• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 2

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
35
அத்தியாயம் – 2


அடுத்து வந்த இரண்டு நாட்களைத் தோழியுடன் கழித்துவிட்டு ஹைதராபாத் நோக்கிப் பயணித்தாள் மதுமிதா. முதல் வேலையாக அலுவலகம் சென்று என்னென்ன செய்ய வேண்டும் என மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.

முடிக்க வேண்டிய வேலையை முடித்துவிட்டு, பிறகு அவள் மேலாளரிடம் போய்ப் பேச வேண்டும் எனத் துல்லியமாகத் திட்டமிட்டு எப்பொழுதையும் விட நேரத்திலேயே அலுவலகம் கிளம்பிச் சென்றாள்.

அவள் வேலைகளை முடிக்கவும் அவள் மேலாளர் வரவும் சரியாக இருந்தது. மேலும் சில நிமிடங்கள் அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுத்துவிட்டு மெல்லத் தன் இருக்கையை விட்டு எழுந்தாள் மதுமிதா.

எதையும் தைரியமாகச் செயல்படுத்தும் அவளுக்கு அன்று அவள் மேலாதிகாரியின் அறைக்கு நடந்து செல்வதே பெரும் சவாலாகப் பட்டது. ஏதோ போருக்குச் செல்வதைப் போல் உணர்ந்தாள். எவ்வளவு மெதுவாக நடந்தாலும் பக்கத்தில் இருக்கும் அறையின் தூரம் நீண்டு கொண்டு போகுமா என்ன? எப்படியோ அவன் அறைக்குச் சென்று மெல்லக் கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தாள்.

“எஸ்.. கம்மின்” என்ற பதிலைக் கேட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

“வாங்க மிஸ். மது.. உங்களை எதிர்பார்த்துட்டு இருந்தேன்” என அவன் பளீரென்ற புன்னகையுடன் சொல்லவும், “என்னையா, எதுக்கு?” எனப் பதட்டமானாள்.

“முதல்ல உட்காருங்க...” என அவன் நிதானமாகத் தன் இருக்கையில் சாய்ந்தவாறே சொல்லவும், ‘கூல் மது கூல். இவனுக்கு எதுவும் தெரியாது. நீயே பதட்டப்பட்டுக் காட்டிக் கொடுத்துடாத’ என அவளே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பட்டென்று அமர்ந்தாள் மதுமிதா.

மேஜையிலிருந்த, ‘நிரஞ்சன் தங்கதுரை’ என்ற அவன் பெயரை அப்போது தான் புதிதாகப் பார்ப்பதைப் போல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்றுநேரம் சத்தமே வராமல் போக, மெல்லத் தலையை உயர்த்தி, “சொல்லுங்க நிரஞ்சன்...” என அவள் கேட்கவும், புருவத்தை உயர்த்திய நிரஞ்சன், “நீங்க ஏதோ முக்கியமாப் பேசணும்னு வந்தீங்களே. முதல்ல அதைச் சொல்லுங்க” என்றான்.

“நானா? அது...” எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் அவள் விழிக்க, “அதற்குள்ள மறந்துட்டீங்களா?” என இதழ்களில் பதுக்கிய புன்னகையுடன் வினவினான்.

“ஓஹ் .. ஆமா... ஆமா...” என அவள் தடுமாற்றத்துடன் அசடு வழிய, “உங்க உடம்புக்கு இப்போ எப்படியிருக்கு? பரவாயில்லையா?” என அவனே பேச்சை வளர்த்து அவள் உதவிக்கு வந்தான்.

“உடம்புக்கு என்...” என ஆரம்பித்தவளுக்கு, உடம்பு சரியில்லை என்று அல்லவா விடுப்பு எடுத்திருந்தாள் என்பது ஞாபகத்துக்கு வர, ‘என்ன?’ என்பதைக் குலாப்ஜாமூனைப் போல் முழுங்கிவிட்டு, “இப்போ ஒன்னும் பிரச்சனையில்லை நிரஞ்சன்” என இனிமையாகச் சொன்னாள்.

“நல்லது. உடம்பு சரியில்லாதப்போ அங்க இங்கன்னு ரொம்ப அலையாதீங்க. முக்கியமா வெளியூருக்கு எல்லாம் போகாதீங்க” என அக்கறை கலந்த குரலில் சொல்லவும், ‘பொடி வைத்துப் பேசுகிறானோ?’ என அவனைக் கூர்ந்து பார்த்தாள்.

அவன் உதடுகளில் பிரகாசமான புன்னகை கீற்றொன்று ஒளிந்திருந்ததோ? ‘ஒருவேளை பொய் சொன்னது அவனுக்குத் தெரிந்துவிட்டதோ?’ என மனதுக்குள் வேர்க்க ஆரம்பித்தது மதுமிதாவுக்கு.

“அது இப்போ பரவாயில்லை” என அவள் திக்கித் தடுமாறி பதில் சொல்ல, “சொல்லுங்க மதுமிதா, உங்களுக்கு இந்த ஆபீஸ்ல வேலை செய்யறதுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குதா?” என உண்மையான கரிசனையுடன் கேட்டான் நிரஞ்சன்.

இவன் எதற்காகத் தன்னிடம் திடீரென்று இதையெல்லாம் கேட்கிறான் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “அதெல்லாம் எதுவுமில்லை. இன்ஃபாக்ட் ரொம்பச் சந்தோஷமா, சுதந்திரமா இங்கே வேலை செய்யறேன்” என மனதில் உணர்ந்ததை மறைக்காமல் தெரிவித்தாள்.

மதுமிதா இந்த அலுவலகத்தில் சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இருக்கும். அவள் முதலில் சென்னையில் பணிபுரிந்தாள். கல்லூரி மற்றும் பள்ளிப் படிப்புக்கும், வேலைக்கும் எனச் சென்னையிலேயே அவள் காலம் ஓடிவிட்டது.

வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும், அங்கிருக்கும் சூழ்நிலையை அனுபவிக்க வேண்டும் என வெகுநாட்களாய் நினைத்துக் கொண்டிருந்தாள். மாற்றம் இருந்தால் இயந்திரத்தனமாக அல்லாமல் மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் செயல்படும் என்று நம்பினாள்.

அந்தச் சமயத்தில் அவள் பெற்றோர் அமெரிக்காவிற்குத் தன் அண்ணனின் வீட்டிற்குச் செல்ல இருப்பதாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தை அவள் பயன்படுத்திக் கொள்ள எண்ணினாள்.

உடனே வேறு ஊரில் உள்ள நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தாள். அவளுக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைக்க, பெற்றோர்கள் கிளம்பும் முன்னர் அவளும் கிளம்பிவிட்டாள்.

இங்கே வேலை செய்ய ஆரம்பித்ததும், அவளுக்கு மேலதிகாரியான நிரஞ்சனை, சக ஊழியனாய் மிகவும் பிடித்துப் போனது. ஒரு நல்ல மேலதிகாரியாகத் திகழ்ந்தான் அவன். அவனுடன் வேலை செய்வதில் எந்தச் சிரமமும் இல்லை அவளுக்கு. அதே போன்று அவள் குழுவில் இருக்கும் மற்றவர்களும் பெரிதாக எந்தப் பிரச்சினையையும் இழுத்துக் கொண்டு வரவில்லை.

ஆகவே மதுமிதாவால் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வேலை செய்ய முடிந்தது. அதுமட்டுமல்லாமல் குழுவிலுள்ள உடன் பணிபுரிபவர்கள் சொல்லும் கருத்துகளை எடுத்தவுடனே மறுக்கும் ரகமும் இல்லை நிரஞ்சன். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வான்.

கூடுதலாக அவரவருக்கு உரிய பாராட்டுகளையும் அப்பொழுதே தெரிவித்துவிடுவான். அதனால் அவன் மேல் எப்போதும் அவளுக்கு மிகுந்த மதிப்பிருந்தது. அவனும் இவளிடம் நட்பு ரீதியில் பழக ஆரம்பித்திருந்தான்.

“இல்லை என் மேலே ஏதாவது கோபம், குறை இப்படி ஏதாவது?” திடீரென்று ஏன் இப்படிக் கேட்கிறான் என அவளது இதயம் டமாரம் போல் படபடவென்று அடித்துக் கொண்டது. ‘ஒருவேளை தெரிந்திருக்குமோ?’ எனச் சந்தேகம் முளைவிட திருதிருவென்று முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தன் பதிலுக்காக்க காத்திருகிறான் எனப் புரிய, “அதெல்லாம் இல்லை... உங்க மேல போய்க் கோபப்பட முடியுமா, இல்லை, குறை சொல்ல முடியுமா?” எனப் பேச்சு எதை நோக்கிப் பயணிக்கிறது என்று புரியாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

“ரொம்ப நல்லது. ஆனா, எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. இங்க பாருங்க” என அவன் தன் அலைபேசியை எடுத்து எதையோ கண்டுபிடித்து அவள் முன்னே நீட்டினான்.

அதைப் பார்த்ததும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “நிரஞ்சன்!” எனப் படக்கென்று இருக்கையில் இருந்து எழுந்துவிட்டாள். காரின் மேல் தக்காளி சாஸ் கொண்டு அவளது கலைத் திறனை வெளிப்படுத்திய ‘இடியட்’ என்ற அவளது ஓவியத்தைக் காட்டிக் கொண்டிருந்தான்.

“என்னாச்சு.. நீங்க எதுக்கு ஷாக் ஆகறீங்க. உட்காருங்க” எனச் சொல்லவும், அவள் பட்டென்று அமர்ந்து கொண்டாள்.

‘லூசா மது நீ?’ அவளே தன்னைக் காட்டிக் கொடுக்க முயன்றாளே என அவளையே திட்டிக் கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

“என் கார் மேலே குப்பையைப் போட்டு சாஸ் எல்லாம் ஊத்தற அளவுக்கு என் மேலே அப்படி யாருக்கு என்ன கோபம் இருக்க முடியும்?” என உச்சுக்கொட்டி சற்றுநேரம் அமைதியாக யோசித்தவன்,

“சொல்லுங்க மது... உங்களுக்கு என் மேலே எந்தக் கோபமும் இல்லைன்னு சொன்னீங்க. அப்புறம் எதுக்கு இப்படிச் செஞ்சீங்க?” என ‘நீ தான் அந்தக் குற்றவாளி என ஏற்கனவே எனக்குத் தெரியும்’ என்ற உண்மையைப் போட்டுடைத்தான்.

‘டேய், எதுக்கு ஷாக் ஆகறீங்கன்னு கேட்டு, நல்லா தெளிய வச்சு திருப்பியும் அடிக்கறியேடா’ என அவளால் மனதுக்குள் புலம்ப மட்டுமே முடிந்தது. இவனுக்கு எப்படி அவள் செய்தது என்று தெரிந்தது? ஒருவேளை அங்கே இருந்த சி.சி.டி.வியைக் கவனிக்காமல் விட்டுவிட்டனரோ?

ஆனால் இதற்கு மேல் உண்மையை மறைத்துக் கொண்டிருக்க அவளின் மனமும் குணமும் இடம் கொடுக்கவில்லை. அவளும் அதைப் பற்றியல்லவா பேச வந்திருந்தாள்.

“சாரி நிரஞ்சன். அது உங்க கார்ன்னு தெரியாது” எனத் தயங்கிவள் பின்னர் நடந்ததை அப்படியே சொல்லிவிட்டாள்.

“அப்போவே என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டிருக்கலாமே? நீங்க எப்போவும் எதையும் நேரா பேசிடுவீங்களே” என விடையறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவளை ஊடுருவிப் பார்த்தான்.

“அது...” என ஒரு சில நொடிகள் தயங்கியவள், “நான் உண்மையைச் சொல்லி லீவு கேட்டிருந்தா கண்டிப்பா நேரா வந்து உங்ககிட்டே பேசியிருப்பேன். ஆனா, நான் பொய் சொல்லிட்டு இல்லை போனேன்” என உண்மையை ஒத்துக் கொண்டாள்.

பின்னர், “அதைப் பத்திப் பேசறதுக்குத் தான் காலையிலேயே சீக்கிரம் வந்து முடிக்க வேண்டிய வேலையை முடிச்சுட்டேன். ஒரு பொய்யைச் சொல்லி, அந்தப் பொய்யை மறைக்க மேலும் பல பொய்களைச் சொல்லி எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு என எனக்குப் புரிஞ்சது.

இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன். ஆனால் ஃப்ரெண்ட் ஒரு கஷ்டத்தில இருக்கறப்போ பார்த்துட்டு சும்மா என்னால அப்படியே இருக்கவும் முடியலை” என அவள் பக்க நியாயத்தை எடுத்துரைத்தாள்.

“வெரி இண்டரெஸ்ட்டிங்... எனக்கு இந்தக் குணம் ரொம்பப் பிடிச்சிருக்கு” என அவளை மெச்சுதலாகப் பார்த்தவன், “நான் உங்களை முன்னாடியே சந்திச்சிருக்கலாம். என் சிந்தனைகள் மாறியிருக்கும். உறவுகள் முக்கியம் என அவங்க அருமை புரிஞ்சிருக்கும்” என்றான்.

அவன் சொன்னதின் அர்த்தம் அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் அதைக் கேட்டவுடன் இவனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறதா என ‘தன்னானே தானெனன்னே’ எனக் காதல் டூயட் பாடவுமில்லை. பின்னே ஏதேச்சையாகச் சொல்லும் வார்த்தைகளைக் கோர்த்து அவளால் எப்போதும் ஒரு மாலையைக் கட்ட முடியாது.

“ஆமாம் அவனைப் பழி வாங்கற பிளான் பிளாப் ஆகிடுச்சே. இனி எப்படிப் பழி வாங்கப் போறீங்க?” என அவன் இளநகையுடன் கேட்க, “அன்னைக்கு மாட்டியிருந்தா வெறும் சாஸோட போயிருக்கும். இனி சாணியைக் கரைச்சு ஊத்தணும்” என தன் திட்டம் சொதப்பியதை எண்ணி எரிச்சலுடன் சொல்ல,

“அது வன்முறை இல்லையா?” என வினவினான்.

“அந்தச் சாணியை வாசல்ல தெளிக்கிறோமே. அது என்ன வன்முறையிலா சேரும்? வீட்டு வாசலுக்குப் பதிலா அவன் காரோட கதவு வாசல்ல ஊத்தப் போறோம்” என அவள் தோள்களைக் குலுக்க,

வாய்விட்டே நகைத்தவன், “எதுக்கும் உங்ககிட்டே ஜாக்கிரதையா இருக்கணும் போல மது” எனப் பயந்ததைப் போல் நடித்தான்.

“ஆமா, நான் நல்லவனுக்கு நல்லவ... பொல்லாதவனுக்கு ரொம்பப் பொல்லாதவ” என்றாள் சண்டைக் கோழியைப் போல் சிலிர்த்துக் கொண்டு. தொடர்ந்து, “ஆனா, உங்களைக் கவனிச்ச வரையில நீங்க அந்த ரகம் கிடையாது” எனப் பாராட்டுப் பத்திரம் வாசித்தாள்.

“நல்லவேளை தப்பிச்சேன். ஆனா ஒன்னு அடுத்தத் தடவை சாணியை ஊத்தறப்போ எதுக்கும் சரியான காரான்னு பார்த்து ஊத்துங்க. அன்னைக்குக் காரைச் சுத்தம் பண்ணி வீட்டுக்குப் போக ரொம்ப நேரமாகிடுச்சு” என்றான்.

குற்றக்குறுகுறுப்பில் தவித்தவள், “ரொம்பச் சாரி நிரஞ்சன” என மீண்டும் மன்னிப்பை வேண்டியவள், “ஆனா நான் என் முகத்தையே காட்டலையே. எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” என அவள் அதுவரையில் கேட்க நினைத்ததைக் கேட்க,

“நீங்க மறைஞ்சு நின்ன இடத்துக்கு எதிர்ல இருந்த கண்ணாடி கதவை மறந்துட்டீங்களே. அதுல உங்க உருவம் நல்லாவே தெரிஞ்சது. அது நீங்கன்னு கண்டுபிடிக்க டிடெக்டிவ்கிட்ட போகணும்னு அவசியமில்லை. முதல் தடவை தப்பு பண்ணறீங்க போல. அதான் மாட்டிக்கிட்டீங்க. நீங்க இன்னும் வளரணும்” எனக் கேலியாகச் சொன்னான்.

“முன்னப் பின்ன செத்திருந்தா சுடுகாடு தெரியும்...” என சலித்துக் கொண்டவள், “ப்ச்... நீங்க பார்க்கலைன்னு நினைச்சுட்டு இருந்தேன்... எவ்வளவு லூசா இருந்திருக்கேன் பாருங்க” என அவள் சொல்லவும், பக்கென்று சத்தமாகச் சிரித்தான் நிரஞ்சன்.

“ஆமா, எனக்குத் தெரியாதுன்னு நினைச்சு தப்பை மறைச்சிடலாம்ன்னு பார்த்தீங்களா ம...” என அவன் முடிக்கவில்லை, அப்போது கதவைத் தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தாள் பவித்ரா.

பவித்ராவும் இவர்கள் குழுவில் இருக்கிறாள். அவள் சேர்ந்து ஒரு வருடமாகிறது. “வர வர யார் அட்வைஸ் பண்ணறதுன்னே இல்லை” எனச் சொன்னவாறே அவர்கள் முன் வந்து நின்றாள். பார்வை என்னவோ நிரஞ்சனைக் கேலியாகப் பார்த்தது.

அவளைப் பார்த்ததும் நிரஞ்சனின் முகம் ஆகாயத் தாமரையாய்ப் பிரகாசித்தது.

திடீரென்று பவித்ரா சம்மந்தமில்லாமல் அப்படிச் சொல்லவும், “என்ன ஆச்சு பவி?” என மதுமிதா விளக்கம் கேட்க, “இல்லை, பொதுவாச் சொன்னேன்” என்றாள் பவித்ரா.

‘நல்லவேளை பவித்ரா வந்தாள்’ எனப் பவித்ராவுக்கு மனதுக்குள் ஆயிரம் முறை நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள் மதுமிதா. பின்னே எத்தனை முறை இவன் முன்னால் அசடு வழிவது? ஆகவே இதற்கு மேல் அவனிடம் நடந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க விருப்பப்படவில்லை அவள்.

“சரி, அப்போ நான் கிளம்பறேன். நீங்க பேசுங்க. எனக்கு வேலையிருக்கு” என இருக்கையிலிருந்து எழுந்து நழுவப் பார்த்தாள் மதுமிதா.

“இருங்க மது. நான் இன்னும் பேசி முடிக்கலை. பவித்ராவும் இருக்காங்க. நல்லதாப் போச்சு” என அவளைத் தடுத்து நிறுத்திய நிரஞ்சன், பெண்கள் இரண்டு பேருக்கும் அடுத்த வாரம் பிறந்தநாள் வரப் போவதால் அதைக் கொண்டாடும் நோக்கில் அவர்கள் குழு மொத்தமும் சாப்பிட வெளியில் செல்லலாம் எனத் திட்டமிட்டதைப் பகிர்ந்து கொண்டான்.

“ஹய் சூப்பர்” என மதுமிதாவும், “அதெல்லாம் தேவையில்லை. நான் பர்த்டே கொண்டாடறது இல்லை ” எனப் பவித்ராவும் ஒரே சமயத்தில் சொல்லிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

மதுமிதாவே முதலில் நிசப்தத்தை உடைத்தாள். “என்ன பவி நீ? நம்ம ரெண்டு பேரும் மட்டும் தனியா இங்கே ஃப்ரெண்ட்ஸ் இல்லாம பர்த்டே கொண்டாட போர் அடிக்குமேன்னு பீல் பண்ணிட்டு இருந்தோமே மறந்துட்டியா?” என அவள் பவித்ரவைப் பார்க்க,

‘ஆனாலும் இவள் இவ்வளவு உண்மை விளிம்பியாக இருக்கக் கூடாது’ என மனதுக்குள் அர்ச்சனை செய்து கொண்டாள் பவித்ரா.

“நல்லவேளையா அதுக்கு இவர் ஒரு வழி சொல்லறார். பிளீஸ் எனக்காக” என அவள் முகத்தைப் பாவமாக வைத்துக் கெஞ்சவும், பவித்ராவால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை. பின்னே மதுமிதா இந்த ஊரில் தனித்து வசிக்கிறாள்.

சமீபகாலமாகவே பவித்ராவுடன் நெருக்கமாகிவிட்டாள் மதுமிதா.உயிர்த்தோழிகளாக இன்னும் மாறவில்லை என்றாலும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர். இருவருக்கும் மற்றவர் மேல் அதீத அக்கறை இருந்தது.

அதுவும் பேசவே காசு கேட்கும் பவித்ராவுக்கும், எந்நேரமும் சில்லறையைச் சிதறவிட்டதைப் போல் பேசிக் கலகலக்கும் மதுமிதாவுக்கும் மிகவும் பொருத்தமாகவே இருந்தது. மற்ற எல்லோரையும் விட பவித்ரா மதுமிதாவிடம் மட்டும் சிரித்துப் பேசினாள்.

“தாங்க்ஸ் பவி” என அவளைத் தோளோடு அணைத்து விடுவித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தவள், “சரிங்க நிரஞ்சன், நான் போய் வேலையைப் பார்க்கிறேன்” என அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் கிளம்பியதும், “பவி...” என நிரஞ்சன் ஏதோ சொல்ல வாய் திறக்க, “சார்... நீங்க கேட்டது” என அவன் முன்னால் ஒரு பேப்பரை நீட்டினாள். தொடர்ந்து “நீங்க கேட்ட பைல் உங்களுக்கு மெயில் பண்ணியிருக்கிறேன். வேற எதுவும் இல்லையே” என்றாள் பவித்ரா.

“பவி...” என அவன் மீண்டும் ஆரம்பிக்க, “என் பேர் பவித்ரா. பவி இல்லை” என முகத்தில் அறைந்ததைப் போல் சொல்லிவிட்டு, “பேசறதுக்கு வேற எதுவும் இல்லைன்னா நான் கிளம்பறேன்” என அவன் பதிலுக்காகக் கூடக் காத்திராமல் சென்றுவிட்டாள்.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் வலி தெரிந்தது. நடந்ததை எல்லாம் பின்னே சென்று அவனால் மாற்ற முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அவனுக்கு அவன் மேலேயே வெறுப்பு வந்தது. பெரும் கோபம் மூண்டது. ஆனால் அந்தக் கோபத்தை வைத்து அவனால் எதுவும் செய்ய முடியாது. சாதிக்கவும் முடியாது. செய்த தவறுகளை உணர்ந்துவிட்டான். மாறியும்விட்டான்.

ஆனாலும் நடந்ததை மாற்ற முடியாதே. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். எத்தனை காலமாகுமோ? இவள் மனசு மாறுவாள் எனப் பொறுமையைக் கடைப்பிடிப்பதை தவிர வேறு வழியில்லை.

கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்ப்பவர்களுக்கு அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டு கோபமும் வெறுப்பும் வருவதில்லை. கோபத்தை எதிரில் இருக்கும் கண்ணாடி மீது காட்டுவதுமில்லை.

மாறாக எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ளலாம் என்றே சிந்திக்கின்றனர். உண்மையை எடுத்துக் காட்டும் கண்ணாடியை மகிழ்ச்சியோடு பாதுகாத்து வைத்துப் பத்திரப்படுத்துகிறார்கள்.

அதே போலவே தங்கள் குற்றங்குறைகளை எதிரில் இருப்பவர் சுட்டிக் காட்டும்போது வெறுப்பும், கோபமும் தேவையில்லை. மாறாக, மகிழ்ச்சியுடன் ஏற்று அவர்களின் உறவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு சீர்த்திருத்தத்துக்கும் தயாராக வேண்டும். இதுவே கண்ணாடி நமக்கு எடுத்துக் காட்டும் மிகப் பெரிய பாடம்.

கண்ணாடி சொல்லும் கூற்றின் படியே நடக்க முயல்கிறான் நிரஞ்சன். அதனாலேயே தவறே செய்திருந்தாலும் மதுமிதாவின் மேல் அவனுக்குக் கோபம் வரவில்லை. தீயைக் கக்கிக் கோபப்படும் பவித்ராவின் மேலும் வெறுப்பு வரவில்லை. அவன் மாறிவிட்டான் என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று வேறு என்னவாக இருக்க முடியும்?

மதிய உணவு நேரத்தில், மதுமிதா சென்னையில் இருக்கும் மதுரவாணியை அழைத்து நடந்ததைச் சொன்னாள்.

“ஹேய் உன் மேனேஜர் ரொம்ப நல்லவரா இருக்காரே. ஆமா அவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?” எனக் கேலியில் இறங்கி, அதி முக்கியமான கேள்வியைக் கேட்டாள்.

மதுமிதாவுடன் இருந்த கடந்த மூன்று நாட்களில் நன்றாகவே தேறிவிட்டாள் மதுரவாணி. எதையும் எதிர்கொள்ளலாம் என்ற தைரியமும் முளைவிட்டிருந்தது.

“இன்னும் இல்லை.. ஏன் கேட்கிற?” என்றதும், “எனக்கென்னவோ அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்கு என நினைக்கிறேன். இல்லைனா இவ்வளவு பெரிய களேபரம் பண்ணின உன்னைச் சும்மா விடுவாரா என்ன?” என மதுமிதாவின் மனதுக்குள் தீயைக் கொளுத்திப் போட்டாள்.

அது வெகு சீக்கிரமே அவள் மனதுக்குள் படபடவென்று பற்றி மத்தாப்பாய்க் காதலைப் பொங்கச் செய்யப் போகிறது என அவள் அறியவில்லை.

‘நான் என்ன அந்தளவுக்கு அழகாவா இருக்கேன்?’ என வரவேற்பறையில் இருந்த கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொள்ள, அதே சமயத்தில் அதில் நிரஞ்சனின் பிம்பம் தென்பட்டது. கூடவே இருவரின் கண்களும் அதில் சந்தித்து மீண்டன. அவன் பளீரென்று புன்னகைத்தான்.

“ஜாக்கிரதையா இருடி. நான் பண்ணின அதே தப்பை நீ பண்ணாத” என மறுமுனையில் இருந்த தோழி சொல்லவும், “அவரெல்லாம் அப்படி ஏமாத்தற டைப் கிடையாது” எனப் பட்டென வாயில் இருந்து வார்த்தைகள் அவளையுமறியாமல் அவளுக்கு வந்துவிட்டன.

ஏனோ அவனை அந்த இடத்தில் வைத்து அவளால் பார்க்க முடியவில்லை. கண்ணாடியில் தெரிந்த நிரஞ்சன் புருவத்தை உயர்த்த, அவள் காதில் அணிந்திருந்த ‘ஏர்பாடை’க் காட்டி, அலைபேசியில் இருக்கிறேன் எனச் சுட்டிக் காட்டினாள்.

புரிந்தது என்பதைப் போல் தலையைசைத்துப், புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் நிரஞ்சன்.

அந்தப் புன்னகை முகம் அவள் அடிநெஞ்சில் இறங்கிவிட்டதை மதுமிதா அப்போது உணரவில்லை.

தொடரும்..
 
Last edited:
Joined
Mar 21, 2025
Messages
97
கோவத்தை கொண்டு இழந்த ஒன்று
நிதானத்தை இன்று கையில் வைத்து
சந்தோஷத்தை எப்போதும்
நம்பும் நிரஞ்சன் 🤩....

மனதில் பட்டதை
மறைக்காமல் பேசியும்
மது மனதில்
மறைமுகமாய் பதிந்து
மானேஜர் சார்..... 🤩🤩🤩🤩
 
Top Bottom