• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே - 6

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
309
நான் போடுற கோட்டுக்குள்ளே - 6

"ஹாய் சம்பத்! லண்டன்ல இருக்கறதா சொன்னா, எப்போ வந்தே?" விசாரித்த படி வந்தான் அரவிந்த்.

"வாங்கோ! வாங்கோ! அத்திம்பேர். நான் கார்த்தால தான் வந்தேன்" என்று பதில் சொன்னதோடு நில்லாமல் மீண்டும் வானத்தை உற்றுப் பார்த்தான் சம்பத்.

அவன் கைகளில் இருந்த ஸ்ரேயாஸ் மாமனை வித்தியாசபாகப் பார்க்க அரவிந்த் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"இப்போ எதுக்கு வானத்தை ஆராய்ச்சி பண்ணிண்டு இருக்க?"

"அதுவா அத்திம்பேர்.. மழை வருமோன்னுபாக்கறேன். சடனா வந்துட்டா என்ன பண்றது? நான் வேற கார்த்தாலயே என் டிரஸ் எல்லாம் வாஷ் பண்ணி மாடில உலர்த்தி இருக்கேன். " இந்த பதில் தான் வரும் என்று கேள்வி கேட்டவனுக்கும் தெரியும் என்றாலும் சிரிக்காமல் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"கார்ததால ஒன்பது மணிக்கே மத்தியானம் இரண்டு மணி மாதிரி வெயில் மண்டைய பொளக்கறது. இதுல மழை வருமோன்னு உனக்கு ஒரு சந்தேகம் வேற.. நன்னா தானே இருக்க? லண்டன் ட்ரிப்ல ஏதாவது நடந்துடுத்தா? என் கிட்ட மட்டும் சொல்லிடு"

"ஹா.. ஹா..‌ஹா.. யூ ஆர் இம்பாஸிபிள் அத்திம்பேர். லண்டன் ட்ரிப்ல எதுவும் நடக்கலை.. ஆனா சென்னைல தான் இன்னைக்கு இப்போ இந்த நிமிஷம் ஒரு அதிசயம் நடந்திருக்கு. அதனால தான் மழை வருமோன்னு ரொம்பவே டவுட்டா இருக்கு"

"ஹேய்.. போதும் மேன்.. ரொம்ப ஓட்டாத.. நாம இங்கேயே நின்னு பேசிண்டு இருந்தா ஸ்பை பண்ண ஆள் வரும்"

அரவிந்த் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ராஜஸ்ரீ அங்கே ஆஜரானாள். "இரண்டு பேரும் என்ன ரகசியம் பேசறேள்?"

"'பார்த்தியா ஸ்பை வந்தாச்சு " என்று சம்பத்திடம் முணுமுணுத்த அரவிந்த் மனைவியிடம் வேறு சொன்னான்.

"உனக்குத் தெரியாமல் என்ன ரகசியம் இருக்கப் போறது. உன் தப்பியோட லண்டன் ட்ரிப் பத்தி தான் பேசிண்டு இருந்தோம். இப்போ தான் உள்ள போகலாம், ஸ்ரீ தேடி வந்துடுவான்னு சொல்லிண்டு இருந்தேன்.. நீ வந்துட்ட… நீயே சொல்லு சம்பத். ."

மனைவியிடம் டோட்டல் சரண்டர் ஆனவன் மைத்துனனை உதவிக்கு அழைத்தான். அவனோ கஷ்டப்பட்டு சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டு இருந்தான். தலை மட்டும் ஆமா.. இல்லை என்று எல்லாப்புறமும் ஆடியது. இருவரையும் நம்பிட்டேன் என்பது போல ஒரு பார்வை பார்த்தாள் ராஜஸ்ரீ.

"சரி.. சரி.. எதுவானாலும் உள்ள வந்து பேசுங்கோ. நாள் பூராவும் டைம் இருக்கு" என்று கணவனைக் கையோடு அழைத்துக் (இழுத்துக்) கொண்டு போனாள்.

"சீக்கிரம் வாங்கோ அரவிந்த். உள்ள தாத்தா பாட்டிய சேவிக்கலாம்னு பார்த்தா நீங்க வாசல்லயே அரட்டை அடிச்சிண்டு நிக்கறேள். எல்லாரும் வழக்கம் போல மாப்பிள்ளை வரலையான்னு கேட்கறா."

மனைவியின் புலம்பல்களை புன்னகையுடன் கேட்டுக் கொண்டே அவளுடன் உள்ளே சென்றான் அரவிந்த்.

"வாங்கோ அரவிந்த்!"

"வாங்கோ மாப்பிள்ளை!" என்ற பெரியவர்களின் வரவேற்புகளைத் தலையசைத்து ஏற்றவன் கூடுதலாக அவனது அக்மார்க் புன்னகையையும் வழங்கினான்.

"அம்மா அப்பா வரலையா மாப்பிள்ளை?" என்ற தேவிகாவின் கேள்விக்கு, "அக்கா ஆத்துல ஒரு சீமந்தம் மாமி. தலைய காட்டிட்டு வரேன்னு சொல்லி இருக்கா. வந்துடுவா" என்றான்.

அதன் பின்னரே அவனது பார்வை அங்கே கூடியிருந்த மற்றவர்களிடம் சென்றது. பொதுவாகச் சிரித்து ஒரு ஹாய் சொன்னான்.

"அட.. நம்ம அத்திம்பேர்.. வாட் எ சர்ப்ரைஸ்.. அதான் அண்ணா மழை வருதான்னு பார்த்தானா? வாங்கோ அத்திம்பேர்! வெல்கம் வெல்கம்.. தங்கள் வரவு நல்வரவு ஆகுக!" என்று இளையவர் பட்டாளம் கோரஸாக வரவேற்றது. அவர்களை நோக்கி நகர முயன்றவனை முறைத்தாள் அவன் மனைவி. அவனோ மனைவியையும் அழைத்துக் கொண்டு அவர்களிடம் போனான்.

"ஹாய் கைஸ்.. எல்லாரும் எப்போ இருக்கேள்?"

"நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் அத்திம்பேர். நீங்க இங்கே என்ன பண்றேள்?" என்று விசாரித்தவள் கனகவல்லியின் மகள் ஸ்நேகா.

"ஏய் என்னடி? ஆத்துக்கு வந்த மாப்பிள்ளை கிட்ட இப்படி ஒரு கேள்வியைக் கேட்கற. அவர் என்ன நினைச்சுப்பார்? நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்கோ மாப்பிள்ளை. தெரியாம கேட்டுட்டா" மகளை அதட்டிய கையோடு கனகவல்லி, வீட்டு மாப்பிள்ளையிடம் சமாதானம் பேசினார்.

"ஓ மை காட்! கனகா அத்தை! உங்கள யாரும் இங்கே பஞ்சாயத்துக்குக் கூப்பிட்டாளா? நாங்க ஏன் அப்படி சொன்னோம்னு எங்களுக்கும் தெரியும் அவருக்கும் தெரியும். எங்களுக்குள்ள ஏதோ பேசிக்கறோம். நீங்க பேசாமல் இருங்கோ" என்று விளக்கியவன் வீட்டின் கடைக்குட்டி, ரகுராமனின் பதினைந்து வயது மகன் பரத்வாஜ்.

"இட்ஸ் ஓகே மாமி. நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்கோ." அத்தையைப் பார்த்து சொல்லி விட்டு இளையவர்களிடம் திரும்பினான் அரவிந்த்.

"இப்போ நான் தான் ஓ மை காட்னு சொல்லணும் போல இருக்கே. என்னைப் பத்தி உங்க எல்லாருக்கும் நன்னா தெரியும் போல.. இதை எப்படி சமாளிக்கறது?" என்று தீவிரமாக யோசித்தவன் அடுத்த கேள்வியை சம்பத்தைப் பார்த்துக் கேட்டான்.

"இவாளுக்கெல்லாம் இன்ஃபோ கொடுத்து ஃப்ரீ சர்வீஸ் பண்ணி அப்டைட்டடா வச்சது நீ தானே?"

"ஹா ஹா ஹா. அத்திம்பேர்! நான் சொல்லவே வேண்டாம். இங்கே இருக்கற ஒவ்வொருத்தரும் ஒரு என்சைக்ளோபீடியா. நம்ம ஆத்து விவகாரம் எல்லாம் ஆல்வேஸ் ஃபிங்கர் டிப்ல வச்சிண்டு இருப்பா. இவாளுக்கு இன்ஃபோ உபயம் - நம்மாத்து சீனியர் லேடீஸ் தான். நானில்லை" என்று எஸ்கேப் ஆனான் சம்பத்.

"என்னடா இது? நீங்க எல்லாரும் எதைப் பத்திப் பேசிண்டு இருக்கேள்?" என்று தகவல் வேண்டி ஆஜரானார்கள் முரளீதரன் & ப்ரதர்ஸ்.

"எல்லாம் நம்ம அத்திம்பேரோட அட்டன்டன்ஸ் பத்தி தான் பெரியப்பா"

"மாப்பிள்ளையைப் பத்தி தான் பேசறேள்னு புரியறது. என்ன விஷயம்னு தான் புரியலை"

"அதுவா பா.. அத்திம்பேர் இதுக்கு முன்னாடி நம்மாத்துக்கு எப்போ வந்தார்? என்ன ஃபங்ஷனுக்கு வந்தார எவ்வளவு நேரம் இருந்தார்னு ஞாபகம் இருக்கா?"

"ஓ.. நன்னா ஞாபகம் இருக்கே.." என்ற முரளி பிள்ளைகளின் கேலி புரிந்தது என்று சிரித்தார்.

"உங்களுக்குப் புரிஞ்சிடுத்து போல இருக்கே.. இருந்தாலும் மத்தவா எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டாமா.. அதுக்காகத்தான் ஒரு சின்ன உதவி.." என்ற சம்பத் "பரத்! ஸ்டார்ட் மியூசிக்" என்றான். அரவிந்த் இத்தனை கேலியையும் ரசித்துக் கொண்டே நின்றான்.

பரத் தொண்டையைச் செருமிக் கொண்டு ஆரம்பித்தான். "அதாவது நம்ம அத்திம்பேர், மிஸ்டர்.அரவிந்த் இருக்காரே.. அவர் என்ன வேலை பார்க்கறார்னு எல்லாருக்கும் தெரியும் தானே.."

"ஏன் டா அவர் கவர்மென்ட்ல பெரிய ஆபீசர்.. அவரைப் போய் எதுக்கு டா இப்படிக் கேலி பண்றேள்?" என்றார் பாட்டி.

"கரெக்ட் பாட்டி. அவர் கவர்மென்ட் ஆபீசர் தானே.. அதுல தான் மேட்டரே இருக்கு.. எனக்குத் தெரிஞ்சு அவருக்கு வீக்கென்ட்ஸ், அதாவது சாட்டர்டே அன்ட் சன்டே இரண்டு நாளும் லீவு தான். ஆனா அவர் என்ன பண்ணிண்டு இருக்கார்." அவன் ஆரம்பிக்க மற்றவர்கள் ஆளுக்கொன்றாய் சொல்லி அரவிந்தைக் கேலி செய்தனர்.

"ஒரு நாள் கூட கேப் விடாம ஆபீஸ் மாசம் முப்பது நாளும் ஆஃபீஸ் போறார் "

"சே.. சே .. தப்பு.. அந்த ஆஃபீஸையே அத்திம்பேர் ஷோல்டர்ல தான் தாங்கிப் பிடிச்சிண்டு இருக்கார். ஒரு நாள் இறக்கி வச்சாலும் ஆஃபீஸ் என்ன ஆகுமோ தெரியாது. கூடவே அத்திம்பேருக்கு ஷோல்டர் வலிக்கும்"

"வீக்கென்ட்ல ஆஃபீஸ் போய் என்ன பண்ணுவேள் அத்திம்பேர்?"

"பெரிசா என்ன பண்ணிடப் போறார். இவரே ஆஃபீஸைத் திறந்து ஜன்னல் கதவெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணுவார்"

"ஏன் டா அப்படிச் சொல்ற?"

"பின்ன என்னப்பா.. கவர்மென்ட் ஆஃபீஸ்ல வொர்க்கிங் டேஸ்லயே யாரும் ஒழுங்கா வேலை பார்க்க மாட்டேங்கறான்னு கம்ப்ளைன்ட்ஸ் வருது. இவர் மட்டும் ஏன் இப்படி இருக்கார்?"

சிறியவர்களின் கேலியில் உள்ள உண்மை புரிந்தாலும் சின்சியரான மாப்பிள்ளையை எப்படிக் குறை சொல்ல முடியும்?

"டேய் இவர் அப்படி சின்சியரா இருக்கறதுனால தான் ஏகப்பட்ட அவார்ட் அன்ட் ரிவார்ட் எல்லாம் கிடைக்கறது. அவர் கிட்ட இருந்து இதையெல்லாம் கத்துக்கலேன்னா பரவாயில்லை. குறை சொல்லாதீங்கோ" முரளிதரன் சிறியவர்களை அடக்கினார்.

"சரி தான் பெரியப்பா.. அதுக்கு இவருக்கு கீழே இருக்கறவா எல்லாரும் கோஆபரேட் பண்ணனும்."

அதுவரை அவர்களின் பேச்சில் தலையிடாமல் கேட்டுக் கொண்டிருந்த ராஜஸ்ரீ பேச ஆரம்பித்தாள்.

"இவா சொல்றதெல்லாம் கரெக்ட் தான் பா. நான் பல தடவை சொல்லி டயர்டாகிட்டேன். இவர் ஒருத்தரே தலைல எல்லாத்தையும் போட்டுண்டு நாள் கிழமைக்குக் கூட ஆத்துல இல்லேன்னா கஷ்டமா இருக்காதா? அதைத் தான் இவா சொல்றா."

கேலிப் பேச்சு சீரியஸாக மாற ஆரம்பித்ததோ? மனைவியின் பேச்சில் அரவிந்தின் முகம் சற்றே மாறியதோ? அவனையே கவனித்துக் கொண்டிருந்த சம்பத்திற்கு அப்படித்தான் தோன்றியது. பேசியது போதும் என்று முடிவு செய்த சம்பத் இடைபுகுந்தான்.

"நாம எல்லாரும் மீட் பண்றதே ஏதோ ஒரு ஃபங்ஷன்ல தான். அப்பவும் அத்திம்பேரைப் பார்க்க முடியலேன்னு ஒரு வருத்தத்தில தான் இந்தப் பேச்சு வந்துடுத்து. நான் தான் ஆரம்பிச்சு வச்சேன். இப்போ ட்ராக் மாறிப் போற மாதிரி இருக்கு. கைஸ் போதும். இதோட நிப்பாட்டிப்போம். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்கோ அத்திம்பேர்" என்று மன்னிப்புக் கேட்கும் தொனியில் பேசினான்.

"ஹேய் சம்பத்! என்னாச்சு மேன்? எதுக்கு இப்படி சீரியஸா ஃபீல் பண்ற? I thoroughly enjoyed it. பசங்க என்னமா புரிஞ்சு வச்சிருக்கா? என்னைப் பத்தி அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ச்சி பண்ணி வச்சிருக்கேள். இதுக்காகவே இனிமேல் ஆப்சென்ட் ஆகக் கூடாதுன்னு தெரியறது. இன்னைக்கு பூராவும் இங்கே தான் இருக்கப் போறேன். நாம அப்புறம் பேசுவோம். இப்போ வந்த வேலையைப் பாக்கறேன். இல்லேன்னா நான் பஸ்மமாக வாய்ப்பு இருக்கு" என்று மனைவியை ஜாடையாகக் காட்டிக் கண்ணடித்தான்.

"சரி.. சரி.. பேசினது போதும். இவா கிட்ட அப்புறம் பேசிக்கலாம். இப்போ தாத்தா பாட்டிய சேவிக்கலாம் வாங்கோ!" என்று கட்டளையிட்டுத் தானும் அவனுடன் இணைந்து கொண்டாள் ராஜஸ்ரீ. குழந்தை மாமனிடம் இருந்து இறங்கி பெற்றோருடன் இணைந்து கொண்டான். அவர்களைத் தொடர்ந்து சிறியவர்கள் அனைவரும் வரிசையாக வந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

புகுந்த வீட்டு வழக்கப்படி நான்கு முறை சின்சியராக சேவிக்க பேத்தியைக் கண்டு பதறிப் போனார் சேஷா.

"ராம! ராமா! என்னத்துக்கு டா இப்படி சேவிச்சுண்டு கஷ்டப்படறே? எங்கேயாவது பிடிச்சுக்கப் போறது. அப்படியே கையைக் கூப்பிக்கோ போறும். ராஜி! நீயும் பேசாமல் பாத்துண்டு இருக்கியே, அவ கிட்ட சொல்லேன்."

ஏழு மாத கர்ப்பிணியான பேத்திக்குத் தாத்தா பாவம் பார்க்க, பாட்டியோ முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டார்.

"ரொம்பத்தான் கரிசனம் வழிஞ்சு ஓடறது. இந்த நேரத்தில இதெல்லாம் செஞ்சாத் தான் இடுப்பு இளகிக் கொடுக்கும். சுகப்பிரசவம் ஆகும். பெரியவா எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கலை. எல்லாருமா செஞ்சுடறா? நம்மாத்து குழந்தைகளுக்கு ஏதோ கொஞ்சம் நல்லது கெட்டது தெரிஞ்சதால பண்றா. அதை நினைச்சு பெருமைப் படுவேளா.. அதை விட்டு அக்கறை காட்டறேன்னு எதையாவது பேசிண்டு…"

வாஸ்தவம் தான், ஐஸ்வர்யாவைத் தவிர அங்கே இருந்த அனைவருமே பெரியவர்களைச் சேவித்து ஆசிர்வாதம் வாங்கியிருந்தார்களே. அதில் பாட்டிக்கு ஏக பெருமை. ஐஸ்வர்யாவோ சின்சியராக சம்பத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி இருந்தாள். இடையே அரவிந்த் வந்ததால் அந்த ஆராய்ச்சி திசை மாறும் போலத் தெரிந்தது. என்ன நடக்குமோ.. பொறுத்திருந்து பார்ப்போம்..

"சரி.. சரி.. ஏதோ குழந்தை கஷ்டப்படப் போறாளேன்னு சொல்லிட்டேன். அதுக்கு நீ இவ்வளவு பெரிய லெக்சர் கொடுக்கணுமா?"

"நான் லெக்சரர் ஆத்துக்காரி இல்லையா.. நீங்க தான் எண்ணி நாலு வார்த்தை பேசறேள். நானாவது அப்பப்போ இப்படி லெக்சர் கொடுக்கலேன்னா நன்னா இருக்காது."

தாத்தா லெக்சரர் என்ற விஷயம் தெரியாத பரத் அடுத்த பேச்சை ஆரம்பிக்கும் முன் விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விற்பன்னர்கள் வர விழா களை கட்டியது. கேட்க வந்த விஷயத்தை அப்போதைக்கு ஒத்தி வைத்தான் பரத்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆயுஷ்ய ஹோமம், தன்வந்திரி ஹோமம் எல்லாம் செய்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாராயணம் செய்து பெரியவர்களை மகிழ்வித்துத் தாங்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

வீட்டு மனிதர்கள், நெருங்கிய சொந்தங்கள் என கிட்டத்தட்ட அறுபது பேர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பிறகு ரி- கிரியேட்டிங் மெமரீஸ் என்று சிறியவர்கள் எல்லாம் கூடினர்.

சேஷா மற்றும் ராஜியின் கருப்பு வெள்ளை திருமண போஸ்கள் யாவும் HD கலரில் பதிவு செய்யப் பட்டன. "பாட்டி! இப்படி நில்லு.. அப்படிப் பாரு.. அந்த ஃபோட்டல அழகா சிரிச்சிருக்கே பாரு.. அதே மாதிரி சிரி" என்று எல்லாரும் ஐடியாக்களைக் கொட்ட, ராஜி அன்று போலவே இன்றும் அழகாக வெட்கப் பட்டார்.

அனைவரும் சாப்பிட்டு மறுபடியும் கூடிய வேளையில் பரத் அடுத்த பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்தான்.

"ஓகே.. ஓகே.. தாத்தா லெக்சரர்னே எனக்கு இப்போதுதான் தெரியும். இது போல நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க, நாம எல்லாரும் டைம் டிராவல் பண்ணி சிக்ஸ்டி இயர்ஸ் பின்னாடி போகப் போறோம். தாத்தா பாட்டியோட கல்யாணத்துல கலந்துக்கப் போறோம். எல்லாரும் ரெடியா? பாட்டி! தாத்தா! உங்க மலரும் நினைவுகளை அப்படியே கொட்டுங்கோ பார்க்கலாம். வி ஆர் வெயிட்டிங்.."

பசுமை மாறா நினைவுகளை அசை போட்டபடி அப்படியே தங்கள் கல்யாண காலகட்டத்துப் போனார்கள் ராஜி பாட்டியும் சேஷூ தாத்தாவும்.

திருத்தங்கல், சிவகாசியை அடுத்த கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு ஊர். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக பெருமாள் நின்றநாராயணனாக அருள் பாலிக்கும் ஊர். பல்வேறு சிறப்புகளைக் கொண்டு மலையைக் குடைந்து கட்டப் பட்ட கோயில், மூலவரின் பிராகாரத்தைச் சுற்றி அற்புத கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பாண்டிய மன்னர்கள் குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல புதிய தகவல்களை வழங்கும் ஊராகவும் திருத்தலமாகவும் இருக்கிறது. அரியும் சிவனும் ஒன்று என்று சத்தமாக உரைக்கும் ஊர். பெருமாள் கோவிலை ஒட்டியே கருநெல்லிநாதரும் மலைமேலே முருகப் பெருமானும் என இந்த ஊருக்குப் பல சிறப்புகள்.

சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் இருப்பதால் பல காலமாகப் போக்குவரத்து வசதியைப் பெற்றிருக்கும் ஊர் அது. படிப்பு மற்றும் வேலைக்காக விருதுநகர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் என்று தினசரி செல்லும் வழக்கமும் பல வருடங்களாக அங்கே உண்டு.

பெருமாள் கோவிலை ஒட்டி இருந்த அக்ரஹாரத்தில் ஒரு கோடியில் ராஜலக்ஷ்மி குடும்பமும் மறுகோடியில் சேஷாத்ரி குடும்பமும் இருந்தது. பெரும்பாலான குடும்பங்கள் கோவில் கைங்கர்யங்கள் மட்டுமே செய்தாலும் ராஜலக்ஷ்மி மற்றும் சேஷாத்திரியின் தந்தைமார் இருவரும் அருகே இருந்த கிராமப் பள்ளிகளில் ஆசிரியராக இருந்தனர்.

அந்த வகையில் சேஷாத்ரிக்கும் ஆசிரியர் பணி மேல் கொஞ்சம் ஆர்வம் வந்தது. நாளடைவில் லெக்சரர் ஆவது ஒன்றே லட்சியமாக மாறி இருந்தது. அதற்கேற்றபடி உழைபத்தவர் மதுரைக் கல்லூரியில் சேர்ந்து கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்று அங்கேயே வேலையில் அமர்ந்தார். அதனால் கல்யாண மார்க்கெட்டில் அவரது டிமாண்ட் பல படிகள் மேலே ஏறிப் போனது.

ராஜலக்ஷ்மியோ எஸ்எஸ்எல்சியோடு படிப்பை நிறுத்தி விட்டவர். அந்தக் காலத்தில் அதுவே பெண்களுக்குப் பெரிய படிப்பாக இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் பொதுவாக எல்லா ஊர்களிலும் ஒரு வழக்கம். மாப்பிள்ளையோ பெண்ணோ உள்ளூரில் அமையாவிட்டால் தான் வேறு யோசிப்பார்கள். அந்த வகையில் உள்ளூரிலேயே வரன் அமைய பெரியோர்களால் சேஷா மற்றும் ராஜியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ராஜிப் பாட்டி தனது கல்யாண காலத்தை விவரிக்க ஆரம்பித்தார். அவரது கல்யாணம் மட்டும் அல்லாது அந்தக் காலத்தில் பொதுவாக கல்யாணம் எப்படி நடந்தது என்று மடை திறந்த வெள்ளமாகப் பேசிக்கொண்டு போனார். இடையிடையே அவரை நிறுத்த பரத் செய்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தது.

"எங்க கல்யாணம் அஞ்சு நாள் நடந்த கல்யாணம். அந்த காலத்துல இப்போ மாதிரி சத்திரமெலாம் கிடையாதே. தெரு மொத்தம் போட்டு அந்த அக்ரஹாரத்துல உள்ளவாளோட அகங்களையெல்லாம் கெஸ்ட் ஹவுஸ் மாதிரி கல்யாண ஏற்பாடு பண்றவா உபயோகம் பண்ணிண்டா.

வாட்ஸ்அப் வசதி எல்லாம் அப்போ கிடையாதே. நிச்சயம் ஆகிடுத்துன்னா தபால் கார்டு ஓரத்துல மஞ்சள் தடவி இரண்டு பக்கத்து சொந்தகாராளுக்கும் உடனே தகவல் பறந்தது. இந்த காலம் மாதிரியா முகூர்த்த நேரத்துக்கு நெருங்கின சொந்தகாராளே வர மாதிரி. அப்போ எல்லாம் ஆத்து வாசல்ல ஜலத்தை தெளிச்சு கோலத்தை போட்டா ஜே ஜேன்னு உறவுகாராள்ளாம் கூடிடுவா.

அதுலயும் பெண்ணோட/பிள்ளையோட அத்தைகளும், மாமாக்களும் முன்னாடி வந்து நிப்பா. கல்யாணத்துல இவாளோட சீர்தான ரொம்ப முக்கியம் இவாளோட பந்தா அதவிட தூள் பறக்கும். எங்க கல்யாணத்துலயும் அப்படித்தான் நடந்தது. தொட்டதுக்கெல்லாம் குறை சொல்றதுக்கு தனியா ஒரு கூட்டமே இருந்தது. எந்த வகைல சொந்தம்னே தெரியாதவாளையெல்லாம் எங்க அப்பா சமாளிக்கறதுக்குள்ள …

எங்க அத்தை கடிதாசு கிடைச்ச உடனே அடுத்த ரயிலைப் பிடிச்சு ஆத்துக்குள்ள வரச்சயே அண்ணா நீ போட்ட கடிதாசு கிடைச்ச உடனயே ஆத்துல போட்டது போட்டபடி பறந்து வந்துட்டேன். நம்ப அம்மாவும், அப்பாவும் இருந்தா முதல் பேத்திக்கு கல்யாணம்னா எவ்வளவு சந்தோஷப்பட்டுருப்பான்னு கண்ணை தொடச்சுண்டு ஸ்வாதீனமா ஒரு மாசத்துக்கு முன்னாடியே வந்துட்டா.

இப்ப மாதிரியா அந்த கால கட்டத்துல ஸ்டார் கல்யாண மண்டபங்கள். ஒப்பந்த அடிப்படைல ஆட்கள். சீர் பக்ஷணங்கள் பண்றதுக்காகவே ஊர்ல இருக்கற அத்தை, மாமி, சித்தி, பாட்டி உறவுகளெல்லாம் கூடிடுவா. பக்ஷணம், அப்பளம் பண்றச்சே அவா அடிக்கற கூத்தெல்லாம் பார்க்க கண்கள் கோடி வேணும். சாப்பாட்டு கடை ஆச்சுன்னா கல்யாணத்துக்கு கடைசி 15 நாளைக்கு முன்னாடி வரைக்கும் கடைகளுக்கு போய் பாத்திரம் பண்டம், மளிகை சாமான்கள், துணிமணிகள் இத்யாதிகளுக்கெல்லாம் ஆத்துல உள்ள புருஷாளும், சொந்தகார மனுஷாளும் களத்துல இறங்கி வேலை செய்வா.

இந்த காலம் மாதிரி மாப்பிள்ளையாத்துகாராளுக்கும், அவா சொந்தபந்தங்களுக்கும் /நட்புகளுக்கும் ஹோட்டல்ல அறைகள் போட மாட்டாளே. சுத்தி இருக்கற அக்கம் பக்கத்து மனுஷாளே தன்னாத்து கல்யாணம் மாதிரி அவா அவாளோட அகங்களையே சுத்தம் பண்ணி சந்தோஷமா கொடுப்பார்கள். நினைச்சு பார்த்தா கூட அந்த பொற்காலங்கள் திரும்பி வராதே.

கல்யாண சமையல்லாம் காண்ட்ராக்ட் கிடையாதே. மளிகை, காய்கறிகள்ளாம் மொத்தமா வாங்கி வச்சு உக்கிராண அறையில் பத்திரமா வச்சு அதை பாத்துக்க பெண்ணாத்துல உள்ள உறவுகாராள்ளாம் மாத்தி, மாத்தி ட்யூட்டி போட்டுண்டு பரிஜாரகாளுக்கு வேணும்கறதை எடுத்து கொடுப்பார்கள். இதுக்கு அசாத்ய பொறுமை வேணும்.

எங்க கல்யாணம் எங்க ஆத்துலயே தான் நடந்தது. பிள்ளையாத்துகாரா வந்த உடனே மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி விரதத்துக்கு அழைச்சுண்டு போயிடுவா.

கார்த்தால பிள்ளையாத்துலயும், பெண்ணாத்துலயும் விரதம் முடிஞ்சு சாப்பாடு ஆன பிறகு சாயந்திரம் நிச்சயதார்த்தம்தான். அந்த காலத்துல இந்த காலம் மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம்னா பெரிய ஹால்களில் வைக்கற பழக்கம் கிடையாது. பிள்ளையாத்துலதான் பண்ணுவா. அதுக்கு பெண்ணை கூட்டிண்டு போக மாட்டா. அத ஒப்புதல் தாம்பூலம்னுதான் சொல்லுவா.

கல்யாயாணத்துக்கு முதல் நாள் விவாஹ பத்திரிக்கை வாசிச்சு பண்றதுதான் ஒரிஜினல் நிச்சயதார்த்தம். அந்த கால கட்டத்துல ரிசப்ஷன் கூட ரொம்ப அத்தி பூத்தா மாதிரி மேல்மட்டத்துகாராதான் பண்ணுவா. அதுவும் கல்யாணம் முடிஞ்சு சாயந்திரம்தான் வச்சுப்பா. நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனே கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு திறந்த கார்ல மாப்பிள்ளை ஜான்வாசத்துல வருவார். முன்னாடி நாதஸ்வர கச்சேரி, கேஸ் லைட்டோட கோலாகமா ஜான்வாசம் நடக்கும். நிச்சயதார்த்த விருந்து முடிஞ்ச பிறகு ஒரு பக்கம் சீட்டு கச்சேரி, இன்னொரு பக்கம் முகூர்த்த தேங்காய் பைகளை பொண்ணாத்துகாரா போட்டுண்டு இருப்பா.

அது மாதிரி பிள்ளையோட அத்தை, மாமா பண்ற ஜபர்தஸ்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். அதுவும் பிள்ளையோட அத்தை பெண்ணோட அம்மா, அப்பாட்ட இதோ பாருங்கோ மாமா எங்க பக்கத்து வயசான பெரியவாள்ளாம் காசிக்கு போயிட்டு வந்துருக்கா. அவாளுக்கு சேஷமில்லாம மடி சமையலுக்கு
ஏற்பாடு பண்ணிடுங்கோ. அப்பறம் நானே உங்களன்ட கேக்கனும்னு நினைச்சேன். அது என்ன முகூர்த்த சாப்பாட்டுல இலைக்கு போட்ட குஞ்சாலாடு க்ருஷ்ண ஜயந்திக்கு உருட்டின உப்பு சீடை சைஸ்ல இருக்கே. குழந்தை கையால குஞ்சாலாடை பிடிக்க சொன்னேளாக்கும்னு தோள்பட்டைல நக்குனு இடிச்சுப்பா. பிள்ளையோட மாமா காபி கழனி ஜலமாட்டம் இருக்கு, வெத்தலை வாழை இலை சைசுக்கு இருக்குன்னு இடுப்புல உள்ள பஞ்சகச்சம் நழுவறது தெரியாம ஆகாசத்துக்கும், பூமிக்கும் தை தைன்னு குதிப்பார்.

இந்த களேபரங்களையெல்லாம் தாண்டி மறுநாள் காசியாத்திரைக்கு மாப்பிள்ளை மங்கள ஸ்நானம் பண்ணிட்டு மாமியார் கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் பண்ணி மாப்பிள்ளை மயில்கண் வேஷ்டி பஞ்சகச்சத்தோடு கையில் விசிறி, வேத புஸ்தகம் இத்யாதிகளோடு காசியாத்திரைக்கு புறப்படுவார்.

வாத்தியார் சொல்றதை பெண்ணோட தகப்பனார் மாப்பிள்ளையிடம் காசி யாத்திரை போகாதீங்கோ, எங்கள் குமாரத்தியை கன்னிகாதானம் பண்ணித்தரோம் அவளை பாணிக்ரஹணம் பண்ணிக்கனும்னு சொல்லி மாலை மாத்தற நிகழ்ச்சிக்கு அழைப்பார். இந்த மாலை மாத்தற சம்ப்ரதாய்த்துல பெண்ணையும், மாப்பிள்ளையும் மாமாக்கள் தூக்கிண்டு ஓடுவாளே அப்பப்பா செம கலாட்டாதான். பெண்கள்ளாம் சுத்தி நின்னுன்டு மாலை மாற்றினாள் கோதை மாலை சாத்தினாள், மன்மதனுக்கு மாலையிட்டாயேன்னு பாட்டுகளை பாடி கரகோஷம் பண்ணுவா.

பெண்ணுக்கு அப்பா மடில உட்கார வச்சு கூறைப் புடவையை கொடுத்து நாத்தனார் அவளை மடிசார் கட்ட அழைச்சுண்டு போவா. பெண்ணை அப்பா மடில உட்கார வச்சுண்டு கன்னிகாதானம் பண்ணி கொடுக்கறச்சே அவரோட மடியை விட மனசு ரொம்ப கனக்கும். சும்மாவா விதையை இல்லை கன்னி என்னும் வ்ருக்ஷத்தையே வேரோட பெயர்த்து எடுத்து இன்னொரு குடும்பத்துக்கு கன்னிகாதானமா கொடுக்கறாரே.

இந்த கன்னிகாதானத்துலதான் கொடுக்கறவா கையும், வாங்கறவா கையும் சமமா இருக்கு. எந்த தானத்துக்கும் இல்லாத விசேஷம் கன்னிகானத்துக்கு மட்டும்தான் உண்டு. கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவருமே சமமான பலனை அடைகிறார்கள்.

மாங்கால்யதாரணம், சப்தபதி சம்ப்ரதாயங்கள்ளாம் முடிஞ்ச உடனே இரண்டு பக்கத்து உறவுகளெல்லாம் தம்பதிகளோட அம்மா, அப்பாவிடம் என்ன மாப்பிள்ளை வந்தாச்சா, மாட்டுப்பொண் வந்தாச்சான்னு சந்தோஷத்துல அவாளை ஆலிங்கனம் பண்ணிப்பா. தாத்தா பாட்டிகள்ட்ட பேரன் ஆம்படையா வந்தாச்சா, பேத்தி ஆம்படையான் வந்தாச்சான்னு விஜாரிச்சு ஆசீர்வாதம் வாங்கிப்பா. பாட்டி, தாத்தாக்களெல்லாம் இதை ஆனந்தமா ரசிச்சுண்டுருப்பா. சப்தபதி ஆனபிறகுதான் எல்லாருமே ஓதியிட்டு ஆசீர்வாதம் பண்ணுவா. முகூர்த்த சாப்பாடு முடிஞ்சு கிளம்பறவாளுக்கெல்லாம் தாம்பூல பை, சீர் பக்ஷணத்தோட மரியாதை பண்ணி விடை கொடுப்பா.

சாயந்திரம் நலங்கு கலாட்டா அமர்க்களமா இருக்கும். இரண்டு பக்கத்து மனுஷாளும் பாட்டு பாடியே சண்டை போட்டுப்பா. பிள்ளையோட அத்தை கருநாகப் பழம் போல கருத்த பெண்ணுக்கு எலுமிச்சம் பழம் போல எங்காத்து பிள்ளைனு பாடுவா. அதற்கு பதிலடி கொடுக்க பெண்ணோட மாமி உடனே எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் வெகு சங்கோஜகாரி இட்டிலியில் இருநூறும், ஜாங்கிரியில் முன்னூறும், மைசூர்பாகில் நானூறும், தயிர் வடையில் ஐநூறும் சாப்பிட என்று பதிலடி கொடுக்க சபையே அதிரும். அன்னிக்கு ராத்திரி மாப்பிள்ளைக்கு வெள்ளித்தட்டில் பால் சாதம் சாப்பிட சொல்லுவா. வெள்ளித் தட்டை அலம்பி வைக்கற மச்சினிக்கி பதில் சம்பாவனை பண்ணுவா.

முகூர்த்தத்துக்கு அன்னிக்கு இரவே சாந்தி முகூர்த்தத்தை ஏற்பாடு பண்ணிடுவா. சோபன அறையை நன்னா பூஜோடனையால அலங்காரம் பண்ணி, மெல்லிய ஊதுபத்தி மணம், பால் பழம், பக்ஷண வகைகளோடு இந்திர லோகம் மாதிரி ஜோடனை இருக்கும். முதலில் ஒரு வயதான தம்பதிகள் படுக்கையில் சாஸ்திரத்துக்கு உட்கார்ந்து எழுந்திருப்பார்கள். அப்புறமா தம்பதிகள் சோபன அறைக்கு போன பிறகு வெளில பெண்கள் கூட்டமா ஒக்காத்துண்டு பள்ளியறை பாடல்களை பாடுவார்கள்.

மறுநாள் காலையில் மச்சினன் படுக்கையை சுருட்டின பிறகு படுக்கையின் அடியில் அவனுக்கு சீர் பணம் வைத்திருப்பார்கள்.

உள்ளூர்லயே இருந்தாலும் நான் உங்க தாத்தாவை ரொம்ப பார்த்ததில்லை. அவர் முகத்தைப் பார்க்கவே ஒரு வாரம் ஆச்சு. எத்தனை கேலி கிண்டல்.. எல்லாத்துலயும் ஒரு வாழ்க்கைப் பாடம் இருக்கும். இந்த மாதிரி கல்யாணங்கள் இனிமே இந்த தலைமுறைகளில் நடக்குமா?"
கிட்டத்தட்ட அரைமணி நேரம் இடைவிடாது பேசியதைத் தொடர்ந்து மூச்சு வாங்கியது பாட்டிக்கு..

தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த அரவிந்த் , "போறும் பாட்டி! போறும்.. உன் கல்யாணம் எப்படி நடந்ததுன்னு கேட்டா.. நீ ஊர்ல உள்ள கல்யாணத்துக்கு எல்லாம் விளக்கம் கொடுத்துட்ட. ஒன் மார்க் கொஸ்டினுக்கு நூறு மார்க்குக்கு ஆன்சர் எழுதுவ போல இருக்கு. ஷப்பாஆஆ இப்போவே கண்ணைக் கட்டறதே.. இப்போ தாத்தாவோட டர்ன்.. எப்படி லெக்சரர் ஆனேன்னு மட்டும் சொல்லு தாத்தா. நோ எக்ஸ்ட்ரா பிட்ஸ். ஸ்டார்ட் மியூசிக்!" என்றான்.

தாத்தா மியூசிக்கை ஆரம்பிக்கும் முன்
"ஸ்டாப் இட் ஐ ஸே!" என்று ஒரு அபஸ்வரம் குறுக்கிட்டது.

"எவ அவ?" என்று திரும்பிய அனைவரும் அங்கே நின்ற ஐஸ்வர்யாவைப் பார்த்துத் திகைத்தனர். என்ன செய்யக் காத்திருக்கிறாளோ??
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே - 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom