• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீட்டாத வீணை 4

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீட்டாத வீணை

அத்தியாயம் 4

அன்றைய இசை நிகழ்ச்சி பவித்ராவின் மனதில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியது. இசை வேண்டாம் என்று ஒதுக்கியதால், எதையோ இழந்து விட்டது போல உணர்ந்தாள்.

" தப்பு பண்ணிட்டேன் அதிதி. நீ சொன்னது சரி தான். மியூசிக்ங்கறது மனதுக்கு அமைதி தரக் கூடியது. குழந்தையிலேயே எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பை எல்லாம் என்னோட முட்டாள்தனத்தால இழந்துட்டேன். இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? போனது போனது தான். அடுத்த ஜன்மத்திலயாவது மியூசிக்கை விரும்பற பெற்றோர் எனக்கு அமையணும்" என்று பவித்ரா பேசியது அவளுடைய ஆழ்மனதில் ஒளிந்து கொண்டிருந்த ஏக்கத்தைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியது.

" இப்ப எதுக்கு இப்படி ஓவரா ஃபீல் பண்ணறே? இப்பக் கூட நீ விரும்பினால் கத்துக்கலாமே? உனக்கு என்ன அப்படி வயசாயிடுச்சா என்ன? அறுபது வயதைத் தாண்டினவங்க கூட இளமையில் கத்துக்க முடியாத விஷயங்களை வயசான காலத்துல செஞ்சு சாதிக்கறதில்லையா? ஒரு பெண் அறுபது வயதுக்கு அப்புறம் பி. ஹெச். டி. செஞ்சு டாக்டரேட் வாங்கினதா எங்கயோ படிச்சேன்.நீயும் விருப்பமிருந்தா இப்பக் கூட மியூசிக் கத்துக்கலாமே? " என்றாள் அதிதி. நம்பமுடியாமல் அவளைப் பார்த்தாள் பவித்ரா.

"நிஜமாவே இப்போக் கத்துக்கறது பாஸிபிள்னு சொல்லறயா? "

" பின்னே என்ன? அதையே தான் அழுத்தம் திருத்தமாச் சொல்லறேன். இன்னும் என்ன தயக்கம்? எவரி திங் இஸ் பாஸிபிள் மை டியர். நீ மட்டும் சரின்னு சொல்லு. நான் ஐடியாவைக் கொட்ட ஆரம்பிக்கறேன் பாரு" என்று தயாரானாள் அதிதி.

" அப்படின்னா அப்பா… … " என்று இழுத்தாள் பவித்ரா.

" அட ராமா! " என்று தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள் அதிதி.

" உஷ், அப்பா, தாங்க முடியலையே? ஏய் பவி, இங்கே பாரு. இன்னமும் தியாகம், நீதி, நேர்மைன்னு கதை விட்டுட்டு உன் ஆசையைச் சிதைச்சுக்காதே. அப்பா, அப்பான்னு அப்பாவுக்காக வாழறதை நிறுத்து. இனிமேலாவது உனக்காக, உனக்காக மட்டும் வாழ ஆரம்பி. மத்தவங்களுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிட்டு வாழறதை நிறுத்து. சுதந்திரமா எந்த வித நிபந்தனையையும் சேர்க்காமல் உன்னோட விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுத்துப் பாரு. அதில கெடைக்கற சந்தோஷமே தனி. அதுக்காக உங்கப்பாவை வெறுத்து ஒதுக்கச் சொல்லலை நான். அப்பாவுக்காக மட்டும் வாழறதை நிறுத்திட்டு உனக்காகவும் வாழ ஆரம்பி" என்று அதிதி மேலும் மேலும் எடுத்துச் சொல்லி அவளுடைய மனதைக் கரைத்தாள்.

" சரி, ஆனா அப்பாவுக்குத் தெரியாமக் கத்துக்கற மாதிரி ஏதாவது ஐடியா சொல்லு ப்ளீஸ் " என்று கேட்டாள் பவித்ரா.

" என்ன ஐடியா? எதுக்கு ஐடியா? " என்று கேட்டுக் கொண்டே, அவர்களுடைய உரையாடலின் குறுக்கே புகுந்தான் அநிகேத்.

" ஓ, நீங்களா? முதலில் உங்க கிட்ட ஸாரி சொல்லிடறேன். உங்க புரோகிராம் நிஜமாகவே நல்லா இருந்தது. தப்பா நினைச்சுட்டேன்" என்று உண்மையான வருத்தத்துடன் பேசிய பவித்ராவை, சிரித்த முகத்துடன் பார்த்தான் அநிகேத்.

" இட் இஸ் ஓகே. உங்களுக்குக் கடந்த காலத்தில் ஏதோ கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதுனால தான் இந்த மாதிரி நடந்துக்கிட்டீங்கன்னு புரிஞ்சுது. லெட் அஸ் பீ ஃப்ரண்ட்ஸ். இனிமேல் நீங்க ரெண்டு பேரும் என்னை அநிகேத்னு பேர் சொல்லியே கூப்பிடலாம். இப்போ சொல்லுங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுக்கு ஐடியா வேணும்? " என்று கேட்டான்.

"அதுவா? பவித்ராவோட அப்பாவுக்கு
மியூசிக்னாலே பிடிக்காது. அவருக்காகக் தன்னோட ஆர்வத்தைக் குழி தோண்டிப் புதைச்சு வச்சிருந்தா பவித்ரா. இப்போ எப்படியாவது கத்துக்கணும்னு தோணுது. ஆனா அப்பாவுக்குத் தெரியாமல் கத்துக்கணும்னு நினைக்கறா. அதுக்குத் தான் என்னை ஐடியா சொல்லச் சொல்லிக் கேக்கறா" என்று சொன்னாள்.

" அவ்வளவு தானே? இது என்ன பெரிய விஷயம்? நானே கத்துத் தரேன். இங்கே காலேஜிலயே வச்சு இதுக்கு ஏற்பாடு பண்ணிடலாம். பவித்ராவுக்கு ஃப்ரீ டயம் கிடைக்கும் போது, நம்ப காலேஜ் மியூசிக் ரூமுக்கு வந்து கொஞ்ச நேரம் செலவழிச்சாப் போதும். எந்த இன்ஸ்ட்ருமென்ட் கத்துக்கணும்னு மட்டும் முடிவு பண்ணினாப் போதும் " என்று அநிகேத் சொல்ல, இந்தத் திட்டம் பவித்ராவுக்கும் ஏற்புடையதாக இருந்தது.

அடுத்த நாளே பவித்ரா மியூசிக் ரூமுக்குப் போக ஆரம்பித்தாள். கிடார், டிரம்ஸ், கீபோர்ட் மூன்றையும் முயற்சி செய்தாள். கீபோர்ட் அவளுக்குப் பிடித்தது. இயற்கையாகவே அவளுக்கு இசையில் ஒரு நாட்டம் இருந்ததாலோ என்னவோ, எதிர்பார்த்ததை விட வேகமாகவே கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். இசையோடு சேர்ந்து அநிகேத், பவித்ராவின் நட்பும் சிறப்பாக வளர ஆரம்பித்தது.

பவித்ராவுக்குக் கற்பூர புத்தியாக இருந்தது.
சட்டென்று சொல்லிக் கொடுப்பதைப் புரிந்து கொண்டு மேலே மேலே வேகமாக முன்னேறினாள். ஸ்வர ஸ்தானங்களை அவளுடைய விரல்கள், மிகவும் லாவகமாக கையாண்டன.

" ஏய் பார்ட்னர், உங்க ரத்தத்திலேயே ம்யூசிக் இருக்கு போல இருக்கே? இவ்வளவு ஃபாஸ்டா வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களே? வர வர எனக்கு டஃப் ஃபைட் கொடுப்பீங்க போல இருக்கே? " என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அநிகேத். இப்போதெல்லாம் அதிதி அவளுடன் வருவதில்லை. அதிதி தன்னுடைய மற்ற வேலைகளில் மூழ்கிப் போயிருந்தாள். அதிதி, பாட்மிண்டன் பிளேயர் என்பதால், அந்தப் பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்தாள். அவர்களுடைய கல்லூரி டீம், பாட்மிண்டன் டூர்னமென்டுகளில் பரிசுகளைக் குவித்துக் கொண்டிருந்தது. அதிதிக்கு அதிலேயே நேரம் சரியாக இருந்தது. அதுவே பவித்ராவிற்கு அநிகேத்துடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தது.

" பார்ட்னர் , பார்ட்னர்னு சொல்லிட்டு இன்னும் என்ன நீங்க, வாங்க எல்லாம்? ரொம்பத் தான் மரியாதையோ? " என்று சிணுங்கினாள் பவித்ரா.

" ஓகே, இனிமேல் நீன்னே கூப்பிடறேன். சரி, அடுத்த நிகழ்ச்சியில் உங்களை ஸாரி ஸாரி உன்னை மேடையில வாசிக்க வச்சிரலாமா? "

" என்ன ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸா? நிஜமாவா? அவ்வளவு தேறிட்டேனா நான்? முடியுமா? ஓவரா நம்பிக்கை வச்சுட்டு ஏமாந்துராதீங்க ஸீனியர்? "

" என்னைக் குத்தம் சொல்லிட்டு இப்போ நீ மட்டும் ஸீனியர்னு கூப்பிடலாமா? அநிகேத்னு பேர் சொல்லிக் கூப்பிடு நீயும். இல்லை உன் இஷ்டப்படி வேற என்ன வேணாலும் கூப்பிடு. அண்ணான்னு மட்டும் சொல்லிடாதே ப்ளீஸ். என் நெஞ்சே வெடிச்சுடும்" என்று தன் மனதை அவளிடம் திறந்து விட்டான் அநிகேத்.

" அப்படித் தான் கூப்பிடணும்னு நினைச்சேன். இப்போ என்ன பண்ணறது? அநின்னு கூப்பிட்டுமா? அது ஓகேயா " என்று குறும்புத்தனமாக பவித்ரா கேட்க,

" டபுள் ஓகே ஹனி" என்றான் கண்ணடித்தபடி அவன்.

"குருமுகில்களை சிறுமுகைகளில்
யார் தூவினார்
மழைகொண்டு கவிதை தீட்டினார்

இளம்பிறையினை இதழ் இடையினில்
யார் சூட்டினார்
சிரித்திடும் சிலையை காட்டினார்"


என்று அநிகேத் பாட, உடனே அந்த வரிகளை
பவித்ரா கீ போர்டில் அற்புதமாக வாசித்தாள்.

ஓடிவந்து அவளுடைய விரல்களைப் பிடித்துத் தன் இதழ்களைப் பதித்தான் அந்த மாயக் கள்ளன். வெட்கித் தலைகுனிந்தாள் அந்தக் காரிகை.

" என்ன நடக்குது இங்கே? மியூசிக் பிராக்டிஸா இல்லை ஏதாவது காதல் நாடகத்தோட ரொமான்ஸ் ஸீன் ரிகர்ஸலா? " என்று கேட்டபடி உள்ளே நுழைந்தாள் அதிதி.

" நான் உன்னை மியூசிக் கத்துக்கத் தான் என்கரேஜ் பண்ணினேன். அதுவும் நாதன் அங்கிளுக்குத் தெரியாமல் எப்படியோ ஏற்பாடு பண்ணியாச்சு. இப்போ அநிகேத் மாதிரி இசையில் பிறந்து, இசையில் நனைந்து இசையிலேயே எப்பவும் சஞ்சரிக்கிற ஒருத்தரை அங்கிளுக்கு மாப்பிள்ளையாக்க முயற்சி செய்யறது சரியா பவித்ரா? என்ன ஆகப் போகுதோ அங்கிளுக்கு? நான் கோடு போட்டுக் கொடுத்தா, நீ பெரிய ஹைவே ரோடே போட்டுட்டயே பவித்ரா? நான் என்ன பண்ணுவேன் பவித்ரா, பவித்ரா? என்ன காரியம் செய்துவிட்டாய் என்னுயிர்த் தோழியே? " என்று கைகளைத் தன் நெஞ்சில் குத்திக் கொண்டு அதிதி வசனங்களை உதிர்க்க, பவித்ராவோ அரண்டு போனாள். முகம் இருளடைந்தது.

" சரி சரி, உடனே சினிமா ஹீரோயின், சோகக் காட்சியில் கண்ணீர் உதிர்க்கற மாதிரி போஸ் கொடுக்காதே. நான் சும்மா உன்னைக் கலாய்ச்சேன். டோன்ட் வொர்ரி. அதிதி இருக்க பயமேன்? நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். யூ கேரி ஆன் பவித்ரா. எனக்கு சந்தோஷமா இருக்கு" என்று அதிதி சொன்னதும் தான், அசோக வனத்து சீதையாக நின்ற பவித்ராவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

" பவித்ரா, உங்கப்பாவுக்கு அப்படி எதுனால மியூசிக் மேல வெறுப்பு? ஏதாவது வலுவான காரணம் இருக்கணுமே? உன் கிட்ட அதைப் பத்திப் பேசினதே இல்லையா? " என்று அநிகேத் கேட்டான்.

" இல்லை அநிகேத். அவரும் சொன்னதில்லை. நானும் தூண்டித் துருவி எதையும் கேட்டதில்லை. இதோ இந்த அதிதியோட அப்பா, எங்கப்பாவோட பெஸ்ட் ஃப்ரண்ட் தான். பல வருடங்களாகப் பழக்கம். ஆனாலும் அவரிடம் கூட இதைப் பத்தி அப்பா எப்பவும் பேசினதில்லை" என்றாள் பவித்ரா. அதிதியும் , "ஆமாம், உண்மை தான் " என்று அதை ஆமோதித்தாள்.

" இப்போ வரை ஓகே. நீ உன்னோட ஆர்வத்துக்கு மதிப்பு கொடுத்து உங்கப்பாவுக்குத் தெரியாமல் மியூசிக் கத்துக்கிட்டே. ஆனா என்னைப் பத்தி எவ்வளவு நாள் நீ மறைச்சு வைக்க முடியும்? எனக்கு இசை உலகத்துல நிறைய சாதிக்கணும். என்னோட பேஷனை( passion) என்னால என்னைக்கும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாது. எனக்கு நீயும் வேணும்.மியூசிக்கும் வேணும். அதுனால நாம படிப்பை முடிக்கறதுக்குள்ளே உங்கப்பா கிட்ட எதையும் மூடி மறைக்காமல் சொல்லிடறது நல்லது " என்றான் அநிகேத்.

பவித்ராவிற்கு இதைக் கேட்டதும் கலக்கமாக இருந்தது. எப்படி இதை சமாளிக்கப் போகிறோம் என்று பயந்து போனாள்.

" ஆனால் அப்பா கிட்ட என்னாலே இதைப் பத்திப் பேச முடியாது அநிகேத். சின்னக் குழந்தையில் ஒரே ஒரு தடவை பிடிவாதம் படிச்சேன். அன்னைக்குத் தான் அப்பாவோட கோபத்தை முதல் தடவையாப் பாத்தேன். அதுக்கப்புறம் நான் எந்த விஷயத்துக்கும் அடம் பிடிச்சதில்லை. இப்போ என்ன செய்யப் போறேன்? எனக்குத் தெரியலையே? "

" நீ பயப்படாமல் பேசித் தான் ஆகணும் பவித்ரா. என்னால ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தைப் பத்தி பயந்து கிட்டே உன்னோட பழகமுடியாது. நீயே நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. உன்னோட பிரச்சினையை நீ தான் தைரியமா எதிர்கொள்ளணும்" என்று சொல்லி விட்டான்.

" கவலைப்படாதே பவித்ரா, நான் எங்கப்பா கிட்டயும் இதைப் பத்திப் பேசறேன். அவர் சொல்லற அட்வைஸ்படி நாம நடந்துக்குவோம்" என்று அதிதி உறுதியளித்தாள்.

" இல்லை அதிதி, அவசரப்படாதே. இப்போ உடனே அங்கிள் கிட்ட இதை டிஸ்கஸ் பண்ண வேணாம். அங்கிளுக்குத் தகவல் போனால், அவர் அப்பா கிட்ட அதை ரொம்ப நாள் மறைக்க மாட்டார். என்ன செய்யலாம்னு நானே யோசிக்கிறேன்" என்றாள் பவித்ரா.

" ஓகே, எப்படியும் நாம ரெண்டு பேரும் இந்த வருஷம் பி. டெக். படிப்பை முடிக்கறோம். அநிகேத்தும் எம். டெக். முடிக்கிறார். ஃபைனல் எக்ஸாம், கேம்பஸ் இன்டர்வியூ இதிலெல்லாம் கவனம் செலுத்தலாம். அதற்குள் ஏதாவது வழி பிறக்கும். நீ சொல்லறதும் சரி தான் " என்று அதிதி சொல்ல, அந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பதை அன்றோடு நிறுத்திக் கொண்டார்கள்.

பவித்ரா கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆரம்பித்து ஒரு வருடம் ஓடியிருந்தது. பவித்ராவும், அதிதியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபடி படிப்பின் இறுதியாண்டில் காலெடுத்து வைத்து விட்டார்கள். பவித்ரா கீபோர்டைக் கையாள்வதில் நன்றாகவே தேர்ச்சி பெற்று விட்டாள். எந்தப் பாடலைக் கேட்டாலும் அந்த ட்யூனை மனதில் வாங்கி, விரல்களில் தவழ விட்டு கீபோர்டின் உதவியுடன் நமது செவிகளில் நிறைத்து விடுகிறாள்.

அவர்களுடைய முடிவையெல்லாம் தகர்த்துத் தவிடுபொடியாக்க விதி என்ற பெரும் சக்தி முடிவு செய்து விட்டது. 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நான் எதற்கு? ' என்கிற அகங்காரம் அதற்கு! 'நினைக்காததை எல்லாம் நடத்திக் காட்டி, உங்களுக்கு சோதனைகளையும் வேதனைகளையும் நானே தந்துவிடுகிறேன்' என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயலில் இறங்கியது விதி என்ற அந்த மகாசக்தி.

விதியின் அந்த சதியால் நாதனும் பவித்ராவும் தான் அதிகம் அலைக்கழிக்கப் பட்டார்கள். பகடைக் காய்களாக உருட்டப் பட்டார்கள். யாருக்கு என்ன ஆகப் போகிறதென்று பார்க்கலாம்.

அந்த வருடமும் கல்லூரியில் கலைவிழா தொடங்கியது. இந்த முறை பவித்ராவையும் எப்படியாவது மேடையேற்ற வேண்டும் என்று அநிகேத் துடித்துக் கொண்டிருந்தான். பவித்ரா ஒத்துக் கொள்ளவேயில்லை. ஆனால் குழுவில் இருந்த எல்லோருமாகச் சேர்ந்து ஒரு வழியாக அவளை ஒத்துக் கொள்ள வைத்தார்கள்.

" இது தான் நாம எல்லோருமாச் சேந்து தரப்போற கடைசி நிகழ்ச்சி. அடுத்த வருஷம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில் பிரிஞ்சு போயிடுவோம். அதுனால இந்த நிகழ்ச்சி, மறக்க முடியாத அளவுக்கு சிறப்பா அமையணும். நம்முடைய நினைவுகளில் பொக்கிஷமாக்கிப் பூட்டி வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு இதை நாம பிரஸன்ட் பண்ணனும். அதுக்கு நீயும் நூறு சதவீதம் உன்னுடைய பங்களிப்பைத் தரணும் " என்று அனைவரும் சேர்ந்து சொல்ல, பவித்ராவால் தட்ட முடியவில்லை. முழு மனதுடன் ரிகர்ஸலிலும் கலந்து கொண்டாள்.

உச்சி தனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடீ!
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ!

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: மீட்டாத வீணை 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
114
சூப்பர் சூப்பர் அம்மா 🩵🩵🩵🩵🩵🩵🩵பவி அம்மா மூலமா ஏதோ பிரலயம் ஆகுமோ 🤔🤔🤔🤔
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
42
அப்பாவிடம் கேளாமல் இசையை கற்றுக்கொள்ள நினைத்ததற்கே என்ன களேபரம் நேரப்போகிறதோ என்று பக்பக் என்று இருக்கிறது. போதாததற்கு மாப்பிள்ளை ரூபத்தில் குடும்பத்துக்குள்ளேயே இசையை கொண்டு வந்து நுழைக்கிறாளே!!! என்ன ஆகப்போகிறதோ - பொறுத்திருந்து பாப்போம்
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
அப்பாவிடம் கேளாமல் இசையை கற்றுக்கொள்ள நினைத்ததற்கே என்ன களேபரம் நேரப்போகிறதோ என்று பக்பக் என்று இருக்கிறது. போதாததற்கு மாப்பிள்ளை ரூபத்தில் குடும்பத்துக்குள்ளேயே இசையை கொண்டு வந்து நுழைக்கிறாளே!!! என்ன ஆகப்போகிறதோ - பொறுத்திருந்து பாப்போம்
நன்றி
 
Top Bottom