• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விழிகள் தீட்டும் வானவில் -8

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
20
விழிகள் தீட்டும் வானவில் -8

முப்பெரும் தேவிகளின் படங்கள் கீழே இறக்கி வைக்கப்பட்டு மலர் சாற்றி இருக்க, முன்னே இருந்த வாழையிலையில் சுண்டல், பொரி, பழங்கள் என்று படைக்கப்பட்டு இருந்தன. இலையின் ஒருபக்கம் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஊதுபத்தி குழல்கள் அலையலையாகச் சந்தன மணத்தைக் கசிய விட, மறுபக்கம் தீபாராதனை தட்டு தயாராக இருந்தது.

விசேஷ நாட்களுக்கே உரிய அழகுடனும் அருளுடனும் இருந்தது சுற்றியிருந்த காற்றின் அலை.

“துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதி

அவர் பாதம் சரணடைவோம்

கல்வியும் செல்வமும் வீரமும்

தந்திடும் மூவரை வணங்கிடுவோம்“

கொஞ்சம் விட்டால் கலைமகள், அலைமகள், மலைமகள் என அந்தத் தெய்வங்களே வரிசையாக இறங்கி வந்து, அருகில் அமர்ந்து தாளம் போட்டு விடுவார்கள் போல; அந்த அளவுக்கு வாணி ஜெயராம் உருகி உருகி பாடிக் கொண்டிருந்தார், சௌமியின் போனில் இருந்து.

நெற்றியில் பட்டையாக விபூதியை குழைத்து பூசிக் கொண்ட ராமநாதன், “எல்லோரும் வந்தாச்சா? கற்பூரம் காண்பிச்சுடவா?” என்றார்.

எல்லோரும் பூசைக்காக முன்னே வந்து நிற்க, சுற்றி ஒருமுறை பார்த்துக் கொண்டவர், “விஸ்வம் எங்க...? ஆகாஷ்.... அப்பாவை கூப்பிடு.....” பேரனிடம் சொல்லிக் கொண்டே தேங்காயை உடைக்க அவர் அருவாளைத் தேட,

அவர் பேசியது தன் காதிலேயே விழாதது போல “நான் உடைக்கிறேன் தாத்தா, நீங்க கொடுங்க....” அவர் கையில் இருந்து வாங்கிக்கொண்டு ஆகாஷ் பின்பக்கம் போய் விட்டான்.

அவனுடைய செய்கையில் தாத்தா முணுமுணுக்க, பார்வதி பாட்டி சின்னக் குரலில் கணவரிடம் எதையோ புலம்ப, நிமிர்ந்தால் யாருடைய பரிதாபப் பார்வையிலாவது விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் குனிந்த தலை குனிந்த மாதிரி இருந்த சுகந்தி இலக்கில்லாமல் முன்னே இருந்த படையலையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சௌமியும் இறுகிப் போனது போல நிற்க, “சரியான சண்டி மாடு.....” பற்களைக் கடித்துக் கொண்டே விஸ்வத்தின் அறைக்குள் விரைந்தாள் நேத்ரா. அவள் இங்கு வந்ததே தனிக் கதை.

ஷாப்பிங் மாலில் இருந்து அவளை அப்படியே ஹாஸ்டலுக்கு அனுப்பிவைத்து விடத்தான் ஆகாஷ் பிரயத்தனப்பட்டான். இவர்கள் இருவரையும் ஓரமாக நிற்க வைத்து விட்டு ரன்னிங் ஆட்டோக்களை நிறுத்த முயற்சித்தான்.

அவன் கெட்ட நேரமோ, இல்லை இவளுக்கு அதிசயமாய்ச் சமயம் வொர்க் அவுட் ஆனதோ என்னவோ, ஒரு ஆட்டோ கூடக் காலியாக வரவில்லை. வந்ததும் நிற்காமல் போக, நேரம் வேறு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அதற்கு மேல் நேத்ராவை மட்டும் தனியே அனுப்பி வைக்க அவனுக்கு மனதில்லை. அவளுடைய பாதுகாப்புக் குறித்துக் கவலையாக இருக்க, நெற்றியில் முடிந்த முடிக்கற்றைகளை யோசனையாகக் கலைத்துக் கொண்டான்.

