• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -7

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
309
நான் போடுற கோட்டுக்குள்ளே -7

"எங்க கல்யாணம் முடிஞ்ச உடனே, மதுரைல தனியா ஜாகைக்கு ஏற்பாடு பண்ணிட்டா. அது வரைக்கும் நான் தினசரி மதுரைக்குப் பஸ்ல போயிட்டு வந்துண்டு இருந்தேன். போக வர நாலு மணி நேரம், சில நாள் உட்கார்ந்து போக முடியும், சில நாள் நின்னுண்டே போகணும்.

மதுரைலயே தங்கலாம்னு நினைச்சா, என் கூட வர யாரும் தயாரா இல்லை. எங்க அம்மா கூட பிள்ளை கஷ்டப்படறானேன்னு கவலைப் படலை. ஆத்து சாப்பாடு வேணும்னா அப்படித்தான் கஷ்டப்படணும்னு ஒரே வார்த்தைல முடிச்சிட்டா.

அதே அம்மா, கல்யாணம் முடிவான உடனே மாட்டுப் பொண்ணு கஷ்டப்படுவான்னு ஒரேயடியா பல்டி அடிச்சு தனியா குடித்தனத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டா. எங்க ராஜி சூப்பரா சமைப்பான்னு அவாத்துல ஏகப்பட்ட பாராட்டு. ஆனா உங்க பாட்டி என்ன பண்ணினா தெரியுமா.. எனக்குத் தனியா தளிகைப் பண்ணிப் பழக்கம் இல்லையேன்னு ஒரே அழுகை. ஹூம் இதையெல்லாம் நான் யார் கிட்ட சொல்ல முடியும்? வேற வழியே இல்லாமல் நானும் சேர்ந்து தளிகைப் பண்ண ஆரம்பிச்சேன். அவளை விட நான் நன்னா சமையல் பண்ண கத்துண்டேன்" என்று பேரன் பேத்திகளைப் பார்த்து கண்ணடித்தார். மனைவியின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் தொடரப் போனார் சேஷா.

"ஸ்டாப் இட் ஐ ஸே" என்று
நன்றாகப் போய்க்கொண்டு இருந்த பாடலில் அபஸ்வரம் போலக் குறுக்கிட்ட‌ ஐஸ்வர்யாவை அனைவரும் எரிச்சலுடன் பார்த்தனர்.

"ஐ ஜஸ்ட் வான்ட் எ ரெஸ்பான்ஸ் ஃப்ரம் சம்பத் ஃபார் மை கொஸ்டின். அல்மோஸ்ட் சிக்ஸ் அவர்ஸா வெயிட் பண்றேன். ஐ ஜஸ்ட் ஃபீல் தட் யூ பீப்பிள் ஆர் இக்னோரிங் மீ" என்ற ஐஸ்வர்யாவை என்ன செய்வது என்று எல்லாரும் பார்க்க ராஜஸ்ரீயும் அரவிந்தும் என்ன விஷயம் என்பது போல சம்பத்தைப் பார்த்தனர்.

சம்பத் வாயைத் திறக்கும் முன் ஐஸ்வர்யாவின் தந்தை பேச ஆரம்பித்தார். அரவிந்தின் பேற்றோரும் தேவிகாவின் உடன் பிறந்தாரும் அங்கே இருக்க அவர்கள் யாரும் மகளது பேச்சை விமர்சனம் செய்து விடக் கூடாதே என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அதனால் மகளுக்கு சூசமாகப் புரிய வைக்க முயற்சி செய்தார்.

"ஐஷூ! ஏன் இப்படி இருக்க? நீ வளர்ந்த கல்ச்சர பேஸ் பண்ணி ஒரு கேள்விய கேட்ட. சம்பத் பதில் சொல்லாமல் விட்டதுல இருந்தே அவனுக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு நீ புரிஞ்சிக்கணும். பதில் சொல்லித்தான் ஆகணும்னு கம்பெல் பண்ணக் கூடாது. இத்தனை பெரியவாள வச்சிண்டு நீ கேட்ட அந்தக் கேள்வியே பெரிய அபத்தம். புரிஞ்சு நடந்துக்கோ.."
அவரது குரலில் இருந்த அழுத்தம் ஐஸ்வர்யாவை வாய் மூடி அமரச் செய்தது. எத்தனை நேரத்துக்கோ.??

சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. பரத்தால் வாய் மூடி இருக்க முடியவில்லை. "தாத்தா.. யூ கன்டிநியூ.. தி நேஷன் வான்ட்ஸ் டு நோ யுவர் ஸ்டோரி" என்றான்.

சேஷாவிற்கு முன்பிருந்த உற்சாகம் குறைந்தது போல் இருந்தது. பேச்சைத் தொடர சற்றே தயக்கம் காட்டினார். அதைக் கவனித்த சம்பத், "தாத்தா! டயர்டா இருக்கா? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் வா. ஸ்ரீ! நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு. அரவிந்தைக் கூட்டிண்டு போ. சாயங்காலம் பேசிக்கலாம். எல்லாரும் இங்கே தான் இருக்கப் போறா" என்று எழுப்பினான்.

"பரவாயில்லை ராஜா.. என்னைக்கோ ஒரு நாள் தானே.. பசங்க எல்லாம் ஆசையா இருக்கா பாரு" என்று சேஷா சொல்ல ராஜஸ்ரீயும் காலை நீட்டிக் கொண்டு வசதியாக அமர்ந்து கொண்டாள். தாத்தா தனது பேச்சைத் தொடர்ந்தார்.

"ஆமா.. நான் எங்க விட்டேன்?"

"நீங்களும் தளிகைப் பண்ண கத்துண்டேள்னு சொன்னேளே.. அங்கே விட்டேள்"

"ஹா.. உங்க பாட்டி தளிகைப் பண்ணத் தான் தயங்கி நின்னா. ஆனா, அதைத் வேலையைத் தவிர மத்த வேலை எல்லாம் பிரமாதமா செஞ்சா. தையல், ஆர்ட், கிராஃப்ட் இதிலெல்லாம் எக்ஸ்பர்ட். கூடவே மேல படிக்கணும்னு ஒரே பிடிவாதம். எஸ்எஸ்எல்சி தான் படிச்சிருந்தா. நான் காலேஜூக்கு லெக்சரர் வேலை பார்க்கப் போக, உங்க பாட்டி படிக்க வந்தா. எனக்குப் போட்டியா வந்துடுவாளோன்னு கொஞ்சம் பயமா கூட இருந்தது" தாத்தாவின் குரலில் கிண்டலைத் தவிர வேறெதுவும் இல்லை.

இளையபட்டாளம் "ஓஹோ!!!" என்று குதூகலித்தது. பாட்டியோ அழகாக வெட்கப் பட்டார். தாத்தாவின் பேச்சை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்த பரத் ஒரு முக்கியமான சந்தேகம் கேட்டான்.

"ஏன் தாத்தா, நீங்க எந்த சப்ஜெக்ட் லெக்சரர்?"

தாத்தாவின் பேச்சில் குறுக்கிட்டவனை முறைத்த மற்றவர்கள் ஆளாளுக்கு அவனைக் கேள்வி கேட்டனர்.

"டேய் அதைத் தெரிஞ்சுண்டு நீ என்ன செய்யப் போற?"

"தாத்தாக்கு திரும்பவும் வேலை தரப் போறியா?

"இப்போ இது ரொம்பவே முக்கியமாடா?"

"ஏன் டா ஒரு ஃப்ளோல பேசிண்டு இருக்கறச்சே குறுக்க வர?"

"ஹேய்.. ஸ்டாப்.. ஸ்டாப்.. நான் ஜெனரல் நாலட்ஜ வளர்த்துக்க ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன்.. நீங்க தான் வரிசையா கேட்டு குழப்பறேள்." மற்றவர்கள் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க, இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தை நிறுத்த தாத்தா இடைபுகுந்தார்.

"போதும் டா பசங்களா.. எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம். இப்போ நான் பேசட்டுமா.. கிளம்பட்டுமா.." அடுத்த நிமிடம் அனைவரும் வாயில் விரல் வைத்து அமர்ந்தனர். பரத் அவன் பாணியில் அமைதிக்கான உத்தரவாதம் அளித்தான்.

"அச்சோ நாங்க கப்சிப் ஆகிட்டோம். ஆல் ஆஃப் யூ கீப் கொயட்.. அமைதி அமைதி அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி." சொன்னதோடு நில்லாமல் அவனும் வாயில் விரல் வைத்து தாத்தாவின் அருகில் அமர்ந்தான்.

"நான் மேத்ஸ் லெக்சரர்.. முதல்ல மதுரா காலேஜ்ல வேலை பார்த்தேன். அப்புறம் அண்ணா யூனிவர்சிட்டி ஆரம்பிச்ச போது அங்கே ஜாயின் பண்ணிட்டேன். ரிடையர் ஆற வரைக்கும் அங்கே தான் வேலை பார்த்தேன். மேத்ஸ் டிபார்ட்மெண்ட் HODயா ரிடையர் ஆனேன்."

"என்னாதூஊஊஊ மேத்ஸாஆஆஆ!" என்று அதிர்ச்சி அடைந்த பரத் தாத்தாவிடம் இருந்து நான்கடி தள்ளி அமர்ந்து கொண்டான். அதன் பிறகு அவன் வாயைத் திறக்கவே இல்லை. அவனது வேலையை ஸ்நேகா தொடர்ந்தாள்.

"HODயா? தாத்தா! ஆக்சுவலா உங்க அகாடெமிக் குவாலிஃபிகேஷன் என்ன?"

"பி.எச்டி.,"

"எந்த டாபிக்ல பி.எச்டி பண்ணினேள்?" என்று கேட்ட ஸ்நேகாவை எரித்து விடுவது போல முறைத்தான் பரத். 'இப்போ ரொம்ப முக்கியமா இது.. மேத்ஸூன்னு கேட்டதுலயே அவனவன் ஆடிப் போய் இருக்கான். இதுல பி.எச்டி வேற.. இப்போ எந்த டாபிக்னு தெரிஞ்சு கூடக் கொஞ்சம் பீதியைக் கிளப்பவா?' என்று மனதுக்குள் வறுத்தெடுத்தான். அதற்குத் தகுந்தாற்போல் தாத்தாவின் பதில் இருந்தது.

"Statistics ல…" என்று தாத்தா ஆரம்பிக்க…கையெடுத்துக் கும்பிட்டான் பரத்.

"தெய்வமே! போறும் தெய்வமே! இதுவரை சொன்னதே போறும். டீடெயில்ஸ் எல்லாம் வேண்டாம்"

"ஹா.. ஹா.. ஹா.. உனக்கேன் டா இவ்வளவு ஷாக்கு? நீ ஒழுங்கா தானே படிக்கற.. இல்லேன்னா சொல்லு நான் சொல்லித் தரேன்.."

"வேண்டவே வேண்டாம்.. நானே படிச்சுப்பேன்.. அப்படியே பாட்டி என்ன படிச்சான்னும் சேர்த்து சொல்லிட்டேள்னா இன்னைக்கே மொத்தமா ஷாக் ஆகிப்பேன். இன்னொரு நாளெல்லாம் இந்த உடம்பு தாங்காது."

"அது சரி.. உங்க பாட்டி பி.எஸ்ஸி. பி.எட். படிச்சிட்டு ஸ்கூல்ல வேலை பார்த்தா. எம்.எஸ்ஸி. படிக்கணும்னு அவளுக்கு ஆசை தான். குழந்தைகள வச்சிண்டு தொடர்ந்து படிக்க முடியல."

"பி.எஸ்ஸில என்ன மேஜரோ?" என்று அடுத்த கேள்வி கேட்கும் போதே உள்ளூர நடுங்கியது அவனுக்கு.

"உங்க பாட்டி பி.எஸ்ஸி. பிசிக்ஸ். கோல்ட் மெடலிஸ்ட் தெரியுமா?"

பரத் இப்போது நெஞ்சில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். "ஓ… அதான் உங்க வாரிசுகள் எல்லாருமா கன்னாபின்னான்னு படிச்சிருக்காளா? இட்ஸ் ஆல் இன் தி ஜீன்ஸ்!" என்று பெருமூச்சு விட்டான். ஆம், சேஷா ராஜி தம்பதிகளின் வாரிசுகள் அனைவரும் குறைந்த பட்சம் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். அவரவர் துறையில் நல்ல பெயர் பெற்றவர்கள்.

"பெருமாளே! இதெல்லாம் உனக்கே நியாயமா? என்னை ஏன் இப்படி ஒரு படிப்ஸ் குடும்பத்துக்குள்ள படைச்ச?' மேலே பார்த்துக் கேள்வி கேட்டவனோடு ஸ்நேகாவும் இணைந்து கொண்டாள். "வை ப்ளட்.. ஸேம் ப்ளட்" என்று இருவரும் சோகமாக ஹை ஃபை கொடுத்துக் கொண்டனர்.

"ஆனால் எனக்கு மட்டும் வெத்தலை பாக்கு வச்சு அழைச்சாலும் படிப்பு
வரமாட்டேங்கறதே. என்ன காரணமா இருக்கும்?" என்று அடுத்து அவன் தாயைக் குறிப்பாகப் பார்த்தபடி சத்தமாக யோசிக்க அவள் வந்து மகனின் முதுகில் ஒன்று போட்டாள்.

"உடம்பு பூராவும் கொழுப்பு.. அதான் படிப்பு வருவேனாங்கறது" என்று ரகுவும் மனைவிக்கு ஒத்து ஊதினார். நகரத்தின் முதன்மையான ஆடிட்டர்களில் ரகுராமனும் அவன் மனைவியும் அடக்கம். அப்படிப் பட்டவர்களின் ஜீன்ஸை இவன் கேலி செய்தால் என்ன செய்வார்கள்.

இப்படியாக எல்லாரும் அவரவருக்குத் தெரிந்த வகையில் ஒருவரையொருவர் கேலி செய்து கொண்டிருக்க, அவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜூனியர் ராஜிக்கு என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.

மெல்ல அவளை நோக்கிப் போனவள், "என்ன ஆச்சு ஐஷூ? ஏன் எதுலயும் கலந்துக்காம ஓரமா ஒதுங்கி இருக்க?" என்று கேட்டாள்.

"..." அவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள் ஐஸ்வர்யா. ராஜஸ்ரீக்கு இது ஒரு புது அனுபவம். குடும்பத்தின் அடுத்த தலைமுறையில் மூத்தவளான அவளை இதுவரை யாரும் இப்படி உதாசீனப் படுத்தியதில்லை. மனம் வேதனைப் பட்டாலும் அவளால் அப்படியே விட்டுவிட முடியவில்லை.

ஐஸ்வர்யா தனது தம்பியைப் பற்றி பேசியதால் தனக்கு அதைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்று திடமாக நம்பியவள் மீண்டும் ஒரு கேள்வி கேட்டாள்.

"இட்ஸ் ஓகே ஐஷூ. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். யூ ஆர் ஹர்ட். நான் ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு பார்க்கறேன். நீ சம்பூ கிட்ட என்ன கேள்வி கேட்ட? எங்கேயாவது அழைச்சிண்டு போகணுமா? ஏதாவது வாங்கணுமா?"

வெளியூரில் இருந்து வந்த அத்தை மகள் மாமன் மகனிடம் என்ன கேட்டிருப்பாள் என்று யோசித்துப் பல கேள்விகளைக் கேட்டாள்.

அந்த அத்தை மகளோ "ஹ.. ஹௌ ஸில்லி யுவர் கொஸ்டியன்ஸ் ஆர்?" என்ற பாவனையோடு மாமன் மகளைப் பார்த்தாள்.

"சொன்னா தானே தெரியும் ஐஷூ!" அவளும் விடுவதாக இல்லை. ஐஸ்வர்யாவின் முகபாவனைகளில் இருந்த அலட்சியத்தை உணர்ந்த அரவிந்த் மனைவியை அங்கே இருந்து அப்புறப்படுத்த நினைத்தான். அவனைப் பொறுத்தவரை சம்பத் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்க்கிறான் என்றால் அந்தக் கேள்வி எப்படிப்பட்ட கேள்வியோ என்று சந்தேகமாக இருந்தது. மேலும், ஐஸ்வர்யாவைப் பெற்றவரே சம்பத்தின் நடவடிக்கையை வரவேற்கிறார் எனும் போது அடுத்தவர் தலையிடுவது நல்லதல்ல என்று நினைத்தான்.

ஆனால் அவன் மனைவியோ இந்த விஷயத்தில் பிடிவாதத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்க எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக அமர்ந்து கொண்டான், கண்களும் காதுகளும் மனைவியிடம் இருந்தது.

ராஜஸ்ரீ பேசிக்கொண்டிருந்த வேளையில் சம்பத்தின் அலைபேசி அழைப்பு விடுத்தது. தமக்கையின் மேல் கவனம் வைத்திருந்தவன் அலுவலக எண் என்பதால் அழைப்பை ஏற்றவாறு, "சம்பத் ஹியர்!" என்றவாறு வெளியே போனான்.

அதைக் கண்டவுடன், கொஞ்சம் கொஞ்சமாகப் பறந்து கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் பொறுமை, மொத்தமாகக் காணாமல் போனது.
ராஜஸ்ரீயின் பேச்சு வேலை செய்யும் என்று எல்லாரும் எதிர்பார்க்க ஐஸ்வர்யாவோ பொங்கி விட்டாள்.

"என்ன, இப்போ உனக்கு என்ன தெரியணும். நான் சம்பத் கிட்ட என்ன கேள்வி கேட்டேன்னு தெரியணும் அதானே.. நல்லா ஸ்மார்ட்டா இருக்கான். எனக்கு ரொம்ப பிடிச்சது. அதான் i just asked him for a date. போதுமா.. கார்த்தால கேட்ட கேள்விக்கு இன்னும் உன் தம்பி கிட்ட இருந்து பதில் வரலை. வாட் ஷூட் ஐ டு நவ்?"

"அட.. லண்டன் வளர்ப்பு!" என்று அரவிந்த் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க ராஜஸ்ரீயோ அதிர்ச்சி அடைந்தாள்.

"போதும். எல்லாருமா சேர்ந்து என்னை ஏதோ பேசத் தெரியாத குழந்தை மாதிரி ட்ரீட் பண்றேள். இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன்னு இவ்வளவு ஷாக் ரியாக்ஷன் கொடுக்கறே நீ. ஆக்சுவலா, ஒரு டீசன்டான புரோபோஸலுக்குப் பதில் சொல்லத் தெரியாத உன் தம்பியைத் தான் நீ கேட்கணும். நன்னா படிச்சு பெரிய வேலைல இருக்கான், உலகம் பூராவும் சுத்தறான். ஆனால் ஒரு பொண்ணை ஃபேஸ் பண்ணத் தெரியலை. அவளுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கத் தெரியலை.

அவன் தான் அப்படீன்னா, இந்த ஆத்துல எல்லாரும் ஏதோ நான் கேட்கக் கூடாததைக் கேட்ட மாதிரி பாக்கறா. ஐ ஜஸ்ட் ஹேட் இட். இதுக்கு மேல நான் இங்கே இருந்தால் மூச்சு முட்டும். எனக்கும் செல்ஃப் ரெஸ்பெக்ட்னு ஒன்னு இருக்கு. நானா பிடிச்சிருக்குன்னு சொன்னா இப்படி அவாய்ட் பண்ணுவானா.. ஐஸ்வர்யா ஒன்னும் அவ்வளவு சீப் இல்லை. மாம்! என்னோட ரூம் கீ உன் கிட்ட தானே இருக்கு? அதைக் கொண்டு, நான் கிளம்பறேன். குட் பை எவ்ரிபடி"

சுற்றி இருந்த அனைவரும் ஒன்றும் சொல்லாமல் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருக்க, கோமளாவுக்கோ மகளின் பேச்சு நியாயமாகவே பட்டது. அவளது சுயமரியாதை பாதிக்கப்பட்டதாகவே தோன்றியது.

"என் பொண்ணு கேட்டதுல என்ன தப்பு? மாமா பிள்ளை, கல்யாணம் பண்ணிக்கற முறை உள்ளவன். அவன் கிட்ட தானே கேட்டா? ஏதோ அவளுக்கத் தெரிஞ்சா மாதிரி கேட்டுட்டா. அதைப் புரிஞ்சுண்டு சம்பூ ஒரு பதிலைச் சொல்லி இருக்கலாமே. இப்போ என் பொண்ணு வேதனையோட போறா."

பெற்ற மனம் மகளின் நிறையை மட்டுமே பார்த்தது. கோமளாவின் கணவரும் அமைதியாக இருந்தார், அவருக்குமே சம்பத் மூலமாக மகளுக்கு ஏதாவது நல்லது நடந்து விடாதா என்ற நப்பாசை இருந்தது போலும்.

பதில் சொல்ல‌ வேண்டிய சம்பத் வாசலில் இருந்தான். கோபத்தில் வெளியேறிய ஐஸ்வர்யாவோ அவனைத் தாண்டிச் சென்றாள். அவனிடம் சைகையால் கூட போய் வருகிறேன் என்று சொல்லவில்லை. மொபைல் ஃபோனில் பேசி முடித்தவன் உள்ளே வந்த போது, கோமளவல்லி நேராக அவனிடம் வந்தாள்.

சம்பத்தின் கண்களுக்குப் பாண்டியனிடம் நியாயம் கேட்க வந்த கண்ணகி போலத் தோன்றினாள். கையில் சிலம்பு மட்டும் தான் இல்லை.
"சம்பூ! நீ ஏன் இப்படி இருக்க? என் பொண்ணு எத்தனை வருத்தப் பட்டுப் போறா தெரியுமா? உன் அத்தை பொண்ணு தானே.. அந்த நினைப்பு இருந்திருந்தால் அவளுக்கு உன் மனசுல உள்ளதைப் பேசிப் புரிய வச்சிருக்கலாம் தானே. அவ கொஞ்சம் மாடர்ன் தான். அப்படியே வளர்ந்தும் டா.. அதுக்காக அவளை இப்படி நீ உதாசீனப்படுத்தி இருக்கவேண்டாம்."

"அத்தை! நான்…"

"நீ என்ன சமாதானம் சொன்னாலும் என் மனசு ஏத்துக்காது. என் பொண்ணு வாழ்க்கையை நான் பாத்துக்கறேன். ஆளாளுக்குப் பேச வேண்டாம்."

அனைவரையும் தீர்க்கமாகப் பார்த்தவள், "நீங்க வாங்கோ. நாமளும் கிளம்பலாம்" என்று கணவரை அழைத்தாள்.

அனைவரும் சிலையாக நிற்க, ராஜிப் பாட்டி தான் முதலில் சுயநினைவுக்கு வந்தார். "கோமளா! நீ பண்றது கொஞ்சம் கூட நன்னா இல்லை. நல்ல நாளும் அதுவுமா உன் பொண்ணு தான் பாதில கிளம்பிட்டா. இப்போ நீயும் இப்படிக் கிளம்பினா என்ன அர்த்தம்? மாப்பிள்ளை! நீங்களாவது சொல்லுங்கோ! ராத்திரி டிபன் சாப்பிட்டு தாம்பூலம் வாங்கிண்டு போகலாம்."

தாயின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்தாலும் கோமளாவால் அங்கே இருக்க முடியவில்லை. இந்த வீட்டில் இன்னைக்கு ஹாட் டாபிக் அவளது பெண் தான் என்பது நன்றாகத் தெரியும். அந்தப் பேச்சு வார்த்தைகளைக் கேட்க அவள் தயாராக இல்லை.

குறிப்பாக, அவளுக்கும் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரிடம் இருந்து பெண்ணை வளர்த்தது பற்றிய அறிவுரைகளும் ஆலோசனைகளும் பறந்து வரும் என்றும் தெரியும். ஆழம் தெரிந்தும் யாராவது கால் விடுவார்களா? இந்த விஷயத்தில் மிகவும் உஷாராகவே இருந்தாள்.

அவளது கணவரும் கிட்டத்தட்ட மனைவியை ஒத்த நிலையில் தான் இருந்தார். அந்தக் குடும்பத்தின் மூத்த மாப்பிள்ளை அவர், அதே நேரத்தில் ஐஸ்வர்யாவின் தந்தை. திருமணம் முடிந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தவமாய் தவமிருந்து பெற்ற மகள். அதனால் தான் அவளுக்கு அத்தனை செல்லம். என்ன செய்வது என்று யோசித்தவர் சட்டென்று ஒரு முடிவெடுத்தார்.

"மாமி! நீங்க ஒன்னும் வருத்தப் படாதீங்கோ. இப்போ நாங்க இருந்தால் பேச்சு வளர்ந்துண்டே தான் போகும். நாங்க ரெண்டு நாள் கழிச்சு வரோம். தேவிகா! தாம்பூலம் கொடும்மா. நாங்க கிளம்பறோம்" என்றவர் சம்பத்திடமும் பேசத் தவறவில்லை.

"சம்பத்! ஐயாம் ஸாரி. என் பொண்ணால உனக்கு ஒரு எம்பராஸிங் சிச்சுவேஷன் வந்துடுத்து. இதைக் கொஞ்சம் நிதானமா ஹேண்டில் பண்ணி இருக்கலாம். அவ அவசரப் பட்டுட்டா. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு நாம பேசுவோம். வரேன்."

அவர்கள் இருவரும் கிளம்ப, அங்கே அப்படி ஒரு அமைதி நிலவியது. தாங்கள் மேலும் இருந்து குடும்பத்தின் உறுப்பினர்களை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் அரவிந்தின் பேற்றோரும் தேவிகாவின் உடன் பிறந்தாரும் கிளம்பி விட்டனர். தேவிகாவின் வழியில் முறைப் பெண் யாரும் இல்லை. இருந்திருந்தால் அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்குமோ?

நினைக்கும் போதே, 'நல்ல வேளை தப்பிச்சேன்' என்றது சம்பத்தின் மைன்ட் வாய்ஸ்.

"ஹப்பா! புயலடிச்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு!" என்று தனது திருவாயைத் திறந்து வாங்கிக் கட்டிக் கொண்டான் பரத்.

"பரத்! சின்னவனா லட்சணமா வாயை மூடிண்டு இரு!" என்று அவனது தந்தையிடம் இருந்து அறிவுரையும் தாயிடம் இருந்து முதுகில் ஒரு பலமான அடியும் கிடைத்தது. தனது தவறை உணர்ந்து கொண்டவன் ஸ்ரேயாஸைத் தூக்கிக் கொண்டு, "வா டா ஸ்ரேயூ! நாம அவெஞ்சர்ஸ் பார்க்கலாம்" என்று மாடிக்குச் சென்று விட்டான்.

அடுத்தது ஸ்நேகா. ஏதோ சொல்ல வந்தவள் தாயின் சைகையால் தப்பித்து வாயை மூடிக் கொண்டாள். "நானும் வரேன் டா பரத்!" என்று சிறியவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

எஞ்சியிருந்த பெரியவர்கள் பெருமூச்சு விட்டார்கள். ஆளாளுக்கு நடந்ததை விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள்.

"இந்த கோமளா பொண்ணை வளர்க்கத் தெரியாமல் வளர்த்துட்டு மத்தவாளைக் குத்தம் சொல்லிண்டு அலையறா" இது கனகவல்லி.

"இந்தத் காலத்தில இதெல்லாம் சகஜம் தான். என்ன ஐஷூ சம்பத் கிட்ட தனியா பேசி இருக்கணும். சபைல வச்சுக் கேட்டது தான் தப்பு" இது ரகுராமன்.

"சம்பத்தும் ஏதாவது பதிலைச் சொல்லி இருக்கலாம். அவன் அமைதியா இருந்ததும் தப்பு தான்." இது சுந்தர்ராஜன்.

முரளிதரனும் தேவிகாவும் அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தனர்.

"சந்தோஷமா ஆரம்பிச்ச நாள். இப்படியா‌ முடியணும்? ஏதோ கண் திருஷ்டி பட்ட மாதிரி ஆகிடுத்து. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு எல்லாத்திலயும் அவசரம். எடுத்தோம் கவித்தோம்னு செஞ்சுட்டு பின்னாடி வருத்தப்பட வேண்டியதா இருக்கு" என்று ஆதங்கத்தைப் பதிவு செய்தார் சேஷா. அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தனது வாரிசுகள் இப்படி எல்லாம் பேசுவார்கள் என்றே அவருக்கு அன்று தான் தெரிந்தது.

"சரி.. சரி.. இந்தப் பேச்சை இத்தோட விடுங்கோ. கொஞ்சம் எல்லாருமா ரெஸ்ட் எடுக்கலாம். விளக்கேத்தற தருவாய்ல எழுந்துக்கலாம். ஏன்னா! நீங்க அப்படியே அந்த ஈஸி சேர்ல சாஞ்சுக்கோங்கோ. ராஜிமா! வா! நீயும் செத்த படுத்துக்கோ. கால் வீங்கி இருக்கு பாரு. பாட்டி ரூம்ல இரு. நான் வெந்நீர் கொண்டு வரேன் " என்று மூத்த மனுஷியாக ஆணையிட்டு பேத்தியைக் கையோடு அழைத்துக் கொண்டு போனார்.

பாட்டியுடன் சென்ற ஜூனியர் ராஜியின் கண்கள் கணவனுக்கு ஏதோ சேதி சொன்னது. புரிந்து கொண்டாற் போல அவனும் தலையாட்டினான்.

சற்று நேரத்தில் அனைவரும் செட்டிலாக, சம்பத்தும் அரவிந்தும் மட்டுமே ஹாலில் இருந்தனர். அதுவரை கண்மூடி அமர்ந்திருந்த சம்பத், திடீரென நிலவிய நிசப்தத்தில் சட்டென விழித்தான்.

"என்ன ஆச்சு அத்திம்பேர்? எல்லாரும் எங்க போனா?"

"பாட்டியோட ஆர்டர். அவா அவா ரூம்ல போய் என்ன வேணாலும் பேசுங்கோன்னு சொல்லிட்டா. அதான் இந்த அவசர டிஸ்பர்சல்."

"ஓ.. அக்கா எங்கே? நீங்க உங்க ரூமுக்கு போகலையா?"

"எனக்கும் ஒரு ஆர்டர் இருக்கு.. அதான்.. நான் இங்கே.."

"ஆர்டரா.. யார் போட்டா?"

"வேற யாரு.. என் பொண்டாட்டி தான். யூ நோ ஒன் திங். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். அது தான் நமக்கு எப்பவுமே நல்லது" என்று கண் சிமிட்டினான்.

"அது சரி.." என்று சிரித்தான் சம்பத்.

"என்ன நீ.. அப்படியே ஸ்டாப் பண்ணிட்ட? அடுத்து அப்படி என்ன ஆர்டர்னு கேட்கணும். அப்போ தான் என் வேலை ஈஸியா முடியும்"

"...."

"ஓகே.. நீ வாய் திறந்து கேட்கலேன்னாலும் உன் கண்ணு கேட்கறது. ஸோ.. எனக்கு வந்த ஆர்டர் என்னன்னா… சம்பத் மனசுல யாரு சே… என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்னு தான்."

"ஹா..ஹா.. ஹா.. அத்திம்பேர்! இதுக்கு பேர் தான் கிவ் அண்ட் டேக் பாலிசியா? பட் இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலையே"

"மேக் இட் க்ளியர் மேன்.."

"அதாவது சம்பத் மனசுல இப்போதைக்கு எதுவும்..நோ..நோ.. யாரும் இல்லை .. இஸ் தட் க்ளியர்?"

"ம்ம்.. ஆனா இது நம்பற மாதிரி இல்லையே!"

"ஏன்.. இல்லை.. என்று கேட்கறேன்.. என் மனசுல யாராவது இருக்கணும்னு சட்டம் போட்டிருக்காளா என்ன?"

"வார்த்தை தான் ஸ்ட்ராங்கா வரது. உன் ஃபேஸ் ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கே."

காலையில் பார்த்த சம்பத்திற்கும் சற்று முன் மொபைலில் பேசிவிட்டு வந்த சம்பத்திற்கும் ஆறு அல்ல அறுபது வித்தியாசங்கள் இருந்தது என்று அரவிந்த் உறுதியாக நம்பினான். ஐஸ்வர்யா வெளியே சென்றதைக் கண்டாலும் அவனது கவனம் மொபைலில் தான் இருந்தது. பேசும் போதும் சரி.. பேசி முடித்து வீட்டுக்குள் நுழைந்த போதும் சரி.. அவனது முகத்தில் ஒரு புன்னகை இருந்தது.

அதன் பின்னர் நடந்த விஷயங்களில் அவன் முகம் பல்வேறு பாவனைகளைக் காட்டினாலும் உதட்டில் இருந்த புன்னகை மறையவில்லை. அதனால் தான் அரவிந்த், ஐஸ்வர்யா விஷயத்தை டீலில் விட்டு பொதுவாகப் பேசினான்.

"அதெல்லாம் எதுவும் இல்லை அத்திம்பேர். அப்படி இருந்தால் கண்டிப்பா உங்க கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்"

"சரி..சரி.. ஏதோ சொல்ற.. பொழச்சுப் போ" என்றவன் இன்னும் ஒரு கேள்வி கேட்டான். "ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு ஒரு பதிலைச் சொல்லி இருக்கலாமே சம்பத். அட்லீஸ்ட் நீ என்ன நினைக்கறேன்னு அவளுக்கும் தெரிஞ்சுக்க ஒரு சான்ஸ் இருந்திருக்குமே. இப்போ பாரு எல்லாருக்கும் சங்கடம்"

"ஹூம்.. சொல்லி இருக்கலாம் அத்திம்பேர். அந்தக் கேள்வி ஒன்னும் எனக்குப் புதுசில்லை. என்னைச் சுத்தி இருக்கிற நிறைய பேர் கேட்டது தான். அதையெல்லாம் டீசன்டா கடந்து வந்திருக்கேன். ஆனால் ஐஷூ, பாட்டி தாத்தா அம்மா அப்பான்னு பெரியவா முன்னாடி கேட்டதுல கொஞ்சம் திணறிட்டேன். இல்லேன்னா அங்கேயே பதில் சொல்லி இருப்பேன். அவளைத் தனியா கூப்பிட்டு பேசி இருக்கலாம். பட் எனக்குத் தோணலை. இப்படி எல்லாம் ஆகும்னு நான் நினைக்கலை" என்று முடித்து விட்டான்.

"இட்ஸ் ஓகே. விடு.. ஆஃபீஸ் கால் வந்ததே.. யாரு பேசினா.. என்ன பேசினா.." சம்பத்தின் புன்னகையின் பின்னணியை அறிந்து கொள்ளாமல் அரவிந்த் விடுவதாக இல்லை.

"இதென்ன கேள்வி அத்திம்பேர்.. ஆஃபீஸ் கால்னு சொன்னேனே. HR ஹெட் பேசினார். லண்டன் ட்ரிப் முடிஞ்சு வந்தாச்சே.. எப்போ ஆஃபீஸூக்கு வருவேன்னு கேட்டார்" சொல்லும் போதே அவனது முகத்தில் ஒரு புன்னகை வந்தது.

"ஏற்கனவே ஸ்கெட்யூல் இருக்குமே.. அப்படியே இல்லேன்னாலும் அதை ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தான் கேட்பாரோ.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. நானெல்லாம் கவர்மென்ட் சர்வன்ட்டு. எனக்கெங்கே இந்த கார்ப்பரேட் கல்ச்சர் தெரியறது?"

"அத்திம்பேர்… நீங்க எதையோ நான் சொல்லணும்னு எதிர்பாக்கறேள்.. அந்த மாதிரி எதுவும் இல்லை. இந்த வருஷம் ஐஐடி கேம்பஸ் செலக்சன் நான் தான் பண்ணினேன். நாலு பேர் இந்த வீக் ஜாயின் பண்றா. அதுக்குள்ள நான் வந்துடுவேனான்னு கேட்டார். தட்ஸ் இட்."

"ம்ம்.. அப்போ விஷயம் அந்த நாலு பேர்ல ஒரு ஆள் கிட்ட தான் இருக்கு.." என்று அரவிந்த் சத்தமாக யோசிக்க ஆரம்பித்தான்.

"என்னது அரவிந்த்? சம்பூ! யாருடா அந்த நாலு பேர்
..?" என்று ராஜஸ்ரீ வர கணவன் மனைவி இருவரையும் ஒருசேர சமாளிப்பது கஷ்டம்.

"அப்பா சாமிகளா.. ஆளை விடுங்கோ.." என்று ஓடிய சம்பத்..

அந்த நாலு பேர்ல ஒரு ஆளை நினைத்துக் கொண்டே அன்றைய தூக்கத்தைத் தொலைத்தான்.
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom