை நகை, நட்டு, என்னோட நகைகள், பேத்திக்காகவே செஞ்ச புது நகைகள் எல்லாம் சேந்து நெறையவே இருக்கு. இந்தச் சொத்து எல்லாத்தையும் என் பேத்தி பேருல எழுதி வைக்கறதுக்கு ஒரு நல்ல வக்கீலை ஏற்பாடு பண்ணுங்க. மாப்பிள்ளை, நீங்க இந்த நிலத்தை, தோட்டத்தை எல்லாம் விக்க ஏற்பாடு பண்ணுங்க. நாளைக்கு ஒருவேளை நான் இல்லாம என் பேத்தி, தன்னந்தனியா நின்னா அவளோட பொறுப்பை நீங்க எடுத்துக்கணும். அவளுக்கு நல்ல இடத்துல கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும் நீங்க” என்று தன் மனதில் இருந்த ஆசையை அவர்களிடம் சொல்லி முடித்தார் பாட்டி.

பாவையும், அவள் கணவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பாவையின் கணவர், அவளைப் பார்த்துத் தலையசைத்து ஏதோ சைகை செய்தார். பாவை, தன் மனதில் இருந்த ஆசையை அப்போது வெளிப்படுத்தினாள்.

“ பெரியம்மா, நானே இந்த விஷயத்தைப் பத்தி உங்க கிட்டப் பேச நினைச்சேன். என் பெரிய பையன் திருநாவுக்கரசு படிச்சு முடிச்சு, நல்ல கவர்ன்மென்ட் வேலையில் சேந்திருக்கான். கை நிறையச் சம்பாதிக்கிறான். அவனுக்கு நம்ம மேகலையைக் கேக்கலாம்னு நாங்களே பேசிட்டிருந்தோம். உங்களுக்கு சம்மதம்னா இப்பவே அவனை இங்கே வரச் சொல்லறோம். மேகலையும், அரசுவும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துப் பேசிக்கட்டும். அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு வேலைகளை ஆரம்பிச்சிருவோம். உங்க கண்ணு முன்னாலயே உங்க பேத்தி கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திக் காமிக்கறோம். அரசு பாக்க நல்லாவே இருப்பான். ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாகவே இருக்கும்” என்று பாவை சொல்ல, பாட்டிக்கு ஆனந்தத்தில் தலைகால் புரியவில்லை.

“ நடந்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் பாவை. நான் உன்னை என் பேத்திக்குக் கல்யாணம் செஞ்சு வைன்னு கேட்டேன். நீ உங்க வீட்டுக்கே மருமகளாக்கிக்கறேன்னு சொல்லறயே? உனக்கு நல்ல மனசு பாவை”

“ மேகலையை மருமகளாக்கிக்க நான்தான் கொடுத்து வச்சிருக்கணும் பெரியம்மா. எனக்கும் பொண்ணு இல்லை. மூணும் ஆம்பளைப் பசங்களாப் போச்சு. இப்ப மருமகளா ஒரு பொண்ணு வீட்டுக்கு வந்தா எங்க வீடும் நெறைஞ்சு போயிடும்” என்று அகமகிழ்ந்து போனாள் பாவை.

தன் அறையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த மணிமேகலையின் செவிகளில் அவர்களுடைய உரையாடல் விழுந்தது.

‘ இந்த முறை எனக்கு ஸப்போர்ட் பண்ண அப்பாவும் இல்லை. நான் வேண்டாம்னு சொன்னால் பாட்டி கேட்கப் போறதுமில்லை. பாக்கலாம். என்ன நடக்கப் போகுதோ? ’ என்று திருநாவுக்கரசின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் மணிமேகலை.

திருநாவுக்கரசு என்கிற இளைஞன், அவளுடைய வாழ்க்கையை முழுவதுமாக மாற்
றி எழுதுவதற்காகவே மாஞ்சோலை கிராமத்திற்கு வந்தான்.

தொடரும்,

திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு -8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
அன்பை பாட்டியிடமும்
அரவணைப்பு தனது
அப்பாவிடம் கிடைத்த
அன்று சொர்க்கமே...
அதுவும் கானல் நீராக
அடித்து செல்ல...
அவள் வாழ்வின் புயலாக
அவன் வருகை.....
 
Top Bottom