• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் -18

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
தொட்டுத் தொடரும் -18
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி

வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரண மாகஎன்

சங்கிழக் கும்வழக் குண்டே,
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்

பொதும்பினில் வாழும் குயிலே,
பன்னியெப் போது மிருந்து விரைந்தென்

பவளவா யன்வரக் கூவாய்

(*மகனின் பிரிவை எண்ணி வாடுதல்)



டல்லஸ் விமான நிலையம், வாஷிங்டன். லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஃப்ராங்க்ஃபர்ட் நோக்கி பறப்படத் தயாராக ரன்வேயில் நின்றது. அமெரிக்காவிற்குத் தற்காலிமாக விடைகொடுக்கத் தயாரானான் டாக்டர் ஸ்ரீவத்ஸன். கைகளில் தங்கை குழந்தைகளுக்கு.. இல்லை இல்லை அவனது செல்ல மருமகளுக்கு வாங்கிய சாஃப்ட் ஃபர் பொம்மையை அணைத்த படி கண்களை மூடி அமர்ந்திருந்த ஸ்ரீவத்ஸனின் நினைவுகள், ஓரிடத்தில் நில்லாமல் ஊசலாடிக் கொண்டு இருந்தன. இந்த பொம்மை வந்த கதையை நினைத்து அவனது முகம் விரிந்த புன்னகையைப் பூசியது..



பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்த ஸ்ரீவத்ஸன் அவனது துணிகள் இன்னும் வைக்கப்படாத நிலையில் பாதிக்குமேல் நிறைந்து விட்டதை கண்டான். கடந்த நான்கு ஆண்டுகளாக அவன் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அதற்கு கிடைத்த பாராட்டுப் பத்திரங்களும் பெட்டியை நிறைத்து விட்டன. எல்லாவற்றிற்கும் கீரீடம் வைத்தது போல, போன வாரம் அவனது தொகுப்புகளை வெளியிடுவதற்கு என்றே ஒரு விழா நடைபெற்று அவனுக்கும் ஒரு ஸ்பெஷல் மெமன்டோ வழங்கப்பட்டது.



அவனது நினைவுகள் அந்த விழா நாளுக்கு போனது. சிறுவயதிலேயே நியூரோ சைக்கியாட்ரி துறையில் பல்வேறு பட்டங்களைப் பெற்று அத்துறையில் பல ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவத்ஸனது அபிமான பரிசு அது.



அந்த மருத்துவமனையில் வேலை பார்ப்பதே பலருக்குக் கனவு என்ற நிலையில் அங்கு அவனது ஆராய்ச்சிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதே அவனது வாழ்நாள் லட்சியம் நிறைவேறியது போல் உணர்ந்தான்.



விழாவில் பேசிய அனைவரும் அவனது ஆய்வு கட்டுரைகள் யாவும் இனி வரும் காலங்களில் மனித மனங்களைப் படிக்க உறுதுணையாக இருக்கும் என்று மிகவும் பாராட்டினார்கள். மனிதனின் நுட்பமான மன உணர்வுகளையும், உதாசீனம் மற்றும் ஏமாற்றங்கள் ஏற்படுத்தும் தீவிர விளைவுகள் பற்றியும் பல கட்டுரைகள் சமர்ப்பித்து இருந்தான், ஸ்ரீவத்ஸன். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தை அவன் தேர்ந்தெடுத்த காரணத்தை அவன் மனம் மட்டுமே அறியும்.



ஸ்ரீவத்ஸனது முறை வந்த போது, சில நொடிகள் அங்கே கனத்த அமைதி நிலவியது. கையிலிருந்த பரிசைப் பார்த்தவன் அதனை இறுக்கிப் பிடித்தவாறு "தாங்க் யூ ஆல் ஃபார் திஸ் ஸ்பெஷல் மொமண்ட். ஐ டெடிகேட் திஸ் அவார்ட் டு மை மாம். ஷி இஸ் தி ரீசன் பிகைன்ட் ஆல் மை சக்சஸ்" என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் சில நொடிகள் நின்று விட்டு "தாங்க் யூ ஒன்ஸ் அகைன்" என்று சொல்லி அமர்ந்து விட்டான்.



இப்போது அவை எல்லாம் நினைவுக்கு வர, அந்தப் பரிசை எடுத்து மார்போடு அணைத்தபடி அமர்ந்து இருந்தவன், கிளம்புவதற்கு நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவனாக அனைத்தையும் அடுக்கி பெட்டியை மூடினான்.



எல்லாவற்றையும் ஒரு ஓரமாக வைத்தவன், அணிவகுத்து நின்ற பெட்டிகளை பார்த்து ஒரு கணம் திகைத்து விட்டான். 'கிட்டத்தட்ட நூறு கிலோ இருக்கும் போலவே. ஆண்டவா! எவ்வளவு எக்ஸ்ட்ரா பேக்கேஜ் சார்ஜ் கொடுக்கணும்னு தெரியலையே? கொடுத்தாலும் உள்ள விடுவானா தூக்கிபோட்டுடுவானா?'



'அபி சொன்ன மாதிரி பாதியை குரியர் பண்ணி இருக்கலாமோ? என்ன விட என் மச்சான் தான் என்ன பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான். நிறைய ஷாப்பிங் பண்ணி இருப்பேன்னு கரெக்டா கேட்ச் பண்ணி சொன்னான். நான் தான் இல்லவே இல்லைன்னு சாதிச்சேன். இப்போ என்ன பண்றது' என்று யோசனையில் ஆழ்ந்தான்.



தலையில் கை வைத்து அமர்ந்து விட்டவனை, 'இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம். அமெரிக்காவுக்கு திரும்பி வரப்போறதே இல்லைங்கிற மாதிரி ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் ,முக்கியமா நேத்து பிறந்த வாண்டுகளுக்கு எல்லாம் வாங்கிக் குவிச்சா பெட்டி பெரிசாகாமல் என்ன பண்ணும். முன்னாடியே போய் வெயிட்டாவது செக் பண்ணிட்டு வந்திருக்கணும். கடைசி நேரத்தில பேக்கிங்ல உக்கார்ந்தா, இப்படித் தான் முழிக்கணும்' என்று அவனது மனசாட்சி எட்டிப் பார்த்து மண்டையில் ஒரு கொட்டு வைத்தது.



மனசாட்சியை புறம்தள்ளி, அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவன் ஒரு ஹெல்ப்பரை அழைத்து எடை பார்த்து வரச்செய்து, ஒரு வழியாக விமான சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு அவர்கள் தந்த பதிலில் ஆசுவாசம் அடைந்தான்.



அவனது டிக்கெட் பிஸினஸ் கிளாஸில், அதுவும் டாக்டர் ஆன் போர்ட் என்ற கேட்டகரியில் இருப்பதாலும் ஒரே விமான நிறுவனத்தில் தான் அவனது பயணம் என்பதாலும் இன்னும் சில சலுகைகளைப் பெற்றிருந்தான். ஆனாலும், இந்த அனுபவம் அவனுக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்திருந்தது.



இதுவரை அவனது தேவைகளை, அவனது பெட்டியை அடுக்கும் வேலையோ அல்லது அவனுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்றாலோ எல்லாமே இதுவரை தந்தையோ தாயோ அவர்களைத் தாண்டி இப்போது ஸ்ரீநிதியோ அபிமன்யுவோ தான் செய்து கொண்டு இருந்தார்கள். வேலைப் பளுவைக் காரணம் காட்டி இவனும் ஒதுங்கிக் கொள்வான். இனிமேல் அந்த வேலையை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.



ஒருவழியாக சேவை நிலைய ஊழியர்கள் சொன்ன படி பெட்டியை அடுக்கி முடித்த போது, அவன் மருமகளுக்கு வாங்கிய பொம்மை கேபின் பேக்கேஜாக மாறிப் போனது. பெட்டிகள் தயாரான நிலையில், சீஃப் டாக்டரிடம் விடைபெற்று, எதிர் காலத்திற்கு தேவையான சில அறிவுரைகளையும் பெற்றான். அவன் கிளம்ப இன்னும் சிறிது நேரம் இருக்க, அந்த மருத்துவமனையில் காலார நடந்தான்.



அவனது கையிலிருந்த மொபைல் ஒலிக்க, 'இந்த நேரத்தில் யாராக இருக்கும்?' என்று பார்த்தவன், அழைப்பு தாயிடம் இருந்து என்று அறிந்ததும் பதற்றம் கொண்டான். அபிமன்யு இவர்கள் வீட்டில் தங்கி இருப்பதையும் ஸ்ரீதரன் வந்து விட்டதையும் அறியாதவன், "மா, என்ன விஷயம்? இந்த நேரத்தில கூப்பிட்டு இருக்கீங்க? நீங்க நல்லா இருக்கீங்க தானே? நிதியும் பசங்களும் நல்லா இருக்காங்க தானே?" என்று கேள்விகளை அடுக்கினான்.



அவனது அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், "கண்ணா! நீ எப்போ வருவ?" என்ற கௌசல்யாவின் குரலில் இருந்து என்ன உணர்ந்தானோ, அருகில் இருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்தான்.



"மா! இன்னைக்கு நைட்டு கிளம்பறேன். இன்னும் இரண்டு நாள்ல அங்க இருப்பேன் கவலைப்படாம தூங்குங்க" என்றவன் மேலும் பேசாமல் அழைப்பைத் துண்டித்து கண்மூடி அமர்ந்தான்.



அவனது நினைவலைகள் பின்னோக்கி அவனை இழுத்துச் செல்ல முயன்றன. நேரக் குறைவு காரணமாக, அதற்கு ஒரு தடா போட்டவன், அறையை நோக்கி நடந்தான். வழியில் பலரும் அவனைக் கண்டு கொண்டு பாராட்டுகளையும், பிரிவு மடலையும் சேர்த்து வாசித்தார்கள்.



நின்று பேச நேரம் இல்லாமல் அனைவருக்கும் புன்னகையைப் பதிலாகக் கொடுத்து, அவன் தனது அறைக்குள் வந்து சேர்ந்த போது , அவன் விமான நிலையம் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.



அடுத்த இரண்டு மணிநேரங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒருவழியாக அனைத்து ஃபார்மாலிட்டீஸூம் முடிந்து போர்டிங் பாஸைக் கையில் வாங்கியவன், நிம்மதியாக மூச்சு விட்டான். பின்னே, அவனது வாழ்நாள் சாதனையாகத் தனியாக ஷாப்பிங் செய்து, அதை அவன் மட்டுமே தனியாக பேக் செய்து அத்தனையும் ஏற்றுக் கொள்ளப் படுமா என்று முழித்த போது, எல்லா தடைகளையும் வெற்றிகரமாகக் கடந்து போர்டிங் பாஸ் வாங்கி விட்டானே!



அதிலும் ஹைலைட்டாக அந்த பெட்டிகளின் எடை எதிர் பார்த்ததை விட மிகவும் குறைவாக இருந்ததென்றால் என்ன அர்த்தம், அவன் ஷாப்பிங் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டான் என்பது தானே அர்த்தம். 'இந்த விஷயத்தில் எப்போதும் தன்னை கேலி செய்து ஓட்டும் ராகவி இனி என்ன செய்வாள் பார்த்து விடுவோம்' என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான். கூடவே, அவன் செலவு செய்தது ஆறாயிரம் டாலர்கள் என்பது தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சபதம் செய்து கொண்டான்.



இப்போது அவனது பயண விவரங்கள் முழுமையாக கைவசம் இருக்க, அதனை அபிமன்யுவிடம் சொல்லும் பொருட்டு மொபைலைக் கையில் எடுத்தவன், ஸ்ரீநிதியிடம் இருந்து வந்திருந்த பத்திற்கும் மேற்பட்ட மிஸ்ட் கால்களைக் கண்டு பயந்து போனான்.



உடனே அவளை அழைத்தவன் காதுகள் செவிடாக இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று எண்ணும் அளவுக்கு, அவனது அருமைத் தங்கை பேசித் தீர்த்து விட்டாள். அவளது அருகில் அமர்ந்து இடையில் புக முயன்ற கணவனும், விமானத்தில் ஏற அழைப்பு வந்து விட்டது என்பதைச் சொல்ல முயன்ற தமையனும் வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவினார்கள்.



பேசிக் கொண்டே சென்றவள், மறுபுறம் சத்தமே இல்லாமல் இருப்பதை உணர்ந்து காதில் இருந்து எடுத்தாள். அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததை அறிந்தவள் மொபைலைத் தூக்கி எறிய, அதனை எட்டிப் பிடித்த அபிமன்யு "ஹௌஸ்ஸாட்?" என்றான்.



தொடர்ந்து, "என் அறிவாளிப் பொண்டாட்டி! அவன் இவ்வளவு நேரம் செக்கிங்ல இருந்திருப்பான். எத்தனை லக்கேஜோட வரானோ?? எதுக்கும் வீட்டைக் காலி பண்ணி வை. என்னை எதுக்கு முறைக்கிற? நீ வேணா பாரு! உங்க அண்ணன் நாலு வருஷம் சம்பாதிச்சது எல்லாம் பெட்டில தான் வரும்" என்றவன்,



அவளது முறைப்பில் அடங்கி, "அவனுக்கு போர்டிங் கால் வந்திருக்கும். சீட்ல செட்டில் ஆகிட்டு கூப்பிடுவான். டேமைத் திறந்து விடாதே. கொஞ்ச நேரம் கம்முனு உட்காரு" என்று அவளைச் சமாதானம் செய்தான்.



விமானத்தில் ஏறி அமர்ந்த வத்ஸன் தங்கையை அழைக்க, அதற்குள் ஸ்ரீநிதியை, அபிமன்யு சமாதானப் படுத்தி இருந்ததால், சாதாரணமாகவே பேசிவிட்டு வைத்தாள். இப்போதும், அவனுக்கு வீட்டின் தற்போதைய நிலவரம் தெரியப்படுத்த படவில்லை.



சாப்பிட்டு முடித்து, குளிர்பானங்களுக்கு பெரிய நோ சொல்லி கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தான், ஸ்ரீவத்ஸன். பறக்கத் தொடங்கிய விமானத்துடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவனது எண்ணங்களும் பறக்கத் தொடங்கின. ஒரு பெரிய வித்தியாசமாக விமானம் முன்னோக்கி பறக்க அவனது எண்ணங்கள் பின்னோக்கி பறந்தன.



அவனது ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்த சமயம், வாழ்க்கை மறக்க முடியாத பல சம்பவங்களை காலம் நிகழ்த்திக் காட்டியது. மருத்துவமனையில் இருந்து ஸ்ரீவத்ஸன் வீடு திரும்பும் போது, அவனது தந்தை வழித் தாத்தா பாட்டியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் ஸ்ரீதரன். கௌசல்யா, தனக்குள் ஒடுங்கி விட, அவரது அத்தை தான் அவ்வப்போது ஆறுதல் அளித்துக் கொண்டு இருந்தார். நண்பர்கள் அனைவரும் அவ்வப்போது வந்து சென்று அவனை உற்சாகமாக வைத்திருந்தனர். ஒரு நாள் பெரியவர்கள் ஸ்ரீநிதியுடன் ஊருக்குச் சென்று இருக்க, ஸ்ரீதரன் ஏதோ அலுவலக வேலையாக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை.



வத்ஸனின் அறையில் இருந்த கௌசல்யாவிடம் வந்தவர் எங்கோ பார்த்தபடி "நல்லா தூங்கிட்டு இருக்கான். அவனை எதுவும் பேசித் தொந்தரவு பண்ணாமல் இருந்தாலே போதும்" என்று தணிந்த குரலில் சீறி விட்டுப் போனார். அவர் மெல்லிய குரலில் சொன்னாலும், இது கண்களை மூடியிருந்த வத்ஸனின் காதுகளிலும் விழவே செய்தது.



அவன் மருத்துவமனையில் இருந்தது முதல் இப்பொழுது வரை கௌசல்யா அவன் விழித்துக் கொண்டு இருக்கும் போது அவன் அருகில் வரவே இல்லை அவன் தூங்கும் போது மட்டுமே வருகிறார். அதாவது அவன் சில நேரங்களில் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் அவன் உறங்குகிறான் என்று நினைத்து அருகில் வந்து பார்ப்பதை அவன் உணர்ந்தே இருந்தான். அத்தகைய நேரங்களில் எதையெதையோ பேசவும் செய்கிறார்.



இன்றும் கூட அவன் கண்மூடி இருப்பதைப் பார்த்து விட்டே வந்திருந்தார். அவர் எதையோ பேச விழைகிறார் என்று உணர்ந்த மகன் தனது நடிப்பைத் தொடர்ந்தான். அவன் தலையை வருடிக் கொண்டே தன் போக்கில் பேசிக் கொண்டே இருந்தார் அந்த அன்னை.



"கண்ணா! நீயும் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிடுவியா…நான் வேணும்னு எதையுமே செய்யலையே…நல்லதுன்னு தானே செய்யறேன்....நீ என் உயிராச்சே.. உங்களுக்கு எல்லாமே பெஸ்ட்டா கொடுக்கணும்னு நினைக்கிறது தப்பா…..உனக்குமே என்னைப் பிடிக்கலையா.."



"நான் என்ன தான் செய்ய…காதுக்குள்ள ஏதோ கேட்டுட்டே இருக்கே.. தலை வெடிச்சிடும் போல இருக்கே..நான் யார் கிட்ட சொல்ல…என் தேவையை எங்க அப்பாவும் கேட்கலை…உங்க அப்பா கூட கேட்கலையே….ஒரு வேளை எல்லாரும் சொல்ற மாதிரி நான் பைத்தியமா..."



"நான் நினைச்ச எதுவும் எனக்கு தான் கிடைக்கலை... உங்களுக்காவது கிடைக்கட்டுமே… நீயாவது டாக்டராகி அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு பாக்கறயா.. அது வரைக்கும் நான் இருப்பேனா தெரியலையே…ஒரு வேளை நான் பண்றது பிடிக்காமல் தூரமா போயிடுவியா… நிதி…நிதிய யார் பாத்துப்பா" என்று தன் போக்கில் பேசிக் கொண்டே போன கௌசல்யாவின் வார்த்தைகள் அவரது மகனை முதல் முறையாக தெளிவாக யோசிக்க வைத்தன. அந்த யோசனைகள் அவனைச் சில ஸ்திரமான முடிவுகளில் நிறுத்த அந்த முடிவுகள், அவனது நண்பர்களையும் தொற்றிக் கொண்டதில், அவர்கள் அனைவரது வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தன.



கண்களில் நீர் வழிய கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தவன் தூக்கத்தின் பிடியில் செல்ல ஆரம்பித்த போது, விமானம் தரை இறங்கப் போவதாக விமானியின் குரல் அறிவித்தது. வாஷிங்டனில் இருந்து ஃபிராங்க்ஃபர்ட் வரையிலான எட்டு மணி நேரப் பயணத்தைக் கொசுவர்த்தி சுருளை சுற்றுவதில் செலவழித்ததில் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச, அவனது லே ஓவர் பொழுதிலாவது தூங்கலாம் என்று முடிவு செய்தான்.



அந்தப் பொழுதில் தான் மிச்சம் இருந்த கொசுவர்த்தியை நன்றாகவே சுத்தப் போகிறான் என்பது தெரியாமல் ஃபிராங்க்ஃபர்ட்டில் தரை இறங்கினான்.
 

Author: siteadmin
Article Title: தொட்டுத் தொடரும் -18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom