என்றென்றும் வேண்டும்-15
கீதையில் கண்ணன் ‘நான் வேதங்களில் சாம வேதமாக இருக்கிறேன்’ என்கிறார். அந்த அளவிற்குப் பெருமை வாய்ந்தது சாமவேதம். இவ்வேதம் இசையின் பிறப்பிடமாகக் கொள்ளத்தக்கது. இது இசையுடன் பாடத்தக்கது. தியானம்¢, வழிபாடு, பக்தி முதலானவை இறைவனை அடையச் சிறந்த வழிகள் என்பது இவ்வேதத்தின் அடிக்கருத்தாக விளங்குகிறது. வியாச முனிவரிடம் இவ்வேதத்தைக் கேட்டுப் பரப்பியவர் ஜைமிதி முனிவர் என்பர் ஆவார்.
இது மூன்று பிரிவுகளை உடையது. அவை 1. பூர்வ அர்ச்சிகா, 2. உத்தர அர்ச்சிகா, 3. மஹா நாமினி அர்ச்சிகா என்பனவாகும். இவற்றுள் இடம் பெறும் செய்யுள்களின் எண்ணிக்கை 1875 ஆகும். இவற்றுள் எழுபத்தைந்து செய்யுள்களே சாம வேதத்திற்கு உரியவை. மற்றையவை ரிக் வேதம் சார்ந்தவை என்ற கருத்தும் உண்டு.
திருவாய்மொழி
நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று கருதுவர். இவர் திருக்குருகூரில் பிறந்தவர். பதினாறு ஆண்டுகள் புளியமரத்துப் பொந்தில் இருந்து, பெருமாளைத் தியானம் செய்து பெருமாளின் அருளுக்குப் பாத்திரமானவர். இவரின் படைப்புகளான திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகிய நான்கு நூல்கள் நான்கு வேதங்களின் பிழிவாகக் கருதத் தக்கன. குறிப்பாக திருவாய்மொழி சாம வேத சாரமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்நூல் திராவிட வேத சாரம், செந்தமிழ் வேதம், ஆன்ற தமிழ் மறை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதனை பகவத் விஷயம் என்றும் பாராட்டுவர்.
அறம், பொருள், இன்பம், வீடு
அதாவது தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கையே வேதங்கள் வலியுறுத்துகின்றன. தர்மம் என்பது ”மனிதனுக்கு உள்ள இயல்பு, அதன் அடிப்படையிலே உண்டான கடமை, தொழில், அதை ஆற்றும் முறை, அதற்கான விதி ஆகியவற்றை உள்ளடக்கியது” என வேதம் பொருள் கொள்கிறது. ”பொருள் என்பது அறவாழ்க்கையை நடத்தத் தேவையானது. பணம், துணை, நண்பர்கள் கருவிகள், சொத்து, புகழ், மனைவி போன்றன இவற்றுள் அடங்கும்” ”இன்பம் என்பது அப்படி வாழ்க்கையை நடத்தும்போது அனுபவிக்க விரும்புவது ஆகும்” ”வீடு என்பது வாழ்க்கையின் இறுதி இலட்சியம் ஆகும். அதை அடையச் செல்லும் பாதையில் வாழ்க்கைப் பயணம் நடக்க வேண்டும். அந்த நோக்கத்திலேயே அறம், பொருள், இன்பம் அனைத்தும் அமைய வேண்டும்.”
மேற்கண்ட நான்கு பொருள்களை அனைத்து வேதங்களும் சொன்னாலும், சாம வேதம் வீட்டின்பத்திற்கு முற்றிலும் வழி தரும் வேதமாகக் கருதப்படுகிறது. வீட்டின்பத்தை அடைய அது கடவுளை வணங்குவது, அவன் புகழ் பாடுவது, அவனை ஒருபொழுதும் மறவாமல் எண்ணுவது முதலான வழிகளைக் கூறுகிறது. இவ்வழிகளை அப்படியே திருவாய்மொழியில் காணமுடிகின்றது.
வீடுமின் முற்றவும்–வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை–வீடுசெய்ம்மினே.
மின்னின் நிலையில–மன்னுயி ராக்கைகள்
என்னு மிடத்து இறை–உன்னுமின் நீரே.
நீர்நும தென்றிவை–வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அத–னேர்நிறை யில்லே.
இல்லது முள்ளதும்–அல்ல தவனுரு
எல்லையி லந்நலம்–புல்குபற் றற்றே.
அற்றது பற்றெனில்–உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில்–அற்றிறை பற்றே.
பற்றில னீசனும்–முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்–முற்றி லடங்கே.
அடங்கெழில் சம்பத்து–அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி ல·தென்று–அடங்குக வுள்ளே.
உள்ள முரைசெயல்–உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை–யுள்ளிலொ டுங்கே.
ஒடுங்க அவன்கண்–ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை–விடும்பொழு தெண்ணே.
எண்பெருக் கந்நலத்து–ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்–திண்கழல் சேரே.
சேர்த்தடத் தென்குரு–கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து–ஓர்த்தவிப் பத்தே. (திருவாய்மொழி 2802 – 2812)
என்ற இப்பத்து வீடுபேறு அடைய வழி கூறும் பாசுரம் ஆகும். சாம வேதத்தின் அடிநாதமாக விளங்கும் வீட்டின்பத்தை இதனுள் விரித்துத் தொகுத்துத் தந்துள்ளார் நம்மாழ்வார்.
காயத்ரிக்கு அந்த வாரத்தோடு லீவ் முடிவதால் அதற்கு முன் சுமங்கலி பிரார்த்தனை குலதெய்வத்துக்கு சமாராதனை எல்லாம் முடித்து விட வேண்டும் என்று பத்மா சொல்லி விட்டார்.
காயத்ரி இந்த மூன்று நாள் அவஸ்தையில் ஹனிமூன் போவதை மறந்திருந்தாள். இப்போது மாமியார் இதெல்லாம் லீவுக்குள் முடிக்க வேண்டும் என்று சொல்லி விட அவள் பிடிவாதம் பிடிக்கவே வழியில்லை.
இந்த மூன்று நாளும் மூவரும் கவனித்துக் கொண்ட விதத்திலும் அன்பிலும் அவளுக்கே பிடிவாதம் பிடிக்க மனமில்லை. போக முடியவில்லையே என்று சிறு ஏமாற்றம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
சுமங்கலி பூஜை எல்லா இனங்களிலும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க செய்வது வழக்கம் தான். செய்யும் முறை தான் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடும்.
பத்மா ஜானகியோடு சேர்த்து ஆறு பேரை சுமங்கலி பெண்டுகளாய் அழைத்திருந்தார். அந்த வெள்ளிக்கிழமை நாளும் யோகமும் நன்றாய் இருப்பதால் அன்றே வைத்து விடலாம் என்று முடிவு செய்தனர்.
பத்மா விஸ்வநாதனிடம் வாங்க வேண்டியவைகளை பட்டியலிட்டு "அம்பி நீயும் காயத்ரியுமா சாயந்தரத்துல போய் இதெல்லாம் வாங்கிண்டு வந்துருங்கோ. பகல்ல சொன்னா நீ வேலை இருக்குன்னு சொல்லுவே..."
என்று சொல்ல பக்கத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியை விஸ்வநாதன் திரும்பிப் பார்த்தான்.
காயத்ரி இதற்கு முந்தைய தருணங்களில் எல்லாம் விஸ்வநாதன் பார்த்ததை கவனித்ததில்லை. இந்த முறையும் அவன் பார்த்த பிறகு தான் அவன் தன்னை ஒரு எதிர்பார்ப்போடு பார்த்ததாக அவளுக்கு தோன்றியது
அவள் என்னவென்று யோசிப்பதற்குள்ளேயே அப்படி எந்த குறிப்பும் இல்லையோ என்பது போல விஸ்வநாதன் அம்மாவுக்கு பதில் சொன்னான்.
"அம்மா! மளிகை காய்கறி பழம் எல்லாம் ஆர்டர் பண்ணினா ஆத்துக்கே கொண்டு வந்து குடுத்துடுவா. அதை நான் பாத்துக்கறேன். மத்தபடி வரவாளுக்கு வெச்சு குடுக்க ஜவுளி என்ன வாங்கணுமோ அதை நீயும் காயத்ரியும் போய் வாங்கிண்டு வந்துருங்கோ.
என்னை எதிர்பாத்துண்டு இருக்காதீங்கோ..பணம் எவ்வளவு எடுத்துண்டு வரணும்னு சொல்லிடு. நான் கொண்டு வந்து குடுத்துடறேன்..."
என்றவன் அதற்கு அம்மாவின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் எழுந்து அவன் வேலையை பார்க்க போய் விட்டான்.
அவன் பதிலால் பத்மாவை விட காயத்ரிக்கு தான் அதிகமாக கோபம் வந்தது.
'சரி! என் கிட்ட தான் நீயே உன் பாட்டை பாத்துக்கோன்னு சொன்னார்னு பாத்தா அம்மாட்டையும் அதே பதிலா?'
"அம்மா! ஆத்தை கூட கவனிக்க நேரமில்லாம அவ்வளவு பிசியா இருக்கறவா கிட்ட நீங்க ஏம்மா கேட்டுண்டு இருக்கேள்? நான் இருக்கேன் உங்களுக்கு! என்ன வேணும் சொல்லுங்கோ..நான் செய்யறேன். "
என்று காயத்ரி ரோஷமாய் சொல்ல பத்மாவும் அவளோடு சேர்ந்து கொண்டு
"ஆமாம்டிம்மா..! இத்தனை நாள் வேற வழியில்லாம இவனை கெஞ்சிண்டு இருந்தேன்..இனி கேட்டேன்னா பாத்துக்கோ.."
என்று சேர்ந்து கொண்டார்.
தன் அறைக்கு போய்க் கொண்டிருந்த விச்சு அதைக் கேட்டு நின்று திரும்பி அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். அவன் முகம் அவ்வளவு மலர்ந்திருந்தது.
அவன் பார்த்ததும் காயத்ரி ஒழுங்கு காட்ட வாய் விட்டே சிரித்த விஸ்வநாதன் "அப்புறம் என்ன..? மாமியாரும் மாட்டுப் பொண்ணுமா ஜமாய்ங்கோ.." என்று சொல்லி விட்டு தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அவன் சொன்ன வார்த்தைகளில் கோபம் துளிக்கூட இல்லை. பெருமிதமே இருந்தது.
சொன்னது போலவே மாமியாரும் மருமகளும் அதற்கான ஏற்பாடுகளை இணைந்தே செய்தனர்.
காயத்ரி ஒரு வாரமாய் மாமியார் அத்தையின் செல்லக் குழந்தையாய் இருந்தாள்.
அவளை உட்கார வைத்து பெரியவர்கள் அன்பாய் எல்லாம் செய்ய அதை ரசித்து அனுபவித்தவளுக்கு தனக்கு உடம்பு சரியில்லாத போது அவர்களின் ஆச்சாரத்தையெல்லாம் விட்டு விட்டு இருவரும் அவளை கவனித்தது அவளை இன்னும் அவர்கள் பால் நெருங்க வைத்தது.
முன்பு அவர்கள் வேலை செய்யும் போது வேடிக்கை பார்த்தவள் இப்போது அவர்களிடம் இருந்து பிடுங்கி வேலை செய்ய ஆரம்பித்திருந்தாள். அப்படியும் பெரியவர்கள் இருவரும் அவளை சமையல் செய்ய விடவில்லை.
"சுத்து காரியம் பண்றியே.. இதுவே போறும்டி கோந்தே.." என்று இருவருமே தடுத்து விட்டனர். சுமங்கலி பிரார்த்தனைக்கும் சமையலுக்கு ஆள் வைக்கலாம் என்று விஸ்வநாதனும் காயத்ரியும் சொல்லியும் இருவரும் ஒத்துக் கொள்ளவே இல்லை.
வெள்ளி அன்று காலை மாமியாரோ அத்தையோ சொல்லாமலே காயத்ரியும் நாலு மணிக்கே எழுந்து கொண்டாள்
விஸ்வநாதன் ஐந்து மணிக்கு எழுந்த போது பக்கத்தில் காயத்ரி இல்லை. பக்கத்தில் படுக்கை காலியாக இருந்தது. இப்போது தான் உடம்பு சரியில்லாமல் இருந்து தேறியவள் என்பதால் மறுபடியும் உடம்புக்கு தான் எதோ என்று நினைத்தானே தவிர அவள் பொறுப்பாய் வீட்டு வேலை செய்வதற்காக எழுந்திருக்கிறாள் என்று நிச்சயம் அவன் எதிர்பார்க்கவில்லை.
அவன் எழுந்து வெளியே வந்த போது வாசலில் பெரிய தேர்க்கோலம் போட்டு செம்மண் பார்டர் இடப்பட்டிருந்தது.
உள் வராந்தாவில் அரிசி மாவில் இழைக்கோலம் துளி பிசிறு கூட இல்லாமல் நெளிநெளியாய் அவ்வளவு அழகாய் இருந்தது.
இன்னும் அதன் ஈரம் காயாததிலேயே இப்போது தான் போட்ட கோலம் என்று தெரிந்து கொண்ட விஸ்வநாதன் யார் போட்டது என்று கேட்பதற்காக உள்ளே வர காயத்ரி தான் கூடத்தில் அதே நேர்த்தியுடன் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
'என் பட்டுக் குட்டிக்கு இதெல்லாம் இவ்வளவு நன்னா வருமா..?' என்று நினைத்தவன் அவள் போடும் இடத்தில் நெருங்கி பார்க்க அவள் விரல்கள் அவ்வளவு அழகாக லாவகத்துடன் இழையை போட்டுக் கொண்டிருந்தது.
அவன் நிற்பது கூட தெரியாமல் கோலம் போட்டபடி பின்னால் வந்து கொண்டிருந்தவள் அவன் மேல் மோத அவன் தான் அவளை தாங்கிப் பிடித்தான்.
ஏற்கனவே எல்லா பொருட்களும் இடம் மாறியதால் கூடம் காலியாய் இருக்க அம்மாவும் அத்தையும் சமையல் அறையில் எதோ பேசியபடி சமையலுக்குக்கான ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பது இங்கிருந்தே விஸ்வநாதனுக்கு தெரிந்தது.
அவன் பிடித்ததில் திடுக்கிட்ட காயத்ரி திரும்பி பார்த்து "ஓ! நீங்களான்னா..?" என்றவள் "கோலம் எப்படின்னா இருக்கு..?" என்று கேட்க விஸ்வநாதன் "உன்னை மாதிரியே அழகா இருக்கு பட்டூ.." என்று சந்தோஷமாய் சொல்ல காயத்ரி இப்போது கூடத்தை சுற்றிப் பார்த்தாள்.
"உங்களுக்கு என்னவோ ஆயிடுத்துன்னா. கூடத்துல நீங்க வெரப்பா தானே இருக்கணும். நம்ம ரூம்னு தூக்கக்கலக்கத்துல நினச்சுண்டுட்டேளா?" என்று அசால்டாக வார விஸ்வநாதன் வாய் விட்டு சிரித்தான்.
"இந்த வாய் இருக்கே..." என்று கிட்டே வந்தவன் அவள் தானே பின்னால் நகரவும் "உன்னை அப்புறமா பேசிக்கறேன்..." என்று பொய் மிரட்டலாய் சொல்லி விட்டு கொல்லைப் பக்கம் நோக்கிப் போனான்.
காயத்ரி செல்பவனைப் புன்னகையோடு பார்க்க இருவருமே இந்த ஒரு வாரத்தில் தங்கள் இயல்பை மெல்ல மாற்றிக் கொண்டிருப்பதை உணரவில்லை.
. ஜானகியும் வெங்கடேசனும் முதல் நாள் மாலையே வந்திருந்தனர். இருவரும் நேற்றிலிருந்து மகளின் பொறுப்பை கண்டு புல்லரித்துப் போயிருந்தனர்.
அன்று கோபித்துக் கொண்டு வந்த மகள் இன்னும் தங்களிடம் அதே முறுக்கில் பழகினாலும் புகுந்த வீட்டோடு ஒத்துப் போவதை பார்த்ததில் அவர்களுக்கு பெருத்த நிம்மதி.
ஏழு மணிக்கு பெண்டுகளாக இருக்க ஒப்புக் கொண்டவர்கள் வர அவர்களை உட்கார வைத்து குங்குமம் தந்து எடுத்து வைத்த நல்லெண்ணெயையும் சீயக்காயையும் காயத்ரி தான் பொறுப்பாய் எடுத்துக் கொடுத்தாள்.
பத்து மணிக்கு இலை போடுவதாய் ஏற்பாடு. காயத்ரி போய் குளித்து விட்டு வருவதற்குள் குளித்திருந்தான் விஸ்வநாதன்.
சமையல் அறையில் ஒரு பிளாஸ்டிக் போர்ட் கத்தியோடு அமர்ந்து கொண்டவன் அம்மா கழுவி வைத்திருந்த காய்களை சிறிதோ பெரிதோ அந்தந்த சமையலுக்கு ஏற்றவாறு நறுக்கி வைக்க காயத்ரிக்கு தான் ஆச்சரியமாக இருந்தது.
அவள் வீட்டில் அவள் அப்பா தண்ணீர் கூட அம்மாவை தான் கொண்டு வந்து தர சொல்லுவார்.
அவள் ஆவென்று பார்ப்பதை பார்த்தவன் யாரும் பார்க்குமுன் கண்ணை சிமிட்ட காயத்ரிக்கு தான் தலை சுற்றியது.
'இன்னிக்கி இவருக்கு என்ன ஆச்சு..?'
என்று யோசித்தவளை மாமியாரின் அடுத்த உத்தரவு நனவுக்கு கொண்டு வந்தது.
"காயத்ரி! குளிச்சிட்டியோன்னோ? அங்க பெரிய தாம்பாளம் இருக்கு பார். அதுல கொஞ்சம் மஞ்சப்பொடி, நலங்கு மாவு, சந்தனம் குங்குமம் தாம்பூலம் எல்லாம் எடுத்து வை.
பூவை வந்தவாளுக்கு குடுக்க வெட்டி வை. அப்புறம் இந்த சொம்புல பானகம், நீர் மோர் எல்லாம் கரைச்சு வை.." என்று மளமளவென்று வேலைகளை சொன்னவர் கிட்டே வந்து அவள் தலைமுடியை தொட்டுப் பார்த்தார்,
"என்ன காயத்ரி! ஈரம் சொட்ட சொட்ட இருக்கு? தலையை நன்னா தோட்டாம இங்க என்னத்துக்கு வந்த? போய் முதல்ல தோட்டு.." என்று விரட்டினார். அந்த அதட்டலில் இப்போது அன்பு மட்டுமே அவளுக்கு தெரிந்தது.
அவள் தலை காய வைத்து வர அதற்குள் எல்லா காயையும் வெட்டி முடித்த விஸ்வநாதன் அடுத்து கிரைண்டரை கழுவி வைத்தான்.
சொல்லாமலே எல்லா வேலையும் அவன் செய்வதை அதிசயமாய் பார்த்த காயத்ரிக்கு தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
அவளும் கல்யாணத்துக்கு வாங்கியிருந்த அரக்கு நிற ஒன்பது கஜ புடவையை அணிந்து விஸ்வநாதன் வாங்கித் தந்த வைர செட்டை அணிந்திருந்தாள். அத்தை அவளை திருஷ்டி கழித்து "நன்னாருக்குடி கோந்தே.." என்று பெருமை பட்டுக் கொண்டார்.
சொன்ன நேரத்திற்கு அழைத்திருந்த பெண்டுகள் எல்லோரும் வந்து விட காயத்ரி ஒவ்வொருவரையும் அன்பாய் வரவேற்றாள். எல்லோரையும் கொல்லைப்புறம் அழைத்து போய் அவர்கள் காலில் மஞ்சள் பொடியை தேய்த்து கால்களை கழுவி கூடத்தில் அமர வைத்தாள்.
கொஞ்ச நேரத்தில் பெண்கள் அனைவரையும் கதவுக்கு வெளியே நிறுத்தி கதவை சாத்தினர்.
அதற்குள் இலை போட்டு செய்த பால் பாயசம், கோசு மல்லி, அவரைக்காய் பருப்புசிலி, வாழைக்காய் பொடிமாஸ், அவியல், சொஜ்ஜி அப்பம், உளுந்து வடை மாங்காய் தொக்கு, கறிவேப்பிலை துவையல், பருப்பு எல்லாம் பரிமாறியிருந்தனர்.
சாமி இலை என ஒரு மணையிட்டு அதில் ஒரு புதுப்புடவையை கொசுவி வைத்து மேலே ரவிக்கை துணி மாலை போட்டிருந்தனர். அதில் காயத்ரியின் திருமாங்கல்யமும் ஒரு நெக்லசும் சாத்தப்பட்டிருந்தது.
விஸ்வநாதனும் அதற்குள் குளித்து மயில் கண் வேஷ்டியை பஞ்சகச்சம் வைத்து கட்டி அங்கவஸ்திரத்தை இடையில் கட்டியிருந்தான். கழுத்தில் தங்கச் சங்கிலி அவன் நிறத்தோடு போட்டியிட்டு தோற்றது.
பத்மா அத்தை விஸ்வநாதன் காயத்ரி நால்வரும் வீட்டின் உள்ளே நின்று கொள்ள பத்மா பெரிய குரலெடுத்து
"லட்சுமி....! பிச்சா..! சுந்தரி...! வாலாம்பா...! லலிதா...! எல்லாரும் வாங்கோ..."
என்று அந்த குடும்பத்தில் சுமங்கலியாய் இறந்த பெண்களை அழைக்க பெண்டுகள் அனைவரும் மீண்டும் வீட்டின் உள்ளே வந்து இலையின் முன் அமர்ந்தனர். அதில் ஜானகியும் ஒருவர்.
அடுத்து எல்லோர் இலையிலும் சாதம் பரிமாறியதும் காயத்ரியை விட்டு பத்மா எல்லா இலையையும் நிவேதனம் செய்யச் சொன்னார்.
"எல்லா பெரியவாளும் சாப்பிட்டு கொழந்தெள ஆசீர்வாதம் பண்ணுங்கோ..." என்று பத்மா சொல்ல தம்பதிகள் சாமி இலை முன் விழுந்து வணங்கினர். அதன் பிறகு அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
"எல்லோரும் வேணுங்கறத கேட்டு வாங்கி சாப்பிடுங்கோ...!" என்று பத்மா கை கூப்பியபடி சொன்னார்.
அடுத்து மோர்க்குழம்பு, மல்லி வறுத்து அரைத்த பொரிச்ச குழம்பு, என பரிமாற விஸ்வநாதனும் அவர்களோடு இணைந்து பரிமாறினான்.
சாப்பிட்டு எல்லோரும் வந்து அமர்ந்ததும் அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நலங்கிட்டு தாக சாந்திக்கு நீர் மோர், பானகம் என கொடுத்து பலத்த உபச்சாரம் தான்.
அடுத்து வாங்கி வைத்த புடவையை எல்லோருக்கும் கொடுத்து காயத்ரியும் விஸ்வநாதனும் எல்லோர் காலிலும் விழுந்து வணங்க அனைவரும் மனநிறைவோடு அட்சதை போட்டு வாழ்த்தினர்.
Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்-15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.