- Joined
- Jun 17, 2024
- Messages
- 32
அனந்தன் காடு 8
நம்மவர்களே!பத்மநாபன் திருவடி காண நடமின்
கடுவினை களையலாகும்
காமனைப் பயந்தகாளை,
இடவகை கொண்டதென்பர்
எழிலணி யனந்தபுரம்,
படமுடை யரவில்பள்ளி
பயின்றவன் பாதம்காண,
நடமினோ நமர்களுள்ளீர்!
நாமுமக் கறியச்சொன்னோம்
திருவாய்மொழி
நான் திருவனந்தபுரத்திற்கு வந்து இன்றோடு ஒருவாரமாகிறது. பழமையும் பாரம்பரியமும் மண்மணம் மாறாத மொழியும் மழையும் மக்களும் ஒருபுறம் என்றால், ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியின் ஈர்ப்புசக்தி ஒருபுறம்.
திருமலையில் படியாய் கிடக்க விரும்பிய குலசேகராழ்வாரின் மனநிலையை என்னால் முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. நல்லவேளையாக நான் எந்த அலுவலகத்திலும் வேலை பார்க்கவில்லை!
மழையில் தோய்ந்து, பக்தியில் ஊறி, சனாதனத்தின் சரித்திரக் குறியீடாகத் திகழும் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் ஒரு வரலாற்று ஆச்சரியம்.
அநேகமாக, அனைத்து உலக மதங்களிலும் ஆன்மீகத்தின் அடையாளமாகவும் அதே நேரம் அரசியல் மற்றும் அதிகார மையமாகவும் விளங்கிய ஆலயங்களில் முதலாவது ஸ்ரீஅனந்த பத்ம ஸ்வாமி கோவிலாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அதன் காலமறியாத் தன்மை அல்லது தொன்மை (antiquity).
அரசாட்சி இருந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றுமே, அங்கே அறிதுயிலில் இருக்கும் அனந்தன்தான் கோலோச்சுகிறார்.
ஆளுமையும் ஆகர்ஷணமும், அரண்மனைக்கு மேலான அம்பலமும் ஒரு சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்தியின் இறையாண்மையும்… சந்தேகமின்றி அனந்தபுரியில் நடப்பது ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் அரசாட்சியேதான்.
வசீகரித்த வனமாலியின் மீது வாஞ்சையும் வாத்யல்யமும் பெருக, அனந்தனின் சந்நதியை விட்டு வெளியே வர, நரஹரியின் தரிசனம்.
பிரகாரத்தை வலம் வருகையில் இரண்டு நாட்களாக மனதைக் குடையும் கேள்வி, இப்போதும் தன் கடமையைச் செய்ய, சுற்றிலும் பார்வையால் வருடியபடி மெதுவே நடந்தேன்.
‘இத்தனை பரபரப்பும் ஆச்சர்யமும் தந்து உலகையே வாய் பிளந்து ஸ்தம்பிக்க வைத்த அந்த பொக்கிஷ நிலவறைகள் எங்கே?’
ஸர்ப்பங்களும் யக்ஷியும் செதுக்கப்பட்ட அந்த நிலவறைக் கதவை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என்ற பேராசையில் அங்குலம் அங்குலமாகக் கண்களால் சலித்தும் எதுவும் தென்படவில்லை.
என்னைக் கடந்து சென்றது ஒரு குடும்பம். அந்தப் பெண் தன் தந்தையிடம் “அந்த வால்ட் எல்லாம் எங்கப்பா இருக்கும்?”
அவளது தம்பி “பத்மநாப ஸ்வாமிக்கு பின்னாலதான் இருக்கணும். Sanctum sanctorum (கருவறை) உள்ளதான் யாராலயும் போக முடியாது”
அவர்களது தாய் “போலீஸ் இடிச்சது பெருமாள் இருக்கற இடத்துலயா? பயமா இருக்காதோ, அவரைப் பார்த்தாலே பண்ணின பாவமெல்லாம் ஞாபகத்துக்கு வர்றது”
தந்தையும் பிள்ளைகளும் சிரிக்க, எனக்கும் புன்னகை வந்தது. ஆனாலும் அந்தப் பெண்மணியின் கேள்வி உண்மைதானே?
அந்தப் பெருமாளின் திருமேனியின் அருகே செல்லவே தைரியம் வேண்டுமே.
ஆனால், அவரது கை விரல் மோதிரத்தையே யாரோ திருடினார்களாமே?
என்னதான், இடையில் இருக்கும் கதவுகளின்றி முழுமையாக அனந்தனை தரிஸிக்கும் ஆசை இருந்தாலும், அனுமதி கிடைத்தால் ஒரு நொடியேனும் தயங்குவேன் என்றுதான் தோன்றியது.
அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலைச் சுற்றி நிலவும் மர்மங்களும் நம்பிக்கைகளும் ஹேஷ்யங்களும் அவரைப் போலவே captivating.
அனந்தனின் ஆலயம் கவர்ந்திழுப்பதற்கு இந்த மர்மங்களும் ஒரு பெரிய காரணம் என்று தோன்றியது.
இதுவரை கண்டெடுத்த ரெண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கத்தை(!) இத்தனை பேர் வந்துபோகும் இடத்தில் கோவிலிலேயே வைத்துவிட்டு, எத்தனை இயல்பாக இருந்திருக்கின்றனர்!
இப்போது கோவிலின் நுழைவாயில்களில் மெட்டல் டிடெக்டர்களும், காவல்துறையின் பாதுகாப்பு சோதனையும், இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய காவலர்களும், ஆங்காங்கே காமிராக்களும் இருந்தன. ஆனால், முன்பிருந்த தெளிவற்ற ரகசியத்தன்மை மட்டும் (obscurity) இப்போது இல்லை.
அதனால் என்ன? இது வெளிவராமலே போய் இருந்தால், பத்மநாப ஸ்வாமியின் மீதான பக்தியை, நம்பிக்கையைத் தாண்டி, இன்றைய காலகட்டத்தில் இக்கோவிலின் வரலாற்றின் மீது இத்தனை ஈர்ப்பும் வியப்பும் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமியின் தாஸர்களாகத் தங்களை பிரகடனம் செய்துகொண்ட திருவாங்கூர் மன்னர்களும், திருவாங்கூர் ராஜ்ஜியத்தையும், தன்னையும், ஆண், பெண் பேதமின்றித் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தாஸனாக்கிய மஹாராஜா ஸ்ரீ மார்த்தாண்ட வர்மாவும், தங்களது இஷ்ட தெய்வத்தின் ஆளுமையை, திருவாங்கூரின் பெருமையை இந்த உலகம் வியந்து நோக்க விரும்பி, கோவிலின் பராமரிப்பு தாண்டி, பரபரப்பும் உயிர்ப்பும் தரவேண்டியே ரஹஸ்யத்தை, மர்மங்களை, யூகங்களைத் தரவென்றே நிலவறைகளில் பொக்கிஷத்தை வைத்தனரோ என்று கூடத் தோன்றியது.
ஆனால், முகிலன் எனும் மொகலாயன், திப்பு சுல்தான், டச்சுக் காரர்கள், அவர்களைத் தொடர்ந்து பாரத தேசத்தையே கபளீகரம் செய்த பிரிட்டிஷ்காரர்கள் என எத்தனை அந்நிய சக்திகளிடமிருந்து இத்தனை பொக்கிஷத்தையும் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், பாதாள நிலவறைகளைத் தவிர வேறு நல்ல மார்க்கமுண்டா என்ன?
அத்தனை செல்வமும் எங்கிருந்து வந்ததெனக் கேட்க முடியாது. போர் வெற்றிகளில் பெற்றவை தவிர, ஏலம், மிளகு, கிராம்பு, பட்டை என நான்கு
பணப் பயிர்களை தன்னகத்தே கொண்டு கடல் கடந்த வாணிபத்தில் கோலோச்சியது கேரளம்.
ஆறு நிலவறைகளில் ஐந்தில் இல்லாத ஸர்ப்ப, யக்ஷியின் சிற்பங்களும், ஆறாவதில் பல நிலைகளில் திறக்க முடியாத கதவுகளும், மத்திர, தந்திரங்களால் பூட்டப்பட்டு இருப்பதாகவும், திறந்தால் தேவ சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற எச்சரிக்கைகளும் ஏன்?
இவைகளுக்கு இல்லாத தனி பாதுகாப்பு தருமளவு அதற்குள் இருப்பது என்ன?
ஆயுதங்களை ஏந்திய காவலர்கள் கண்காணிப்புக் காமிரா என எதுவுமின்றி, அத்தனை புதையலையும் கோவிலின் நிலவறையிலேயே வைத்திருக்க வேண்டுமெனில், அவர்களது பாதுகாப்புக்கான வழிமுறைகள் என்னவாக இருக்கும்?
அந்நியப் படையெடுப்புகளும், திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் குன்றாத வளமையைக் கண்டு பொக்கிஷங்களை, கொள்ளையடிக்க நினைத்த மிலேச்சர்களையும் சமாளிக்க திருவாங்கூர் அரசர்கள் தீட்டிய திட்டங்கள்தான் என்ன?
விஞ்ஞானம் வளராத காலத்தில், உலகில் மின்சாரம் என்ற ஒன்றே இல்லாத நாட்களில், மக்கள் வந்து செல்லும் வழிபாட்டுத் தலத்தில் இவ்வளவு திட்டமிட்ட கட்டுமானத்தைக் கட்ட முடிந்தது எப்படி?
இந்தியாவில் நிலவறைகளுக்கும் சுரங்கப் பாதைகளுக்கும் பஞ்சமில்லை, அது புதுமையும் இல்லை. புதையல்களும் அப்படியே. இன்றும் சில நேரங்களில் மிகச் சாதாரண மனிதர்களுக்குக் கூட புதையல்கள் கிடைப்பதைப் பார்க்கலாம். ஆனால், அதன் பரிமாணம்?
ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் தாஸர்களான திருவாங்கூர் அரசர்களுக்கு, பெருமாளிடம் இருந்த பக்தியும் நம்பிக்கையும் தெரிந்ததுதான்.
இருப்பினும், கல்லறா எனப்படும் ஆறு நிலவறைகளில் பொக்கிஷத்தைக் குவித்து வைத்து, கதவுகள், சுரங்கப் படிகள் எனப் பூட்டி வைத்தாலும், திருவாங்கூர் மன்னர்கள் கொடுத்த தங்கம், வெள்ளி பாத்திரங்கள், நகைகள், எடைக்கு எடை கொடுக்கப்பட்ட பொற்காசுகள் போன்ற விவரங்கள் அனைத்தும்தங்க நாணயங்கள் அனைத்தும் கோவில் மற்றும் அரசரிடம் பணி செய்பவர்களுக்கும், ஏன் பொதுமக்களுக்குமே தெரியுமே?
அப்படி இருக்க எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றைக் கோவில் வளாகத்திலேயே பாதுகாத்து வைக்கத் தீர்மானித்தனர்?
ஆதி காலம் தொட்டே கேரளத்தின் தாந்திரீக வழிபாடுகள் உலகப் பிரசித்தமானவை. இன்றளவும் தொடருபவை.
தாந்த்ரீகம் என்பது எப்பொழுதும் பிறருக்கு ஏவல், பில்லி, சூனியம் வைக்க மட்டுமே பயன்படும் விஷயம் அல்ல.
தேவைக்கும் எதிர்பார்ப்புக்குமான தேவதைகளை வழிபட்டு, சாந்தப்படுத்தி, மகிழ்வித்து, மந்திரங்களின் மூலமும், தாந்த்ரீக வழிபாட்டு முறைகளின் மூலமும் செயல்களை தனக்கு சாதகமாக்குவது முதல், பாதுகாப்புக்காக மந்திரத்தால் கட்டுதல், திருஷ்டி கழித்தல், வசியப்படுத்துதல் என இதில் பலவிதம் இருக்கிறது.
இவை அனைத்தும் மெய்யா, பொய்யா என்ற சந்தேகங்களைத் தாண்டி நம்பப்படுகிறது என்பதும், இதை பயின்று, பயிற்றுவிப்பவர்களும், செய்து தருபவர்களும் இன்றும் கேரளத்தில் ஏராளமாக இருக்கின்றனர் என்பதே நிஜம்.
ஜோதிடம், பிரச்னம் பார்ப்பது, ஸ்வப்ன பலன், நிமித்த பலன் கேட்பது போன்றவற்றில் நம்பிக்கைகள் அதிகமிருந்த காலத்தில், திருவாங்கூர் மன்னர்கள் பொக்கிஷ நிலவறையைப் பாதுகாக்க தாந்த்ரீகர்களை அணுகியதில் வியப்பொன்றுமில்லை.
அதன் மீதிருந்த பயத்தின் காரணமாகவே, செல்வம் களவாடப்படாமல் கூட இருத்திருக்கலாம். அல்லது இத்தனை வருடங்களில் கொள்ளையிட முயற்சி செய்தவர்கள் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டும் இருக்கலாம்.
ஆயினும், மனதில் அச்சத்தை விளைவித்து, திருடர்களைத் தள்ளி இருக்கச் செய்து, நூற்றாண்டுகள் கடந்தும் அது வெற்றிக்கான சூத்திரமாக இருப்பது கண்கூடு.
மர்மப் பெட்டகங்கள்
சாதாரண மக்கள் நினைத்தும் பார்க்க முடியாத பரிமாணத்தில் கிடைத்த பொன்னையும் பொருளையும் தாண்டி வியப்பும் திகைப்பும் தருமளவிற்கு இந்தப் பெட்டகங்களில் அப்படி என்னதான் இருக்கிறது?
இத்தனை ஆச்சர்யத்திற்கும் காரணம் அந்தப் புதையல் அல்ல. அதனால் நமக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை மக்கள் அறிவர்.
நம் மனதில் பரபரப்பையும் ஆவலையும் தூண்டி வியக்க வைப்பது, அந்தப் பெட்டகங்கள் குறித்து உலவும் கதைகளும் நம்பிக்கைகளும் மர்மங்களும் ரகசியங்களும் யூகங்களும்தான்.
கேரளத்தின் ஏனைய கோவில்களைப் போலன்றி, ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலின் நிர்வாகம் திருவாங்கூர் அரச குடும்பத்தினர் வசம் இருக்கிறது.
A முதல் F வரை ஆறு பெட்டகங்கள் இருக்க, இதுவரை திறக்கப்படாதது வால்ட் B மட்டுமே.
சாபங்களும் நாகங்களும் மர்மங்களும் நிறைந்த வால்ட் B
இந்தப் பொக்கிஷப் பெட்டகங்களைத் திறக்கும் முயற்சிகள் முன்பும் நடந்திருக்கிறது. 1908 ம் வருடம் மற்றும் 1930 ம் வருடம் திறந்திருக்கின்றனர்.
இதில் வால்ட் B யைத் திறக்க முயல, ஆயிரக்கணக்கான நாகப்பாம்புகளும், இறால் பாம்புகளும் துரத்தியதில், உயிர் தப்பும் ஆசையில் ஓடி விட்டனர்.
இதைத் திறக்க முயல்பவர்களை எச்சரிக்கவே இதன் கதவுகளில் இரண்டு ராஜநாகங்களும் யக்ஷியும் செதுக்கப்பட்டுள்ளது.
மஹாராஜா அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அவரது காலத்தில் இருந்த சித்த புருஷர்களைக் கொண்டு, நாகபாசம் எனும் மந்திரத்தால் பெட்டகத்தை மூடி இருப்பதாகவும்
அந்த சாபத்தை விலக்கும் மந்திரங்கள் தெரிந்த சிறந்த பூஜாரி ஒருவரால்தான் அந்தக் கதவைத் திறக்க இயலும் எனவும் நம்பப்படுகிறது.
முதலில் 2001 ல் திருவாங்கூர் அரச குடும்பத்தின் உதவியுடன், தொல்பொருள் துறையினர் இந்த ரகசியப் பெட்டகங்களைக் கண்டு பிடித்து, A,B,C,D,E,F என்று அடையாளப்படுத்தினர்.
சில சமூக ஆர்வலர்களும், சரித்திர ஆய்வாளர்களும், கோவில் நிர்வாகத்தின் மெத்தனத்தில் ஸ்ரீபத்மநாப ஸ்வாமியின் சிலபல உடமைகளை யாரோ களவாடி விட்டதாகவும், அதனால் பெட்டகங்களைத் திறக்க வேண்டும் என்றும் 2008ல் வழக்கு தொடுத்தனர்.
விளைவாக, 2011 ஜனவரி மாதத்தில் நிலவறைப் பெட்டகங்களைத் திறந்து பார்க்க, வால்ட் B யைத் தவிர, நீண்ட முயற்சிக்குப் பின் மற்றவற்றைத் திறந்து குவிந்திருந்த பொக்கிஷங்களைக் கண்டறிந்தனர்.
பெட்டகங்கள் திறக்கப்பட்டபோது உடனிருந்த பாலகோவிந்தன் என்னும் வழக்கறிஞர்,
“கடினமான அந்தக் கடைசி கிரானைட் பாறையைத் திறக்க பதினைந்து பேருக்கு மேல் ஏறக்குறைய மூன்று மணிநேரம் செலவிட்டு மிகுந்த சிரமத்துக்குப் பின் திறந்தனர்.
படிகளின் கீழே, பின்னிருந்து மெலிதாகக் கசியும் ஒளி இருப்பதே தெரியாது இருள் சூழ்ந்திருக்க, பெட்டிகளிலும் பானைகளிலும் குவிந்திருந்த தங்க நகைகளும், நாணயங்களும், விக்ரஹங்களும் ஒரு சிம்மாஸனமும், அனந்தசயனப் பெருமாளின் தங்கத்தாலான உடற்கவசமும், மூன்றரை அடி உயரத்தில் ஸ்ரீபத்மநாபஸ்வாமியின் தங்க விக்ரஹமும் அவற்றில் பொதிக்கப்பட்ட நவரத்தினங்களும், தங்கத்தினாலான சிறிய யானையும் பானைகளில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வைரங்களும் மரகதங்களும் இருளில் நட்சத்திரங்களாய் மின்னியது.
அவை சேகரித்து வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டிகள் காலப்போக்கில் உடைந்து பொடிந்திருக்க, தூசியில் குவிந்து கிடந்த பொக்கிஷங்களைப் பார்த்தது நம்பவியலாத ஆச்சர்யம்” என்கிறார்.
கண்டறிந்தவற்றைக் கணக்கிட்டு, மதிப்பீடு செய்து, அதேபோல் பாதுகாப்புடன் அங்கேயே வைத்துவிட்டனர்.
எகிப்திய பிரமிடுகளில் டுட்டான்குமானின் கல்லறைக்குக் கீழே கிடைத்த புதையலின் மதிப்பு ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோவிலில் இதுவரை கண்டெடுத்த பொக்கிஷங்களின் அருகில் கூட வரவில்லை எனில் மிகையாகாது.
இதுவரை திறக்க முடியாத வால்ட் B யைத் திறக்க முயற்சிக்க, திருவாங்கூர் அரச குடும்பத்தினர் அனுமதிக்காததோடு, நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அதன் சாபம், அதைத் திறப்பதால் விளையக்கூடிய தீமைகள் கருதி, தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது.
குறிப்பிட்ட அந்தப் பெட்டகத்தின் முதல் இரும்புக் கதவைத் திறந்தனர். பிறகு, சிறிய அறையில் மூன்று பூட்டுக்களுடன் கூடிய சாளரம் போன்ற அமைப்பின் மூன்றாவது பூட்டைத் திறக்க இயலவில்லை.
அதற்கு மேல் முயலாமல் விட்டதற்கு, அந்த அறை ஸ்ரீகோவிலுக்கு, அதாவது ஸ்ரீ பத்மநாபஸ்வாமியின் கருவறைக்கு மிக அருகே இருந்ததும் ஒரு காரணம்.
பெட்டகத்துக்குள் செல்லும் முன் இரண்டு சிறிய அறைகள் இருக்கின்றன. பெட்டகத்தின் பிரதான வாயிலில்தான் நாகபடங்களும் யக்ஷியின் முகமும் பதிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஒருமுறை கோவில் நம்பிகள், நாட்டின் பஞ்சத்தைப் போக்க, பெட்டகத்தைத் திறக்க முயன்று அருகில் செல்லச் செல்ல பொங்குமாக்கடலின் ஓசையைக் கேட்டனராம். நம்பிக்கையின் படி, அது அருகே உள்ள அரபிக்கடலாக இருக்கலாம். ஏன், திருப்பாற்கடலின் ஓசையாகக் கூட இருக்கலாம்!
எதுவாக இருப்பினும், தடையை மீறிப் பெட்டகத்தைத் திறப்பது நாட்டுக்கே ஆபத்தாக முடியலாம் என்ற சாபம் அல்லது அச்சுறுத்தல், அரச குடும்பம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தயக்கத்தையும், வீண் வம்பு எதற்கு என்ற எண்ணத்தையும் தந்திருப்பது தெளிவு.
இதில் வியக்கத்தக்க விஷயம் எதுவெனில், அத்தனை பொக்கிஷங்களின் இருப்பும் பொது மக்களுக்குத் தெரியவந்தும், வியப்பும் பரபரப்பும் செய்தி அறியும் ஆவலும் இருந்ததே ஒழிய, புதையலின் மீது ஆசையோ, அதைப் பொதுக் காரணங்களுக்குப் பயன் படுத்தினால் என்ன என்ற கேள்வியோ எழவே இல்லை.
பாதுகாவல் இருப்பினும், அளவில்லா செல்வமிருப்பது உறுதியான பின்னும், அவற்றைக் கொள்ளையிட ஒருவரும் முயற்சி செய்யக் கூடத் துணியவில்லை.
வழக்குத் தொடுத்தவர்கள் கூட, பெட்டகத்தில் இருக்கும் பொக்கிஷங்களின் இருப்பை உறுதி செய்துகொள்ளத்தான் விரும்பினர்.
கேரளத்து மக்களில் வெகு சிலரைத் தவிர கோவிலின் குன்றாத செல்வமும், நீடிக்கும் மர்மங்களும், நாகபாசம், சாபம், அலையோசை போன்ற நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தரும் பெருமிதமும், ஒருவித கனவுபோன்ற நிலையை, மாய உணர்வை (Surreal) போற்றுகின்றனரே தவிர, அந்தப் பொக்கிஷங்கள் அனைத்தும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியைச் சார்ந்தது என்பதில் யாதொரு கருத்து வேறுபாடுகளும் இல்லை.
இதற்கும் அவர்களுமே ஸ்ரீபத்மநாபஸ்வாமியின் மீது கொண்ட பக்தியும் அன்பும்தான் காரணம்.

Author: VedhaVishal
Article Title: அனந்தன் காடு 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.