• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் இறுதி அத்தியாயம்

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
167
தொட்டுத் தொடரும் - இறுதி அத்தியாயம்
காரில் இருந்து இறங்கிய அபிமன்யுவின் காதுகளில் குழந்தைகளின் சிரிப்புச் சத்தமும் அதைத் தொடர்ந்து அவர்கள் அருகில் வரும் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தத்தித் தத்தி நடக்கும் பருவத்திற்கு வந்துவிட்ட இருவரும், தந்தையின் கார் சத்தத்தை வைத்தே அவன் வரவை உணர ஆரம்பித்து இருந்தனர்.



தாத்தாவும் பாட்டியும் முழு நேரமும் கவனித்துக் கொண்டாலும், தாய் தந்தை தனி தானே. அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி வாசலுக்கே வந்து விடுவாள் ரக்ஷிதா.



“ஹேய்! ராஜாத்தி! நில்லு டா!” என்ற படி பேரனைத் தூக்கிக் கொண்டு பின்னால் ஓடி வந்தார் கிருஷ்ணன்.



“ஹேய்! செல்லக் குட்டி! அப்பாகிட்ட வாங்க வாங்க. விழுந்திடப் போறீங்க” என்று மகளைத் தூக்கியவன், “ராஜாப் பையன் சமர்த்தா இருந்தானா தாத்தா கிட்ட. நீ சொகுசாவே தூக்கி வச்சுக்கோன்னு சொல்ற பையா. டூ பேட். இறக்கி விடுங்க பா அவனை. கொஞ்சமாவது ஆக்டிவா இருக்கட்டும்” என்ற தந்தையிடம் குதித்துக் கொண்டு தாவினான் ராஜா, ராஜூ, ரஜூ என்று செல்லமாக அழைக்கப்படும் அபராஜித்.



“பாத்தீங்களா அப்பா. இவர் உடம்பு வலிக்கிற வேலை எல்லாம் செய்ய மாட்டார்” என்று தந்தையிடம் சொன்னவன்,



“வண்டியெல்லாம் செக் பண்ணியாச்சு பா. அம்மா, ஸ்ரீ, பேக்கிங் முடிஞ்சதா? ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்ற கேட்டபடி தந்தையுடன் உள்ளே போனான்.



“பசங்களைப் பார்த்துக்கிட்டாலே பெரிய ஹெல்ப் தான்” என்று மனைவியும், “இரண்டு பேரும் உன்னை ரொம்பவே தேடறாங்கப்பா. பகல்ல ஆஃபீஸ்ல இருந்து வராதேன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிற. அவங்க டைம் பார்த்து வெயிட் பண்றாங்க. இன்னைக்கு நீ கொஞ்சம் லேட். அதான் ரக்ஷி வாசலுக்கே வந்துட்டா” என்று தாயும் பதில் சொன்னார்கள். தாயின் அறிவுரைப்படி அவர்களைத் தூங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றான் அபிமன்யு.



“ரக்ஷி ரஜூ நாங்க வந்திட்டோம்” என்று வாசலில் கேட்ட சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த வாண்டுகள் இருவரும், சுயமாகக் கட்டிலை விட்டு இறங்கி தவழ்ந்தே வாசலுக்கு விரைந்தார்கள்.



“போச்சுடா’ என்று அபிமன்யு தலையில் கை வைக்க, “ஹேய் என்னடா? என்ன போச்சு?” என்றபடி வந்தாள் அவனது உடன்பிறப்பு.

“ஷ்ஷ் கேசவ், மானவ், சத்தம் போடாமல் வாங்க. பாப்பா இரண்டு பேரும் தூங்கிட்டு இருப்பாங்க” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாசலுக்கு வந்த பிள்ளைகளை அள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் சரண்.



“சின்னக் குட்டீஸ்! படு உஷார்டா நீங்க” என்றபடியே வந்தான்.



“என்ன ஆச்சா? ராங் டயத்துல ஆஜராகி அவன் கஷ்டப்பட்டு தூங்க வச்ச பிள்ளைகள எழுப்பி விட்டு இருக்கியே. அதைத் தான் சொல்றான். இந்தா பிடி. நீ தான் நாலையும் சமாளிக்கணும்” என்று மைத்துனன் குழந்தைகளை மனைவி மடியில் விட்டான்.



“சொல்ல மறந்துட்டேன் கவி, ஊருக்குப் போயிட்டு திரும்பி வர வரைக்கும் நீ தான் சமாளிக்கணும்” என்றவனை மனைவி துரத்தினாள், கையில் குழந்தைகளுடன்.



வாசலில் அடுத்த காரின் ஓசை கேட்க, ராகவியின் கைகளில் இருந்த குழந்தைகள் குதித்தார்கள். “ஹேய் எல்லாம் ரெடியா? நான் ஏதும் ஹெல்ப் பண்ணனுமா?” என்றபடி வந்த ஸ்ரீவத்ஸனைக் கண்டு அனைவரும் சிலையாக நிற்க குழந்தைகள் மாமனிடம் தாவினார்கள்.



“என்னப்பா, ஏன் இப்படி நிக்கிறீங்க எல்லோரும்?” என்று கேட்டவனுக்கு பதில் மனைவியிடம் இருந்து வந்தது.



“அதுவா அத்தான்! பேக்கிங்ல நீங்க ஹெல்ப் பண்றேன்னு சொன்னதும், சொன்ன டயத்துக்கு கிளம்பிடுவோமா? இல்லை ப்ரோகிராம் எல்லாம் போஸ்ட் போன் பண்ணனுமான்னு யோசிக்கிறாங்க. வேறேதும் இல்லை” என்று விம் போட்டு விளக்கினாள் அவள்.



“நீ ஏம்மா சொல்ல மாட்ட? அவனை மட்டும் சொல்ற? உனக்கு யார் இப்போ பேக்கிங் செஞ்சது? எல்லோரும் கேட்டுக்கோங்க.. பேக்கிங்லயும் இவங்க இரண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடிதான். இரண்டு பேருக்கும் நான் தான் பேக் பண்ணி இருக்கேன்” என்று மருமகளின் புகழ் பாடினார் கௌசல்யா.



பார்கவி அருகே வந்த சரண் அவசரமாகக் கீழே எதையோ தேடினான். கேள்வியாக நோக்கிய எல்லாருக்கும், “இல்லை, நம்ம ஜில்லோட மூக்கு உடைஞ்சு கீழே விழுந்ததே, நீங்க யாரும் பார்க்கலையா?” என்று சொல்லி விட்டு, வாசலை நோக்கி ஓடினான்.



“சரண், வாட் இஸ் திஸ். கிளம்பற நேரத்தில விளையாடிட்டு. இன்னும் பத்து நிமிஷத்தில, எல்லாரும் கிளம்பணும் டெம்ப்போ வந்தாச்சு பாருங்க” என்றபடி வந்தார் ராகவன்.



அனைவரும் குடும்பமாக, உடுப்பி கோவிலுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அபிரக்ஷிதா மற்றும் அபராஜித் ஆகியோருக்கு கிருஷ்ணனின் சந்நிதியில் மொட்டை போட்டு காது குத்த வேண்டும் என்பது, ஸ்ரீநிதியின் வேண்டுதல்.



அதனை முடித்துக் கொண்டு, எல்லாரும் அருகில் இருந்த மால்பே கடற்கரையில் நான்கு நாட்கள் தங்கி வரவேண்டும் என்று திட்டம் போட்டு இருந்தனர். மருத்துவர்கள் நிறைந்த குடும்பம் என்பதால், கிடைத்த ஒரே வார ஓய்வைச் சரியாகப் பயன்படுத்தத் திட்டம் போட்டனர்.



ஒரு டெம்ப்போ டிராவலரில் மொத்த குடும்பமும் அடுத்த பத்து நிமிடத்தில் உடுப்பி நோக்கிப் பயணித்துக் கொண்டு இருந்தது. மாலை நான்கு மணிக்கு கிளம்பியவர்கள், கொண்டு வந்து இருந்த இரவுச் சாப்பாட்டினை வழியில் முடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.



காலை ஆறு மணிக்கெல்லாம் உடுப்பியில் குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. இரு குழந்தைகளும் சமர்த்தாக இருக்க, அவர்களின் பேற்றோரும் அமைதியாக இருக்க, ராகவி தான் கண்ணை மூடிக்கொண்டு டென்ஷனாக இருந்தாள்.



ஒருவர் பின் ஒருவராக வத்ஸன் மடியில் வைத்து மொட்டை அடிக்கலாம் என்று முடிவு செய்து ரஜூவை முதலில் வத்ஸன் மடியில் வைத்தார் ராதா.



“ஹலோ! என்ன இங்க வேடிக்கை பார்க்கவா வந்தீங்க. வந்த வேலையைக் கொஞ்சம் பார்க்கலாமே” கேள்வி கேட்ட நிதியைப் புரியாமல் பார்த்தான் சரண்.



“இப்படி உட்காருங்க பார்ப்போம். இங்க தான். இப்படி திரும்பி” என்று வத்ஸனின் அருகில் அவனை அமர்த்தியவள்,



“இந்தாங்க மாமாவா லட்சணமா பிடிங்க, உங்க மருமகளை” என்று ரக்ஷியைக் கையில் கொடுத்தாள். அவன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதைப் பார்த்தவள், “மறக்காமல் மாமன் சீரையும் செஞ்சிடுங்க. பதிலுக்கு நாங்களும் சரியா செஞ்சிடுவோம். கரெக்ட் தானே அண்ணா” என்றாள் முத்தாய்ப்பாக.



அனைவரும் அந்தப் பேச்சில் மனம் நெகிழ, சரணோ அந்த நாள் முழுவதும் அமைதியாகவே இருந்தான். குழந்தைகள் மொட்டையைத் தடவிப் பார்த்து உதட்டைப் பிதுக்கி அழ, அதுவும் அவன் கவனத்தைத் கவரவில்லை.



ஏன் அமைதியாக இருந்தான் என்று அவர்களது மால்பே கடற்கரை நோக்கிய பயணத்தில் தெரிந்தது.

உடுப்பியில் சுமார் ஆறு கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு பரபரப்பான அழகான கடற்கரை. இந்த கடற்கரை நீர் பிரியர்களை ஈர்க்கிறது. ஜெட் ஸ்கை, வாழை சவாரி, வேக படகு சவாரி மற்றும் பல போன்ற நீர் விளையாட்டுகள் உள்ளன. முன்பு, துறைமுகமாக இருந்த கடற்கரை இப்போது நகரத்தின் சலசலப்பில் இருந்து விலகி விடுமுறைக்கு ஏற்ற இடமாக உள்ளது.



உடுப்பியில் இருந்து மத்வர் அவதரித்த பாஜகசேத்திரம் சென்று விட்டுத் திரும்பி வந்து கொண்டு இருந்தார்கள்.

மால்பே பீச் ரிசார்ட் வந்து சேரும் வரையான முப்பதே நிமிடங்களில், அவர்கள் பயணித்த டெம்ப்போவில், ‘மலர்ந்தும் மலராத’ என்று சிவாஜி கணேசனில் ஆரம்பித்து, ‘உன் கூடவே பொறக்கணும்’ என்று சிவகார்த்திகேயன் வரை பாடிய அண்ணன் தங்கை பாடல்களாக ஒலித்தது.



டிரைவரின் விருப்பம் என்றே ஸ்ரீநிதி உட்பட அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்தனர்.

பீச் ரிசார்ட்டில் அவர்கள் இறங்கிய போது கடைசியாக இறங்கிய சரணிடம், டிரைவர் வந்து, “சார் உங்க சாங் கலெக்ஷன் எல்லாமே சூப்பர் சார். உங்க தங்கச்சி மேல அவ்வளவு பிரியமா சார். கொடுத்து வச்சவங்க சார் அவங்க” என்று சொன்னதைக் கேட்ட இளையவர்கள் அனைவரும் ஆணியடித்தது போல் நின்றார்கள்.



கையில் மகளைத் தூக்கிக் கொண்டு இருந்த ஸ்ரீநிதி அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள். மற்றவரும் அவள் பின்னால் சரணைத் துரத்தினர். அவனது வேகத்துக்கு குழந்தையுடன் துரத்த முடியாமல் நின்று விட்டவள்,



“டேய் அண்ணா! ஓடாதே நில்லு டா. அபி அவனைப் பிடி” என்று கத்த,

இடுப்பில் இருந்த ரக்ஷியும் மழலையில் “அப்பா மாமா பிடி” என்று தாய்க்கு உதவிக்கரம் நீட்டினாள்.



அதற்குள் நண்பர்கள் இருவரும் சரணைப் பிடித்திருக்க, ராஜூவில் ஆரம்பித்து அனைவரும் அவனை மொத்தி எடுத்தனர்.



அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு, அபிமன்யுவிடம் “என் தங்கச்சி என்னை அண்ணான்னு கூப்பிட்டுட்டா! மச்சான் கூப்பிட்டுடா” என்று சொல்லியவாறே அவனையும், வத்ஸனையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.



அவர்களின் ஜோடிகளும் அதே சந்தோஷத்துடன் அருகில் நிற்க, தூரத்தில் இருந்து பார்த்த பெரியவர்கள் தங்களது வாரிசுகள் இன்று போல் என்றும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தினார்கள்.



நாமும் இவர்களது நட்பு என்றும் இதுபோல் தொடரட்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்.



*சுபம்*
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் இறுதி அத்தியாயம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
180
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Top Bottom