வைத்திருப்பது டூ வீலர். பேசாமல் இருவரையும் ஆட்டோவில் அனுப்பித் தானும் பின்னாலேயே போய் நேத்ராவை ஹாஸ்டலில் ட்ராப் பண்ணி விட்டு பிறகு சௌமியை அழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன், பெண்கள் அருகில் சென்றான். அங்கிருந்த அலங்கார படிகளில் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

“ப்ளீஸ்டி அம்மு....” சௌமி என்னமோ கெஞ்சியபடி இருக்க, “தயவு செஞ்சு என்னை கம்பெல் பண்ணாத, சௌமி...” நேத்ரா மறுத்துக் கொண்டிருந்தாள். வழக்கமில்லா வழக்கமாக அவளுடைய முகமும் குரலும் இறுகிப் போயிருந்தன.

“என்னாச்சு...?” தான் சொல்ல வந்ததைப் பின்னால் தள்ளியவன், தங்கையிடம் கேட்க, குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்த சௌமி அண்ணனைக் கண்டு முறைத்தாள்.

“ஒண்ணும் இல்ல சாமி....” வெடுக்கென்று சௌமி சொல்ல, ஆகாஷ்க்கு அவர்கள் சொல்லாமலேயே என்னவென்று புரிந்து போனது. வேறு என்ன? இவள் நேத்ராவை வீட்டுக்கு கூப்பிட்டு இருப்பாள். அவள் முறுக்கிக் கொண்டு நிற்பாளாக இருக்கும்.

தாத்தாவை செக் அப்பிற்கு அழைத்துச் சென்ற போது அவர் நேரில் அழைத்தும் விட நேத்ரா வீட்டுக்கு வரவில்லை.

“இங்க இருக்கிற வீட்டுக்கு வர்ரதுக்கென்ன தாத்தா...? பத்து நிமிஷ ஆட்டோ.... உண்மையிலேயே இப்போல்லாம் டைமே கிடைக்க மாட்டேங்குது.. ரொம்ப பிஸியா போகுது.... அது தான்.... வேறு ஒண்ணும் இல்ல....”

“நேரம் இருக்கிறப்போ கண்டிப்பா வரேன் தாத்தா... பாட்டியை கேட்டதா சொல்லுங்க....” நாசுக்காக மறுத்தவள்,, அருகில் அமர்ந்திருந்த ஆகாஷை கண்ணால் கூட ஏறெடுத்து பார்க்கவில்லை.

“நீ கூப்பிடாமல் இனி நானாக உன் வீட்டுக்கு வர மாட்டேன்...” அவளது முறைப்பின் மொழி அவனுக்கு நன்றாகவே புரிந்தது. தாத்தா வேறு பக்கத்தில் இருந்ததால் எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் அங்கிருந்த மருத்துவ இதழில் கண்களைப் புதைத்துக் கொண்டான்.

ஆனால், அதையே இப்போதும் செய்யமுடியாமல் அவனை எதுவோ தடுத்தது.

தன்னிடம் வள்ளென்று விழுந்த தங்கையைப் பேருக்கு முறைத்தவன், “ஹ்க்க்கும்....” அவசரமாக தொண்டையைச் செருமிக் கொண்டான்.

போன முறை அவள் வந்திருந்த போது தான் பேசியது கொஞ்சம் அதிகப்படி என்று அவனுக்கும் தெரியுமே... குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. சற்றுமுன் தான் பணத்தை எடுத்துக் கொடுத்தது வேறு அவளைப் புண்படுத்தியிருப்பதை அவளது கலங்கிய கண்கள் காட்டிக் கொடுத்தன.

உம்மென்று இருந்த நேத்ராவின் முகம் உள்ளுக்குள் என்னவோ செய்ய, “ஆட்டோ எதுவும் கிடைக்கிற மாதிரி இல்ல.... நீ வேணும்னா பேசாம வீட்டுக்கு வந்துட்டு வாயேன்...” என்றான், என்னவோ போனால் போகுது என்பது போல....

தன் அண்ணனின் அருள்வாய்மொழியில் சௌமியின் முகம் மலர, நேத்ரா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நோ தேங்க்ஸ்....”

‘உன் தயவு எனக்குத் தேவையில்லை’ அவள் கண்கள் சொல்லாமல் சொல்ல, தலையசைத்து மறுத்தவள், “உங்களுக்கு டைம் ஆகிடும்... நீங்க கிளம்புங்க.... நான் கால் டாக்ஸிக்கு சொல்லிக்குறேன்...“ முடிவாகச் சொல்லிவிட்டு தன் போனை எடுத்து அவள் நோண்ட ஆரம்பிக்க, சௌமிக்கு எரிச்சல் தாங்கவில்லை.

‘இவனே இப்ப தான் மலையில இருந்து இறங்கி கொஞ்சம் நல்லா பேசுறான்.... இதுல இவ வேற....?’ கடுப்பாகிப் போனவள்,

“இப்ப என்ன உன் டர்ன்னா, அம்மு...? நீங்க இரண்டு பேரும் அடிச்சிக்குறதுக்கு நான் தான் நடுவில மாட்டி..... சே... என்னவோ பண்ணி தொலைங்க....” நேத்ராவிடம் கத்திய சௌமி விருட்டென்று எழுந்து படிகளைக் கடந்து அங்கேயிருந்த காரிடார் திட்டின் மேல் அமர்ந்து விட்டாள்.

“சும்மா சீன் போடாத, நேத்ரா.... நான்தான் சொல்றேன்ல... வா.. கிளம்பு..” ஆகாஷ் மீண்டும் கூப்பிட, “நான் என்னத்துக்கு சீன் போடுறேன்....? உங்க இரண்டு பேரையும் தான் கிளம்புங்கன்னு சொல்லிட்டேனே....” நேத்ராவின் குரலில் கொஞ்சமும் தளர்ச்சி இல்லை.

போக வர இருந்த இளசுகள் பட்டாளமெல்லாம் இரு பெண்களையும் சுவாரஸ்யமாக சைட் அடித்துக் கொண்டு செல்ல, ஆகாஷின் பொறுமை ‘நிக்கட்டுமா? இல்ல போகட்டுமா?” இளையராஜாவின் இசையில் பாடிக் கொண்டு வாசல்வழி நின்றது.

எரிச்சலுடன் தன் பின்னந்தலையைக் கோதிக் கொண்டவன், நழுவி கொண்டிருந்த தன் நிதானத்தை இழுத்துப் பிடித்தான்.

“இப்ப என்னங்கிற.....? நான் சாரி சொல்லணுமா.... சரி... சாரி... போதுமா....? எழுந்து வா.... வீட்டுக்குப் போலாம்” அவன் அடிக்குரலில் சொல்ல, அப்போதும் அவள் அசையவில்லை.

என்னதான் வெளியே விளையாட்டுப் பெண் போலத் தெரிந்தாலும் அவளுக்கும் சில விஷயங்களில் ரோஷம் உண்டு.

ஆகாஷுக்கு அலுப்பாக இருந்தது. “அம்மா தாயே.... நேரா மெயின் கேட்டுக்கு நேரா உட்கார்ந்திருக்க.... காரும் பைக்குமா மொத்த சிட்டியுமே இங்க தான் இருக்குது... இல்லேன்னா பேசாம சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட்டுடுவேன்.... போதுமா? நேரம் கெட்ட நேரத்துல நீ பண்ற இம்சை இருக்கே” அவன் கடுகடுவென்று கோபமாகத் தான் ஆரம்பித்தான்.

தான் சொல்ல, சொல்ல நேத்ராவின் விழிகளில் மிளிர்ந்த குறும்பைக் கண்டவன், “சோ..... ஒழுங்கு மரியாதையா எழுந்து வா.....” தன்னையும் அறியாமல் புன்னகையுடன் முடித்தான்.

“அப்ப... மரியாதையா கூப்பிடுங்க... நான் வர்றேன்....” அவள் கன்னம் குழிய சிரிக்க, “சும்மா விளையாடாம எழுந்து வா... டைம் ஆச்சு.....” ஆகாஷ் யோசனையாக நேரத்தைப் பார்த்துக் கொண்டான்.

“ப்ச்.....” நேத்ரா மானசீகமாகத் தன் தலையில் அடித்துக் கொண்டாள். “இந்த ‘டி எம் டி‘ முறுக்கு கம்பியை வச்சுக்கிட்டு என்ன தான் பண்ணுறது...!?”

அவனுடைய இலகுத்தன்மையின் ஆயுசு அவ்வளவு தான். அவளை வலிய வந்து “வா” என்று சொன்னதிலேயே அவன் வாயிலிருந்த முத்துக்கள் உதிராமல் இருந்தது பெரிய ஆச்சர்யம்! அதற்கு மேல் எதிர்பார்த்தால் ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா...’ என்ற கணக்காகிவிடும்.

அவனைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருந்த நேத்ரா அதற்குமேலும் பிடிவாதம் பிடித்துக் கொண்டு அங்கேயே அமரவில்லை. அவன் ஒரு அடி இறங்கி வந்தால், தான் பத்து அடி என்ன, நூறடி கூட இறங்கிப் போகக் தயாராக இருப்பவள் அவள்.

“நீங்க மட்டும் சொன்ன மாதிரி விழுந்து கிழுந்து வச்சிருந்தீங்கன்னா நைட்டோட நைட்டா வைரல் ஆகி இருப்பீங்க......” கிண்டலடித்துக் கொண்டே அவள் எழ,

“ஆமா... அது ஒண்ணு தான் உனக்குப் பாக்கியா இருக்கு... அதையும் ஏன் விட்டு வைக்கிறேன்னு கேக்குற....?” அவன் சிரித்தபடி கேலியாகத் தான் சொன்னான்.

கேட்டவளுக்குத் தான் ஏதேதோ நினைவுகளில் முள் குத்தியது போலச் சுருக்கென்று வலித்துத் தொலைத்தது. அதற்குப் பிறகு நேத்ரா வாயையே திறக்கவில்லை.

இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்ட சௌமியிடம் கூட உடல் மொழியாகக் கையைக் கோர்த்துக் கொண்டாளே தவிர, தோழியிடம் எந்தக் கதையையும் வளர்க்கவில்லை. ஏற்கனவே நாள் பூராவுமான அலைச்சலில் சோர்ந்திருந்த சௌமியும் தடதடத்த ஆட்டோ சத்தத்தில் அமைதியாக வந்தது நல்லதாகப் போனது.

வீட்டுக்கு வந்தபிறகும், “ஏம்மா... ‘எல்லோரும் ஒரு கல்யாணத்துக்காகச் சிதம்பரம் வரை போகப் போறோம்’னு மாலதி தான் போன்ல சொன்னுச்சே... அப்புறம் நீ என்னத்துக்கு ஹாஸ்டல்லயே இருக்கிறேன்னு பிடிவாதம் பிடிச்ச...” என்று பார்வதி அதட்டியபோதும்,

“நல்ல வேளை! இவங்க இரண்டு பேரும் இன்னிக்கே உன்னைக் கூட்டிட்டு வந்தாங்க.. நீ வந்திருக்கலைன்னா நானே நாளைக்குக் காலைல அங்க வந்து கையோட உன்னை இழுத்துட்டு வந்திருப்பேன்...” என்று சுகந்தி மிரட்டியபோதும் கூட, அவருடைய தோளில் செல்லமாகச் சாய்ந்து கொண்டாளே தவிர, ஒன்றுமே பதில் பேசவில்லை. பேச முடியவில்லை.

அப்போது மனதை வியாபித்த துயர பந்து மீண்டும் தொண்டையில் வந்து சுருண்டு கொண்டது போல நேத்ராவின் உள்ளம் இப்போதும் கனமாகிப் போனது.

சற்று முன்பு வரை, பூஜை வேளைகளில் உதவி செய்கிறோம் என்ற பெயரில் சௌமியுடன் சேர்ந்து தொல்லை பண்ணிக் கொண்டிருந்தவளின் இலகுத்தன்மை தனம் அந்த நிமிடம் எங்கே போனது என்று தெரியவில்லை.

மைக்ரோ கதிர்களின் அலைவீச்சு வேகத்தில் ஆகாஷின் சிரிப்பும், முறைப்பும், கோபமும், வேகமும் தன்னைப் பாதிப்பது போலவே, சில விஷயங்களில் அவன் காட்டும் அலட்சியமும் கூடத் தன்னை அப்படியே தாக்குவதை அந்தக் கணம் இயலாமையுடன் உணர்ந்தாள் நேத்ரா.

முயன்று முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகிக் கொண்டவள், “மாமா... வர்றீங்களா..?” என்று அழைத்தபடி விஸ்வம் இருந்த அறைக்குள் சென்றாள்.

***************************

ராமநாதன் தீபாராதனையை எடுத்துக் காண்பிக்க, எல்லோரும் நின்று வணங்கினார்கள். அவர் கற்பூரத் தட்டை காண்பிக்க, ஒவ்வொருவராகக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். விஸ்வமும் ஒற்றிக் கொண்டார். தீற்றாகத் திருநீரை நெற்றியில் இட்டுக் கொண்டவர், மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டார்.

“வாங்க மாமா... எல்லோரும் உங்களுக்குத் தான் வெயிட் பண்ணுறாங்க....” என்று நேத்ரா அறைக்குள் சென்று அழைத்ததும் “இந்தா வந்துட்டேன்டா....” அவளைக் கண்டு புன்னகைத்தவர் நாற்காலியின் மேலே கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தார்.

ஏதோ நிர்பந்தம் போல வந்து நின்றவர், பூஜை நிறைவுற்றவுடன் தன் கடமை முடிந்தமாதிரி மீண்டும் கூண்டுக்குள் சென்று விட, பார்த்துக் கொண்டிருந்த யாருக்கு எப்படி இருந்ததோ தெரியாது. அங்கே அச்சமயம் மூன்றாம் மனுஷியாக நின்று கொண்டிருந்த நேத்ராவுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

“இந்தா.... இந்தத் தட்டை பிடி.....” சௌமி அவளிடம் நீட்டிய தட்டை வாங்கிக் கொண்டவள், மீண்டும் விஸ்வத்தின் அறைக்குள் செல்ல, அவர் அவளைத் திரும்பிப் பார்த்தார்.

“என்னம்மு....?” மெலிந்து ஒலித்த குரலுக்குப் பதிலாகப் புன்னகைத்தவள், “சாப்பிடாமயே உள்ள வந்துட்டீங்களே.... அதான்... இந்தாங்க.....” அவரிடம் கொடுக்க, “நீ சாப்பிடுடா.... எனக்குக் கொண்டு வருவா....” அவர் அதை அவளிடமே திருப்பிக் கொடுத்தார்.

“பரவால்ல மாமா... நிறையத்தான் இருக்கு. இரண்டு பேரும் சாப்பிடலாம்... விடுங்க....” அவரெதிரில் அமர்ந்தவள் பக்கவாட்டில் இருந்த ஸ்டூலை பார்த்தாள்.

அதன் மேலே நிறையப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. கையில் எடுத்து புரட்டிப் பார்க்க, ஆன்மிகப் புத்தகங்கள், இலக்கிய உரைகள், கம்ப ராமாயணம் என்று அவை கலவையாக இருந்தன.

‘இவரு இதெல்லாம் கூடப் படிப்பாரா....?’ ஆச்சரியமும் புன்னகையுமாக விஸ்வத்தைப் பார்த்தாள். அவர் ‘அர்த்தமுள்ள வாழ்வு’ சுகி சிவம் எழுதிய புத்தகத்தைக் கையில் வைத்திருந்தார். தன்னை அவள் பார்ப்பது புரிந்ததும், “எடுத்துக்கோம்மா.....” தானும் கொஞ்சம் சுண்டலை எடுத்துக் கொண்டார்.

“ம்ம்ம்.... எடுத்துக்கிறேன் மாமா....” அவளது விரல்கள் ஒவ்வொரு சுண்டலாக நெருடி வாயில் இட, ‘சாமியும் இல்ல... பூதமும் இல்லன்னு சொல்லிட்டு இருந்த மாமாவா இப்படி மாறிட்டாரு....!?’ அவளது வாய் மட்டுமல்ல... அவளது மனமும் பழைய நினைவுகளை அசைப் போட்டது.

அவள் முதன்முதலாக அறிந்த விஸ்வம் மாமா கடவுள் நம்பிக்கை இல்லாதவர், நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் உள்ளவர், நிதானம் இல்லாதவர்; அதே சமயம் தன் எண்ணங்களைப் பிறரிடம் திணிக்க விரும்பாத நாகரீக சுபாவம் கொண்டவர்.

“வாழ்க்கையை அனுபவிக்கணும்மா” அடிக்கடி சொல்லுவார்; தான் சொல்வது போலவே எதையும் தலையில் எடுத்துப் போட்டுக் கொள்ளாமல் ஜாலியாக வாழ்ந்த மனிதர்;

இப்போது அடைத்து வைத்தது போல உட்கார்ந்திருப்பவர் தான் ஒரு காலத்தில் அவ்வளவு கலாட்டாவாகப் பேசுவார், கிண்டலடிப்பார் என்று சொன்னால் நேத்ரா கூட நம்ப மாட்டாள், அவரை முன்பே அறியாது இருந்திருந்தால்...

இன்று ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்த இதே ஆயுத பூஜை கொண்டாட்டங்களை இவர்கள் வீட்டில் நடக்கும் விதத்தைப் பார்த்து அவள் அசந்து போயிருக்கிறாள்.

பக்கா பக்காவாகப் பொரியும், அவலும், பொட்டுக்கடலையும், கூடைகளில் பழங்களும், லாலா கடை ஸ்வீட் பாக்ஸ்களும், மிக்ஷர் பொட்டலங்களுமாக வீடே இறைபடும்.

ஒரு பக்கம் பெண்கள் மஞ்சள் செவ்வந்தி பூக்களையும், செவ்வரளிகளையும் மாலையாகக் கட்டிக் கொண்டு இருக்க, ஆகாஷ், சௌமி, வருண், சமையல் வேலை செய்யும் மீனாட்சி ஆன்ட்டி யின் மகன் நரேன் என்று சின்னப் பசங்கள் எல்லாம் சேர்ந்து பொரியை அவல், கடலை சேர்த்துப் பாக்கெட் போடுவார்கள். அவர்களுடன் நேத்ராவும் உற்சாகமாகச் சேர்ந்து கொள்வாள்.

வேலை செய்பவர்களுக்குக் கொடுக்க, அக்கம் பக்கம், நண்பர்களுக்குக் கொடுக்கவென எல்லா அயிட்டங்களையும் ஒவ்வொரு கவராகப் போட்டு வைப்பார்கள். அதற்கும் அவர்கள் தொழில் என்றோ, வியாபாரம் என்றோ எதுவும் செய்யவில்லை.

விஸ்வம் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். சுகந்தி இல்லத்தரசி தான். இருந்தாலும் அவர்கள் வீட்டில் ஆட்படை நிறைய. வீட்டு வேலை, தோட்ட வேலை, சமையலுக்கு வருபவர், கார் ட்ரைவர், இஸ்த்ரி போடுபவர் முதற்கொண்டு விஸ்வத்தின் ஓட்டுனர், அவருடைய அலுவலக உதவியாளர் என்று லிஸ்ட் நீளும்.

அது போக எந்த விசேஷமானாலும் அந்தத் தெருவில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் இவர்களின் ஸ்வீட் கார விநியோகம் நடக்கும்.

“என்னடி... உங்கப்பா சாமி கும்பிட மட்டாருன்னு சொல்லுற.... ஆனா ஒவ்வொரு விசேஷத்தையும் இவ்வளவு கிராண்டா பண்ணுறீங்க..... !?” ஒருமுறை சௌமியிடம் இவள் கேட்க, அதற்கு விஸ்வமே பதில் சொன்னார்.

“எனக்குத் தானம்மா நம்பிக்கை இல்லை... என் அம்மாப்பா, தங்கச்சி, உங்க அத்தை, உன் பிரண்ட் எல்லோரும் சாமி கும்பிடுறவங்களா இருக்காங்களே...? என்ன பண்ண சொல்லுற....?” அவளிடம் சிரித்தபடி அங்கலாய்த்தவர்,

“பண்டிகைங்கிறது சாமி கும்பிட மட்டும் இல்லைல... எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சந்தோசமா கழிக்குறதுக்குத் தானே.... அது தான்.... இவங்கல்லாம் எதிர்பார்க்கிறாங்களோ இல்லையோ, நான் கிராண்டா பண்ணணும்னு நினைப்பேன்.... இருக்கிற வரைக்கும் எல்லாத்தையும் என்ஜாய் பண்ணணும்மா”

இத்துணூண்டு பெண்தானே என்று நினைக்காமல் அவளைப் பெரிய மனுஷி போலப் பாவித்து விலாவரியாக விளக்கம் சொன்னார் விஸ்வம். அவர் இலகுவாகப் பேசுவது பழகுவது அவளிடம் மட்டுமல்ல, எல்லோரிடமும் அப்படித்தான்.

வீட்டுக்கு வரும் ஆகாஷின் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார்; செஸ் சொல்லிக் கொடுப்பார். பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தில் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் உடனே பேக்கரிக்கு ஆர்டர் பறக்கும். பிரியாணி வந்து இறங்கும்.

இல்லாவிட்டால் மனைவியைத் தொந்தரவு செய்யாமல் எல்லோரையும் வெளியே அழைத்துச் சென்று சினிமா, ஹோட்டல் என்று ஆட்டம் போட வைத்து அழைத்து வருவார். எந்தச் சின்ன விஷயத்துக்கும் பெரிதாக அமர்க்களப்படுத்தும் சுபாவம் கொண்டவர்.

நேத்ரா வீடே வசதி தான்; ஆனாலும் அவர்கள் வீட்டில் எந்த விஷயத்துக்கும் கணக்காகத்தான் செலவு செய்வார்கள். அவளது தாத்தாவின் கண்டிப்பு அப்படி; அதற்கு நேர்மாறாக, எப்போதும் ஜாலியாக இருக்கும் சௌமியின் குடும்பத்தைப் பார்த்தால் அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

முதன்முதலாக ஆறடி உயர டபிள்-டோர் ப்ரிட்ஜை பார்த்ததும், அதன் பிரீசரில் ஐக்கியமாகி இருந்த பெரிய பெரிய ஐஸ்கிரீம் டப்களைக் கண்டு வியந்ததும் அவர்கள் வீட்டில் தான்;

ப்ரிட்ஜ் என்று இல்லை. மார்க்கெட்டுகளில் வந்தே இருக்காத எத்தனையோ வீட்டு உபயோக பொருட்களை, ஷோ-கேஸ் அயிட்டங்களை, புது வகையான தின்பண்டங்களை முதல் முறை பார்த்ததும், ரசித்ததும், ருசித்ததும் அவர்கள் வீட்டில் தான்;

விஸ்வம் என்ன செய்கிறாரோ, என்ன சொல்கிறாரோ அதற்கு மறு வார்த்தை பேசாத மனைவி; மணி மணியாக இரண்டு குழந்தைகள்; கையில் கணிசமாகப் புரண்ட காசு; போதாதா, அவரது ஆடம்பர குணத்துக்குத் தூபம் போட?

வாழும் வரை வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர் தான், இருந்தும் தன் குடும்பம் என்று மட்டும் அனுபவிக்காமல் எல்லோரையும் அரவணைத்து, பகிர்ந்து கொடுக்கும் தாராளவாதி;

அப்படிப்பட்டவர் தான் இன்று ஒரு வார்த்தைக்கு மறுவார்த்தை பேச மறுக்கிறார். மூன்றாம் மனிதர்களை விட்டு விடலாம். தன் குடும்ப நபர்களைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் தனக்குள் குறுகிப் போய்த் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.

அவரைக் கொல்லாமல் கொல்லும் குற்ற உணர்வை புரிந்து கொள்ள முடிய, நேத்ரா அவர் போக்கிலேயே சென்று மென்மையாகப் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

யாரிடம் எப்படியோ? அவ்வப்போது வீட்டுக்கு வரும் நேத்ராவிடம் விஸ்வம் ஓரளவு நன்றாகவே பேசுவார். அவராகப் பேசவில்லை என்றாலும் இவளே வலிய வலிய போய்ப் பேசி இயல்பாக்கி விடுவாள்.

சின்ன வயதில் இருந்தே பார்த்து பழகிய நெருக்கத்தில் அவளிடம் விஸ்வத்துக்குத் தனிப்பிரியம் உண்டு. அதுவும் கடந்த சில வருடங்களாகச் சௌமியும் தந்தையிடமிருந்து ஒதுங்கிப் போக, நேத்ரா வீடு வரும் நேரங்களில் மட்டும் தான் கூட்டுக்குள் தன்னைப் பூட்டிக் கொள்ளும் கணவர் கொஞ்சமாவது கதவு திறந்து வெளியே வருகிறார் என்ற ஆசுவாசம் சுகந்திக்கு.

அதனாலேயே நேத்ரா இங்கு வரும் நாட்களில் அவர் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடுவார். இந்த வீட்டின் சூழ்நிலையை உள்ளும் புறமும் நன்றாக உணர்ந்ததால் தான், அவள் நேரம் கிடைக்கும்போது தவிர்க்காமல் இங்கு வருவது - அவ்வப்போது ஆகாஷின் பேச்சில் மனசு சுணங்கிக் கொண்டாலும் கூட.

“அடுத்த வாரம் புக்பேர் வருதில்ல... நாம போய்ட்டு வரலாமா, மாமா? சௌமியையும் இழுத்துட்டுப் போலாம்... வர்ற சாட்டர் டே உங்களுக்கு ஓகே வா..?”

விஸ்வத்தின் மனதிற்கு ஏற்ப விஷயம் தேர்ந்தெடுத்து அவரிடம் மிருதுவான தொனியில் பேசிக் கொண்டிருந்த நேத்ராவின் உள்ளம் முழுக்க வேறு சிந்தனை.

‘வெளில சொல்லிக்க முடியாம உள்ளுக்குள்ள பீல் பண்றாரு... கொஞ்சம் நின்னு பேசினாதான் என்னவாம்!? .ம்ஹும்.. இதை இப்படியே விடக்கூடாது. இங்க இருக்கிற இரண்டு நாளுக்குள்ள சமயம் பார்த்து சாமிக்கு பூஜை போட்டுடணும்’ அவள் தனக்குள் முடிவு பண்ணிக் கொண்டாள்.
 

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom