• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காண்பது எல்லாம் உனது உருவம் 4

Uppada

New member
Joined
Mar 27, 2025
Messages
10
காண்பது எல்லாம் உனது உருவம் 4

சாப்பிட்ட பாத்திரங்களை அலம்பும் போது ஆவல் தாங்காமல் ரத்னா மறுபடியும் "இந்த ஜீபூம்பா வேலையை யார் செஞ்சது கா.."

"அடியேய் ரத்து மா.. எல்லாம் உங்க மாமியாரோட கைவண்ணம் தான் டி.."

"என்ன கா சொல்றீங்க..அத்தை செஞ்சாங்களா.."

"ஆமா டி..ஆமா..வழக்கமா மாப்பிள்ளைக்கு ரவைக்கு சாப்பிட சாப்பாடு இங்கே இருந்து தானே போகும்.."

"இன்னிக்கு அவரே அவர் பொண்டாட்டி கிட்ட வீட்டுக்கு எல்லாம் எடுத்துட்டு வர வேணாம்.. இங்க சாப்பிட்டு போகலாம் பெரிய மனசோடு சொன்னாலும் சொன்னாரா..."

"அவ்ளோ தான் உங்க சொத்தை தன் ராணி க்ரீடத்தை கழட்டி வெச்சுட்டு..பம்பரமா வேலை செஞ்ச அழகை பாக்கணுமே..."

"முழு பூசணிக்காயை உடைச்சு தானே துருவி காசி அல்வா, இட்லி, தோசை, சாம்பார், ரெண்டு சட்னி, பொங்கல், வடை, பூரி, மசால்னு கல்யாண சமையல் தான் போ.."

"பாவம்..அத்தை தனியா இத்தனை எதுக்கு கா செய்யணும்..நீங்க கூட எதாவது ஹெல்ப் பண்ணி இருக்கலாம்ல்ல.."

"அதானே..உங்கத்தை பாசம் போகாதே..நானே நாளைக்கு காலைல டிபன் செய்ய அரைச்சு வெச்ச மாவுல இட்லி, தோசை, வடை, எதுக்கும் இருக்கட்டும்னு நீ பிசைஞ்சு வெச்சுட்டு போன மாவுல பூரி, வேக வெச்ச உருளைக்கிழங்குல மசால்னு ஒரே நாள்ல அமர்க்களமா சமைச்சு அத்தனையும் காலி பண்ணி வெச்சுட்டாங்களே..நாளைக்கு என்ன செய்யறதுனு யோசனைல இருக்கேன்..நீ வேற.."

"நாளைக்கு எல்லாருக்கும் உப்புமா விழா கொண்டாடிலாம் கா.."

"அதான் சரி..நீ சீக்கிரம் எழுந்துக்க வேணாம்..கொஞ்ச நேரம் தூங்கு..காலைல சமையல் கட்டுக்குள்ள வராதே..நானே உப்புமா செய்யறேன்..உன் மாமியாரால எதுவும் பேச முடியாது.."

"காலேல உப்புமாவ பாத்து மாப்பிள்ளை மூஞ்சி எப்படி போக போகுதோனு நெனச்சாலே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது டி.."

"யார் சாப்பிட்டா என்ன கா..உங்க கொழுந்தனார் தான் வீட்டுல சாப்பிடறதே இல்லயே.."

"அவரு சாப்பிடல..நீ பாத்தே..
உனக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்..போ..டி போய் நேரத்தோடு தூங்கு..அப்ப தான் நாளைக்கு தெம்பா நடக்க போற சம்பவத்தை சந்தோஷமா பாக்கலாம்.."

இந்திராவிடம் பேசி விட்டு தன்னறைக்குள் போய் படுத்தவள் கணவனை தேட..அவன் அறைக்குள்ளேயே இல்லை..ம்ம்ம்..
எப்ப தான் எனக்கு விடிவு காலமோ என தனக்குள் அலுத்தபடி கண்களை மூடியவள் அடுத்த சில நிமிடங்களில் தூங்கி போனாள்.

அவள் தூங்கிய பின் அறைக்குள் வந்த விக்ரமன் அவளருகில் படுத்து கொண்டவன் அவள் முகத்தை பார்த்துகொண்டே அவனும் தூங்கி போனான்.

மறுநாள் காலை இந்திரா சொன்னபடி ஆறு மணிக்கு எழுந்து பொறுமையாக குளித்து விட்டு வெளியே போனவள் நேராக பூஜையறைக்கு போய் விளக்கு ஏற்றி விட்டு மணியை பார்க்க ஏழறையை காட்டியது..

நேரம் ஏழறையா இல்ல வீட்டு ஆளுக்கு ஏழறையானு தெரியலயே என நினைத்தபடி சமையலறைக்குள் போக இந்திராவின் கோந்து உப்புமா அவளை வரவேற்றது..

"கொஞ்சம் தண்ணி ஜாஸ்தி ஆகிடுச்சு டி.." என அசடு வழிந்த இந்திராவை..

"கொஞ்சம் தானா..கா..இதுல பாத்தா ஊரே முழுகிடும் போல இருக்கே..சரி லஞ்ச்க்கு என்ன கா..டப்பா கட்டணுமா.."

"கலாய்க்காம தட்டுல போட்டதை தின்னுட்டு மாமியார் ஊர் பஞ்சாயத்து முடிச்சிட்டு வர்றத்துக்குள்ள கிளம்பு..."

"டப்பா கட்டியாச்சு டி..நமக்கு நிறைய நெய் விட்டு சாம்பார் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி.."

"வீட்டுல மத்த ஆளுங்களுக்கு மாப்பிள்ளைக்கு பிடிக்கவே பிடிக்காத தேங்காய் சாதமும், வாழைக்காய் வறுவலும்.."

"ஐயோ..என்ன கா..இது..பாவம் கா"

"மூடிட்டு கிளம்பறியா..இல்ல உங்க மாமியார் வந்ததும் கச்சேரி கேட்டுட்டு போறியா.."

"ஐயோ..ஆளை விடுங்க கா..நான் கெளம்பறேன்.." என வேகமாக கிளம்பினாள்.

காலையில் அக்கம்பக்க ஊர் விஷயங்களை வழக்கம் போல அலசி ஆராய்ந்து கொண்டு இருந்த செண்பகம் மாப்பிள்ளை வர நேரமாகிடுச்சு..டிஃபன் எடுத்து வெக்கணும் என நினைத்தபடி வீட்டுக்குள் வந்த செண்பகம் வேகமாக சமையறைக்குள் போய் பார்க்க உப்புமாவை பார்த்ததும் முகமே மாறி போனது.

விக்ரமன் வீட்டில் இருப்பது தெரியாமலேயே "ஏய்..ரத்னா.. ரத்னா..என்னது இது..நீ வீட்டுல ஒழுங்கா செய்யறது இந்த வேலை தான்..இதுவே இந்த லட்சணமா இருக்கே.."

"என்ன அண்ணி பிரச்சினை..
எதுக்கு ரத்னாவை ஏலம் போடறாங்க.."

"ஒண்ணும் இல்லை தம்பி..இது ஏதோ வீட்டு விஷயம்..நான் அத்தை கிட்ட பேசிக்கறேன்..நீங்க பட்டுக்குட்டி எழுந்துட்டாளா பாருங்க..எழுந்தா குளிச்சு அவளை ஸ்கூலுக்கு கெளம்ப சொல்லுங்க.."

"ம்ம்ம்...என்ன விஷயம்னு கேட்டா அதை சொல்லாம அழகா சமாளிக்கறீங்க..அண்ணி.நீங்க நடத்துங்க..கத்தரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வர தானே போகுது..அப்ப தெரிஞ்சுக்கறேன்..
இப்ப நான் போய் என் செல்லத்தை பாக்கறேன்.."

விக்ரமன் தன்னறைக்குள் போய் நித்யாவை எழுப்பி குளிக்க அனுப்பியவன் உடனே அம்ருதாவுக்கு ஃபோன் செய்தான்.

"இன்னிக்கு இன்ஸ்பெக்ஷ்னாமே..மா..உன் கூட இருக்கறவ ரொம்ப நேர்மை நாணயம்னு உப்புக்கு உபயோகமில்லாம பேசிட்டு இருப்பா..அவளை கொஞ்சம் கூடவே இருந்து பாத்துக்க மா.."

"எங்க ஆஃபீஸ்ல நடக்காத ஒரு சம்பவம் உங்களுக்கு எப்படி தெரியும் அண்ணா.."

"என்னது இன்னிக்கு இன்ஸ்பெக்ஷ்ன் இல்லயா..அண்ணி சொன்னாங்களே.." என யோசனையானான்.

"ஓஓஓ...அதுவா...உங்க வீட்டம்மா ஒரு கர்ம யோகி அண்ணா..அத்தை காலால இட்ட வேலையை தலையால ஜி ஹுசூர்னு செய்யற ஆளாச்சே...."

"அண்ணி உங்க வீட்டம்மாவை வேலை செய்ய விடாம காப்பாத்த இப்படி அடிக்கடி செய்வாங்க அண்ணா.."

"சரி மா..ரொம்ப நேரமா குழம்பி இருந்தேன்..இப்ப தான் புரிஞ்சிது..உங்க பொம்பளைங்க அரசியல் புரிஞ்சிக்க ரொம்ப சாமர்த்தியம் வேணும் மா.."

"இனி தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோங்க அண்ணா..நான் ஆஃபீஸ் வந்துட்டேன்..சாயந்திரம் பேசறேன்..இப்ப வெக்கறேன்.." என ஃபோனை அணைத்தாள்.

வீட்டில் விக்ரமன் இருப்பதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மறுபடியும் செண்பகம் பெரிய குரலில் "என்ன இந்திரா இது..மாப்ளை காலைல நம்ம வீட்டுக்கு டிபன் சாப்பிட வரேன்னு சொல்லி இருக்காரு..நீயாவது கூட இருந்து பாத்திருக்க கூடாதா.." என செண்பகம் அதட்டினார்.

"என்ன அத்தை..என்ன விஷயம்..எனக்கு புரியல.."

"அந்த கடாய்ல எட்டி பாரு..ஏதோ கோந்து காச்சி வெச்சிருக்கா..அது தான் போகுதுனு பாத்தா சாப்பாடும் மாப்பிள்ளைக்கு பிடிக்காததா செஞ்சு வெச்சிருக்கா மகராசி...எல்லாம் சம்பாதிக்கற திமிர்.."

"மரியாதைப்பட்ட மனுஷன் வீட்டுக்கு வராரு.. அவருக்கு எப்படி இதை குடுக்கறது சொல்லு.."

"மாமியார் வீடுங்கற பயமே கொஞ்சம் கூட இல்லாம என்ன நெனப்புல அவ இருக்கா..வீட்டுல போட்டதை போட்டபடி போட்டுட்டு காலைல பையை எடுத்துட்டு வேலைக்கு போறேன்னு மஹாராணி மாதிரி கெளம்பி போயிடறா.."

"பாவம் அத்தை அவ..இன்னிக்கு அவ ஆஃபீஸ்ல ஏதோ இன்ஸ்பெக்ஷ்னாம்...நிறைய வேலை இருக்காம்..சீக்கிரமே போகணும்...சாயந்திரமும் வர நேரமாகும்னு நேத்து நைட்டே என் கிட்ட சொன்னா..

"காலைல சமைக்க கூட நேரம் இருக்காதுனு கவலைப்பட்டா.. நீ கெளம்பு நான் பாத்துக்கறேன்னு நான் தான் அவ கிட்ட சொன்னேன்.."

"அந்த கோந்தை பொங்கினது அவ இல்ல அத்தை..நான் தான்..மதிய சமையலும் நான் தான் சமைச்சேன்.."

"மாப்பிள்ளை வந்தா எப்பவும் நீங்க தான் மெனு குடுப்பீங்க..நீங்க தான் சமைப்பீங்க.. அதனால மாப்பிள்ளை என்ன சாப்பிடுவார் என்ன சாப்பிட மாட்டார்னு எனக்கு தெரியவே தெரியாது அத்தை.."

"நீங்க தான் நேத்து மாப்பிள்ளை சாப்பிடறாருனு வெச்சிருந்த மாவை எல்லாம் காலி பண்ணிட்டீங்களே அத்தை..அதான் வீட்டுல இருந்ததை வெச்சு நமக்கு செஞ்சு வெச்சிட்டேன்..அவளையும் வெளில சாப்பாடு பாத்துக்க சொல்லிட்டேன்.."

"எனக்கும் இன்னிக்கு ஒரு கல்யாண ஆர்டர் முடிக்கணும்..கடை திறக்கணும்..நேரமாச்சே..
அத்தை.."

"ஒண்ணு பண்ணுங்க அத்தை..எப்பவும் போல நீங்களே மாப்பிள்ளைக்கு பிடிச்சதா பார்த்து சமைச்சிடுங்க .." என அவரை பேச விடாமல் தானே பேசியவள் கடை திறக்க போய் விட்டாள்.

ரத்னாவை பேசுவதை போல இந்திராவை எதையாவது சொன்னால் பிறகு ..இந்திரா கடை வேலை செய்ய விட மாட்டாளே.
அதன் மூலம் வரும் வருமானம் போய் விடுமே என பயந்து போன செண்பகம் வந்த ஆத்திரத்தை எல்லாம் பாத்திரங்களில் காண்பித்தபடி சமைக்க ஆரம்பித்தார்.

மெல்ல நகர்ந்து வந்த விக்ரமன் அண்ணியிடம் ஜாடையாக என்ன விஷயம் என கேட்க..அவளும் அவனருகில் வந்த நடந்ததை எல்லாம் மெல்லிய குரலில் சொல்லி தான் ரத்னாவை மாட்டி கொள்ளாமல் அனுப்பியதையும் சொன்னாள்.

அதை கேட்டு சிரித்தவன் "இது உங்க பிரச்சினை இல்ல..அவங்க பொண்ணு..அவங்க மாப்பிள்ளை..சமைக்கட்டும்..
விடுங்க அண்ணி..உங்க வேலையை பாருங்க.."என விட்டேற்றியாக சொன்னவன் "நானும் என் செல்லத்தை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு அப்படியே கொஞ்சம் வேலை இருக்கு..வெளில போயிட்டு வரேன்.."

நித்யாவை ஸ்கூலில் விட்டவன் தன் வேலை விஷயமாக பக்கத்து கிராமத்துக்கு கிளம்பி போனான். (தொடரும்)
 
Last edited:

Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Mar 21, 2025
Messages
43
கலகலப்பாக இருந்தாலும்
கலகம் செய்தாலும்
குடும்ப அரசியல் நடந்தாலும்
காரியத்தில் எப்பொழுதும்
கண்ணாக இருக்கும்
கணவன் சார்
கொஞ்சம் மனைவியை
கவனிங்க பாஸ்......
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
48
ஏதோ பொண்டாட்டிய கூடவே இருந்து காப்பாற்றிய மாதிரி பெருமையா போறான் பாரு
 
Top Bottom