Kasavu
New member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 5
நெஞ்சம்-2
சந்துரு என்ற சந்திரசேகர், துபாயில் உள்ள ஆயில் கார்பரேஷனில் , இருபத்தைந்து வருடமாக வேலை செய்கிறான். கிளர்க்காக வேலையில் சேர்ந்தவன், அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் காரணமாக, தன்னையும் முன்னேற்றி கொண்டு, வேலையிலும் படிப்படியாக முன்னேறி, ஆயில் கார்பரேசனின் அகவுண்ட்ஸ் மேனேஜராக உள்ளான்.
நாற்பத்தெட்டு வயது ஆகிறது. இன்னும் சில வருடங்கள் வேலை செய்யவும் முடியும் ஆனாலும், கடமைகள், தேவைகள் முடிந்து, கணிசமான கையிருப்பு உள்ளது. எழுபது வயதை தாண்டிய அம்மாவின் கடைசி காலத்திலாவது, உடன் இருக்கலாமே என , வேலையை ராஜினாமா செய்து உள்ளான் .
ஒரு வருடம் முன்பே முன்பே கடிதம் கொடுத்து விட்ட போதும், துபாய் முதலாளிக்கு அவனை அனுப்ப மனம் இல்லை. அக்கா,பானுமதியின் மகன் சுரேஷை பணியில் சேர்த்து, குடும்பத்தோடு அவன் வசிக்க ஏற்பாடும் செய்து விட்டே, இவன் கிளம்புகிறான்.
ஓட்டு பள்ளிக்கூடம் வாட்ஸ் அப் குழுமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். சிலர், தனி சேட்டிங்கில் வந்து, நண்பா என தன்னை அறிமுக படுத்திக் கொண்டு பேச, உற்சாகமாகவே பதில் தந்தான்.
க்ரூப் ஆரம்பித்த புதிதில் பொழுதன்னைக்கும் குறுஞ்செய்தி வருவது வழக்கம் தானே. அதுவும் முரட்டு சிங்களான சந்துருவுக்கு, தடை போடவும் யாரும் இல்லாததால், நள்ளிரவு வரையிலும் அதிலேயே பொழுது கழிய, ஊருக்கு போக வேண்டும் என்ற எண்ணம் வலு பெற்றது.
நேரம் ஆனதை உணர்ந்து , அடுப்படியை ஒதுங்க வைத்து, லைட் ஆப் செய்து, படுக்கையில் விழுந்தும், தூக்கம் வரவில்லை. பழைய ஆல்பங்கள், பொருட்களை பொக்கிஷமாக சிலரின் நினைவாக சேர்த்து வைத்திருந்த பெட்டியை திறந்து பார்த்தான்.
அப்பத்தாவின் வெள்ளி பிடித்த ருத்ராட்சம், அப்பாவின் கெம்புக்கல் மோதிரம், அம்மாவின் கல் மூக்குத்தி, குடும்ப க்ரூப் போட்டோ, அதன் வரிசையில் கருப்பு லெதர் பர்ஸ், அதனுள் லேமினேட் செய்யப்பட்ட குருவாயுரப்பன்.
சந்திரா சொன்ன, சாரு, யமுனா என்ற பெயர்கள் இருபத்தியெட்டு வருடங்கள் கழித்து அவனின் மனதை அசைத்திருந்தது.
மதுரையில் இவர்கள் வசதித்த போது அண்டை வீட்டினர். அவர்களின் அம்மா கோமளா மளையாளி, அப்பா விக்கிரமன் தமிழ். இரு குடும்ப தலைவர்களும் ஒரே பஞ்சுமில்லில் வேலை செய்ய, இரு குடும்பங்களும் ஒரே குடியிருப்பில் இருந்தனர்.
மில் மூடப்பட்ட போது, இவன் அப்பா, பாதி குடும்பத்தை அதாவது அம்மா, இளைய தங்கைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு சென்னை செல்ல , மூத்த பிள்ளைகள் மூவரும் அப்பத்தாவோடு மதுரையில் அதே ஒண்டு குடித்தன வீட்டில் தான் இருந்தனர். அந்த சமயங்களில் அப்பத்தா மீனாட்சியின் இட்லி கடையே அவர்களுக்கு சோறு போட்டது.
சாருவின் அப்பாவும் வேறு வேலை தேடாமல் அப்பத்தாவின் இட்லி கடைக்கு பக்க்திலேயே டீக்கடை போட்டுக் கொண்டார்.
பெண்கள் வீட்டில் மெனக்கெட, கடைகளை அவன் அப்பத்தாவும், சாருவின் அப்பாவும் நடத்தினர். வயது பெண்களை கடையில் விற்பனைக்கு விடமாட்டார்கள். ஆகவே வீட்டுக்கும் கடைக்கும் சண்டிங்க் அடிக்கும் வேலையை சந்துரு செய்தான்.
இரண்டு வருடம் இப்படி ஓட்டி இருப்பார்கள், பிறகு மீனாட்சியம்மாளின் உடல் நிலை மோசமாக, சந்துருவின் தகப்பன் மூர்த்தி மீதி குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்துக் கொண்டார்.
மதுரையை சுற்றிய கழுதையும் வெளியே போகாது என்பார்கள். சந்துருவுக்கு போக மனம் வருமா? அதுவும் உற்ற தோழியை விட்டு பிரிய வேண்டுமே என்ற சோகம் வேறு. அரும்பு மீசை முளைத்த இளைஞனான அவனும், பாவாடை தாவணியில் பருவ மங்கையாக இருந்த அவளும், வெளியே சொல்லிக் கொள்ளாத அவர்கள் காதலுக்கு, ஆகட்டும் பார்க்கலாம் என மனதளவில் கமா போட்டு தான் பிரிந்தார்கள்.
“ சந்துரு போயி தானே ஆகனும். பழகினவங்களை பிரியறது மனசுக்கு கஷ்டம் தான். பட்சே, அப்பத்தாவுக்கு ரெஸ்ட் கிடைக்கும்னா, நீ கட்டாயம் சென்னைக்கு கிளம்பு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்” என வாழ்த்தி, “உங்க மீனாட்சி அம்மன் உங்களை காப்பாத்தும், பட்சே எங்க குருவாயூரப்பனையும் பர்சில வச்சுக்கோ” என நீட்ட,
“என்கிட்ட பர்சே இல்லை” என்றான்.
“அதுதான் தெரியுமே” என்றவள், லெதர் பர்சையும் அதில் இரண்டு நூபாய் புது ரூபாய் நோட்டையும் சேர்த்து தர,
“ ரொம்ப விலை இருக்கும் போலவே” அதிசயித்தான்.
திருப்பூர் எக்ஸ்போர்ட் பனியன்களை சிலர் காண்ட்ரேக்ட் எடுத்து அதில் பாசி, ஜமிக்கி வைத்து தைத்துக் கொடுக்க, பீஸுக்கு ஐம்பது பைசா முதல், ஒன்று, இரண்டு ரூபாய்கள் வரை தருவார்கள். அப்படி கமிசன் ஆட்களிடமிருந்து வாங்கி தைத்து கூலியாக கிடைத்த காசை சேர்த்து வைத்து வாங்கியது.
அவன் அக்கா, தங்கைக்கு மட்டுமல்ல, இவர்கள் நால்வருக்கும் அவன் தான் காவல். வீட்டில் எலி, வெளியே புலி என்பது போல், சாதுவாக இருப்பவன், யாரவது இவர்களை கேலி பேசினால், வம்பிழுத்தால், லவ் லெட்டர் கொடுத்தால் சவட்டி எடுத்து விடுவான். ரஜினி ஸ்டெயிலில் பரட்டை தலையும், கையில் காப்புமாக திரியும் அவனை கண்டால் , அவன் சோட்டு பையன்களுக்கு கிலி பிடிக்கும். இளம் ரஜினி ரசிகர் மன்ற தலைவன்.
ரஜினி ஸ்டைல் என பென்சிலை தூக்கிப் போட்டு பிடிக்க, “ இது என்ன பழக்கம்” என மீனாட்சி பேரனை வெறுத்து விட்டார்.
அதே சமயம் “மீனாட்சியம்மா , பேரனை கண்டிச்சு வைங்க” என்பவர்களிடம்,
“நீ ஒழுக்கமா புள்ளை வளர்த்திருந்தா , என் பேரன் ஏன் கை நீட்ட போறான். அவன் என்ன செஞ்சான்னு விசாரி” என சொல்லியும் அனுப்புவார். பேரன் மேல் அவ்வளவு நம்பிக்கை. அப்படி பட்டவனுக்கு தன்னால் ஆனா நினைவு பரிசு . அதுவும் உபயோகமாக, நீண்ட நாள் உழைக்க வேண்டும் என யோசித்து இதை வாங்கி தந்தாள்.
“ எவ்வளவு விலையா இருந்தா உனக்கென்ன, அன்பா கொடுக்கும் போது இதெல்லாம் பார்க்க கூடாது” என்றாள்.
அதை வாங்கிக் கொண்டவன், “இதே மாதிரி, நான் ஏதாவது உனக்கு வாங்கி தரனுமா. என்ன வாங்கி தர்றதுன்னு தெரியலையே” எனவும், அவனை முறைத்தவள்,
“ உனக்கு வாங்கியே கொடுத்து இருக்க கூடாது. கொடு” என அவள் பிடுங்க வர, கை மேலே உயர்த்தி பர்சை பிடித்துக் கொண்டான். எம்பி குதித்தும் அவன் உயரத்தை அவளால் அடைய முடியவில்லை.
“ கொடுத்தா, கொடுத்தது தான் . அதெல்லாம் திருப்பி கேட்க கூடாது” என்றான்.
“ உன் மூஞ்சி” என திட்டியவள், “இனி எப்போ பார்ப்போம்னு தெரியாது. இப்படி ஒருத்தி இருந்தேன்னு மறந்திடாதே” என்றாள்.
“கையை நீட்டு” என்றான். அவள் புரியாமல் நீட்ட, தன் நெஞ்சில் கை வைத்து, ஒரு பிடி அள்ளிக் கொடுப்பவன் போல், அவள் கையில் தந்தவன், “ என் மனசையே உன் கிட்ட கொடுக்குறேன்” என்றான்.
“ ஏய், என்ன சொல்றேன்னு புரிஞ்சு தான் சொல்றியா” என அவள் கையை இழுத்துக் கொள்ள, “ கொடுத்தது, கொடுத்தது தான்” என்றான் புன்னகை மன்னனாக.
பதின்ம வயதின் கிறக்கம், நாள் செல்ல மறந்து போகும். ஐந்து பெண்களோடு பிறந்தவனுக்கு , ஏதோ ஒரு கட்டாயத்தில் பெண் கொடுத்து, எடுத்தல் என ஏதோ ஒரு கமிட்மெண்டில் சிக்கி விடுவான் என்றே அவளும் கடந்திருந்தாள்.
அவனுக்கும் தெரியும், அவள் வீட்டின் மூத்த பெண், அவளுக்கென்ற கடமை, கட்டுப்பாடு இருக்கும், ஆனாலும் அந்த நேரம் மனதிலிருந்ததை எதார்த்தமாக சொல்லி விட்டான். ஆயிற்று அவர்கள் கிளம்பும் நாளில் அந்த குடியிருப்பே கண்ணீரோடு விடைக் கொடுத்தது. அதில் அவளின் கண்ணீரும் ஒன்றாக கணக்கெடுக்கப் பட்டது.
இன்று பர்சை தடவிப் பார்த்தவனுக்கு ஓர் பெருமூச்சு. “எப்படியாவது என் வாழ்க்கைகுள்ள உன்னை கொண்டு வந்துடனும்னு தான் பார்த்தேன். ஆனால் சந்தர்பமே அமையலை. எனக்கும் கடமை முடிஞ்ச பாடு இல்லை. யாரோ ப்ரபசரை கல்யாணம் பண்ணிக்கிட்டேனு சந்திரா சொன்னா. நீயாவது நல்லா இருந்தா சரி தான். தங்கைகளை கரையேத்திட்டு நீயும் எத்தனை நாள் தான் தனிமரமா நிற்க முடியும் “ என தன்னைப் போல் புலம்பியவன்,
“ஒரு தடவை, உன் புருஷனோட சேர்த்து பார்த்திட்டா போதும். என் மனசை விட்டு உன்னை அனுப்பிடுவேன். ஆனா அது முடியுமான்னு தான் தெரியலை. இப்பவும் இந்த வாட்சப் க்ரூப்ல உன் நம்பர் இருக்கான்னு தேடுறேன். கிடைச்சா…? இன்னொருத்தர் மனைவியான உன்கிட்ட ,பொய்யா என்னலா பேச முடியுமா?” என வெகு நேரம் யோசித்தான்.
“வேண்டாம். ரெட்டை ஜடையை லூசா பின்னி, கொஞ்சமா பூ வச்சு, நெற்றியில் சந்தன கீற்று, கீழே வட்ட பொட்டு வச்ச நிலவா, நீ என மனசில நிறைஞ்சு இருக்க, அது போதும்.’ என மனதை அடக்கியவன், அந்த புலன குழுவில் இருந்தும் வெளியேறினான்.
“இல்லை, நான் போகலை. ஜூன் பத்து தேதிக்கு டிக்கெட் போட்டுக்குறேன்.” முடிவெடுத்த பின், மனம் இலகுவானதாக சமாதனப் படுத்திக்க கொண்டான். எடுத்த இடத்தில் எல்லாவற்றையும் வைத்து விட்டு, விளக்கை அணைத்து கண்ணையும், காதையும் சேர்த்து போர்வையை சுற்றிக் கொண்டு, படுத்து விட்டான்.
காலையில் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்ற பாடல் இசைத்ததில் தான் விழிப்பு வந்தது. நன்றாக விடிந்து இருந்தது. ‘இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்’ மணியை பார்க்க எட்டு. மறுபடியும் பாட்டு இசைக்க, “அம்மாவுக்கு வச்ச ரிங் டோன்” என நினைவில் வர, பதறியபடி போனை எடுக்க கட்டாகி இருந்தது. சரயுவும் அழைத்திருந்தாள். ஐந்துக்கும் மேற்பட்ட மிஸ்ட் கால்.
இத்தனை முறை கூப்பிட்டு இருக்காளே, அங்கு பத்துமணி, காலேஜில் இருந்து கூப்பிட்டு இருப்பாளோ?’ யோசனையோடு திரும்ப அழைக்க, முதல் ரிங்கிலேயே எடுத்தவள், “மாமா, அம்மாச்சிக்கு முடியலை. ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கோம்” என்றாள்.
“என்னமா சொல்ற, என்ன ஆச்சு, இப்ப எப்படி இருக்காங்க” என பதற,
“பாத்ரூம்ல வழுக்கிட்டாங்க, கதவை பூட்ட கூடாதுன்னு சொல்லி இருக்கேன், அதுனால பூட்டலை, டமார்னு சத்தம் ஓடி போய் பார்த்தா விழுந்து கிடக்குறாங்க. குரல் கொடுத்தேன், சித்தியும், சித்தப்பாவும் வந்துட்டாங்க. அம்மாச்சியால எந்திரிக்கவே முடியலை. கஷ்டப்பட்டு வெளிய தூக்கிட்டு வந்தோம். இப்போ ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டோம். ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க. “ என்றாள்.
“தலையில் எதுவும் அடி பட்டுச்சா, கான்ஷியஸ் இருக்குல்ல” என வினவ,
“அதெல்லாம் இருக்கு. தலையில எல்லாம் ஒன்னும் இல்லை. காலு, கைதான் வலிக்கிதுங்குறாங்க.” என்றாள்.
“நான் உடனே கிளம்பி வர்றேன். சித்தப்பா பக்கத்தில இருக்காரா. அம்மாச்சி அக்கவுண்ட்ல பணம் இருக்கா” என வரிசையாக கேட்க.
“பணம் எல்லாம் கட்டிட்டோம் மாமா, சித்தப்பா அவர் கார்டுல இருந்தே கட்டிட்டார். அம்மாச்சியை ஹாஸ்பிடல்ல சேர்க்கவும் எனக்கு பயமா போச்சு” என அவள் விசும்ப, சந்துருவின் நிலையும் அதே தானே.
“ஒன்னும் இருக்காதுடா குட்டிமா, நீ அழுகாத . மாமா கிளம்பி வர்றேன்” என்றவனின் குரலும் தேய, அந்த நேரம் அங்கே வந்த ரதியின் கணவன் வசந்த், போனை வாங்கி
“மச்சான், நீங்க அவசரமா வரணும்கிறது இல்லை. அத்தை நல்லா தான் இருக்காங்க. சரயு சின்ன பொண்ணு தானே, அது தான் பயந்துருச்சு. இருங்க போன் தர்றேன் பேசுங்க.” என மாமியாரிடம் கொண்டு போய் நீட்ட,
ரதி, “அண்ணா, பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை. கையில ஹேர் லைன் கிராக் தான்.” என்றவள் , விவரத்தை சொல்லி ஆசுவாசப் படுத்தி விட்டே, அம்மாவிடம் கொடுத்தாள்.
ராஜாத்தி, “சந்துரு” என அழைக்க, குரலின் பேதம் உணர்ந்து “ரொம்ப வலிக்குதாம்மா” உருகி இருந்தான் மகன்.
“ கையை ஊண்டிட்டேனா, பிசகி இருக்கும் போல. சரயு தான் பயந்து போயிட்டா. ரதியும், மாப்பிள்ளையும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. நீ அவசரமா வரணும்னு வராத. முடிக்கிற வேலை எல்லாம் முடிச்சுக்கிட்டு உன் வசதி படி வா” என்றார்.
“உங்களை பார்க்கிறதே விட, எனக்கு வேற என்னமா வேலை. முடுஞ்ச வரை சீக்கிரம் வந்துடுறேன். நீங்க தைரியமா இருங்க” என்றவன், தங்கை அவள் கணவரிடமும் பேசி விட்டு, சரயுவுக்கும் தைரியம் சொன்னான்.
“சரி, மாமா, சரி மாமா” என கிளிப்பிள்ளையாக பதில் தந்தாள். தாய் தந்தை பாசம் அறியாதவளுக்கு, அம்மாச்சியும், மாமாவும் தான் எல்லாமே. அம்மாச்சி லேசாக கடிந்தால் கூட, மாமாவுக்கு போன் அடித்து விடுவாள். அவ்வளவு செல்லம். தன்னை தூக்கி வளர்த்த அம்மாச்சியை, தூக்கவும் முடியாமல் மூவராக இழுத்து வந்தது தான், அவளை மிகவும் பாதித்து இருந்தது.
“நாளைக்கு நைட் அங்க இருபேண்டாம்மா. அது வரைக்கும் அம்மாச்சிக்கு நீ தான் தைரியம் சொல்லணும்” என பொறுப்பை அவள்மீது சுமத்த, “சரி மாமா” என அடிபணிந்தாள்.
அவன் இந்தியா வருவதை தாமத படுத்த நினைக்க, விதி சொன்ன தேதிக்கு முன்பே இழுத்து வந்தது.
பாசத்தில் புரண்டது அவன் நெஞ்சம்