• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

வானப் பிரஸ்தம் - 5

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
வானப் பிரஸ்தம் - 5



காவ்யாவுடைய பெரிய வீக்னஸ் அதுதான். நாலு நண்பர்களை சேர்ந்தாற் போல் ஓரிடத்தில் பார்த்து விட்டால் வாயிலிருந்து கவிதை வரிகள் அருவியாகக் கொட்டும். அதுவும் தமிழாசிரியர் நல்லசிவத்தின் முகம் சுருங்குவதைப் பார்க்கப் பார்க்க அவளுடைய நாவிலிருந்து இன்னும் அதிக வேகத்துடன் கவிதை வரிகள் பாயும்.



நண்பர்களின் மத்தியிலே நல்லதொரு

கவிதை சொல்ல

வந்தேனே! வந்தேனே! நான் வணக்கம்

தந்து நின்றேனே!

மாலை நேரத்தின் மயக்கும் பொழுதில்

வீசுது தென்றல்!

மனங்களில் உற்சாகம் குதிக்குது துள்ளிக்

குழந்தை போல!



என்று காவ்யா சொல்லி முடிக்க, நல்லசிவம் தலையில் அடித்துக் கொண்டு,



" கொலை, கொலை, தமிழின் கொலை. இறைவா இறப்பிற்குப் பின்னரும் எனக்கு ஏனிந்தத் தொல்லை?"



" அப்படி என்ன குற்றம் கண்டுபிடித்தீர் ஆசானே என் கவிதையில்? நீங்கள் என்ன நக்கீரரா? என்னிடம் சிவனைப் போல நெற்றிக் கண் இருந்திருந்தால் என்றோ எரித்திருப்பேன் உங்களை ."



" குற்றமா? ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல? அத்தனை குற்றங்கள். தளை தட்டுகிறது அனைத்து இடங்களிலும். ஆமாம், இது என்ன பா என்று சொல்ல முடியுமா? வெண்பாவா, ஆசிரியப் பாவா? விருத்தமா? கலிப்பாவா?



நேர், நிரை ,சீர், தளை, தேமா, புளிமா,

கருவிளம், கூவிளம், எதுகை ,மோனை ஏதாவது தெரியுமா? கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இல்லை படித்திருக்கிறீர்களா? செவிகளில் வெந்நீரை ஊற்றியது போல உணர்ந்தேன்."



" ஐயா, இன்னமும் சங்க காலத்துச் செய்யுளா எழுதுகிறோம்?..கவிதை எல்லாம் எவ்வளவோ புது வடிவம் எடுத்து விட்டது தெரியுமா? ஹைக்கூ என்றால் தெரியுமா இவருக்கு?"



" ஜப்பான் போன்ற வெளிநாட்டுக் காரன் கூறினான் என்று தலையில் வைத்துக் கொண்டாடும் அற்பப் பதர்களுக்கு இரண்டடிகளில் சிறப்பாக எழுதப் பட்ட திருக்குறளின் சிறப்பு தெரிவதில்லை."



விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியதும் உள்ளே குதித்தார் முத்தரசு.



" இன்னாபா, படா பேஜாரா கீது ஒங்களோட. மேட்டர் ஸீரியஸாகப் போவுது. நீங்க இன்னாமோ தேமா,மாமா னு டமாஸு பண்ணிக் கிட்டு. நாலு தோஸ்த்தப்

பாத்தமா. நாஷ்டா வாங்கித் துன்னமா.வேலை கலாஸ். இன்னாப்பா இது .ஹக்கூம்........."



ஆரம்பித்து விட அங்கிருந்த எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாக

சிதறித் தெறித்து ஓட, எல்லோரையும்

இழுத்து வைத்து மதன் தாத்தா பேச ஆரம்பித்தார்.



" இதோ பாருங்கள். நிறைய முக்கியமான வேலைகள் இருக்கின்றன. நமக்குள் ஒற்றுமையாக இருந்து முடிக்க வேண்டிய நேரம் இது. கமலாகர் ஸார், கம்ப்யூட்டர் மூலமாக என்னவெல்லாம் இண்டர்நெட் பயன்படுத்தி செய்ய முடிந்தது என்று எங்களுக்கு விளக்கமாகச் சொல்லுங்கள்."



"நிறைய அக்கவுண்டுகளை ஹேக் செய்து விட்டேன். முக்கியமான மெயில்களை அலசிப் பார்த்து நமக்கு வேண்டிய விஷயங்களைக் கண்டுபிடிக்க இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகலாம். இந்தக் குழந்தைகள் நம்மைப் பற்றிய விஷயங்களை வெளியே சொல்ல ஆரம்பித்து விட்டால் சில பிரச்சனைகள்

வெடிக்கலாம். அப்போது என்ன செய்ய

வேண்டும் என்று நாம் யோசித்து வைக்க வேண்டும். எனக்கென்னவோ அதிக நாட்கள் நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா என்று

தெரியவில்லை."



" அதெல்லாம் சமாளித்து விடலாம். நல்ல குழந்தைகள். அவர்களாக அப்படி நம்மை மாட்டி விட மாட்டார்கள். தாத்தா பாட்டி அன்பிற்காக ஏங்கிக் கொண்டு நம்மிடம் அந்த எதிர்பார்ப்புடன் தான் பழகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் தானே? நிலைமை அவர்கள் கையை மீறி அவர்களால் சமாளிக்க முடியாத நிலை வரலாம்! அப்படி வந்தால் ஒன்றும் செய்ய முடியாது, பார்க்கலாம்"

என்று மதன் தாத்தா சொல்லி முடிக்கக் குழந்தைகளுடன் எல்லாப் பேய்களும் அவரவர் வீடுகளுக்குச் சென்றன.



காவ்யா இருப்பது குழந்தை தீப்தியுடன். தமிழாசிரியர் நல்லசிவம் குழந்தை துருவுடன். முத்தரசு இருப்பது குழந்தை வருணுடன்.



இதில் குறிப்பிடத்தக்க விஷயம் நல்லசிவம் இருக்கும் வீடு ஒரு பெங்காலிக் காரர்கள் வீடு. இரண்டு தலைமுறைகளாகச் சென்னையில் இருப்பதால் தமிழ் நன்றாகத் தெரியும். அதாவது பேச்சுத் தமிழ் நன்றாக மேனேஜ் செய்து விடுவார்கள். ஆனால்

எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் ஆறு வயதான துருவிற்கு ஸ்கூலில் தமிழ்ப் பாடங்கள் கற்றுக் கொள்வது கஷ்டமாக இருந்த சமயத்தில் நல்லசிவத்தின் பேய் அவனுடன் அவன் ரூமில் இருப்பதால் நன்றாகத் தமிழ் கற்றுக் கொண்டு வருகிறான்.



அவனுடைய பெற்றோருக்கு

திடீரென்று தங்களுடைய மகன் தமிழில் நல்ல மார்க்குகள் வாங்க ஆரம்பித்ததில் பயங்கர சந்தோஷமாகி தினமும் ரஸகுல்லா, சந்தேஷ், மிஷ்டி தொஹி. (தஹியை பெங்காலிகள் தொஹி என்று சொல்வார்கள்.அவர்கள் பேசுகையில் அ என்பது ஓ ஆகி விடும்.சக்கரவர்த்தி தமிழில். சக்ரபொர்த்தி பெங்காலியில். பஜன் என்பது பொஜன் ஆகி விடும்.) அதாவது இனிப்புத் தயிர் ( அருமையான சுவையுடன் இருக்கும்) எல்லாம் சாப்பிடக் கொடுத்தார்கள்.அவனால் நமது நல்லசிவம் தாத்தாவிற்கும் இந்த வங்காளத்து ஸ்பெஷல் இனிப்பு வகைகள் தங்குதடையில்லாமல் கிடைத்தன.



ரஸகுல்லா, சந்தேஷ் என்ற பெயர்களை எப்படித் தூய தமிழ்ப் படுத்துவது என்று

ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார் நல்லசிவம் தாத்தா. தனது உச்சந்தலையில் இருந்த சில முடிகளையும் அதிகம் யோசித்துப் பிய்த்து எறிந்ததால் தலை சொட்டையாகி விட, அவருடைய புதிய சொட்டைத் தலை அவதாரத்தைக் கண்டு தனது கவிதைக்கு அடுத்த கருவாகக் காவ்யா உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டார்.(பேய்க்குத் தலைமுடி உண்டா?)



ரஸகுல்லா என்பதற்கு ஒருவழியாக இனிப்புப் பாலாடை உருண்டை என்று பெயரிட்டு விட்டு சந்தேஷுக்கு என்ன பெயர் சூட்டுவது என்று கொஞ்சம் திண்டாடிப் போனார். சந்தேஷ் என்றால் உண்மையில் செய்தி அதாவது தகவல் என்று அர்த்தம். இனிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்போது ஒருவருக்கொருவர் சந்தேஷுடன் அனுப்புவது வங்காளத்து வழக்கம். இதுவும் பால் கோவாவில் சர்க்கரை கலந்து செய்யப்படும் இனிப்பு தான்.இதற்கு இனிப்பின் தூதுவன் என்று அழகாகப் பெயரிட்டு விட்டு மிஷ்டி தொஹிக்கு இப்போதைக்கு இனிப்புத் தயிர் என்று பெயரிட்டு விட்டு மகிழ்ந்து போனார் நல்லசிவம்.



காவ்யா இருக்கும் வீடு குழந்தை தீப்தியின் வீடு. அவளுடைய அம்மா வடநாட்டுப் பெண். அப்பா தமிழ்ப் பையன். அதனால் குழந்தை தமிழும் ஹிந்தியும் கலந்து கட்டி அடிப்பாள். காவ்யாவிற்கு பயங்கரக் கொண்டாட்டம். இப்போது நிறைய ஆங்கிலச் சொற்கள் ஆன்லைன் காதல், வாட்ஸப் மெஸேஜ், ட்விட்டர் வம்பு,ஷஃபேஸ் புக் நட்பு போன்ற பற்பலச் சொற்கள் சுத்தத் தமிழ்ச் சொற்களாகக் கவிதைகளில் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்ட மாதிரி விரைவில் ஹிந்திச் சொற்களையும் கவிதைகளில் கலந்து கட்டி ஒரு வழி செய்து விடலாம் என்று முடிவு செய்து உற்சாகத்தில் தரைக்கும் கூரைக்குமாகக் குதித்துக் கொண்டிருக்கிறாள். பேயென்பதால் இதே மாதிரியெல்லாம் செய்ய முடிகிறது. பேயாக இருப்பதால் தான் இந்த சௌகர்யம்.



ஆனால் காவ்யா மறந்து போன விஷயம் காவ்யா எழுதும் பேய்க் கவிதைகளை அவர்களுடைய பேய் நண்பர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற விஷயம் தான். அந்தக் குழுவில் அவளுடைய எதிர்க்கட்சி விமர்சகர் நல்லசிவமும் இருக்கிறாரே.

சலோ டீக் ஹை.தேக்கா ஜாயேகா.( பரவாயில்லை.பார்த்துக் கொள்ளலாம்.)

ஆமாம் இப்போதெல்லாம் காவ்யா தீவிரமாக தீப்தியிடம் இருந்து ஹிந்தி கற்றுக் கொண்டு வருகிறாள்.



தீப்தி காவ்யாவிடம் இருந்து குட்டிக் குட்டி ஹைக்கூ கவிதைகள்

எல்லாம் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு சென்று தமிழும் ஹிந்தியும்

கலந்து கட்டித் தனது ஃப்ரண்ட்ஸ் க்ரூப்பில் அனைவரையும் வதைத்து விடுகிறாள். அசுர வதத்தில் இப்போதெல்லாம் அவளுடைய ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் தீப்தியைக் கண்டதும் தலைதெறிக்க ஓடும் நிலை வந்து விட்டது. எல்லாம் காவ்யாவின் கைங்கர்யம் தான்.



அடுத்ததாக வருணின் நிலை தான் படு திண்டாட்டம் ப்ளஸ் கொண்டாட்டம். குழந்தை

போல் அவனுடன் ஒட்டிக் கொண்டு அவனுடன் விளையாடி அவனைச் சிரிக்க வைத்துக் கதைகள் எல்லாம் சொல்லி ஒரு நல்ல ஃப்ரண்டாக இருக்கும் முத்தரசு தாத்தா நடிகர் நாகேஷ் மாதிரி பலகலை வல்லுநர். அவ்வப்போது தாத்தா பேசும் அழகான மெட்ராஸ் தமிழைக் குழந்தை வருண் படு வேகமாக பிக்கப் செய்து வருகிறான். சங்கத் தமிழ் வளர்த்த மதுரைக் காரர்களான வருணின் பெற்றோர் அவனிடம் அவ்வப்போது தலை காட்டும் மெட்ராஸ் தமிழ் வார்த்தைகளால் க்ளீன் போல்டு ஆகித் திருதிருவென்று முழிப்பார்கள்.




" இன்னாம்மா நாஷ்டா ரெடியா? துன்னுட்டு

இஸ்கோலுக்குப் போகணும்."



" இன்னாபா பெரிய ரவுஸு பண்ணறே! படு டமாஸா கீது."



என்றெல்லாம் வருண் பேச ஆரம்பிக்கக் கவலையுடன் அவனைப் பார்த்துத் திகைத்துப் போய் நிற்கிறார்கள் வருணின் பெற்றோர் இருவரும்.
 

Author: siteadmin
Article Title: வானப் பிரஸ்தம் - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

New member
Joined
Oct 3, 2024
Messages
17
இந்த பேய்களின் கொட்டம் படு கொண்டாட்டம் இருக்கு. அருமை
 
Top Bottom