• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பாவை - 1

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
1
தேடல் - 1




'கைது செய் கைது செய் மீனவப் பெண்களின் தற்கொலைக்கானவர்களைக் கைது செய்' என்று விடாமல் சத்தம் எழுந்தது போராட்டத்தில். ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று மீனவப் பெண்கள் ஒரே இடத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டர்.

அதுவும் ஒரு வெள்ளைத்தாளில் 'எங்களின் தற்கொலைக்கு காரணம் இருக்கிறது.. அதை எங்களால் வெளியில் கூற இயலாது.. காவல்துறையே பணமுதலையர்களிடம் விலைப்போகாமல் கண்டுபிடிக்க வேண்டும்' என்று எழுதி வைத்து விட்டுத்தான் பொது இடத்தில் தூக்கிலிட்டும் கொண்டனர்.

முதலில் இவ்வழக்கில் சுறுசுறுப்பாக இருந்த காவல்துறை பின்பு நாளாக நாளாக மெத்தனம் காட்டிட, மொத்த கிராமத்தையும் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் அக்கிராம இளைஞர்கள்.

முதலில் யாரும் பெரியதாக கண்டுக் கொள்ளாமல் இருக்க, அதன்பிறகு பொதுமக்களும் அவர்களுக்கு கை குடுத்ததில் போராட்டமும் வலுப்பெற்றது. இரண்டு நாட்களுக்கு பிறகு தான் ஊடகங்களில் இப்போராட்டம் பரவ தொடங்கியது.

நேரமாக நேரமாக கூட்டமும் கூடிட, காவல்துறையினரும் அவர்களுக்கு துணையாகவே பாதுகாப்பும் அளிக்க, எங்கும் அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்பதில் மட்டும் கண்ணாக இருந்தான் ஏசிபி நெடுமாறன்.

பெயரைப் போலவே நெடுநெடுவென தென்னைமரத்தைப் போல் வளர்ந்த உயரம். முப்பதாறு வயது இளைஞன். சில பல காரணங்களால் இன்னும் திருமணமாகவில்லை. இனி திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணமும் அவனிடம் இல்லை. திருமணம் என்ற வார்த்தையையே அவன் வெறுத்து விட்டிருந்தான்.

இந்த காக்கி உடை மட்டும் தான் தன் காதலி என்ற எண்ணத்தில் வேலையில் மட்டும் கண்ணாக இருந்ததில் ஏசிபியாக பதவி உயர்வும் பெற்று ஐந்து மாதங்கள் கடந்து விட்டிருந்தது. அவன் ஏசிபியாக எதிர்க் கொள்ளும் முதல் போராட்டம் இது.

அவர்களின் போராட்டத்தில் தவறே இல்லை என்ற கருத்து இவனிடம். அதையும் செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டிருந்தான். எதைக் கண்டும் அவனுக்கு பயமில்லை. யாரை நினைத்தும் கவலையுமில்லை. அவனுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதை செய்து விடும் ரகம். நினைத்ததை பேசி பேசித் தான் பல சர்ச்சைகளைக் கிளப்பி வதந்திகளுக்கு ஓய்வில்லாத வேலையும் தந்திருந்தான்.

இப்போது அவனைச் சூழ முயன்ற செய்தியாளர்களிடம் "இந்த கேஸை நான் எடுத்து நடத்த கமிஷனர் சம்மதிக்கவில்லை.. இதுல நான் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடிக்கறது.?" என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டு சாதாரணமாக நின்றிருந்தான்.

'அடப்பாவி இவன் என்ன இப்படி பண்ணி விட்டிருக்கான்.?' என்ற அதிர்வுடன் அவனை நோக்கி வந்தான் அதிரன். சி.பி.சி.ஐ.டி யில் வேலை செய்கிறான். அவனின் வேலையும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது.

வெளி உலகங்களுக்கு அவன் படிப்பை முடித்து விட்டு வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் வேலையில்லாதவன்.. உருப்படாதவன்.. பொறுப்பில்லாதவன்.. குடும்பத்தை நினைத்துக் கவலை இல்லாதவன்.. படித்தும் புத்தி இல்லாதவன் என்று பல பெயர்களைச் சம்பாதித்து வைத்திருக்கும் அதிமேதாவி இவன்.

இவனைக் கேவலமாக யார் திட்டினாலும் தூசு தட்டுவதைப் போல் தட்டி விட்டு சென்று விடும் ரகம். மாறனிடம் அடிக்கடி மாட்டிக் கொண்டு முழிப்பது இவனே.

"டேய் என்னடா பண்ணி வெச்சுருக்க.? உன் வாய் அடங்கவே அடங்காதா.?" என்று அதிரன் கடிந்துக் கொள்ள, "நான் என்ன பண்ணுனேன்.? நடந்ததைத் தான் சொல்றனே.? அந்த ஆளு என்கிட்ட இந்த கேஸைக் குடுத்தா தானே குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும்.? என்கிட்ட வந்து எப்ப குற்றவாளியைக் கண்டுபிடிப்பீங்கனு கேட்டா நான் எனத்தை சொல்றது.?" என்றான் இலகுவாக.

'ம்ம்ம்ம்க்கும் இவன் அரிச்சந்திரன் மகன் பாரு.. உண்மையை மட்டும் தான் பேசுவாரு.. இதைய நாங்க வேற நம்பணும்.. ச்சைக் இவன் கூட கூட்டு சேர்ந்ததே தப்பு.. எந்நேரமும் படபடனே வெச்சுருக்கான்.. இப்ப அந்த கமிஷ்னர் ஆளு வேற எனக்கு போன் பண்ணி கிழிகிழினு கிழிப்பாரே.?' என்று இவன் புலம்பிக் கொண்டிருந்த சமயம் சரியாக கமிஷனரும் அழைத்து விட, 'சோலி முடிஞ்சுது போ' என்று நினைத்தான்.

"அய்யோ அப்பா நான் சொல்றது நிஜம் தான்.. நான் அவரைத் தான் லவ் பண்றேன்.. ஆனா அவருக்கும் நமக்கும் ஏணி வெச்சாலும் எட்டாதுப்பா.. எப்படிப்பா அவருகிட்ட என் காதலைச் சொல்ல முடியும்.?" என்று தன் தந்தையிடம் அழுகையில் பேசுவதைப் போல் நடித்தாள் காவ்யா.

அவள் கை நீட்டிய இடத்தில் இருந்தது மாறன் தான். இவள் திருமணத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் இப்படியொரு பொய்யை எடுத்து விட்டிருக்க, அதுவே அவளுக்கு வினையாகியும் போனது.

அவளின் தந்தை குமரேசனோ "அந்த தம்பியைத் தான் நீ காதலிக்கறீயா புள்ள.? அப்பன் நான் குத்துக்கல்லாட்ட இருக்கறப்ப நீ ஏன் கவலைப்படணும்.? நான் போய் அந்த தம்பிக்கிட்ட பேசிட்டு வர்றேன்" என்று நகர முயன்றார்.

"அய்யய்யோ எப்போவ் வேணாம்ப்பா.. அப்பறம் உன்னைய புடிச்சு ஜெயில்ல போட்டுருவாங்க.. உன்னைய விட்டா எனக்கு யாரு இருக்கா.?" என்று தந்தையை மாறனிடம் செல்ல விடாமல் காவ்யா தடுக்க பார்க்க, "அதெல்லாம் பார்த்துக்கலாம்.. வா புள்ள.. இந்த தம்பியை மனசுல வெச்சுட்டு தான் நீ கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருக்க.?

உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்காம இந்த கட்டை சாயாது.. அந்த தம்பி கை, காலுல விழுந்தாவது உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்" என்று தீவிரமாக வசனம் பேசியவரைக் காவ்யா தான் நடுங்கி போய் பார்த்தாள்.

'இந்த அப்பா எனக்கு கருமாதி பண்ணாம ஓயாது போல.? நானே கல்யாணத்துல இருந்து தப்பிக்க இப்படியொரு பொய்யைச் சொன்னா இந்த அப்பா என்ன அவன்கிட்ட பேச போறாரு.? அய்யய்யோ அந்த போலீஸ்காராரு என்னைய தூக்கி உள்ள வெக்க போறாரு.. ஆத்தா கருமாரியாத்தா உன் புள்ளையைக் காப்பாத்து' என்ற பலமான வேண்டுதலுடன் தந்தையை மாறனிடம் செல்ல விடாமல் தடுக்க போராடினாள்.

ஆனால் அவளின் போராட்டம் பலனளிக்கவில்லை. மாறனிடம் சென்ற குமரேசன் "போலீஸ் தம்பி" என்றழைத்தும் விட, திரும்பிய மாறனின் பார்வையிலே மிரண்டு விட்ட காவ்யா தன் தந்தையின் பின்னே மறைந்துக் கொண்டாள்.

தந்தையைச் சுரண்டி "எப்போவ் வாப்பா போய்ரலாம்.." என்றழைக்கவும் தவறவில்லை. ஆனால் அவர் கேட்பதாக தெரியவில்லை.

'போச்சு போச்சு இந்த தென்னைமரம் எங்களைய தூக்கி உள்ள வெக்க போகுது.. அடியே காவ்யா உன் ராசிக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம்னு போட்டுருந்துச்சுல.? வாயைச் வெச்சுட்டு சும்மா இருந்துருக்கலாம்.. உன்னைய காவு குடுக்கவே இவரு பெத்துருக்காரு போல.. செத்தோம்' என்று ஓயாத புலம்பல் அவளிடம்.

இவர்களை யாரென்று தெரியாமல் மாறன் விழிகளைச் சுருக்கிட, "வணக்கம் போலீஸ் தம்பி" என்று கை கூப்பியவரின் வணக்கத்தை ஏற்பது போல் தலையை மட்டும் லேசாக அசைத்தான்.

"அது என்னங்க போலீஸ் தம்பி.?" என்ற அதிமுக்கியமான கேள்வியை அதிரன் எழுப்பிட, மாறன் பார்த்த பார்வையில் கப்சிப் தான்.

குமரேசனைப் பார்த்து "நீங்க சொல்லுங்க" என்பதைப் போல் மாறன் நிற்க, "என் பேரு குமரேசன்.. இது என் பொண்ணு தம்பி.. பேரு காவ்யா.. காலேஜ் முடிக்க போகுது.. என் மனைவி போய் சேர்ந்து பத்து வருசமாக போகுது.. என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு இரண்டு வருசமா நானும் விடாம முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.. ஆனா முடியல தம்பி" என்று நிறுத்தினார்.

இடைபுகுந்த அதிரன் "இங்க என்ன மாப்பிள்ளை பார்த்து தரப்படும்னு போர்ட்டா போட்டுருக்கு.? டேய் மாறா சொல்லவே இல்லை எப்ப இந்த வேலையும் பார்க்க ஆரம்பிச்ச.? அப்படியே எனக்கும் ஒரு பொண்ணு பார்த்து குடேன்டா.. நானும் இன்னும் எத்தனை நாளைக்கு தான் சாமியாரா இருக்கறது.?" என்று கேட்டு மீண்டும் மாறனிடம் முறைப்பைப் பெற்றுக் கொண்டான்.

"சார் இங்க வந்து உங்க குடும்ப வரலாறு எல்லாத்தையும் எதுக்கு சொல்லிட்டு இருக்கீங்க.? எங்களைய பார்த்தா எப்படி தெரியுது.?" என்று மாறன் கோவப்பட, *தம்பி உங்ககிட்ட தான் சொல்ல முடியும்.. ஏன்னா என் பொண்ணு கல்யாணமே வேணாம்னு சொல்றதுக்கு காரணம் நீங்க தான்..

இரண்டு வருசமா உங்களைய தான் காதலிக்கறானு சொல்றா.. உங்களைய மனசுல வெச்சுட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுனும் சொல்றா.. நீங்க பெரிய இடம்னு உங்ககிட்ட சொல்ல பயந்துட்டு என்னைய விட்டு பேச சொன்னா.. எனக்கிருக்கறது ஒரே பொண்ணு.. அவ விருப்பம் தான் என் சந்தோசம்..

உங்க அப்பா, அம்மாகிட்ட வேணா நான் பேசறேன் தம்பி.. என்னால முடிஞ்சதை நான் என் பொண்ணுக்கு செய்வேன்.. அம்மா இல்லாம இவ இருந்தாலும் என் பொண்ணை நான் அருமையா வளர்த்தி விட்டுருக்கேன் தம்பி" என்று பேச வந்ததைப் பேசி முடி
த்து காவ்யாவைக் காவு குடுத்தும் இருந்தார்.




தேடல் தொடரும்..
 

Author: AArani
Article Title: பாவை - 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom