• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க் கொடியில் பூத்தவளே! 11

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
174
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 11


மாதுரி அந்த இடத்தை அடைவதற்கு முன்னரே அந்த உருவம், கையில் இருந்த தடியை அந்தப் பெண்ணின் தலையைத் தாக்கும் நோக்கத்துடன் இறக்கியிருந்தது.

தன்னால் அந்த இடத்தை அதற்குள் அடைய முடியாது என்று அனுமானித்த மாதுரி, கையிலிருந்த கூழாங்கல்லைக் குறி பார்த்து எறிந்தாள். அந்த உருவத்தின் கையைக் கல் தாக்கிவிட, கம்பு அவருடைய தலையில் இறங்காமல் தோளில் இறங்கியது.

கல்லால் அடிபட்ட உருவமும், அந்தப் பெண்ணும் ஒரே சமயத்தில் வலியுடன் கத்தினார்கள்.

மாதுரி அருகில் வந்துவிட, அந்த உருவம் வேகமாக ஓடி மறைந்தது. அந்தப் பெண்ணின் அருகில் வந்த மாதுரி, அவரைத் தாங்கிப் பிடித்தாள்.

“ இப்படித்தான் ராத்திரி வேளையில் காதில் இயர் ஃபோன் போட்டுட்டு உலாத்துவீங்களா? நான் ஜன்னல் வழியாப் பாத்துக் கத்திட்டே இருந்தேன். உங்க காதுலயே விழலை. தலையில அடிபட்டிருந்தா என்ன ஆயிருக்கும்? ” என்று கடிந்துகொண்டு, அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அவருடைய வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். கம்பு தாங்கிய இடத்தில் லேசாக வீங்கத் தொடங்கியிருந்தது.

தோலும் சிவந்து போயிருந்தது. அவரிடமே வலி நிவாரணத்துக்காக மருந்து வாங்கி, ஸ்ப்ரே செய்துவிட்டாள். வலியைப் போக்க ஒரு பேராசிட்டமால் மாத்திரையையும் கொடுத்தாள்.

“ நாளை காலையில் டாக்டர் வந்தால் அவர் கிட்டயே காமிக்கலாம். திரும்பவும் தோட்டத்துக்குப் போகாமல் படுத்துத் தூங்குங்க” என்று உரிமையுடன் அவரைக் கடிந்துகொண்டாள்.

மாதுரி பேசியதை மறுவார்த்தை பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தவர், அவளுடைய முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ அப்படியே உங்கம்மா ஜாடை நீ. குணமும் தான். ஆபத்தைப் பத்திக் கவலைப்படாமல் உதவிக்கு வந்த பாரு, அப்பவே நான் நினைக்கிறது சரின்னு புரிஞ்சு போச்சு” என்றார் சிரித்துக் கொண்டே. மாதுரி குழப்பத்துடன் அவரைப் பார்த்தாள்.

“ யாரு மேடம் நீங்க? நேத்து தான் முதல் தடவையா உங்களை சந்திச்சேன். நேத்தே என்னை மாதவின்னு கூப்பிட்டீங்க. அப்புறம் ராஜேஸ்வரி மேடம் கிட்ட ஏதோ பூடகமாப் பேசினீங்க. இப்போ எங்கம்மா பத்திப் பேசறீங்க. யாரோட பொண்ணுன்னு நினைச்சீங்க என்னை? எனக்கு ஒண்ணுமே புரியலையே? ” என்று பரிதாபமாகக் கேட்டாள்.

“ வேற யாரா இருக்க முடியும்? நீ மாதவியோட பொண்ணு. எனக்கு நல்லாப் புரிஞ்சு போச்சு. அதே படபடப்பு. அதே குரல்”

“ திரும்பவும் அதையே சொல்லறீங்க. புதிருக்கு மேல புதிர் போட்டு விளையாட என்னிடம் நேரமில்லை. முதலில் எங்கம்மா பேரு மாதவி இல்லை. அவங்க பேரு காஞ்சனா. நாங்க பல வருஷங்களா கொல்கத்தாவில் தான் இருந்தோம். எனக்குத் தெரிஞ்சு எங்கம்மா, அப்பாவோட இந்த ஊரு பக்கம் நான் வந்ததில்லை. லீவுக்கு எங்கெல்லாமோ கூட்டிட்டுப் போவாரு அப்பா. ஆனால், தமிழ்நாட்டுப் பக்கம் ஒரு தடவை கூட வந்ததில்லை. மெடிக்கல் அட்மிஷன் கெடைச்சபோதுதான் சென்னை வந்தேன். அதுவும் அப்பா மட்டும் தான் வந்தார். அம்மா வரலை. நீங்க எப்படி எங்கம்மாவைச் சந்திச்சிருக்க முடியும்? என்னால எதையும் நம்பமுடியலை” என்றவளின் கையைப் பிடித்துக் கட்டிலில் தன்னருகில் உட்கார வைத்தார் அந்தப் பெண்.

“ எல்லாமே உனக்குப் புரியும்படி சொல்லறேன். நீ எதுக்கு இங்கே வந்தே? அதற்கான காரணத்தைச் சொல்லு முதலில்”

“ நான் வந்து, நான் வந்து… “ என்று முதலில் தயங்கிய மாதுரி சொல்ல ஆரம்பித்தாள்.

“ என்னோட அம்மா, அப்பா இரண்டு மாதங்களுக்கு முன்னால் விபத்தில் இறந்துபோனாங்க. என் அப்பாவோட சேமிப்பு எதுவும் எனக்குக் கெடைக்கலை. படிப்பைத் தொடர முடியாத அளவு பணக்கஷ்டம். படிப்பைப் பத்தி என்ன சொல்லறது? சாப்பாட்டுக்கே ததிங்கிணத்தோம். அதுனால வேலை தேடினேன். டாக்டர். துகிலனை எனக்குத் தெரியும். அவர் சொன்னதால இங்கே வேலைக்கு வந்தேன்” என்றாள் தயக்கமில்லாமல்.

“ அப்படியா? டாக்டர் படிப்பைத் தொடர முடியாத பொண்ணு ஒரு ஃபார்மஸி மாதிரி இடத்துல வேலைக்குப் போயிருந்தா கெடைச்சிருக்குமே? உன்னோட ஆங்கிலத் திறமைக்கும், அழகுக்கும், தகுதிக்கும் கால் சென்டர் வேலையோ, ரிசப்ஷனிஸ்ட் வேலையோ கெடைச்சிருக்குமே? சென்னையில் இருந்து இவ்வளவு தூரத்தில் இருக்கிற இந்த ஊருக்கு வந்து ஒரு குடும்பத்தில் வயசானவங்களுக்கு உதவியாளா எதுக்கு வரணும்? எங்கயோ இடிக்குதே? ” என்றவரை ஏறிட்டுப் பார்த்தாள் மாதுரி.

‘இவர் பேசுவதைப் பார்த்தால் பயங்கர புத்திசாலியாக இருப்பார் என்று தோன்றுகிறதே? ‘ என்று நினைத்தாள்.

“ இந்த வேலைதான் உடனடியாக் கெடைச்சுது. அதுனால வந்தேன் மேடம்” என்றாள் விடாமல்.

“ இந்தோ பாரு மாதுரி, அதுதானே உன் பேரு? மேடம், கீடம்லாம் வேண்டாம். என்னை அத்தைன்னு கூப்பிடு. நீ என்னைக்காவது ஒருநாள் உண்மை தெரிஞ்சுகிட்டு இங்கே வருவேன்னு எனக்குத் தெரியும். உன்னைப் பாத்துட்டுத்தான் உயிரை விடணும்னு காத்துகிட்டு இருக்கேன்” என்று அவர் சொல்ல,

“ உங்களுக்கு உடம்பு சரியில்லையா? என்ன உடம்பு? ” என்று அக்கறையுடன் கேட்டாள்.

“ பாத்தயா? உனக்கு உள்ளுக்குள்ள இருக்கற டாக்டர் எட்டிப் பாக்கறாரு. படிப்பை எல்லாம் நிறுத்தவேண்டாம். சீக்கிரமா டாக்டராகி வந்து என்னை குணப்படுத்து. மூட்டுவலி தான். வேற ஒண்ணுமில்லை. நீ வர வரைக்கும் காத்துகிட்டிருப்பேன். அப்புறம் உனக்கும், துகிலனுக்கும் கல்யாணம் செஞ்சுவச்சு உங்களுக்குப் பிறக்கப்போற குழந்தையைக் கொஞ்சிட்டுத்தான் நான் மேலோகம் போகப்போறேன்” என்று சிரித்துக் கொண்டே அவர் சொல்ல, மாதுரியோ இன்னும் அதிர்ந்துபோனாள்.

“ என்ன ஆச்சர்யமா இருக்கா? உன்னைப் பத்தின எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும். அப்புறம் இன்னொரு ரகசியம் சொல்லவா நான்? நீ எதுக்கு வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும் ” என்று சொல்லிவிட்டுக் கண்களைச் சிமிட்டினாள்.

மாதுரி அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிறிது நேரம். பின்னர் என்ன தோன்றியதோ, அவரை வந்து கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண், தன் முன்னே நீண்ட கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“ நிஜமாவே நீங்க எனக்கு அத்தையா? அப்படின்னா அப்பா ஏன் என்கிட்ட உங்களைப் பத்திச் சொல்லவே இல்லை” என்று கேட்டாள்.

“ சொல்லறேன், எல்லாமே சொல்லறேன். நீ கேட்கத் தயாரா? இன்னைக்குத் தூக்கத்தைத் தியாகம் செய்ய முடியுமா உன்னால? ” என்று அவர் கேட்க, முடியும் என்று தலையாட்டினாள் மாதுரி.

இரண்டு பேரும் பேசினார்கள், பேசினார்கள், பேசிக்கொண்டே இருந்தார்கள். இறுதியில் அத்தையைக் கட்டிக்கொண்டு அப்படியே அந்த அரவணைப்பில் சுகமாகத் தூங்கிப் போனாள் மாதுரி.

காலையில் கண்விழித்தவுடன் அவரிடம் விடைபெற்று மாளிகைக்குள் நுழைந்தாள்.

மாளிகையில் தன்னுடைய அறையை நோக்கிச் சென்றவளை அவளுடைய அறைக்கு எதிரே கூடியிருந்த கூட்டம் வரவேற்றது.

மாதுரியைப் பார்த்தவுடன் ஆவென்று கத்தினார்கள். கிட்டத்தட்ட வீட்டில் வேலை செய்யும் அனைவரும் அங்கே குழுமியிருந்தார்கள்.

“ மாதுரி மேடம், நீங்க எப்படி வெளியே இருந்து வரீங்க? உங்க ரூம் கதவை ரொம்ப நேரமாத் தட்டியும் நீங்க எழுந்து வரலைன்னு பயந்தே போயிட்டோம். என்ன ஆச்சோன்னு தெரியலையேன்னு கண்மணி புலம்பிட்டே இருந்தாங்க. நான் உள்ளே போய்ப் பாத்துட்டு வரேன்னு உள்ளே போனாங்க. அவங்களும் வெளியே வரலை. உள்ளே வேற யாராவது போகலாமா, வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருந்தோம். நீங்க என்னடான்னா வெளியே இருந்து வரீங்க. கண்மணிக்கு என்ன ஆச்சோ தெரியலையே! ” என்று வீட்டு வேலை செய்யும் பெண்மணி புலம்பத் தொடங்கினாள்.

“ நான் காலையில சீக்கிரம் எழுந்துட்டு வெளியே வாக் போயிருந்தேன். இப்பத்தான் திரும்பி வந்தேன். இவ்வளவு நேரமா கண்மணி அக்கா வெளியே வரலைன்னா, நீங்க உள்ளே போய்ப் பாத்திருக்க வேண்டாமா? ” என்று பதறியபடி உள்ளே ஓடினாள்.

அவள் பயந்தபடியே தான் உள்ளே நடந்திருந்தது. அறைக்குள் அமைக்கப் பட்டிருந்த அட்டாச்சுடு பாத்ரூமுக்கான ஸ்விட்ச் போர்ட், அந்த பாத்ரூம் கதவருகே வெளிச் சுவரில் இருந்தது. அதன் அருகில் தரையில் மயங்கிக் கிடந்தாள் கண்மணி.

“ அக்கா, அக்கா” என்று பதறிப் போனாள் மாதுரி.
பரபரவென்று செயல்பட்டாள் மாதுரி. அவள் விழுந்து கிடந்த நிலையைப் பார்த்து அவளுக்கு மின்கசிவால் ஷாக் அடித்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாள். உடனடியாக வெளியே இருந்தவர்களை உள்ளே அழைத்து, கண்மணியை அவர்கள் உதவியுடன் கட்டிலில் கிடத்தினாள். டாக்டர். துகிலனை அலைபேசியில் அழைத்துத் தகவல் சொன்னாள்.

உடனே அவன் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் அங்கே வந்து சேர, கண்மணியை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நல்லவேளையாகச் சிறிது நேரத்தில் கண்மணி, கண்விழித்தாள்.
என்ன நடந்ததென்று விளக்கினாள்.

“ ரொம்ப நேரமாகக் கதவைத் தட்டி நீ வரலைன்னதும் ரொம்பக் கவலையாயிடுச்சு. உள்ளே நீ தூங்கிட்டிருப்பயோன்னு உள்ளே நுழைஞ்சு கதவைச் சாத்திட்டேன். அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு. கட்டிலில் நீ இல்லைன்னதும் ஒருவேளை பாத்ரூமில இருப்பேன்னு நெனைச்சுக் கதவைத் தட்டினேன். உள்ளேயிருந்து சத்தமே வரலை. வெளியே இருந்த சுவிட்ச்சை ஆன் செஞ்சிட்டு உள்ளே போகலாம்னு சுவிட்சில கையை வச்சேன். பயங்கர ஷாக் அடிச்சுத் தூக்கியடிச்சுருச்சு. நல்லவேளை அப்படித் தூக்கி அடிக்கலைன்னா, இவ்வளவு நேரம் பொசுங்கிப் போயிருப்பேன் ” என்று கண்மணி சொல்ல, மாதுரியின் உடல் நடுங்கியது.

“ அய்யோ, அப்படியெல்லாம் அபசகுனமாப் பேசாதீங்கக்கா. நல்லவேளை கடவுள் காப்பாத்தினார். இந்த ஸ்விட்ச் நேத்து வரைக்கும் சரியாத் தானே இருநாதுச்சு. இப்போ எப்படி திடீர்னு ஷாக் அடிக்கும் அங்கே? எலெக்ட்ரீஷியனைக் கூப்பிட்டு முதலில் பாக்கச் சொல்லணும் ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மாதுரியின் மனதில் பழைய நினைவு ஒன்று பளிச்சிட்டது.

சேதுபதி ஒருநாள் அவளுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியது உண்மை தானோ என்று தோன்றியது அவளுக்கு.

“ அக்கா, இது தற்செயலா நடந்ததாத் தெரியலை. யாரோ வேணும்னே செஞ்சிருக்காங்கன்னு தோணுது. எனக்கு விரிச்ச வலையில நீங்க போயி மாட்டிக்கிட்டீங்க” என்று மாதுரி சென்னதைக் கேட்டு அங்கிருந்த துகிலனும் நிடுக்கிட்டான்.

.” என்ன சொல்லறே மாதுரி? யாரு இந்த மாதிரி செஞ்சிருப்பாங்க? உன் மேல யாருக்குப் பகை இருக்க முடியும்? ” என்று சொல்லிவிட்டு யோசித்துப் பார்த்தான். அவனுக்கும் மாதுரி சொல்வது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது.

கண்மணியும் அதைக் கேட்டு ஆடிப்போனாள். மாதுரியின் மீது உயிர்த் தாக்குதல் நிகழ்த்துமளவிற்கு யாருக்குப் பகை இருக்க முடியும் என்று தோன்றியது.

“ இல்லை மாதுரி, உணர்ச்சிவசப்பட்டுப் பேசாதே. நீ இங்கே புதுசா வந்திருக்கே. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா வீட்டில இருக்கறவங்க தானே பொறுப்பாவாங்க? அப்படியெல்லாம் இருக்காது” என்றாள் கண்மணி.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: உயிர்க் கொடியில் பூத்தவளே! 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom