• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 17

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
31
தனித்த வனத்தில் 17

மன்மத ராவ் அவனைப் பற்றித் தன்னிடம் கூறிய ஒரு வார்த்தை கூட மிகையோ கற்பனையோ இல்லை என்பதை எந்நேரமும் கசிந்து விடுவேன் என பயமுறுத்திய அவனது கண்களும், வேதனை சுமந்த வதனமும், வருடங்கள் சென்றும் அவமானத்தில் குன்றிய உடல்மொழியும், நெரிந்து மெலிதாக வெளிப்பட்ட தொனியுமே சாம்பவிக்கு உணர்த்தியது.

கேட்ட நிமிடத்தில் அவளுக்கும் பலத்த அதிர்ச்சிதான். மறுக்கவில்லை.
அதுவும் அவன் ஏழு வயதுக் குழந்தையை, இப்போது பன்னிரெண்டு வயது, தன் மகளென்றது, சாம்பவிக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதான்.

ஆனாலும், பொறுப்பைத் தவற விட்ட வேதனையும், சந்தேகத்திற்கான பலனை ஹைமாவிற்குக் கொடுத்து, அவர்களின் எதிர்காலம், நல்வாழ்வு, மனநிலை என பலதையும் நினைத்து, மேலும் எதையும் கிளறாமல், அவன் மௌனமாகத் திரும்பிவிட்டதைச் சொல்லுகையில், மன்மத ராவிடம் இப்போதும் கூட ஒருவிதத் தவிப்பு இருப்பதைப் புரிந்து கொண்டாள்.

சாம்பவி அவன் சொன்னதை உள்வாங்கி, ப்ராஸஸ் செய்து, பதிலளிக்க வார்த்தைகளைத் திரட்டும் முன்பே, மன்மத ராவ்
‘எனக்காக நீ வருத்தப்படாத, சங்கடப்படாத, நாம ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாம் என்று அவளுக்கு விடுதலைப் பத்திரம் வாசித்து விட்டான்.

அவளுக்குமே அவன் சொன்னதைத் தனிமையில் அசைபோட்டு, ஜீரணிக்க அவகாசம் தேவைப்பட்டது.

யோசிக்க, யோசிக்க மன்மத ராவின் மீதான மதிப்பு அதிகரித்ததே தவிர, அவன் இன்னொரு பெண்ணைக் காதலித்ததோ, ஓரிரு மாதங்கள் அவளுடன் சேர்ந்து வாழ்ந்ததோ, சாம்பவியை அதிகம் பாதிக்கவுமில்லை. அவளது விருப்பத்தில் மாற்றமும் இல்லை. அதற்கு, அவனது குரலில் ஒலித்த விலகலும், விவரித்த விதமும் கூடக் காரணமாக இருக்கலாம்.

குழந்தை உருவானதைக் குறித்து அவன் சொன்னது அவளை ரொம்பவே பாதித்தது. ஆனால், அவர்கள் தவம் செய்யவா ஓடிப்போனார்கள்?

தனித்து வாழத் தொடங்கிய பின், தடையேதுமில்லாத நிலையில் இளமையின் வேகத்தைத் தணிக்காமல், காத்திருக்கவா தோன்றும்?

ஆனாலும்…

சாம்பவி தனக்குத் தானே செய்துகொண்ட சமாதானங்களை மீறி மனதில் எழுந்த சிறு நெருடலை மன்மத ராவின் முதல் காதலைப் பெற்ற அந்தப் பெண் ஹைமாவின் மீதான பொறாமை என்று இனங்கண்டுகொண்டவள் விரைவிலேயே அதைப்
பொருட்படுத்தாது,
புறந்தள்ளிக் கடக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்றாள்.

நார்ஸிஸிசம் பற்றி மன்மத ராவுக்கு எப்படித் தெரியும் என்று புரிந்தது. அவனை, அவனது நேசத்தை, அக்கறையை ஹைமா தனக்குச் சாதகமாக உபயோகித்து இருக்கிறாளோ என்றும் தோன்றியது.

‘இதை அவர் கிட்ட சொல்லக்கூடாது. ஏன்னா, அவர் ஹைமா செய்தது தப்பு, சரின்னு எந்த விமரிசனமும் வைக்கலை. உள்ளதை உள்ளவாறே உரைக்கும் கண்ணாடி மாதிரி, நடந்ததை மட்டும்தான் சொன்னார்’


ஹைமா தன் வீட்டினரிடம் இருந்து மன்மத ராவைக் காப்பாற்றுவதற்காகக் கூட அமைதியாகச் சென்றிருக்கலாம் என்றும் தோன்றியது. ஆனால், அவர்களது காதல் பலப்படாத நிலையில் அதை அறிந்தும் தான் தப்புவதற்கு அவனைக் கருவியாக்கி இருக்கிறாள் என்பதுதான் நிஜம்.

வசதியற்ற வாழ்வுச்சூழலும், அதிகாரமின்மையும் அவளை மாற்றியும் இருக்கலாம். சென்றவள் நல்லவளாகவே இருக்கட்டுமே!


மன்மத ராவ் சொன்னதுபோல், அவளுக்கு அவன் கதையைக் கேட்டபின், அவனைத் திருமணம் செய்யக் கேட்டதில் வருத்தமோ, தயக்கமோ இல்லை.

மாறாக, தானா ஒருவரை விரும்பிக் கல்யாணம் செய்யக் கேட்டோம் என்று இன்னும் தன்னையே நம்ப முடியாத சாம்பவிக்கு ‘இனியும் நட்பு, கிட்புன்னு சொல்லி என்னை நானே ஏமாத்திக்கத் தயாரா இல்லை’ என்று நினைக்கவும் சிரிப்பு வந்துவிட்டது.

ஊரிலிருந்து வந்த கோபம் சிலநாட்களில் அடங்கிவிடவே, வழக்கம்போல் வீட்டிற்கு ஃபோன் செய்து நலம் விசாரிக்கிறாள்.

முன்பாக இருந்தால், இதுபோன்ற நிலையில் அப்பா, அம்மா என்ன சொல்வார்களோ, யார் என்ன நினைப்பார்களோ, தன்னால் அவர்களுக்கு அவமானம் வருமோ என்று பயமாக இருக்கும்.

ஆனால், ஏற்கனவே செய்யாத குற்றத்திற்கு, நிறைய தண்டனையை அனுபவித்து விட்டவளுக்கு, இப்போது
எதுவுமே பெரிதாகத் தோன்றவில்லை. மனதில் உறுதியும் தெளிவும் பிறக்க, மன்மதராவின் வருகைக்குக் காத்திருந்தாள்.

ஏனோ சம்பளமில்லாமல் விடுப்பை நீட்டித்திருந்த கல்பகோஷ் ஏற்கனவே இன்னும் திரும்ப வராததில், அதிதி தாம்னே யோசனையில் இருக்க, சாம்பவி நிம்மதியாக இருந்தாள்.

முப்பத்தாறு நாட்களை எப்படியோ உந்தித் தள்ளியவள், அவன் வரும் நாள், விமான நேரம், வழி எல்லாவற்றையும் கேளாமல் கேட்டு செவிவழி செய்தியாகத் தெரிந்து கொண்டாள்.

முதலில் அவனை அழைக்க, திப்ருகர் விமான நிலையத்தற்குதான் செல்ல நினைத்தாள். ஆனால், அவனுக்கென அலுவலக வண்டி வருமென்பதால், பேசுபொருளாவதை அவள் விரும்பவில்லை.

பர்ஸனல் வேலை என்று இரண்டு நாள் லீவ் போட்டவள், வெள்ளிக்கிழமை மாலை கொல்கத்தாவிற்கு வந்து, இரவு ஏர்போர்ட்டிலேயே அறை கிடைக்கவே, அங்கேயே தங்கினாள்.

நிதானமாக எட்டு மணிக்கு எழுந்து தயாராகி, காலை உணவை ஆர்டர் செய்யவெளியில் வந்தவள், எதிர்ப்புறத்தில் காஃபியுடன் மன்மத ராவின் தரிஸனம் கிடைக்க, பில்லிங் கவுன்ட்டரில் “டூ வெஜ் சான்ட்விச் பார்ஸல், காஃபி கேன்ஸல்”

இவ்வளவு சீக்கிரமாக அவனை எதிர்பாராதவளுக்கு, மகிழ்ச்சி பரவ, சத்தம் காட்டாது அவனது பக்கத்து இருக்கையில் அமர்ந்தவள், அவனது காஃபியைப் பறித்தாள். அவனது திகைப்பையும் மகிழ்ச்சியையும் ரசித்தாள்.

“ஹேய் சாம்பவி, மீரு இக்கட ஏலா உன்னாரு?” என்றவனின் முகத்திலும் புன்னகைதான்.

ஒரு சாண்ட்விச்சை அவனிடம் தந்தவள், காஃபியை உறிஞ்சி “பயங்கர சூடு”

“இதி லாலாஜலம் சாம்பவி”

“வாட்?”

“ஓ, இதி ஜூட்டா, எச்சில்”

“தெரியும்”

“ஒஃப்ஃஓ… இங்க எங்க வந்த?”

“உங்களைப் பார்க்கதான்”

“சாம்பவி…” என்றவனின் குரல் உள்ளே போய், மறுப்பாகத் தலையசைத்தான்.

“அதான் எல்லாம் சொல்லிட்டீங்கள்ல, இப்ப என்ன புதுசா?”

“அதி காது சாம்பவி, நேனு…”

அவனது காஃபி கப்பை அவன் கையிலேயே திணித்தவள் “என்னைப் புடிக்கலைன்னா நேரா சொல்லுங்க. இந்தத் தியாகி வேஷமெல்லாம் வேண்டாம்” என்று எழுந்து நாலெட்டு வைத்து நடந்து விட்டாள்.

பின்னாலேயே வந்த மன்மத ராவ் “ம்ப்ச், எங்க போற, சாம்பவி?”

“என்ன?”

“இல்ல… நீ… ஆனா…”

“இந்த ஆனா, ஆவன்னா, ஏபிசிடி எல்லாம் எனக்கே தெரியும். ஆளை விடுங்க. திங்கள் கிழமையன்னிக்கு ட்ரான்ஸ்ஃபருக்கு அப்ளிகேஷன் போடறேன். இன்னொரு காட்டுக்குத் தூக்கிப் போட சிபாரிசு செய்ங்க, பை” என்று திரும்ப, எட்டி அவள் முழங்கையைப் பிடித்து, அழைத்து / இழுத்து வந்து, பழைய இருக்கையில் அமர்த்தி, அருகில் அமர்ந்தான்.

“என்ன ஸார் கண்ணாமூச்சி விளையாடறீங்க?”

“...”

“என்னை விடுங்க ஸார்” என்று கையை விலக்க முயற்சிக்க, அவன் பிடி இறுகியது.

“பன்டு, என்னால நம்ப முடியலைடீ”

“!!!”

“சாம்பவி”

“ஸார்?”

“ஸார் ஸார்னா எப்டி லவ் பண்றது?”

“நமக்கு லவ்வெல்லாம் ஒத்துவராது ஸார், ஸ்ட்ரெய்ட்டா கல்யாணம்தான்”

“பன்டு, நீ என்னை நிஜமாவே…”

“வேணும்னா போய் ஏர்போர்ட் மைக்ல அனௌன்ஸ் பண்ணவா?”

“அமைதியான, வெக்கப்படற சாம்பவியா இது?”

“ஏன் சொல்ல மாட்டீங்க, நீங்க செய்ய வேண்டியதெல்லாம் நான் செஞ்சா அப்டிதான் இருக்கும்”

மன்மத ராவ் பக்கெனச் சிரித்துவிட, அவனை நிமிர்ந்து பார்த்த சாம்பவி, அவனது சிகையைத் தொடும் ஆவலை அடக்கினாள்.

முதலில் பார்த்தபோது, மொட்டை அடித்து சில நாட்களே ஆன நிலையில் இருந்தது, இப்போது,சுருள் சுருளாக நறுக்கிய வெங்காயம் போல் இருந்தது.


சாம்பவி “ரிங் ஆனியன், ஸ்ப்ரிங் ஆனியன்” எனவும் அவனுக்கு ஒரே சிரிப்பு.

“நேனு எந்துக்கு, நேனு எப்புடு சாம்பவி?”

“திடீர் திடீர்னு ஏன் ஜெமினி டீவியை ஆன் பண்றீங்க?”

“நான் ஏன் சாம்பவி, என்னை எப்படி?”

“நீங்க ஏன் ஒத்துக்கிட்டீங்க?”

“அது.. அது அப்டிதான். எப்போல இருந்து?”

“தெரியல, உங்களுக்கு?”

“அதேதான்”

வீடு செல்லும் வரை பேசினர். வீட்டுக்கும் பேசினர்.

*********************

நீலகண்டன் குறுக்கும் நெடுக்குமாக வீட்டை அளந்த வேகத்தில் அவரது கோபமும் டென்ஷனும் வெளிப்பட்டது.

அன்று அதி காலையில்தான் மனோஜும் தேவசேனாவும் தனிக்குடித்தனம் சென்றிருந்தனர்.

ஓய்வெடுக்க வந்தவள் நான்கு மாதங்களாகியும் பிடிவாதமாக இங்கேயே இருக்க, மனோஜும் எவ்வளவோ சமாதானம் சொல்லிதான் அழைத்தான். நடுவில் மூன்று வாரம் போல் இங்கு வராமலே இருந்தான். குழந்தை அப்புவுக்குக் காய்ச்சல் அதிகமாகி, ஃபிட்ஸ் வந்து மருத்துவமனையில் சேர்த்ததில், பதறிக்கொண்டு குடும்பமே வந்தது.

மனோஜின் அம்மா ஆஸ்பத்திரியில் வைத்தும் குழந்தையின் உடல்நிலை மோசமானதற்கு தேவாதான் காரணம், அக்கறையில்லை, பொறுப்பில்லை, கவனமில்லை என்று கத்தினார். அவரது மகளும் அவருக்குப் பின்பாட்டுப் பாட, கூட வந்த மனோஜும் வாயைத் திறக்காமல் இருக்கவே நீலகண்டனுக்குக் கோபம் வந்து விட்டது.

“என்ன சம்பந்தியம்மா, அவளும் சின்னப் பொண்ணுதானே, பொறுமையா எடுத்துச் சொன்னா செஞ்சுட்டுப் போறா, அதுக்கேன் இப்படிப் பேசறீங்க?” என்றுவிட்டார்.

“சின்னப் பொண்ணுக்கு ஒன்பது மாசக் குழந்தை இருக்கு. இன்னொரு குழந்தை வரத்துக்கு இருந்துச்சு. உங்க பொண்ணு அவ புள்ளையையும் கவனிக்கல, எம் புள்ளையையும் கவனிக்கல. புத்தி சொல்லி புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைப்பீங்கன்னு பார்த்தா நீங்களே சொல்லிக் குடுப்பீங்க போல”

குழந்தையைப் பார்க்க டாக்டர் வரவும் அப்போதைக்குப் பிரச்சனை அடங்கிவிட்டது. ஆனால், அவரது குற்றச்சாட்டில் கோபமடைந்த நீலகண்டன், குழந்தை உடல் தேறியபின், அடுத்த வாரத்தில் ஒருநாள், வீட்டுக்கு வந்த மனோஜை வைத்து விளாசி விட்டார்.

“தேவா ஏன் உங்களோட வர மாட்டேன்றான்னு இப்பதான் எனக்குப் புரியுது. வயசுல பெரியவங்க, இப்படியா பேசுவாங்க? சரி, படிக்கற வயசுல ஆசைப்பட்டு தப்புப் பண்ணிட்டான்னே இருக்கட்டும். ஆனா அதுக்கு அவ மட்டுமா காரணம்? இதுக்கு மேல என்னைப் பேச வைக்காதீங்க மனோஜ். சட்டுபுட்டுனு ஒரு வீட்டைப் பார்த்து தனியாப் போயிடுங்க. அதுவரை தேவாவும் அப்புவும் இங்கதான் இருப்பாங்க” என்றுவிட, தேவசேனாவுக்கு இன்னுமே வசதியாகப் போனது.

மூன்று மாதங்களாகவே இதைச் சொன்ன தேவாவை சமாதானம் செய்யும் முயற்சிகளைக் கை விட்ட மனோஜ், தன் வீட்டில் போய்ச் சொல்ல, அவர்களும் ‘எல்லாம் உன் அவசரத்தால, அந்தக் குடும்பமே சரியில்லைனு இப்பதான் தெரியுது’ என்று அவனைத்தான் குற்றம் கூறினர்.

ஒரு நடுத்தர வியாபாரக் குடும்பத்தில், தந்தை செயலாக இருக்க, எல்லோரும் இணைந்து உழைக்கும் கூட்டுக் குடும்பத்தில், செலவுக்குப் பணம் கேட்டால் கிடைக்குமே தவிர, சொத்துகள் பிரிக்கப்படுவதோ, தனிப்பட்ட மாதாந்திர வருமானமோ அத்தனே எளிதல்ல.

அதிலும் இரண்டு, மூன்று மகன்கள் இருக்கையில் ஒருவர் தனியே போவது, மற்றவருக்குத் தூண்டுதலாக இருப்பதோடு, வித்தியாசங்களும் விரிசல்களும்தான் அதிகரிக்கும்.

இங்கிருக்கும் அத்தனை வசதிகளும் தனி வீட்டில் வேண்டுமென்றால், மனோஜுக்கென மாதாமாதம் கணிசமான தொகை ஒதுக்க வேண்டும். தந்தை தயங்க, இரண்டு பக்கமும் இடி வாங்கிய மனோஜ் சோர்ந்து போனான்.

கடைசியில், அண்ணாநகர் ஷோரூமின் பொறுப்பை அவனிடம் கொடுத்து, அருகிலேயே அவர்களுக்குச் சொந்தமான ஒரு இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்டில் அவர்களைக் குடிபோகச் சொன்னார்கள். இன்று காலையில்தான் பால் காய்ச்சினர்.

இன்றும் சம்பந்தியம்மா “எங்க குடும்பத்தை மொத்தமா பிரிச்சுட்டீங்க இல்ல? உங்க பொண்ணு எப்படி தனியா சமாளிக்கறான்னு பாக்கத்தானே போறேன்” என்றார்.

நல்ல நாளில் வாக்குவாதம் வேண்டாம் என சகுந்தலா கணவரைப் பேசாதிருக்கும்படி சொன்னார். மனோஜ் வீட்டாருக்கு அதுவே கோபத்தைத் தூண்டியது.

“அப்படி என்ன சாதிச்சுட்டீங்கன்னு இத்தனை அலட்சியம்? உங்க பையனும் இது போலப் போக மாட்டான்னு என்ன நிச்சயம்?”

தாயையும் மாமனாரையும் அடக்கி, கண்ணைக் கசக்கிய மனைவியை சமாளிப்பதற்குள் மனோஜ்தான் பெரும்பாடு பட்டுப்போனான்.

வீட்டுக்கு வந்தும் அந்த வேகம் தணியாமல் நடந்தவருக்கு ரவிச்சந்திர ராவ் என்பவர் ஃபோன் செய்து, மாலை நாலு மணிக்குத் திருமண விஷயமாகப் பேச வருவதாகச் சொல்ல, எதுவும் புரியாமல், கோபத்துடன் டென்ஷனும் ஏறியது.

சொன்னபடியே, சரியாக மாலை நாலு மணிக்கு, சாம்பவியைப் பெண்கேட்டு வந்த ஆந்திரத் தம்பதிகளை ஆத்திரத்தோடு பார்த்தார், நீலகண்டன்.
 

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
18
நீலகண்டன் என்ன தான் உங்களுக்கு பிரச்சினை... இப்போ சொன்ன பொண்ணு பத்தி இன்னும் தெளிவு இல்ல இதில் கோவம் வேற
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
36
நீலகண்டன் உருப்படியாக பேசுவார் என்று தோன்றவில்லை.
 
Top Bottom