• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க் கொடியில் பூத்தவளே! 3

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
157
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 3


மந்திரா முதலில் செயலில் இறங்கினாள். அவரருகில் சென்று அவரை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தாள்.

“ என்ன ஆச்சு அங்கிள்? எதுக்கு இவ்வளவு டென்ஷனாகிறீங்க? ஏதாவது பேசணுமா? இருங்க வரேன்” என்று சொல்லிவிட்டு அவர் முகத்தில் பொருத்தியிருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை அகற்றினாள்.

ஏதோ சொல்வதற்காக வாயைத் திறந்து திறந்து மூடினார். ஆனால் வார்த்தைகள் தான் வரவில்லை. சிறிது நேரம் அப்படி இருந்ததில் மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. உடனே மந்திராவும் அவருடைய முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க்கைப் பொருத்தினாள். மூச்சும் கொஞ்சம் கொஞ்சமாகச் சீரானது.

“ பாரும்மா, இப்படித்தான் திடீர் திடீர்னு ஏதோ பண்ணறார். எனக்கு பயத்துல படபடன்னு ஆகுது. நானே சக்கர நாற்காலியோட சுத்திட்டு இருக்கேன். என்னால என்ன பண்ண முடியும்? அதுவும் நானும் அவரும் தனியா இருக்கும் போது இவர் இந்த மாதிரி டென்ஷனாயிட்டார்னா என்ன பண்ணறதுன்னே எனக்கும் புரியவேயில்லை. இப்போ எதுக்காக இவருக்கு டென்ஷன்? ஏதாவது புரியுதா? ” என்று கவலையுடன் பேசினார் அந்தக் குடும்பத்தின் தலைவி.

“ கவலைப்படாதீங்க மேடம். சீக்கிரமே கண்டுபிடிக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே மாதுரியின் பக்கம் பார்வையைத் திருப்பினாள். உடனே அவளுடைய அறிவு என்ன நடந்திருக்கும் என்று அனுமானித்தது.

“ மாதுரி இதுக்கு முன்னாடி இந்த ரூமுக்குள்ள வந்தபோது அங்கிள் பாத்தாரா? இல்லை இப்பத்தான் பாக்கறாரா? ” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

“ இப்பத்தான் பாக்கறார். அவ மொதலில வந்தபோது தூங்கிட்டு இருந்தார்னு நினைக்கிறேன் ” என்று சொல்லிக் கொண்டே மாதுரியைப் பார்க்க அவளும் ஆமாம் என்று தலையசைத்தாள்.

“ அதுதான் விஷயம். புதுசா ஒருத்தியை இந்த ரூமில திடீர்னு பாத்ததுனால ரியாக்ட் பண்ணிருக்காரு. உடம்பு முடியாத நிலையில் மனசும் பலவீனமா இருக்கு அவருக்கு. புது ஆளைப் பாக்கும்போது மனசுக்குள்ள ஒரு பாதுகாப்பின்மை அதாவது இன்செக்யூரிட்டி உருவாகுதா இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் சரியாகும்போது தேவையில்லாத இந்த பயம் போயிடும்” என்று அறிவுபூர்வமாக மந்திரா, இந்தச் சூழ்நிலையை அணுகிய விதம் மாதுரிக்குமே பிடித்திருந்தது.

ஏனோ அந்தப் பெரியவரின் முகம் இப்போது அமைதியாகி இருந்தது. ஆனாலும் மாதுரியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். மந்திரா தன்னைப் பற்றிக் கூறிய கருத்தை அவர் கவனித்தாரா என்று கூட யாருக்கும் புரியவில்லை.

“ என்னங்க, உடம்புக்கு என்ன பண்ணுது? இந்தப் பொண்ணு பேரு மாதுரி. இன்னைக்குத் தான் புதுசா வேலையில வந்து சேந்துருக்கா. நம்ம துகிலன் தான் அனுப்பிச்சிருக்கான். அதனால அநாவசியமாக் கவலைப்பட வேண்டாம்” என்று ஆறுதலுடன் அந்தப் பெண் பேச, அவரோ ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டார்.

“ மீதியெல்லாம் பரவாயில்லை. இவருக்குப் பேச மட்டும் சீக்கிரம் வந்துட்டா நல்லா இருக்கும். உடம்பு மெதுவா சரியாப் போகட்டும். அதைப்பத்தி ரொம்பக் கவலைப்படலை நான். அவரால பேச முடிஞ்சுதுன்னா, தனக்கு என்ன உபத்திரவம் செய்யுதுன்னு தானே வாயைத் தொறந்து சொல்லுவார். நாமும் அதுக்கேத்த சிகிச்சை தரச் சொல்லலாம். என்ன செய்யறது? வயசான காலத்தில் உடல் உபாதையோட சேந்து மனசிலயும் எத்தனையோ கவலைகள் சடுகுடு ஆடிட்டே இருக்கு” என்றவரின் அருகில் சென்ற மாதுரி, ஆதரவாக அவரது கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“ மாதுரி, நீ இந்த வீட்டுக்குள் நுழைஞ்சதில் இருந்து மனசுக்குள் பாசிட்டிவ் வைப் நிறைய வருது. அது மட்டும் உண்மையா இருந்தா இனி எல்லாமே நல்லா நடக்கும்” என்று அவர் சொன்னபோது மந்திராவின் முகம் சுருங்கியது போல மாதுரிக்குத் தோன்றியது.

“ உங்களோட நம்பிக்கை நிஜமாகட்டும். நல்லதே நடக்கும் சீக்கிரமா. சாப்பிடற நேரம் ஆச்சா? நான் போய் சாப்பாடு கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு மாதுரி அறையை விட்டு வெளியே வந்தாள். கண்மணி சமையலை முடித்து, அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய கணவருக்குமான உணவுகளையும் பரிமிறத் தேவையான உபகரணங்களையும் தயாராக எடுத்து அந்தத் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“ அட, நானே கொண்டு வரலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். நீயே கரெக்டா வந்துட்டயே! முதல் நாளிலேயே வேலை என்னன்னு புரிஞ்சுகிட்டே போல இருக்கு. கெட்டிக்காரப் பொண்ணு தான் ” என்று மனதாரப் பாராட்டிய கண்மணி, அந்த வண்டியில் இருந்த உணவு வகைகள் என்னென்னவென்றும் மற்றும் யார், யாருக்கு என்ன தரவேண்டும் என்றும் மாதுரிக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னாள்.

மாதுரி அறைக்குள் நுழைந்ததும், “ அவருக்கு முதலில் சாப்பாடு கொடுத்துரும்மா. அப்புறம் நான் சாப்பிடறேன்” என்று சொல்லிவிட்டார் ராஜராஜேஸ்வரி மேடம்.

ஆமாம், கண்மணி இப்போதுதான் மாதுரியிடம் அவர்களின் பெயர்களைச் சொல்லியிருந்தாள். மேடத்தின் கணவரின் பெயர் ரகுநாத சேதுபதி.
கண்மணி சொன்னதற்குப் பிறகுதான் துகிலன் ஏற்கனவே அந்தப் பெயர்களைத் தன்னிடம் சொல்லியிருந்தது மாதுரிக்கு ஞாபகம் வந்தது.

“ மாதுரி புதுசா வந்திருக்கா. நானே கொடுக்கறேன்” என்று ஸூப் இருந்த கிண்ணத்தையும் ஸ்பூனையும் எடுத்துக் கொண்டு மந்திரா, அவரருகில் செல்ல அவரோ வாயைத் திறக்க மறுத்துவிட்டார். ஆனால் அவருடைய பார்வை மாதுரியின் மீது படர்ந்திருந்தது.

“ நான் வேணா முயற்சி பண்ணறேனே? ” என்று கேட்டு வாங்கிக் கொண்டு மாதுரி அவரருகில் உட்கார்ந்து கொண்டு அவருடைய ஆக்ஸிஜன் மாஸ்க்கை அகற்றினாள். படுக்கையைத் தலைப்பக்கம் லேசாக உயர்த்துவதற்கான விசையைச் சுழற்றி உயர்த்தி வைத்தாள். தலையணையை அதற்கேற்ப மாற்றி வைத்துவிட்டு அவரருகில் அமர்ந்தாள்.

“ சீக்கிரமா வாயைத் தொறங்க பாக்கலாம். நீங்க சாப்பிட்டாத்தான் மேடம் சாப்பிடுவாங்க. அவங்களுக்காகவாவது கொஞ்சம் சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு ஸ்பூனை அவருடைய வாயருகில் மாதுரி கொண்டு செல்ல, தனக்குப் பிடித்த ஆசிரியையின் சொல்லுக்கு உடனடியாகப் பணியும் மழலை போல வாயைத் திறந்து வாங்கிக் கொண்டார் சேதுபதி.

அதிக நேரம் ஆக்ஸிஜன் இல்லாமல் அவரால் தாக்குப் பிடிக்க முடியாமல் இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி நிறுத்திப் பொறுமையாக அவருக்கு உணவு கொடுக்க வேண்டியிருந்தது. மாதுரி அந்த வேலையை நேர்த்தியாகச் செய்தாள்.
ஸூப் கொடுத்து முடித்தவுடன், காய்கறிகள், பருப்பு, அரிசி சேர்த்துக் கொஞ்சம் நீர்க்க இருந்த கிச்சடியையும் கொடுத்து முடித்துக் குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து அவருடைய வாயைத் துடைத்து விட்டுவிட்டு எழுந்தாள் மாதுரி.

அவளுடைய கை அவர் மேல் படும்போதெல்லாம் அவருடைய உடல் சிலிர்த்தது. அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது. அதையும் துடைத்துவிட்டே எழுந்தாள் மாதுரி.

நடப்பவற்றைப் பார்த்து உறைந்து போய் அமர்ந்திருந்தார் ராஜேஸ்வரி. மந்திரா எழுந்து சேதுபதிக்கு மருந்துகளைக் கொடுத்துவிட்டு உணவு உண்ணச் சென்றாள். சேதுபதியும் கண்களை மூடிக் கொண்டு தூங்கியே போனார்.

‘ என்ன நடக்குதுன்னே புரியலையே? இவருக்குச் சாப்பாடு ஊட்டறது ரொம்பக் கஷ்டமா இல்லை இருந்தது எல்லாருக்கும்? இந்தப் பெண் அந்த வேலையை ஈஸியாப் பண்ணிட்டாளே? மந்திரா நமக்கு உறவா இருந்தாலும் இவ்வளவு பிரியத்தோட முயற்சி செஞ்சதேயில்லையே? இவ கையில ஏதோ மேஜிக் இருக்கு. அவளை முதல் தடவை பாத்தவுடனேயே எதுனாலயோ இவர் டென்ஷன் ஆனது உண்மைதான். ஆனால் அவ சொன்னதையெல்லாம் சின்னக் குழந்தை மாதிரிக் கேட்டு நடந்தாரே? எப்படி இவ்வளவு சீக்கிரம் அவர் மனசு மாறிச்சு? ’ என்றெல்லாம் மனதுக்குள் வியந்தபடி மாதுரியை வெறித்துப் பார்த்தார் ராஜேஸ்வரி.

“ மேடம், நீங்களும் சாப்பிடறீங்களா? நேரமாயிடுச்சு” என்று அழைத்தபோது தான் சிந்தனை உலகத்தில் இருந்து நனவுலகிற்கே வந்தாள்.

மேடத்திற்காக வாழை இலையை விரித்து அவருக்கென்று சமைக்கப்பட்ட ஆணவு வகைகளைப் பரிமாறினாள். வேக வைத்த காய்கறிகள், பருப்பு, பொலபொலவென்ற சாதம், நெய், சுண்டல், பாயசம், கெட்டித்தயிர், ஊறுகாய் என்று வகை வகையான ஐட்டங்களுடன் சுவையான விருந்தாக இருந்தது உணவு. உணவிற்குப் பின் சாப்பிட ஒரு கிண்ணத்தில் பழத்துண்டுகள்.

“ இந்த கண்மணி கிட்ட எவ்வளவு சொல்லியும் கேக்க மாட்டேங்கறா. என்னால இத்தனை ஐட்டம் சாப்பிட முடியலை. அவருக்குத் தர மாதிரி எனக்கும் ஸூப், ஜுஸ், கிச்சடி இதுமாதிரி எளிமையான உணவாக் கொடுத்தால் சாப்பிடவும் ஈஸியா இருக்கும். செரிமானமும் நல்லா இருக்கும். நீயாவது சொல்லும்மா அவ கிட்ட” என்று கெஞ்சினார் ராஜேஸ்வரி.

“ இந்த உணவில எந்தக் குறையும் இருக்கறதா எனக்குத் தோணலை. காய்கறி, பழங்கள், பருப்பு இதெல்லாமே உடலுக்குத் தேவையான பொருட்கள் தானே? எதிலயும் எண்ணெய் இருக்கிற மாதிரி தெரியலை. காரமாவும் இருக்காதுன்னு நெனைக்கிறேன். ஊறுகாய் கூடக் காரம் இல்லாத உப்பு ஊறுகாய் வச்சிருக்காங்க. கண்மணி அக்கா தன்னோட வேலையை இவ்வளவு சின்சியராப் பண்ணும்போது நான் எப்படி குறுக்கே தடுக்க முடியும்? ” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டாள் மாதுரி.

ஐயாவும், அம்மாவும் சாப்பிட்டு முடித்திருந்தால் வண்டியை எடுத்துப் போகலாமே என்று வந்த கண்மணியின் செவிகளிலும் மாதுரி தன்னைப் புகழ்ந்து பேசிய சொற்கள் விழுந்துவிட, நெகிழ்ந்துபோய் நின்றாள் கண்மணி.

மந்திரா சாப்பாட்டு மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சமைத்த பொருட்களை அவளெதிரே வைத்துவிட்டு, ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு நகர்ந்திருந்தாள் கண்மணி. என்னதான் உறவுக்காரப் பெண்ணாக இருந்தாலும் மந்திரா தன்னை அதிகாரம் செய்வதும், அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்று தன்னை அடிக்கடி விரட்டுவதும் கண்மணிக்குப் பிடிக்காத விஷயங்கள். இந்த வேலை முக்கியம் என்பதால் மந்திரா போன்ற பிரகிருதிகளைப் பொறுத்துப் போகவேண்டியிருக்கிறது கண்மணிக்கு . இல்லையென்றால் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற கண்மணி, எப்பொழுதோ இந்த வேலையை உதறித் தள்ளிவிட்டுப் போயிருப்பாள்.

தனது குடும்பத்தை நினைத்துக் கூட அவளுக்கு ஆற்றாமையும், கோபமும் மனதில் எழுந்தன. தனது கனவுகளை உதறி எறிந்துவிட்டு இங்கே சமையல் வேலை செய்கிற கட்டாயத்தில் அல்லவா அவளைத் தள்ளி விட்டார்கள்? பேசாமல் இங்கிருந்து கிளம்பித் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளலாமோ என்று கூட மனம் துடிக்கிறது.

‘ உன்னுடைய நலனைப் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்காமல், உன்னைக் கசக்கிப் பிழிந்து உழைக்க வைத்து, உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர் மேல் நீ ஏன் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்? கிளம்பு உன் வேலையைப் பார்த்துக் கொண்டு’ என்று அவளுடைய அறிவு அவளுக்கு இடித்துரைத்தாலும் அவள் அதைக் கண்டு கொள்வதில்லை. அப்படியே விதி தன் மீது விதித்த சுமைகளை மனதார ஏற்றுக்கொண்டு விட்டாள்.

ஆனாலும், சமயத்தில் உள்ளத்துக்குள்ளே அடக்கி வைத்திருக்கும் கோபம் தலைதூக்கி யார் மீதாவது பாய்ந்துவிடுகிறது. அவளால் அந்தக் கோபத்தை மட்டும் கட்டுப்படுத்த முடிவதில்லை.
கண்மணியின் சுபாவத்தை எளிதாகக் குற்றம் சொல்லுவோரால், அதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவளையும் அன்போடு அணைத்துப் பரிவோடு பேசும் பாச உள்ளங்கள் என்று யாருமே இல்லை என்பதுதான் அவளுடைய வருத்தம். இந்த மாதுரியைப் பார்க்கும்போது ஏனோ மனதில் உண்மையான நட்பு கிடைக்கலாம் என்கிற நம்பிக்கை எழுகிறது கண்மணியின் மனதில். கண்மணி எதிர்பார்ப்பது உண்மையில் நடக்குமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 
Top Bottom