அத்தியாயம் – 17
பிரெஞ்ச் நாட்டவர்களின் ஆதிக்கத்தில் 1954 வரையில் புதுச்சேரி இருந்ததால் இன்றும் பிரான்ஸ் மக்களின் கலாச்சாரம் அங்கிருப்பவர்களிடம் ஊன்றியிருப்பதைக் காணலாம். அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் மக்கள் கடைவலம் செல்லக் கூட்டம் கூட்டமாகக் கிளம்பிவிட்டனர்.
ஆதிநந்தனும், நேத்ராவும் முதலில் சென்றது அரபிந்தோ ஆசிரமம். அதன் அமைதி இருவரின் நெஞ்சிலும் இனிமையான மனநிலையைத் தந்திருந்தது. அதன்பிறகு பாரதி பூங்காவுக்கும் அருகிலிருந்த ஆயி மண்டபத்துக்கும் சென்றனர்.
இருவரும் அந்த இடங்களைப் பற்றி, உணவு பற்றி, மக்கள் பற்றி எனப் பொதுவான விஷயங்கள் நிறையப் பேசினர். ஏற்கனவே வந்த இடங்கள் தான் என்றாலும் நேத்ராவுக்கு அது புதிதாகக் காட்சியளித்தது. இன்னுமே இனித்தது. அதன் அழகு பன்மடங்கு மிளிர்ந்தன.
மதிய உணவை முடித்துக் கொண்டு இறுதியாக ராக் பீச் சென்றனர். அங்கே சென்றதும் நேத்ராவின் கால்கள் முன்னோக்கி நகராமல் அப்படியே தேங்கி நின்றன. அவள் தன்னுடன் நடந்து வரவில்லை என உணர்ந்து நின்று திரும்பிப் பார்த்தான் ஆதிநந்தன்.
“நீங்க போயிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கேன்” என அவள் அமைதியாகச் சொல்லவும், “இதுவரைக்கும் வந்துட்டீங்க. இதுக்கு மேலே வர்றதுக்குப் பணம் எதிர்பார்க்கறீங்களா என்ன?” என அவன் பரிகாசமாக வினவ, நீண்டதொரு பெருமூச்சை வெளியிட்டாள்.
“கடல்னா எனக்குப் பயம் ஆதி” என்றவளை குழப்பமேறிய விழிகளுடன் நோக்கினான். அதைச் சரியாகப் புரிந்து கொண்டவளைப் போல், “அப்புறம் எப்படி நான் கப்பல்ல வேலைக்குப் போறேன் எனப் பார்க்கறீங்களா?” என வினவினாள்.
அவளிடம் அதைக் கேட்க நினைத்தான் என்றாலும் எங்கே கேட்டால் அதிகபிரசங்கி என எண்ணிக் கொள்வாளோ என்றே மௌனமாக இருந்தான். இதுவரையில் அவன் செய்து வைத்த குளறுபடிகளே போதும். அதன் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு மனமில்லாமல் வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டான்.
நேத்ரா அப்படிக் கேட்டதும், ‘ஆம்’ என்பதைப் போல அவன் தலையசைக்க, அதற்குமேல் அவளுக்குப் பேசுவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அவள் அன்னை, தேவி இறந்தது பற்றி முழுவதுமாக அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.
“என் அம்மா, கடல்ல தூங்கறாங்க ஆதி. கப்பலில் போனா என் அம்மாவோட மடியில தூங்குகிற சுகம் கிடைக்குது” என்றவள் கைகளைக் கட்டிக் கொண்டு எங்கோ வெறித்துப் பார்த்தாள்.
அவள் கண்களில் தெரிந்த வலி, அவன் நெஞ்சத்தை உலுக்கியது? அல்லது, உருக்கியதோ? உடனே அவளை அணைத்து, ‘நான் இருக்கிறேன் உனக்கு. என் மடியில் துயில் கொள்’ எனச் சொல்ல வேண்டும் என்ற உத்வேகம் அவனுள் எழுந்தது. அவனையுமறியாமல் அவளை நோக்கி சில எட்டுகள் வைத்துவிட்டான்.
“எனக்குப் பத்து வயசு இருக்கும். கடல்ல விளையாடறப்போ பெரிய அலைல சிக்கிட்டேன். என்னை அலைல இருந்து என் அம்மா காப்பாத்திட்டாங்க... ஆனா..” பாறை போன்று இறுகிப் போய் வெளிவந்த நேத்ராவின் குரலில் அப்படியே சமைந்து போய் நின்றுவிட்டான்.
அவன் நெஞ்சில் பாறாங்கல்லைத் தூக்கி அடித்தது போலிருந்தது. அவள் முடிக்காமல் விட்ட விஷயமும் அவனுக்கு விளங்கியது.
“ஐம் சாரி நேத்ரா” என எச்சிலை முழுங்கியவனுக்குத் தன்னை நினைத்தே அவமானம் பிடுங்கித் தின்றது. பின்னே, வாழ்க்கையில் மரண அடி வாங்கியவளிடம் அதை வைத்தே அன்று கப்பலில் பயமுறுத்தினானே. இவனை விடக் கொடூரன் யாராக இருக்க முடியும்?
“நேத்ரா, அன்னைக்கு நான் கப்பல்ல இருந்து கடல்ல தள்ளற மாதிரி உங்களைப் பயமுறுத்தியிருக்கவே கூடாது. ஐ அம் ரியலி சாரி” என்றவனைக் கலங்கிய விழிகளுடன் ஏறிட்டு நோக்கினாள்.
“ஆமா ஆதி, நீங்க ஏன் என்கிட்டே வில்லன் மாதிரி நடந்துக்கிட்டீங்க?” அவளது கத்தியைப் போன்ற கூர்மையான கேள்வியில் தூக்கிவாரிப் போட அவளைத் திகைத்த பார்வை பார்த்தான்.
அவன் செய்தது தவறு என்றுணர்ந்தே மன்னிப்பை வேண்டினான். அதற்கு அவள் பரவாயில்லை, விடுங்கள் எனச் சமாதானம் செய்வாள் என அவன் எதிர்பார்த்திருக்க, இப்படித் திடுதிடுப்பெனத் தன்னைச் சாடுகிறாளே. பேச்செழாமல் தடுமாறி நின்றான்.
“ரொம்ப அதிர்ச்சியாகாதீங்க. ஒரு வில்லனா நீங்க இன்னும் வளரணும்.”அவள் கலகலவென்று சிரிக்க, இவள் தன்னை எதுக்கோ வம்புக்கு இழுக்கிறாள் என்று புரிந்தது. அவள் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையில், ‘நீயே மேலே சொல்’ என்பதைப் போல் அப்படியே இமைக்காமல் நின்றிருந்தான்.
“ஒரு குட்டி இரகசியம் சொல்லட்டா?” என ஆரம்பித்து அவனைக் குறுகுறுவென்று பார்க்க, அவனுக்குள் இருந்த கையடக்க இருதயம் கட்டுக்கடங்காமல் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது.
சற்று முன்னால் சரிந்து அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில், “பெரிய வில்லன் மாதிரி அன்னைக்குக் கப்பல்ல குடிக்கிற தண்ணியை நீச்சல் குளத்துல கொட்டிட்டு அப்புறம் எதுக்கு ஜூஸ் எடுத்துட்டுப் போகச் சொல்லி சுனிலை அனுப்பி வைச்சீங்க?” என அவனை ஊடுருவ,
மிட்டாய் திருடிய சிறுவன் அன்னையிடம் அகபட்டுக் கொண்டதைப் போல் விழித்தான் ஆதிநந்தன். “ஹே உனக்கு எப்படி...?” தடதடத்த இதயத்தை மறைத்துக் கொண்டு வினவினான்.
ஆம்! அவன் அனுப்பினான் என்று அவளுக்கு மறுநாளே தெரிந்துவிட்டது. அவள் அங்கே வேலைக்கு வந்திருப்பதால் அதுவும் ஏற்கனவே அந்தக் கப்பலில் வேறொரு திருமணத்துக்கு வந்திருந்ததால் கப்பலில் பணிபுரியும் பெரும்பாலோனருக்கு அவளைத் தெரியும். அதுவும் முக்கியமாக உணவு வகைகளை எடுத்துக் கொண்டு செல்பவர்களை.
ஆதிநந்தன் சுனிலிடம் சென்று, “அங்கே உங்க மேடம் இருமிட்டு இருக்காங்க. என்னன்னு பாருங்க” என அவனை அனுப்பி வைத்தவனும் அவனே. அதைச் சுனில் நேத்ராவிடம் சொல்லவில்லை என்றாலும் அருகில் நின்று கொண்டிருந்த வேறொரு பணியாளர் நேத்ராவிடம் சொல்லிவிட்டார்.
அப்பொழுதே சுனிலுடன் வந்த பணியாளர், “நல்லவேளை சார் பார்த்தார்” என அவர் சொல்லிக் கொண்டிருக்க, அந்தச் சார் சுனில் என்று நினைத்துக் கொண்டாள் நேத்ரா. ஆதிநந்தனின் மேலுள்ள எரிச்சலிலும் அவளுக்கு இருந்த அசௌகரியத்திலும் அதை அப்படியே ஒதுக்கியும் விட்டாள்.
ஆனால் மறுநாள் அதே சூழ்நிலையில் ஆதிநந்தன் இருக்கவும், நேத்ரா அவளுக்கு என்று எடுத்து வந்த காப்பியையும், தண்ணீர் பாட்டிலையும் அவனிடம் தந்துவிட்டு வர, அந்த வழியே வந்த அதே பணியாளர், “நேத்து அவர் செஞ்சதை இன்னைக்கு நீங்க செஞ்சுட்டீங்க மேடம்” எனச் சிரித்தவாறே அவளைக் கடக்க முயன்றார்.
“என்ன சொல்லறீங்க?” என அவள் வினவவும், “நேத்து நைட் நீங்க விக்கிட்டு இருக்கிறதா சொல்லி சார் ஜூஸ் எடுத்துட்டுப் போகச் சொன்னார்” என ஆதிநந்தனைச் சுட்டிக் காட்டிவிட்டுக் கடந்து சென்றுவிட்டார்.
வியப்புடன் அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் முன்பு அமர்ந்திருந்த அதே டேபிளில் இப்போது யாரோ ஒரு பெண்ணுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவள் ஸ்வப்னா என்று பின்னர்த் தெரிந்து கொண்டாள்.
கப்பலில் நடந்ததைச் சொன்னவள், “அடிப்படையில நீங்க நல்லவர் என எனக்கு அப்போவே தெரிஞ்சிடுச்சு. சும்மா டைம் பாஸுக்கு என்கிட்ட பயங்கர டெரரா நடந்துக்க முயற்சி செஞ்சு படுதோல்வி அடைஞ்சுட்டீங்க போல” என அவள் உரத்துச் சிரிக்க,
“போச்சா.. போச்சா எல்லாம் போச்சா.. ஆன்டி ஹீரோவா இருக்க நினைச்சேனே” என அவன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அழுவதைப் போல் நடிக்க, “நீங்க ஒரு டுபாக்கூர் வில்லன்... பெர்ஃபார்மன்ஸ் பத்தலை சார்” என அவனை மீண்டும் வம்புக்கு இழுத்தாள்.
“இப்படி எல்லாம் குத்திக் காட்டக் கூடாது. அம் ஹர்ட்” எனப் போலியாக அவன் முகத்தை வைத்துக் கொண்டு சிணுங்கலாகப் பேசினான்.
அவள் மேலும் கலகலவென்று சிரித்தாள். நாளையிலிருந்து யாரும் சிரிக்கவே முடியாது என்று யாரோ தடை போட்டுவிட்டதைப் போல் இருக்கும் சிரிப்பை எல்லாம் அன்றே சிரித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி சிரித்தாள்.
அவளுடன் இப்படியே பேசிச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவனும், அவனுடன் இருக்கும் இந்த நாழிகைகள் அப்படியே உறையாதா என்று அவளும் ஏங்க ஆரம்பித்திருந்தனர்.
மாலையில் தனக்கு வேறொரு வேலையிருக்கு என்று சொல்லிக் கொண்டு ஆதிநந்தன் கிளம்பிவிட, கால்கள் தரையில் நில்லாத பரவசத்துடன் வீடு வந்து சேர்ந்தாள் நேத்ரா. அவள் பாட்டி எங்கோ வெளியில் சென்றிருந்தார்.
இதுவும் நல்லதுக்கே எனத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் வீட்டுக்கு வந்த வாண்டுகளை அழைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட கிளம்பிவிட்டாள்.
பங்கஜம்மாள் வீடு திரும்பும் முன்னரே இரவு உணவை முடித்துவிட்டிருந்தாள் நேத்ரா. எப்பொழுதும் உறங்கும் முன்னர்க் குளிப்பது அவளது வழக்கம். அது போல் அவள் குளித்துக் கொண்டிருக்கையில் பாட்டி திரும்பியிருந்தார்.
ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தவாறே உற்சாகமாக அவரின் அறைக்குள் செல்ல, அவர் புத்தகம் ஒன்றை பிரித்து மடியில் வைத்துக் கால்களை நீட்டி படுக்கையில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார்.
பேத்தியின் பொங்கிய உற்சாகத்தில் புருவத்தை உயர்த்தி அவள் முகத்தை ஆராய்ந்தவர், “வாம்மா, என்ன பயங்கரச் சந்தோஷமா இருக்கிற போல? டயர்டா இல்லையா?” என வினவ “இன்னைக்கு வெயில் அதிகமில்லை பாட்டி” என அவர் கேட்டதுக்குப் பதிலளித்துவிட்டு,
“உங்க ஃப்ரெண்ட்டைப் பார்க்கப் போனீங்களே எப்படி இருக்காங்க?” என அவர் அன்று வெளியில் சென்று வந்ததைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள்.
சற்றுநேரம் இருவரும் அன்று நடந்த நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, “கண்மணி, ஆதிக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்” எனத் திடுமென அவர் உரைத்ததில் பனிச்சாரலில் நனைவதைப் போல் சில்லென்று உணர்ந்தாள் நேத்ரா.
இனிமையான அந்தத் தருணம் அப்படியே நீளாதா? “கண்மணி” எனப் பாட்டி அவளை உலுக்கவும், உள்ளுக்குள் தோன்றிய பரவசத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன?” எனத் திருதிருவென்று விழித்தவள், “என்ன பேச்சு பாட்டி இது?” எனப் பாட்டியைக் கண்டித்தாள்.
அவளை மேலும் கீழும் பார்த்த பங்கஜம்மாள், “காலில் சக்கரம் கட்டிக் கொண்டு திரியற ஆளு இங்க வந்து நம்ம வீட்டு மாடியில் தங்கி ஊரைச் சுத்திப் பார்க்கிறது வேற எதுக்காம்?” என அவளிடமே கேட்டார்.
இதற்கு அவள் என்ன பதில் சொல்வது? “விசாரிச்ச வரையில பையன் ரொம்ப நல்லவன்னு தெரியுது” என அவர் சொல்லவும், ‘எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு’ எனக் காலையில் பாட்டி அவளிடம் சொன்ன வேலை என்னவென்று அவளுக்குப் புரிந்து போனது.
ஆதிநந்தனைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தீவிரமான விசாரணையில் இறங்கியிருக்கிறார்.
“பாட்டி...” என அதிர்ச்சியுடன் அவரை நோக்க, “நம்ம வீட்டில் ஒருத்தர் வந்து தங்கறாங்கன்னா அவரைப் பத்தி விசாரிக்காம இருக்க முடியுமா? அதுவும் என் பேத்திக்குப் பிடிச்ச ஒருத்தர்” என அவளை அளவிடுவதைப் போல் ஆராய்ந்தார்.
“பாட்டி...” என அவர் முகத்தைச் சற்று சங்கோஜத்துடன் பார்த்தாள். அவர் சொன்னதற்குப் பேத்தி எதுவும் மறுத்துக் கூறவில்லை என்றதும் அவளது மனம் புரிந்து போனது மூத்தவருக்கு.
“என் மகன் விஷயத்துல பண்ணின தப்பை உன் விஷயத்துல பண்ணக் கூடாதுன்னு ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கேன் கண்மணி. அதே சமயத்துல கண்ணை மூடிட்டு சரின்னு என்னால சொல்லவும் முடியாது. அதான் விசாரிச்சேன்.” அவரின் விளக்கத்தில் அப்படியே சமைந்து போய் நின்றுவிட்டாள்.
பேச்சற்றுப் போயிருந்த பேத்தியை, “இங்கே வா” என அருகில் வரச் சொன்னவர், “கண்மணி, நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு முழுச் சம்மதம்” என வாஞ்சையுடன் அவள் கைகளைப் பற்ற,
“தெரியலை பாட்டி. அவரோட நேரம் செலவழிக்க ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆரம்பத்துல என்னைத் தவறா நினைச்சுட்டுத் திட்டிட்டு இருந்தார். அப்புறம் மன்னிப்பும் கேட்டுட்டார். ஆனா.. ஆனா..” என இழுத்து நிறுத்தியவள்,
“என்னைப் பத்தி அவருக்கு எதுவும் தெரியாது பாட்டி. அதனால் இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது” என அவளே அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தாள். அதுவரையில் கள் உண்ட வண்டாக மயங்கியிருந்த நெஞ்சம் சற்று நிதானத்துக்கு வந்தது.
‘கண்டிப்பாக உனக்கு அவன் மேல் ஓர் ஈர்ப்பு இருக்கிறது. அதை இல்லையென்று மறுக்க முடியாது. அதே சமயத்தில் அவனுக்கும் உன்னைப் பிடித்தேயிருந்தாலும் இது மட்டும் போதாது வாழ்க்கை முழுவதும் ஒன்றாகப் பயணிப்பதற்கு. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்’ எனத் தனக்குக் தானே மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டு உறங்கச் சென்றாள்.
ஆனால் மறுநாள் அவனைப் பார்த்த மாத்திரத்தில் உருப்போட்ட அனைத்தும் உருப்படியில்லாமல் போனது.
தொடரும்...
Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.