• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -19

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
323
நான் போடுற கோட்டுக்குள்ளே -19

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சம்பத் எங்கோ தொடர்ந்து ஒலித்த வித்தியாசமான ஓசையில் கண் விழிக்க முயற்சி செய்தான். கிட்டத்தட்ட பத்து நாட்கள் சொந்த விருப்பங்களை ஒதுக்கி வைத்து வேலை வேலை என்று அலுவலகத்திற்காக ராப்பகலாக உழைத்த கணவன் மனைவி இருவரும், உறக்கம் தானாக அவர்களைத் தழுவும் வரை தங்களது பிரத்யேக உலகத்தில் பிரவேசித்து இருந்தார்கள்.

(இவங்களுக்கு.. அதுவும் இன்னைக்கு… இந்த சீன் ரொம்பபபப முக்கியம்னு எல்லாரும் கேட்கலாம்… ஆனால் அவங்க அவ்வளவு ஆதர்ச(!?) தம்பதிகள்னு காட்ட எனக்கு வேற வழி தெரியலையே!!)
முகத்தில் உறைந்த புன்னகையுடன் கணமும் உன்னைப் பிரியேன் என்பது போன்ற ஒரு நிலை. ஆனால் அதற்கும் ஒரு தடை, விடாது ஒலித்த ஏதோ ஒரு ஒலி வடிவில். கஷ்டப்பட்டு கண் விழித்த சம்பத் அந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்று அறிய முற்பட்டான். யாருடைய மொபைல் அழைப்பு இது என்று யோசிக்கும் போது கூட அப்படி ஒரு பொருளை அவன் மறந்து ஐந்தாறு மணி நேரம் ஆகிறது என்று அவனுக்குத் தோன்றவே இல்லை.

ஒரு வழியாக அது மொபைல் அழைப்பல்ல, வீட்டின் அழைப்பு மணி ஓசை என்று உணர்ந்து கொண்டவன், ரொம்ப நேரம் தூங்கி விட்டோம் போல என்று பதறி, தூக்கத்தை உதறிச் சட்டென்று எழுந்தான். அந்த நேரத்திலும் தன்னை அணைத்திருந்த மனைவியை முத்தமிட்டவன் அவளது தூக்கம் கெடாதவாறு நிதானமாகவே அவளை விட்டு விலகி எழுந்து சென்றான்.

படுக்கை அறைக் கதவை மூடிவிட்டு வெளியே வந்தபோது தான் இன்னும் இரவின் மிச்சம் இருக்கின்றது என்பதையே உணர்ந்து கொண்டான். இப்போது அழைப்பு மணி ஓசை நின்றிருக்க, ஒரு வேளை ஏதேனும் கனவோ என்று எண்ணியவாறு லைட் சுவிட்சைத் தட்டினான். கண்கள் தன்னிச்சையாக மேலே பார்க்க கடிகார முள் அதிகாலை நாலை நெருங்கிக் கொண்டிருந்தது. வெளியே நின்றிருந்தவர் வீட்டினுள் நடமாட்டத்தை உணர்ந்து கொண்டார் போல அழைப்பு மணி மீண்டும் ஒலித்தது.

இப்போது ஒரு பதட்டம் வந்து சேர்ந்து கொள்ள, இந்த நேரத்தில் யார் இப்படி இடைவிடாது தொந்தரவு செய்வது? யாருக்கு என்ன அவசரம்? என்று வேகமாக வந்து கதவைத் திறந்த சம்பத், நிச்சயமாக அங்கே அரவிந்தை எதிர்பார்க்கவில்லை. அதுவும் வழக்கமான அவனது புன்னகை இல்லாமல் ஒரு இறுக்கமான முகத்துடன் இருந்தவனைப் பார்த்த போது சம்பத்தின் பதட்டம் மேலும் அதிகமானது.

இந்த நேரத்தில் குடும்பத்துடன் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டியவன், அடுத்த பதினைந்து நாட்களுக்கு பாலி தீவுகளில் விடுமுறையைக் கொண்டாட இருந்தவன், இங்கே நிற்பதென்றால் விஷயம் பெரியது என்று அவசரமாகச் சாவியைத் தேடி எடுத்தான்.

"வாங்கோ அத்திம்பேர்! என்ன இந்த நேரத்தில? உங்க ட்ரிப் என்னாச்சு? எனி ப்ராப்ளம்?" என்று படபடத்துக் கொண்டே கதவைத் திறந்தவனை தீர்க்கமாகப் பார்த்தான் அரவிந்த்.

வேகமாக உள்ளே வந்தவன், "நம்ம ஆத்துல பெரியவாளுக்கு ஒரு எமர்ஜென்சி அரவிந்த். இப்போ பேசிண்டு இருக்க நேரமில்லை. கொஞ்சம் க்விக்கா கிளம்பி வா, ப்ளீஸ். மேக் இட் ஃபாஸ்ட்.." என்று அவசரப் படுத்தினான். சம்பத் இடையிடையே பேச மேற்கொண்ட முயற்சிகளுக்கு அரவிந்த் இடம் கொடுக்கவே இல்லை.

எமர்ஜென்சி என்ற வார்த்தையில் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்ற சம்பத், அரவிந்த் பெரியவா என்றதில் எதையோ புரிந்து கொண்டான்.
"ஓ மை காட்! தாத்தாவா?? என்னாச்சு? என்னை ஏன் கூப்பிடலை…." என்று கேட்க ஆரம்பித்த போது தான் இரவு நடந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது.

திருமணம் முடிந்த நாள் முதல் தினமும் காலையும் இரவும் பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் அழைத்து விடுவான். அதிக வேலை இருக்கும் நாட்களில், நாள் முழுவதும் மீட்டிங் இருக்கும் நாட்களில் எல்லாம் கூட அவர்களை அழைத்து, நலம் விசாரித்து விட்டுத் தன் வேலைச் சுமையைச் சொல்லிவிடுவான். அப்போது கூட அவனது பெர்சனல் மொபைல் வைப்ரேட்டர் மோடில் தான் இருக்கும். படுக்கையறையில் கூட அவனது பெர்சனல் மொபைல் அவனருகில் தான் இருக்கும்.

ஆனால் நேற்று இரவு மொத்தமாக சுபிக்ஷாவின் கணவனாக மாறிப் போனவன், அலுவலக மொபைலோடு சேர்த்து தனது பிரத்யேக மொபைலையும் சைலன்ட் மோடில் போட்டு இரண்டையும் ஹாலிலேயே வைத்துவிட்டான்.

அதிர்ந்து போய் சுற்றுமுற்றும் பார்த்தவனது கண்களுக்கு அவனது லேப்டாப்பின் அருகில் சமர்த்தாக அமர்ந்திருந்த மொபைல் ஃபோன்கள் தென்பட்டது. தேவிகா மற்றும் முரளிதரன் இருவரிடமும் இருந்து எண்ணிலடங்கா மிஸ்ட் கால்கள். அதுவும் முதல் அழைப்பு இரவு பதினோரு மணிக்கு ஆரம்பித்து இருந்தது. அவனது அலுவலக மொபைல், சுபிக்ஷாவின் மொபைல் என்று எல்லாவற்றிலும் ஏகப்பட்ட அழைப்புகள்.

அந்த நேரத்தில் சம்பத் எப்படி உணர்ந்தான் என்பதை அவனே அறிவான். இத்தனை முறை மகனை அழைத்து பலனில்லாமல் போனதில் வேறு வழியின்றி அரவிந்தை அழைத்திருக்க வேண்டும் என்று புரிந்தது. அப்போதும் அவன் தாத்தாவுக்குத் தான் ஏதோ பெரிய பிரச்சனை என்று நினைத்தானே தவிர வேறு யாரையும் பற்றி நினைக்கத் தோன்றவில்லை.

கண்களில் நீருடன் மொபைலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சம்பத்தை சமாதானம் செய்ய எந்த முயற்சியும் எடுக்காத அரவிந்த், "சம்பத்! எமர்ஜென்சின்னு சொன்னா புரிஞ்சுக்கோ! சீக்கிரம் கிளம்பு" என்று வார்த்தைகளில் அவசரம் காட்டினான்.

"டூ மினிட்ஸ் அத்திம்பேர்!" என்றவன் அவசரமாக ஷவரில் நின்று கிடைத்த உடையை எடுத்து உடுத்திக் கொண்டு கிளம்பி நின்றான். அவனுக்கு இருந்த படபடப்பில் உறங்கும் சுபிக்ஷாவையோ அவளுக்கும் விஷயம் சொல்ல வேண்டும் என்பதோ ஞாபகத்தில் இல்லவே இல்லை. அரவிந்த் தான் அதையும் சொல்ல வேண்டியதாயிற்று.

"ம்ச்.. என்ன பண்ணின்டு இருக்க சம்பத்? சுபிக்ஷா நம்ம கூட வரலேன்னா பரவாயில்லை, பட் அவ கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு வா" என்றான் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து.

ஆனால் அதற்கும் முன்பே சம்பத் எழுப்பிய சத்தங்கள் சுபிக்ஷாவின் தூக்கத்திற்கு இடையூறாக இருந்தது போலும். அருகில் அவன் இல்லை என்று உணர்ந்து கொண்டவளுக்கு ஹாலில் நடந்த பேச்சு தெரியவில்லை.

"ஸாம்! வேர் ஆர் யூ? உங்கம்மா கிட்ட பேச போயாச்சா? ஒரு நாள் பேசலேன்னா என்ன தான் ஆகிடும். இடியாடிக் சென்டிமென்ட்ஸ்" என்ற அவள் பேச்சு படுக்கை அறையைத் தாண்டி ஹாலுக்கு வந்து, சம்பத் மட்டும் அல்லாமல் அரவிந்தின் காதுகளிலும் கேட்டு அவர்களின் பிபியை ஏற்றியது.

ஏற்கனவே மிஸ்ட் கால்களின் எண்ணிக்கையைக் கண்டு நொந்து போய் இருந்த சம்பத் கோபத்துடன் உள்ளே சென்று அவளை எழுப்பி நிறுத்தினான். தூக்கத்தில் தள்ளாடியவளைப் பிடித்து உலுக்கியவன், "லுக் சுபிக்ஷா! என்னோடது இடியாடிக் சென்டிமென்ட்ஸ் தான். And I don't and will never regret for it. செக் யுவர் மொபைல், யூ இன்டெலிஜன்ட் இடியட்.. நீ கேட்ட பாரு, என்ன நடந்திடும்னு.. அது இன்னைக்கே நடந்தாச்சு.. தாத்தாக்கு என்ன ஆச்சுன்னு கூட எனக்கு இன்னும் தெரியாது. அத்திம்பேர் வந்திருக்கார். நான் எப்போதும் சொல்றது தான். எதையும் பேசறதுக்கு முன்னாடி இது சரியாத்தான் இருக்கும்னு நீயே டிசைட் பண்ணிடாத. தப்பா போயிட்டா உன்னால வார்த்தைகளைத் திரும்ப வாங்கிக்க முடியாது" என்று ஒரேயொரு நிமிடம் தான்.. ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு வெளியேறிவிட்டான் சம்பத்.

அவர்களின் திருமண வரலாற்றில் முதல் முறையாக அவளிடம் கோபப்பட்ட சம்பத் சொன்ன விஷயங்கள் சுபிக்ஷாவைச் சென்று அடைய சற்று நேரம் பிடித்தது. 'அவன் செய்யறதைத் தானே சொன்னேன். என் கிட்ட எப்படி கோபப்படலாம்?' என்று குதர்க்கமாகவே யோசித்துக் கொண்டிருந்தால் மூளை எப்படி சரியாக வேலை செய்யும்? மூளை வேலை செய்ய ஆரம்பித்த போது அவளிடமும் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது. அந்த பதட்டத்தை தூக்கம் வெல்ல, சம்பத் போய் விஷயத்தைத் தெரிந்து கொண்டு சொல்லும் வரை தூங்குவோம் என்று படுக்கையில் விழுந்தாள்.

—--

எப்போதும் கலகலப்பாக இருக்கும் அந்த வீட்டில் ஒரு சோகம் குடிகொண்டிருந்தது. சற்றும் எதிர்பாராமல், மின்னாமல் முழங்காமல் வந்த பேரிடியால் சொந்த பந்தங்கள் அனைவரும் கூடி இருந்தனர். பேரன் பேத்திகளுக்குச் சமமாக கேலி கிண்டல் செய்து தங்களது இருப்பை உணர்த்திக் கொண்டு இருக்கும் சேஷாத்ரியும் ராஜலக்ஷ்மியும் ஒரே நாளில் ஜீவனிழந்து காணப்பட்டார்கள்.

எண்பதுகளில் இருக்கும் தாங்கள் இன்னும் நன்றாக நடமாடிக் கொண்டிருக்க, தங்கள் கண் முன்னே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது என்பதை அவர்களால் உணர முடியாத நிலை. எப்போதும் தாத்தா பாட்டியின் மாறுதல்களை அவர்களின் முகத்தைப் பார்த்தே கண்டு பிடித்துவிடும் சம்பத் இன்று அவர்களை விட மோசமான நிலையில் இருந்தான்.

கண்கள் தன் முன்னே கண்ணாடிப் பெட்டிக்குள் மீளாத் துயிலில் இருந்த தந்தையின் மீது நிலைத்திருந்தது. 'ஏன்பா? ஏன் இப்படி? என்ன ஸ்ட்ரெஸ் உங்களுக்கு? எதுக்கு இந்த அவசரம்? நான் தான் உங்களைக் கவனிக்காமல் விட்டுட்டேனா?' என்பது போன்ற கேள்விகளை தந்தையிடம் மானசீகமாகக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு நடந்த விஷயங்கள் ஞாபகத்தில் வந்து அவனது மனமே அவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தியது!

முதல் நாள் காலை முதல் நடந்த சம்பவங்கள் யாவும் ஸ்லோ மோஷனில் திரும்பத் திரும்ப ஓடி அவனைச் சித்திரவதை செய்து கொண்டு இருந்தது.

சம்பத்தை அழைத்துக்கொண்டு கிளம்பிய அரவிந்த் காரைக் கொண்டு போய் அந்தப் பெரிய மருத்துவமனையின் பார்க்கிங்கில் நிறுத்தினான். இருவரும் நேராகச் சென்று நின்ற இடம் தீவிர இருதய சிகிச்சை பிரிவு. வாசலில் தேவிகாவையும் ராஜஸ்ரீயையும் பார்த்த போது கூட சம்பத்திற்கு எதுவும் தோன்றவில்லை. அவனைப் பார்த்ததும் கதறி அழுத தாயைக் கண்டு விழித்தவன் தமக்கையைக் கேள்வியாக நோக்கினான்.

அதற்குள் தேவையான அனுமதி பெற்று வந்த அரவிந்த் அவனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, படுக்கையில் இருந்தவரைப் பார்த்த போது மொத்த சக்தியையும் யாரோ உறுவிக் கொண்டது போல ஆனது. நிற்க முடியாமல் தள்ளாடியவனை மெதுவாக முரளிதரன் அருகே அழைத்துச் சென்றான் அரவிந்த்.

அமைதியாகத் தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவனை செவிலியர் வந்து மருத்துவர் அழைப்பதாகச் சொல்ல, மனமே இல்லாமல் எழுந்து சென்றான்.

டாக்டர்.பார்கவி ஸ்ரீவத்ஸன், கார்டியாலஜிஸ்ட் என்று எழுதப் பட்டிருந்த கதவின் முன் நின்று ஒற்றை விரலால் தட்ட, "யெஸ்! கம் இன்" என்ற அழைப்பில் இருவரும் உள்ளே சென்றார்கள்.

"ப்ளீஸ் உட்காருங்க மிஸ்டர்.சம்பத், நீங்களும் உட்காருங்கண்ணா. கொஞ்சம் பேசணும்" என்ற பார்கவி தீவிரமாக முரளிதரனின் ரிப்போர்ட்டை பார்வையிட்டாள்.

"இது தான் ஃபர்ஸ்ட் அட்டாக், ஆனாலும் கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன் தான், கிரிட்டிகல்னு கூட சொல்லலாம். சின்னதா ஆரம்பிச்ச பிரச்சினை தான், உடனே அட்டென்ட் பண்ணி இருந்தால் இப்போ டிஸ்சார்ஜ் பண்ணி இருக்கலாம். கொஞ்சம் நேரம் ஆனதால, ரிவைவ் ஆறதுக்கு லேட் ஆகுது"

தந்தையிடம் இருந்து வந்த முதல் அழைப்பு இரவு பதினோரு மணிக்கு என்பது நினைவுக்கு வந்ததில், 'என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்?' என்று தவித்துப் போனான் சம்பத்.

"ரிவைவ் ஆயிடுவார் தானே! வேறெதுவும் நெகடிவா சொல்லிடாதீங்க ப்ளீஸ்" என்றவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் பார்கவி.

"நெகடிவா சொல்லணும்னு நாங்க ஆசைப்படறதில்லை. பட், ஆக்சுவல் சிச்சுவேஷன் உங்களுக்குத் தெரியணும். அவர் கண் விழிச்சிட்டா, சர்ஜரி கூட பண்ணிடலாம். பட் இன்னும் அன்கான்சியஸா தான் இருக்காங்க. ஸோ, நாம வெயிட் பண்ணித் தான் ஆகணும். லெட் அஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட் " என்று முடித்து விட்டாள். மேலும் கேள்வி கேட்க ஆரம்பித்த சம்பத்தைத் தடுத்து, "தேங்க்ஸ் மா. நான் கூப்பிட்டதும் கூடவே வந்து ஹெல்ப் பண்ணதுக்கு. வி வில் வெயிட் ஃபார் யுவர் அப்டேட்" என்று வெளியே அழைத்து வந்து விட்டான் அரவிந்த்.

உள்ளே கேட்க முடியாத கேள்விகளை வெளியே கேட்க ஆரம்பித்தான் சம்பத்.
"எப்படி அத்திம்பேர்? நேக்கு எதுவுமே புரியலை. அப்பா எப்பவுமே ஹெல்தியா தானே இருந்தா.. எப்படி.. சடனா இவ்வளவு பெரிய பிரச்சினை.. நைட் லெவனுக்கு என்னைக் கூப்பிட்டிருக்கா.. நான்… நான்… " என்றவன் அடக்க முடியாமல் அழுது தீர்த்தான்.

அவனைச் சற்று நேரம் அழவிட்ட அரவிந்த் நடந்தவற்றை விவரித்தான்.
"எனக்கும் சரியா தெரியல சம்பத். பன்னிரண்டு மணி இருக்கும்.. ஏர்போர்ட் கிளம்பிண்டு இருந்த போது மாமியோட கால். சரி, ட்ரிப்புக்கு விஷ் பண்ணக் கூப்பிடறான்னு நினைக்க முடியலை. ஏன்னா கால் வந்தது எனக்கு. அப்பவும் தெரியாமல் கைபட்டு கால் வந்துடுத்துன்னு நினைச்சு அட்டென்ட் பண்ணலை. அடுத்த செகண்ட் திரும்பவும் கால். விவரம் சொல்றதுக்குள்ள திணறிட்டா.

உன்னை விட்டு என்னைக் கூப்பிட்டிருக்கான்னா நீ கான்டாக்டபிளா இல்லேன்னு தெரிஞ்சது. அந்த நேரத்தில் கார்டியாலஜிஸ்ட்னு சட்டுன்னு ஞாபகம் வந்தது பக்கத்தாத்து பார்கவி தான். அன்டைம்னு பார்க்காமல் ஆம்புலன்ஸ கூப்பிட்டு தானும் கூடவே வந்து மாமாவுக்கு இனிஷியல் ட்ரீட்மெண்ட் கொடுத்து நிறைய ஹெல்ப் பண்ணிட்டா. தாத்தா பாட்டி கிட்ட எங்க அப்பா அம்மா இருக்கா. மாமாக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சாலும் கண்டிஷன் மோசம்னு சொல்லாமல் சொல்லிட்டா. அதான் நான் அவசரமா உன்னைக் கூப்பிட வந்தேன்." இல்லையென்றால் உன்னை அழைக்கும் உத்தேசம் இல்லை என்பது போல இருந்தது அவனது பேச்சு.

கண் மூடி நடந்த விஷயங்களை ஜீரணிக்க முயன்றான் சம்பத், அதெப்படி அவ்வளவு சீக்கிரம் முடியும்?
அமைதியாகத் தாயின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் ராஜஸ்ரீ. மூவரும் மருத்துவரிடம் இருந்து நல்ல செய்தி வராதா என்று எதிர்பார்த்திருக்க, அதுவும் மெதுவாக வந்து சேர்ந்தது.

உறவுகளுக்குத் தகவல் சொன்ன அரவிந்த் ரங்கராஜனுக்கும் விஷயம் சொல்லி இருக்க, அவர் உடனடியாக மகளை அழைத்தார். அவளோ பத்து மணி ஆகியும் இன்னும் உறக்கம் கலையாமல் இருக்க, அவளது மொபைலால் அவளை எழுப்ப முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த ரங்கராஜன் அங்கே மகளைக் காணாது திகைத்தார். மருமகனிடம் என்னவென்று விசாரிக்க என்று புரியாமல் விழித்தவரை அழைத்துச் சென்ற அரவிந்த், சுபிக்ஷா வீட்டில் இருப்பதாகக் கூறினான். முழு விவரம் அறியாத ரங்கராஜன் சின்சியராக மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை வந்தார்.

வழியெங்கும் அர்ச்சனை செய்து கொண்டு வந்த தந்தையை அலட்சியம் செய்த சுபிக்ஷா உண்மை நிலவரம் தெரிந்த போது, வாய் மூடி மௌனமாக நின்றாள். சம்பத் அவள் வந்ததையோ தேவிகாவிடம் சென்று பேசியதையோ கண்டுகொள்ளவே இல்லை. அவனது எண்ணமெல்லாம் தந்தை பிழைத்து வந்து, தான் செய்த பிழையை இல்லாமல் செய்து விட வேண்டும் என்பதில் தான் இருந்தது.

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மாலை நான்கு மணி அளவில் கண்விழித்தார் முரளிதரன். அதற்குள் முரளிதரன் மற்றும் தேவிகாவின் உடன்பிறந்தவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். லண்டனில் இருந்த கனகவல்லி கூட கணவரும் வந்து விட்டார்.

சேஷாத்ரி முதல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று அவரைப் பார்த்து வந்த பிறகு சம்பத் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டதும் முரளிதரன் முகம் மலர்ந்தது.
"அப்பா!" என்று மெதுவாக அழைத்தவன் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு தந்தையின் கண்கள் சொல்லும் செய்தியைப் படிக்க முயன்றான்.

நேரம் சென்று கொண்டிருக்க, அங்கே கண்கள் மட்டுமே பேசியது. முரளிதரனின் முகத்தில் புன்னகை உறைந்து நின்றது. தன் கைகளுக்குள் இருந்த தந்தையின் கைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை உணர்ந்தவன், டாக்டரை அழைக்க அங்கே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கண் முன்னே தந்தையின் உயிர் பிரிவதைப் பார்த்தவனுக்கு உலகமே வெறுத்துப் போனது.

நினைத்து நினைத்து அழுதவனை யாராலும் சமாதானம் செய்ய இயலவில்லை. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்று உரிமையை நிலைநாட்டிய மனைவி அவனது துக்கத்தில் தூர நின்றாள்.

—--
மகனது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டிருந்த தேவிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் பெருகிக் கொண்டே இருந்தது. கிண்ணத்தில் பிசைந்த ரசம் சாதத்துடன் வந்த ராஜஸ்ரீ தம்பியின் தோளைத் தொட்டாள். அவள் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவளது தம்பி இல்லை. கல்லாக இறுகிப் போயிருந்தான். குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்று கொண்டிருந்தது அவனை.

"அம்மா! ப்ளீஸ்! கண்ணைத் துடைச்சிண்டு மெதுவா எழுந்து உட்காரு. கொஞ்சமா ரசஞ் சாதம் பிசைஞ்சிண்டு வந்திருக்கேன் பாரு. கொஞ்சூண்டு சாப்பிடு மா. முதல்ல எழுந்திரு மா ப்ளீஸ்" என்ற அவளது வார்த்தை தாய், மகன் இருவரது செவிகளையே சென்று சேர்ந்தால் தானே அதற்கேற்றபடியான வேலையைச் செய்யும் படி மூளை கட்டளை இடும்.

(physically present but mentally absent)

"இரண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி கண்ணீர் விட்டுண்டு இருந்தா ஆச்சா? சம்பூ! நீயும் தான் கொஞ்சம் சாப்பிடு. என்ன பண்றது, இதெல்லாம் நடக்கணும்னு நம்ம தலைல எழுதி இருக்கும் போது அனுபவிச்சுத்தானே ஆகணும். சாப்பிட்டா தான் அழறதுக்குக் கூட தெம்பு இருக்கும்."

"அண்ணா காரியம் எல்லாம் நல்ல படியா நடக்கணும். அதுக்கப்புறம் இருக்கவே இருக்கு, நம்ம ஆயுசு பூராவும் ஃபீல் பண்ணின்டே இருக்க வேண்டியது தான். எழுந்திருங்கோ, சொல்றேன்"

சுற்றி இருந்த அனைவரும் ஏதேதோ சமாதானம் சொல்லி, அவர்களும் சேர்ந்து அழுது, உயிர் வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் உண்டு பொழுதை நகர்த்தினர்.

"மூணாவது நாள் இல்லேன்னா அஞ்சாவது நாள், கல்லு ஊன்றி காரியத்தை ஆரம்பிக்கலாம்" என்று புரோகிதர் சொல்ல,

"மூணாவது நாளே பண்ணிடலாம். நம்மாத்துல தானே பண்ணப் போறோம். அப்புறம் எதுக்கு தள்ளிப் போடணும்?" என்றான் சம்பத்.

"அப்படி கிடையாது, உங்க ஆத்துக்காரிக்குத் தோதுப்படுமான்னு பார்த்துக்கணும்…" என்று அவர் சொல்லாமல் சொன்ன பதிலில் யோசனையாகக் காலண்டரையும் மனைவியையும் பார்த்தான் சம்பத். அவனது மனக்கணக்கு வேறொரு சந்தேகத்தை அவனுக்குள் ஏற்படுத்தியது.

"அவளுக்கும் தோதுப்படும்.. நீங்க என்னன்ன பண்ணனும்னு லிஸ்ட் கொடுத்துடுங்கோ. பார்த்துக்கலாம்.."

ஒரே ஒரு நாள் அவன் தடுமாற்றம் எல்லாம். தந்தையின் இழப்பில் மறு அவதாரம் எடுத்து விட்டான். இப்போது அவனது குறிக்கோள் எல்லாம் தந்தைக்கான கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பது தான்.

"மூணாவது நாளே ஆரம்பிக்கணுமா? இப்போ எல்லாம் ஒன்பதாம் நாள் தான் எல்லாரும் ஆரம்பிக்கறா. ஆஃபீஸ், வேலை இதெல்லாம் என்ன ஆகும்? அத்தனை நாள் லீவ் போட முடியுமா?" என்று ஆரம்பித்து வைத்த அனுராதாவை அங்கே இருந்த அனைவரும் வினோதமாகப் பார்த்தார்கள்.

"அதெல்லாம் லீவ் கிடைக்கும் மாமி. எங்களுக்கு பத்து நாள் பிரீவ்மென்ட் லீவே இருக்கு. சுபிக்ஷாக்கு நாலு நாள் தான் கிடைக்கும். கடைசி நாலு நாள் யூஸ் பண்ணிக்கலாம். இப்போ என்ன, காலைல ஒன் அவர் காரியம் இருக்குமா? அப்புறம் அவ வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணிக்கலாம். வேற என்ன வேலை இருக்கு அவளுக்கு?" என்று கொட்டு வைத்தான் சம்பத்.

"ஓ.. அவளுக்கு இந்த காரியம் எல்லாம் பழக்கம் இல்லை. டெய்லி தலைக்கு குளிச்சா சுபிக்கு உடம்பு என்னத்துக்கு ஆகும்?" ஏதோ நேற்று பிறந்த குழந்தை பற்றி பேசுவது போல் பேசிய அனுராதாவின் பேச்சு மேடையேறவே இல்லை.

"வைஃப் வெளியூர்ல இருந்தால் ஹஸ்பன்ட் மட்டும் காரியம் பண்றாளே. அது மாதிரி அவ வெளியூர் போனா மாதிரி நினைச்சுக்கோங்கோ. நான் அவளை ஒரு வாரம் எங்க ஆத்துக்கு அழைச்சிண்டு போறேன். பத்தாம் நாள் காரியத்துக்கு வந்துடுவா."

கடைசி பஞ்ச்சாக ஒன்று சொன்ன அனுராதா, சம்பத் முறைத்ததில் அவளது வாய் அப்போதைக்கு மூடிக்கொண்டது. ஆனால் எப்போதும் இல்லாத வகையில் அனுராதாவின் நடவடிக்கைகளில் மகளது ஆரோக்கியம் பற்றிய கவலைகள் முன்னிலை வகித்ததில் சம்பத்தின் சந்தேகம் உறுதி ஆனது. சுபிக்ஷாவைப் பார்க்க, அவளோ அவன் பார்வையைத் தவிர்த்தாள்.

"நீங்க சொல்ல வர விஷயத்தைத் தெளிவா சொல்லலாம் மாமி. துக்க வீட்டுல சந்தோஷச் செய்தி சொல்லலாமான்னு நினைச்சா, அது அந்த விஷயத்தையும் அது சார்ந்த மனுஷாளையும் பொறுத்தது. நீங்க சொல்ற விஷயம் துக்கத்தை ஆத்திக்கக் கூட உதவலாம். இதுக்கு மேல நான் எதுவும் சொல்லலை. எனக்கு எங்க அப்பாவோட காரியம் சாஸ்திரப் படி நடக்கணும். தட்ஸ் இட்." என்று முடித்து விட்டான்.

அனுராதா பதில் பேசவில்லை என்றாலும் முரளிதரனின் காரியம் நடந்த பதிமூன்று நாட்களும் மகளுடன் தங்கி விட்டாள். மகளையே அந்த வீட்டில் இருக்க விடாதவளின் இந்தச் செயல் கண்டு அனைவரும் புருவம் உயர்த்த, அவளோ அவ்வப்போது வார்த்தைகளால் தனது இருப்பை உணர்த்திக் கொண்டு நாட்களைக் கஷ்டப்பட்டு நகர்த்தினாள்.

—-

ஆயிற்று, இதோ முரளிதரன் என்ற மனிதரின் ஆன்மாவை சாஸ்திர சம்பிரதாயங்கள் சொன்ன வழியில் கரையேற்றியாயிற்று. இனிமேல் சொந்தங்கள் எல்லாம் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அவரைச் சார்ந்து வாழ்ந்த மூன்று ஜீவன்கள் தான் அவரில்லாத எதிர்காலத்தை நினைக்கவும் பயந்து மருகிக் கொண்டு இருந்தார்கள். சேஷாத்ரியும் ராஜலக்ஷ்மியும் தங்களுக்குள் ஒடுங்கிப்போய் இருந்தார்கள். தேவிகாவின் நிலையோ, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது.

தந்தையின் இழப்பில் இடிந்து போனதெல்லாம் முதலிரண்டு நாட்கள் தான், காரியங்கள் நடந்த அந்த நாட்களில் தனது நடவடிக்கைகள் மூலம், அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்தி இருந்தான் சம்பத்.

தாத்தா பாட்டியைக் கவனித்து, அவர்களை நேரத்திற்கு சாப்பிட வைத்து, அவர்களுடன் பல விஷயங்களைப் பேசி துக்கத்தை மறக்க வைத்து என்று ஒரு நாளில் பலமணி நேரங்களை அவர்களுடன் செலவழித்தான். தேவிகாவைப் பற்றி சொல்லவே வேண்டாம், அவருடன் அழுது, அவரது மடியில் படுத்துக் கொண்டு, அன்னையைத் தனது மடியில் சாய்த்துக் கொண்டு அவரது மனதில் இருந்த பாரங்களை இறக்கி வைக்க உதவி செய்தான். சுபிக்ஷா, அனுராதாவுடன் தங்கிக் கொள்ள சம்பத் தேவிகாவுடன் படுத்துக் கொண்டான். கடந்து போன கொடூரமான இரவின் ஞாபகம் வந்து தேவிகா கலங்கும் போதெல்லாம் அவனது மனம் வலித்தது.

இது என் வீடு, இந்த வீட்டில் நான் தான் இனிமேல் ராஜா என்று அனைவரும், குறிப்பாக அவனது மனைவியும் மாமியாரும் புரிந்து கொள்ளும்படி செய்தான்.

இதோ முரளிதரனின் காரியங்கள் எல்லாம் நல்லபடியாக முடிந்து சம்பிரதாயமாக கோவிலுக்கும் சென்று வந்து விட்டார்கள். உறவினர் அனைவரும் எப்போது ஊருக்குச் செல்கிறோம் என்பது பற்றியும் அடுத்த ஒரு வருடத்திற்கு நடத்த வேண்டிய காரியங்களைப் பற்றியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

இந்த பதிமூன்று நாட்களில் ஒரே ஒரு முறை தங்கள் ஃப்ளாட்டுக்குச் சென்ற சம்பத் தனது பொருட்கள் என்று இருந்தவற்றை அள்ளிக் கொண்டு வந்து விட்டான். உடைகளைப் பொறுத்தவரை எப்போதும் இரு வீட்டிலும் இருப்பது வழக்கம் தான் என்பதால் அவற்றைத் தொடவில்லை. சுபிக்ஷாவோ, இரண்டு மூன்று முறை சென்ற போதும் லேப்டாப் போன்றவற்றை எடுத்துக் கொண்டவள் தேவைக்கு நாலைந்து உடைகளை மட்டுமே எடுத்து வந்தாள். அதிலும் இரண்டு புடவைகளும் அரதப் பழசான இரண்டு சுடிதார்களும் மட்டுமே அடக்கம். கூடுதலாக, மாமனாரின் மரணத்தை முன்னிட்டு அவளுக்குக் கிடைத்த இரண்டு புதிய ஆடைகள்.

சம்பத்தோ இனி இங்கே தான் தங்களது ஜாகை என்பது போல இருந்தான். அவளுக்கும் இந்த விஷயம் தெளிவாகப் புரிந்து போனதில், தங்கள் வீட்டுக்கு எப்போது செல்வோம் என்று சுபிக்ஷா வாய் திறந்து சம்பத்திடம் கேட்கவே இல்லை. அதற்காக அவள் அங்கேயே தங்கி விடுவாள் என்ற அர்த்தம் இல்லை. அவளது மவுத்பீஸ் தான் தாயின் வடிவில் இருக்கிறதே. அவள் பேசி ஏதாவது முடிவு தெரியட்டும் என்று காத்திருந்தாள்.

இப்போது அனுராதா தனது அடுத்த ஆட்டத்தைத் துவங்கி வைக்க நேரம் பார்த்துக் கொண்டு இருந்தாள் . அனுராதாவின் கண்கள் ஹாலில் நடந்த நிகழ்வுகளை படம் பிடித்துக் கொண்டு இருக்க, வாயோ தோளில் சாய்ந்திருந்த மகளிடம் தனது அறிவார்ந்த ஐடியாக்களைக் கொட்டிக் கொண்டிருந்தது.

அவளது இளைய மகள் மானஸா வடிவில் தனக்கு ஆப்பு ஒன்று காத்துக் கொண்டிருந்ததை அறியாமல் மூத்த மகளின் வீட்டில் நாட்டாமை வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாள் அனுராதா.

"சம்பந்தி பிராமணருக்கு பண்ண வேண்டிய மாசியம் சோதம்பம் எல்லாம் ஆத்துலயே பண்ணனும்னு என்ன அவசியம்? ஆஃபீஸ் போறவாளுக்கு அதெல்லாம் எப்படி சாத்தியம்னு இங்கே யாரும் யோசிக்கவே இல்லையே.

இந்த சம்பத் வருஷத்துல பாதி நாள் உலகம் பூராவும் சுத்தறார். இப்போ எங்க அப்பா காரியம் பண்ணனும், ஒரு வருஷத்துக்கு சென்னையை விட்டு போக மாட்டேன்னு ஆஃபீஸ்ல சொல்ல முடியுமா?"

மகளிடம் அவள் முணுமுணுத்தது அங்கே இருந்த அனைவரது காதிலும் தெளிவாகவே விழுந்தது.

அந்தோ பரிதாபம், அதற்கெல்லாம் மாப்பிள்ளையிடம் இருந்து உடனுக்குடன் பதிலடி கிடைக்கும் என்பதை அனுராதா யோசித்திருக்க மாட்டாள்.

""இப்போ என்ன? இவாளுக்கு அப்படி என்ன வயசாச்சு? பிள்ளையும்
மாட்டுப்பொண்ணும் இதோ கூப்பிடற தூரத்துல இருக்கா. ஏதோ அவசரம்னா உடனே வரப்போறா.." என்றவளை சம்பத் ஒரு பார்வை பார்க்க,

"ஏதோ ஒரு தடவை தெரியாத்தனமா ஃபோன் சைலண்ட்ல போயிடுத்து. அதுக்காக எல்லா நேரமும் அதே மாதிரி இருக்கணும்னு சட்டமா?"

"சட்டம் இல்லை தான் மாமி. ஆனாலும் ஹியூமன் எரர்ஸ் ரிபீட் ஆகாதுன்னு யாரும் கேரண்டி கொடுக்க முடியாது. அதுக்காகத்தான் கூடவே இருந்துடறது. அடுத்த ரூம் கதவைத் தட்டறதுக்கு நாலஞ்சு மணி நேரம் ஆகாது பாருங்கோ" என்று பதிலடி கொடுத்த மாப்பிள்ளையை என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தாள் அனுராதா.

பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த அனுராதா, சம்பத்திடம் நேரடியாகவே கேட்டு விட்டாள்.

"சுபம் முடிஞ்சு எண்ணெய் தேய்ச்சுண்டாச்சு.
இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கப் போறேள் மாப்பிள்ளை?"
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
72
ஏம்மா முரளியை வெளியேத்திட்டீங்க🥺
பாவம் பிள்ளை. எவ்வளவு சந்தோஷமா இருந்த குடும்பம்.

இந்த அனுராதாவை போட்டுத்தள்ளி இருந்தீங்கன்னா, நல்லா இருந்திருக்கும்.
 
Top Bottom