• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அனந்தன் காடு 7

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
28

அனந்தன் காடு 7

கடுவினை களைய அனந்தபுரம் அடைக

துடைத்தகோ விந்தனாரே
யுலகுயிர் தேவும்மற்றும்,
படைத்தவெம் பரமமூர்த்தி
பாம்பணைப் பள்ளிகெண்டான்,
மடைத்தலை வாளைபாயும்
வயலணி யனந்தபுரம்,
கடைத்தலை சீய்க்கப்பெற்றால்
கடுவினை களையலாமே.

திருவாய்மொழி



உலகெங்குமே பாம்புகள் குறித்தான நம்பிக்கைகளும் வழிபாடுகளும், கட்டுக்கதைகளும், பல நேரங்களில் அவற்றுடன் பொருந்திப் போகும் நிகழ்வுகளும் ஆதி தொட்டே இருந்து வருகிறது.

யானைகள் வருவதை பூமியின் அதிர்விலும், புலி, சிங்கம் போன்றவற்றை அதன் ஆக்ரோஷமான நகர்தலின் மூலமும் அறிந்து தற்காத்துக் கொள்ளலாம்.

ஆனால் பாம்பு வருவதும் நகர்வதும் யாரறிவர்? அதன் சத்தமில்லாத நகர்வும், நெளிந்து நெளிந்து செல்லும்போது அது ஏற்படுத்தும் பயம் கலந்த ஒவ்வாமை உணர்வும் பலருக்கும் ஒரு வித உறைதன்மையை தரக்கூடியது.

ஊர்வன, பறப்பன, நடப்பன என வகை வகையான விலங்குகள் இருக்கையில், இந்த பாம்புகளைப் பற்றி மட்டும் இத்தனை அச்சமும், கதைகளும் நம்பிக்கைகளும் உலவுவது ஏன்?

நேரில், நினைவில் மட்டுமின்றி பாம்பை கனவில் கண்டால் கூட அதற்கான பலனும் காரணங்களும் நிமித்தங்களும் பரிகாரங்களும் பட்டியலிடப்படுகிறது.

இரண்டு கால்களில் நிமிர்ந்து நின்றுவிட்ட மனிதன், இயற்கையில் தான் பார்த்து வியந்தவற்றைக் கடவுளாகவும் பயந்தவற்றை கடவுளின் அருகில், அவரது கட்டுப்பாட்டிவ் இருப்பதாகவும் உருவகித்தான்.

ஸர்ப்பங்களின் சத்தமில்லாத அசைவும், நகர்வும் முன்னேற்றமும் கால இயக்கத்தின் மிகப்பெரிய குறியீடுகள்.

அனுபவம் தந்த பரிணாம வளர்ச்சியில், மனிதன் தனக்கு பயத்தைக் கொடுக்கும் விலங்குகள் அனைத்துமே, சுற்றுச்சூழல் சங்கிலியின் முக்கியமான கண்ணிகள் என்று புரிய, காட்டு மற்றும் வீட்டு விலங்குகள் என அவற்றை வகைப்படுத்தினான்.

ஆனால், காடு கரைகளில், வயல்களில், ஆறு, குளங்களில் என பல வகைகளில் ரகங்களில் உலவும் சர்ப்பங்களுக்கு எல்லை வகுத்துப் பெயரிட்டு, அவற்றை இயற்கையோடும் தெய்வங்களோடும் இணைத்து வழிபடத் தொடங்கினான்.

சர்ப்பங்கள் உலகின் அனைத்து மதங்களின் புராண, இதிகாசங்களிலும் எந்த வித வேறுபாடுமின்றி, தவறாமல் இடம் பிடித்தன.

இந்து மதத்தின் புராணங்களில் தெய்வாம்சம் பொருந்தியவையாக அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன் மற்றும் மஹாபத்மன் ஆகியவை அஷ்ட நாகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதில் வைணவர்கள் அனந்தனை நாராயணனுடனும் , சைவர்களும் வாசுகியை, சிவனுடனும் இணைத்து வழிபடுகின்றனர்.

சர்ப்பக் காவு

நீர்வளமும் நிலவளமும் நிறைந்த கேரளத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது ஸர்ப்ப வழிபாடு.
பசுமைத் தாவரங்கள் அடர்ந்த பகுதியில், குடும்பங்களாக மக்கள் வாழும் இடத்தின் அருகிலேயே சர்ப்பங்களுக்கென இடம் ஒதுக்கி அவற்றை தொந்திரவு செய்யாமல் பாதுகாத்து வருகின்றனர்.

மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்த, குளுமையான, ஆளரவமற்ற வனம் போன்ற இடத்தில் அமைந்திருக்கும் ஸர்ப்ப காவுகள் , அங்கு , மத நம்பிக்கை வழி நடக்கும் தனித்துவமான பூஜைகள், அதோடு தொடர்புடைய நம்பிக்கைகள் முதல் பாம்பு கடித்தால் தரப்படும் சிகிச்சைமுறைகள் என கேரள நாக வழிபாட்டு முறை மிகவும் அலாதியானது.

அதேபோல் இந்த ஸர்ப்பக் காவுகள் குறித்து உலவும் நாட்டுப்புறக் கதைகளும் புனைவுகளும் வெகு சுவாரஸ்யமானவை என்பதோடு, அங்குள்ள மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.

இந்த ஸர்ப்பக் காவுகளை நேரில் பார்ப்பவர்களுக்கு, ஏதோ புவியின் தொடக்க நாள்களுக்கு சென்றுவிட்டதான பிரமை எழுவது நிச்சயம்.

கேரளத்தின் நாக வழிபாடு பரசுராமர் கடலிலிருந்து கேரளத்தை மீட்டதில் இருந்தே தொடங்கி இருக்க வேண்டும். நாகங்கள் அந்தணர்களை உள்ளே விடாது எதிர்க்க, பரசுராமர் நீதி கேட்டு சிவனிடம் சென்றார்.

பரமேஸ்வரன் நாகராஜாவான வாசுகியை வழிபடுமாறு பரசுராமரைப் பணித்தார். வாசுகி, பாம்புகள் அதற்கான புற்றுகளிலும் பொந்துகளிலும் சென்று வாழத்தொடங்கும். அதற்கு பதில் வீடுகளில் அவற்றிற்கென தனியாக இடம் அமைத்து வழிபடவேண்டும் என்ற நிபந்தனை விதித்தது.

இல்லம் அல்லது தரவாடு என அழைக்கப்படும் கேரள வீடுகளில் பசுமையான சூழலில், அமைதி குலையாத இடத்தில் ஸர்ப்பக் காவு அமைத்து வழிபாட்டைத் தொடங்கினர்.

ஸர்ப்பக் காவுகளைத் தவிர, கோவில்களிலும் நாகங்களின் உருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். ஆல மரத்தடியில் அமைந்த நாகர்சிலைகள் எல்லாக் கோவில்களிலும் உண்டு. தினசரி வழிபாடும், ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடும் நடக்கும்.

கேரளத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் ஸர்ப்பக் காவுகளுக்கு மேல் இருக்கிறது. கல்வியும், விஞ்ஞானமும் சமூகத்தில் கொள்கை ரீதியான மாற்றங்களைத் தந்திருந்தாலும், எதிர்காலம், திருமணம், வாரிசு, தோஷம், உடல்நலம் போன்றவை, அவரவர்களுக்கென வருகையில் ஸர்ப்பங்களின் மீதான அச்சமும், நம்பிக்கையும் மாறுவதில்லை.

எனவே, ஸர்ப்ப வழிபாட்டில் களத்ர தோஷம், புத்ர தோஷம், கண் பார்வைக் குறைவு, ஜாதக தோஷம், நாக தோஷம் என பல
பரிகார பூஜைகள் ஆதிகாலம் தொட்டு இன்றளவும் தொடர்கிறது.

கோவில்களில் நாகராஜாவைத் தவிர, நாகயக்ஷி, நாககன்யா, ஸர்ப்பயக்ஷி போன்ற உப நாகதேவதைகளின் விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

கேரள ஸர்ப்பக் காவுகளின் பிரத்யேகமான வழிபாட்டு முறை அநேகமாக ஒன்றுபோல் இருந்தாலும், இடத்துக்கும், இனத்துக்கும், அந்தந்த காவுகளின் பிரதான தெய்வத்துக்கும் ஏற்ப மாறுபடுகிறது.

தனியான தெய்வீகத்தன்மையும் சக்தியும் கொண்ட நாகங்கள், மனிதர்களின் தவறுகள், சுத்தமின்மை, சடங்குகளில் சிறு பிறழ்தலைக் கூட பொறுக்காது என்பது நம்பிக்கை.

புள்ளுவன் பாட்டு

பண்டிகை மற்றும் நாகங்களின் பிறந்த தினமான ஆயில்ய நட்சத்திரத்தன்று புள்ளுவப் பாட்டு பாட புள்ளுவ தம்பதிகளை அழைக்கின்றனர். அவர்கள் கேரள மண்ணையும் இந்தப் பூமியையும் காக்கும் தெய்வமான நாகங்களின் பெருமைகளை புகழ்ந்து பாடுவர்.

நாகவீணா எனும் இசைக்கருவியை இசைத்தபடி இவர்கள் பாடும் பாடல், குழந்தைகளின் திருஷ்டியைப் போக்கும் என்பது நம்பிக்கை.

பாம்பின் துள்ளல்

நாகதேவதைகளை சாந்தப்படுத்த பாம்பின் துள்ளல் எனும் நடனத்தை நிகழ்த்தி வழிபடுகின்றனர்.

ஸர்ப்ப காவுக்கு அருகே, வீட்டின் முன் பகுதியில் பல வண்ணங்களில் கோலமிட்டு, வெண்கல விளக்கேற்றி நிகழ்த்தப்படும் இந்நிகழ்வு நாகராஜா, நாகயக்ஷி, கருநாகம், பற(க்கும்)நாகம், அஞ்சிலமணி நாகம் என்ற ஐந்து வகை ஸர்ப்பங்களைப் போற்றி நிகழ்த்தப்படுகிறது.

கேரள வழிபாட்டு மரபின் பிரதான அம்சங்களில் ஒன்றான ஸர்ப்ப காவும், வழிபாடும் இயற்கைச் சூழலின் உயிர்ச் சங்கிலியின் முக்கியக் கண்ணியான ஸர்ப்பங்களின் மகத்துவத்தை காட்டுகிறது.

ஆதிசேஷனை திருவனந்தாழ்வான் என்று குறிப்பிட்டு

‘சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம்
நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு’

என்கிறார் பொய்கையாழ்வார்.

பிரபஞ்சத்தின் இருப்பும் சுழற்சியும் சீரான ஒரு நியதியில் இயங்கத் தேவையான ஸ்திரத்தன்மையைத் தருவது, இடையறாது அசையும் ஆதிசேஷன் என்பதை விட அதிசயம் வேறென்ன?

ஞானத்தின் இருப்பிடமாகக் கருதப்படும் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதி சேஷன் தேவர்களுக்கும் சப்த ரிஷிகளுக்கும் புராணங்களைக் கூறுகிறார்.

இப்பிரபஞ்சத்தின் சீரான இயக்கத்திற்கான காரணிகள் அனைத்தும் இணைந்த ஒழுங்குடன் செயல்பட உறுதுணையாக இருப்பது அனந்தனைத் தாங்கும் ஆதிசேஷனே.

ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி சயனித்திருக்கும் ஆதிசேஷனின் சுருள் சுருளான உடல் காலத்தின் எல்லையில்லாத் தன்மையையும், அந்த வட்டச் சுழல் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற இயற்கை சுழற்சியையும் குறிக்கிறது.

யோகநித்ரையில் இருக்கும் பெருமாளைத் தாங்கும் அனந்தன், காலமும் இடமும் (space & time) இணைந்து, கட்டமைக்கப்பட்ட நிகழ்வுகளின் உருவகம்.

இது பஞ்ச பூதங்களையும், மூன்று குணங்களையும் தன்னுள் உள்ளடக்கியது, தெய்வீகமானது. அனைத்து படைப்புகளையும் பராமரிக்கும் மற்றும் நிலை நிறுத்துவதற்குமான அடையாளம்.

ஸ்ரீபத்மநாப ஸ்வாமியின் கருவறை இந்தப் பேரண்டத்தைக் குறிக்கிறது, பிரம்மாவின் நாபியில் இருந்து எழும் தாமரை, படைப்பின் ஒருமைப் புள்ளி.

அனந்தன் எல்லையில்லாதவன். சாஸ்வதமானவன். இந்தப் பிரபஞ்சத்தின் முடிவின்மையின் குறியீடு. அனந்தனின் எண்ணற்ற உடல் சுருள்கள் காலத்தின் முடிவற்ற சுழற்சிகளின் அடையாளம்.

அனந்தன் பரவி மிதக்கும் திருப்பாற்கடல்தான் பிரபஞ்சம் உருவாகி, பிரளய காலத்தில் மூழ்கும் மூலப்பொருளாகும்.

பாதாளத்தில் ஸ்ரீமன் நாராயணனின் தாமஸிக் உருவம் உள்ளது. ஆயிரம் தலைகளும் ஸ்வஸ்திக மணியும், சீறும் மூச்சும் கொண்ட, நீரையும் நெருப்பையும் உமிழும் அந்த உருவத்தை வர்ணிக்க யாராலும் இயலாது. அனந்த பத்மநாபனின் ஒரு ரூபமேதான் அனந்தனாகிய ஆதிசேஷனும்.

“ஸஹஸ்ர ஷிர்ஸா புருஷஹா”

என்று பரமபுருஷனான ஸ்ரீமன் நாராயணனை ஆயிரம் தலை உடையவன் என்கிறது புருஷசூக்தத்தின் முதல் வரி.

ஆதிசேஷனான அனந்தனும் அதன் மேல் சயனித்திருக்கும் நாராயணனும் வேறில்லை.

ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமியும் அவரது கருவறை தரிஸனமும் அத்வைதத்தின் சாரமாகவே விளங்குகிறது.

ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி என்ற பெயரே மஹாலக்ஷ்மி, அனந்தன், பெருமாளின் நாபிக் கமலத்தில் வீற்றிருக்கும் பிரம்மன், அனந்த சயனனின் கையின் கீழ் இருக்கும் ஸ்வாமி (சிவலிங்கம்) யின் தோற்றத்தை விவரிக்கிறது.

திருப்பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷனின் மேல் யோகநித்ரையில் சயனித்திருக்கும் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியை மூன்று கதவுகளின் வழியே தரிசிக்கிறோம்.

ஸ்ரீமுகம், திருமேனி, சரணங்கள் எனத் தனித் தனியாகத்தான் தரிஸிக்க இயலுமே தவிர, ஒரே நேரத்தில் அவரை முழுமையாகப் பார்க்க இயலாது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் மூன்று கதவுகளின் வழியே தனித் தனியாகப் பார்ப்பது ஜீவாத்மாவின் நிலை.

குறை ஞானத்துடன் கதவுகளின் வழியே இடைவெளியில் பெருமாளை தரிஸிக்காமல் முழுமையாகக் காண்பது நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு சாத்தியமா?

சாத்தியம்தான் என்கிறது ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத் பாதரின் அத்வைத சித்தாந்தம். அதன்படி, கடவுளும் மற்ற ஜீவராசிகளும் ஒன்றே. இரண்டாக, பலவாகத் தோற்றம் அளிப்பது ஒரு மாயை.
அதில் ஒவ்வொருவருக்கு ஒரு வேஷம், சூழல், குணம்.

இந்த மாயையை உடைத்து முழுதாக அனந்தனைக் காண்பது எங்ஙனம்?

கருவறைக் கதவுகளுக்குப் பின்னே இருக்கும் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி முற்றும் முழுவதுமான நித்ய சத்தியம்.

பரமாத்மாவான ஸ்ரீ பத்மநாப ஸ்வாமிக்கும் ஜீவாத்மாவான நமக்கும் இடையில் இருக்கும் அந்த மூன்று கதவுகளே இந்த உலகம்.

இந்த உலகின் குணங்களான காம, க்ரோத, லோப, மோக, மத, மாச்சர்யங்களை, ஆசைகளை, பந்தத்தை, நான் என்ற மமதையை, அகங்காரத்தைத் துறந்து பார்த்தால், இடையிலிருக்கும் கதவுகளின்றி நம்மால் முழுதாகப் பரம்பொருளைத் தரிஸிக்க இயலும்.

இந்தக் கோவிலையும் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் திருமேனியையும் உருவாக்கியது நாம்தானே, நாமே அந்தக் கருவறைக் கதவுகளை, நமக்கும் ஸ்வாமிக்கும் இடையே உள்ள தடையை நீக்கி விட்டால்?

அந்தக் கதவுகளை கல்லால் ஆன கட்டிடமாகவும் அதன் வழயே தெரியும் பெருமாளை சிலை என்றும் நினைத்தால், செய்து விடலாம். பார்த்தும் விடலாம். வெகு சுலபம்.

பார்த்தலும், பார்த்ததை உணர்தலும் வேறல்லவா?

ஆனால் இடையில் இருக்கும் கதவான ஆசாபாசங்களை, பற்றுதலை, நம்மில் இருக்கு நமது ஆளுமைகள், குணநலன்கள், ‘நான்’ எனும் உணர்வைக் களைந்தால்தான் பரமனை உணர முடியும் என்பதுதான் அந்தக் கதவுகள் உணர்த்தும் தத்துவம்.
 

Author: VedhaVishal
Article Title: அனந்தன் காடு 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom