அத்தியாயம்-13
நீரழல் வானாய் நெடுநிலங் காலாய் நின்றநின் நீர்மையை நினைந்தோ?
சீர்க்கெழு கோதை யென்னல திலளென் றன்னதோர் தேற்றன்மை தானோ?
பார்க்கெழு பவ்வத் தாரமு தனைய பாவையைப் பாவம்செய் தேனுக்கு,
ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட மாகநின் மனத்துவைத் தாயே.
(*மகளை மருமகன் அலட்சியப் படுத்துவதாகத் தாய் குற்றம் சாற்றல்)
விரிந்த புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்தவன் உள்ளே நிலவிய அமைதியைக் கண்டு திகைத்தான். "ரொம்ப நல்ல பையன்பா நீ...உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடக்கலாம்.." டிவியில் வத்சலா ராஜகோபால் அர்ஜுனிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். மகன் உள்ளே நுழைந்ததை கவனிக்காத ராதா "என் மகன் கூட ரொம்ப நல்லவன் தான். நல்லவங்களுக்குத் தானே எல்லா கஷ்டமும் வருது" என்று சத்தமாக புலம்பினார்.
"அம்மா! இப்போ என்ன ஆயிடுச்சுன்னு இப்படி சொல்றீங்க?" என்று சத்தமாக கேட்டபடி உள்ளே வந்தவனைக் கண்ட ராகவி அவசரமாக டிவியை ஆஃப் செய்தாள். அவசரத்தில் அவளது கை எந்த பொத்தானை அழுத்தியதோ, டிவியில் இப்போது "நல்லவங்கள ஆண்டவன் நெறைய சோதிப்பான், ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்" என்று சூப்பர் ஸ்டார் சொல்லிக் கொண்டிருந்தார்.
என்ன செய்தோம் என்று தெரியாமல் ராகவி திருதிருவென விழிக்க, "உங்க ரேஞ்சே வேறம்மா. உங்க கேள்விக்கு சூப்பர் ஸ்டாரே பதில் சொல்லிட்டார் பாருங்க" என்று கலகலவென கண்ணில் நீர் வர சிரித்தபடி தாயின் அருகில் அமர்ந்தான் அபிமன்யு. பல மாதங்கள் கழித்து கேட்ட மகனின் சிரிப்பில் பெற்றவர்களின் மனம் குளிர்ந்தது. கண்கள் கலங்க அவனைப் பார்த்த கிருஷ்ணன் "எல்லாம் சரி அபி இப்போ என்ன செய்யலாம்னு இருக்க" என்று கேட்க ராதாவோ "யார் இப்படி செஞ்சு இருப்பாங்க அபி? நிச்சயம் நிதியா இருக்காது" என்று பாயின்ட்டைப் பிடித்தார்.
சொல்வதற்குத் துளியும் பிடித்தம் இல்லை என்றாலும் குடும்பத்தினரின் மன அமைதிக்காக சில விவரங்களை மட்டும் பகிர்ந்து கொண்டான். வளைகாப்பு முடிந்த மறு நாள் வீட்டுக்கு வந்த மருமகனிடம் தனது நிபந்தனைகளை கூறி, அதை நிறைவேற்றினால் மட்டுமே பிரசவத்திற்கு பின் மகளை திருப்பி அனுப்புவேன் என்று கண்டிப்பாக கூறியிருந்தார் கௌசல்யா.
முதலில் ஏதோ விளையாட்டுக்கு கூறுகிறார் என்று நினைத்தவன், பிரசவம் முடிந்த பின்னும், பெயர் வைக்கும் போதும் அவ்வப்போது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக காட்டிக்கொண்ட கௌசல்யாவை, ‘இவர் என்ன சீரியல் வில்லி மாதிரி பேசுகிறார்’ என்று நினைத்தானே தவிர அவரது வார்த்தைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
பிரசவத்தை நினைத்து அவனுமே பயப்படுகிறான் போலும் என்று சுற்றியுள்ள அனைவரும் நினைத்திருக்க, நல்லபடியாக குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகியும் அவன் அதே குழப்பமான நிலையில் இருப்பதை கண்டு என்ன விஷயம் என்று அறியாமல் திகைத்து நின்றனர். சரண் ஆரம்பத்திலேயே மேலோட்டமாக விஷயத்தை அறிந்தவன், ஸ்ரீதரனிடமாவது இதைப் பற்றிக் கூறுவது தான் நல்லது என்று ஆலோசனை சொன்னான்.
கடந்த சில வருடங்களாகத் தான் மனைவி, மக்களைப் பற்றிய கவலையில்லாமல் இருக்கும் ஸ்ரீதரனிடம் சொல்லி, அவரையும் வேதனை படுத்துவதில் அபிமன்யுவிற்கு உடன்பாடு இல்லை. இருபத்து நான்கு மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் கௌசல்யா எப்படி அவரது மிரட்டல்களைச் செயல்படுத்த முடியும் என்பது இப்பொழுதும் கூட அவனுக்கு புரியவே இல்லை. சும்மாவேனும் பேசுகிறார் என்று தான் நம்பிக் கொண்டிருந்தான்.
இவ்வாறு விஷயத்தை எளிதில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தவன் தந்தையின் அழைப்பு வந்தபோது தான் கௌசல்யா எந்த எல்லைக்கும் போவார் என்று உணர்ந்தான்.
ஆறு மாதங்களாக மகன் அனுபவித்த மனப் போராட்டங்களை அறிந்து கண்ணீர் சிந்திய ராதாவை, "அம்மா நீங்க சொல்லுவீங்களே இதுவும் கடந்து போகும்னு. இப்பவும் அதையே நினைச்சுக்கோங்க. எல்லாம் சரியாயிடும். சீக்கிரம் நல்ல நாளைப் பாருங்க. உங்க மருமகளையும் குட்டீஸையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம். ரெண்டு பேரும் உங்கள நாள் பூராவும் ரொம்ப பிஸியா வச்சிருப்பாங்க. என்னை எல்லாம் உங்க கண்ணுக்கே தெரியாது அப்போ" என்று கேலி பேசி அவரது மனதை மாற்றினான்.
"ஹய்யா! மாமா வந்தாச்சு! மாமா வந்தாச்சு!" மாமனது குரல் கேட்டு ராகவும் கேசவும் தூக்கம் கலைந்து உற்சாகமாக ஓடிவந்தார்கள். "ஹேய் குட்டீஸ்! நீங்களும் வந்து இருக்கீங்களா? மாமாக்கு தெரியவே இல்லை பார்த்தீங்களா?" என்று அவர்களுக்குச் சமமாகக் குதூகலமானான் அவர்களது மாமன். இடுப்பில் கைவைத்து முறைத்தபடி "எங்களைக் குட்டீஸ்னு கூப்பிடாதீங்க, மாமா. உங்களுக்கு எத்தனை தடவைதான் சொல்றது. இதுதான் லாஸ்ட். நாங்க இப்போ பிக் பாய்ஸ் ஆயாச்சு. அத்தையோட பாப்பா இரண்டு பேரும் தான் குட்டீஸ்" என்று கோரசாக அவனுக்குப் பாடம் எடுத்தார்கள்.
இடுப்பு வரை வளைந்து "எஸ் பாஸ்" என்றவன், கூடவே "அச்சோ கவி! உன் பசங்களுக்கு என்ன அறிவு? என்ன அறிவு? நல்லவேளை உன்னை மாதிரி இல்லை" என்றவனை கவி அடிக்க வர, "பசங்களா ஜூட்" என்று இருவரையும் அள்ளிக் கொண்டு தனது அறைக்கு சென்றான். அவர்களுக்காக தயார் செய்த காரை கொடுத்து அதை எப்படி ஓட்டுவது என்பதையும் சொல்லிக்கொடுத்தான்.
கடந்த ஆறு மாதமாக என்ன வரப்போகிறது என்பது புரியாமல் குழப்பத்தில் இருந்தவன், இப்போது இதுதான் விஷயம் என்று தெரிந்ததால் அவனை அறியாமலேயே தன் இயல்புக்குத் திரும்பி இருந்தான். அவனது மாற்றம் அவனைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சியை மீட்டெடுத்தது. இனி வருவதை அவன் கடந்து விடுவான் என்ற நம்பிக்கையை அளித்தது.
சிறிதுநேரம் கவலைகளை மறந்து அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் சரண் வந்து அழைக்கவும், அடுத்து செய்ய வேண்டியதை ஆலோசித்தான். இமெயில் மூலம் வந்த புகார் என்பதால் கமிஷனர் அலுவலகம் தான் செல்ல வேண்டும் என்று கிடைத்த செய்தி அவர்களுக்கு நிம்மதி அளித்தது.
சிட்டி கமிஷனர் ஸ்ரீதரனின் நண்பர் என்ற முறையில் அபிமன்யுவிற்கும் பழக்கம் இருந்தது. இதற்கு முன்பும் ஒருமுறை ஸ்ரீதரனுடன், ஸ்ரீநிதியின் விஷயமாகச் சந்தித்து இருக்கிறான். அந்தக் கொடுமையான நாட்களை கடப்பதற்கு அவர் பெரிதும் உதவியிருக்கிறார். ஸ்ரீதரனின் குடும்ப விஷயங்களும் தெரிந்தவர் என்பதால் பிரச்சனை எளிதாக முடிந்து விடும் என்று நம்பிக்கையுடன் சென்றவர்களை அந்த புகார் மனுவில் இருந்த விஷயங்கள் அதிர்ச்சியடைய வைத்தன.
கௌசல்யாவின் மனதில் இவ்வளவு வன்மமா? ஏன்? எதற்கு? என்ன காரணம்? இதனால் அவருக்கு என்ன லாபம்? என்ற பல கேள்விகள் அனைவரது மனதிலும் வரிசையாகப் படையெடுத்தன.
கமிஷனரின் முன்பு அமர்ந்திருந்த நால்வரில், யார் அதிக அதிர்ச்சி அடைந்தார்கள் என்பதை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. அபிமன்யு, சரண், கிருஷ்ணன் மூவரும் வீட்டில் இருந்து வந்திருக்க, முன்பே அங்கு வந்திருந்த ஸ்ரீதரனை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. டெல்லியில் வேலை முடிந்து விட்டதால், பேரக் குழந்தைகளைக் காணும் ஆவலுடன் ஒரு நாள் முன்னதாகவே சென்னை வந்து இறங்கியவரை, சேகரின் தொலைபேசி அழைப்பு, விமான நிலையத்தில் இருந்து கமிஷனர் அலுவலகத்திற்கு இழுத்து வந்திருந்தது. இதுவும் நன்மைக்கே என்று மற்ற மூவரும் நினைத்தார்கள்.
ஸ்ரீதரன், தான் கேட்ட வார்த்தைகள் பொய்யாக இருந்து விடாதா என்ற ஆசையில் "கம் அகெயின், சேகர். எனக்கு சரியா புரியலை" என்றார். கூடவே "இந்த மெயில் எங்க இருந்து, யார் பேருல வந்திருக்கு? கரெக்டா செக் பண்ணி சொல்லு. இதை அனுப்பியது நிச்சயம் என் பொண்ணு இல்லை. இப்படி ஒரு புகார் அபி மேல, அதுவும் அவ பேருல வந்திருக்குன்னு தெரிஞ்சாலே அவள் என்ன ஆவாளோ" என்று படபடத்தார்.
"காம் டவுன் ஸ்ரீதர்! நல்லா விசாரிச்சதுக்கு அப்புறம் தான் உன் கிட்ட சொல்லி இருக்கேன். இந்த மெயில் உங்க வீட்டுல இருந்து, உன் பொண்ணோட மெயில் ஐடில இருந்து தான் வந்திருக்கு. ஆனால் அனுப்பியது உன் பொண்ணு தானான்னு தெரியலை" என்று சற்று இடைவெளி விட்டு "மெயில்ல இருந்த மொபைல் நம்பர் கௌசல்யான்ற பேருல இருக்கு. அந்த நம்பரில் பேசியதும் அவங்க தான்" என்று அந்த நம்பரை சொன்னார். அது கௌசல்யாவின் நம்பர் தான் என்று ஸ்ரீதரனும் அபியும் உறுதி செய்தனர்.
ஸ்ரீதரனுக்கு 'இதயம் துடிப்பதை நிறுத்தி விடாதா' என்று இருந்தது. 'மனைவியை பற்றி நினைத்துக் கொண்டிருந்தது தவறோ.. அவளது நடவடிக்கைகள் எதுவும் வித்தியாசமாக இல்லையே... எங்கே தவறி விட்டேன்... ‘ என்று பல்வேறு சிந்தனைகள் மனதில் ஓட ஆணியடித்தது போல் அமர்ந்து இருந்தார். கிருஷ்ணனும் சரணும் என்ன சொல்வது என்று புரியாமல் திகைக்க, "அந்த மெயிலை நான் பார்க்க முடியுமா சார்? அதில் அப்படி என்ன தான் எழுதி இருக்கு, அரெஸ்ட் ஆகலாம்னு சொல்ற மாதிரி?" என்று அபிமன்யு தனது கேள்விகளை அடுக்கினான்.
அந்த மெயிலை திறந்து, தனது கம்ப்யூட்டரை அவர்கள் புறம் திருப்பினார், சேகர். அதனைப் படித்த அபிமன்யு ஒரு கசந்த முறுவலுடன், நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து கொண்டான். அவனது வளர்ப்பு அவனை அந்த நிலையிலும் நிதானத்தை கடைபிடிக்க வைத்தது. அவனைத் தொடர்ந்து அந்தப் புகாரைப் படித்த மற்றவர்கள், அதிர்ச்சி அடைந்தாலும் ஸ்ரீதரனுக்காக அதை வெளிக்காட்டாமல் அமர்ந்தார்கள். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், வார்த்தைகளில் வெளியே சொல்ல முடியா வண்ணம் அபிமன்யுவை மனைவியை வன்கொடுமை செய்யும் கணவனாகச் சித்தரித்தது.
"இது ஸ்ரீயோட மெயில் ஐடி தான். ஐபி அட்ரஸ் செக் பண்ணுனீங்களா சார்? ஃபோன் நம்பரும் பேரும் இருக்கிறதால மட்டும் அனுப்பியது அவங்க தான்னு சொல்ல முடியாதே. வேற யாரும் ஹேக் பண்ணி இருக்க சான்ஸ் இருக்கா" என்று தனது சந்தேகங்களை தெளிவு படுத்த விழைந்தான். கௌசல்யா இந்த அளவு கேவலமாக அவனைச் சித்தரித்திருப்பார் என்று அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அவனைப் பரிதாபமாக பார்த்தவர் "அவங்களோட பேசினோம் என்று சொன்னேனே அபிமன்யு, நீங்க கவனிக்கலையா. அவங்ககிட்ட நான் தான் பேசினேன். நான் ஸ்ரீதரனோட ஃப்ரண்டுன்னு சொன்னதை அவங்க காதில் வாங்கினது மாதிரியே தெரியலை. பொண்ணு எதையும் யோசிக்க கூடிய நிலைமையில் இல்லைங்கிறதனால அவளுக்கு பதிலா அவ பேருல நான் மெயில் அனுப்பினேன், என்ன தப்புன்னு கேட்கிறாங்க" என்றார்
அதன் பிறகு அந்த மெயிலை திரும்பவும் நிதானமாகப் படித்துப் பார்த்தவன் அதில் தனக்கு தேவையான விஷயம் இருப்பதைக் கண்டு கொண்டவனாய் நிமிர்ந்து உட்கார்ந்தான். இயற்கையிலேயே ஆரோக்கியமாக இருந்த ஸ்ரீநிதியை திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்து, அதுவும் இரட்டைக் குழந்தைகள் தான் வேண்டும் என்று சிகிச்சை என்ற பெயரில் அவளை சித்திரவதை செய்ததாகவும், அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் கணவன் அவளை தகாத முறையில் நடத்தியதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.
மொத்தத்தில் அபிமன்யுவின் குறைகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவளை கொடுமைப் படுத்தியதாகவும், இப்போது குழந்தைகள் பிறந்து விட்ட நிலையில் மறுபடியும் அங்கே சென்றால் அதே கொடுமைகள் தொடர வாய்ப்பு இருப்பதாகவும், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அவனிடம் இருந்து பாதுகாப்பும் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுத் தருமாறு ஸ்ரீநிதி சொல்வது போல் இருந்தது அந்த மெயில்.
அவனது சொத்து விவரங்களை பட்டியலிட்டு அத்தனையிலும் பங்கு வேண்டும் என்று தெளிவாகக் கூறி இருந்தது. திருமணம் முடிந்ததுமே தனது வங்கிக் கணக்கிலிருந்து தனது கம்பெனி வரை சரிபாதி உரிமையை ஸ்ரீநிதிக்கு மாற்றி இருந்தவனுக்கு, வாய்விட்டு சிரிக்க வேண்டும் போலிருந்தது. சுற்றி இருந்த அனைவரது மனநிலையைக் கருதி, சிரிப்பை அடக்கிக் கொண்டு "நீங்க என்ன சொல்றீங்க சார்? வாட் இஸ் தி நார்மல் ப்ரோசிஜர்?" என்று கேட்டு கமிஷனரின் பதிலுக்கு காத்திருந்தான்.
"வழக்கமா இந்த மாதிரி மெயில் வந்தாலும், நேரில் எழுதித் தராமல் எந்த ஆக்ஷனும் எடுக்க மாட்டோம். இந்த மெயில் ஐடி தெரிஞ்சதா இருக்கேன்னு பார்த்த போதுதான், ஏற்கெனவே பழைய கேஸ்ல நான் ஹேண்டில் செஞ்ச அதே ஐடின்னு கண்டு பிடிச்சேன். நானே பார்த்துக்கிறேன்னு சொல்லி இருந்தேன். அதுக்குள்ள உங்க ஏரியா ஸ்டேஷன் மக்கள் உங்களைக் கலவரப் படுத்திட்டாங்க. ஐ ஃபீல் வெரி சாரி அபௌட் தாட்" என்றார்.
"சார், இதுவரைக்கும் அஃபிஷியலா பேசினீங்க. இப்போ மாமாவோட ஃப்ரண்டா சில விஷயங்கள் பேசலாமா. உங்களுக்கு டைம் இருக்குமா?" என்று கேட்டவனை, ஒரு புன்முறுவலுடன் நோக்கிய கமிஷனர் "இப்பவுமே ஸ்ரீதரோட பிரெண்டா தான் பிகேவ் பண்ணிட்டு இருக்கேன். அபிமன்யுவுக்கு இது புரியலையா என்ன? அஃபிஷியலா பேசுறதா இருந்தா, உன் பேர்ல வந்த கம்ப்ளைன்ட்டுக்கு, என் முன்னாடி நீங்க இப்படி உட்கார்ந்துட்டு பேச முடியுமா? அதுவும் இல்லாமல் அபிமன்யுவுக்காக நான் என்ன ஹெல்ப்பும் எப்போதும் செய்ய தயாரா இருக்கேன். உன்னை மாதிரி ஒரு பிள்ளை இல்லையேன்னு நானும் என் வைஃபும் எத்தனை நாள் ஏங்கி இருக்கோம் தெரியுமா. இங்க விசாரணைக்கு வர சொன்னதால் தப்பா எடுத்துக்க வேண்டாம் ப்ளீஸ்" என்றார்.
எப்போதும் போல வாக்கியத்துக்கு ஒரு அபிமன்யு போட்டு பேசிய அவரது உருக்கமான பேச்சைக் கேட்டு, "சாரி அங்கிள் நான் அந்த அர்த்தத்துல பேசல. உங்களுக்கு டைம் இருக்குமோ இல்லையோன்னு தான். மத்தபடி நான் என்னைக்கும் உங்களுக்கு பையன் மாதிரிதான். இப்படி எல்லாம் பேசி கஷ்டப் படுத்தாதீங்க" என்றவன் அடுத்த பத்து நிமிடம் பேசிய விஷயங்கள் அவன் கௌசல்யாவை எந்த அளவுக்கு கவனித்திருக்கிறான் என்று காண்பித்தது.
ஸ்ரீதரனுக்கு எல்லாரையும் நிமிர்ந்து பார்க்கவே சங்கடமாக இருக்கத் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவரது அருகில் அமர்ந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டவன், "ஸாரி மாமா, அத்தைக்குக் கண்டிப்பா ஒரு கவுன்சிலிங் தேவைப்படுது. அவங்க மனசுல இருக்குற எல்லாத்தையும் வெளியில கொண்டு வரணும்னா ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் செஞ்சாதான் முடியும். இதுக்கு மேலயும் டிலே பண்ணினா விபரீதமாக ஏதாவது நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஸோ, இந்த சான்ஸ கண்டிப்பா நாம யூஸ் பண்ணியே ஆகணும்" என்று நிலைமையை அவருக்கு புரிய வைக்க முயற்சி செய்தான்.
கௌசல்யாவை சரி செய்கிறோம் என்று ஸ்ரீதரன் மனதை புண்படுத்தி விடக்கூடாது என்று அவன் செய்த முயற்சிகள் புரிந்து, லேசான தலை அசைத்தலின் மூலம் தனது ஒப்புதலை அளித்தார் ஸ்ரீதரன்.
பேசி முடித்தவன் "ஓகே சார். நீங்க கால் பண்ணி, உங்க வழக்கமான ப்ரோசிஜரைச் சொல்லுங்க. அடுத்தது என்ன பண்றாங்க, நேர்ல வருவாங்களான்னு பார்க்கலாம். அவங்க வராங்களோ இல்லையோ, நான் வேற ஒரு ஆள எதிர்பார்க்கிறேன், இதுக்குள்ள வந்து இருக்கணுமே" என்றான் யோசனையாக. கேள்வியாகப் பார்த்த மற்றவருக்கு ஒரு புன்னகையைப் பதிலாக்கியவன், வெளியே கேட்ட சலசலப்பில், சரணை பார்த்து கண் சிமிட்டியபடி "அக்கட சூடு" என்றான்.
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் -13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.