• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க்கொடியில் பூத்தவளே! 9

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
163
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 9


ஏனோ தானோவென்று கடமைக்காக மதிய உணவை உண்டு முடித்தாள் மாதுரி. கண்மணிக்கே ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தன்னுடன் அரட்டை அடித்தபடி வந்த அதே பெண் தானா இவள் என்று வியப்பாகவும் இருந்தது.

அதிகம் தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டாள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு வந்த மாதுரிக்குத் தனிமையில் நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று தான் தோன்றியது.

ராஜேஸ்வரி மேடத்திடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவர்களுடைய அறைக்குள் நுழைந்தாள். அங்கிருந்து உடனடியாகக் கிளம்பமுடியாமல் நன்றாக அவர்களிடம் மாட்டிக்கொண்டாள் மாதுரி.

“ மாதுரி, நீயும் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்டாமே? இப்பத்தான் துகிலன் மூலமாத் தெரிஞ்சது. இப்போ என்ன லீவுன்னால வேலைக்கு வந்துருக்கயா? அப்படின்னா லீவு முடிஞ்சதும் ஓடிடுவயே? நான் திரும்பவும் ஆள் தேடணுமே? பரவாயில்லை, நான் தேடிக்கறேன். நீ அதுக்காகப் படிப்பைக் கெடுத்துக்க முடியுமா என்ன? ” என்று தானே கேள்வியைக் கேட்டுவிட்டுத் தானே பதிலும் சொல்லிக் கொண்டார் ராஜேஸ்வரி.

மாதுரி கோபமாக துகிலனை முறைத்தாள்.

‘உங்களை யாரு குடுகுடுன்னு அவங்க கிட்ட என்னைப் பத்தின உண்மைகளைச் சொல்லச் சொன்னது? ’ என்கிற கேள்வி, அந்தக் கோபத்தினூடே கலந்திருந்தது.

“ ஏய் மாதுரி, என்னை முறைக்காதே. நான் வேணும்னு சொல்லலை. உன்னைப் பத்தியே அத்தை திரும்பத் திரும்பப் பேசிட்டே இருந்தாங்களா? அப்படியே வாய் தவறி வந்துடுச்சு. ஐ காட் கேரீட் அவே. ஸாரிம்மா” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

“ மேடம், நான் படிப்பை நிறுத்திட்டுத் தான் வேலை தேடிக்கிட்டேன். லீவுல மட்டும் இல்லை. தொடர்ந்து நீங்களா என்னை வேலையை விட்டுப் போகச் சொல்லற வரைக்கும் இங்கே வேலை பாப்பேன்” என்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

துகிலனுக்குமே இது புதிய தகவல். அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

“ என்னம்மா சொல்றே நீ? மெடிக்கல் காலேஜ்ல அட்மிஷனே இப்பல்லாம் அவ்வளவு கஷ்டமா இருக்கு. அதுவும் உன்னைப் பார்த்தால் மெரிட்ல வந்த ஸ்டூடன்ட் மாதிரி இருக்கு. படிப்பைப் பாதில எதுக்கு நிறுத்தணும்? ” உண்மையான அக்கறையுடன் கேட்டார் ராஜேஸ்வரி.

மந்திராவுக்குமே திடீரென மாதுரி மீது இரக்கம் சுரந்தது.

“ நிறுத்த வேண்டிய கட்டாயம் மேடம். பணக்கஷ்டம் தான். அடுத்த வருஷ ஃபீஸ் கட்டக் கையில் கொஞ்சம் கூடப் பணம் இல்லை. அம்மா, அப்பா, எந்த உறவுமே இல்லாத அனாதை நான்” என்றாள் மாதுரி. விரக்தி நிரம்பி வழிந்தது அவளுடைய பேச்சில்.

“ வாட் நான்ஸென்ஸ் மாதுரி. என் கிட்ட நீயேன் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணலை? நான் உதவி செய்யறேன். தொடர்ந்து படி. ஓ, உனக்குத் தான் சுய மரியாதை அதிகமாச்சே? சரி, நான் ஃப்ரீயாத் தரலை. கடனா நெனைச்சுக்கோ. படிச்சு முடிச்சு வேலைக்குப் போய்த் திரும்பித் தா. போதும் ” என்றான்.

“ வேண்டாம் டாக்டர். அதெல்லாம் சரிவராது. ஃபீஸ் வேணா நீங்க கட்டுவீங்க? மத்த செலவுகளை நான் எப்படி சமாளிப்பேன்? ரெண்டு வருஷப் படிப்புதான் முடிஞ்சிருக்கு. இன்னும் மூணு வணுஷம். ஹவுஸ் சர்ஜனா இருக்கணும். மேலே எம். டிக்குப் படிச்சாத்தான் நல்லது. எல்லாத்தையும் எப்படி சமாளிப்பேன்? அவ்வளவுதான். என்னோட படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கறதுதான் இதுக்கான பெஸ்ட் ஸொல்யூஷன்” என்று மாதுரி சொன்னபோது, அவளுடைய கூற்றில் இருந்த கசப்பான உண்மை அவர்களுடைய முகத்தில் அறைந்தது.

“ ஸ்காலர்ஷிப் கிடைக்கும் மாதுரி. நீதானே உங்க பேட்ச்சில் டாப்பர். நம்ம டீன் நிச்சயமா உதவி செய்வாங்க” என்று மந்திராவும் தனது வாயைத் திறந்து ஆறுதலாகப் பேசியது மாதுரிக்கே ஆச்சரியம் தான்.

ராஜேஸ்வரி, மந்திராவைப் பார்த்த பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்து கொண்டு பதிலளித்தாள் மந்திரா.

“ நாங்க ரெண்டு பேரும் ஒரே மெடிக்கல் காலேஜில் தான் படிக்கிறோம் ஆண்ட்டி. நான் மாதுரிக்கு ஸீனியர் “ என்று விளக்கம் அளித்தாள் மந்திரா.

அவர்கள் பேசிய விஷயத்தின் தீவிரம், அவர்களுடைய மனங்களைப் பாதித்தது.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அசாதாரண அமைதி அவர்களைக் கவ்விக் கொண்டது.
“ நான் என்னோட ரூமுக்குப் போயிட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சு வரட்டுமா? “ என்று மாதுரி தயக்கத்துடன் கேட்க, ராஜேஸ்வரி உடனடியாக அனுமதி தந்தார். அவருக்கே மாதுரியைப் பற்றித் தெரிந்து கொண்ட பின்னர் என்னவோ போலிருந்தது.

மாதுரி தனது அறையை அடைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள். கட்டிலில் போய் விழுந்து கதறிக் கதறி அழுதாள். தன்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டுப் போன தனது பெற்றோரை எண்ணி அழுதாள்.

“ ஏம்பா இப்படி இந்த உலகத்தில் என்னைத் தன்னந்தனியா விட்டுட்டுப் போனீங்க? போகும்போது அம்மாவையும் கூட்டிட்டுப் போயிட்டீங்களே? நியாயமா இது? இப்படிப் போயிடுவோம்னு தெரிஞ்சு தான் அளவுக்கு அதிகமாப் பாசத்தைக் கொட்டி வளத்தீங்களா? எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்? யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலையே? ” என்று வாய்விட்டுப் புலம்பினாள்.

அந்த சமயத்தில் அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கண்களைத் துடைத்துக் கொண்டு கதவைச் சென்று திறந்தாள் மாதுரி. அங்கே நின்றது துகிலன். வேகமாக உள்ளே வந்து கதவைத் தாழிட்டு விட்டு அவளருகில் வந்தான்.

“ ஆர் யூ ஓகே மது? ” என்று கேட்டபடி அவளை அணைத்துக் கொண்டான். அவனுடைய நெஞ்சில் சாய்ந்து கொண்டு ஓவென்று அழத் தொடங்கினாள் மாதுரி.

பொங்கிப் பொங்கி வந்த துயரத்தை அவளால் அடக்க முடியவே இல்லை.

“ எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு துகிலன்? எவ்வளவு சந்தோஷமாப் பட்டாம்பூச்சியாச் சுத்தி வந்தேன் நான்! திடீர்னு எல்லாமே மாயமா மறைஞ்சு போச்சு. போகிற போக்கில் சூறாவளி ஒண்ணு வந்து எங்கிட்ட மிச்சம் மீதியா இருந்ததையும் அழிச்சுட்டுப் போயிடுச்சு. நான் என்ன பாவம் செஞ்சேன்? ” என்று விம்மினாள் அவள்.

“ மனசைத் தளர விடாதே மாதுரி. நான் உனக்கு உறுதுணையா எப்பவும் உன் கூடவே இருப்பேன். எதுக்குக் கவலைப்படறே? உன்னோட பிடிவாதத்தை விட்டுட்டு எங்க வீட்டுக்கு வா. உன்னோட சந்தோஷத்தை நான் உனக்கு மீட்டுத் தரேன்” என்று கூறியபடி, அவளுடைய தலையைக் கோதினான் அவன்.

“ இல்லை துகிலன். அது சரியா வராது. உங்க குடும்பத்துல மே பீ என்னை அக்ஸப்ட் பண்ணுவாங்களா இருக்கும். ஆனால் அது வெறும் பரிதாபத்துனால மட்டுமே இருக்கும். எனக்கு அந்த மாதிரி பரிதாபப் பிச்சையாக் கெடைக்கற வாழ்க்கை வேணாம். நான் மதிப்போட உங்க வீட்டுக்கு வரணும். அப்பத்தான் நாம நிம்மதியா வாழ்க்கை நடத்த முடியும் ” என்றாள் மாதுரி.

“ அதையெல்லாம் நான் சமாளிக்கிறேன். என்னை நம்பி வா நீ, போதும். ”

“ உங்களை முழுசா நான் நம்பறேன். எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு சில உண்மைகளைக் கண்டுபிடிக்கணும். அதுக்கு டயம் கொடுங்க. அதுக்கப்புறம் நீங்க சொல்லறதை நான் கேக்கறேன்”

“ என்ன கண்டுபிடிக்கணும்னாவது என்கிட்ட சொல்லு. ரெண்டு பேருமாச் சேந்து முயற்சி செஞ்சா, சீக்கிரமா முடியும் வேலை”

“ இல்லை. இப்போ என்னால உங்க கிட்ட சொல்ல முடியாது. அப்புறம் இன்னொரு விஷயம். மந்திரா உங்களைப் பாக்கும் போதெல்லாம் அவளோட பார்வையில் காதல் தெரியுது. எனக்காகக் காத்திருக்காமல் பேசாம அவளைக் கல்யாணம் செஞ்சுகிட்டு சந்தோஷமா இருங்க” என்று மாதுரி சொல்ல, துகிலனுக்குக் கோபம் தலைக்கேறியது.

“ நான் என்ன பண்ணனும்னு நான் பாத்துக்கறேன். நீ எனக்கு அட்வைஸ் பண்ணவேண்டாம். பெரிய தியாகின்னு மனசுல நெனைப்போ? நான் என்ன பொம்மைன்னு நெனைச்சயா? இஷ்டம் இருந்தா விளையாடுவே, வேற யாராவது கேட்டால் தூக்கிக் கொடுத்துருவயா? முட்டாள், சரியான முட்டாள்! ” என்று திட்டினான். அவன் திட்டியதைக் கேட்டு மாதுரிக்குச் சிரிப்பு வந்தது.

“ அப்பாடி, ஒரு வழியா அழுமூஞ்சிப் பாப்பா சிரிச்சுருக்கு இப்பத்தான். கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு. குட்டியூண்டு மூளையைக் கசக்கி ரொம்ப யோசிக்காதே. நான் அத்தை கிட்ட சொல்லிட்டு வீட்டுக்குக் கெளம்பணும்” என்று சொல்லிவிட்டு வெளியே செல்லக் கதவைத் திறந்தான்.

கதவருகில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த மந்திராவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் படபடவென்று வெடித்துக் கொண்டிருந்தன. துகிலனோ சட்டை செய்யாமல் தன் அத்தையைச் சந்திக்கச் சென்றான்.

துகிலன் கிளம்பிப் போனதும் கட்டிலில் விழுந்தவள் எதையெல்லாமோ பற்றி மீண்டும் யோசிக்கத் தொடங்கினாள். சேதுபதி ஐயா திடீரென்று பேசியதும், அவருடைய எச்சரிக்கையும் குழப்பத்தை உண்டுபண்ணின.

அவளுடைய பெற்றோரின் மறைவு பற்றி நினைவு கூர்ந்ததால் ஏற்பட்ட துயரம் நெஞ்சை அறுத்தது. அவர்கள் விட்டுச் சென்ற மர்மத்தின் விடை தேடி அவள் அலைகின்ற அலைச்சல் என்று முடியுமோ என்கிற எண்ணம் அனைத்தையும் மீறி அவளை வதைத்தது.
அத்தனை விஷயங்களையும் மனதிற்குள் போட்டுக் குழப்பிக்கொண்டபடியே தூங்கிப் போனாள். சிறிது நேரத்தில் கண்விழித்தபோது தலைவலி மண்டையை உடைத்தது. எழுந்து முகம் கழுவிக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

“ கண்மணி அக்கா, எனக்கு சூடா ஒரு கப் காஃபி தரீங்களா? தலை ரொம்ப வலிக்குது” என்று குரல் கொடுத்தபடி கண்மணியைத் தேடினாள்.

கண்மணி கண்களில் தென்படவில்லை. தானே பாலை எடுத்துக் காய்ச்சி, காஃபி கலந்து எடுத்துக் கொண்டாள். சமையலறை மேடையில் சாய்ந்தபடி காஃபியை உறிஞ்சிக் கொண்டிருந்தபோது கண்மணி, அரக்கப் பறக்க உள்ளே நுழைந்தாள்.

“ காஃபி குடிக்கறயா கண்ணு? நீயே கலந்துகிட்டயா? ஸாரி, வேற வேலையாப் போக வேண்டியதாயிடுச்சு”

“ அதுனால பரவாயில்லைக்கா. ஒரு நாளைக்கு நானா காஃபி கலந்தாக் குறைஞ்சா போயிடுவேன்? நீங்களும் குடிக்கறீங்களா? கலந்து தரட்டுமா? ”

“ வேண்டாம் மாதுரி. ஆமாம், முகம் ஏன் இப்படி வீங்கின மாதிரி இருக்கு. அழுதியா என்ன? வீட்டு ஞாபகம் வந்துடுச்சா? ”

“ வீடுன்னு ஒண்ணு இருந்தாத் தானே அதோட ஞாபகம் வரும்? எனக்கு வீடுன்னு ஒண்ணு இல்லை. இன்ஃபாக்ட் உறவுன்னு சொல்லிக்கற மாதிரியும் இல்லை. அப்பா, அம்மா தான் என்னோட உலகமா இருந்தாங்க. அவங்க போனப்புறம் இப்போ யாரும் இல்லை”

“ நான் இருக்கேன் உனக்கு. இனிமேல் அப்படிப் பேசாதே. இனிமேல் இந்த உலகத்தில் நான் உனக்குத் துணை. நீ எனக்குத் துணை. என்ன சரியா? “ என்று புன்னகையுடன் கண்மணி சொன்னதைக் கேட்டு மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

காயம் பட்ட தேகத்தில் மருந்து தடவி, மயிலிறகால் தடவியது போல இதமாக இருந்தது. அன்போடு அந்த அக்காவை அணைத்துக் கொண்டாள் மாதுரி.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 
Top Bottom